• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 19

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 19

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், எதையும் காட்டிக்கொள்ளாமல் தன் பாடசாலை சீருடையை மாற்றி வந்தவள், பாக்கியத்திடம் "அம்மா... நான் பள்ளிக்கூடம் கிளம்புகிறேன்" என்றாள் மிகச் சாதாரணமாக.

இன்று அதிகாலையில் தன் கழுத்தில் ஏறிய அந்தத் தாலி, அவளது கல்விக்கோ அல்லது எதிர்காலக் கனவுக்கோ எவ்விதத்திலும் தடையாகிவிடக் கூடாது என்பதில் அவள் எவ்வளவு உறுதியாக இருக்கிறாள் என்பது அவளது அந்த ஒற்றை வரியில் அங்கேயிருந்தவர்களுக்குப் பளிச்சென்று தெரிந்தது.

பாக்கியம் என்ன சொல்வது என்று புரியாமல் நீலகண்டனைப் பார்க்க, அவரோ "என் முகத்தை ஏன் பார்க்கிறாய்? பிள்ளை வழமையா உன்கிட்ட தானே சொல்லிட்டுப் போவாள்... போயிட்டுவாம்மா என்று சொல்லாமல் என் முகத்திலா பதில் இருக்கு?" என்றார் எதார்த்தமாக.

அன்பிற்கினியனுக்கோ அவள் திடமானவள் என்று தெரியும் என்றாலும், திருமணமான சில நிமிடங்களிலேயே இவ்வளவு திடமாக அவள் பாடசாலைக்குக் கிளம்புவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அவளது அந்த மனவலிமையை ஒரு வியப்பான பார்வையாளனாக இரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது மாரிமுத்துவும் பாடசாலைக்குத் தயாராகி வந்தவன், "அம்மா நானும் இன்னைக்கு விரதம்!" என்று சொல்ல, "அப்ப ஆருக்குடா விடியச் சாப்பாடு செஞ்சேன்?" என்று பாக்கியம் ஆதங்கமாகக் கேட்டார்.

"நீங்க உங்க பாசக்கார அம்மாக்கு கொடுங்க... அவங்க அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டு, நம்ம சிற்பியோட வாழ்க்கையை எப்படி நாசமாக்கலாம் என்று தெம்பாக யோசிக்கட்டும்!" என்று மாரிமுத்து சொன்னான்.

பாக்கியத்தின் உள்ளே கனன்று கொண்டிருந்த கோபம் வெளிப்பட, "நான் சமைச்ச சாப்பாட்டை எல்லாம் மண்ணுக்குள் குழி தோண்டிப் புதைக்கிறேன்" என்றார்.

"அட! கோபப்படத் தெரியாத என் அத்தையா இப்படிச் சொன்னது?" என்று அன்பிற்கினியன் வியப்பாகக் கேட்க,

"கோபப்படத் தெரியாமல் இருந்ததால் தான் எல்லோரும் என்னை ஏமாளியாக்கி வைச்சிருக்காங்க" என்ற பாக்கியம், நீலகண்டனிடம் திரும்பி, "அண்ணா... நான் இனி என் பிள்ளைகள் சாப்பிட மட்டும்தான் சமைப்பேன். உன் வீட்டம்மாகிட்டச் சொல்லிடு!" என்றார்.

பின்பு, அங்கே பாடசாலைக்குக் கிளம்பவா வேண்டாமா என்று தயங்கி நின்ற சிற்பிகாவைப் பார்த்து, "அம்மா... நான் உனக்காக இருக்கேன். நீ படிக்கிற வேலையைப் பார். எவன் என்ன செய்யுறான் என்று ஒரு கை பார்க்கலாம்!" என்று தைரியம் சொல்லி அவளை மாரிமுத்துவோடு அனுப்பி வைத்தார்.

நீலகண்டன் அன்பிற்கினியனிடம், "நீ கல்லூரிக்குப் போகலையா?" என்று கேட்டார். "போகப்போறேன் அப்பா... சிற்பியை நான் விரதம் முடிஞ்ச பிறகு அந்த ஆச்சிரமத்துக்கு அனுப்பிடுவேன். ஆனால் சிற்பி இல்லாமல் அத்தையும் மாரியும் இருப்பாங்களாப்பா?" என்று தன் கவலையைப் பகிர்ந்தான் அன்பிற்கினியன்.

