• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி - 2

Vishakini

Moderator
Staff member
கதையின் பெயர் அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி

STN-83

அத்தியாயம் -02

பூட்டி இருந்த மரக்கதவு பெரும் சத்தத்துடன் திறக்கப்பட, யோசனையுடன் எழுந்த தமிழின் கன்னத்தில் இடியென அவனது அண்ணனின் கரம் இறங்கியது.

“ஐயோ! அண்ணா வேண்டாம்,” என்று தடுக்க வந்த கந்தனை அவன் பார்த்த பார்வையில், கந்தனால் மேலும் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

“அண்ணா, நான் சொல்றதைக் கேளு,” என்று விளக்க வந்த தமிழை உறுத்து விழித்தவன், “மூச்! இனி உன் வாயிலிருந்து ‘அண்ணா’ என்ற வார்த்தை வரக்கூடாது. வந்தால்...” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை செய்தான்.

அவனது உடல் கோபத்தில் தகித்தது.

“அண்ணா, தப்புதான்... மன்னிச்சுக்கோங்க,” என மிக மிகத் தயக்கத்துடன் கந்தனின் குரல் ஒலித்தது.

அதில் கோபத்துடன் ஓர் எட்டு அவனை நோக்கி அவன் எடுத்து வைக்க, கந்தனின் உடல் தானாகவே தமிழை விட்டு விலகியது.

விழிகள் தரையை நோக்கியது. எத்தனை முறை எச்சரித்துவிட்டுச் சென்றான்? வீட்டு ஆட்களைக் கூட நம்பாமல், இவனை நம்பி அல்லவா தமிழை ஒப்படைத்தான்? ஆனால், இவன் என்ன செய்து வைத்திருக்கிறான்.

சில கணங்கள் அவ்விடத்தில் மௌனம் ஆட்சி செய்ய, அவனிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

அத்தனை ஆத்திரம் இருந்தபோதிலும், அதை இருவர் மீதும் தற்போது இறக்க மனமில்லாமல், "உடனே இரண்டு பேரும் கிளம்புங்க," என்று கந்தனைப் பார்த்துக் கூறினான்.

தமிழோ, “ஆனால் வடிவு?” என்றான் அண்ணனைத் தவிர்த்து.

சீறலாக வந்த பெருமூச்சு அவனது ஆத்திரத்தின் அளவைப் பறைசாற்றியது.

“வடிவு பத்திரமா வீட்டுக்கு வந்துட்டா. இப்பவே கிளம்புங்க,” என்றவன், அறை மூலையில் கை, கால் மற்றும் வாய் கட்டப்பட்டுத் தங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளைக் கண்டு பேச்சற்றுப் போனான்.

கைமுஷ்டி கோபத்தில் இறுக, ”இப்பவே உன் நண்பனை கூட்டிக்கிட்டு கிளம்பு கந்தா!” என்ற அவனது சத்தம் அந்த வீட்டில் பட்டு எதிரொலிக்க, கந்தன் தமிழை இழுத்துக்கொண்டு சென்றான்.

மெல்ல அவளை நோக்கிச் சென்றவன், அவள் முன் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.

சில நொடி அவளையே பார்த்தபடி கேசத்தை அழுத்தமாகக் கோதியவன்.

“வெளியில் விஷயம் கசியக் கூடாது. உன் வீட்டில் ஏதாவது சொல்லிச் சமாளி. சரியா?” என்று மிரட்டலாகக் கூற, மறுக்காமல் தலையை வேகத்துடன் அசைத்தாள்.

அவளின் அந்தச் செயல் மனதில் நெருஞ்சி முள் எனத் தைத்தாலும், வேறு வழியில்லாமல் பெருமூச்சுடன் அவளை நெருங்கி கைக் கட்டை அவிழ்த்துவிட்டான்.

கைக் கட்டு அவிழ்ந்ததும் முதலில் தன் வாயில் திணித்திருந்த துணியை அவள் வேகத்துடன் எடுத்துப் போட, இரும்பல் விடாமல் வந்தது.

அதைக் கண்டு தம்பியைத் கொல்லும் வெறி எழுந்தது.

மண்பானையில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுக்க, உடனே அதனை வாங்கிப் பருகினாள்.

அவள் டம்ளரை கீழே வைத்த அடுத்த கணம், அதற்காகவே காத்திருந்ததுபோல், “கிளம்பலாம்,” என்றுவிட்டு அவன் வெளியேற, அவளும் அவன் வேகத்திற்கு ஓட்டத்துடன் பின்தொடர்ந்தாள்.

