• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 18

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 18

அந்த அறையில் இதுவரை நடந்த அத்தனை களேபரங்களையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அவர்களின் வீட்டு விஷயத்தில் தலையிடாமல் மௌனமாக இருந்த ஜோதிடர், "இதுதான் விதி என்றால் அப்படியே நடக்கட்டும்! நாளைக்கு அதிகாலையிலேயே நல்ல முகூர்த்த நேரம் இருக்கிறது, கல்யாணத்தை முடித்துவிடுங்கள். இனி என் வேலை ஒன்றும் இல்லை. நான் வெளிக்கிடுறேன்" என்றபடி சோபாவிலிருந்து எழுந்து தன் பையைத் தோளில் மாட்டிக்கொண்டார்.

வாசலை நோக்கி நடந்தவர், தற்செயலாகத் தனக்கு மிக அருகில் நின்ற சிற்பிகாவின் தலையில் கை வைத்து, "உன் விதி இன்றையிலிருந்து மாறுதுடா, பார்த்துக்கோ!" என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு, ஒரு மர்மப் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தார்.

அந்த மர்மமான புன்னகைக்கும் காரணம் இருந்தது. அன்பிற்கினியனுக்கு இரு தாலி ஏறுமே ஒழிய, மனைவி ஒருத்திதான் என்று அவனது ஜாதகம் உறுதியாகச் சொல்லியது. விதியின் விளையாட்டு என்னவென்று பொறுத்திருந்து பார்ப்பதற்காக, அந்த விஷயத்தை மற்றவர்களிடம் பகிராமல் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்

மங்கம்மாவிற்குச் சிற்பிகாவின் திமிரை அடக்க இதுவே சரியான வழியாகத் தெரிந்தது. கல்யாணத்தை மட்டும்தானே செய்து வைக்கப்போகிறார்? அவளைத் தன் பேரனுடன் வாழவா விட்டுவிடப் போகிறார்? எனவே, உடனே சரி என்று சம்மதம் சொல்லிவிட்டார்.

"கோயிலில் கல்யாணம் வைக்கலாமா?" என்று அம்புஜம் மாமியாரிடம் கேட்க,

"எதற்கு? உன் பையனுக்கு கல்யாணம் முடிந்துவிட்டது என்று ஊர் முழுக்கத் தெரிய வேண்டுமா? அது தெரிந்தால் அவனுக்கு பிறகு கல்யாணம் பேசும் பொழுது இரண்டாம் கல்யாணம் என்று பேச்சுவரும். இது சும்மா பரிகாரம் அவ்வளவு தானே.. நம் வீட்டுச் சாமியறையே போதும்! இந்த மூதேவியை தனக்கு கல்யாணம் ஆகிட்டு என்று சொன்னாலும் நம்ம பையன் தான் அவளுக்கு தாலியைக் கட்டினான் என்று வெளியே வாயைத் திறக்கக்கூடாது என்று சொல்லிவை.." என்றவர்,

சிற்பிகாவை வஞ்சகமாகப் பார்த்தபடி, "நாளையிலிருந்து நீ அதிகாலையில் பச்சைத்தண்ணீரில் குளித்து, நம்ம முருகனுக்கு நெய் விளக்கேத்தி சாமி கும்பிட்டு, மாலையில் கந்தசஷ்டிக் கவசம் படித்து என்று கடுமையாக விரதமிருக்க ஆரம்பிக்க வேண்டும். இரவில் வெறும் தரையில் தான் படுக்கவேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சரவணபவ சொல்லி என் பேரனின் உயிரைக் காப்பாற்றித் தரும் படி வேண்டு, முக்கியமா பச்சைத் தண்ணீர் கூட நாக்கில் படக்கூடாது, தெரியுமல்லவா?" என்றார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிற்பிகாவை பட்டினிபோட்டே கொல்லத் திட்டமிடுகிறார் என்று உசாராகிய அன்பிற்கினியன், "பட்டினியெல்லாம் கிடக்க வேண்டிய அவசியமில்லை. நீ மதியம் ஒரு வேளை அரிசி உணவு உண்ணு" என்றான். சிற்பிகாவும் சரியென்று தலையை அசைக்க, மங்கம்மா இதை இப்படியே விடமாட்டார், ஏதாவது தகிடுதத்தம் செய்வார் என்று எண்ணியவன்,

