• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி - 1

Vishakini

Moderator
Staff member

கதையின் பெயர்-அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி

STN-83

அத்தியாயம்-01

"டேய் வடிவை துரை ஆளுங்க தூக்கிட்டாங்கடா!" என்று தலை தெறிக்க ஓடி வந்த கந்தன் தன் நண்பர் கூட்டத்திடம் கூறினான்.

" என்னடா சொல்ற?" என்று கோபத்துடன் தமிழ் எழ, உடன் அவன் சகாக்களும் எழுந்தனர்.

உடல் முழுக்க வியர்வையால் குளித்து நுரையீரலுக்கு போதுமான உயிர் காற்று அற்ற நிலையிலும்," செல்வி அக்கா வீட்டுக்கு போன பிள்ளையை தெருமுனையில் வெச்சு தூக்கிட்டாங்கடா" என்று ரத்தம் கொதிக்கக் கூறினான்.

அதில் கோபத்துடன் தமிழ் தன் வண்டி நிறுத்திய இடத்தை நோக்கி ஓட,மற்றவர்களும் பின்தொடர்ந்து ஓடினர்.

தன் புல்லட்டை முறுக்கியப்படி, "ஏறுடா" என்று தன் பின்னால் வந்த கந்தனிடம் கத்த, அவன் ஏறியதும் வண்டி மின்னல் விரைவுடன் அந்த புழுதி காட்டில் பறக்க மற்றவரும் பின்தொடர்ந்தனர்.

பக்கத்து ஊரில் இருந்த துரையின் ரைஸ் மில்லின் முன் வண்டியை நிறுத்தினர். அவர்களிடம் மூன்றாம் கையாக அருவாளும், கட்டையும் முளைத்தது.

செல்லும் வழியில் தடுக்க வந்த துரையின் ஆட்களைப் பந்தாடி விட்டு,ஆபீஸ் ரூமிற்குள் நுழைய துரை இருப்பதற்கான அரவமே இல்லை.

"எங்கடா அவன்" என்று தன் கைக்கு அகப்பட்ட துரையின் கணக்குப்பிள்ளை காலரைப் பற்றி இழுத்து வினவ, " ஐயோ தம்பி எனக்கு தெரியாதுப்பா" என்று கைக்கூப்பி இறைஞ்சினார்.

கோபம் அவர் வயதையும் கூட மறக்க வைத்தது.

" அவன் எங்கே இருக்கான்னு சொல்லல உன் வீட்டிலும் பொண்ணு இருக்கு..." என்று எச்சரிப்புடன் நிறுத்த,

அவன் பேச்சில் வயதானவரின் நாடி நரம்பெல்லாம் அதிர்ந்தது.

"ஐயோ! என் குலசாமி சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது. ஆனால் தோப்பு வீட்டுக்கு வரேன்னு காலையில் யார்கிட்டயோ போனில் பேசிட்டு இருந்தாரு. அதை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாதுப்பா" என்று தளர்ந்து போய் அவர் கூறினார்.

" கந்தா நம்ம பசங்களை அங்கே வர சொல்லுடா" என்று கட்டளையிட்டப்படி அவரை விட, தளர்ந்து போய் தரையில் விழுந்தார்.

நண்பர்கள் குழு மின்னல் விரைவுடன் தோப்பு வீட்டை அடைய, துரையின் ஜீப் புழுதி பறக்க அவர்கள் வந்த திசைக்கு எதிர் திசையில் செல்ல, தன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான்.

"டேய் ஆம்பளையா இருந்தால் நில்லுடா. நாயே! " என்ற கத்தலுடன் துரையின் ஜீப்பை பின்தொடர்ந்தவனின் கை அருவாளை ஏந்தியது.

ஜீப்பின் அருகே நெருங்கியதும் அருவாளை தூக்கி வீச, ஜீப் வேகம் எடுத்து முன்னால் வந்த மேட்டை கடந்து முன்னேறி போனது.

உயர்வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அந்த மண்மேட்டில் கட்டுப்பாடு இல்லாமல் மோதி சரிய, தமிழும் கந்தனும் தூரப் போய் விழுந்தனர்.

அதே நிலை தமிழை தொடர்ந்து வந்த இரு வண்டிகளுக்கும் ஏற்பட, மற்றவர்கள் சூதாரித்து வண்டியை நிறுத்திவிட்டு விழுந்தவர்களைத் தூக்கினர்.

தமிழின் வலது கைமுட்டி பெயர்ந்து ரத்தம் வந்த போதிலும், அரிவாளுடன் ஜீப் சென்ற திசையை நோக்கி ஓடினான்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஜீப் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் போனது.

அது மெயின் ரோட்டில் சென்று விட்டதை உணர்ந்து, தோல்வியை பொறுக்க முடியாமல் புழுதி பறக்கத் தரையை உதைத்தான்.

