• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 44

ரோசி கஜன்

Administrator
Staff member
அடுத்த கால் மணித்தியாலத்தில் எல்லோரும் வெளியில் வர, வரவேற்பிலமர்ந்த சுகுணாவும் விறுவிறுவென்று வந்து வானில் ஏறியமர்ந்து விட்டார்.

"அங்கிள், நானும் அங்கதான் வாறன், இலக்கியா என்னோட வரட்டுமே!" வேந்தன்.

சுதர்சன் பதில் சொல்ல முதல், "இதெல்லாம் கேட்டுக்கொண்டா இருப்பீங்க! என்னவோ ரெண்டு கிழமையா எல்லாம் கேட்டுக் கேட்டுச் செய்த கணக்கில என்னப்பா? போ போடி!" அவளைப் பிடித்து அவன் புறமாகத் தள்ளிவிட்டுவிட்டு, "ஆனா நாங்க அங்க போய் இறங்க நீங்களும் வந்திறங்க வேணும்." விழிகளில் விசமத்தோடு கேலி செய்த தமக்கையைப் பார்க்கையில் மீண்டும் இலக்கியாவின் கண்கள் ஊறின.

“கவலையே வேணாம், நான் முன்னால போறன் பின்னுக்கு வாங்க என்ன." சாரதியிடம் சொன்ன வேந்தன், “ஏறும்” முன்கதவைத் திறந்து பிடித்தான். பார்த்து நின்ற வீட்டினருக்கு தலையாட்டி விடைபெற்று ஏறியமர்ந்தவள், மீண்டும் வெடித்து அழுதுவிடுவேனோ என்ற நிலையிலிருந்தாள்.

எதுவுமே நடவாத பாவனையில் காரை செலுத்தியவன், தொண்டையைச் செருமிக்கொண்டு அவளைப் பார்க்க அவளோ, வெளியில் பார்த்தாள்.

"ம்ம் பிறகு...சொல்லும்."

சட்டென்று திரும்பியவள் பார்வையைக் கண்ணீர் மறைத்தது.

"பச்! திரும்ப அழுது வடிஞ்சு கொண்டு வரப்போறிறா? அதும் வீட்டாக்கள் எல்லாரும் 'ஆர் எங்கட வீட்டுக்கு வரப்போற இளவரசி' எண்டு பார்க்க வாசலில வந்து நிப்பினம் பா!" எதுவுமே நடவாத பாவனையில் சொல்லி, அவள் விழிகளைத் தளம்ப வைத்தான். காரை ஓரமாக நிறுத்தி அவளோடு நாலு வார்த்தைகள் கதைக்க மனம் உண்ணியது. பின்னால் வருபவர்களை மனதில் வைத்துக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

'நீ எப்பிடி அப்படியெல்லாம் எழுதலாம்?' என்ற கோபம் ஆரம்பத்திலிருந்தாலும் இப்போது மட்டுப்பட்டிருந்தது. எல்லாம் ஓரளவு சுமுகமாயிற்று என்ற நிம்மதியே பிரதானமாக நின்றிற்று.

"அப்ப அழுமூஞ்சியாத்தான் வரப்போறீர்?"

"சொறி வேந்தன் எனக்கு...எனக்கு வேற வழி தெரியேல்ல. நேற்று உங்களோட கதைச்சிட்டு வர..." திக்கி நிறுத்தியவள், முதல் நாள் என்ன பாடுபட்டிருப்பாள் என்றுணர முடிந்தது அவனால்.

"விடும் எண்டுறன் எல்லா."

"இல்ல... சொறி!"

"சரி."

"இல்ல உங்களுக்குக் கோவம்."

"ஹா...ஹா...பின்ன? கோவம் தான், அதுக்கு இப்ப என்ன செய்யிறது விடும்." சொல்லிக்கொண்டிருக்கையில் அவர்களைக் கடந்தது சென்றது, கவியாட்கள் இருந்த வாகனம். கை காட்டிக்கொண்டு சென்றாள், கவி. "பின்னால வரச் சொன்னவர்." சாரதி சொல்ல, “இப்ப வந்த ரிஷப்சன் ஹோலுக்குத் தான் போறம், நீங்க ஓவர் டேக் செய்து போங்க!" சொல்லிச் செய்ய வைத்தது அவள்தான்.

