• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி - 3

Vishakini

Moderator
Staff member
அவனுக்கும் எனக்கும் ஓர் அரசாட்சி

STN-83

அத்தியாயம் -03

ஆடலரசனின் இல்லமே மயான அமைதியுடன் காணப்பட்டது.

வீட்டில் உள்ள பெண்கள் அவரவர் வேலையைக் கவனித்து கொண்டிருந்தாலும், மனதிலோ அத்தனை ஆர்ப்பரிப்பு.

" ஏத்தா குணா " என்று மெல்ல தன் மூத்த மகளை அழைத்தார் வேலம்மாள்.

"என்ன ஆத்தா " உணர்வுகள் அற்று வார்த்தைகள் வந்தது.

" மனசுல ஏதாவது பாரம் இருந்தால் அழுதுரு தா. ஏன் இப்படி இறுகி போய் கிடக்கிற" என்று தழுதழுத்த குரலில் மொழிந்தார்.

வடிவு வீட்டிற்கு வந்ததும் பிரச்சனை தீர்ந்தது என்று பார்த்தால் ஏதோ ஒரு வித யோசனை மற்றும் நடுக்கத்துடன் வலம் வரும் தன் மகளை கண்டு, பயமே எஞ்சியது.

இவ்விருவரை வீட்டின் மருமகள்களான கனகவள்ளியும், வாணியும் தவிப்புடன் பார்த்தனர்.

"ஆத்தா" என்ற ஒற்றை சொல்லோடு கதறல் வெடித்து சிதற, மகளை மார்போடு அள்ளிக்கொண்ட அந்த மூதாட்டிற்கும் கண்களில் கண்ணீர் பெருகியது.

" ஒன்னுமில்லை தா. நம்ப வடிவு பத்திரமா இருக்கா.ஒன்னும் இல்ல தா".

"உசுரே அந்து போச்சு ஆத்தா. என் வாழ்க்கைக்கு ஒரே பிடிப்பு என் மவதான். அவளை பணயமா வச்சுட்டாங்களே " என்று நெற்றியில் அறைந்து கொண்டு அவர் அழுக,

குணவதியின் கதறல் சத்தத்தில் தமிழ் கூனி குறுகினான்.

அவன் ஆரம்பித்த விஷயம் அல்லவா. அவர் கண்ணீர் ஒவ்வொன்றும், சாட்டை அடியாக மனதில் பாய்ந்தது.

" ஊருக்கெல்லாம் விஷயம் தெரிஞ்சு போச்சு. வந்து விசாரிக்கிறவங்க அக்கறையில் கேக்குறாங்களா பரிகாசம் பண்றாங்களான்னு தெரியலையே. 20 வருஷம் கழிச்சி மறுபடியும் அவச்சொல்லை வாங்கிட்டேனே ஆத்தா. இப்போ என்ன செய்வேன்" தலையில் அடித்துக்கொண்டு அழ,

20 வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்து ஒரு மாத கைக்குழந்தையுடன் மகள் நிற்கதியாய் வந்தது நினைவு வர, வேலம்மாளின் அழுகையும் இணைந்து கொள்ள, கனகவள்ளி தான் தன் நாத்தனாரையும்,மாமியாரையும் சமாதானப்படுத்தினார்.

" இப்போ நான் என்ன பண்ணுவேன் அண்ணி. என் மகளோட எதிர்காலமே கேள்விக்குறி ஆயிடுச்சு".

"வாயிலே போட்டன்னா பாரு. நம்ம புள்ள வாழ்க்கைக்கு என்ன " மூத்த மருமகளாக இருந்து தன் நாத்தனாரை அதட்டினார்.

" கடத்திட்டு போன பிள்ளையை இனி யார் கட்டிப்ப " நிதர்சனம் புரிந்து மூவரும் அதிர்ந்தனர்.

வாணியோ பேச்சிழந்து போனார். தன் மகன் தானே காரணம் என்ற எண்ணமே அவரை ஆறுதல் படுத்த முடியாமல் தள்ளி நிற்க வைத்தது.

