• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

யாரையோ நீ மடக்கொடி? - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் -01

"ஏங்க... இப்பிடி தூங்கி வழியிறீங்க? காலங்காத்தால நடு வீட்ல உக்காத்துட்டு யாராவது இப்பிடி தூங்கி வழிவாங்களா?"

"அட போ லட்சுமி... படம் நல்லா இருக்கு னு விடிய விடிய உக்காந்து பாத்துட்டேன். இப்ப தூக்கம் தூக்கமா வருது. உள்ள போய் ஒரு டீ போட்டு எடுத்துட்டு வாயேன்..."

"எனக்குத் தான் தெரியுமே... உங்க தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டது இல்லாம என் புள்ள தூக்கத்தையும் ல சேத்து கெடுக்குறீங்க. அவனையும் கூட சேத்துக்கிட்டு படம் பாக்குறீங்க. அப்பிடி என்ன தான் இருக்கோ அந்த படத்துல..."

"ஆமா... உன் புள்ள ஒரு பச்சக் குழந்தை பாரு... அவனுக்கு தூக்கம் வந்தா போய் தூங்க வேண்டியது தான? தூங்காம அவன் தான உக்காந்து பாத்தான்? பெருசா பேச வந்துட்டா புள்ளைக்கு சப்போர்ட்டுக்கு... போய் மொதல்ல டீ போட்டு கொண்டு வா..."

"என் புள்ளைய பத்தி எதாவது பேசுனீங்கனா டீ இல்ல பச்சத்தண்ணி கூட கிடைக்காது பாத்துக்கங்க..."

"சரி டி... சரி டி... உன் அருமை புள்ளைய பத்தி நா எதுவும் பேசல... போய் மொதல்ல டீ கொண்டு வா..."

"டீ டீ ன்னே என் உயிர வாங்குங்க..."

"ஏன்டி லட்சூ... அந்த படத்துல வர்ற மாதிரி நம்ம பையன் ஒரு பொண்ண கல்லியாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டி வந்தா நீ என்ன பண்ணுவ?"

"மொதல்ல வாய கழுவுங்க... என் புள்ள அந்த மாதிரிலாம் எந்த பொண்ணையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர மாட்டான். கண்றாவியா உலறிட்டு இருக்காம இந்தாங்க... இந்த டீய குடிங்க..."

"சும்மா சொல்லு லட்சூ... அந்த படத்துல ஹீரோ சசிக்குமாரு தம்பிக்காக யாருன்னே தெரியாத பொண்ண அந்த பொண்ணு பேரு கூட தெரிஞ்சுக்காம கழுத்துல தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவாரு. ஆனா ஹீரோ வீட்ல ரெண்டு பேரும் உண்மையா லவ் பண்ணி தான் திருட்டுத்தனமா கல்லியாணம் பண்ணிட்டு வந்து இருக்காங்க னு நெனச்சு அந்த பொண்ணு கூட பேசவே மாட்டாங்க. அது போல... நம்ம பையன் திடீருனு ஒரு பொண்ணு கூட மாலையும் கழுத்துமா வந்து நின்னா அந்த பொண்ணு கூட நீ பேசுவியா லட்சுமி?"

"உலறாம இருக்கீங்களா? இல்ல சுடுதண்ணிய எடுத்து உங்க வாயில ஊத்தவா?"

"பாத்தியா... பாத்தியா... நீ போட்ட டீய நீயே சுடுதண்ணி னு ஒத்துக்கிற... அத நீ என்ன என் வாயில ஊத்துறது? குடு நானே என் வாயில ஊத்திக்கிறேன்..."

"யோவ் மனுஷா... உனக்கு வர வர வாய்க்கொழுப்பு ஜாஸ்தி ஆகிருச்சு... என் புள்ள வரட்டும். அவன் வந்ததும் உமக்கு இருக்குய்யா..."

"காலம் கலிகாலம்... கட்டுன புருஷனுக்கு மரியாதை இல்லாம போயிருச்சு..."

"என்ன அங்க சத்தம்?" என்றக் குரலை தொடர்ந்து உள்ளே பாத்திரம் உடையும் சத்தமும் பலமாக கேட்டது.

"ஒன்னுல்ல மா..." என்ற தாழ்மையான குரலுடன் அன்றைய நாளிதழில் தலையை நுழைத்துக் கொண்டார் அந்த வீட்டுத் தலைவர் நரசிம்மன்.