"அக்கா ...கவிக்கா ..." மனதில் நினைப்பதைக் கோர்வையாகச் சொல்ல முடியவில்லை இலக்கியாவாள். பட்டென்று அவன் தோளில் சாய்ந்துகொண்டாளவள். அழுகிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

"இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு ஒருத்தரும் எதிர்பார்க்கேல்ல இலக்கி. நடந்திட்டு. இனி ஒண்ணும் செய்யேலாது. அழாதேயும்!" கன்னத்தில் தட்டியவன் அவள் தெளியவில்லை என்றதும் காரை வளைத்துத் திருப்பி இடம் பார்த்து நிறுத்தினான்.

"போவம் வேந்தன், அவே என்ன நினைப்பினம்." நிமிர்ந்தமர்ந்தவள், "அப்ப முதல் அழுறத நிப்பாட்டும். பார்க்கச் சகிக்கேல்ல." அவன் சொல்ல மீண்டும் அவன் தோளில் சாய்ந்து விட்டாள்.

“அவ்வளவு சந்தோசமா எல்லாரும் நிண்டவே, இண்டைக்கு உங்கட வீட்டாக்களோடு எல்லாரும் எப்பிடிச் சந்தோசமா நிண்டவையோ அப்படி...” சொல்லிக்கொண்டு அவன் மேல்கையை இறுக்கப் பற்றிக்கொண்டவள், “எனக்கு எனக்கு..உண்மையாவே என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல வேந்தன். அழுறதத் தவிர ...இரவிரவா யோசிச்சுக் கடைசிலதான்...” மெல்ல அவனைப் பார்த்தாள், கண்ணீரோடு!

“பொறுப்புத்துறப்பு போல ஒரு மெசேஜ் போட்டிட்டிர் என்ன? உம்மை...” இடக்கையால் அவள் தலையைப் போட்டு ஆட்டினான்.

“என்ன துணிச்சலடி உனக்கு? நீ அப்பிடிப் போட்டதும் நான் அப்பிடியே போயிருவன் எண்டு நினைச்சிருக்கிறியே எண்டு நினைக்க நினைக்கத்தான் எனக்குக் கோபம் வந்தது. என்ன எண்டாலும் பார்க்கலாம், வேந்தன் இருக்கிறான் நம்மோட எண்டு நீ நினைக்கேல்லயே! நினைச்சிருக்க, உனக்குத் தெரிஞ்ச்சத உடனே எனக்குச் சொல்லி இருப்ப. ஃபோன ஒஃப் செய்திருக்க மாட்ட.” முதல் நாளிலிருந்து கடந்த கணம் வரை பட்ட பாடு எவ்வளவு தடுக்க நினைத்தாலும் வெளியில் வந்திருந்தது.

அவள் உடனே வாய் திறக்கவில்லை.

“விடு...முடிஞ்சது எல்லாம் முடிஞ்சிட்டு!” அவன் தான் சமாதானம் செய்விக்கும் வகையில் சொல்லியிருந்தான்.

“நீங்க சொல்லுற அளவெல்லாம் நான் நினைகேல்ல வேந்தன். முழு நினைவிலும் கவிக்கா மட்டும் தான் நிண்டவா. அவாட சந்தோசத்த நீங்க பார்க்கேல்லையே! அதில நான் மண்ணள்ளிப்போட்டதா இருக்கக் கூடாதெண்டு தான் நினைக்க வச்சுது.” என்றவளை, என்ன செய்வதென்று தெரியாது முறைப்போடு பார்த்தான், வேந்தன்.

அவன் தன்னை முறைப்பதை உணர்ந்தவள் பார்வை அவனை ஏறிடவில்லை. அவன், தனக்கு இனி இல்லையென்று நினைத்திருந்தாளே! இந்தக் கணம் அவளின் அந்த அசட்டுத்தனமான எண்ணமெல்லாம் பொய்யென்று நிரூபித்தவன் தன்னோடிருப்பதே கனவு போலிருந்தது. தலையை அவன் தோளில் நன்றாக அழுத்திக் கரத்தை இரு கரங்களாலும் இறுகப் பற்றிக்கொண்டாள்.

