• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 25 - Final Epi

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 25

மங்கம்மாவின் வீட்டிலிருந்து மூச்சிரைக்க ஓடி வந்த சாவித்திரி, நீலகண்டன் வீட்டு வாசலிலேயே நின்றபடி, "ஐயா... ஐயா... பெரியம்மா!" என்று அலறினாள்.

அவள் சத்தத்தில் பாக்கியமும் வீட்டுக்குள் இருந்து பதறியபடி வெளியே ஓடி வந்து, "என்னடி ஆச்சு? ஏன் இப்படிப் பதறுற?" என்று பாக்கியம் கேட்க, "பெரியம்மா அறைக்குள்ள போயி கதவைத் தாழ் போட்டுக்கிட்டாங்கம்மா.. எவ்வளவு தட்டியும் திறக்கல. எனக்கு ஏதோ தப்பாத் தோணுது, பயமா இருக்கு!" என்று கைகளை பிசைந்தபடி அழுதாள் சாவித்திரி.

விஷயம் விபரீதம் என்று புரிந்த நீலகண்டனும் பாக்கியமும் அவளோடு விரைந்து மங்கம்மாவின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு கதவைத் தட்டியும் அவர் திறக்காமல் இருக்கவே, ஆட்களைக் கூப்பிட்டுக் கதவை உடைத்துப் பார்த்தனர். உள்ளே மங்கம்மா தூக்குப் போட்டுத் தொங்கிக் கொண்டிருந்தார். நல்லகாலம், அவர்கள் விரைவாகச் செயல்பட்டதால் உயிர் பிரியும் முன் அவரைத் தடுத்துக் காப்பாற்ற முடிந்தது.

அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த மங்கம்மாவை ஆசுவாசப்படுத்திய பாக்கியம், "அண்ணே, நீங்க வீட்டுக்குப் போங்க. நான் இங்கே சாவித்திரிகூட இருந்து அம்மாவைப் பார்த்துக்கிறேன். இந்த நேரத்துல இவங்களைத் தனியா விடக்கூடாது." என்று அங்கேயே தங்கிவிட்டார்.

பாக்கியத்தின் நல்ல குணத்தைக் கண்ட மங்கம்மா, "என்னை மன்னிச்சிடும்மா.. உன் பொண்ணுன்னு வளர்த்த உன் மகளையே உன்கிட்ட இருந்து பிரிச்ச பாவி நான்.. இப்பதான் தெரியுது என் வீட்டுக் குலத்தையே கருவறுத்திருக்கேன்னு.. என்னை மன்னிச்சிடு" என்று கைகளைக் கூப்பிக் கெஞ்சினார். அந்த நொடி மங்கம்மாவின் அகம்பாவமும் அகங்காரமும் மறைந்து, ஒரு புதிய மனிதராக மாறியிருந்தார்.

தாய்க்கு ஆபத்தில்லை என்பதை உறுதி செய்துகொண்ட நீலகண்டன், பாரமான மனதுடன் வீடு திரும்பினார். அன்பிற்கினியனுக்கு மாரிமுத்துவின் மூலம் மங்கம்மா தற்கொலைக்கு முயன்ற விஷயம் உடனடியாகத் தெரியவந்திருந்தது. அது அதிர்ச்சியாக இருந்தாலும், பாட்டியின் மேல் இருந்த கோபத்தால் அவரைப் பார்க்கச் செல்லாமல் திண்ணையிலேயே சஞ்சலமாக உலவிக்கொண்டிருந்தான்.

வீட்டுக்கு வந்த தந்தையிடம், "எதுக்குப்பா உடனே வந்தீங்க? அத்தை எங்கே?" என்று அன்பிற்கினியன் கேட்க, "அம்மா இப்படி ஒரு முடிவெடுப்பாங்கன்னு நாங்க நினைக்கலடா.. அங்கேயே பாக்கியம் இருக்கா. என் மருமகளுக்கு இப்படி ஒரு பாவத்தைச் செஞ்சவங்க முகத்துல முழிக்க எனக்கே ஒரு மாதிரியா இருக்கு. அதான் நான் வந்துட்டேன்" என்றார் நீலகண்டன் தழுதழுத்த குரலில்.