"இந்த வீட்டில் பிறந்தவ டி நீ. உன்னை அப்படியே விட்டுவிடுவோமா?. அடுத்த முகூர்த்தத்தில் வடிவிற்கும் அரசனுக்கும் பரிசதைப் போட்டுடலாம். நீ அழாதே" என்றவர்.

உடனே, மூத்த மருமகளை பார்க்க, "எனக்கு பரிபூரண சம்மதம். உங்க மகன் வந்த உடனே பேசலாம்" என்று குணவதியின் மனதை சமாதானப்படுத்த தமிழோ உடைந்தான்.

குணவதியோ அதைக் கேட்டு முழுதாக மகிழ முடியாமல், " ஆனால், அரசனுக்கு இதில் விருப்பமில்லையே" என்று தளர்ந்து போய் கூறினார்.

முப்பது தொடங்கிய அரசனுக்கு திருமணம் செய்யலாம் என்று யோசனை வந்ததும் வடிவை தான் மணப்பெண்ணாக யோசிக்க, பத்து வயது இடைவெளி மற்றும் கூடவே வளர்ந்த பெண். மற்றும் மகள் போல் பார்க்கும் வடிவை திருமணம் செய்ய சம்மதம் இல்லை என்று அத்தனை கெடுபடியாக கூறியிருக்க, அந்த பேச்சு அப்படியே அமிழ்ந்து போனது.

" இத்தனை நடந்த பிறகும் அரசன் வேண்டாம்னு சொல்ல மாட்டான்.அவனை பத்தி தான் உனக்கு தெரியுமில்ல" என்று கனகவள்ளி அழுத்தி கூற, அவன் குணம், குடும்பத்திற்காக வளைந்து கொடுப்பவன்.

அதனால் குணவதி ஒருவாறு சமாதானமானார்.

தமிழோ தன்னுடலே பாரமானது போல் தோன்ற தள்ளாடும் கால்களுடன் மெத்தையில் விழுந்தான்.கை வலி வேறு உயிரை எடுக்க,அதை கூட கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.

இமையோரம் கண்ணீர் துளியாய் இறங்கியது.

கார் சத்தம் கேட்க, "முகத்தை போய் கழுவிட்டு வா தா. நான் உன் அண்ணன் கிட்ட பேசுறேன்" என்று மகளை அனுப்பியவர்.

மருமகளுக்கு கண் காட்ட, கனகவள்ளி நிறை சொம்புடன் கணவனிடம் வர அடுத்த நொடி சொம்பு நிலத்தில் விழுந்து டொம் என்ற சத்தத்தோடு தண்ணீர் நாலாபுறமும் தெறிக்க வேலம்மாளோ, "அட சூதானமா இருக்க மாட்டியா?" என்று கடிந்தப்படி வந்தவர்.

அடியாத்தி என்று நெஞ்சில் கைவைத்து கொண்டார்.

ஒருவருக்கும் பேச வாய் வரவில்லை.

வாணி தன் ஓரகத்தியை பிடித்து உலுக்க, " என்ன அரசா இது" என்று பதறி கொண்டு வந்தவர்.தன் கணவனை அதிர்வுடன் பார்க்க,

" சூழ்நிலை கை மீறி போயிடுச்சு. போய் ஆரத்தி எடு மா ".

மகனின் அருகே மஞ்சள் கயிறு கழுத்தில் தொங்க நின்றிருந்த பெண்ணை கண்டு இன்னும் அதிர்வு ஏற்பட,"வாணி இது" என்று யோசனை உடன் கேட்டார்.

" செல்வராஜ் ஓட தங்கை பொண்ணு .பேரு கூட ஆங் மீனாட்சி. திருவிழாவில் கூட பார்த்தோமே " என்று நினைவு படுத்தினார்.

"இந்தப் பிள்ளையை எப்படி " என்று நொந்து போய் கூறியவர்.