பழமை மாறாத அவ்வீட்டில் சிறிது நேரத்திற்கு எவ்வித பேச்சு வார்த்தையும் இல்லை. சமையலறையில் பாத்திரங்களின் சத்தமும் சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறியின் சத்தத்தை தவிர வேறெதுவும் ஒலிக்கவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு வாய் பேசாமல் இருக்க முடியாத நரசிம்மன் நாளிதழை மடக்கி வைத்துவிட்டு சமையலறையின் உள்ளே செல்ல எழுகையில் வீட்டு வாசலில் ஏதோ அரவம் கேட்டு வாயிற்படி நோக்கி சென்றார்.

வீட்டின் வெளியே நரசிம்மன் லட்சுமி தம்பதியரின் அருமை புதல்வன் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்தான். அப்பெண்ணின் கழுத்தில் புத்தம் புது மஞ்சள் கயிறு தொங்கி கொண்டிருந்தது. அதைப் பார்த்த நரசிம்மனுக்கு அதிர்ச்சிக்குப் பதிலாக சிரிப்பு தான் வந்தது.

"லட்சுமி... ஏன்டி லட்சுமி... இங்க கொஞ்சம் வாயேன்..." என உள்நோக்கி குரல் கொடுத்தார் நரசிம்மன்.

"இப்ப எதுக்கு இப்பிடி கத்திட்டு இருக்கீங்க? நீங்க சொன்னது பலிச்சுருச்சா என்ன?" என சாவகாசமாக முந்தானையில் கையை துடைத்தபடி வந்தார் லட்சுமி.

"ஐயோ... நிசமா தான்டி... என் வாக்கு பலிச்சுருச்சு பாரேன். நம்ம பையன் ஒரு பொண்ண கல்லியாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறான்..." என தன் மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு சிறு பிள்ளையென துள்ளிக் குதித்தார் நரசிம்மன்.

"என்னது?" என அதிர்ச்சியுடன் வெளியே பார்த்தார் லட்சுமி.

வெளியே நரசிம்மன் கண்ட காட்சியையே லட்சுமியும் கண்டார். "டேய்... யாருடா இந்த பொண்ணு? ஏதோ வேலையா வெளியூர் போறேன் னு தானடா காலையில வெல்லன எந்திரிச்சுப் போன? இப்ப இப்பிடி வந்து நிக்கிற? உங்கப்பன் இப்ப தான் உலறிட்டு இருந்தாரு. உன் மவன் ஒரு பொண்ண இழுத்துட்டு வந்து நிக்கப் போறான் னு... நீயும் அதே மாதிரி வந்து நிக்கிற... என்னடா இதெல்லாம்? யோவ் இவன் இப்பிடி ஒரு பொண்ணோட வந்து நிக்கப் போறது உனக்கு முன்னாடியே தெரியும் தான? அப்பனும் மகனும் சேந்து திருட்டு வேலை பாக்க என் கிட்ட காலையில போட்டு வாங்குனியா?" என மகனிடம் ஆரம்பித்து கணவனிடம் கத்தினார் லட்சுமி.

"அய்யோ... லட்சூ... உன் மேல சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. நா சும்மா படத்த பாத்துட்டு உன் கிட்ட விளையாடிட்டு இருந்தேன்... ஆனா ஒரு விஷயத்த கவனிச்சியா படத்த பாத்துட்டு நா உன் கிட்ட சும்மா தான் உலறிட்டு இருந்தேன். ஆனா உன் மகன் படத்த பாத்ததும் இல்லாம அதே மாதிரி பொண்ணோட வந்து நிக்கிறான். அவன மொதல்ல கேளு..." நரசிம்மன்.

"இருய்யா... உன்னய அப்புறம் கவனிச்சுக்கிறேன். கேட்டதுக்கு பதில் சொல்லு டா. யாரு இந்த பொண்ணு?" லட்சுமி.

"இவ என்னோட பொண்டாட்டி. போதுமா? இப்ப நாங்க உள்ள வரலாமா? இல்ல இங்கயே தான் நிக்கனுமா?" என இறுக்கமான முகத்துடன் கேட்டான் நரசிம்மன் லட்சுமி தம்பதியரின் அருமை புதல்வன் நிலன்.

"இருடா மவனே... இப்ப தான் மொத கல்லியாணம் பண்ணிட்டு வீட்டுக்குள்ள வர்ற... ஆரத்தி எடுத்த்துக்கு அப்புறம் தான் உள்ள வரனும்..." என நரசிம்மன் கூறியவாறு லட்சுமியை பார்க்க... அவரோ நரசிம்மனை வெறி கொண்டு முறைத்துக் கொண்டிருந்தார்.

"இப்ப எதுக்கு லட்சூ என்னய இவ்ளோ ரொமான்டிக்கா பாக்குற? நம்மளோட கல்லியாண நெனப்பு வந்துருச்சா?" என மொத்த பற்களையும் காட்டினார் நரசிம்மன்.

