• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 10

ஷாரிகா

New member
Staff member
VIN- 10

அந்த கஃபேயின் முன்னால் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, நடக்கத்தொடங்கிய ஷோபனாவின் விழிகள் மின்னற்கதியில் வொட்ச்சில் பதிந்து மீண்டன. வருண் வரசொல்லியிருந்த நேரத்தை விட பத்து நிமிடங்கள் தாமதித்திருந்தாள். பெண்ணின் நடையில் வேகம் சற்றுக்கூடியது.

அவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்த அதே அருந்தகம்தான். மூலைமேசையில் அமர்ந்து காத்துக்கொண்டிருந்தான் வருண். மேசை மேலே ஓர் காலியான பெரியரக கண்ணாடி கப், அதனுள்ளே வெண்ணிற பிளாஸ்டிக் ஸ்பூன் சரிந்திருந்தது. ஏதேனும் ஐஸ்க்ரீம் குடித்திருப்பான் போலும்... அப்போதுதான் அவன் முன்னிருக்கையில் வந்தமர்ந்த ஷோபனா, அது வெனிலா ஃபிளேவர் எனக் கண்டுபிடித்திருந்தாள்.

"ஏதாச்சும் குடிக்கிறீங்களா?" மெனுகார்ட்டை அவள்புறம் நகர்த்தியவாறு கேட்டான் அவன்.

"இல்ல, கொஞ்சம் லேட்டாகட்டுமே"

"ஹ்ம்ம்.." என்றவன், இடக்கையால் தன்நெற்றியை மீண்டும் மீண்டும் தடவிவிட்டான்.

' கொஞ்சம் கதைக்க வேணும் ' என வருணிடமிருந்து மெசேஜ் வரவுமே, யாழினி, அவனிடம் சொல்லிவிட்டாளெனத் தெரிந்தது. வருண் 'Yes' சொன்னால் எப்படிப் புன்னகைக்கலாம் என்றும், 'No' சொன்னால் அசிங்கப்பட்டதை முகத்தில் வெளிக்காட்டாமல் எப்படி சமாளிக்கலாம் என்றும் முழுக்க முழுக்க பிராக்டீஸ் பண்ணிவிட்டே வந்திருந்தாள். (அதனால்தான் மேடம் சற்று லேட்)

' ஆனா, இவனென்ன நெத்திய இந்தத்தேய் தேய்க்கிறான். விஷயம் கேள்விப்பட்டு ஆளுக்கு சரியான தலைவலி போல, பாவம்' எதையும்தாங்கும் இதயத்தோடு வந்திருந்தவளுக்கு அவனைப்பார்க்கப் பாவமாக இருந்தது.

"அக்கா சொன்ன விஷயமெல்லாம்.. உண்மையா?" சட்டென்று கேட்டான் அவன்.

ஒரு பக்கமாய் உதடுகளைக் கூட்டிக்கொண்டவள், ஆம் என்பதாக ஆமைவேகத்தில் தலையசைத்தாள்.

"ஓ.." என்றுவிட்டு தாமதித்தவன்,
"சரியா வராது ஷோபனா."என்றிருந்தான் உடனேயே.

'ம்க்கும், எதிர்பார்த்தது தானே'
"ஓகே.. பட் என்ன ரீஸன் என்டு.. " தயங்கித் தயங்கித் தொடங்கியவளை இடைமறித்தவன்,

"ரீஸனா..? நான் தான் கேக்கணும் ரீஸன். என்ன நினச்சிக்கொண்டு இப்படியெல்லாம் பண்றீங்க? 'உன்ட ஃப்ரெண்ட வெச்சே உன்னப்பழிவாங்குறன்' அப்படி முட்டாள்தனமா யோசிச்சிக்கொண்டு, ஜோனத்தனுக்காக ஏதும் பண்றீங்களா என்ன...?" எரிச்சல் நிரம்பிய குரலில் காட்டமாகக் கேட்டான் வருண்.

இப்படி ஒரு கேள்வியை முற்றிலும் எதிர்பார்த்திராதவளுக்கு பதில் பேச, நா எழ மறுத்தது. துடிக்க துவங்கிய உதடுகளை சேர்த்து இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

"என்ன ஷோபனா எப்பதான் இந்த விஷயத்துக்கு ஒரு முடிவெ..?"

" போதும் வருண்.." ஒற்றைக் கையுயர்த்தி அவன் பேச்சைத்தடுத்தாள்.
"நீங்க எப்ப என்ன முட்டாளாப் பாக்குறத நிப்பாட்டப்போறீங்க?"
மிதமான சத்தத்தில் இயலாமையுடன் கேட்டது பெண்ணின் குரல்.