“ஏனெண்டா ஏனெண்டா...” எண்டவள் பார்வை இன்னமும் முறைப்பிலிருக்கும் அவன் பார்வையைத் தொட்டது. மெல்ல விலகி நிமிர்ந்தமர்ந்தாள்.

அவள் விலகியதும் முகத்தில் வந்திருந்த யோசனையும் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘ஏற்கனவே நொந்து போயிருக்கிறாள். இப்ப இந்த விசாரணை எல்லாம் ஏன்? முதல் தேவையா என்ன?’ மனம் இடித்துரைத்தது

“விடு இலக்கி, நான் விளக்கம் எல்லாம் கேட்கேல்ல.” அவள் கரத்தைப் பற்றிக்கொண்டான்.

“இப்ப இந்த நிமிசம் நான்...இல்ல நாம சந்தோசமா இருக்கிறம் தானே. இதத்தானே ரெண்டு கிழமையா ஆவலா எதிர்பார்த்திருந்தம். நிச்சயம் உன்ர வீட்டாக்களுக்குக் கொஞ்ச நாளுக்கு ஒரு மாதிரித்தான் இருக்கும். கவிக்கு நல்லதா ஒரு கல்யாணம் நடக்க எல்லாம் மறைஞ்சிரும்.” அவன் இப்படிச் சொல்ல, அவளோ, தன்மடியில் கிடந்த சிறுகைப்பையைத் திறந்து அதிலிருந்த சிறு பெர்சை எடுத்துத் திறந்தாள். 'என்ன செய்யிறா?' என்றெண்ண வைத்தது அவள் முகத்திலிருந்த உணர்வுகோலம்!

அதிலிருந்து எடுத்து அவன் முன்னால் நீட்டியது, சிறு புகைப்படமொன்று!

வரியுடுப்பில் ஆணும் பெண்ணும்! முன்னால் ஆணும் பெண்ணுமாக பிள்ளைகளிருவர்! நெற்றி சுருங்கப் பார்த்தவன், "ஆர் இவையள் இலக்கி? இயக்க ஆக்கள் என்ன?" கேட்டவன் விழிகள் விரிந்து போயின! அதிர்வா ஆச்சரியமா கூடவே தொத்திக்கொண்ட யோசனையா? அவளை ஏறிட்டான். அவள் பார்வையோ முன்னால் பாதையில்.

"டோய்...இதில இருக்கிற பொம்பளப் பிள்ள நீரோ?! முகம் அப்படியே உம்மைப் போல இருக்கு!" வியப்போடு கேட்டவன் அவள் கண்களால் உதிர்ந்த கண்ணீரில் அதிர்ந்தான். "அப்பிடி எண்டா?" மிகுதியைச் சொல்லவில்லை, அவன். இலக்கியா மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
விர்ரென்று கடந்த காலம் சென்றிருந்தவளும், இப்படியொரு பக்கம் அவளுக்கிருக்குமென்று கனவிலும் நினைத்திராதவனும் வார்த்தைகள் தொலைத்து நின்றார்கள், சில நிமிடங்கள்.

"2010 ல நான் கனடா வரேக்க இவையள் ஒருவரும்..." தொடர்ந்து வார்த்தை வரவில்லை. மீண்டும் அவன் கரத்தைக் இறுகக் கட்டிப் பிடித்தவள் இதயம் வலியில் சுருண்டிட்டு.

அன்று, பதினொரு வயதிலிருந்த சிறுமிக்கு இதெல்லாம் கற்பனையிலும் எட்டாத வலிகள்! ஒன்றாகக் கூடிக்களித்த உயிரான உறவுகளைத் தொலைப்பதை, அது வாழும் வரை கொடுக்கும் வலியையும் அழுத்தத்தையும், உருகி உருகி எழுதிவிட்டாலும், செவிவழி, விழிவழி கேட்டும் கண்டுமிருந்தாலும், எலும்பில்லா நாக்கை வளைத்து, பரிதாபம் தரகூடிய சொற்களைப் பொறுக்கியெடுத்து, வாய் நோக நோக கத்திக் கதைத்திட்டாலும் முழுமையாக உணர்ந்திட முடியுமா என்ன? இழப்பைச் சுவைத்தவனுக்கு மட்டுமே அதன் மொத்தக் கனமும் ஆறா இரணமும்!