அவள் ஏறி அமர்ந்ததும் உயர் வேகத்தில் கார் சென்றது.

அவன் பார்வை அவ்வப்போது கைக் கடிகாரத்தில் பதிய, அதைக் கவனித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவளைக் கடத்திய முள் காட்டின் இறுதியில் காரின் வேகம் குறைய, புரியாமல் அவள் முன்னே பார்க்க, அங்கே தீப்பந்தம் மற்றும் ஆயுதங்களுடன் அவள் ஊர்க்காரர்கள் நின்றிருந்தனர்.

நடுநாயகமாக துரையின் தந்தையும், அவர் தம்பியும் நிற்க, உடன் ஊர்க்காரர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

“இறங்காதே” என்று அவளிடம் எச்சரித்துவிட்டு காரிலிருந்து இறங்கியவன்.

வேட்டியை மடித்துக் கட்டியபடி அவர்களை நோக்கி முன்னேற, அவள் ஆச்சரியமாகப் பார்த்தாள்.

மீசையை முறுக்கிக்கொண்டவன், தன் வெள்ளிக்காப்பை மேலே ஏற்றியபடி பார்வையால் மற்றவர்களை அளந்தான்.

அவன் நின்ற தோரணையைக் கண்ட எதிரில் இருந்தவர்களுக்குப் பயம் பிறந்தது உண்மைதான்.

துரையின் தந்தையோ மீசை துடிக்க, “அவனை விடாதீங்கடா! நம்ம வீட்டுப் பொண்ணு மேல் கைய வெச்சிருக்கான். அவன் எலும்பு கூட வீரபாண்டிபுரத்துக்குப் போகக்கூடாது!” என்று கட்டளையிட, கூச்சலிட்டுக் கொண்டிருந்த சிலர் அவனைத் தாக்க விரைந்தனர்.

அத்தனை பேரையும் ஒற்றையாளாக எதிர்கொண்டான்.

அவன் கையில் ஆயுதம் இல்லை; ஆனாலும் அவனைத் தாக்க வந்தவர்கள், அவன் அடியின் வேகத்தில் ஆயுதங்களைப் பறிகொடுத்தனர்.

குஸ்தியில் சிறந்தவனின் முன் ஆயுதம் அர்த்தமற்றதாகிப் போனது.

காரில் அமர்ந்திருந்தவளோ இதையெல்லாம் வியப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"போதும் நிறுத்துங்க!" என்ற கட்டளைக் குரலில் அவனது கரங்கள் அடிப்பதை நிறுத்த, அவனைத் தாக்க வந்தவர்கள் அவனது விழி வீச்சில் பயந்து பின்வாங்கினர்.

வீரபாண்டிபுரத்தின் தலைவர் ஆடலரசன் முன்னிற்க, அவரைச் சுற்றி முக்கிய ஆட்களும், ஊர் ஆண்களும் திரண்டு இருந்தனர்.

"போதும்... இத்தோட நிறுத்திக்கலாம்," என்ற பெரியவரின் கர்ஜனையில், துரையின் தந்தை செல்வராஜ், "எங்க வீட்டுப் பொண்ணு மேல் கை வெச்சிருக்கான். அவனை அப்படியே விடணுமா?" என்று மீசை துடிக்க எகிறிக்கொண்டு வர, இருவருக்கும் பொதுவான பெரியவர் முன்நின்று அப்போதைக்கு அமைதிப்படுத்தப் பார்த்தார்.

பேச்சு ஒரு கட்டத்தில் முற்றி மறுபடியும் கைகலப்பாக மாறப் பார்க்க, "போதும். முக்கிய ஆட்கள் மட்டும் ஊர் பொதுக் கோயிலில் கூடலாம்," என்றதும் இரு பக்கமும் கூச்சல் ஏற்பட்டது.

பேருக்குத்தான் பொதுக் கோயில்; மற்றபடி அனைத்து விசேஷங்களும் தனித்தனியாகத்தான் நடைபெறுகின்றன.

ஒரு ஊர் ஆள் கோயிலுக்குள் இருந்தால் கூட இன்னொரு ஊர்க்காரர் வரமாட்டார்கள்.

