• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 17

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 17

அன்பிற்கினியன் அவளுக்கு அப்பொழுது மேற்கொண்டு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. அவளது இயல்புக்கு மாறாக எதையும் திணிக்க விரும்பாமல், அவளது மனவோட்டத்திற்கு மதிப்பளித்துச் சற்று விலகி நின்றான்.

இருந்தபோதிலும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் தென்னவனின் அப்பாவிடம் சிற்பிகாவிற்காக வேலைக்கு வந்தேன் என்று சொன்ன பொழுது, அவர் சொன்ன அந்த வார்த்தைகள் அவன் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருந்தன.

"அன்பு, ஒரு பொண்ணுக்கு நீ எதையாவது வாங்கித் தர்றேன்னா... அதுக்கு நீ அவளுக்குத் தகப்பனா இருக்கணும், இல்ல கூடப் பிறந்த அண்ணனா இருக்கணும். இது ரெண்டும் இல்லைன்னா, அந்த உறவுகளுக்கெல்லாம் மேலான புருஷன்ங்கிற முறை இருக்கணும். எந்தப் பந்தமும் இல்லாம நீ ஒரு பொண்ணுக்குச் செய்யறது முறை கிடையாது. நாளைக்கு இது ஊரு உலகத்துக்குத் தெரிய வரும்போது, உங்க ரெண்டு பேருக்கும் ஏதோ தப்பான தொடர்புன்னுதான் இந்தச் சனம் பேசும்" என்று அவர், அவன் பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருக்கும் பொழுதே தீர்க்கமாக அறிவுரை சொல்லியிருந்தார்.

அவருக்கு மங்கம்மாவின் குணத்தைப் பற்றி நன்கு தெரியும். அன்பிற்கினியன் சிற்பிகாவின் பக்கம் திரும்புவதைக் கூட மங்கம்மா ஒருபோதும் விரும்ப மாட்டார். அதனால், சின்ன வயதிலேயே அவளைத் தங்கையாகப் பார்க்கட்டும் என்ற நல்லெண்ணத்திலேயே அவர் அந்த அறிவுரையை வழங்கினார்.

ஆனால், அன்பிற்கினியனுக்கோ சிற்பிகா வெறும் பாக்கியத்தின் மகளாகவோ அல்லது மாரிமுத்துவின் தங்கையாகவோ மட்டும் தெரியவில்லை. அவளைத் தன்னிடம் அடைக்கலமான ஒரு ஜீவனாகவும், தான் மட்டுமே பாதுகாக்க வேண்டிய பொறுப்பாகவும் அவன் உணரத் தொடங்கினான்.

மாரிமுத்தைப் போல அவளைத் தங்கையாக ஏற்றுக்கொள்வதற்கு அவனது மனது இடம் கொடுக்கவில்லை என்பதற்குப் பின்னால் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. ஆனால், அவளை ஒரு தங்கையாகப் பார்த்தால் அவளுக்குச் செய்யும் இந்த உதவிகள் எல்லாம் ஒரு கடமையாகிப் போய்விடுமோ என்ற அச்சம் அவனுக்கு இருந்தது, அவனது ஒவ்வொரு செயலும் கடமையைத் தாண்டி, ஒருவித உரிமையும் தீவிரமான அக்கறையும், கணக்கிடமுடியா அன்பும் கலந்திருந்தது.

அவள் தன் பத்து வயதிலேயே பருவம் எய்திய செய்தியை, அந்தச் சின்னஞ்சிறு வயதில் யாரிடமும் சொல்லத் தெரியாமல் அவனிடம் மட்டுமே வந்து சொல்லியிருந்தாள். அவள் பெரியபிள்ளை ஆகிவிட்டாள் என்று தெரிந்தால், மங்கம்மா அவளை ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் வைத்திருக்க மாட்டார் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். மங்கம்மாவின் கோபத்திற்கும், சிற்பிகாவின் எதிர்காலத்திற்கும் பயந்தவன், அந்தப் பெரிய ரகசியத்தை மொத்தக் குடும்பத்திடமிருந்தும் மறைத்துவிட்டான்.