தந்தை தன் தாய்க்கும், மருமகளுக்கும் இடையில் நின்று அல்லாடுகிறார் என்பது அன்பிற்கினியனுக்குப் புரிந்தது. அவனது நிலையும் அதுவே! ஒரு பக்கம் மனைவியின் நியாயமான கோபம், மறுபக்கம் பாட்டியின் விபரீத முடிவு. யாருக்காக வருந்துவது என்று தெரியாமல் அவன் தலை வெடித்துவிடும் போல இருந்தது.

அதனால், நிகாரிகாதான் சிற்பிகா என்று தெரிந்ததும் அவளைப் பார்க்கத் துடித்த அப்பாவையும், "இப்போதைக்கு இங்கேயே இருங்கப்பா" என்று தடுத்துவிட்டான் அன்பிற்கினியன். "என் பேரனையாவது பார்க்க விடுடா!" என்று கேட்ட நீலகண்டனுக்கு ஒரு முறைப்பைப் பதிலாகக் கொடுத்தவன், தென்னவனுக்குக் கால் பண்ணி "ஆரியனை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வா" என்று சொல்லிவிட்டான்.

தென்னவன் நிகாரிகாவிடம் பேசி, "அன்பு வீட்டுக்கு வரச் சொன்னான், நான் ஆரியனை அழைச்சுட்டு அங்கே போறேன்" என்றான். அவர்கள் தன்னைப் பார்க்க வருவார்கள் என்று காத்திருந்த நிகாரிகாவுக்கு, அன்பிற்கினியன் எல்லோரையும் தடுத்து வைத்திருக்கிறான் என்று புரிந்து, "நீங்க போங்க, நானும் அங்கே வர்றேன். இன்னைக்கு அப்பாவும் அண்ணாவும் கூட வர்றாங்களாம்" என்று சொல்லி வைத்தாள்.

அதே நேரம், மங்கம்மா தன் மகளின் கையைப் பற்றிக்கொண்டு, "பாக்கியம்... நான் செஞ்சதுக்கெல்லாம் எனக்குச் சரியான தண்டனை கிடைச்சிருச்சு. நீ உன் மகளைப் பார்க்கப் போம்மா.. அவ உன் முகத்தைப் பார்க்கத் தவிச்சுக்கிட்டு இருப்பா. நீ பயப்படாத, நான் இனி இப்படி முட்டாள் தனமான காரியம் எதையும் செய்யமாட்டேன். எனக்கு என் தப்பு என்னன்னு நல்லா புரிஞ்சிடுச்சு," என்று சொல்லி பாக்கியத்தை நீலகண்டன் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

அன்பிற்கினியன் வீட்டின் திண்ணையிலேயே நீலகண்டன் ஆரியனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அப்போது நிகாரிகா காரிலிருந்து இறங்குவதைக் கண்டு அவர் கண்கள் கலங்கின.

மங்கம்மா வீட்டிலிருந்து பதற்றமாக ஓடி வந்த பாக்கியம், மகளைக் கண்டவுடன் "சிற்பி!" என்று அலறியபடி ஓடிச் சென்று கட்டிக்கொண்டு 'ஓ'வென்று அழுதார். ஊருக்குள் அவள் வந்ததிலிருந்து மற்றவர்கள் அவளைப் பார்த்திருந்தாலும், வளர்த்த தாய்க்கு மட்டும் அவளைப் பார்க்க ஒரு வாய்ப்பும் அமையவில்லையே! மகளைக் கட்டிக்கொண்டு, "உன்னைத் திரும்பிப் பார்ப்போமான்னு என்ன பாடுபட்டேன் தெரியுமா?" என்று பாக்கியம் கதற, அன்பிற்கினியனுக்கும் அந்தச் சூழலைக் காண உடல் ஒரு கணம் நடுங்கியது.

அவள் அருகில் வந்த அன்பிற்கினியன், "அப்பத்தா தூக்குப்போட்டுச் சாகப் பார்த்தாங்களாம்... இப்போ அத்தை அங்கிருந்து தான் வாரங்க" என்று அவன் சொல்ல, நிகாரிகா திகைத்து நின்றாள்.