அத்தகைய பகை பல வருடங்களாக இரு ஊர்களுக்கும் இடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

"எங்க வீட்டுப் பொண்ணு மேல் கை வெச்ச அவன் கையை வெட்டிட்டுதான் எங்களுக்கு மறுவேலை," என்று துரையின் சித்தப்பா சமரசத்திற்கு வராமல் ஆர்ப்பரிக்க,

"ஆரம்பிச்சது யாரு?" என்ற வார்த்தைகளில் அவர், "அதுக்குன்னு..." என்று எகிற, அவர்களின் முன் இவன் ஓர் அடி எடுத்து வைத்து முன்னேறினான்.

"அரசா வேண்டாம்!" என்ற தந்தையின் கர்ஜனையில் கரங்களைப் பின்கட்டி நின்ற தேனரசன், துரையின் சித்தப்பாவை உறுத்துப் பார்த்தான்.

அவனது செக்கச் சிவந்த விழிகள் அந்த இருட்டிலும் வேட்டையாடும் சிங்கத்தின் கண்கள் போல் பிரகாசிக்க, எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்ட முத்துராஜ் வேறு புறம் பார்வையைத் திருப்பிக் கொண்டார்.

கோயில் திடலில் இரு குடும்பங்களின் மூத்த ஆண்கள் எதிரெதிராக நின்றிருக்க, நடுவில் முத்தையன் அமர்ந்திருந்தார்.

அவர் அருகே வீரபாண்டிபுரத்தின் பிரசிடெண்ட் தேனரசன் கரங்களைக் கட்டிக்கொண்டு இறுகிப்போய் நின்றிருந்தான்.

தமிழ் மற்றும் கந்தனின் பெயர் அடிபடாமல் இப்பிரச்சினையை எப்படிச் சுமுகமாகத் தீர்ப்பது என்பதுதான் அவனது யோசனையாக இருந்தது.

நிதானமானவனான தேனரசனை இந்தக் கடத்தல் சம்பவம் யோசிக்க வைத்தது.

தவறு தங்கள் மீது இருக்கும்போது என்ன செய்வது என்று அவனது மனசாட்சி வேறு குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது.

முத்துராஜின் பிடியில், கடத்திச் செல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட அந்தப் பெண் தளர்ந்து போய் தலைகுனிந்தபடி நின்றிருந்தாள்.

"பிரச்சினைக்கு மூல காரணமான துரை வந்தே ஆகணும்," என்ற முத்தையனின் கூற்று முடியும் முன்பே துரையின் அப்பா குறுக்கிட்டார்.

"அவன் திருச்சிக்கு நெல்லு லோடு இறக்க எப்பவோ போயிட்டான். என் வீட்டுப் பொண்ணு மேல் கை வைத்தவர்களை விட்டுட்டு, ஒன்றுக்கும் சம்பந்தம் இல்லாத என் பிள்ளையை எப்படி நீங்க இழுக்கலாம்?" என்று எகிறிக்கொண்டு வந்தார்.

அவர் பேச்சு அத்தனையும் பொய்; ஆனால் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லாத நிலையில் முத்தையன், வீரபாண்டிபுரத்தின் தலைவர் ஆடலரசனை யோசனையாகப் பார்த்தார்.

அத்தனைக்கும் காரணமான துரை தப்பித்துவிட, கடப்பட்டதாகக் கூறப்பட்ட வடிவும் அவர்கள் மாந்தோப்பிலேயே மீட்கப்பட்டாள்.

இப்போது துரைதான் வடிவைக் கடத்தினான் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

ஆனால் அதற்கு மாறாக, முத்துராஜின் தங்கை மகள் தேனரசனின் வண்டியில் கடத்தப்பட்டு, அவனது பண்ணை வீட்டிலேயே அடைக்கப்பட்டு, இப்போது அவனுடனேயே ஊர் பார்க்க வந்திருக்கிறாள்.

மொத்தத்தில், ஒழுக்கம் தவறாமல் ஊருக்கே முன்னுதாரணமாக இருந்த தேனரசனின் மீது களங்கம் விழுந்துவிட்டது.

மகனின் மீது விழுந்த அவசொல்லில் ஆடலரசன் உடைந்து போனார்.

நடந்த அனைத்தும் தெரிந்தும் ஆதாரம் இல்லாததால், பொதுவாகப் பேச வேண்டிய கட்டாயத்தில் முத்தையன் இருந்தார்.

