• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Episode 21

வரம் 21
பஞ்சாயத்து முடிந்து வந்ததில் இருந்து குடியே கதியென இருந்தான் மாயவன். துவாரகாவை மொத்தமாக இழந்ததையும், பலரை ஆட்டிப்படைத்த தன்னை நவநீதன் ஒற்றை விரலால் ஆட்டிப் படைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால். நடந்தவைகளில் மாயவனுக்கு இணையாக பத்மனுக்கும் கோபம் இருந்தது. ஆகையால் இருவரும் இணைந்து நவநீதனைப் பழிவாங்க நினைத்தனர்.

மாயவன் நவநீதனின் கை, கால்களை உடைத்து போடச் செய்யலாம் என யோசனை சொல்ல, இயல்பிலேயே கொஞ்சம் கூடுதலான மூர்க்கத்தனம் உள்ளவன் என்பதால் தங்களுக்கு தோல்வியைப் பரிசளித்தவனுக்கு மரணத்தைப் பரிசளிக்க விரும்பிய பத்மன் தன் யோசனைக்கு ஒத்துவர பயந்த தம்பியின் மூளையைக் கழுவினான்.

தன்னிடம் அடிவாங்கி, தன் இஷ்டத்துக்கு எல்லாம் வளைந்து கொடுத்து அழுதுகொண்டே வாழ்ந்த துவாரகாவை அவன் மகாராணியைப் போல் வாழவைக்கவேண்டும் என்று நினைத்தான் அல்லவா. காலத்திற்கும் அவளுக்கு மரியாதையும் கிடைக்கக்கூடாது, நல்லதும் நடக்கக்கூடாது. அதற்கு அவன் உயிரோடு இருக்கக் கூடாது என மாயவனும் முடிவுக்கு வந்தான். அவர்களுக்குள் இருந்த ஆத்திரம் வேகமாக திட்டத்தை போட வைத்தது.

அச்சகத்தில் வேலைகளை முடித்துவிட்டு இரண்டு பக்கமும் நெற்பயிர்களால் நிறைந்திருந்த சாலையில் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தான் நவநீதன். கண் முன் காணும் காட்சி மனதுக்கு இதத்தை கொடுத்துக்கொண்டிருக்க நெடுநேரமாக தன்னை அடித்து தூக்கும் நோக்கத்தில் தனக்கு வெகுநெருக்கமாக வந்துகொண்டிருந்த காரைப் பார்க்க தவறி இருந்தான்.

கடவுள் புண்ணியத்தில் கடைசி நேரத்தில் எமனாக வந்த வாகனத்தைக் கவனித்தவன் சமயோஜிதமாக செயல்பட்டு சாலையில் இருந்து இறங்கி அருகே இருந்த நெற்வயல்களுக்குள் வாகனத்தை விட்டுவிட மயிரிழையில் உயிர் தப்பி இருந்தான். ஆனாலும் சறுக்கத்தில் வேகத்தை குறைக்காமல் இறங்கியதால் உடம்பில் பல இடங்களில் சிராய்ப்பு காயம் உண்டாகி இருந்தது. அதை விட தன்னால் பழுதாகிக்கிடக்கும் பாதி வளர்ந்த நெற்பயிற்களை பார்த்து தான் வேதனைப்பட்டான் நவநீதன்.

சற்று தொலைவில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த கணவன், மனைவியான பெரியவர்கள் இருவர் இவனைப் பார்த்து ஓடி வந்து, அவன் எழுவதற்கு உதவி செய்து பலமாக துடித்துக்கொண்டிருந்த இதயத்தின் மேல் நீவிவிட்டு பயம் போக தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்தனர்.

தண்ணீர் குடித்து முடித்தவன், “என்னை மன்னிச்சிடுங்க. என்னால் உங்களுக்கு கொஞ்சம் நஷ்டமாகிடுச்சு.” வருத்தமாய் சொல்ல, “என்ன தம்பி பேசுற. அந்த கார்காரன் உன்னை அடிச்சுப் போட்டு, உயிர் போன உடம்பா எங்க வயலுக்குள்ள நீ விழுந்திருந்தா அதை ஆயுளுக்கும் எங்களால் மறக்க முடிஞ்சிருக்காது. ஆனா உன்னோட நல்ல நேரமும், உன்னைக் காப்பாத்தும் காவல் தெய்வமும் சேர்த்து தான் கடைசி நேரத்தில் உன்னை சுதாரிக்க வைச்சிருக்கு.