"பழிவாங்கியாச்சு... இப்பவாவது உன் மனசு குளிர்ந்ததா?" என்று அன்பிற்கினியவன் கேட்க, நிகாரிகா பதில் பேசாமல் தலைகுனிந்து நின்றாள்.

அன்பிற்கினியன் அவளிடம், "சிற்பி, உன் காயத்துக்கு மருந்து தடவி அதை ஆறவைக்க நான் காத்துட்டு இருக்கும்போது, ஆறிக்கொண்டிருக்க காயத்தை ஏன் திரும்பவும் கிளறணும்? உன் கோபம் நியாயம் தான்... ஆனா ஒரு உயிருக்கு இன்னொரு உயிர்னு பழி தீர்க்க எல்லாரும் கிளம்பிட்டா, அப்புறம் அன்புக்கும் விட்டுக்கொடுப்புக்கும் என்ன அர்த்தம் இருக்கு? நம்ம எட்டு வருஷ வாழ்க்கை தான் கானல் நீராப் போயிடுச்சு... இனியாவது நம்ம பிள்ளைக்காகச் சந்தோஷமா வாழ வேண்டாமா?" என்று அவன் கேட்ட உருக்கமான கேள்வியில் நிகாரிகாவின் பழி உணர்ச்சி அவளை விட்டுச் சென்றது.

கண்களில் நீர் முட்ட, "மன்னிச்சிடுங்க இனியன்.. நான் இப்படி நடக்கும்னு நினைக்கல. நான் கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன்" என்றாள்.

"சரி, பழசையெல்லாம் விடு. தென்னவன் ஆரியனை அழைச்சுட்டு வந்திடுவான். நான் ஒண்ணுமே சமைக்கலை. அவனுக்கு கடைச் சாப்பாடு ஒத்துக்காது, வா... ரெண்டு பேரும் சேர்ந்து அவனுக்குப் பிடிச்சதைச் செய்வோம்" என்றவன், அவளின் நவீன உடையைப் பார்த்துவிட்டு, "இந்த டிரெஸ்ஸோட சமையல்கட்டுக்கு வருவாய் தானே?" என்று சிரிப்புடன் கேட்டான்.

"நான் உங்க பொண்டாட்டி.. நம்ம மகனுக்குச் சமைக்க வராம இருப்பேனா?" என்று அவள் புன்னகைக்க,

அவர்களின் திருமண பந்தத்துக்கு ஒரே சாட்சி தாலி மட்டுமே அதுவும் எங்கே என்று தெரியவில்லை என்பதால், "தாலி வேற இல்லைடி... உன் தாலியை அப்பத்தா என்ன செஞ்சாங்களோ தெரியலை. புதுசு எடுக்கணும்" என்று அவன் சொல்ல, பின்னால் வந்த மாரிமுத்து, "அதுக்கென்ன அன்பு அத்தான், ஆரியன் முன்னாடியே சிம்பிளா ஒரு கல்யாணத்தைப் பண்ணிடுவோம்" என்றான்.

"பண்ணிக்கலாமா?" என்பது போலப் புருவத்தை உயர்த்தி அன்பிற்கினியன் கேட்க, நிகாரிகா வெட்கத்துடன் தலைகுனிந்து சமையலறைக்குள் நுழைந்தாள்.

அதன் பின் சிறிது நேரத்தில் தென்னவனோடு ஆரியனும் வந்து இறங்கினான். அவர்களின் பின்னே இன்னுமொரு காரில் அகத்தியனும், குருமூர்த்தியும் வந்து இறங்கினார்கள்.

ஆரியனைப் பார்த்தவுடன் நீலகண்டனின் கண்கள் பனித்தன. தன் பேரனை முதன்முதலாகப் பார்க்கும் பரவசத்தில் அவனை வாரி அணைத்துக் கொண்டார்.

குருமூர்த்தியும் அகத்தியனும் யார் என்று நிகாரிகா அறிமுகப்படுத்த, அங்கே கண்ணீரும் விசாரணையுமாக நேரம் கரைந்தது.

