• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் 27 & 28

ரோசி கஜன்

Administrator
Staff member
தொலைக்காட்சித் திரையில் பார்வை இருந்தாலும் பூபாலன் சிந்தனை அதில் பதியவில்லை. கோப்பியை உறிஞ்சிக்கொண்டிருந்தவன் மனம், மனைவியும் தானும் விரும்பியது போலவே குழந்தைகளை நேர் சீராக வளர்தெடுப்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

யோசனையே நிச்சயம் பெரும் மலைப்பைக் கொடுத்திட்டு. மனைவியின் பிரிவோடு சென்றுவிட்ட ‘என்னால் முடியும்’ என்ற திடம், உறுதி, நம்பிக்கை எல்லாவற்றையும் திரும்ப ஏற்படுத்த வேண்டும் என்றுதான் அவனும் நினைக்கிறான், அது நினைவோடு செயலிழந்து விடுகின்றதே!

‘காயு! நீதான் என்னோட துணை நிக்கோணும்; தனிய விட்டுட்டுப் போனது போல இப்பவும் கைவிட்டிராத காயு!’ மனம் கத்தியது.

“சரசு சித்தி இங்கயே இருந்திர வேணும், ஓரளவுக்குச் சமாளிச்சிருவன்.” முணுமுணுத்துக் கொண்டான்.

‘இந்தக் கொரோனா எப்ப முடிவுக்கு வரும்? அப்பிடி ஒரு நிலை வந்தா அம்மாவ இங்கயே கூப்பிட ஆயத்தம் செய்யலாம். எல்லாத்துக்கும் முதல் கயல் வெளிக்கிடப் போறா, பிள்ளைகள அதுக்குப் பழக்க வேணும்.’ எண்ணங்கள் மாறி மாறி முட்டி மோத கோப்பியின் கடைசிச் சொட்டையும் உறிஞ்சிக் குடித்துவிட்டு எழ முயன்றவனை, தன் பக்கம் இழுத்திட்டு, அழைப்பு மணியோசை.

“ஆர் இந்த வெள்ளனக் காலத்தால!” நெற்றி சுருங்கச் சென்றவனின் ஒற்றைக் கண் சுருங்கி, டோர் வியூவரால் வெளிப்புறத்தைப் பார்த்திட்டு.

மறுநொடி, ஆச்சர்யம் தாக்க கதவை விரியத் திறந்தவனுக்குப் பேச்சு வரவில்லை; தொண்டை அடைக்க கண்கலங்க அப்படியே நின்றான், பூபாலன். பெரும் கேவலோடு ஒரே தாவலில் வந்து அணைத்துவிட்டு அழுதார், காயுவின் தாய். அவர் உடல் நடுங்கியது.

“அத்தான்!” அவள் தங்கையும் சேர்ந்து கொண்டாள். காயுவின் தம்பியும் அவர்களினது குடும்பத்தினரும் கண்ணீரோடு நின்றார்கள்.

இப்படிச் சகோதரங்கள் வரும் பொழுதெல்லாம் காயுக்குச் சிறகே முளைத்துவிடும். பூபாலன் அடிக்கடி பகிடி பண்ணுவான். அந்தளவுக்கு சுற்றிச் சுழலுவாள்.

“எங்கட அக்கா இல்லாத வீட்டுக்க வருவம் எண்டு நினைச்சிக்கூடப் பாக்கேல்லையே அத்தார்.” அழுதாள் தங்கை.

“பிள்ளைப் பெறுவுக்கு வந்திருந்தாக் கூட அவாவச் சந்திச்சி இருப்பன். கடைசியா... நேர்ல வந்து முகம் பாக்கக் குடுத்து வைக்கேல்லையே!” அழுதபடி உள்ளிட்டவள், காயு படம் முன்னால் தொப்பென்று விழுந்தாள்.

மருமகனிலிருந்து விடுபட்டு ஓடிச் சென்ற அவள் தாயும் ஓவென்று கதறினார்.