" அன்டைக்கு உங்கட அம்மா, யாழினிஅக்காட்ட ஷோபனாவ வருணுக்கு பேசுவம் என்டு சொல்லும் வரைக்கும் என்டமனசுல எந்த எண்ணமும் இல்ல. யாழினியக்கா, சிவாண்ணா, ஆதி , உங்கட அம்மா எல்லாருமே என்னோட நல்லமாதிரி. எனக்கும் அவங்க எல்லாரையுமே அப்படிப் பிடிக்கும். ஏன் உங்களையும்தான். சந்திச்ச ஒவ்வொரு முறையும் நல்லாத்தான் நடந்தீங்க. நிதானமா யோச்சிப் பாக்கேக்க உங்கட அம்மா சொன்ன மாதிரி நடந்தா நல்லாருக்குமே என்டு தோனிச்சு. யாழினியக்காட்ட டக்கென்டு கேட்டுட்டேன். இதுல ஜோனத்தன் எங்க வந்தான்...?" கேள்வியாய் நிறுத்தியவள் தானே மீண்டும் தொடர்ந்தாள்.

" உன்ன எனக்குப் பிடிக்கலன்டு சொல்லுங்க. உனக்குப் பிடிச்சா சரியா?ஏன் இவ்வளோ செல்ஃபிஷா இருக்க என்டு கேளுங்க. அதவிட்டுட்டு.."

இதற்கு மேல் முடியாது என்பதாக இருபுறமும் தலையசைத்தவள், முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள். அவன் முகம் பாராமல் "பொய்ட்டு வாரன் வருண்" என்றவள் சட்டென்று வெளியேறிவிட்டாள்.

*****

வருணிடம் பேசிவிட்டு வந்தவள் அழவெல்லாம் இல்லை. காதல் கொள்ளவில்லை, ஆனபோதிலும் கல்யாணம் என்றதும் மனத்தில் அவனைப் பொருத்திப் பார்த்து திருப்திப்பட்டது உண்மை. ஆதலால் இதயத்தின் ஓரமாய் இனங்காண முடியா வலியொன்று அவ்வப்போது தோன்றியது. 'ஜோனத்தன், வசீகரன், வருண் வரிசையில் ஒரு சந்திரன், சூரியன் இல்லையேல் ஓர் சுக்கிரனாவது வராமலா போய்விடுவான்' என்றெண்ணி கவலையைப் புறந்தள்ளிவிடப் பழகி இருந்தாள்.

பத்து நாட்கள் கழிந்திருந்தன. இன்று வெள்ளிக்கிழமை. சிறிது நேரத்தில் ஸ்கூல் முடிந்ததற்கான பெல் அடித்துவிடும். இன்றாவது யாழினியுடன் ஒழுங்காகப் பேசவேண்டுமென நினைத்தாள் ஷோபனா.

ஆமாம், தம்பி மேல் உள்ள கோவத்தில் அவன் அக்காவிடம் கொஞ்சமே கொஞ்சம் ஒதுக்கம் காண்பித்திருந்தாள். நெல்லுக்குப் பாய்ச்சிய தண்ணியில கொஞ்சம் புல்லுக்கும் போயிருந்தது. யாழினியிடம் சரிவரப் பேசாததில் ஷோபாவுகுத்தான் மிகுந்த மனவருத்தம்.

பார்க்கிங் ஏரியாவில் வைத்து யாழினியைப் பிடித்துக் கொண்டாள் ஷோபா.

"யாருடாப்பா இது! ஐயோ எங்கட மச்சாள் என?" யாழினி கலாய்த்ததில் பற்றிக்கொண்டு வந்தது ஷோபனாவுக்கு .

"விசராக்காதிங்க அக்கா. தயவுசெஞ்சி மச்சாள் என்டவேணாம். அதான் உங்கட தம்பியும் வேணாம், ஒன்டும் வேணாம் என்டுட்டு என்டபாட்டுல தானே இருக்கன்."

"இப்ப வேணாம் என்டதெல்லாம் செல்லாது. நீங்க டூ லேட் மச்சாள்." என்ற யாழினியை விசித்திரமாகப் பார்த்தாள் ஷோபா.

"அடியே ஷோபா, உன்னோட கதைச்ச அன்டைக்கே தம்பி ஓம் என்டுட்டான். நாளைக்கே உங்கட வீட்ட பொண்கேட்டு வரப்போறம். நான்தான் வருண்ட்ட நீ ஒன்டும் சொல்லாத, சர்ப்ரைஸ் குடுப்பம் என்டனான். எப்டி எங்கட சர்ப்ரைஸ்?" என்று கண்ணடித்துக் கேட்ட யாழினியை கண்ணெடுக்க மறந்து பார்த்திருந்தாள் இவள்.

" ஷோபா, என்ன நடந்தது? கணக்க யோசிக்கிறாய்? "

"என்னக்கா நாளைக்கு வாரன் என்றீங்க. நான் வீட்ட ஒன்டும் சொல்லவும் இல்லயே." பதட்டமானாள் ஷோபனா.