“எங்க பொண்ணை இத்தனை வருஷமா உங்க வீட்டுப் பொண்ணா நினைச்சுப் பார்த்துக்கிட்டதுக்கு நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்" என்று குருமூர்த்தி நீலகண்டனின் கைகளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நீலகண்டனும் பதிலுக்கு தன் மருமகளை இங்கே திரும்பவும் அனுப்பி வைத்ததற்காக அவர் கைகளைப் பற்றித் தன் நன்றியை தெரிவித்தார்.

குருமூர்த்தியைப் பார்க்கும் போது நீலகண்டனுக்கு வியப்பாக இருந்தது. உலகத்திலேயே முதல்நிலை பணக்காரராக இருந்துகொண்டும், கர்வம் சிறிதுமற்று இவ்வளவு அடக்கமாக அவர் நடந்து கொள்வதைக் கண்டு வியந்து, 'இதைத்தான் நிறைகுடம் தளும்பாது என்று பெரியவர்கள் சொல்வார்களோ?' என அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்."

அகத்தியன் தன் தங்கை சிற்பிகாவையும் ஆரியனையும் பார்த்து நெகிழ்ந்து போயிருந்தான். காஞ்சனாவோ பாக்கியத்திடம், தன் மகளை வளர்த்தவர் என்ற பாசத்துடன் உடனே நட்பாகிவிட்டார்.

சூழலை லேசாக்க விரும்பிய காஞ்சனா, “நம்ம வீட்டில் இந்த மூணு தடியன்களுக்கும் உடனே கல்யாணம் செய்து வைக்கணும். இப்படியே விட்டா இன்னும் கொஞ்சக் காலத்துல எல்லாத்துக்கும் சொட்டை விழுந்திடும்" என்று கிண்டலாகச் சொன்னவர், சொன்னதோடு நில்லாமல், தென்னவனின் அருகே சென்று அவன் முன்நெற்றியில் முடிகள் சற்று குறைந்து போயுள்ளதைப் பார்த்து, “பாருங்களேன்... இவனுக்கு இப்போவே ஆரம்பிச்சிருச்சு!” என்று அவர் கேலி செய்ய, அங்கே சிரிப்பொலி எழுந்தது.

தன்னைச் சுற்றியிருந்தவர்களின் மகிழ்ச்சியைக் கண்ட அன்பிற்கினியன், நிகாரிகாவைப் பார்த்துப் புன்னகைத்தான். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேர்ந்த அந்தத் தருணம் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமிலிருந்தது.

எல்லோரும் இரவு வரை கூடியிருந்து பேசிவிட்டுப் புறப்படக் கிளம்பினார்கள். அப்போது நிகாரிகாவின் கையை ரகசியமாகப் பிடித்த அன்பிற்கினியன், "போகாதடி..." என்று அவளின் காதுக்கருகில் மெதுவாகச் சொன்னான்.

அவள் "உச்..." என்று அவனை அதட்டியபடி, "இவர்கள் என்ன பேசுகிறார்கள்?" என்பது போலத் தலையை நிமிர்த்திப் பார்த்த ஆரியனைக் கண்ணால் காட்டினாள்.

"ரெண்டு பேரும் வீட்டிலேயே நில்லுங்களேன்..." என்று அன்பிற்கினியன் தன் பார்வையாலேயே மன்றாட, "அம்மா..." என்று காஞ்சனாவை அழைத்தாள் நிகாரிகா. "என்ன டார்லிங்?" என்று காஞ்சனா கேட்க, "நான் இன்னைக்கு இங்கே நிற்கட்டுமா?" என்று தயக்கத்துடன் தாயிடம் கேட்டாள்.

பாக்கியம் சிறிது நேரத்திற்கு முன்புதான் தன் மகளுக்குப் பிரம்மாண்டமாக மீண்டும் ஒரு கல்யாணம் செய்ய வேண்டும் என ஆசை ஆசையாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர், இப்போது கணவனும் மனைவியும் தனியாக இருக்கட்டும் என்று ஆமோதிப்பாரா என்கிற சந்தேகத்துடன் காஞ்சனா பாக்கியத்தைப் பார்த்தார்.

ஆனால் பாக்கியமோ, தன் மகள் இழந்த எட்டு வருட கால நிம்மதியை இப்போது பெறட்டும் என்பது போல, "நிக்கட்டும்..." எனச் சைகையாகக் கண்ணை மூடித் திறந்து சம்மதம் சொன்னார்.