"நானும் நாற்பத்தியெட்டு நாள் விரதம் இருக்கப் போகிறேன். அவளுக்கு நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்களோ, அதையே நானும் செய்வேன். அவள் என் ஆயுளுக்காக விரதம் இருக்கட்டும், நான் அவளுடைய ஆயுளுக்காக விரதம் இருப்பேன்" என்று உறுதியாகச் சொன்னான்.

பாக்கியத்திடம் திரும்பி, "அத்தை... இனிமேல் எங்க சாப்பாட்டுப் பொறுப்பு உங்களுடையது. நீங்கள் இந்த வீட்டில் சமைப்பதை மட்டும்தான் நான் சாப்பிடுவேன்!" என்றான்.

பாக்கியத்தின் கண்களில் கண்ணீர் துளிர்க்க, சிற்பிகாவுடன் சேர்ந்து அவனும் ஏன் விரதமிருந்து கஷ்டப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், "அவளுடைய விதிதான் அப்படி இருக்கிறது என்றால்... உனக்கென்னடா? நீ நன்றாகச் சாப்பிடு" என்றார். சுயநலம் மலிந்து கிடக்கும் அந்த வீட்டில், மற்றவர் துயரம் கண்டு உருகும் இந்தப் பண்பு மங்கம்மாவுக்கோ அம்புஜத்திற்கோ சுட்டுப் போட்டாலும் வராது. அந்தத் தூய்மையான அன்புதான், பாக்கியத்திற்காகச் சிற்பிகாவை அந்த வீட்டில் எவ்விதக் குறையுமின்றி நிம்மதியாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அன்பிற்கினியனுக்குள் ஆழமாக விதைத்தது.

தன் தந்தையிடம் திரும்பி, "அப்பா, எனக்கு நாளைக்குத் தாலி வாங்குவதற்கு கொஞ்சம் பணம் கடனாகக் கொடுங்கள். நான் வேலைக்குப் போய் அதைத் திரும்பத் தந்துவிடுகிறேன்" என்றான்.

"ஏண்டா கடன்?" என்று நீலகண்டன் கேட்க, "என் பொண்டாட்டி என் உழைப்பைத் தவிர வேறு யாருடைய உழைப்பிலும் வாழத் தேவையில்லை!" என்று சொன்னான்.

சிற்பிகாவிடம் வந்தவன், "சின்ன வயதில் கல்யாணம் செய்கிறானே, என் படிப்பு என்ன ஆகுமோ என்று நீ யோசிக்கத் தேவையில்லை. உன் படிப்பு முடியும் வரை இந்த வீட்டில் இவ்வளவு காலம் எப்படி இருந்தாயோ, அப்படியே இருந்து கொள்" என்று தைரியம் கொடுத்தான்.

"வா மாரி, நாம் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாம்" என்று அவனை அழைத்துக்கொண்டு கிளம்பியவன், பாக்கியத்திடம், "காட்டில் விட்டால் கூட அங்கிருக்கும் மிருகங்களின் விஷம் குறைவு... ஆனால் இங்கே இருப்பவர்களோ..." என்று மங்கம்மாவையும் அம்புஜத்தையும் வெறுப்போடு பார்த்துவிட்டு, "பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறிச் சென்றான்.

அவன் கிளம்பிச் செல்வதைப் பார்த்தபடி நீலகண்டன் அம்புஜத்திடம், "நீ ஜோசியர் சொன்ன ஒரு விஷயத்தைக் கவனிக்க மறந்துவிட்டாய். உன் பையன் இன்னும் ஐந்து வருஷத்தில் உன்னை விட்டுப் பிரிந்து போய்விடுவானாம்! இங்கே சில ஆட்கள் ஆடுகிறார்கள் என்பதற்காக நீயும் சேர்ந்து ஆடத் தேவையில்லை. கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடக்கப் பார்!" என்று எச்சரித்தார்.