"என் பொண்ணு அங்க போனால் நிம்மதியாக இருப்பாள் என்றால் எனக்குச் சம்மதம்டா... மாரி தான் அவளைப் பிரிஞ்சு இருக்கமாட்டான்" என்று பாக்கியம் தயங்கினார்.

"நான் என்ன செய்யலாம் என்று பார்க்கிறேன்" என்று அன்பிற்கினியன் சொல்ல, ஏற்கனவே அவன் தோள் மேல் சிற்பிகா எனும் பொறுப்பை ஏற்றி வைத்திருக்கும்போது, மாரிமுத்துவின் பொறுப்பையும் அவன் மேல் சுமத்த நீலகண்டனுக்குப் பிடிக்கவில்லை.

"நீயும் படிக்கிற வேலையைப் பார். நான் கருப்பண்ணாவைக் கூட்டிட்டுப் போய் மாரிமுத்துவையும் அந்த ஆச்சிரமத்தில் சேர்த்துக்கிறீங்களா என்று அந்த ஸ்பான்சரோட பேசிப் பார்க்கிறேன்" என்றார்.

"அங்கே ஆதரவற்றவங்களைத் தான்பா வைச்சிருப்பாங்க..." என்று அன்பிற்கினியன் நினைவுபடுத்த, "நான் பேசிப் பார்க்கிறேண்டா... எனக்குச் சிற்பியைத் தனியே விட மனசில்லை. அங்கே ஆண்களுக்குத் தனியே பெண்களுக்குத் தனியே விடுதி இருந்தாலும், மாரியும் அங்கே இருந்தால் பள்ளிக்கூடத்தில் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்பாங்க. அவளுக்கு ஒன்றென்றால் அவன் துணையா இருப்பான்" என்றார் நீலகண்டன்.

நீலகண்டன் அந்த வேலைக்கும், பாக்கியம் கோவிலுக்கும், அன்பிற்கினியன் கல்லூரிக்கும் என ஆளாளுக்குக் கிளம்பினார்கள். அதிகாலையில் அங்கே ஒரு கல்யாணம் நடந்தது என்பதையே மறந்தது போல அனைவரும் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

பத்து மணி அளவில் தூக்கம் கலைந்து எழுந்த மங்கம்மா, நேரத்தைப் பார்த்துப் பதறி அடித்து வெளியே வந்தார். வீட்டில் யாரையும் காணாமல், "அம்புஜம்... அம்புஜம்!" என்று உரத்துக் கத்திக் கொண்டே அம்புஜத்தின் அறைக்கு வர, அவரோ குறட்டை விட்டு நல்ல தூக்கத்தில் இருந்தார்.

மங்கம்மா அவரைப் பதற்றத்துடன் அடிப்பது போலவே உலுக்கி எழுப்ப, அம்புஜமும் திடுக்கிட்டு எழுந்து, பக்கத்திலிருந்த மங்கம்மாவைக் கண்டு, "என்ன மாமி?" என்று அம்புஜம் தூக்கக் கலக்கத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டே கேட்டார்.

மங்கம்மா, "வீட்டில் ஒருத்தரையும் காணோம்! அந்தச் சிறுக்கியைக் காப்பாத்த அவளை எங்கயாவது கூட்டிட்டுப் போயிருப்பாங்களோ?" என்று சந்தேகித்தபடி சொல்ல,

தூக்கக் கலக்கத்திலிருந்த அம்புஜத்துக்கு அப்பொழுது தான் நேற்று நடந்தவைகள் ஞாபகம் வர, “என்ன?” என்றவர், சுவரிலிருந்த மணிக்கூட்டைப் பார்த்து, “மணி பத்தாச்சா?” என்று பதற்றத்துடன் படுக்கையிலிருந்து அவரும் எழுந்து கொண்டார்.

மங்க்ம்மா அம்புஜத்தையும் இழுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வேகத்துடன் வந்து வீட்டை ஆராய்ந்து கொண்டிருக்க, அப்பொழுதுதான் நீலகண்டனும் பாக்கியமும் வீட்டின் வாசலிலிருந்து உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

நீலகண்டன் அவர்கள் இருவரையும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. கையில் ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு, "பாக்கியம்... இதுல கையெழுத்துப் போடும்மா. நான் கொண்டு போய் அந்த ஆச்சிரமத்துல கொடுத்திட்டு வரணும்" என்று நிதானமாகச் சொன்னார்.