கொஞ்ச இடம் தானே தம்பி. என் பயிர் உன் உயிரைக் காப்பாத்திட்டு தான் போய் இருக்கு. அந்த வகையில் எனக்கு சந்தோஷம் தான். காக்கா குருவி சாப்பிட்டது போக தான் எங்களுக்கு கிடைக்கும். இந்த முறை கூடுதலாக பத்து காக்கா வந்துட்டதா நாங்க நினைச்சுக்கிறோம். நீ வா வந்து மோட்டரில் குளிச்சுட்டு போவ. உன் சம்சாரம் உன்னை இப்படிப் பார்த்தா பயந்திடப்போகுது.” என்றார்.

சம்சாரம் என்றதும் தன்னால் துவாரகாவின் நினைவு வர சிரித்துக்கொண்டான் நவநீதன். அவர் சொன்னது போலவே குளித்துவிட்டு அதே உடையை அணிந்துகொண்டவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

மகன் வண்டிச்சத்தம் கேட்கவில்லையே என பார்த்துக்கொண்டிருந்த அஞ்சனை மகன் வந்த கோலம் கண்டு பதறி வாசல் வரை வந்துவிட்டார். ஆனால் மகன் வீட்டிற்குள் வராமல் ஓட்டு வீடு நோக்கி நடக்க நிதர்சனம் புரிந்து திண்ணையில் அப்படியே அமர்ந்துவிட்டார்.

நாளும் பொழுதும் வேலை செய்தே பழக்கப்பட்ட துவாரகாவிற்கு சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. அதனால் குறைந்தபட்சம் சமைக்கலாம் என அப்போது தான் தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

“வேலைக்கு போயிட்டு வர புருஷனுக்காக நளபாகம் தயாராகிக்கிட்டு இருக்கு போலவே.” சிரிப்போடு அவன் கேட்க, “யாருக்கு யார் புருஷன்.” என்றாள் துவாரகா.

“சரிம்மா, வேலை முடிஞ்சு வர காதலனுக்காக அவனோட காதலி ஆசையா சமைச்சுக்கிட்டு இருக்கா போதுமா.” என்றான்.

“நான் யாருக்கும் காதலி கிடையாது. என் பசிக்கு நான் சமைக்கிறேன். வேற யாருக்கும் இங்க சாப்பாடு கிடையாது.” என்றாள்.

“செத்துப் பொழைச்சு வந்தவனுக்கு உன் கையால் ஒரு வாய் சாப்பாடு போட மாட்டியா? நான் சுதாரிக்கலன்னா இந்நேரம் இந்த அரிசியை என் வாயில் போட்டுக்கிட்டு இருந்திருப்ப.” தன்னைப் போல் அவன் சொல்ல, கையில் இருந்த கரண்டியை தவற விட்டிருந்தாள் துவாரகா.

நவநீதன் அவளையே பார்க்க, “மாயவனா?” அதிர்ச்சி மற்றும் பயத்தோடு கேட்டாள். ஆமாம் என்று தலையசைத்தவன், “நானும் உன் வாழ்க்கையைக் காப்பாத்தினதோட நிறுத்திக்கலாம் னு பார்க்கிறேன். அடங்க மாட்டேங்கிறானே. என்ன பண்ணலாம் அவனை.” என்று கேட்டு பேசுவதற்காக அவளைத் தூண்டிவிட்டான்.

அவனால் நேரடியாக பாதிக்கப்பட்டவள் துவாரகா. அவள் அவனை எப்படி தண்டிக்க விருப்பப்படுகிறாளோ அந்த வழியில் அவனைத் தண்டிக்க முடிவுசெய்தான் நவநீதன்.

“அவனும் அவன் அண்ணனும் கட்டுவிரியன் பாம்பை விட மோசமானவனுங்க மச்சான். அவனோட வண்டவாளம் தண்டவாளம் ஏறனும். அவனை ஊர் உலகம் மொத்தமும் பார்த்து சிரிக்கணும். அண்ணன், தம்பி அந்த சூர்ப்பனகை சுரேகா மூணு பேரும் வெளியே தலைகாட்ட முடியாம அசிங்கப்படணும். இவனுங்களோட நிலையைப் பார்த்து வேற யாரும் பொண்ணுங்களுக்கு எதிரா எதையும் செய்ய துணியக்கூடாது.” என்றவள் மேற்க்கொண்டு ஏதோ சொல்ல முயன்ற போது, “சொல்லிட்டல்ல, மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்.” உறுதியாகச் சொன்னான் நவநீதன்.