'என் பையன் பெண் மோகத்தில் பேசுகிறான். அந்த மோகம் தெளிந்தபின் தன் வழிக்கு வந்து அம்மா என்பான். பையனாவது என்னை விட்டுப் போவதாவது!' என்று எண்ணிய அம்புஜம், "அது நடக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்" என்று நீலகண்டனிடம் அலட்சியமாகச் சொன்னார்.

தன் வளர்ப்பு மற்றும் பாசத்தின் மேல் அவருக்கு இருந்த அந்தத் தறிகெட்ட நம்பிக்கை, தன் மகனின் மனமாற்றத்தை உணர விடாமல் அவர் கண்களை மறைத்தது.

பாக்கியம் தன் வளர்ப்பு மகளைக் கூட்டிக்கொண்டு அறைக்குச் சென்றார். அங்கே நிலத்தில் அமர்ந்து, "என் கண்ணில் விழுந்து இப்படி ஒரு நிலைமைக்கு உன்னைக் கொண்டு வந்து விட்டுவிட்டேனே!" என்று கதறி அழுதார்.

அவர் மடியில் படுத்திருந்த சிற்பிகாவிற்கும் அடக்க முடியாத கண்ணீர் கண்களிலிருந்து கொட்டின. உண்மையில், தனக்க்காக எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் அவன் மேல் சிற்பிகாவுக்கும் ஒருவித ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.

ஆனால் தனக்கு சிறுவயது என்பதால் அதனை காதல் என்று அவள் முடிவு செய்யவில்லை. அவனுக்கு உயிருக்கு ஆபத்து என்கையில் அவனின் உயிரைத் தன்னால் காப்பாற்ற முடியும் எனும் பொழுது அதைத் தவறவிடக் கூடாது என்பதால்தான் அவள் சம்மதித்தாள். இருந்த போதிலும் மங்கம்மா தன்னை நிம்மதியாக வாழ விடமாட்டார் என்கிற கவலை அவளை வாட்டியது.

இரவு அன்பிற்கினியனுக்கும் உண்ணும் மனநிலை அறவே இல்லை. நெஞ்சுக்குள் ஆத்திரமும், சிற்பிகாவைப் பற்றிய கவலையும் அலைமோதின. இருந்தாலும், தான் மனதளவிலும் உடலளவிலும் திடமாக இருந்தால் மட்டுமே சிற்பிகாவைப் பாதுகாக்க முடியும் என்று உணர்ந்து அவன் உண்ண வந்தான்.

அன்பிற்கினியனுக்குச் சாப்பாடு பரிமாற அம்புஜம் மெல்ல அருகே வந்தபோது, அவர் கையைச் சற்றும் யோசிக்காமல் தடுத்தான்.

தன் தாயிடம் பேச்சு வைத்துக்கொள்ளவே அவனுக்குப் பிடிக்காமல், "நானே பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, தானே உணவைப் பரிமாறிக் கொண்டு உண்டுவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

மறுபுறம், பாக்கியம் ஒருபுறம் மடியில் சிற்பிகாவையும், மறுபுறம் தன் தோளில் மாரிமுத்துவையும் சாய்த்தபடி அமைதியாகக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். அம்புஜம் தயக்கத்துடன் அவர்களைச் சாப்பிட அழைத்தபோது, அவர் அம்புஜத்தின் முகத்தையே பார்க்க விரும்பாமல் "சாப்பாடே வேண்டாம்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

பாக்கியம் வரவில்லை என்றதும், அம்புஜம் மாரிமுத்துவையும் சிற்பிகாவையும் அழைக்க முயன்றார். ஆனால் மாரிமுத்துவோ ஆத்திரத்தின் உச்சியில், "உங்க மூஞ்சியையே எனக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை... இடத்தை காலி பண்ணுகிறீர்களா?" என்று அவன் முகத்தில் அடித்தது போலச் சொல்ல, அம்புஜம் பதில் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