தங்கையிடம் கையெழுத்து வாங்குவதற்காகவே அவரைக் கோயிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்த நீலகண்டன் கடிதத்தை பாக்கியத்திடம் கொடுக்க, ‘போலீஸ் புகார் ஏதும் கொடுக்கப் போகிறார்களோ?’ என பயந்துபோன மங்கம்மா, பாக்கியத்தின் கையிலிருந்த அந்தப் கடிதத்தைப் பிடுங்கிப் பார்த்தார்.

அதிலிருந்த வாசகங்களைப் படித்ததும் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

'தன் மனைவி அம்புஜம், தங்கள் வீட்டில் அடைக்கலமாகியிருக்கும் தன் தங்கைக்கும்,மருமகனுக்கும் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டு அடித்துத் துன்புறுத்துவதால், பாதுகாப்பு கருதி என் மருமகனை மட்டுமாவது அங்கே சேர்த்துக் பாதுகாத்துத் தாருங்கள்' என்று நீலகண்டன் அதில் எழுதி கையொப்பமிட்டிருந்தார். அதே இடத்தில் பாக்கியத்தையும் கையெழுத்திடச் சொன்னார். "என்னடா இது?" என்று மங்கம்மா அதிர்ச்சியாகக் கேட்க, நீலகண்டன் அசையாமல், "அவன் சிற்பியை விட்டு இருக்க மாட்டான். அதுக்கு இதுதான் வழி" என்றார் சுருக்கமாக.

"அந்தச் சிறுக்கிக்காக என் மருமகளை ஏண்டா வில்லி மாதிரி ஆக்குற?" என்று மங்கம்மா எகிற,

"சகவாச தோஷம்... உங்க கூடச் சேர்ந்திட்டால் இது மட்டுமில்ல, இதுக்கு மேலேயும் நடக்கும். இதெல்லாம் அனுபவிக்கட்டும்" என்று சொன்னவர், தாயின் கையிலிருந்த கடிதத்தை மீண்டும் பிடுங்கி, பாக்கியத்திடம் கொடுத்து, "பாக்கியம், நீ கையெழுத்துப் போடும்மா" என்றார்.

பாக்கியம் கையெழுத்திடத் தயாராக, பேனையைத் திறந்து அங்கே கையெழுத்திடச் செல்ல, "அடியேய்! அதுல உன் அண்ணி கொடுமைக்காரி மாதிரி எழுதியிருக்குடி!" என்று மங்கம்மா பதறினார்.

பாக்கியம் தன் தாயை நிதானமான ஒரு பார்வையோடு, "அண்ணிக்கு மட்டும் நேற்று அந்த ஜோசியர் என் பையனைப் பலியிட்டால்தான் உன் மகனுக்கு ஆயுள் நீடிக்கும் சொல்லியிருந்தா, என் பையனைப் பலி கொடுக்கவும் தயங்கியிருக்க மாட்டாங்க. அப்படிப்பட்டவங்க என்ன பெயர் எடுத்தால் எனக்கென்ன?" என்று சீறினார். மங்கம்மாவால் வாயைத் திறக்க முடியவில்லை.

பாக்கியம் கொடுத்த பதில் அம்புஜத்துக்கு சவுக்கால் அடித்தது போல இருந்தது.

நீலகண்டன், "மகன் மேல பாசம் இருக்கலாம்... ஆனா இன்னொருத்தரோட வாழ்க்கையை அழிச்சுத் தன் பையனை வாழ வைக்கிறது கேடுகெட்ட புத்தி. அந்தப் புத்திக்குத்தான் ஒற்றை மகனின் கல்யாணத்தைக் கூடப் பார்க்க விடாம கடவுள் சதி செஞ்சிருக்கார். இவளுக்கு இது பத்தாது, இன்னும் வேணும்!" என்றார்.

நீலகண்டன் கல்யாணம் முடிந்துவிட்டது என்கிற செய்தியைச் சொன்னபோது, மங்கம்மாவிற்கும் அம்புஜத்திற்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூடத் தோன்றவில்லை. கேட்ட செய்தி நிஜம்தானா என்கிற திகைப்பில் அப்படியே உறைந்து நின்றனர்.