அவன் நெற்றியில் இருந்த காயங்களை மென்மையாக வருடிப்பார்த்தாள் துவாரகா. அடிபட்டு வரும் ஒவ்வொரு நாளும் அம்மாவும் இப்படித்தான் அன்போடு கூடிய ஆராய்ச்சி நடத்துவார்கள் என்று நினைத்தவன், “உடம்பெல்லாம் ரொம்ப வலிக்கிது. நான் கொஞ்ச நேரம் இப்படிப் படுத்துக்கிறேன். தலைமுடி கோதிவிடுறியா? சுகமா அப்படியே தூங்கிடுவேன்.” ஆசையாகக் கேட்க, கலங்கிய கண்களோடு தலையாட்டிய துவாரகா அவன் தலைகோத ஆரம்பிக்க சில நிமிடங்களில் நிம்மதியாக உறங்கிப்போனான் நவநீதன்.

அவன் கண்விழித்த போது உணவு தயாராகி இருந்தது. அவனுக்கும் சேர்த்தே பறிமாறினாள் துவாரகா. உணவைக் கவனிக்காமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அது புரிந்தும் புரியாதது போல் செயலில் கண்ணாய் இருக்க, அவளை சோதித்தது போதும் என்று நினைத்தானோ என்னவோ அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்.

அடுத்த சில நாட்களில் சொத்து மோசடி வழக்கில் பத்மன், மாயவன் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்கிற தகவல் உள்ளூர் தினசரியில் வந்தது. அதைப் பார்த்துதும் கிணற்றில் நீர் இறைத்துக்கொண்டிருந்த நவநீதன் அருகே வந்த துவாரகா, “இது உங்க வேலை தானே?” என்க, “மச்சானை அவ்வளவு தெரியுதா உனக்கு.” புன்னகையோடு கேட்டான் நவநீதன்.

“பொய் கேஸ் எதுவும் போட்டீங்களா?” அவள் கோபமாகக் கேட்க, “நான் அந்தளவு கெட்டவனும் இல்ல. அவனுங்க அந்தளவு நல்லவனுங்களும் இல்ல. அண்ணனும், தம்பியுமா சேர்ந்து பல தில்லாலங்கடி வேலை பார்த்து இருக்காங்க. அதில் அவங்க சுலபமா சிக்கக்கூடிய மாதிரி ஏதாவது இருக்கான்னு செக் பண்ணேன். வசமா இந்த கேஸ் மாட்டுச்சு.

பிள்ளைங்க யாரும் இல்லாத ஒரு பெரியவர் இவங்க கம்பெனியில் வேலை பார்த்து இருக்கார். அவர் பெயரில் ஊரோட மெயினான இடத்தில் ஒரு இடம் இருந்திருக்கு. அதைப் பத்தி அவர் இவங்ககிட்ட சொல்லி இருக்கார். ஒருநாள் கம்பெனியில் இருக்கும் போதே துரதிஷ்டவசமா அவர் மாரடைப்பில் இறந்து போக, இந்த ப்ராடு ப்ரதர்ஸ் அந்தப் பெரியவர் அவர் உயிரோட இருக்கும் போதே அந்த இடத்தை தங்களுக்கு பத்திரம் பண்ணிக்கொடுத்துட்டதா அவரோட வளர்ப்பு பையனை ஏமாத்தி இருக்காங்க. அதுக்கான ஆதாரம் எனக்கு கிடைச்சது. அதை வைச்சு அந்த வளர்ப்பு பையனை கொஞ்சம் ஏத்திவிட்டேன். அவர் கல்யாணம் பண்ணி இருக்கிற பொண்ணோட அண்ணன் போலீஸ். சோ விஷயம் ரொம்ப சுலபமா முடிஞ்சிடுச்சு.” என சிரித்தான் நவநீதன்.

“அந்த ஆதாரம் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?” துவாரகா விடாமல் கேட்க, “திருடினேன்.” என்ற நவநீதன் அந்த நாளை நினைத்துப் பார்த்தான்.

மாதங்கி மூலம் துவாரகாவிற்கு நடந்த கொடுமைகள் தெரிய வந்த நேரம் இரத்தம் மொத்தமும் கொதித்தாலும் உடனடியாக சண்டையில் இறங்கி பிரச்சனையை பெரிதாக்குவதை விடுத்து, புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெளிவர முடியாத வலையில் மாயவனை சிக்கவைத்து அவனிடம் இருந்து துவாரகாவை முழுமையாகப் பிரிக்கவேண்டும் என்று தான் தோன்றியது நவநீதனுக்கு.

மாயவனுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக அவர்கள் அனைவரும் சுரேகாவின் வீட்டில் தங்கி இருந்த நேரத்தில் திருட்டுத்தனமாக அவர்கள் வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.

என்ன செய்ய வேண்டும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. கணினித்துறையில் அவனுக்கு இருந்த அலாதி அறிவும் ஆர்வமும் இதுவரை அவனது வாழ்க்கையில் பெரிய அளவில் பயன்படவில்லை தான். ஆனால் இப்போது அது முழுமையாகக் கைகொடுத்தது.