நீலகண்டனோ தன் தாயினதும், மனைவியினதும் பேச்சை கேட்க மனமில்லாமல் மில்லிலேயே தங்கிவிட்டார். அதை மனைவியிடம் போனில் சொல்லக் கூடப் பிடிக்காமல், அங்கிருந்த வேலையாள் மூலமாகத் தகவல் சொல்லி அனுப்பிவிட்டார்.

அம்புஜமோ ஒரு நாளில் தன் குடும்பம் தன்னை ஒதுக்கித் தள்ளிவிட்டதை எண்ணிக் கண்ணீர் சிந்தியவருக்கு, தன்னுடைய நடத்தையே தன் தனிமைக்குக் காரணம் என்பது புரியவில்லை.

எல்லோரும் வேதனையிலும் குழப்பத்திலும் இருக்க, மங்கம்மாவோ இரவு உணவை உண்ணப் பிடிக்காமல் தன் அறையில் அமர்ந்திருந்தார். அவரது கேடுகெட்ட மனமோ, "எப்படி அன்பிற்கினியனையும் சிற்பிகாவையும் பிரித்து விடுவது?" என்றே வஞ்சகமாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது.

அப்படியாக அந்த இரவில் வீட்டிலுள்ளவர்கள் அனைவருமே ஆளாளுக்கு ஒரு சிந்தனையில் தூக்கமின்றித் தவித்தார்கள்.

***
அதிகாலையில் ஜோசியர் சொன்ன அந்தப் பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு, சிற்பிகா தலைகுளித்துவிட்டு ஒரு சாதாரணச் சுடிதாரிலேயே வெளியே வந்தாள். மனதில் பாரம் அதிகமிருக்க அந்த குளிர் நீர் அவளை எதுவும் செய்யவில்லை அவளைப் பின்தொடர்ந்து வந்த பாக்கியம் மற்றும் மாரிமுத்துவின் முகங்களில் தூங்காததால் கண்கள் சிவந்து செவ்வரி ஓடிக் காணப்பட்டது.

இந்தத் திருமணத்தில் அன்பிற்கினியன் மட்டுமே ஒருவிதப் புத்துணர்ச்சியோடு காணப்பட்டான். அறையிலிருந்து வரும் பொழுதே புதுமாப்பிள்ளையாக வேட்டி சட்டையுடன் வந்தவனைக் நிமிர்ந்து பார்த்த சிற்பிகா, அவன் கண்களில் தன் திருமணத்திற்கான சந்தோசம் கண்களில் தெரிவதைக் கண்டு "அவனாவது சந்தோசமாக இருக்கிறானே.." என மீண்டும் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.

அந்த நேரத்தில் தன் மகனின் திருமணத்தைப் பார்ப்பதற்காக நீலகண்டனும் மில்லில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இரவு முழுவதும் கண்விழித்துக் சதிவலையை எப்படிப் பின்னலாம் என்று திவிரமாக யோசித்தபடியிருந்த மங்கம்மா தூக்கக் கலக்கத்தில் அந்த நேரம் அசந்து தூங்கிவிட்டார். அம்புஜம் அலாரம் வைத்தும், அந்தச் சத்தம் அவர் காதுகளில் விழவே இல்லை. 'இதுதான் தெய்வ சங்கல்பமோ!' என்று எண்ணிய நீலகண்டன், சாமியறைக்கு தன் மகனையும் வருங்கால மருமகளையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, பாக்கியமும், மாரிமுத்துவும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

நீலகண்டன் முதலில் சிற்பிகாவை விளக்கு ஏற்றப்பணித்தவர், பின் அன்பிற்கினியனிடம், "வா அப்பா... நான் தாலி எடுத்துத் தருகிறேன், நீ கட்டு. இந்தக் கல்யாணம் என் பையனுக்குக் காலம் முழுமைக்கும் நிலைக்க வேண்டும் என்ற ஆசியுடனும் என் பையன் தீர்க்காயுசாக வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டும் நல்ல மனதோடு இதைக் கொடுக்கிறேன்" என்று உருக்கமாகச் சொன்னவர், முதல் நாள் இரவே அன்பிற்கினியன் வேண்டிக் கொண்டு வந்திருந்த தாலியைச் சாமித்தட்டில் இருந்து எடுத்துத் தந்தார்.

