மூவரும் அவளைக் கண்டு விட்டு வெளியில் வர, இவளும் அவர்களை அணுகிப் பாதுகாப்பாக ரோட்டைக் கடந்து அழைத்து வந்தாள்.
“அப்பா இண்டைக்கு கொழும்பால வருவன் எண்டு சொன்னவர் எல்லோ, வந்துட்டாரரோ?” ஆட்டோவில் ஏறக் கூட இல்லாமல் கேட்டவன் தலையில் வலிக்காமல் குட்டியவள்,
“ஏறும் முதல் உள்ளுக்க. மிச்சம் வீட்ட போய்க் கதைக்கலாம்.” என்று அவனை ஏற்றி விட்டுத் தொடர்ந்து மயூவையும் ஏற்றி விட்டவள், தான் அமர்ந்து மகியைத் தன் மடி மேலே அமர்த்திக் கொண்டாள்.
ஏறிக் கொண்டபின் ஆட்டோ வெளிக்கிடவும் மீண்டும் நிலன் தன் கேள்வியை முன் வைத்தான்.
சாதனா அவனை முறைத்தாலும் பதில் சொன்னாள்.
“விடிய அப்பம்மாக்கு எடுத்து சொன்னவராம், நாளைக்குத்தான் வரேலுமாம் எண்டு!”
“ஓ…” என்று சோகமானவன், “அவேக்கு வேற ஒரு டொக்டரையும் தெரியாதோ? சும்மா சும்மா எல்லாத்துக்கும் அப்பாவையே கூப்பிட்டுக் கொண்டிருக்கினம்?” என்று கோபத்தில் புறுபுறுத்தான்.
“இதை உங்கட அப்பா வந்தாப் போல கேளும். இப்ப கவனமா பிடிச்சுக் கொண்டு இரும்.” என்ற சாதனா, அதன் பின், மூவரிடமும் பொதுவாகப் பேச்சுக் கொடுத்துக்கொண்டு வந்தாள்.
வீடு வந்து இறங்கியதும் போர்ட்டிக்கோவில் ஆதித்யனின் காரைக் கண்ட நித்திலன் துள்ளிக் குதித்தான்.
“அப்பா வந்திட்டார், நீங்க சும்மா சொல்லியிருக்கிறீங்கள் என்ன?” தாயிடம் கேட்டுக் கொண்டே தன் புத்தகப்பையை அவளிடம் கொடுத்துவிட்டு யூனிஃபோர்ம் மாற்ற வேண்டும் என்றதையே மறந்தவனாக பக்கக் கேட்டைத் திறந்து படிக்கட்டுகளில் ஏற, “கவனம் நிலன், பொறுமையா ஏறும்.” என்று பின்னிருந்து கத்தினாள் சாதனா.
மனதின் ஓரமாக நாளை வருவேன் என்றவன் திடீரென வந்து நிற்கக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஓடாமலும் இல்லை.
அதற்குள் “அம்மா! நாங்களும் போறம் அப்பாட்ட.” என்று இரட்டையர்களும் கேட்க, அவர்களின் புத்தகப்பையை வாங்கி அறையில் வைத்தவள், அவர்களை அழைத்துக் கொண்டு விட என்று தானும் படியேறினாள்.
அங்கோ ஆதித்யன் நிலனை விரட்டியடித்துக் கொண்டிருந்தான்.
“நிலன்! அங்கயே நில்லும், அப்பாக்குக் கிட்ட வாறேல்லை.” என்ற ஆதித்யன் கட்டளையும்,
“ஏன், நீங்க இன்னும் குளிக்கேலயோ?” என்ற நிலனின் கேள்வியையும் கேட்டுக் கொண்டே மேல் வீட்டின் வாசலுக்கு வெளியே நிலனின் பின்னால் வந்து நின்றனர் சாதனா மற்றும் இரட்டையர்.
“என்ன இண்டைக்கு எல்லாருக்கும் என்னைப் பார்க்கிறதில இவ்வளவு ஆர்வமும் அவசரமும், நேரா இஞ்ச வந்திருக்கிறீங்கள்?” என்று சாதனாவை மனதில் வைத்து அவன் கேட்க, அவளுக்கு அது உறைக்கவில்லை. அவன் குரலில் இருந்த அடைப்புதான் உறுத்தியது.