அவள் சொல்லாததை அவனால் விளங்கிக் கொள்ள முடிந்தது. உயிராக நேசிப்பவளின் கண்ணீர் உணரத் தூண்டியது. மென்மையாக அணைத்துக் கொண்டானவன்.

சற்றுமே எதிர்பாரா அதிர்வான செய்தியிது! இலக்கி சுதர்சன் வீட்டுப் பிள்ளை இல்லை! அவர்களின் சுவிகாரப் புத்திரி! வார்த்தைகளின்றி இருந்தான், அவன்.

"வன்னில நடந்த கடைசிச் சண்டைக்குக் கொஞ்ச மாதங்கள் முதலே தெரிஞ்ச ஆக்களோட வவுனியாக்கு அனுப்பினவே அம்மாவும் அப்பாவும். ஆறு வயசுத் தம்பி வர மாட்டன் எண்டு நின்டிட்டான். தாங்க கட்டாயம் வருவம் யோசியாமல் போ எண்டு சொன்னவே. கடைசிவரை வரவே இல்ல வேந்தன்.” மெல்லச் சொல்லிவிட்டு மௌனித்து விட்டாள்.

அந்நாட்களுக்கு இழுத்துச் சென்ற நினைவுகளுக்குத் தடையே போடவில்லை. பதறித் துடித்து உயிர் ஒன்றே போதுமென்று சாரி சாரியாக வந்து குவிந்தவர்களில் தன் உறவுகள் உள்ளார்களா என்று அழுதுகொண்டே தேடிய கணம் தேகத்தை நடுநடுங்கச் செய்தது.

அவளின் குறும்புகள், சந்தோச ஆரவாரங்கள் எல்லாமே இந்த ஆறா வடுவின் மீது கட்டப்பட்டவை. சந்தர்ப்பங்கள் கிடைக்கையில் இப்படித்தான் உதிர்ந்து விடும். ஓவென்று வாய்விட்டு அழவேண்டும் போன்றதொரு நெஞ்சிறுக்கத்தில் தடுமாறியவள் அவன் அருகாமை கொண்டு தன் மனதைத் திடம் செய்ய முயன்றாள்.

“சுதர்சன் அப்பாவும் என்ர அம்மாவும் சின்ன வயசுல இருந்து திக் ப்ரெண்ட்ஸ். அப்பம்மா ஆக்கள் எங்கட அம்மா வீட்டாக்களோட பே(நல்ல) ஒட்டு. அப்பம்மா இருக்கிறா எல்லா அவாக்கு எல்லாம் பெடியள்தானே. எங்கட அம்மா தன்ர மகள் எண்டு சொல்லுறவாவாம். உரும்பிராயில பக்கத்துப் பக்கத்து வீடு வேற . அதுமட்டுமில்லாமல் சுதர்சன் அப்பாவும் என்ர அப்பாவும் ஒண்டாப் படிச்ச ஃப்ரெண்ட்ஸ். நடந்தது கேள்விப்பட்டு அம்மாவும் அப்பாவும் கனடாவில இருந்து வந்து முகாமில இருந்த என்ன கனடா கூட்டிக்கொண்டு வந்தவே. அவே இல்லாட்டி... நான் இப்ப எங்க எப்பிடி இருந்திருப்பனோ!"

வேதனை வழியச் சொல்லிக்கொண்டு சென்றவளை இடையிட்டு நிறுத்தினான், வேந்தன்.