வீட்டின் வைஃபை ரௌட்டரை அணுகியவன் சில நிமிடங்களில் மொத்தமாக அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தான். இனி மாயவன் வீடு திரும்பி இணையத்தோடு இணைந்து என்னென்ன செய்கிறான் என்பதை உளவு பார்க்கலாம் என்கிற நிம்மதியோடு வீடு திரும்பியவன் அடுத்த நாள் துவாரகாவை மாதங்கியின் இறப்பிற்காக தன் இல்லம் அழைத்து வந்திருந்தான். துவாரகா தன் வீட்டில் தன் பாதுகாப்பில் இருக்கிறாள் என்கிற தைரியத்தில் தன் திட்டத்தின் அடுத்த அடியை எடுத்து வைத்தான்.

மாயவன் அடிக்கடி நுழையும் ஆபாச தளத்தைப் போன்ற தோற்றம் கொண்ட மலிஷியஸ் லிங்க் ஒன்றை ரகசியமாகத் தயார் செய்து மாயவனின் மொபைலுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்த லிங்க்கை மாயவன் எப்போடு தொடுவான் என்று இரைக்காக காத்திருக்கும் வேங்கையைப் போல் காத்திருந்தான்.

நெடுநேரம் அவனைக் காக்க விடாமல் வெகுசீக்கிரத்திலேயே வலையில் சிக்கிய மீனாய் வந்து விழுந்திருந்தான் மாயவன். அவன் அந்த லிங்க்கை தொட்ட நொடியில் இருந்து அவன் மொபைல் முழுக்க முழுக்க நவநீதன் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது.

அது அவன் பயன்படுத்தும் தனிப்பட்ட மொபைல். வீட்டு வாசலைத் தாண்டி அதைக் கொண்டு போக மாட்டான். அதனால் யார் பார்க்கப் போகிறார்கள் என்கிற நினைப்பில் தான், தன் அண்ணன், அண்ணி ஆகியோர் செய்யும் லீலைகள் அனைத்தையும் அதில் வைத்திருந்தான். துவாரகாவின் பல வீடியோக்களும் அதில் இருந்தது. அதைப் பார்க்கும் போது இரத்தம் கொதித்தது நவநீதனுக்கு. இருந்தாலும் இதைக் காட்டி தான் அவனைப் பயமுறுத்தி துவாரகாவை அவனிடம் இருந்து பிரிக்கவேண்டும் என நினைத்தான். இவன் அவர்கள் மானத்தை வைத்து மிரட்டினால் அவர்களோ துவாரகாவின் மானத்தை வைத்து மிரட்டினார்கள். திட்டம் சிறிது சொதப்பினாலும் துவாரகா முழுமையாக விடுதலை ஆனதில் வெற்றி நவநீதனுக்கு என்றே சொல்ல வேண்டும்.

நடந்ததை சொல்லி முடித்தவன், “அவன் போனில் இருந்த சில பைல்களையும் எதுக்கும் இருக்கட்டும் னு ஒரு காபி எடுத்து வைச்சிருந்தேன். அது தான் சரியான நேரம் கை கொடுத்திருக்கு. சிவில் கேஸ், அவனுங்க அத்தனை சீக்கிரம் வெளியே வர முடியாது. கோர்ட் கேஸ் னு அலையட்டும். அதுக்குள்ள இந்தப் பக்கம் உனக்கு விவாகரத்து வாங்கிடலாம்.” சந்தோஷமாக சொல்லி முடித்தான்.

“விவாகரத்து கிடைச்சாலும் உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்ல.” வெடுக்கென சொன்னாள் துவாரகா.

“என்ன விளையாடுறியா? என்னோட பேர் உன் பேரோட என்னைக்கோ சேர்ந்தாச்சு. நீ என்னை ஏத்துக்கிட்டு வாழ்க்கை கொடுக்கலன்னா வேற யாரு கொடுப்பா. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கருணை காட்டு. என்னோட வாழ்வது உனக்கு அத்தனை ஒன்னும் பெரிய கஷ்டமா இருக்காது. நான் ரொம்ப சமத்து பையன் என்அம்மாகிட்ட வேண்ணா கேட்டுப்பார்.” என்க, சத்தமாய் சிரித்திருந்தாள் துவாரகா. அவள் சிரிப்பு சத்தம் அந்த ஓட்டு வீடு முழுக்க எதிரொலித்தது.

“காலத்துக்கும் நீ இப்படியே சிரிச்சுக்கிட்டு இரு துவாரகா. எனக்கு அதுவே போதும்.” மனதோடு நினைத்துக்கொண்டான் நவநீதன்.
 
Top Bottom