"டேய் தமிழு அருள் பேச்சு மூச்சே இல்லாமல் கிடக்கிறான் டா" என்ற கந்தனின் சத்தத்தில் அங்கு விரைய, அருள் என்பவனோ தலையில் அடிபட்டு மூர்ச்சையாகி கிடந்தான்.

" தூக்குங்கடா" என்ற கந்தன் சத்தத்தில் நால்வர் அவனை தூக்கிக் கொள்ள,கண்கள் சொருக பின்தொடர்ந்த தமிழ் அப்படியே மயங்கி சரிந்தான்.

அவனையும் இருவர் தூக்கிக் கொள்ள பைக்கிலே மருத்துவமனை சென்றனர்.

" டேய் மச்சான். என்ன ஆச்சுடா?. எழுடா" என்ற கந்தனின் கத்தல் மிக மெல்லியதாக காதில் ஒலிக்க, " வடிவு" என்ற முனங்கலுடன் மொத்தமாக மயங்கி சரிந்தான்.

தமிழு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, காயங்கள் சுத்தம் செய்து வேறு அறைக்கு மாற்றினர்.

"இனி எவனாவது எனக்கு தெரியாமல் அந்த துரை குடும்பத்தோடு ஏதாவது தகராறு பண்ணீங்கனு தெரிந்தது தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுவேன்" என்ற கர்ஜனை சத்தத்தில் மெல்ல கண்விழித்தான்.

வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து,முறுக்கி விடப்பட்ட மீசை, கையில் ஐம்பொன் காப்பு கழுத்தில் பட்டையான இரட்டை புலிப்பல் கொண்ட தங்க செயின் அணிந்து கண்கள் ரௌத்திரத்தில் சிவக்க இருந்தவனின் திராவிட நிறம் கோபத்தில் தீ பட்ட இரும்பாக சிவந்தது.

தொண்டையைக் குத்தும் உணர்வை புறம் தள்ளிவிட்டு, " அண்ணா" என்று அழைத்தபடி தட்டு தடுமாறி எழுந்தமர,காப்பு காய்த்த கரத்தில் அறை அதிர கன்னத்தில் அவன் அண்ணனால் அரை விடப்பட்டது.கண்கள் மீண்டும் தமிழிற்கு இருட்டிக்கொண்டு வந்தது.

"ராசா வேண்டாம்பா " அவர்களின் ஆச்சி வேலம்மாள் அழுகையுடன் கூறினார்.

" அப்பத்தா முதலில் நீ வெளியே போ" என்று அவரை மிரட்ட, மெல்லிய விசும்பலுடன் மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து அகன்றார்.

"பெரிய சண்டியர்னு நினைப்பா டா உனக்கு.உன் முன்கோபத்திற்கு நம்ம வீட்டு பொண்ணு பலியா?"

அண்ணனின் திட்டலைப் பொருட்படுத்தாமல்,"அண்ணா வடிவு " என்று பரிதவிப்புடன் கேட்டான்.

"இன்னும் கண்டுபிடிக்கலை" எனக் கோபத்துடன் மொழிந்தவனின் மொத்த மேனியும் இறுக்கம் பெற்றது.

"சாக்கடை மேல கல் எறிந்தால் நம்ப மேல சந்தனமாடா படும்.சாக்கடை தான் தெறிக்கும். எத்தனை தடவை சொன்னேன் அந்த துரை கூட மல்லுக்கு நிக்காதேன்னு".

" அண்ணா அவன் நம்ம கடை முன்னால் ஜாடை பேசிட்டு இருக்கான். அப்படியே விட சொல்றியா? " என்று அப்போதும் கோபம் தெளியாமல் கேட்டான்.

"டேய் அவனால் ஜாடை மட்டும்தான் பேச முடியும்.பேடி பையன். நேருக்கு நேரா நிற்க முடியாமல் நம்ம வீட்டு பொண்ணு மேல் கை வச்சு இருக்கான்" என்றவன் முகம் இறுகியது.

சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசி அதிர, அழைப்பை எடுத்தான்.

" ஏதாவது தகவல் கிடைத்ததா? " எதிர்ப்புறம் சாதகமான பதில் இல்லை என்பதை தன் அண்ணனின் முகத்திலிருந்து உணர்ந்தவனுக்கு பயம் பிறந்தது.

' தங்கள் வீட்டு பெண்ணிற்கு என்ன ஆனதோ' என்ற கலக்கம் ஆணவனைத் துவள செய்தது.

" இதில் நீ இனி தலையிடாதே.நான் பார்த்திருக்கிறேன்" என்று அவனின் குரல் தீர்மானமாக ஒலித்தது.

" ஆனால் அண்ணா " என்று மேலே பேச வந்தவனைக் கை நீட்டி தடுத்தவன்.