"அந்த கருமத்த நா ஏன் நெனச்சு பாக்குறேன்? உன்னோடது வாயா இல்ல காவாயா னு பாக்குறேன்யா." லட்சுமி.

"இப்ப நா அப்பிடி என்ன சொல்லிட்டேன்?" என தான் சற்று முன் பேசியதை ரீவைண்ட் செய்து பார்த்தார் நரசிம்மன்.

"அய்யய்யோ ஸாரி லட்சூ. கல்யாணம் பண்ணி மொத மொத னு வீட்டுக்குள்ள வர்ற னு சொல்றதுக்கு பதிலா மொத கல்யாணம் பண்ணிட்டு வர்ற னு சொல்லிட்டேன். லேசா வார்த்தை மாறிருச்சு..." நரசிம்மன்.

"மாறும் மாறும்... எனக்கு வர்ற கோபத்துக்கு இப்ப என்ன என்ன இடம் மாறும் னு தெரியல..." லட்சுமி.

"ஹி ஹி ஹி... நம்ம புள்ள கல்லியாணம் பண்ணி மொத மொதனு வீட்டுக்குள்ள வர்றான்... ஆரத்தி எடுத்து வரவேத்தா தான நல்லா இருக்கும்? என்னய அப்புறமா ரொமாண்டிக் லுக் விட்டுக்கலாம்... இப்ப போய் ஆரத்தி ரெடி பண்ணி எடுத்துட்டு வா..." நரசிம்மன்.

"அதுக்கு உன் மவன் இங்க நின்னா தான? அவன் உள்ள போய் ரொம்ப நேரம் ஆச்சு..." லட்சுமி.

"என்ன சொல்ற லட்சூ?" என திரும்பி வாசலைப் பார்த்தார் நரசிம்மன். அங்கு அந்த பெண் மட்டும் தனியே தலை குனிந்து நின்றிருக்க அருகில் நின்றிருந்த தன் மகன் நிலனை காணாமல் குழப்பத்துடன் லட்சுமியை ஏறிட்டார்.

"மருமகளே... உள்ள வா மா..." என நரசிம்மன் அந்த பெண்ணை அழைக்க... அவளோ குனிந்த தலை நிமிராமல் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்.

"இந்தா பொண்ணே... அதான் என் புள்ள கையால தாலி வாங்கி வீடு வாசல் வரைக்கும் வந்து நின்னுட்ட ல... அப்புறம் இன்னும் எதுக்கு வெளியிலயே நிக்கிற?" லட்சுமி.

அப்பொழுதும் ஆடாமல் அசையாமல் அப்படியே தலை குனிந்து நின்றிருந்தாள் அப்பெண்.

"என்னங்க இந்த பொண்ணு அப்பிடியே நிக்கிது? கூட்டி வந்தவன் அவன் பாட்டுக்கும் உள்ள போய்ட்டான்... ஒருவேளை நீங்க பேசனத கேட்டு பயந்துருச்சோ?" லட்சுமி.

"இருக்காது... எனக்கென்னமோ உன் மூஞ்சிய பாத்து பயந்து போய் நிக்கிது னு நெனக்கிறேன்..." நரசிம்மன்.

"உங்கள..." என நரசிம்மனை முறைத்தவாறே, "ஏம்மா... உள்ள வாம்மா..." என மீண்டும் அப்பெண்ணிடம் கூறினார் லட்சுமி. அப்பொழுதும் அப்பெண் குனிந்த தலை நிமிராமல் போகவே... "ஒரு வேள இந்த பொண்ணுக்கு காது கேக்காதோ?" என கணவனைப் பார்த்து கேட்டார் லட்சுமி.

"இருந்தாலும் இருக்கும்... நீ போய் அந்த புள்ள கைய புடிச்சி உள்ள கூட்டிட்டு வா..." நரசிம்மன்.

"இந்தா பொண்ணே... உள்ள வா... எதுவா இருந்தாலும் உள்ள வச்சு பேசிக்கலாம்..." என அப்பெண்ணின் கையைப் பிடித்தார் லட்சுமி.

அவரின் தொடுதலில் சட்டென நிமிர்ந்து லட்சுமியைப் பார்த்தாள் அப்பெண். அவளின் கண்கள் சிவந்து கலங்கி கண்ணீர்த்துளி இதோ கீழே விழவா என்ற ரீதியில் நின்று கொண்டிருந்தது.