அதற்குப் பிறகு, மூன்று வருடங்கள் கழித்து ஒருநாள், சிற்பிகாவிற்குத் தன் நாள் தப்பி மாதவிடாய் முந்தியே வந்துவிட, அவளது உடுப்பில் கறையானதைக் கண்ட பாக்கியம், அவள் அப்பொழுது தான் வயதுக்கு வந்திருக்கிறாள் என்று தவறாக எண்ணிச் சடங்கு செய்யத் துடித்தார். சிற்பிகாவோ, "அதெல்லாம் எனக்கு ஒண்ணும் வேண்டாம்... உங்க அம்மா இதையெல்லாம் ஒருக்காலும் ஒத்துக்க மாட்டாங்க" என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

ஆனால் நீலகண்டனோ, 'நம் வீட்டில் ஒரு பெண்பிள்ளை வயதுக்கு வந்திருக்க, அப்படியே எப்படி விட முடியும்? சாமிக் குத்தம் ஏதும் ஆனால் அது குடும்பத்தைத் தான் ஆட்டும்' என்று சொல்லியிருந்தார்.

அதேசமயம், 'சிற்பிகா வயதுக்கு வந்தவுடன் மங்கம்மா அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடச் சொல்கிறார்' என்று அண்ணனிடம் சொல்லி பாக்கியம் அழுது புலம்பினாள்.

தன் தங்கை பாக்கியம் அழுவதைக் கண்டும், மகாலட்சுமி போன்ற சிற்பிகாவை வீட்டை விட்டு அனுப்ப மனமில்லாமலும் நீலகண்டன் மங்கம்மாவிடம் தன் கோபத்தைக் காட்டினார்.

மங்கம்மா தன் முடிவிலிருந்து பின்வாங்காததைக் கண்டு ஆத்திரமடைந்த நீலகண்டன், "அப்படியென்றால் நாங்கள் எல்லாரும் வேறு வீட்டுக்குப் போகிறோம், நீங்கள் இந்த வீட்டில் தனியே இருந்து கொள்ளுங்கள்" என்று மங்கம்மாவைப் பயமுறுத்த, வேறு வழியின்றி, இறங்கி வர வேண்டிய கட்டாயத்துடன், "சிற்பிகா இந்த வீட்டிலேயே இருக்கட்டும்" என்று வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொண்டார் மங்கம்மா.

மங்கம்மா சம்மதித்தாலும் சூழ்நிலை இறுகியே இருந்ததால், பாக்கியம் தன் ஆசைக்காகச் சிற்பிகாவிற்குப் புதுத்துணி மட்டும் எடுத்துக் கொடுத்து, வீட்டில் உள்ளவர்களை வைத்து நீர் ஊற்றும் சடங்கை மிக எளிமையாகச் செய்து முடித்தார். மங்கம்மா அங்கே முறைப்போடு நின்று கொண்டிருந்ததால், முறைப்பையனான அன்பிற்கினியனைச் சடங்கிற்கு வரும்படி அவர் பேச்சுக்குக் கூட அழைக்கவில்லை. அன்பிற்கினியனோ அந்த இக்கட்டான சூழ்நிலையை வேடிக்கை பார்த்தபடி, தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே அமைதியாகிவிட்டான்.

சிற்பிகா பெரியபிள்ளை ஆன பிறகு, மங்கம்மாவின் பார்வை இன்னும் கூர்மையானது. அன்பிற்கினியன் உறவில் ஏதேனும் மாற்றம் வந்திருக்கிறதா என்று அவரது லேசர் பார்வை அவர்கள் இருவரையும் அடிக்கடி வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் உறவு முன்போலவே இயல்பாகத்தான் இருக்கிறது என்று தெரிந்த பின்னரும், அவர்களைக் கண்காணிப்பதை அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை.

அவர் மாரிமுத்துவிடம் தனியாகப் பேசும்போதெல்லாம், "உன் தங்கையை எக்காரணம் கொண்டும் என் பேரனோட பழக விடாதே... அவங்க ரெண்டு பேரும் தனியாப் பேசுறதுக்கு நீ இடம் கொடுக்கக் கூடாது" என்று அடிக்கடி கட்டளையிடுவார். மங்கம்மா எதற்காக இவ்வளவு பயப்படுகிறார் என்பது மாரிமுத்துவுக்குத் தெரியாதது அல்ல.

'இவங்களுக்கு வேற வேலையே இல்லை' என்று அவன் சலித்துக்கொண்டாலும், ஒருவேளை அவர்கள் காதலில் விழுந்தால் இருவருக்குமே கண்ணீர்தான் மிஞ்சும் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. அதனால், அவர்கள் இருவரும் பேசிப் பழகுவதற்குச் சிறு சந்தர்ப்பத்தைக் கூடத் தராமல், சிற்பிகாவை எப்போதும் தன் நிழலிலேயே வைத்திருந்தான் மாரிமுத்து.