"இங்க பாரு முத்துராஜி... ரெண்டு குடும்பமும் அவங்க அவங்க ஊரில் செல்வாக்கானவங்க. அதுவும் அரசன் இந்த ஊரு பிரசிடெண்ட்"

"பிரசிடெண்ட்னா பொண்ண கடத்திட்டுப் போறதுக்கு உரிமை இருக்கா?" என்று முத்துராஜ் எகிறிக்கொண்டு வர, "நான் பேசிட்டு இருக்கேன்ல" என்ற முத்தையனின் அதட்டலில் முணுமுணுப்போடு அமைதியானார்.

"இப்போ நீ என்ன சொல்ல வர செல்வராஜ்?" என்று விஷயம் தானாக வெளிப்படட்டும் என முத்தையன் அவரிடமே கேள்வியைத் தொடுத்தார்.

"ஊர் பஞ்சாயத்து வைங்க! எங்க வீட்டுப் பொண்ணு மேல கை வெச்சிருக்கான். இல்லைன்னா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்," என்ற செல்வராஜின் குரலில் கோபத்தை விடப் பகை மிதமிஞ்சி வெளிப்பட்டது.

இதை அப்படியே இவர்கள் விடமாட்டார்கள் என்று தேனரசனுக்கு நன்றாகப் புரிந்து போனது.

அவன் முன்னே வந்து பதில் கூறும் முன், அவளது குரல் மிக மிகத் தீனமாக ஒலித்தது.

அதில் அனைவரும் அதிர்ந்து அவளைப் பார்க்க, தேனரசன் விழிகள் விரிய அவளை நோக்கினான்.

"நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புகிறோம். எப்பவும் போலத்தான் என்னை பார்க்கவும் வந்தார்; பண்ணை வீட்டுக்கும் போனோம்," என்றவளின் கூற்றில் மற்றவர்களை விட அதிகம் தேனரசன் தான் அதிர்ந்து போனான்.

செல்வராஜ், "அடி நாயே!" என்று அடிக்கவே பாய்ந்துவிட, அதற்குள் முத்துராஜ் விட்ட அறையில் மீனாட்சி தரையில் விழுந்தாள்.

"டேய்! பெரிய மனுஷன் நான் ஒருத்தன் இருக்கேன். என் முன்னாடியே பொட்டப் புள்ளை மேலே கையை வைக்கிற?" என்ற முத்தையன், துண்டை உதறித் தோளில் இட்டுக்கொண்டு எழுந்தவர்.

பெண்ணவளை கொல்லும் வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்த, அவளின் இரு மாமன்களிடமிருந்து விலக்கி தன்னருகே நிறுத்திக் கொண்டார்.

முத்துராஜால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

"நன்றி கெட்ட நாயே! எங்க வீட்டுச் சோறு தின்னுட்டு எங்க கௌரவத்துல மண்ணள்ளிப் போடுறியா நீ?"

"முத்துராஜி! இப்படிப் பேசுறதா இருந்தா பஞ்சாயத்தை விட்டு நீ கிளம்பு," என்ற முத்தையனின் அதட்டலில், முத்துராஜ் தங்கை மகளைக் கொல்லும் வெறியுடன் முறைக்க, மீனாட்சியோ தலைகுனிந்து நின்றிருந்தாலும் மனம் உறுதியில் நிறைந்திருந்தது.

"ஏம்மா மீனாட்சி! நீ சொன்னதெல்லாம் உண்மையா? தேனரசன் கூட நீ விருப்பப்பட்டுத்தான் போனியா?" என்ற முத்தையனின் கேள்வியில், தேனரசனின் இதழ்களோ, 'இவ பேரு மீனாட்சியா?' என்று முணுமுணுத்துக் கொண்டன.

மீனாட்சியோ 'தேனரசன்... தேனரசன்...' என்று மனதிற்குள் உருப்போட்டபடியே, "ஆமாம், நானும் அவரும் விரும்பறோம். நீங்கதான் எங்களைச் சேர்த்து வைக்கணும்," என்று முத்தையனின் காலிலேயே விழுந்துவிட, ஆடலரசன் மகனை 'என்ன இது?' என்று புரியாமல் பார்க்க, அவனோ நடக்கும் கூத்து புரியாமல் நின்றிருந்தான்.

எப்போதும் தெளிவுடன் காய்களை நகர்த்தும் தேனரசனையே, அடுத்து என்னவென்று புரியாமல் திகைக்க வைத்திருந்தாள் அந்தப் பெண்.
 
Top Bottom