அத்தியாயம் - 19
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துக் கொண்டிருக்க, தமிழுக்கான சிகிச்சைகளான மருந்துகள் மற்றும் தெரபிகளும் தொடங்கி விட்டன.
சிகிக்சையின் ஆரம்பத்திலேயே அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை பொறுமையாக மருத்துவர் சித்ரா எடுத்துச் சொல்ல, தமிழுக்கு கலங்கலாக அந்த நினைவுகள் வர, அதில் அவள் மிரண்டு போகவும் அவளது மனதைப் படித்தவர்,
'இதில் அவளது தவறென்று எதுவுமில்லை. சமூகத்தில் இதுபோல இன்னமும் மோசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பலரும் இம்மாதிரி சிகிச்சை மற்றும் தெரபிகள் மூலமாக முழுமையாக வெளி வந்துள்ளனர்' என்றார்.
"உங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளால் தற்காப்பு உணர்வு அதிகமாகி அது PTSDஆ மாறி இருக்கும்மா. நீ மனசு வைச்சா தான் இதுல இருந்து முழுமையா வெளி வர முடியும்." தைரியமூட்டும் விதமாக கூறினார்.
அப்போதும் தமிழ் கலக்கமாக இருக்க, "உன் கணவரை யோசிச்சு பாரு. அவருக்காகவாவது உன் மனசை சரி செய்தால் தான் உங்களோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்." அகத்தியனைச் சொன்னதும் அவளது எண்ணப்போக்கு மாறியது.
'ஆம்! எதிர்பார்ப்பில்லாத பேரன்பைப் பொழியும் அவருக்காக நான் இதை செய்தே ஆக வேண்டும். யாரோ என் வாழ்வில் செய்த பிழைக்காக நான் ஏன் சிலுவை சுமக்க வேண்டும்?! என் வாழ்வை கெடுத்துக் கொள்ள வேண்டும்?' என்றெல்லாம் தமிழ் நேர்மறையாக சிந்திக்கத் தொடங்கினாள்.
அதையே எப்போதும் மனதிற்குள் உருப்போட தொடங்கினாள் அதனால்
ஒவ்வொரு தெரபிகளும் முடியும் போதும் அவளிடம் மிகப்பெரிய மாற்றம் தெரியத் தொடங்க, அகத்தியனுக்கு மனதில் நிம்மதி பரவியது.
அன்றொருநாள் காலையில்.. தலைக்குக் குளித்து தலையில் துவாலையைக் கட்டிக் கொண்டு, கருநீலநிற புடவை உடுத்தி நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி சமையலறையில் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் தமிழ்.
சமையலில் கவனமாக இருந்தவளது புடவை விலகியதில் பப்பாளி நிறத்தில் எடுப்பாக தெரிந்த அவளது இடைவளைவைக் கண்டு, தனக்கான தேநீரைக் கேட்டு அங்கு வந்த அகத்தியன் அப்படியே உறைந்து நின்று விட்டான்.
அவன்மீதான காதலை அவள் என்று வெளிப்படுத்தினாளோ அதன்பின் அவள்மீது அவனது பார்வை அவ்வப்போது கள்ளத்தனமாக பதிய, சில வேளைகளில் இம்மாதிரியான சூழலில் வெகு சிரமத்துடன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
முன்பெல்லாம் இதுபோல அவள் இருந்தாலே சட்டென அங்கிருந்து விலகி அறைக்குள் வந்து, அவளிடம் அவன் கொடுத்த வாக்கை எண்ணி தன்னை நிதானப்படுத்திக் கொள்வான்.
இப்போதெல்லாம் 'அவளும் உன்னை விரும்புறா தானே' எனக் கேட்டு அவன் மனம் கணவனாக அவனது உரிமையை நிலைநாட்டச் சொல்ல இன்று அவனால் ஏனோ மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தன்னவள்! என்ற உரிமையில் தன் பார்வையை கொஞ்சமும் மாற்றாமல் அவளையே விழுங்குகின்ற மாதிரி பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான் அவன்.
பெண்களுக்கே உரித்தான இயல்பான உள்ளுணர்வு உந்துதலில் திரும்பிய தமிழுக்கு அகத்தியனின் விழுங்கும் பார்வையில் வெட்கம் மேலிட அவள் தலையைக் குனிந்து கொள்ள, மனைவியின் வெட்கம் அவனை மேலும் உசுப்பியது.