"வேணாம் வேணாம் நீ இனி ஒண்ணும் சொல்ல வேணாம்." அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

“ஆரும் இல்லாத அனாதையா நிண்ட என்ன இவ்வளவு பெரிய குடும்பத்தில அன்போட தங்கட பிள்ளையாய்ப் பார்த்தவை அப்பம்மா ஆக்கள் தான். அவைக்கு நான் எப்பிடி ..." விம்மியவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனால் தேறுதலோ ஆறுதலா சொல்ல வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளற்றிருந்தாலும் பாதுக்காப்பாக, துணையாக, ஆதரவாக எல்லாவுமாக உணர்த்தியது, அவன் அணைப்பு!

சிலநிமிடங்களும் கடந்திராது குறுஞ்செய்தி வந்திருக்கின்றதென்றது, அவன் கைபேசி. சட்டென்று விலகினாள் இலக்கியா. “எனக்கு உண்மையா இப்ப அங்க வர விருப்பம் இல்ல வேந்தன். பயமா இருக்கு, உங்கட வீட்டு ஆக்களப் பார்க்க. முகமெல்லாம் அழுது வழிஞ்சு கொண்டு." சின்னப் பிள்ளையாக சாட்டுச் சொல்லித் தப்பப் பார்த்தாள்.

காதில் வாங்காத பாவனையில் கைபேசியை எடுத்துப் பார்த்தவன் எதையோ தட்டி அனுப்பினான்.

"அக்காதான், ‘என்னடா வருவியோ இல்லாட்டி...’ எண்டு போட்டிருக்கிறா. அரைமணித்தியாலத்தில வாறன் எண்டு போட்டிருக்கிறன்." என்றவன் பார்வை அவள் முகத்தில்.

ஏற்கனவே விழிகள் எல்லாம் வீங்கித்தான் இருந்தாலும் ஓரளவு சமாளித்து வெளிக்கிட்டு வந்திருந்தவள், இப்போது, மீண்டும் முகமும் தலையும் கலைந்து இருந்தாள்.

"ஹோட்டல் ரூம் கார்ட் இருக்குதா? போய் முகம் கழுவி வெளிக்கிட்டுக்கொண்டு வருவம்." காரைத் திருப்பினான்.

"நல்ல காலம் டார்க் புழு சேர்ட் எண்டதால ஒண்ணும் தெரியேல்ல!" தன் கண்ணீரில் நனைந்திருந்த இடத்தைத் தடவியவளை பார்த்தவன், விழிகள் இலேசாகக் கலங்கிற்று!

அருகிலேயே ஹோட்டலிருந்ததில் அடுத்த சிலநிமிடங்களில் வந்துவிட்டார்கள். காரைநிறுத்திவிட்டு இறங்க முயன்றவன், "இப்ப நீங்க எங்க வாறீங்க?" அதட்டியவளைப் பார்த்துவிட்டு வாய்விட்டே நகைத்தான்.

"ஏய் என்னப்பா, என்னோட வர அந்தளவு பயமா என்ன?" சீண்டியவன் புஜத்தில் ஒரு குத்து விட்டாள், இலக்கியா.

"அசையக் கூடாது. இங்கயே இருங்க, போறதும் வாறதுமா ஓடி வாறன்." இறங்கியவள், அவனும் இறங்க, "ப்ளீஸ் வேந்தன்." ஓடிவந்து காருக்குள் இருத்த முனைந்தாள்.

"ஏய் பொறு பொறு..." அவள் கரமிண்டையும் பற்றிக்கொண்டவன், "நானும் முகம் கழுவ வேணும் அதுதான்." கண்களில் விசமத்தோடு சொன்னவனை முறைப்போடு பார்த்தவள் மெல்லக் கரத்தை விடுவித்துக்கொண்டு, "அதெல்லாம் வடிவாத்தான் கிடக்கு!" அவன் தலையைக் கண்டபடி கலைத்து விட்ட வேகத்தில் ஓடியவள், "அஞ்சே அஞ்சு நிமிசம்..." கெஞ்சலாகச் சொல்லிக்கொண்டே கட்டிடத்தினுள் சென்று மறைந்தாள்.

உறைந்து நின்ற முறுவலோடு ஒழுங்காக அமர்ந்து கதவைச் சாத்தியவன் தமக்கைக்கு அழைத்து அங்குள்ள நிலவரம் பற்றி விசாரித்தான்.