"என்னடா சொல்ற... தாலி கட்டிட்டான்னா?" என்று மங்கம்மா திக்கித் திணறி வினவ, "ஆமாம் அம்மா... விடியற்காலையிலேயே தாலி கட்டியாச்சு. இப்போ அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி. உங்க இரண்டு பேருடைய இருப்பும் அங்கே தேவையில்லை என்றுதான் விதியே இப்படி ஒரு வழியைக் காட்டியிருக்கு" என்று நீலகண்டன் சொன்னார்.

மகன் சிற்பிகாவைத் திருமணம் செய்யும் பொழுது அந்த இடத்தில் அம்மா இருக்க வேண்டும் என்று விரும்பவில்லையா? என்று அறிவதற்காக, "என் பையன் என்னைத் தேடலையா?" என மரத்துப்போன குரலில் அம்புஜம் நீலகண்டனிடம் கேட்க,

அதற்கு நீலகண்டன் ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்து, “அவன் உன்னைத் தேடலை அம்புஜம்... அவனோட வாழ்க்கையைத் தேடிக்கிட்டான். நீயும் உன் மாமியாரும் சேர்ந்து போட்ட கணக்கு எல்லாம் இன்னைக்குத் தப்புக்கணக்காப் போயிடுச்சு. அவன் இப்போ சந்தோஷமா இருக்கான். அவன் சந்தோஷத்துல உன் நினைப்புக்கு இடமே இல்லை. முக்கியமான அவனுக்கு சகுனி வேலை பார்க்கிற உன்னை விட நல்ல உள்ளமிருக்கிற எங்களோட ஆசி போதுமாயிருந்தது." என்று சுளீர் எனப் பதிலடி கொடுத்தார் நீலகண்டன்.

நீலகண்டனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அம்புஜத்தின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தன. தன் மகன் தன்னை நினைக்கவே இல்லை என்பது அவருக்குப் பெரும் அவமானமாகவும் வலியாகவும் இருந்தது. ஒரு தாயாகத் தோற்றுப்போன உணர்வில் தலைகுனிந்து நின்றார்.

மங்கம்மாவிற்கோ இத்தனை காலமாய் அந்த வீட்டில் அவர் காட்டிய அதிகாரமும்,. தான் ஆட்டிப்படைத்த தன் மகனும், தன் சொல்படி ஆடிய பேரனும் இப்போது மொத்தமாகத் தன் கைமீறிப் போய்விட்டதை உணர்ந்தபோது, அவருக்கு அடிவயிறு கலங்கியது.

அவர்களை எந்தவித உணர்வுமின்றிப் பார்த்த நீலகண்டன், பாக்கியத்திடம், "பாக்கியம், நீ இந்தக் கூட்டத்தோட சேராம தள்ளியே இரம்மா" என்றார்.

அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்க்கக் கூட விரும்பாத பாக்கியம், அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டு, அதை நீலகண்டனிடம் கொடுத்துவிட்டு, “அண்ணா... நான் என் பிள்ளைகளுக்குச் சமைக்கணும். என் மூணு பிள்ளைகளும் விடிய விரதம்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அவங்களுக்கு மட்டும் சமைக்கப் போறேன்” என்று சொல்லிவிட்டுச் சமையலறைக்கு கிளம்பினார்.

“பாக்கியம்... எனக்கும் சேர்த்துச் சமை. நானும் பசங்களோட விரதம்!” என்று நீலகண்டன் பாக்கியத்தைத் தடுத்து, இடையில் சொல்ல, “நீங்களுமா அண்ணா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பாக்கியம்.

“என் பிள்ளைகள் விரதமிருந்தா எனக்கு மட்டும் பசிக்குமா? நீயும் விடிய எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டாய். நம்ம அஞ்சு பேருக்கு மட்டும் சமை...” என்றவர், மங்கம்மாவையும் அம்புஜத்தையும் ஏளனமாகப் பார்த்து, “உங்ககிட்டத்தான் எக்கச்சக்கமான காசு இருக்குல்ல? அதையே சாப்பிடுங்க!” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

சமையலறைக்குச் செல்லத் திரும்பிய பாக்கியம், மங்கம்மாவிடம் நின்று, “நான் சமைக்கப் போறேன் அம்மா.. என் மருமகன் எனக்குச் சமைக்கத் தேவையான காசை அவன் கஷ்டப்பட்டு உழைச்சதுல இருந்து தந்திருக்கான். அதனால உங்க சொத்து எதுவும் தேயாது, கவலைப்படாதீங்க” என்று ஒரு போடு போட்டுவிட்டுச் சென்றார்.

