• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 21

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 21


ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோதே சித்தார்த்தனின் நினைவலைகள் காலை நோக்கி பயணித்தன.


அப்போது‌‌‌ அவன் தனது துணிகளை இழுபெட்டி ஒன்றில் அடுக்கிவைத்துக் கொண்டிருந்தான்.


பானுமதி அவனை தயக்கமாக நெருங்கியவள், “நான் லீலாவதி‌ மேடம்கிட்ட போய் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திடுறேண்ணா. எப்படியும் போகும்போது சொல்லுவோம். ஆனா எனக்கு தனியா‌ ஒரு தடவை அவங்களை பார்த்து பேசனும் போலயிருக்குண்ணா. அவங்க நமக்கு எவ்வளவு பண்ணியிருக்காங்க?” என்றதும்,


“தாராளமா போய் பேசிட்டு வா பானு.” என்றான் சித்தார்த்தன்.


உடனே சிட்டாய் பறந்தாள் அவள்.


சித்தார்த்தன் லீலாவதிக்கு கோபமேதும் இருந்தால் அது தன் மேல் தான் இருக்கும் என்று உத்தேசித்தான்.


அச்சமயம் நந்தினியிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு. அது அவளது புதிய எண் என்று அறியாமல் அசுவாரசியமாய் ஏற்றான்‌.


“குட் மார்னிங் சித்து. எப்படியிருக்கீங்க? நல்லா இல்லைனு கேள்விபட்டேன். உண்மையா? நீங்க சீக்கிரம் சென்னைக்கு‌ வரப்போறீங்களாமே? எனக்கு கேட்டப்போ எவ்வளவு சந்தோசமா இருந்தது தெரியுமா? இனி நீங்க‌ சுவாசிச்ச காத்தை நானும் சுவாசிக்கலாம் அடிக்கடி” என்று‌ கனவில் மிதந்தவளை சித்தார்த்தனுக்கு கடித்து குதறும் வெறி உண்டானது.


“இன்னும் நான் எந்த‌ மாதிரி பேசினா உன்னோட அந்த ரோச நரம்புகள் வேலை செய்யும் நந்தினி? நான் என் வாழ்க்கையில எந்தப் பொண்ணையும் அடிச்சதில்ல. அந்த கட்டுப்பாட்டை நான்‌ உன் விசயத்துல மீறிறுவேனோன்னு எனக்கு பயமாயிருக்கு. நான் நல்லவனா இருக்கனும்னு ஆசைப்படுறேன். சீண்டிப் பார்க்காத” என்று காய்ந்தான்.


அவள் அடங்கவில்லை.


“ஏன் சித்து ஏன் இப்படி எரிஞ்சு விழறீங்க? உங்க ரெண்டாவது தங்கச்சி மதுமதி கல்யாணத்துக்கு நான் பணம் கொடுத்து உதவின சமயத்துல என்னை எப்படி தெய்வம் மாதிரி பூஜிச்சீங்க? என் முகத்தை பார்த்தாலே பன்னீர்ப்பூ மாதிரி பூத்து குலுங்குவீங்களே. இப்ப நான் அந்த ஆத்மீகாவால வேண்டாதவளாகிட்டேன் இல்ல? அவ தான் திட்டம் போட்டு நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சிட்டா. நம்ம மேல அவ கொள்ளிக்கண்ணு விழுந்து தான், நம்ம அழகான காதல் பொசுங்கி போச்சி. இப்ப அந்த ஆத்மீகா அங்க உங்களைத் தேடி வந்திருக்கதா கேள்விபட்டேன். அவ மாயாஜாலம் எதுக்கும் மயங்கிறாதீங்க சித்து. அவ கழுகு. தன் இரையை அடையாம விடமாட்டா.” என்று தன்போக்கில் பேசிக்கொண்டே சென்றதும்,