"உன்ர மாமி ஆக்கள் வந்திட்டினம். கவி வந்து அம்மாவோடு இருந்து கலகலவெண்டு கதைச்சுக்கொண்டிருக்கிரா. உன்ர மாமிட முகம்தான் சரியேயில்ல, சின்னச் சிரிப்போடு அங்கால போய்ட்டா. உன்ர மாமாட சகோதரங்களும் ஒருமாதிரி சமாளிச்சுக்கொண்டு கொஞ்ச நேரம் இருந்திட்டு எழும்பிப் போனவே ஆக்களையே காணேல்ல. உன்ர மாமா சந்தோசமாத்தான் அப்பாவோட வந்திருந்து கதைச்சுக்கொண்டு இருக்கிறார்.” மூச்சு விடாது ஒப்பித்தாள், அவன் தமக்கை.

“எங்களுக்கும் நடந்ததைக் கேட்க ஒரு மாதிரித்தான் டா இருக்கு. அப்போ அவேக்கு" என்றவள், “அவேட அப்பம்மாக்கும் விசயம் தெரிஞ்சிட்டு. அங்கால தள்ளி சொந்தக்காரரோட இருக்கிறார். கவியை வந்து தள்ளிக் கூட்டிக்கொண்டு போய் கதைச்சவா. கவி அருமையான பிள்ள வேந்தன். அவரைக் கட்டிப் பிடிச்சு என்னவோ சொல்லி கன்னத்தக் கிள்ளி சமாளிச்சிப்போட்டா. சரி நீ கெதியா வந்து சேர்." என்று சொல்லிக்கொண்டிருக்கவே இலக்கியா வந்து கொண்டிருப்பதைக் கண்டவன், “இன்னும் சரியா பத்து நிமிசத்தில அங்க இருப்பன் கா!" என்றுவிட்டு வைத்தான்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
வரவேற்பு நடக்கும் மண்டபம் வந்து சேர எடுத்த அந்தப் பத்து நிமிடங்களும் இலக்கியா பெரும்பாலும் கதைக்கவில்லை. வேந்தன் குடும்பத்தினரும் தன் வீட்டில் மற்றவர்களும் தங்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற யோசனை அவளை பதற்றதோடுதான் இருத்தி வைத்திருந்தது. வேந்தன் சொன்னவைக்கு சுருங்கப் பதில் சொன்னாலும் அவன் என்ன சொன்னான் என்று கேட்டால் பேந்த பேந்த முழிப்பாள்.

காரை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டான் வேந்தன். மௌனமாக நடந்து வந்தவர்கள் வாசலில் கூடிநின்ற வேந்தன் குடும்பத்தை உண்மையில் எதிர்பார்க்கவில்லை. ஆங்காங்கே நின்றிருந்த வரவேற்புக்கு வந்திருந்த ஆண்கள் சிறுவர்கள் பார்வையும் இவர்களில்தான்.

அவர்களோடு கவியும் மலரும் அஜியும் கூட நின்றிருந்தார்கள்.

"கள்ளி!" ஓடிவந்த அஜி இலக்கியாவைக் கட்டிப்பிடித்து அவள் கண்களைக் கலங்க வைத்தாள்.

"லேசுப்பட்ட ஆளில்ல வேந்தன் நீங்க! மொத்தக் குடும்பத்தையும் ரெண்டு கிழமைகளா ஏமாத்தி இருக்கிறீங்க! அதும் என்னமாதிரி கடிபட்டுப் பட்டு!" விசயம் கேள்விபட்டதும் ஆச்சரியபட்டவள் அதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டாள். அவள் கலகலவென்று கதைத்தது அங்கொரு இலகுவான சூழலைத் தோற்றுவித்தது.

தொடர்ந்து வேந்தனின் சகோதரிகளிருவரும் கதைக்க, இலக்கியாவின் பார்வை அப்பம்மாவில். அவர் மட்டும் ஒரு வார்த்தை கோவமாகச் சொல்லிவிட்டாலும் அவளால் அதைத் தாங்கவே முடியாது.

