அத்தியாயம் - 18
மனைவியின் முதன்முறையான பிரத்யேக அழைப்பு அவனுள் மாயம் செய்தது என்னவோ உண்மை. ஆனாலும் தனது கோபத்தை இழுத்து வைத்துக் கொண்டு அமைதி காத்தான் அகத்தியன்.
இன்னமும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தவனின் தாடையைப் பற்றி தன்னை நோக்கி திருப்பியவள், "அதான் ஸாரி சொல்றேன்ல, ப்ளீஸ் அத்தான்!" கண்களால் கெஞ்ச, அப்போது தான் மலையிறங்குவது போல பாவ்லா செய்தான்.
"முதல்ல உனக்கேன் இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்ததுனு சொல்லு மொழி? உடல்சுகத்துக்காக அலையறவனா நான்? நீயெப்படி அப்படி சொல்லலாம்? உங்கிட்ட என்னிக்காவது அத்துமீறி நடந்து இருக்கேனா? என்னைப் போய்.. இதுக்காக வேறொருத்தியை நான் எப்படி.." அவனுக்கு மனமே ஆறவில்லை.
அவனது பேச்சில் தன்னுடன் இத்தனை மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தவள் தனது மனதைப் பற்றி அறியவில்லையே என்ற ஆதங்கம் தெரிய, தனது பேச்சு அவனை எந்தளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை உணர்ந்தாள் தமிழ்.
" என்னை மன்னிச்சுடுங்க அத்தான்! ரெண்டு நாளா எங்கிட்ட நீங்க காட்டுன விலகல், அதுவும் டாக்டர்ட்ட போயிட்டு வந்த பிறகுன்ற போது அதை நான் எப்படி எடுத்துக்கறது? எனக்கு ஏதோ பெரிய பிரச்சினை போல அதான் என்னை எப்படி அவாய்ட் பண்றது தெரியாம இப்படி செய்றீங்கனு நினைச்சுட்டேன். "
"அதுவுமில்லாம அம்மா வேற ஒன்னு சொன்னாங்களா அதான் ரொம்ப பயந்துட்டேன்." என்றவள் அவனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு அவளது மனதின் தவிப்பை அழுத்தம் கொடுத்து வெளிப்படுத்தினாள்.
"அப்படி என்ன சொன்னாங்க உங்கம்மா?" ஒருமாதிரி ஏளனமாக அவன் கேட்க, அவள் பேசியதால் தான் அவ்வாறு கேட்கிறான் என்றெண்ணிக் கொண்டவள் இறங்கிய குரலில் விசாலம் கூறிய அனைத்தையும் சொல்ல அவனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.
"அவங்க உன் மாமனைப் போலவே உலகத்துல இருக்கற எல்லா ஆம்பளைகளும் இருப்பாங்கனு நினைச்சுட்டாங்க போல," அடக்கப்பட்ட கோபத்துடன் அடிக்குரலில் அவன் சீற, அவள் விழித்தாள்.
"மாமாவா?!! அவர் எதுக்கு இந்த விசயத்துல!?" அவனது கோபம் புரியாமல் தமிழ் வினவிய பிறகுதான் கோபத்தில் வாய்தவறி உளறி விட்டதை உணர்ந்தான் அகத்தியன்.
"அது.., அதாவது உன் மாமா மாதிரி ஊர் சைடு ஆட்கள்ல சிலர் பார்க்கற எல்லா பொண்ணுங்களையும் இந்த மாதிரி நினைப்பாங்க தானே. அதைச் சொன்னேன்." ஒருவாறு அவன் சமாளிக்க, தமிழ் கணவனை நம்பாத பார்வை பார்த்தாள்.
அவள் அதிகம் யோசிக்கும் முன்பு, "அவங்க அப்படி சொன்னா, எங்கூட இத்தனை நாட்கள் வாழ்ந்த உனக்கு தெரியாதா நான் எப்படிப்பட்டவன்னு? அவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டாருனு உன்னால உறுதியா சொல்ல முடியலையா?" எனக் கேட்ட பின்,
"இல்ல.. உனக்கே அந்த நம்பிக்கை இல்லையா?!" அவளை கூர்மையாக பார்த்தபடி அகத்தியன் வினவ, ஒருநொடி என்றாலும் தன் கணவனைப் பற்றி தவறாக எண்ணிய குற்ற உணர்ச்சியில் அவள் தடுமாறினாள்.