அதற்கு மேல் தாளாமல் வேகமாக அவளருகே வந்து அவனது தாப மூச்சின் வெம்மை அவளை சுடுமளவு நெருங்கியவன் தன் கைமுஷ்டியை இறுக்கிக் கொண்டு அப்படியே நின்றுவிட்டான்.
"உன்னை அப்படியே எனக்குள்ள புதைக்கிற அளவுக்கு அழுத்தமா கட்டிப்பிடிக்கனும் போல எனக்கு தோணுது மொழி." பெரிதாக மூச்சிரைக்க எச்சில் கூட்டி விழுங்கிச் சொன்னவனின் உணர்வில் உருகிப் போனாள் தமிழ்.
அவளது மனதை மட்டுமே யோசித்து விரதம் காப்பவன். தனக்கான சந்தர்ப்பம் கிடைத்தும் அத்துமீறாமல் அவளிடம் தன் உணர்வுகளை செயலால் வெளிப்படுத்தாமல் இப்போது கூட வெறுமனே சொல்லிக் கொண்டிருக்கிறான்.
எல்லாம் தன்னால்தானே! என்ற எண்ணம் அவளது மனதில் ஓங்க முணுக்கென்று கண்கள் கலங்கத் தொடங்க, அதைக்கண்டு அவளை காயப்படுத்தியதாக எண்ணி தன்னையே நொந்து கொண்ட அகத்தியன் "ஸாரி!" என்றபடி அங்கிருந்து அகல முனைந்தான்.
அதை உணர்ந்தவள் வேகமாக தாவி வந்து அவனை கட்டியணைத்துக் கொண்டு அவன்முகம் முழுவதும் இடைவிடாத முத்தமழை பொழிய, மனைவியின் திடீர் தாக்குதலில் திக்குமுக்காடிப் போனான் கணவன்.
சற்று ஆவேசம் தணிந்தவள், "இனிமே இந்த மாதிரி தோணினா சொல்லிட்டு எல்லா இருக்கக்கூடாது. செய்துடனும், என்னைப்போல. சரியா அத்தான்?!" என்றவள் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் முத்தமிட்டு செயலில் காட்டினாள்.
"ஆனா.." எதையோ அவன் சொல்ல வாயைத் திறக்க, அதற்குள் அவனது இதழ்களை முற்றுகையிட்டாள் அவள். இவன் என்னவன்! என்ற கர்வம் மேலோங்க அதை அவனிடம் தயங்காமல் வெளிப்படுத்தினாள்.
"ஆனா ஆவன்னா எல்லாம் ஒன்னுமில்ல. எங்கிட்ட உங்களுக்கு முழு உரிமை இருக்கு. என்னை என்ன வேணும்னா செய்யலாம். கேட்டுட்டு இருக்கக்கூடாது." கண்களில் காதல் வழியக் கூறியவள்,
பிறகு, "ஏன்.. பொண்டாட்டி அடிச்சா தாங்கிக்க மாட்டீங்களா!?" அவனது விழிகளில் ஊடுருவி ஒற்றைக் கண்ணடித்து அவள் சொல்ல, அதற்கு மேல் அவனால் முடியவில்லை.
அவளை எலும்புகள் நொறுங்குமளவு இடையோடு சேர்த்தணைத்தவன் கரங்கள் அவள் மேனியில் ஊர்வலம் சென்று தன் தாபத்தைக் காட்ட, முதலில் விறைத்த தமிழின் உடல்மொழி, தன்னவன் என்ற உரிமையில் இளகியதை அவனுமே உணர்ந்தான்.
அதற்குள் பூஜை வேளை விசிலாக அடுப்பிலிருந்த குக்கர் 'இது பெட்ரூம் இல்ல. சமையலறை!' என்று தனது கண்டனத்தைத் தெரிவிக்க, இருவரும் மாய வலையிலிருந்து விலகி வெட்கப்புன்னகை பூத்தனர்.
அதன் பிறகு அவ்வப்போது இம்மாதிரி நிகழ்வுகள் அன்றாட செயல்களாகிவிட அவளை கட்டியணைக்கவோ, முத்தமிடவோ அல்லது அவளை மொத்தமாக கொள்ளையிடவோ தோன்றினால் தயங்காமல் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினான் கணவனாக.
ஆத்மார்த்தமான கூடல்களால் தற்போது எல்லாம் அவளது முகத்தில் தேங்கிய வாடாத புன்னகை அவளுக்கு மேலும் அழகு சேர்க்க, பள்ளியில் சக ஆசிரியைகள் கூட அவளை கேலி செய்ய அதையும் வெட்கப் புன்னகையுடன் கடந்தாள்.