அவன் அப்படிச் சந்தர்ப்பம் கொடுக்காவிட்டால் என்ன? ஒரே வீட்டில் இருப்பவர்களுக்குப் பேசச் சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும்? அவளுக்கு ஏதேனும் வேண்டும் என்றால், தன் நோட்டுப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் எழுதி, அவன் படிக்கும் மேசையில் வைத்துவிடுவாள் சிற்பிகா. அவனும் அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்து, அவள் கண்ணில் படும்படியான ஓரிடத்தில் வைத்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் கடந்துவிடுவான்.

அதையும் மீறி இருவரும் பேச வேண்டும் என்றால், அல்லது அவளுக்குப் படிப்பில் ஏதேனும் சந்தேகம் கேட்க வேண்டும் என்றால், பெரியவர்கள் அனைவரும் தூங்கிய பின் இரவு பத்து மணி அளவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அந்த நேரத்தில் அவன் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்யும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அனைவரும் உறங்கியதை உறுதி செய்த பின், இவள் தன் கோரிக்கையை அவனிடம் மெல்ல விண்ணப்பிப்பாள். அடுத்த நாளே அவன் அதை எப்படிக் கஷ்டப்பட்டாவது நிறைவேற்றிவிடுவான்.

இப்படிச் சிறு வயதிலிருந்தே அவளது ஒவ்வொரு தேவையையும் உரிமையோடும், ரகசியமாகவும் நிறைவேற்றிக் கொண்டிருந்தவன், அந்தப் பிணைப்பிலேயே மனதிற்குள் அவளைத் தன் சரிபாதியாகவே வரித்துக்கொண்டான்.

இப்போது இதையெல்லாம் அன்பிற்கினியன் சொல்லக் கேட்ட மங்கம்மாவுக்குத் தலையே சுற்றிவிட்டது. வீட்டில் அவ்வளவு கடும் கண்காணிப்புடன் இருந்தும், "இவனை எங்கே கவனிக்கத் தவறினோம்?" என்பது புரியாமல் திகைத்துப் போய், "எப்போதிருந்து இந்தத் திருட்டுத்தனம் நடக்கிறது?" என்று ஆத்திரத்தில் வீடே அதிரக் கத்தினார்.

"நீங்கள் வேலியைப் பலப்படுத்தப் பலப்படுத்த, அதைத் தாண்ட வேண்டும் என்கிற வேகம் எனக்குள் அதிகமாகிக் கொண்டே போனது. அவளை நீங்கள் ஒரு மனுஷியாகக் கூட மதிக்காமல், இந்த வீட்டுக்கு வேண்டாதவள் என்று தள்ளியே வைத்திருந்தபோதுதான், அவளுக்கு நான் மட்டுமே உலகம் என்கிற எண்ணம் எனக்குள் வேரூன்றியது. ஒருவேளை நீங்கள் அவளை அன்போடு நடத்தியிருந்தால், கதை மாறியிருக்கும். ஆனால் உங்கள் வெறுப்புதான், அவளை ஒரு சாதாரண உறவு என்கிற இடத்திலிருந்து உயர்த்தி, என் உயிர் என்கிற இடத்தில் உட்கார வைத்தது!" என்று பதிலடி கொடுத்தான்.

மங்கம்மா தன் அதிகாரத்திற்கு நேர்ந்த முதல் தோல்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் பேரன் தனக்கு எதிராக இப்படி ஒரு தர்க்கத்தை முன்வைப்பான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவரது கண்கள் கோபத்தில் சிவந்தது.

நீலகண்டனோ, தன் மகன் ஒரு ஆணாக நிமிர்ந்து நின்று தன் காதலையும், அநீதியையும் தட்டிக்கேட்பதைக் கண்டு, உள்ளூற ஒரு பெருமிதத்தோடு மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மங்கம்மா சிற்பிகா தன் பேரனை அவளில் உடல் அழகைக் காட்டி வளைத்துவிட்டாள் எனும் கீழ்த்தரமான எண்ணத்துடன் அவளின் அழகை கோபத்துடன் முறைக்க, கூனிக் குருகி நின்று கொண்டிருந்த சிற்பிகாவின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினான்.

எந்தத் தப்பும் செய்யாமல் மங்கம்மாவின் பார்வையில் சிக்கி, சிற்பிகா கூனிக் குருகி நிற்பதைக் கண்டபோது அன்பிற்கினியனின் ரத்தம் கொதித்தது. எந்தப் பிரச்சனை வந்தாலும் பெண்ணிலேயே தப்பைக் கண்டுபிடிக்கும் இந்த உலகத்தின் பார்வையை நம்மால் மாற்றிவிட முடியுமா? என்ற ஆதங்கம் அவன் மனதை வாட்டியது.