அம்புஜம் இதைக் கேட்டு விக்கித்து நின்றார். மங்கம்மாவுக்குத் தன் மருமகளைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், நீலகண்டனும் பாக்கியமும் தங்களுக்குப் பேசுவதற்கே வாய்ப்புக் கொடுக்க மறுக்கும்போது அவர் என்னதான் சொல்ல முடியும்? தன்னுடைய அதிகாரமெல்லாம் சரிந்துவிட்ட நிலையில், அவரால் அம்புஜத்திற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை.

சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தமும், கமகமக்கும் தாளிப்பு வாசனையும் வந்தாலும், அம்புஜத்திற்குப் பசி என்ற உணர்வே மரத்துப் போயிருந்தது.

மாலையில், சிற்பிகாவும் மாரிமுத்துவும் விரதம் என்பதால் வாடிப் போய் வருவார்கள், வெயிலில் நடந்து வர களைத்துப் போய்விடுவார்கள் என எண்னி பள்ளிக்கூடம் முடிந்ததும் மாரிமுத்துவையும் சிற்பிகாவையும் நீலகண்டனே நேரில் போய்க் கூட்டிவந்தார்.
காரில் ஏறியதிலிருந்து மாரிமுத்து, "மாமா... நியமா நான் சிற்பி கூட இருக்கலாமா? அங்கே ஆம்பளைப் பசங்களைச் சேர்ப்பாங்களா?" என்று மெல்லக் கேட்டான்.

"ஓம்மடா... அதுக்குத்தான் நான் நேர்ல போய் அந்த மேனேஜர்கிட்டப் பேசிட்டு வந்திருக்கேன்" என்றார் நீலகண்டன்.

சிற்பிகாவோ முகம் வாடி, "எதுக்கு மாமா இப்படிச் செஞ்சிங்க? உண்மையாகவே படிக்க ஆசைப்படுற ஏழைப் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை, நாம தேவையில்லாமத் தட்டிப் பறிக்கிற மாதிரி இருக்கு" என்று வருத்தப்பட்டாள்.

"அப்படியில்லை சிற்பி. இவன் செலவை முழுசா நான் ஏத்துக்கிறேன், அவனுக்குத் தங்குறதுக்கு மட்டும் இடம் கொடுங்கன்னு தாண்டா கேட்டேன். அவங்களும் சம்மதிச்சிட்டாங்க" என்று நீலகண்டன் சமாதானம் சொல்லவும், சிற்பிகா சற்று நிம்மதியாக அமைதியானாள்.

"எல்லாம் சரி மாமா... ஆனா உங்க அம்மாவும், பொண்டாட்டியும் இதைக் கேள்விப்பட்டா ஆடுவாங்களே!" என்று மாரிமுத்து தன் சந்தேகத்தைக் கேட்டான்.

நீலகண்டன் ஒரு பெருமூச்சுடன்,"நேற்றிலிருந்து உன் மாமிக்காரி ஊமையாகிட்டா. இதையெல்லாம் யோசிச்சு அவ திருந்தினா சந்தோஷம். ஆனா என் அம்மாவை நான் எந்தக் கேட்டகரியில் சேர்க்கிறதுன்னே தெரியலை... அவங்க திருந்துறது கஷ்டம் தான்" என்றார் விரக்தியாக.

வண்டி வீட்டின் வாசலில் வந்து நின்றது. உள்ளே என்ன நடக்கப்போகிறதோ என்கிற படபடப்புடன் சிற்பிகா காரிலிருந்து இறங்கினாள்.

சிற்பிகாவின் கால்கள் உள்ளே செல்லத் தயங்கின. மாரிமுத்து அவளுக்குத் தைரியம் சொல்வது போல, அவளது பையை வாங்கிக் கொண்டான்.

