பல்லவி – 21

அத்தியாயம் 21

சைக்கிளில் பின்னுக்கு அமர்ந்திருந்த விதுரன், பல்லவியைப் பிடிக்காமல் தன் இரு கைகளாலும் சீட்டை இறுக்கி பற்றியிருந்தான். அதைக் கவனித்தாலும் பிரதான வீதிக்கு ஏற்றும் வரையில் பல்லவி ஒன்றும் கதைக்கவில்லை.

அதன் பிறகு மெல்லப் பேச்சுக் கொடுத்தாள்.

“அம்மா தையல் வகுப்புக்குப் போறன். தம்பிக்குத் தெரியுமோ?”

அவனிடமிருந்து சத்தமில்லை. ஆக, ஆளுக்கு இன்னும் கோபம் இருக்கிறது.

“என்னோட கதைக்க மாட்டிங்களா?”

“இல்ல!” அதற்கு மட்டும் பதில் வந்தது.

“கோவமா?”

“ஓம்!”

சிறு சிரிப்புடன் சைக்கிளை ஒரு மரத்தின் கீழே நிறுத்தினாள். திரும்பி அவனைப் பார்த்து, “கதைக்கவே மாட்டீங்களா?” என்று திரும்பவும் கேட்டாள்.

“இல்ல. கதைக்க மாட்டன்! நான் கோவம் உங்களோட.” என்றான் அவன் பட்டென்று.

அவள் முகம் மெலிதாக வாடிப்போயிற்று. காட்டிக்கொள்ளாமல், “அண்டைக்கு அடிச்சதுக்கா?” என்றாள்.

ஆம் என்று தலையை அசைத்தான்.

அவன் மற்றப் பிள்ளைகள் போன்று இலகுவாய் எதையும் மறக்கிறவன் அல்ல என்று விளங்கிற்று. அதில், “உண்மையா சொறியப்பு. கோபத்தில அடிச்சாலும் எனக்கும் சரியான கவலையா இருந்தது. ஒவ்வொரு நாளும் நீங்க நித்திரையான பிறகு உங்கட கால வந்து தடவி விடுறனான். கிறீம் பூசி விடுறனான். ஆனா, இனி அம்மா அடிக்கவே மாட்டன், சரியா? இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சு என்னோட கதைக்க மாட்டீங்களா?” என்றாள் கெஞ்சலாக.

இப்போது அவன் மறுக்கவில்லை. அதே நேரம் சம்மதிக்கவும் இல்லை. இமை கொட்டாமல் அவளையே பார்த்தான். “இன்னும் கொஞ்சக் கோபம் இருக்கு என்ன?” என்று விழிகளைச் சுருக்கி மென் சிரிப்புடன் வினவினாள்.

அவன் ஆம் என்று தலையை அசைத்தான். அந்தச் செய்கை அவளை ஈர்த்தது.

“என்ர செல்லம் அவன்!” அவனை இறுக்கி அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். முதல் முத்தம்! பிஞ்சின் நெஞ்சைத் தொட்டதோ என்னவோ. பெரியவளின் நெஞ்சினில் ஏதோ சுரந்தது. அது அவளின் விழிகளில் மெல்லிய நீர்ப் படலத்தைப் படரவிட்டது. அவன் முகம் பார்த்துக் கனிவுடன் சிரித்தாள்.

அவனோ அவள் முத்தமிட்ட கன்னத்தைத் துடைத்துவிட்டான்.

‘டேய் ரோசக்காரா!’ சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தாலும் காட்டிக்கொள்ளாமல், “அம்மாக்கும் ஒண்டு தருவீங்களா?” என்று தன் கன்னம் காட்டிக் கேட்டாள்.

முட்டைக் கண்ணை விரித்துப் பிடித்தபடி மாட்டேன் என்று தலையை அசைத்தான் அவன். அழுவதைப் போல் உதட்டைப் பிதுக்கிவிட்டு, “அப்ப, கோவம் போனபிறகு தரோணும், சரியா?” என்றாள்.

அவனும் சரி என்று தலையை அசைத்தான்.

அவனை நேசரியில் விட்டுவிட்டு வரும்போது, அவளின் வகுப்புக்காக என்று பாலமுரளி செலவழித்த பணத்தைத் தன் சேமிப்பில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தாள். அதை அவன் பார்வையில் படும்விதமாக, தினக் கணக்குவழக்கு எழுதும் கொப்பிக்குள்(நோட்டு) வைத்துவிட்டாள்.