அவளுக்காக இப்போது ஆவேசமாகப் பேசுவதை விட, அமைதியாக பிரச்சனையைக் கையாள்வதே அவளுக்குப் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தான். தன் கோபத்தைச் சற்று அடக்கி, ஒரு நிதானத்தைக் கொண்டு வந்தான்.

அந்த நிதானத்துடன் மங்கம்மாவை பார்த்து, "நான் அவளை என் உயிராக நினைப்பதற்கும், அவள் என்னை எப்படிப் பார்க்கிறாள் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நான் அவளுக்காகச் செய்த உதவிகள் எல்லாம் உங்கள் கண்ணுக்குத் திருட்டுத்தனமாகத் தெரியலாம். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அதுதான் மிகப்பெரிய ஆறுதலாகத் தெரிந்தது. அந்த ஆறுதல்தான் இன்று அவளை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது" என்று கூறியவன் தொடர்ந்து,

"அவளை எப்போதும் உங்கள் விஷநாக்கால் சுழற்றி அடித்துக்கொண்டே இருந்தால், மங்கம்மா பேரன் மேல் அவளுக்கு எப்படி ஈடுபாடு வரும்? ஆனால், அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்யும் என் மேல் அவளுக்கு ஒரு பெரிய நன்றியுணர்வு இருக்கிறது.

நான் உன்னை விரும்புகிறேன் என்று அவளிடம் நான் மேம்போக்காகச் சொன்னபோது கூட, அதை அவள் சட்டை செய்யாமல் உதறிவிட்டுத்தான் போனாள். இன்று அவளாக முன்வந்து சம்மதம் சொன்னதற்குக் காரணம் காதல் இல்லை, வெறும் நன்றிக்கடன் தான். என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னதும், எனக்கு உயிர்ப்பிச்சை போடத்தான் அவள் சம்மதம் சொல்லியிருக்கிறாளே தவிர, காதலால் அல்ல! இன்றைக்கு ஜோசியர் சொன்னது, அந்த முருகனே எங்களுக்காகப் போட்ட முடிச்சு!" என்றான்.

சிற்பிகா அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள். அவளது கண்களில் காதல் இருக்கிறதா அல்லது ஒரு தோழனுக்கான நன்றிக்கடன் இருக்கிறதா என்று யாராலும் கணிக்க முடியவில்லை.

அம்புஜத்திற்கு மங்கம்மா, "கோடிகளில் புரள்பவள்தான் உனக்கு மருமகளாக வருவாள்" என்று உருவேற்றி வைத்திருந்தார். கரித்துண்டுக்குப் பக்கத்தில் எந்த வகை வைரத்தை வைத்தாலும் அதன் நிறம் மங்கிப் போகுமே! அம்புஜமும் அப்படித்தான் தன் சுயத்தை மறந்து, மங்கம்மாவின் சொல்லுக்குச் செவிசாய்க்கும் பொம்மையாகிப் போனார்.

மங்கம்மாவின் தூண்டுதலால் அம்புஜம் கொண்டிருந்தது வெறும் பேராசை மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு பெருங்கனவு. ஆனால், இன்று அன்பிற்கினியனின் மனதில் சிற்பிகா இருப்பதைக் கேட்டதும், அடுக்கப்பட்ட சீட்டுக்கட்டுகள் சரிந்தது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட, "இது சும்மா ஒரு பரிகாரம்தான்டா... அதற்காக ஏன் உன் வாழ்க்கையைத் தொலைக்க நினைக்கிறாய்?" என்று கேட்டார்.

அன்பிற்கினியனுக்கோ தாயின் பேச்சைக் கேட்டு ஒருவித ஏளனச் சிரிப்புதான் வந்தது. சிற்பிகா பாக்கியத்தின் வளர்ப்பு மகளாக இருந்தவரை, அம்புஜத்திற்கு ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை. மாமியாருக்குப் பயந்து அவளிடம் அதிக பாசம் காட்டாவிட்டாலும், வெறுப்பாக நடக்காமல் நீ உன் இடத்தில் இரு, நான் என் இடத்தில் இருக்கிறேன் என்று ஒதுங்கிக் கொண்டவர் தான் அவர்.

ஆனால், அதே அநாதைப் பெண்ணைத் தன் மகன் திருமணம் செய்யப்போகிறான் என்றவுடன், தன் சுயநலக் குணத்தை அப்பட்டமாகக் காட்டும் தாயைக் கண்டு அவனது உதட்டில் ஒரு இகழ்ச்சிப் புன்னகை தவழ்ந்தது.