வீட்டுக்குள் நுழையும்போது, ஹாலில் அமர்ந்திருந்த மங்கம்மாவும் அம்புஜமும் சிற்பிகாவையே கூர் தீட்டிய கண்களால் பார்த்தார்கள்.அவள் பள்ளிச் சீருடை அணிந்திருந்ததாலும், தலைகுனிந்து வந்ததாலும், அவர்களுக்கு அந்தப் புதுத் தாலிக்கயிறு சட்டெனக் கண்ணுக்குச் சிக்கவில்லை.

'இவளால் தான் தன் குடும்பமே தன்னை எதிரியாகப் பார்க்கிறது' எனும் கோபத்துடன் மங்கம்மா சிற்பிகா மேல் தன் ஆத்திரத்தைக் கொட்டிவிடப் பார்த்தார். ஆனால் நீலகண்டன் பின்னாடியே வருவதைப் பார்த்ததும், சட்டெனத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டார். இப்போது கத்தினால் காரியம் இன்னும் கெட்டுப்போகும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

கார் சத்தத்தைக் கேட்டு பாக்கியம் சமையலறையிலிருந்து ஓடி வந்து, "வாம்மா சிற்பி... கை கால் கழுவிட்டு வா. சமைச்சு முடிச்சுட்டேன், எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று உற்சாகமாக அழைத்தார்.

"பாக்கியம்... இவங்களுக்குச் சாப்பாடு போடு. அப்புறம் ஒரு நல்ல விஷயம், மாரிக்கும் அந்த ஆச்சிரமத்திலேயே இடம் கிடைச்சிட்டு" என்றார் நீலகண்டன்.

அம்புஜம் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்லத் தன் கணவரை நெருங்கி, "ஏங்க... அன்புகிட்டக் கேட்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்டார். தன்னை ஒரு கொடுமைக்காரி என்று காட்டித்தான் தந்தை மாரிமுத்துவுக்கு இடம் கேட்டிருக்கிறார் என்று தெரிந்தால், மகன் தன் தந்தையைக் கடிவான் என்கிற ஒரு சிறு நம்பிக்கையில் இந்தப் பேச்சை ஆரம்பித்தார் அம்புஜம்.

ஆனால் நீலகண்டன், "உன் மகன்கிட்டக் கேட்டுட்டுத்தான் எல்லாம் நடக்குது அம்புஜம். அவனுக்குத் தன் பொண்டாட்டி எங்கே இருந்தா நிம்மதியா இருப்பான்னு தெரியும். நீயும் உன் மாமியாரும் அவளை உயிரோட விடுவீங்களான்னு அவனுக்குப் பயம். அதான், மாரியும் அவளை விட்டுப் பிரிஞ்சிருக்க மாட்டான்னு சொன்னா. அதுக்குத் தான் நான் இந்த ஏற்பாடு செஞ்சிருக்கேன்" என்று முகத்தில் அடித்தார் போலச் சொன்னார்.

சரியாக அந்த நேரத்தில் அன்பிற்கினியன் வீட்டிற்கு வந்தான். அவன் முகம் களைப்பாக இருந்தாலும், சிற்பிகாவைப் பார்த்ததும் ஒரு மெல்லிய புன்னகை அரும்ப, "என்னம்மா... ஸ்கூல் எப்படி இருந்தது?" என்று வழமையாகக் கேட்பது போல் இயல்பாகக் கேட்க, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், “நல்லா இருந்தது” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள்

"அன்பு... மாரியையும் சேர்க்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். 48 நாள் விரதம் முடியவும் இவங்களைக் கொண்டு போய் அங்கே விட்டுட்டு வந்திடலாம்" என்றார் நீலகண்டன். அன்பிற்கினியன் ஒரு கணம் சிற்பிகாவைப் பார்த்தான். அவளுடைய கண்களில் ஒருவிதப் பிரிவும், அதே சமயம் ஒரு விடுதலையும் தெரிந்தது. "சரிப்பா..." என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குள் சென்றான்.

அங்கே மங்கம்மாவும், அம்புஜமும் இருப்பதையே யாருமே சட்டை செய்யவில்லை. தங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் அனைவரும் தங்கள் வேலைகளைப் பார்ப்பதை எண்ணி அவர்கள் இருவரும் மனதுள் புழுங்கினார்கள்.
 
Top Bottom