அன்று இரவு தோட்டத்திலிருந்து வந்து, கணக்கு எழுதக் கொப்பியை எடுத்த பாலமுரளிக்கு அதைப் பார்த்து மெல்லிய சிரிப்பு அரும்பிற்று. கூடவே, சின்ன கோபமும். எதையும் காட்டிக்கொள்ளாமல் தன் வேலைகளை முடித்துக்கொண்டு வெளியில் வந்தான்.

அவன் வீட்டுக்கு வந்ததிலிருந்து அவனிலேயே கவனமாக இருந்த பல்லவி, அவன் விறாந்தைக்குப் போனதும், மெதுவாக ஓடிப் போய்ப் பணத்தை எடுத்துவிட்டானா என்று பார்த்தாள். அது அங்கேயே இருந்தது. கவனிக்கவில்லையோ என்று எண்ணியபடி திரும்ப, அவளின் பின்னால் நின்றிருந்தான் அவன்.

திகைத்து விழித்தாள் பல்லவி.

அவன் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தன.

“கிளாஸுக்கு கட்டின காசு அதுல இருக்கு, எடுங்கோ.” என்றாள் அவன் முகம் பாராமல்.

“ஏன், அத நான் கட்டினா என்ன?” கதவு நிலையில் சாய்ந்து நின்று, அவளை அறைக்குள்ளேயே பிடித்துவைத்தபடி வினவினான் அவன்.

சோறு போட்டு, உடுபுடவைக்குக் குறையில்லாமல் வைத்திருப்பேன் என்றவனின் பணம் தேவையில்லை என்று சொல்லும் தைரியம் இல்லாமல் பேசாமல் நின்றாள் பல்லவி.

“சத்தமே இல்லாம இப்ப நீ என்ன சொல்ல வாறாய்? நீ வேற நான் வேற எண்டா?” என்றான் நிதானமாக.

அப்படி அவன்தானே சொன்னான். பிறகு எதற்கு அவளையே கேட்கிறானாம்?

“இதுக்கு என்ன முடிவு? அதையும் யோசிச்சு வச்சிருக்கிறியா?”

“எதையும் பொறுத்துப் போகலாம். ஆனா, சுயமரியாதைய இழந்து இருக்கேலாது. அதுதான், இனி நானே உழைச்சு என்ர காசில் சாப்பிடப்போறன்.” குரல் மெலிந்து ஒலித்தாலும் சொன்னாள் பல்லவி.

“ஓ!” என்று இழுத்துவிட்டு, “சாப்பாட்டுக்கு ஓகே. சரி! தங்குமிடத்துக்கு? உடுப்புக்கு?” என்றான் கேள்வியாக. “அதுக்கு எண்டு ஒரு தொகையை மாதம் மாதம் தரப்போறியோ?” இடக்காக வினவினான் அவன்.

உதட்டைக் கடித்தாள் பல்லவி.

“சொல்லு பல்லவி! என்ன செய்யப் போறாய்?” என்றான் விடாமல். “அண்டைக்கு என்ன நடந்திருந்தாலும் தம்பிய நீ அடிச்சது பிழை. அந்தக் கோபத்தில நான் கதைச்சதும் பிழைதான். அதை அதோட விட்டுட்டுத் தையல் பழகிற வேலையப் பார். இந்தத் தையலுக்கு உன்ன விடுறதுக்குக் காரணம், நீ எனக்குக் காசு தாறதுக்கு இல்ல. உன்னட்ட ஒரு திறமை இருக்கு எண்டேக்க அத முடக்க எனக்கு விருப்பம் இல்ல. அதவிட, நீ வேலைக்குப் போனவள். இப்ப அது கஷ்டம். அதால வீட்டில இருந்தே செய்ற மாதிரி ஒரு தொழில் இருந்தா அது உனக்குச் சந்தோசமா இருக்கும் எண்டுறதும்தான். விளங்கிச்சா?” என்றான் அதட்டலாக.

“நான் என்ன பிழையா கதைச்சிருந்தாலும் இப்ப வரைக்கும் நீ என்ர மனுசி, தம்பி என்ர மகன், இது என்ர குடும்பம் எண்டுற எண்ணத்திலதான் நான் இருக்கிறன். அப்பிடி இல்ல எண்டா தாராளமா சொல்லு.” என்றான் அவன்.