இவர்களுக்கு நேரெதிரே வீட்டினுள் ஷோபாவில் அமர்ந்திருந்தவனின் முகத்தை உற்றுப் பார்த்தாள். கண் முகமெல்லாம் காய்ந்து போய் இருந்தவனைப் பார்த்துத் துணுக்குற்றாள்.
“உங்களுக்கு என்ன, உடம்பு சுகமில்லையோ?” படபடத்து ஒலித்த அவள் குரலை உள்வாங்கிக் கொண்டே, ஆம் என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தான்.
என்ன சுகமில்லை என்று அவள் கேட்க வாயெடுக்க நித்திலன் முந்திக் கொண்டான்.
“என்னப்பா உங்களுக்கு? மேல் சுடுகுதோ?”
“ஓம் நிலன். பெரிசா இல்லை. மெல்லிசாத்தான் சுடுது.”
“அப்ப ஏன் எங்களை வர வேண்டாம் எண்டுறீங்கள்? நான் வந்து காய்ச்சல் பார்க்கப் போறேன்.” என்று கொண்டே உள்ளே கால் வைத்தவனை நோக்கி,
“நிலன்!” என்று ஒரு தடைக் குரல்தான் கொடுத்தான்.
அவன் கால் தன்னால் பின்னெட்டு எடுத்து வைத்தது.
ஆனாலும் தாங்காது “அப்பா!” என்று சோகமாக அவன் முகத்தை ஏறிட்டவனைக் கண்டு ஆதித்யனுக்குப் பாவமாக இருந்தது.
செழித்த மாமரத்தின் மேல் ஒட்டுண்ணியாகப் படரும் குருவிச்சை போல் அவன் இருந்தால் அவனை ஒட்டியே திரிபவனைத் தள்ளி இரு என்று சொல்ல அவனுக்கு ஆசையா என்ன?
தன்னிடம் இருந்து அவனுக்குத் தொற்று வந்திட்டால் என்று கவனமாக இருக்க நினைக்கிறான். விடமாட்டான் போலவே! பாவமாய் சுருங்கும் அந்த முகத்தைப் பார்த்து உருகும் மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
இதற்கிடையில் மான்குட்டிகள் வேறு “அப்பாக்கு ஏன் காய்ச்சல் வந்த?” என்று மாறி மாறிக் கேள்வியாய் கேட்டனர்.
“அப்பாக்கு ஏன் காய்ச்சல் வந்ததெண்டா, அப்பாவும் எல்லாரையும் மாதிரி மனுஷன்தான?” என்று விளையாட்டுக் குரலில் மகளிடம் சொன்னவன் பார்வை பொருளோடு சாதனா மேல் படிந்து மீண்டது. அவளுக்கு விளங்கத்தான் இல்லை.
பெருமூச்சு விட்டவன், “சாதனா! மூண்டு பேரையும் கீழ கூட்டிக் கொண்டு போங்கோ. நான் சொல்லும் மட்டும் என்னட்ட விட வேண்டாம்.” என்ற, அவன் சொன்னதற்காக மனமே இல்லாமல் மூவரையும் அழைத்துச் சென்றாள்.
மயூவும் மகியும் கூட அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு தந்தைக்கு “டேக் கேர்!” சொல்லி நடக்க, நிலன் தேங்கி நின்றான்.
“எப்ப அப்பா சுகமாகும் உங்களுக்கு?” என்ற,
“காய்ச்சலிட்ட கோல் எடுத்துக் கேட்டு சொல்லவோ?” என்றான் இவன் கேலியாய்.
தந்தையானவனை முறைத்தவன், “ஏன் நீங்கள் டொக்டர்தானே உங்களுக்குத் தெரியாதோ எப்ப சுகமாகும் எண்டு?” என்று கேட்க,
“அதெல்லாம் கண்டுபிடிக்கிறளவுக்கு நான் பெரிய டொக்டர் இல்லையே, நிலன்!” என்றான் பாவம் போல்.
“அப்ப வாங்கோவன், பெரிய டொக்டரிட்ட போய்க் காட்டிக் கொண்டு வருவம்.”