“இங்கப்பாரு நந்தினி! ‘நன்றி மறப்பது நன்றன்று’ங்கறதனால தான் -நான் உனக்கு மரியாதை கொடுத்து பேசிக்கிட்டிருக்கதே. அன்னைக்கு நீ கொடுத்தது உன் பணம் இல்ல. ஆத்மீகா கண்ணபிரான் மேடத்தோடது. நான் நன்றிகடன் படுறதுனா அவங்களுக்கு தான் படணும். முதல்ல உன் மேல எனக்கு இருந்தது காதலே இல்ல. அது ஒரு அனுதாபம்- நன்றியுணர்வு- அவ்வளவு தான். நல்லா யோசிச்சுப் பாரு! என் அம்மா இறந்த சமயம் தான் நீ அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்துபோன. இந்துவுக்கு ஆறுதல் சொன்ன. அப்படியே எனக்கும். நான் அப்ப இருந்த சூழ்நிலைல உன்னை ஒரு நட்பின் இலக்கணமா பார்த்தேன். அதனால தான் இப்பவரை இந்துகிட்ட உன் வண்டவாளம் எதையும் சொல்லாம இருக்கறதும். நான் இப்ப தத்தளிக்கற படகு இல்ல, நங்கூரம் போட்ட கப்பல். தெளிவா இருக்கேன். நீ நெனைக்கற மாதிரி நம்மளை யாரும் பிரிக்கல. உன் சுயரூபம் தெரிஞ்சு நானா தான் பிரிஞ்சு வந்தேன். இனி எந்த ஜென்மத்துலயும் உனக்கும் எனக்கும் ஒத்து வராது. மறுபடியும் மறுபடியும் என்னை தொந்தரவு செய்யாத. அப்பறம் என்ன சொன்ன? ஆத்மீகா மேடம் கழுகா? அப்ப நீ காலை சுத்தின பாம்புனு வச்சிக்கலாமா நந்தினி?” என்றதும், அவளின் தன்னகங்காரம் சீண்டப்பட்டது.


‘நான் பாம்பா? அந்த ஆத்மீகா மாதிரியே சொல்றானே. விடக்கூடாது. இவனும் அவளும் நல்லாவே இருக்கக்கூடாது’ என்று மனதுள் கருவியவள்,


“சித்தார்த்தன் நான் பாம்பா; இல்ல புதைகுழில விழ இருக்கற உங்களை காப்பாத்த வந்த ஆலமர விழுதான்னு பின்னாடி தெரியும். இப்ப நான் போன் பண்ணின விசயத்துக்கு வர்றேன். கொஞ்ச நேரம் முன்னாடி உங்க தங்கச்சி இந்துமதி எனக்கு கால் பண்ணியிருந்தா. அவ ஏதோ நீங்க உங்க வாழ்க்கையில கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவுலயே இல்லைன்னும், இன்னும் என்னை தான் நெனைச்சிக்கிட்டிருக்கீன்னும் ஒரே அழுகை, புலம்பல். அவளுக்கு நாம ரெண்டுபேரும் சேரணும்னு ஆசை. நீங்க வேலை பார்க்கற அரண்மனையை உங்களுக்கு சொந்தமாக்கிக்கற வாய்ப்பிருந்தும், ராணி அஞ்சலிதேவி தன்னோட ஒரே பேத்தியை உங்களுக்கு கல்யாணம் செஞ்சுதரேன்னு சொல்லியும், நீங்க முடியாவே முடியாதுனு மறுத்திட்டீங்களாமே? அதுக்கு காரணம் கூட நான் தான்னு உங்க சிஸ்டர்ஸ் எல்லாரும் உறுதியா நம்பறாங்க. இப்ப இது மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கினது நீங்க தானே சித்து? நீங்க ஏன் இன்னொரு பொண்ணை உங்க வாழ்க்கையில கொண்டு வர தயங்குறீங்க?” என்றதும், மௌனித்தான்‌ அவன்.


உண்மையில் அவனால் இனி ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்த முடியாது. அது அப்பெண்ணுக்கு அவன் செய்யும் துரோகமாக தோன்றியது. அதேசமயம் ஆத்மீகாவுடன் வாழ்தலும் இயலாத காரியம். ஏனெனில் அது அவனுக்கே அவன் செய்து கொள்ளும் துரோகமாக தோன்றியது.


அவனது மௌனத்தை நந்தினி தவறாக மொழிபெயர்த்தாள்.


“ஒருவேளை அந்த ஆத்மீகா உங்க மனசுல இருக்காளா சித்து? அப்படி மட்டும் இருந்தா இப்பவே அவளை வெளிய அடிச்சி துரத்திடுங்க. ஏன்னா அவ‌ உங்க மேல ஆசைப்பட்டோ, இல்ல காதல் வயப்பட்டோ‌ அங்க வரல. அவ வந்ததுக்கான காரணமே வேற. அவ‌ ஒரு மிகச்சிறந்த தொழிலதிபர் சித்து. அவளோட கால்கள் லாபத்தை நோக்கி தான் நகரும். அதான்‌ இப்ப உங்களை நோக்கி நகர்ந்திருக்கு” என்று பீடிகைகளாக போடவும், ஆத்திரமடைந்தான் சித்தார்த்தன்.


“நீ‌ புரியற மாதிரியே பேசக்கூடாதுனு கமலஹாசன்கிட்ட டியூசன் போயிட்டு வந்திருக்கியா நந்தினி?” என்று எரிந்து விழுந்தான்.


“வெயிட் வெயிட் சொல்றேன். அந்த ஆத்மீகா அங்க வந்ததுக்கு காரணம், நீங்க அந்த ராணி அஞ்சலிதேவியோட பேரங்கற தகவல்ல மட்டும் தான்.” என்றதும், தட்டாமாலை சுற்றியது அவனுக்கு.