இப்போது இப்படிச் சொல்கிறவன் அன்றைக்கு ஏன் அப்படிச் சொன்னானாம்? விழிகளில் நீர் தளும்பியது. “என்னை இப்பிடியெல்லாம் உணர வச்சது நீங்க. இப்ப வந்து என்னையே கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல?” என்றவளுக்கு மேலே சொல்ல முடியாமல் விம்மல் வெடித்தது.

அவள் சொல்வது மெய்தானே. அவனுக்கு மனம் உருகிப்போயிற்று. அவளை இழுத்துத் தன் மார்பில் சேர்த்து, “அதுதான் தம்பிய அடிச்ச கோபத்தில கதைச்சிட்டன் எண்டு சொல்லுறன்தானே. பிறகு என்ன?” என்றான் அவளின் கன்னம் வருடி.

“என்ன இருந்தாலும் நீங்க கதைச்சது கதைச்சதுதான். வெளில போ எண்டு சொன்னனீங்கதானே? உங்கட காசு எனக்கு வேண்டாம்! நீங்க அத எடுங்கோ.” என்றாள் அவனைத் தள்ளி விட்டபடி. சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு இப்போது வந்து சமாதானம் செய்தால் ஆயிற்றா என்று மனம் புழுங்கியது அவளுக்கு.

“சரி விடு. எனக்கும் ஒரு அலுவலுக்குக் காசு தேவைப்படுதுதான். அத நான் எடுக்கிறன். நீ அழாத!” என்றான் சிரித்துக்கொண்டு.

அவளுக்கு அதற்கும் கோபம் வந்தது. “எங்க இருந்துதான் வந்தீங்களோ தெரியாது. சரியான கஞ்சன். ஆர் காசு தந்தாலும் வாங்கி வச்சிடுவார். ஆனா ஒண்டு, இனி நான் உழைச்சு என்ர காசுலதான் சாப்பிடுவன். இங்க எனக்கு ஒருத்தரும் சோறு போடத் தேவை இல்ல.” என்று அறிவித்தாள்.

“சரியடி ரோசக்காரி. நீ உழைச்சு எனக்கும் பிள்ளைக்கும் சேர்த்தே சோத்தப் போடு. எங்களுக்கெல்லாம் உன்ன மாதிரி ரோசமும் இல்ல, மானமும் இல்ல. நல்லா சாப்பிடுவம்.” என்று சிரித்தவனின் பார்வை, அவளின் சிவந்திருந்த முகத்தைக் கண்டு மாற, கைகள் அவளை வசியம் செய்ய ஆரம்பித்தன.

பல்லவியின் முகத்தில் சூடு ஏறிற்று. “சுவாமி அறைக்க நிண்டுகொண்டு என்ன செய்றீங்க? விடுங்க! அங்கால தம்பி நிக்கிறான்.” என்று அவனைத் தள்ளி விட்டுவிட்டுப் போனாள் அவள்.

நாட்கள் ஒருவித ஜதியில் இயங்க ஆரம்பித்தது. தினமும் நேசரிக்கு விதுரன் அவளுடனேயே வந்து போனான். அப்படிப் போகிறபோதும் வருகிறபோதும் அவனோடு நிறையக் கதைத்தாள். ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்தாள். ஏன் பொய் சொல்லக் கூடாது, ஏன் அடிக்கக் கூடாது, ஏன் படிக்க வேண்டும் என்று காரணத்தை விளக்கினாள்.

ஒரு சின்ன காரியம் என்றாலும் அவன் சரியாகச் செய்துவிட்டால் அதற்குப் பாராட்டாக அவனுக்குப் பிடித்த ஏதோ ஒன்றைப் பரிசாகக் கொடுத்தாள். அவளை அறிந்தவனாகப் பாலமுரளியும் சற்றே விலகி நிற்க, விதுரனும் பல்லவியோடு மெல்ல மெல்ல இணங்க ஆரம்பித்திருந்தான்.

அவனறியாமல் அவனை அப்படி மாற்றிக்கொண்டிருந்தாள் பல்லவி. இத்தனைக்கு மத்தியிலும் அவள் ஆசையாகக் கேட்ட முத்தத்தை அவன் தரவில்லை. அவளும் மறக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாள்.