" ஓ.. இது தானா? அதெல்லாம் உங்கட அண்ணாட நம்பர் எடுத்து நாங்க கதச்சிட்டோம். நாளைக்கு அவரும்தான் வருவேர்."

யாழினி சொன்னதைக்கேட்டு ஆச்சர்யத்தில் விழிகளை விரித்தவளின் முகத்தில் குழப்பத்தின் சாயல்.

"இன்னும் என்னடி ஷோபா..?"

" உங்கட தம்பி எப்டி ஓம் என்டேர்?"

" நீதான் ஏதோ சொல்லிருக்காய்.உன்ன மீட் பண்ணிட்டு வந்தான். வீட்டுக்க அங்கயும் இங்கயுமா நடந்தான். பிறகு கல்யாணத்துக்கு ஓம் என்டான். அடுத்தநாள் வேலைக்குப் பொய்ட்டான். "

அவளின் பதிலில், புருவங்கள் நெரித்து யோசித்தாள் ஷோபா.

"நல்லா திங்க் பண்ணி, கண்டுபிடிச்சிட்டு எனக்கும் சொல்லு. இப்ப, ஆதி என்னத்தேடப் போறான். வாரன் பொய்ட்டு." யாழினி சொன்னவள் போய்விட்டாள்.

ஷோபனா, யாழினி சொன்ன சேதியில் மகிழ்ச்சி பொங்க துள்ளிக் குதிக்கவெல்லாம் இல்லை. ஆனால் இந்த சர்ப்ரைஸ் அவளுக்குப் பிடித்திருக்கிறது என்று, விஷயமறிந்தவர்கள் அவளைப் பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். எப்படி?? அதுதான், அவள் மூஞ்சியிலேயே கொட்டைஎழுத்தில் எழுதி ஒட்டப்பட்டிருக்கிறதே.

*****

வீடுநோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழினிக்கு, பத்துநாட்களுக்கு முன்னர் தம்பி காட்டிய புதியபரிமாணத்தை எண்ணி இதழ்கள் புன்னகையில் நெளிந்தன. நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

அன்று காலையில் கூப்பிடக் கூப்பிடப் போய்விட்டு பின்னேரம் மீண்டும் வந்து நின்ற தம்பியிடம், எதுவும் கேட்கவில்லை அவள்.

அவனே அவளருகில் வந்து அமர்ந்து, "அக்கா.. காலைல நிக்காம போனத்துக்கு சொரி " என்றான்.

"ம்ம்.."

பின், மெதுவாகத் தொடங்கினான் வருண், "ஜோனத்தன் ஜஸ்ட் என்ட ரூம்மேட்தான். அவனுக்கு ரிலேஷன்ஷிப் அட்வைஸ் குடுத்துக் குடுத்துத்தான் ரெண்டுபேரும் க்ளோஸ் ஆனோம். ஃப்ரெண்ட் விரும்பின பிள்ளையக் கட்ட வெளிக்கிர்றது தப்பில்லையா அக்கா?"

"தப்பே இல்ல மச்சான்." ரூமுள்ளிருந்து சத்தமிட்டான் சிவா.

உடனே எழுந்து அவனிடம் சென்றான் வருண். பின்னாலேயே யாழினியும்.

"ஃப்ரெண்ட் லவ் பண்றான்னு தெரிஞ்சும் நீ ஆசப்பட்டா அது, நம்பிக்கை துரோகம். அவன் கழட்டிவிட்டுட்டானென்டா, அதுக்குப் பிறகு சரி,தப்பு என்டவிஷயம் அவர் சார்ந்தது இல்ல." என்றான் சிவா.

"அத்தான், அவன் ஒன்டும் கழட்டியெல்லாம் விடல." சொன்ன வருணை

"ஓம் இப்ப, இதுதான் ரொம்ப முக்கியம்" என்று முறைத்த யாழினி,
" இப்ப கடைசியா என்ன சொல்றாய்?" என வருணிடம் வினவினாள்.

" நீங்க எல்லாரும் ஆசப்படுறீங்க. அம்மாக்கும் ஷோபால ஏதோ விருப்பமாமே. பேசிப்பாத்த பிறகு எனக்கும் ஓகேதான்" என்று சொல்லிவிட்ட வருண், விரலில் நகமுள்ளதா? அல்லது நகம் விரலில் உள்ளதா? என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிட்டான்.

காலையில் எழுந்து போனபோக்கென்ன, மாலையில் பம்மிப்பம்மி பேசுவதென்ன. முழுதாய் அந்தர்பல்டி அடித்து
நிற்பவனை, கணவனும் மனைவியும் கண்களால் காட்டி, தங்களுக்குள் அதிசயித்துக் கொண்டனர்.






 
Top Bottom