யார் யாரைத் தேற்றுவது? பூபாலன் அப்படியே கதவோரமாகச் சாய்ந்து நின்றுவிட்டான். மனைவியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது, அதிலிருந்து மீழ்வதென்பதும் இலகுவானதல்ல. இருந்தாலும் நடப்பை ஏற்றுச் சற்றே சற்று நிமிர முயன்றவன் மீண்டும் தொய்ந்தான்.

“என்ர ராசாத்தி! மூத்தவளா பெத்துப் பாராட்டிச் சீராட்டி வளத்தனே! நீ ரெண்டு குஞ்சுகளோட புருசன் குடும்பம் எண்டு சந்தோசமா இருக்கிறது பாத்து மனம் நிறைஞ்சு இருந்தனே! இப்பிடியா போவ? கடவுளுக்கு கண்ணில்லாமப் போச்சே!” காயுவின் தாயைத் தேற்றவே முடியவில்லை.

“பெத்த வயிறு எரியுதே, என்ர ஐயோ!” அவரின் அழுகை ஒலி உறக்கத்திலிருந்த லாதியைத் திடுக்கிட்டு எழச் செய்திட்டு. கீழே விரைந்து வந்த வேகத்தில், “அம்மம்மா!” பாய்ந்து வந்து அவரில் முட்டி மடியில் விழுந்து அழத் தொடங்கியிருந்தாள்.

தாயின் இழப்பின் பின்னர் முதல் முதலாக சித்தி குடும்பம், சித்தப்பா குடும்பம் எல்லோரையும் ஒன்றாகச் சந்திக்கவும் பிஞ்சு மனம் ஓவென்று கதறச் சொல்லிட்டு.

“அம்மா அம்மா!” அழுதவளை நோக்கி உடலை நகர்த்த முடியாது நின்றான், பூபாலன்.

அதிகாலை நான்கு மணியின் பின்னரே உறங்கிய கயல் அடித்துப் போட்டாற்போல் உறக்கத்தில் இருந்தாள். திடீரென்று வந்த அழுகை ஒலி அவளை உலுப்பி விழிக்கச் செய்திட்டு. பதறி எழுந்தவள், “லாதியா?” மேலே ஓடி வந்தாள். அங்கே, காயு குடும்பத்தினரைக் கண்டதும் தான் நெஞ்சுக்குள் குடிவந்த பயம் வடிந்திட்டு. அப்படியே நின்று விட்டாள்.

“அம்மா என்ன நீங்க? அழாதிங்கன, பாருங்க...” லாதியைக் காட்டிக் கடிந்து கொண்டான், காயுவின் சகோதரன்.

“பிள்ளேட பிறந்தநாளும் அதுவுமா என்ன நீங்க?” தொடர்ந்து அவன் சொல்லவும் பட்டென்று அழுகை ஒலி நின்றிட்டு. காயுவின் அன்னையின் கரங்கள் பேத்தியை அணைத்திருந்தாலும் பார்வை அப்படியே மகள் புகைப்படத்தில்.

“உனக்குப் பதிலா என்னை எடுத்திருக்கலாமே!” முணுமுணுத்தார்.

“அக்கா!” கயல் போலவே சத்தத்தில் எழுந்து வந்த சரசு, தமக்கையை அணைத்துக் கொண்டார்.

“அழாத குஞ்சு!” காயுவின் தங்கை, சிறுமியின் விழிகளைத் துடைத்துவிட்டுக் கொஞ்சினார்.

“செல்லக்குட்டிட பிறந்தநாளுக்கு சர்ப்பரைசா வந்தம்.” காயுவின் சகோதரன். அவர்களின் பிள்ளைகளும் வந்து சேர்ந்துவிட அழுகை குறைந்து அவர்களோடு ஒன்றிவிட்டாள், லாதி.

“சொல்லாமல் கொள்ளாமல் வந்திட்டம் அத்தார்.” சகோதரன்.

“இதில என்ன இருக்கு? உங்கட அக்கா வீடு இது, எப்பவும் வரலாம்.” குரல் கமறச் சொன்னான், பூபாலன்.