"சரி, நீ நில்லு... நாங்க பேரனைக் கூட்டிட்டுப் போறோம்," என்றார் காஞ்சனா.

ஆனால் ஆரியனோ, விடியலில் இருந்து தன்னை 'மாப்பிள்ளை... மாப்பிள்ளை...' என்று செல்லமாகக் கூப்பிட்டுக்கொண்டு தன் பின்னாடியே சுற்றிய மாரிமுத்துவையும், தென்னவனையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, "நான் இன்னைக்கு இவங்க கூடவே இங்கே நிற்கிறேனே!" என்று மழலை மாறாத ஆசையோடு கூறினான்.

"அப்ப நான் மட்டும் வீட்டுக்குத் தனியாப் போய் என்ன செய்ய?" என்று அகத்தியன் பாவமாகக் கேட்க, அந்த இடமே ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்தது.

"பேசாமல் எல்லோரும் இங்கேயே தங்குங்களேன்!" என்று நீலகண்டன் உரிமையுடன் சொல்ல, "தங்கிட்டாப் போச்சு! பாக்கியம், எனக்கு நாளைக்குக் காலையில நல்லா முறுகலா நெய்த்தோசை வேணும், சொல்லிட்டேன்!" என்று உற்சாகமாகச் சொன்ன காஞ்சனா, சட்டென்று மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார்.

தனிமை கிடைக்கும், நிகாரிகா மனம் விட்டுப் பேசலாம் என்று கணக்கு போட்டு எதிர்பார்த்துக் காத்திருந்த அன்பிற்கினியனுக்கு, எல்லோருமே வீட்டில் தங்குகிறார்கள் என்றதும் 'பாலை இழந்த பூனை' போல முகம் அப்படியே சுருங்கிப் போய்விட்டது. அவன் போட்ட கணக்கெல்லாம் தவிடுபொடியாகிப் போனதை அவனது முகம் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது.

அவன் முகமாற்றத்தைக் கவனித்த காஞ்சனா, ரகசியமாகச் சிரித்துக்கொண்டே, "என்ன மாப்பிள்ளை... முகம் ஒரு மாதிரி போகுது? நாங்க இங்க தங்குறது உங்களுக்குப் பிடிக்கலையோ?" என்று கண்ணைச் சிமிட்டி வம்புக்கு இழுத்தார்.

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை மாமி... நீங்க இருக்கிறது சந்தோஷம் தான்" என்று மழுப்பியவன், சட்டென்று நிகாரிகாவைப் பார்த்தான். அவளோ தன் கணவனின் தவிப்பைப் புரிந்து, கையை வாயால் பொத்தியபடி சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.

‘புருஷன் பொண்டாட்டியை நாங்க டிஸ்டர்ப் பண்ணலைப்பா!” என்று காஞ்சனா வாய்விட்டுச் சிரிக்க, அன்பிற்கினியன் முகம் அப்படியே சிவந்து போனது.

“இல்ல மாமி... நான் அவகூட கொஞ்சம் பேசலாம்னு மட்டும் தான் நினைச்சேன் மாமி,” என்று அசடு வழிய அவன் சொல்ல, அங்கே சிரிப்பொலி இன்னும் அதிகமானது.

நிகாரிகாவோ, “நீ பேசுற ஆளா?” என்பது போல அவள் பார்வை சொல்லாமல் சொன்னது.

அன்பிற்கினியன் அவளைச் செல்லமாக முறைக்க,

“மருமகளைக் கூட்டிட்டு போய்ப் படுடா...” என்று நீலகண்டன் புன்னகையோடு தன் மகனிடம் சொல்ல, அவன் நிகாரிகாவின் கையைப் பிடித்து ‘வா’ என்று அழைக்க, நிகாரிகா வெட்கத்துடன் தலைகவிழ அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒருமித்தமாகச் சிரித்தனர்.

இப்படியாக, அவர்களைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் எல்லாம் விலகி, அந்த வீடும் அந்த உறவுகளின் வாழ்வும் மீண்டும் வெளிச்சமாகியது.

முற்றும்
 
Top Bottom