"ராசாத்தி!" கண்கள் கலங்க அவளை விளித்துத் தன்னை நோக்கி வர வைத்தவர், "ஸ்ஸ்...இப்ப என்னத்துக்குக் கண் கலங்கிற? எப்பவும் நல்ல சந்தோசமா இருக்க வேணும் என்ன குஞ்சு!" கட்டிப் பிடித்துக்கொஞ்சி தழுதழுத்த மலர் கலங்கிய விழிகளை மடை திறக்க வைத்தார்.

"போதும் உங்கட செண்டிமெண்ட்...விடுங்கோ அவள!" இருவரையும் பிரித்துவிட்டாள் கவி.

"ஆன்ட்டி இந்தாங்க உங்கட மருமகள்! அதுக்கு முதல் இவள் என்ர செல்லத் தங்கச்சி, ஃபிரெண்ட் எல்லாம்." தன் பிடியிலிருந்த இலக்கியாவின் கரத்தை சுகுணாவின் கரங்களில் வைத்துச் சேர்த்துப் பிடித்துக்கொண்டாள். அவள் சொன்னதும் செய்ததும் எல்லோர் விழிகளையும் கலங்க வைத்திட்டு!

கலங்கிய விழிகளை இலாவகமாக மறைத்தது, அவளின் மலர்ந்த முகம். இலக்கியாவும் ரத்னாவும் ஒரு சேர கவியை அணைத்துக் கொண்டார்கள்.

இருவரையும் கட்டிப் பிடித்துவிட்டு விலகியவள், "வேந்தன் இந்தாங்க, இத உங்கட இலக்கியாவுக்குக் குடுங்க!" ரத்னா இவளிடம் கொடுத்த பரிசுப் பெட்டியைக் கொடுக்க, "அது உனக்குத்தான் வாங்கினது மா, நீயே வச்சிரு. என்ர மருமகளுக்கு இன்னொண்டு வாங்கிக் குடுக்கிறன்." ரத்னா.

"அந்த இன்னொண்ட எனக்கு வாங்கித்தாங்கோ, இது உங்கட மருமகளுக்கு!" வேந்தன் கையில் திணிக்க, இலக்கியாவைத் தோளோடு அணைத்தபடி அவள் கையில் வைத்தான் வேந்தன்.

இக்காட்சியை மட்டுமல்ல, திருமணத்தம்பதியோடு குடும்பமாக நின்று புகைப்படமெடுக்கையில், வேந்தன் கரம் பற்றுதலில் நின்றிருந்த இலக்கியாவை மனம் நிறைந்த மகிழ்வோடு விழிகள் கலங்க பார்த்து நின்றார்கள், மலரும் சுதர்சனும்.

மகள் நின்றிருக்கவேண்டிய இடம் அது, அவள் மனதுள் நிச்சயம் அழுவாள் வெளியில் சந்தோசமாக இருப்பது போல் நடிக்கிறாள் என்றதையே பிடித்துக்கொண்டு நின்ற சுகுணா முகம் இறுகப் பார்த்து நின்றார்.

கவியோ, மெல்லிய நீர்ப்படலம் விழிகளைப் போர்த்தியிருந்தாலும் தங்கையையும் வேந்தனையும் இரசித்தபடிதான் இருந்தாள். தன்னைப் பார்த்த தங்கையிடம் "கொஞ்சம் சிரி மாடு!" வாயசையும் பாவனையுமாகச் சொல்லி அவள் இதழ்களில் முறுவலை நெளிய வைத்தாள்.

‘காலத்துக்குள்ள சக்திபோல் எவருக்குண்டு! மாற்றங்கள் வரும், மனங்கள் மகிழும்!’ நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அந்த மண்டபத்தில் கோலோச்சி நிற்க, கோடானு கோடி உயிர்களில் தன்னை மிகவும் இரசித்த நேசம் நிறைந்த அவ்விருவரையும் வாழ்த்தும் விதமாக எதையாவது செய்தாக வேண்டுமே என்றெண்ணிய இயற்கை, பன்னீர் துளிகளாக வருணனை இறக்கியது, எப்படியாவது தொட்டு அவர்களை ஆசிர்வதித்துவிடுவோமென்று!

சுபம்!
 
Top Bottom