“தேத்தண்ணி போடுறன் என்ன?” சரசு நகர, “நான் போடுறன் சித்தி நீங்க உங்கட அலுவல்களைப் பார்த்திட்டு வாங்கோவன்.” நகர்ந்தான் பூபாலன்.

“ஆதித் தூங்கிறானோ, கயல்விழியிட அறையிலயா?” காயுவின் தங்கை கேட்க, “அவே ரெண்டு பேரும் பேஸ்மென்ட்டுக்க...” பூபாலன் சொல்லி முடிக்கவில்லை, “ஸ்வீட்டி!” கயலைக் கண்டுவிட்ட லாதி எழுந்தோடினாள்.

வந்தணைந்து கட்டிபிடித்தபடி கேவியளை அணைத்தபடி முழங்காலில் அமர்ந்து கொண்டாள், கயல்.

“எங்கட குட்டிம்ம்மா இப்ப ஏன் அழுகிறாவாம்? பிள்ளேட பிறந்தநாளுக்கு அம்மாம்மா, சித்தி, மாமா ஆக்கள் எல்லாரும் வந்திருக்கினமே, பிறகு என்ன?” கண்களைத் துடைத்து விட்டாள்.

“அம்மா அம்மா இல்லையே!” விக்கினாள், சிறுமி.

“அம்மா அப்புசாமியோட இருந்து பிள்ளைகளத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறா எண்டிருக்கிறன் எல்லா? இப்ப நீங்க அழுதா அம்மா கவலைப்படுவா செல்லம்.”

“எண்டாலும் அம்மாவும் வேணும்.” என்றவளை சமாதானப்படுத்தி, “வாங்க நாம அம்மம்மாவோட கதைப்பம்.” இரவுடையாகப் போட்டிருந்த தொளதொள பிஜாமாவை ஒருதடவை பார்த்துவிட்டு தயங்கினாள். அதற்கிடையில் கீழேயிருந்து குழந்தையின் அழுகுரல் வந்தது.

“தம்பி எழும்பிட்டான்.” விரைந்து நகர முயன்றவளோடு சேர்ந்து நகர்ந்தாள், லாதி.

பிறந்தநாள் ஆயதங்களைப் பார்த்துவிடுவாளே!

“நீங்க இங்க நில்லுங்கோ, தம்பியத் தூக்கிக் கொண்டு வாறன்.” அவளைப் பிடித்து நிறுத்தி விட்டு நகர முயன்றாள், கயல்விழி.

“நோ ஸ்வீட்டி!” பிடிவாதமாக நகர்ந்தாள், லாதி.

“கயல் நீர் நில்லும், நான் அவனப் பாக்கிறன்.” பூபாலன்.

“மெல்லத் தட்டினாத் தூங்குவார்.” என்றவள், “நீங்க ஓடிப் போய் முகம் கழுவிட்டு வாங்கோ, ஸ்வீட்டி அம்மம்மா ஆக்களோட கதைச்சிட்டு ஓடி வாறன்.” தன் வயிற்ரோடு கரம் போட்டுக் கட்டிப்பிடித்தபடி அசையாது நிற்கும் லாதியிடம் கூற, ”நீங்களும் வாங்கோ!” அசையாது நின்றாள் அவள்.

அதற்கிடையில், “கட்டில விட்டு இறங்கிட்டான். நல்ல காலம் போய்ட்டன், இல்லையோ எல்லாத்தையும் இழுத்துக் கொட்டி இருப்பான்.” என்றபடி மகனோடு வந்தான், பூபாலன்.

குழந்தைக்கு விடிந்ததும் கயல் முகம் பார்க்க வேண்டும். மற்றவர்கள் பிறகுதான். அதுவே தகப்பனோடு சிணுங்கிக் கொண்டே வந்தவனுக்கு இடையில் கயலைக் காணவும் அப்படியே தாவினான். அங்கிருந்தவர் அனைவரும் புதியவர்கள் வேறு!


 
Top Bottom