அக்கறையாய் கசிந்துருகியவனை கண்ணில் பொங்கிய கனிவோடு பார்த்த ஆதித்யன்,
“தேவையில்லை நிலன். அப்பா சொல்லுறேன்தானே, ஒண்டும் இல்லை, வேளைக்கு சுகமாயிடும் எண்டு! பிறகென்ன பிள்ளைக்குப் பயம்? போய் உடுப்பை மாத்திட்டு சாப்பிடுங்கோ, போங்கோ… மயூவும் மகியும் உங்களைப் பார்த்துக் கொண்டு நிப்பினம்.” என்றவும்தான் அடிகளை நகர்த்தினான். அப்போதும் சுணங்கிக் கொண்டே…
பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து சாதனா மட்டும் அவனுக்கான உணவை எடுத்துக் கொண்டு தனியே வந்தாள்.
அவன் விரும்பமாட்டான் என்பதால் வெளியே நின்று “டொக்டர்!” என்று குரல் கொடுக்க இரண்டு நிமிடம் கழித்தே அறையிலிருந்து எட்டிப் பார்த்தவன்,
“சொல்லுங்கோ, என்ன பிரச்சனை? கையிலயோ? காலிலயோ?” என்று கேட்டுக் கொண்டே வந்து ஹோலின் இருக்கையில் அமர, இவள் ஒன்றும் விளங்காமல் முழித்தாள்.
“என்ன கேட்கிறீங்கள் எண்டு விளங்கேல.”
“இல்லை, டொக்டர் எண்டு கொண்டு வந்தீங்கள். அதான் மருந்தெடுக்க வந்தனீங்களாக்கும் எண்டு நினைச்சன்.” என்று இன்னும் அவள் அழைப்பு முறை மாறாததை நக்கல் பேசினான்.
பார்வையைத் தாழ்த்திக் கொண்டவள், “அது பழக்கதோசத்தில…” என்று சொல்லி முடிக்க முன்,
“உங்கட பழக்கத்தோஷத்தால என்ர பழக்கதோஷங்கள் எல்லாம் மாறிப் போகுது.” என்று சொன்னவனை சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“உடன பெருசா ஏதோ பிழை விட்டுட்டம் எண்டு பதறாதேங்கோ. நீங்க உங்கட பொறுப்பை சரியாத்தான் செய்யுறீங்கள். ஆனா உங்களோட ஒண்டு கதைக்கோணும். ஆனா இப்ப என்னால ஏலாது. சாப்பாட்டை வச்சிட்டுப் போங்கோ.” என்றவும் ஏதோ போக்கில் தலையசைத்தவள், உணவை மேசையில் வைத்துவிட்டுப் போகப் போனவளை “சாதனா!” என்ற அவன் அழைப்புத் தடுத்தது.
என்ன என்று திரும்பிப் பார்த்தாள்.
“நீங்களும் தேவையில்லாம மேல வராதேங்கோ, பிள்ளையளைப் பார்க்கிறதெல்லோ?” என்றான் அக்கறையாக.
“ஏன் உங்களுக்கு என்ன? வைரஸ் காய்ச்சல் ஏதேனுமோ?”
“இல்ல சாதனா. அங்க கொழும்புல கொஞ்சநாளா விட்டு விட்டு மழை. பிறகு நேற்றும் முந்தநாளும் விடாம மழை. நேற்று சாப்பிட வெளியில போகேக்க நான் நனைஞ்சும் போயிட்டேன். அதான் மேல் சூடு. தொண்டையும் அடைச்சிட்டு.”
“இதைத்தான் அம்மாட்டையும் சொல்லியிருக்கிறீங்கள். நான் நம்பேல. மழையில நனைஞ்ச காய்ச்சல் எண்டா அதுக்கு ஏன் ஒருத்தரையும் பக்கத்தில வரவேண்டாம் எண்டுறீங்கள்? வேற ஏதோ இருக்கு. சொல்லமாட்டீங்களாம்.” என்றவளைப் பார்வையில் மெய்ச்சினான்.