அவளின் கலங்கிய கண்களை கண்ட லட்சுமி பதறி, "இப்ப ஏம்மா கண் கலங்குற? கண்ண தொடச்சிட்டு சந்தோஷமா உள்ள வா..." என அவளின் கண்ணீர்த்துளியை தானே துடைத்துவிட்டு கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தார் லட்சுமி.

"நிலா... டேய் நிலா... இங்க வா. யாரோ ஒரு பொண்ண கூட்டி வந்து இதான் என் பொண்டாட்டிய னு சொல்லிட்டு நீ பாட்டுக்கும் உன் ரூம்க்குள்ள போய் உக்காந்துக்கிட்டா என்னடா அர்த்தம்?" லட்சுமி.

பட்டென அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன்,"காலேஜ்க்கு டைம் ஆகிருச்சு... நா கிளம்புறேன்..." என யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் யார் முகத்தையும் காணாமல் வீட்டை விட்டு வெளியேறினான் நிலன்.

நரசிம்மன் லட்சுமி தம்பதியரின் ஒரே புதல்வன் நிலன். அவன் ஒரு கணிதபட்டதாரி. தான் படித்த கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவன் வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களுக்குப் பிறகு பிறரிடம் தேவைக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டான். பெற்றோர்களிடம் அரிதாக ஓரிரு வார்த்தைகளில் பேச பழக்கப்படுத்திக் கொண்டான்.

நிலன் வெளியேறி செல்வதை உணர்ந்த அப்பெண் அப்படியே குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள்.

"யோவ்... உன் பையன் என்ன லூசா? ஒரு பொண்ண கல்லியாணம் பண்ணி கூட்டி வந்துட்டு அந்த புள்ளைய உள்ள வா னு கூட சொல்லாம அவன் வேலைய பாத்துட்டு போறான். இல்ல தெரியாம தான் கேக்குறேன்... உன் பையன் மனசுல அப்பிடி என்ன தான் நெனச்சுட்டு இருக்கான்?" லட்சுமி.

"எனக்கும் தான் தெரிய மாட்டேன்ங்குது..." என போலியான சோகத்துடன் கூறினார் நரசிம்மன்.

"என்ன?" லட்சுமி.

"இல்ல... ஒரு நேரம் வாங்க போங்க னு மரியாதையா சொல்ற. ஒரு நேரம் யோவ் னு கேவலப்படுத்துற. ஒரு நேரம் வா போ னு சொல்ற. நீ எந்த அளவுக்கு என்னய மதிக்கிற னு எனக்குத் தெரிய மாட்டேன்ங்குது லட்சூ..." நரசிம்மன்.

"நம்ம பஞ்சாயத்த அப்புறம் வச்சுக்கலாம். மொதல்ல இந்த பொண்ண பத்தி விசாரிங்க..." லட்சுமி.

"மொதல்ல அந்த பொண்ணுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா..." நரசிம்மன்.

கணவனின் கூற்றுக்கு இணங்கி உள்ளே செல்ல திரும்பியவளை நிறுத்தி, "என்ன? பச்சத்தண்ணி தான கொண்டு வரப் போற?" என்றார் நரசிம்மன்.

"இல்ல ங்க ஜூஸ் போடப் போறேன்..." லட்சுமி.

"நீ போடுற ஜூஸ்க்கு பேரு தான் லட்சூ பச்சத்தண்ணி... நீ எதுக்கு லட்சூ சிரமப்படுற? நீ இரு நானே உள்ள போய் குடத்துல இருந்து ஒரு சொம்பு பச்சத்தண்ணி எடுத்துட்டு வர்றேன்..." நரசிம்மன்.

"யோவ்... ஒழுங்கா ஓடிரு. இல்ல உன் வாய ஒடைச்சுருவேன்..." லட்சுமி.

அவர்கள் இருவரும் பேசுவதை வியப்புடன் பார்த்திருந்தாள் அப்பெண். "என்னம்மா? அப்பிடி பாக்குற? நாங்க ரெண்டு பேரும் எப்போதும் அப்பிடித்தான். நீ மொதல்ல உக்காரு. உன் பேரு என்ன?" என பாசத்துடன் கேட்டார் நரசிம்மன்.

"என் பேரு... பாஞ்சாலி" என அச்சம் நிறைந்த விழிகளுடன் கூறினாள் நிலனின் மனைவியான பாஞ்சாலி.

"என்னது? உன் பேரு பாஞ்சாலியா?" என லட்சுமி ஆச்சரியத்துடன் கேட்க... "பாஞ்சாலியா?" என அதிர்ச்சியுடன் கேட்டார் நரசிம்மன்.

(மடக்கொடி வருவாள்...)
 
Top Bottom