இன்னுமே அவன் விரும்பாத ஒன்று நடந்தால் அவன் குணம் வெளியே வந்துகொண்டுதான் இருந்தது. எதுவும் உடனேயே நடக்கவேண்டும் என்றால் நடக்காது என்பதை உணர்ந்திருந்த பல்லவி, இன்னுமின்னும் பிரத்தியேகமாகக் கவனமெடுத்து அவனைக் கவனித்துக்கொண்டாள்.

சும்மா திரைப்படங்களையும் சீரியல்களையும் பார்ப்பதை மாற்றி இருவரும் சேர்ந்து கார்ட்டூன் பார்த்தனர். அதன்போது நிறையக் கதைகளைச் சொன்னாள். அவனோடு சேர்ந்து ரசித்தாள், விளையாடினாள். யூ டியூபில் அவன் வயதுக்கேற்ற ஓடியோ கதைகளைக் கேட்கப் பழக்கினாள். அவற்றின் பொருளைச் சொல்லிக்கொடுத்தாள். அவள் தைக்கும் துணிகளில் தேவையற்றவற்றை அவனுக்கு வெட்டி விளையாடக் கொடுத்தாள்.

உண்மையிலேயே இதெல்லாம் இலகுவாக இல்லை. அனுபவமற்ற அன்னை அவள். அதனாலோ என்னவோ பெரும் சிரமங்களைச் சந்தித்தாள். இருந்தாலும் சோர்ந்துவிடவில்லை. ஒரு சின்ன விடயத்திலேனும் அவனிடம் மாற்றம் தெரிந்தால் அவனோடு சேர்ந்து அவளும் மகிழ்ந்தாள்.

இதெல்லாம் பாலமுரளியின் பார்வையில் படாமல் இல்லை. தன் மகனுக்காக அவள் எடுக்கும் முயற்சிகளை உள்ளம் நெகிழப் பார்த்திருந்தான்.

அன்று ரேகாவுக்கு அழைத்து, “ஏதாவது தைக்க இருந்தா உன்ர அண்ணிட்ட கொண்டுவந்து குடு. உனக்குச் தெரிஞ்ச ஆக்களிட்டயும் சொல்லு. நல்லா தைக்கிறாளாம் எண்டு சுதாவும் சொன்னாள்.” என்றான்.

“அது எனக்கே தெரியும் அண்ணா. ரெண்டுமூண்டு பிளவுஸ் துணி இருக்கு. இதுக்கெண்டு மெனக்கெட்டு அங்க வர நேரமில்லாம வச்சுக்கொண்டு இருக்கிறன்.” என்றாள் அவள்.

“நீயே இப்பிடிச் சொன்னா எப்பிடி? நான் வந்து வாங்கிக்கொண்டு வாறன். எப்பிடி இருக்கு எண்டு பாத்திட்டு நல்லா இருந்தா நாலுபேரிட்ட சொல்லு. அப்பதானே அவளுக்கு இன்னும் ஓடர் கிடைக்கும்.” என்றவன், சொன்னது போலவே சென்று வாங்கிக்கொண்டு வந்து பல்லவியிடம் கொடுத்தான்.

“இப்பிடி நீங்க போய் வாங்கிக்கொண்டு வந்து திருப்பிக் கொண்டுபோய்க் குடுக்கிறது எல்லாம் கட்டுபடியாகாது. நட்டத்தில தைக்கிற மாதிரி ஆகிடும்.” என்றாள் அவள்.

“ஆரம்பத்தில காச லாபமா பாக்காத. கஸ்ட்மர், அனுபவம், பயிற்சி இந்த மூண்டும்தான் எந்தத் தொழிலுக்கும் லாபம். போகப்போகத்தான் அது காசா மாறும்.” என்றான் அவன்.

உண்மைதானே. உள்ளூர வியந்தபடி, “போய்வாற பெட்ரோல் செலவு?” என்று அவள் இழுக்க, “போடி! போய்த் தைக்கிற வேலைய மட்டும் பார். வந்திட்டா பெட்ரோல் காசு, டீசல் காசு எண்டுகொண்டு!” என்று கடுகடுத்துவிட்டுப் போனான் அவன்.

error: Alert: Content selection is disabled!!