" ஏன் இப்படி" என்று தளர்ந்து போய் வாணியின் மீது சாய, அவரை தரையில் அமர வைத்தவர்.

ஓடி சென்று தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தவர். தன் மாமியாரை பார்க்க அவரோ அதற்கு மேல் மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

குணவதி சிலை என நிற்க, வாணியோ செய்வது அறியாது திகைத்து நின்றார்.

உடனே தன் கணவன் அன்பரசனை கேள்வியாக பார்க்க, அவரோ அனைத்தும் தலைக்கு மேல் போய்விட்டது என்று செய்கை செய்தார்.

தேனரசன் தொண்டையை செரும, ஒட்டு மொத்த பேரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

மகனை அழுத்தமாக பார்த்த கனகவள்ளி.

"போய் ஆரத்தி கரைச்சி எடுத்து வா".

வாணியும் மனதிற்குள் எழும் கேள்விகளை அடக்கிக்கொண்டு ஆரத்தியை கரைத்து எடுத்து வந்தார்.

வேலம்மாளோ வழிந்த வியர்வையையும் அழுகையையும் புடவை தலைப்பில் துடைத்துக் கொண்டு,"ஆத்தா வடிவு" என்று அழைக்க, தன் அறைக்கதவில் பல்லி போல் ஒட்டிக் கொண்டிருந்தவள். ஆச்சியின் அழைப்பில், உடனே அவர் அருகில் வந்து நின்றாள்.

"போய் சித்தி கூட நீ துணையா நில்லு" என்றதும், வாணியின் வால் போல் அவரை ஒட்டிக்கொண்டாள்.

ஆரத்தி தட்டை ஏந்திய வாணி தவிப்புடன் கணவனையும், கணவனின் அண்ணனையும் பார்க்க, "எடு த்தா" என்றவர்.

தளர்ந்து போய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அன்பரசன் அவரின் பின்னால் நிற்க,"அட உக்காருடா" என்றவர் நெற்றியை பிடித்துக் கொண்டார்.

இப்பிரச்சனை ஊரின் பிரச்சினையாக மாறிவிடும் என்று வம்படியாக திருமணத்தையும் முடித்த முத்தையன் மீது கோபமும், செல்வராஜ் முத்துராஜை ஒன்றும் செய்ய முடியாத இயலாமையும் அவரை ஆட்டி படைத்தது.

இடையில் வீட்டு பெண்கள் தலையிடாமல் இருந்திருந்தால் நிலைமை இத்தனை கைமீறி போயும் இருக்காது. இத்தனை அடங்கியும் போயிருக்க தேவையில்லை என்ற எண்ணமும் விடாமல் மனதை அழுத்தியது.

அனைத்தையும் மீறி வந்த மருமகளை பாம்பா? பழுதா? என்று புரியாமல் பார்த்தார்.

கூடத்திற்குள் தம்பதிகளாக வந்தவர்களை கண்டு,அதற்கு மேல் பொறுக்க முடியாமல், " என்னய்யா இது. என்ன பண்ணி வச்சிருக்கீங்க" என்று வேலம்மாள் அழுது கொண்டே கேட்க,

"நிலைமை கை மீறி போயிடுச்சு ஆத்தா "என்றவர் தரையை பார்த்தப்படி அமர்ந்து விட,

இளைய மகனை பார்க்க, அவர் நடந்தது ஒன்று விடாமல் கூற, இந்த வீட்டு மூத்த வாரிசின் திருமணம் அவர்கள் யாருமற்று கோயில் மரத்தடியில் முடிந்து விட்டதே என்று நொந்து போய் வேலம்மாள் அழ, கனகவள்ளியும் மௌனமாக கண்ணீர் வடித்தார்.

தேனரசன் தலைகுனிந்து நின்று இருக்கும் மனைவியை ஆராய்ச்சியாக பார்த்தவன்
அடுத்த நிமிடமே, சித்தி என்றழைக்க, வாணியும்,"சொல்லுப்பா" என்று வந்து நிற்க,

"பார்த்துக்கோங்க" என்று மனைவியின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விட்டு தன்னறைக்குள் சென்றான்.