“உண்மையாவா?” என்றான் டெசிபலை கூட்டி.


“ஆமா சித்து உங்க அம்மா சொல்லி தான் இந்த உண்மையே எனக்கு தெரியும். நானும் உங்க அப்பா அம்மாவுக்கு வேண்டாத சொத்து நமக்கும் வேண்டாம்னு இந்த உண்மையை உங்ககிட்ட இவ்வளவு நாள் சொல்லாம இருந்தேன். ஆனா என் வாய்‌ இருக்குதே சரியான டமாரம். ஏதோ பேச்சுவாக்குல அந்த ஆத்மீகாகிட்ட இதைப்பத்தி சொல்லப்போய், மகராசி பெட்டிக் கட்டிட்டு உங்களை தேடி அங்கேயே வந்துட்டா. அவளை எக்காரணம் கொண்டும் நம்பாதீங்க சித்து. நான் கெட்டவ தான் ஒத்துக்கறேன். ஆனா அந்த ஆத்மீகா என்னிலும் மோசமானவ. அவளோட சூழ்ச்சியில மட்டும் சிக்கிடாதீங்க சித்து. பிகாஸ் ஐ ஸ்டில் லவ் யூ” என்று வஞ்சகமாகப் பேசி அலைபேசியிலேயே முத்தங்களாக கொடுக்க, பொத்தென்று அலைபேசி கீழே விழுந்தது.


இப்போது அதை தொடுவது கூட அவனுக்கு அருவருப்பாக இருந்தது.


அவள் அவனை அழைத்துப் பார்த்து சலித்துப்போய், இணைப்பை துண்டித்ததும் தான் கையிலெடுத்தான்.


அவனுக்கு தான் மிகப்பெரும் முட்டாளாய் அடிக்கப் பட்டிருப்பதாய் தோன்றியது. ஆத்மீகா ஏன் வந்தாள், ஏன் வந்தாள் என்று குழம்பித் தவித்தானே! ஏன் குழந்தையினாலோ என்று கூட யோசித்தானே. இறுதியில் அவன் தேக சுகத்திற்காகத் தான் என்று நினைத்து மனக்கசப்பை கக்கினான். அப்போதும் உத்தமி போல் அவனை தொட மாட்டேன் என்றெல்லாம் சபதமிட்டாள்.


இறுதியில் பாழாய்ப்போன இந்த ஆஸ்திக்காகத் தான் என்னை தொங்கியிருக்கிறாளா என்று கோபம் பழியாய் வந்தது அவனுக்கு.


அவளை காமப்பிசாசு என்று நினைத்ததற்கு, அவள் பணப்பிசாசாய் ஆனது வெஞ்சினத்தை கூட்டியது.


முடிவில் அந்த நந்தினியை விட இவள் மோசமானவள் என்று தீர்மானம் பண்ணியவன், ஆவேசமாய் அவளைத் தேடி வீட்டை விட்டு வெளியே வந்தான்.


பானுமதி எதிர்கொண்டாள்.


“அண்ணா லீலாவதி மேடம் எஸ்டேட் போயிட்டாங்களாம். ஆத்மீகா மேடமும், விஹானும் வந்திருப்பாங்க போல. அவங்களை கூட்டிட்டு தான் கார்ல போனாங்களாம். ப்ச்! அவங்களை என்னால பார்க்க முடியல.” என்று வருந்தினாள்.


அண்ணனோ, “பானு நான் கொஞ்சம் நேரத்துல வந்திடுறேன்” என்று அவசரமாக வெளியேறினான்.


அவள் தோள்களை குலுக்கிக்கொண்டு, பயணப்பொதிகளை மேற்கொண்டு அவிழ்த்து சரி பார்த்தாள்.


*


தற்போது நடந்ததனைத்தையும் நினைத்து மனதுள் கண்ணீர் உகுத்தான் சித்தார்த்தன்.


அவன் எவ்வளவு வெறியுடன் அவளை நெருங்கினான்?


ஆனால், அவள் அவனை கொடும் மிருகத்திடமிருந்து காப்பாற்றியிருக்கிறாள். அதுவும் அவளின் மகளை விட்டு அவனை.


அந்த நொடி எப்படி மகளை மறக்க முடிந்தது அவளால்?


அன்றைக்கு அவளின் படுக்கையறையை எட்டிப் பார்த்தபோதுக்கூட மகளுக்காக எப்படி ஆடிப் பாடினாள்! அந்த நேசம் நிச்சயம் பொய் கிடையாது.


நான் மகளை வெறுத்தேன் என்றதற்கே சட்டைக்காலரை பற்றினாள். நேற்று என்னால் சித்தாரா அழுதாள் என்பதற்காக‌ கோபத்தை கட்டுப்படுத்த முடியாது திணறினாள்.