அன்பிற்கினியன் எவ்விதத் தயக்கமும் இன்றிச் சிற்பிகாவின் கழுத்தில் மூன்று முடிச்சுகள் இட்டு, அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். நீலகண்டன் மாரிமுத்துவிடமும், பாக்கியத்திடமும் மலர்கள் சிலதைக் கொடுத்து அவர்களை ஆசீர்வாதம் பண்ணச் சொல்ல அவர்களும் கண்கள் கலங்க அதை அன்பிற்கினியன், சிற்பிகா மேல் தூவினார்கள்.

அன்பிற்கினியனும் சிற்பிகாவும் நீலகண்டனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வேண்ட அவர்களைத் தூக்கிவிட்ட நீலகண்டன் சிற்பிகாவிடம், "நீ மட்டும் பதினெட்டு வயது வந்துவிட்டாய் என்றால் மாமா இந்த ஊரே கொண்டாடும் வண்ணம் இந்தக் கல்யாணத்தை நடத்துவேன்" என்றார்.

அடுத்து தம்பதிகளாக பாக்கியத்தின் காலில் விழ "நல்லாயிருக்கனும்" என்று வாழ்த்தினார்.

எல்லாம் முடிந்து திரும்ப வரவேற்பறைக்கு வந்த நீலகண்டன் வெளியே இன்னும் பொழுது புலராமல் இருக்கக் கண்டு, "இன்னும் வெளிச்சம் வரவில்லை, யாரும் வந்திருக்க மாட்டார்கள். கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கும்... பரவாயில்லை, இப்போதே நம் முருகனைப் போய் தரிசித்துவிட்டு ஓடி வாருங்கள்" என்று மணமக்களை அனுப்பி வைத்தார்.

அவர்களுடன் மாரிமுத்துச் செல்லக் கிளம்ப, "நீ எதுக்கு நந்திமாதிரி.. நீ வீட்டிலேயே இரு" என்று நீலகண்டன் அவனை அடக்கிவிட்டார்.

பாக்கியமோ, "மங்கம்மா எழுந்து வந்தால் தன்னையும் சேர்த்துப் பேசுவாரே" எனப் பயந்து கையைப் பிசைந்துகொண்டு நிற்க, அவரிடம் நீலகண்டன், "அணை உடைந்துவிட்டது பாக்கியம்... இனி சாண் ஏறினால் என்ன, முழம் ஏறினால் என்ன? போ, ஏதேனும் வேலையிருந்தால் பார்!" என்று எதார்த்தத்தைச் சொல்லி அனுப்பி வைத்தார்.

"எப்படி அண்ணா உங்களால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது?" என்று மனது பொறுக்காமல் பாக்கியம் கேட்க, "என் பிள்ளை மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம். அவன் தன் வாழ்க்கையில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் காப்பாற்றுவான் என நம்புகிறேன். நீயும் உன் மருமகனை நம்பு!" என்றார் நீலகண்டன்.