அதை சரியாகப் படித்த அகத்தியன், "அப்ப உனக்கே எம்மேல நம்பிக்கை இல்லையா மொழி!?" அடிபட்ட குரலில் கேட்க, அவனது சிரித்த முகம் மாறினாலே வருத்தம் கொள்பவள் தற்போது வேதனையை சுமந்த வதனத்தை கண்டு பதறினாள்.
"அப்படி எல்லாம் இல்லங்க. அவங்க சொன்ன அந்த நொடி, குழப்பத்துல இருந்த நானும் ஒரு செகண்ட் உங்கள அப்படி யோசிச்சுட்டேனேனு கில்டியாகிடுச்சு. அதான்.. ஸாரி அத்தான்!" அவனது முகத்தை கைகளில் தாங்கி கன்னத்தில் முத்தமிட்டு, உணர்ந்து மன்னிப்பு கேட்டாள்.
அவளது சொல்லும் செயலும் அகத்தியனை ஓரளவு சமாதானம் செய்தாலும் உள்ளுக்குள் அவள்மீது சிறு தாங்கல் இருக்கவே செய்தது. அவளும் அதற்காக வருந்துகிறாள் என்றபிறகு மேலும் அதையே பேசி சண்டையிட்டு என்ன பயன்!
அதனால், " சரி விடு கண்ணம்மா. ஆனா இனிமே யார் சொன்னாலும் உனக்கு இந்த மாதிரி எண்ணம் வராது தானே?" அழுத்தமாக அவன் கேட்க உறுதியாக தலையசைத்தாள் அவள்.
சில நொடிகளில் அவனது பார்வை மாற, "சரி, இப்ப நடந்ததுக்கு, என்னை அடிக்கனும்னு உனக்கு எதுவும் தோணலையா?" சிறு ஆர்வத்துடன் கேட்டான்.
அதில் லேசாக சிவந்தவள் தனது குற்ற உணர்விலிருந்து வெளிவந்து தலைசாய்த்து அவனைப் பார்த்து "என்ன நடந்துச்சு?!" குறும்பாய் கேட்க, புன்னகையை உதட்டிற்குள் ஒளித்து அவளை திடுமென முத்தமிட்டதை சுட்டிக்காட்டினான் கள்வன்.
தற்போது முகத்தில் சட்டென கவலை மேகம் சூழ அவனை பார்த்தவள், "உண்மைய சொல்லட்டுமா அத்தான்?" என்றிட அவளையே பார்த்திருந்தவனிடம், "அடிக்கத் தயாரான என் கைகளை அடக்கிட்டு தான் இருந்தேன்." என்றாள் இறங்கிய குரலில்.
அவளது மனநிலையை உணர்ந்தவன் சட்டென தன்னை சமாளித்துக் கொண்டு புன்னகைத்து, " இட்ஸ் ஓகேடா. எல்லாம் சரியாகும். விட்டுடு." அவளை கைகளில் அணைத்தபடி படுத்துக் கொள்ள, பழக்கப்பட்ட அந்த தொடுகைகளை அவள் மனம் ஏற்றுக் கொண்டது.
முன்பெல்லாம் அவன் அவளை தீண்டினாலே சீறிக் கொண்டு வருபவள், தற்போது அவனது சிறு சிறு தீண்டல்களை இயல்பாக ஏற்பதில் நிம்மதி அடைந்தவன் 'இதேப்போல ஒருநாள் அனைத்தும் மாறும்.' என்ற நம்பிக்கையில் அவளிடம் அதைப்பற்றி சுட்டிக்காட்டாமல் இருந்தான்.
அதை உணராத தமிழ், தன் உள்ளம் கவர் கணவனுக்கு தன்னால் எந்தவித சுகத்தையும் அளிக்க முடியவில்லையே என்றெண்ணி தன் மனதைப் புண்ணாக்கிக் கொண்டு வேதனையில் கண்ணீர் சிந்தியபடி, அவனது நெஞ்சத்தை மஞ்சமாக்கி அப்படியே உறங்கிப் போனாள்.