அவளின் தாய் பாசம் தாய்ப்பாலை போல் தூய்மையானது. அப்படியிருக்க அவள்‌ என்னை காப்பாற்றியிருக்கிறாள். அது நிச்சயம் பணத்துக்காகவோ, வசதி வாய்ப்புக்காகவோ இருக்காது.


பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனார் சிவவெறியில் தன் பிள்ளைக்கறியை படைத்தது போல், தனது பணவெறியில் பிள்ளையையே பலி கொடுக்கும் அளவுக்கு ஆத்மீகா அரக்கி கிடையாது. அவள் அசோகவனத்து தேவதை!


அசோகவனத்தில் கூட திரிசடை என்றொரு நல்ல அரக்கி இருந்தாளாமே? ஏன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் கூட தந்தை ஒருவர் தானே? காசியப முனிபர்!


அவளின் மேல் அத்தனை குற்றங்களையும் சுமத்திப் பார்த்துவிட்டேன். ஆனால், அவள் அனைத்தையுமே உடைத்தெறிந்து பனிமலராக பரிமளிக்கிறாள்.


இத்தனை நல்லவளாக இருப்பவள் ஏன் எனக்கு மட்டும் கெடுதல் செய்தாள்? அவள் கெட்டுப்போனவர்களை மட்டுமே நாடியிருந்தால் நான் அவளை இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டேன். ஆனால், நல்லவனாக இருந்த என்னை கெட்டுப்போக வைத்தாளே, அது எவ்வளவு பெரிய அநியாயம்? அயோக்கியதனம்!


இவளை எப்படி என்னால் மன்னிக்க முடியும்? ஒரு அழகிய பூவை முகர்ந்து பார்த்தல் இயல்பு. ஆனால், தேனை கசக்கி பார்த்தல்?


அதுபோக அவள் என்னை போல் எத்தனை பேரை கசக்கியிருப்பாள்? எத்தனை பேரை புலம்பவிட்டிருப்பாள்? இவளை நான் மணந்து, நளாயினி தலையில் கணவனை சுமந்து சென்றது போல், சுமக்க வேண்டுமா?


இல்லை இனியொரு பிள்ளை பிறந்தால் தான், என்னுடையது என்று தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்ள முடியுமா?


அர்ச்சுனன் தன்னை நம்பி‌ வந்தவளை தனது சகோதரர்களுடன் பங்கிட்டுகொண்ட அயோக்கியதனத்தை, ஒருகாலும் என்னால் இவளுக்கு செய்ய முடியாது.


ஆமாம், முதலில் இவளென்ன குந்திதேவி மாதிரி, நீ வேண்டியவருடன் வாழ்ந்த பிறகு மீண்டும் கன்னியாவாய் என்று வரம் வாங்கிகொண்டு வந்தவளா? திருமணம் புரிய ஆசைபடுகிறாள். அவள் உடலே அசுத்தம். ஆனால்… ஆனால்… மனம்?


எந்த வலுவான காரணமுமின்றி நான் வேண்டுமென்று அல்லவா வந்திருக்கிறாள்? ஒருவேளை அந்த மனதில் நான் தான் இருக்கிறேனோ? அவள் என்னை விரும்புகிறாளோ? நூற்றில் ஒரு சதவீதம் அது உண்மையாக இருந்தால்?


சித்தார்த்தன் ரத்தம் கொடுத்து வந்த பின்னும் இதையே தறி போல் மனதுள் நெய்து கொண்டிருந்தான்.


அப்போது வந்த மருத்துவர், “குழந்தையோட பேரண்ட்ஸ் யாரு?” என்று கேட்க, அவரை நோக்கி ஓடினாள் ஆத்மீகா கண்ணபிரான்.


“நீங்க தான் அம்மாவா?” என்று உறுதிசெய்து கொண்டவர், “நீங்க?” என்று கேட்க,


அவளின் பின்னேயே ஓடி வந்திருந்தவன், “நான் சித்தாராவோட அப்பா” என்றதும், இருவரையும் தனியே அழைத்துச் சென்றார் மருத்துவர்.


அந்நேரம் பார்த்து அவர்களை நெருங்கியிருந்த பானுமதியின் காதிலும் அது விழுந்திருந்தது.


விஹான் துக்கத்தில் நின்றிருக்க, லீலாவதி பொத்தென நாற்காலியில் உட்கார்ந்தாள்.




தொடரும்…


இன்னும் மூன்று அத்தியாயங்களில் நாவல் நிறைவடையவிருக்கிறது. நாவலை வாசிப்பவர்கள் லைக், கமெண்ட் செய்ய மறக்காதீர்கள் டியர்ஸ்.
 
Top Bottom