"சொல்றதை மட்டும் செய் தமிழு" என்று அதட்டி விட்டு அழைப்பு வரவே, போனை காதிற்கு கொடுத்தவாறு அங்கிருந்து சென்றான். தமிழ் பெருமூச்சுடன் கண்மூடி பெட்டில் சாய்ந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன்."ஐயா" என்ற குரலில் கண் விழித்தான்.

எதிரே அவன் தாய், பெரியம்மா, அப்பத்தா இறுதியில் கண்களில் ஜீவன் இன்றி வந்த பெரியத்தை குணவதியை கண்டு எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்.

உள்ளம் தடுமாற, அதன் கணம் தாங்க முடியாமல் இருந்தவனின் தலையை கோதி கொடுத்த தன் ஆச்சியின் தளர்ந்த கரங்களைப் பிடித்து நம்பிக்கையுடன் நோக்க, " இன்னும் கண்டுபிடிக்க முடியலடா" என்றதும் உடனே எழுந்தான்.

" அதெல்லாம் வேணாம் உன் அண்ணன் தேடிட்டு இருக்கான் சொல்றத கேளு " என அவனை சமாதானப்படுத்த," டேய் தமிழு" என்ற அதட்டலில் நிமிர அவன் தாத்தா தென்னவர் கோபத்துடன் அவனைப் பார்த்திருந்தார்.

அதில் ஆச்சியைப் பிடித்திருந்த கரத்தை மெல்ல விலக்கியவன். தலையையும் குனிந்து கொண்டான்.

நர்ஸ் அறைக்குள் வந்து இவர்கள் கூட்டமாக இருப்பதை கண்டு, " விசிடிங் ஹவர் முடிஞ்சிடுச்சி. இனிமேல் நீங்க யாரும் இருக்கக்கூடாது. ஒருத்தர் மட்டும் இருந்தால் போதும் " என்று கூற, அனைவரும் அவன் நலத்தை விசாரித்து அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பினர்.

துணை இருக்க வந்த தாயை தடுத்து விட்டு, கந்தனை உடன் வைத்துக் கொண்டான்.

இருவர் மட்டும் தனித்து விடப்பட, கட்டிலை விட்டு தள்ளாடியப்படி எழுந்தவன்.

கட்டில் காலில் தொங்கிக்கொண்டு இருந்த சட்டையை அணிந்தவாறு வெளியேறப் போக,

" டேய் வேணாம்டா அண்ணனுக்கு தெரிஞ்சால் பஞ்சாயத்து ஆகிடும் "என்றவனின் பேச்சை பொருட்படுத்தாமல்,

" அதுக்குன்னு இங்கே கோழை மாறி படுத்து கிடக்க சொல்றியா டா" என்று கத்தியவனைக் கண்டு பயம் பிறந்தது.

தன் நண்பனை எண்ணி அல்ல.அவனின் அண்ணனை எண்ணி தான்.

அத்தனை முறை தமிழை வெளியே விடாதே என்று எச்சரித்து இருக்க,இப்போது நண்பனின் ஆவேசம் சரியாக படவில்லை.

" வேண்டாம் டா. மேலே ஏதாவது பிரச்சனையாகிடபோது ".

அதில் கந்தனின் சட்டையை கொத்தாக பிடித்திருந்தான். அதில் மச்சான் என்று நம்ப இயலாமல் கந்தன் நண்பனை பார்க்க,

" நான் தான் பிரச்சினையை ஆரம்பிச்சேன். நானே முடிக்கிறேன்".

" டேய் வேணாம்டா. அண்ணாக்கு தெரிஞ்சால் அவ்வளவுதான்" என்று நண்பனிடம் இறங்கினான்.

" அது தெரியும் போது வடிவு நம்ம கையில் இருப்பா " என்றப்படி அவன் கதவை திறந்து வெளியேறினான்.

'யாராவது தமிழை பார்த்து தடுத்து விட மாட்டார்களா?' என்ற எண்ணம் தவிடு பொடியானது.

யாருமற்ற வராண்டாவில் எளிதாக அவன் வெளியேறினான்.

பார்க்கிங்கில் நின்ற காரைக் கண்டு தமிழ் தடுமாறினான். தன் பின்னே வந்த நண்பனை கேள்வியாக பார்க்க, "அண்ணா புல்லட்டில் போய் இருக்காரு டா" என்றதும்,

"கார் சாவி " என்க,

" என்கிட்ட தான் கொடுத்துட்டு போனார் டா" என்றதும், " அப்போ வண்டியை எடு" என்றவனைக் கண்டு, " வேணாம்டா " என்றான் இறைஞ்சலாக.

"அப்போ எல்லாரும் நினைக்கிற மாதிரி என்னால் எதுவும் பண்ண முடியாதுன்னு தான் நீயும் நினைக்கிற" என விரக்தியாக மொழிந்தவனைக் கண்டு,

" மச்சான் எது வந்தாலும் பார்த்துக்கலாம் " என்றவன்.