பாக்கியம் புரியாமல் "எப்படி?" என்று கேட்க, "உன் மகளுக்காக என் பையன் லட்சக்கணக்கில் பணம் சேர்க்கவில்லை. ஆனால், தான் இல்லாவிட்டாலும் அவள் வாழ வேண்டும் என்பதற்காகத் தன் பதினைந்து வயதிலிருந்தே இன்சூரன்ஸ் கட்டிக்கொண்டிருக்கிறானாம். நேற்று தென்னவனின் அப்பா சொல்லித்தான் எனக்கே தெரியும். அதுமட்டுமா? அவள் எப்போது மலையிலிருந்து விழ முயன்றாளோ, அன்றிலிருந்தே அவளைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க இடம் தேடிக்கொண்டிருக்கிறான். தென்னவனின் அப்பாவைக் கூடக் கேட்டிருக்கிறான். நான் அவளை என் மகளாகப் பார்க்கிறேன் என்றாலும், பெண் துணையில்லாத வீடு அவளுக்குச் சரி வராது என்று அவர் மறுத்துவிட்டார்."

"இப்போது அவளது படிப்புக்காக ஏற்பாடு செய்திருக்கும் ஸ்பான்சர் பெரிய இடமாம். கஷ்டப்பட்ட பிள்ளைகளைப் படிக்க வைப்பதோடு, அவர்களுக்கு வேலையும் கொடுத்துப் பொறுப்பேற்றுக் கொள்வார்களாம். முக்கியமாக அவள் அங்கே நிம்மதியாக இருக்கலாம் என்று சொன்னார்" எனச் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

“அண்ணா... படிப்பு எல்லாம் சரிதான், ஆனா அவளோட கல்யாண வாழ்க்கை என்ன ஆகும்? அம்மா அவளை நிம்மதியா வாழ விடுவாங்களா?" என்று பாக்கியம் தவிப்போடு கேட்டார்.

அவரை அமைதிப்படுத்திய நீலகண்டன், "அதை அன்பிற்கினியன் பார்த்துப்பான் பாக்கியம். நீ இப்படிப் பயந்து போய், உன் மகளையும் பயமுறுத்தாதே.. அந்தப் பயத்தை அவள் முகத்தில் பார்க்க வேண்டும் என்றுதான் அம்மா காத்துக்கிட்டு இருக்காங்க. அந்தப் பயமே அவங்களுக்குக் கிடைச்ச வெற்றியாகிடும். அதனால் நீயும் உன் மகளும் இப்போதைக்குத் தைரியமா இருங்க... அவள் இனி எதிர்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு!" என்றார் அழுத்தமாக.

அன்பிற்கினியன் சிற்பிகாவை தன்னுடைய தந்தை தனக்கு வேண்டித் தந்த புல்லட்டிலேயே கோயிலுக்கு அழைத்துச் சென்றான். போகும் வழியெங்கும் அன்பிற்கினியவனின் உள்ளம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அந்த உணர்வுகளை சிற்பிகாவிடம் சொல்ல வேண்டும் என்றுதான் அவன் நினைத்தான். ஆனால் சிற்பிகாவோ, எவ்விதச் சலனமும் இன்றி ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போலத் தெரிந்தாள். அவளது அந்த அமைதியைக் கண்டு, அவளது அந்த அமைதி, அவன் சொல்ல வந்த வார்த்தைகளைத் தொண்டையிலேயே நிறுத்திவிட்டது.

ன் கழுத்தில் இப்போது அன்பிற்கினியனால் கட்டப்பட்ட தாலி தொங்கிக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு கூட அவளிடம் இல்லை. அவள் விழிகள் சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. 'அவசரப்பட்டு இப்போது எதையும் பேசி அவளை இன்னும் சங்கடப்படுத்தக் கூடாது' என்று நினைத்தவன், அந்த மௌனத்தையே தனக்கும் துணையாக்கிக் கொண்டான்.

அவளின் இஷ்ட தெய்வமான முருகனின் சந்நிதியில் நின்றபோதும், அவள் இயந்திரத்தனமாகவே கும்பிட்டாள். அவனது உள்ளம் தான் விரும்பியவளே தனக்கு மனைவியாக வந்ததை எண்ணி முருகனிடம் நன்றி சொல்லிக் கொண்டது. மங்கம்மா எழும்புவதற்கு முன்பே வீடு செல்ல வேண்டும் என்பதால் இருவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வேகமாக வீடு வந்து சேர்ந்தனர்.
 
Top Bottom