தன் தாயிடம் கொண்டிருந்த பாசம் முழுதும் அந்த நொடி காணாமல் போக, "அவளை ஒரு மனுஷியா மதிக்காத உங்க யாருடைய பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!" என்று வெடுக்கென்று சொன்னவன், தன் முடிவில் எள்ளளவும் மாற்றமில்லை என்பதில் இமயமலையாய் உறுதியாக நின்றான்.

மங்கம்மா ஆத்திரத்தில், "இந்தப் பூசையெல்லாம் முடியட்டும், இவளை எங்கேயாவது தொலைத்துக் கட்டுகிறேன்!" என்று கத்தினார்.

"நான் உங்கள் பேரனாக்கும்! உங்களுக்கு அப்படியொரு வாய்ப்பை நான் வழங்குவேனா?" என்று கேட்ட அன்பிற்கினியன், "அவள் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதற்கும், தன் கல்லூரியைத் தொடர்வதற்கும் ஒரு ஸ்பான்சரை ஏற்பாடு செய்துவிட்டேன். இனி அவள் அவர்களின் பொறுப்பு. உங்களால் அவளைத் தொடக்கூட முடியாது. ஏற்கனவே அவர்களிடம் உங்களால் அவள் உயிருக்கு ஆபத்து என்று ஒரு பிட்டைப் போட்டு வைத்திருக்கிறேன்!" என்று தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் காண்பித்தான்.

மங்கம்மா தன் பேரனைத் திகைப்போடு பார்த்தார். நீலகண்டனோ, "சபாஷ் மகனே!" என்று மனதுக்குள் அன்பிற்கினியனுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தார். தன் மகனின் இந்தத் துணிச்சலும், முன்னெச்சரிக்கையும் அவருக்கு ஒருவித நிம்மதியைத் தந்தன.

அம்புஜமோ, மங்கம்மா இப்போது தேவையில்லாத விஷயங்களைப் பேசி, கல்யாணத்திற்குச் சம்மதித்திருக்கும் சிற்பிகாவைக் குழப்பிவிடப் போகிறார் என்ற அச்சத்தோடு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர எண்ணி, "மாமி... இப்போது கல்யாணத்தை மட்டும் பார்ப்போம், மற்றதைப் பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று அவசரமாகச் சொன்னார்.

மாரிமுத்து ஆத்திரத்துடன், "போதும் நிறுத்துங்க! என் தங்கச்சி ஒன்னும் நீங்க நினைச்சப்பக் கட்டிட்டு, காரியம் முடிஞ்சதும் கழட்டி விடுற கறிவேப்பிலை இல்லை. சிற்பி... வா போயிடலாம்!" என்று அவள் கையைப் பிடித்து வாசலை நோக்கி இழுத்தான்.

சிற்பிகா நகராமல் "அண்ணா... நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அன்புக்காகவும், மாமாவுக்காகவும் தான் சம்மதிச்சேன். இவங்க என்னைத் துரத்தணும்னு நினைச்சாலும், நான் போகணும்னு நினைச்சா தான் போக முடியும். அதுவரைக்கும் இந்தச் சிற்பிகாவை யாராலும் அசைக்க முடியாது" என்று மங்கம்மாவின் கண்ணைப் பார்த்துச் சொன்னாள்.

மங்கம்மாவோ கண்ணாலேயே சிற்பிகாவைப் பொசுக்கிவிடுவது போலப் பார்த்தார். சிற்பிகாவோ எதற்கும் அஞ்சாமல், எவ்விதச் சலனமும் இன்றி திண்ணெட்டாக நின்றாள்.

இருவரும் ஒரு கைகலப்புக்கே தயாராகிவிடுவார்கள் என நினைத்த நீலகண்டன், "அம்மா... இதுவரைக்கும் நீங்க ஆடுன ஆட்டம் போதும். வர்ற முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைப்போம்!" என்றவர், பின் அழுதுகொண்டு நின்றிருந்த பாக்கியத்தைப் பார்த்து, "பாக்கியம்... உன் பொண்ணு ஒரு வைரம். அவள் என் வீட்டு மருமகளாக வருவது என் புண்ணியம்!" என்றார் உறுதியாக.

"அண்ணா... அவள் இன்னும் சின்னப் பிள்ளைதானே?" என்று பாக்கியம் விருப்பமில்லாமல் இழுக்க, "நாம் அவளைக் கவனிக்கத் தவறிய பொழுதுகளில், அவளை முழுமையாகப் பார்த்துக்கொண்டவனுக்குத்தான் என்ன செய்யனும் என்று தெரியும்!" என்று நீலகண்டன் முடிவாகச் சொன்னார்.
 
Top Bottom