“பெருசா ஒண்டும் இல்லை, அங்க நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில கொஞ்சப் பேருக்கு டெங்கு எண்டு கென்ஃபோர்ம் ஆகியிருக்கு. அதான்…” அவன் சொல்லி முடிக்கவில்லை, அவள் பதறிக் கத்த ஆரம்பித்துவிட்டாள்.
“டெங்கோ? என்ன சொல்லுறீங்கள் நீங்கள்? தெரிஞ்சா பிறகேன் இஞ்ச வந்தனீங்கள்? ஹொஸ்பிட்டல்ல போய்க் காட்டி நிண்டிருக்கலாம்தானே? உங்களுக்கெல்லாம் விளையாட்டுத்தான் என்ன? இப்பவே வெளிக்கிடுங்கோ ஹொட்ஸ்பிட்டல் போவம். நான் அம்மாட்ட சொல்லுறேன்…” என்று அவன் பதில் பேச அவகாசமின்றிப் படபடத்தவளை அமைதியாகப் பார்த்திருந்தவன், அவள் மூச்சு விட எடுத்துக்கொண்ட இடைவெளியைப் பயன்படுத்தினான்.
“உங்களுக்கு எப்பவும் ஒரு விஷயத்தை முழுசாக் கேட்கிறதுக்கு முதல் அவசரம் என்ன? பக்கத்தில சில பேருக்கு கென்ஃபோர்ம் ஆகியிருக்கு… அதான் எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருப்பம் எண்டு வந்தனான் எண்டு சொல்லி முடிக்க முன்னம் நீங்கள் கதையே எழுதி முடிச்சிட்டீங்கள்.”
“எண்டாலும் ஹொஸ்பிட்டல்ல கொண்டு போய் காட்டுறது நல்லம்தானே?” என்று அப்போதும் வாதிட்டவளை லேசாய் முறைத்தான்.
“அடிக்கடி மறக்கிறீங்கள், நானும் டொக்டர்தான் எண்டு. நானா ஞாபகப்படுத்தினாலும் ‘உடன வந்துட்டார் டொக்டர் எண்டுகொண்டு’ எண்டு நக்கலடிக்கிறது. இப்பவும் மனசுக்குள்ள அப்பிடித்தானே நினைச்சிருப்பீங்கள்?” என்ற அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. உண்மையில் அவள் அப்படித்தான் நினைத்திருந்தாள்.
ஆனால் அதை மறைத்து, “அதைத்தான் நானும் சொல்லுறன், நீங்கள்தான் டொக்டர்… நாங்களில்லை! அப்பிடியெண்டேக்க அப்பிடியென்ன முன்னெச்சரிக்கையா நீங்கள் இருக்கிறீங்கள் எண்டு சொல்லவெல்லோ வேணும்? இல்லாட்டிப் பயப்பிடத்தானே செய்வினம்?” என்று நியாயமாகக் கேட்டவளை மதித்துப் பதில் சொன்னான்.
“வரேக்க டெஸ்ட்டுக்கு பிளட் குடுத்துட்டு வந்தனான். இப்ப நோர்மல்… நாளைக்கும் பார்க்கோணும். அதுமட்டும் (அதுவரைக்கும்) தண்ணி ஒரு மணித்தியாலத்துக்கு ஒருக்கா அளந்து குடிச்சா சரி. ஒரு பயமும் இல்லை. நான் பார்த்துக்கொள்ளுவன்.”
“சரி…” என்றவள் அதன் பின் என்ன கேட்பது, செய்வது என்று தெரியாது,
“சரி, நான் கீழ போறன். பிள்ளையள் தேடுவினம். நீங்க கவனமா இருங்கோ. ஏதேன் தேவையெண்டா கூப்பிடுங்கோ. ஆ… மறக்காம சாப்பிட்டுப் படுங்கோ.”
“ம்ம்… நான் என்னைப் பார்க்கிறேன். நீங்க அவையப் பாருங்கோ. நான் சொன்ன ஒண்டையும் அம்மாட்ட சொல்ல வேண்டாம். தேவையில்லாம பயப்பிடுவா. பிறகு நிலன் கவனம். எப்ப எப்ப எண்டு இஞ்சதான் வர நிப்பர்.” என்ற, “ஹ்ம்ம்…” என்று கேட்டுக் கொண்டு வெளியேறினாள்.