காரை கிளப்ப, தமிழ் கூறும் திசைக்கு எவ்வித கேள்வியும் இல்லாமல் வண்டியை செலுத்தினான்.

வண்டி இறுதியாக முள் காட்டில் நிற்க,ஒன்றும் புரியாமல் விழித்தான்.

டேய் வாடா என்று கந்தனின் கைப்பற்றிய தமிழ் அங்கிருந்த மரத்தின் பின்னால் நின்று கந்தனையும் தன்னோடு நிறுத்திக் கொண்டான்.

," என்னடா இது" என்று வினாவியவனின் வாயில் கை வைத்து மூடியவன்.

"மூச் சத்தம் போடாதே" என்று செய்கை செய்ய நண்பன் பார்க்கும் திசையை பார்த்தபடி கந்தனும் நிற்க, சில நிமிடங்களில்,

" டேய் இங்க வாடா" என்ற கத்தலில் பின்னே திரும்ப தமிழ் கைப்பிடியில் இருந்த பெண்ணைக் கண்டு மின்சாரத்தை தொட்டது போல் உடல் உதறியது.

"டேய் வேண்டாம் டா.பெரிய பிரச்சனை ஆகிடும் " என்று பதறி கொண்டு நண்பன் அருகே வந்தான்.

இருவரையும் நெருங்கும் முன் தமிழின் கைப்பிடியில் நின்று இருந்த பெண் மயங்கி சரிந்தாள்.

"அட டேய். இந்தப் புள்ளையை என்னடா பண்ணி வச்ச" என்று அதிர்வு நீங்காமல் கேட்க,

அதில் தமிழ் உள்ளங்கையை பிரித்துக் காட்ட, அதிலிருந்த மருந்து குப்பியை கண்டு "என்னடா இது" என்றான்.

"குளோரோஃபார்ம் ஹாஸ்பிடலில் இருந்து சுட்டுட்டேன். இப்போ இவளை தூக்கு".

" வேணாம்டா சத்தியமா பயமா இருக்கு " மயங்கி கிடந்த பெண்ணை கண்டு இன்னும் உதறியது.

"அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியும். முதலில் இவளை தூக்கு. அப்புறம் ஆட்டு மந்தை மாதிரி எப்படி வராங்கன்னு மட்டும் பாரு".

ஆனாலும் கந்தன் தயங்கி நின்றான்.

"வேணாம் மச்சான். இது தப்பு டா " என குற்ற உணர்வுடன் கூறினான். பெண் விஷயம் ஊருக்கு தெரிந்தால் எத்தனை பெரிய பிரச்சனை.

" ரத்தத்துக்கு ரத்தம் கேள்விப்பட்டது இல்ல. எதிரிக்கு அவனோட செயலை திருப்பிக் கொடுத்தால் எப்படி இருக்கும்னு காட்ட வேண்டாமா? " என்றவனின் குரலில் கோபத்தைத் தாண்டி வெறி வெளிப்பட்டது.

கந்தனும் வேறு வழியில்லாமல் அவளை தூக்கி காரின் பின் இருக்கையில் படுக்க வைக்க, தமிழ் முன்னிருக்கையில் ஏற, டிரைவர் இருக்கையில் அமர்ந்ததும் நண்பனை கேள்வியாகப் பார்த்தான்.

"அண்ணாவோட தோப்பு வீட்டுக்கு போ"

" உண்மையாவா சொல்ற" என்றான் ஆச்சரியம் அகலாமல்.

" அந்த இடத்தை தான் யாராலும் கெஸ் பண்ண முடியாது.போ" என்று விட்டு அவன் சீட்டில் கண்மூடி சாய்ந்து கொள்ள, இது எங்கு சென்று முடியுமோ என்ற எண்ணத்துடன் பின் இருக்கையில் மயங்கி கிடந்தவளை நோக்க, அந்த முகத்தைக் கண்டு உள்ளம் தடுமாறியது.

"டேய் பாவமா இருக்குடா" என்று கூற,

" இந்த தமிழு புளியமரத்தில் நாண்டுகிட்டு தொங்கணும்னு ஆசைப்படுறியா? " என்று உணர்வுகள் காட்டாமல் கூற,

" டேய் என்னடா பேசுற" என்ற கந்தனுக்கு கண்ணே கலங்கிவிட்டது.

" வடிவை எவ்வித சேதாரமும் இல்லாமல் நான் கண்டுபிடிக்கலைனா அதுதான் எனக்கு நிலமை. இது சத்தியம் " என்றதும் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் வழிந்தக் கண்ணீரை துடைத்துக்கொண்டு வண்டியை எடுத்தான் அந்த உயிர் தோழன்.
 
Top Bottom