"ஆத்தா" என்று ஆடலரசன் அழைக்கவும் அழுகையை நிறுத்தியவர்.

மகனின் பார்வையில், "கனகு அந்த பொண்ணை விளக்கு ஏத்த சொல்லு".

வள்ளி புரியாமல் அவரை பார்க்க, ஆடலரசனுக்கோ மனைவியை எண்ணி வருத்தம் மிஞ்சியது.

"போ கனகு" என்று மீண்டும் அழுத்தி கூறவும் தான் எழுந்தவர். மீனாட்சியை கண்டு மீண்டும் யோசனையில் மூழ்கினார்.

அத்தனை கலையான முகம். திருவிழாவில் பார்க்கும் போது கூட 'இந்த அடாவடி குடும்பத்தில் இப்படி ஒரு பெண்ணா?' என்று ஆச்சரியம் எழாமல் இல்லை.

ஒரு பெருமூச்சுடன், " வா" என்று அழைத்து விட்டு பூஜை அறைக்கு சென்றவர். நேர்த்தி படுத்திவிட்டு வாணியை நோக்க, தலையசைப்புடன் சென்றவர். தேனரசன் உடன் வந்தார்.

மகனின் உடை மாறி இருப்பதில் பெருமூச்சும் எழ, தீப்பெட்டியை மீனாட்சியின் கையில் அளித்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

கையில் இருந்த தீப்பெட்டியை பார்த்தபடி இருந்தவளின் பக்கம் குனிந்தவன்.

"விளக்கை ஏத்து" என்று கூற, அவளும் எதுவும் தோன்றாமல் விளக்கை ஏற்றிவிட்டு கைகூப்பி கண் மூடி நிற்க, தேனரசனின் பார்வை மொத்தமும் அவளின் மீதுதான்.

உள்ளுக்குள் ஏதோ ஒன்று அரித்துக் கொண்டு இருக்க, சரியான நேரத்திற்காக காத்திருந்தான்.

"நான் கிளம்புறேன் மா" என்று கூறி விட்டு சென்றவனை யாரும் தடுத்து நிறுத்தவில்லை.

"ஒரு நிமிஷம்" என்று மிக சன்னமாக மீனாட்சி குரல் ஒலிக்க, அதில் அருகில் இருந்த கனகு மட்டுமே திரும்பி பார்க்க, " உங்க மகனை கூப்பிடுங்க" என்றதில், அவர் புரியாமல் நோக்கினார்.

வாணியோ, " தேனரசா உன் பொண்டாட்டி கூப்பிடுறா " என்று போட்டு உடைக்க, அவனும் உடனே நின்று அவளை புரியாமல் பார்த்தவனின் விரல்கள் அவன் நெற்றியை அழுத்தமாகப் பற்றி கொண்டது.

என்ன என்று சத்தம் வராமல் வாயசைக்க, " என்னோட பேக் உங்ககிட்ட இருக்கு.குடுங்க" என்று கேட்டபடி,அவனை நோக்கி சென்று இருந்தாள்.

" என்ன பேக்" என்று புரியாமல் விழித்தவனுக்கு உடனே நினைவு வந்தது.

கடத்தி வைத்து இருந்த போதிலும் சரி, அவளின் மாமாவிடம் அடி வாங்கும்போது கூட தோளில் அந்த பை இருந்ததல்லவா?

திருமணத்தின் போது கூட இறுக்கி பிடித்து இருந்தாளே என்று நினைவு வர, தலையசைத்தவன்.

காருக்கு செல்ல அவளும் பின்னோடு வரவே கேள்வியாக பார்த்தாலும் தடுக்கவில்லை.

சீட்டில் கிடந்த பையை எடுத்து அவளிடம் கொடுக்க, அதை உடனே தோளில் மாட்டிக் கொண்டவள்.

"தேங்க்ஸ்" என்று விட்டு நகர பார்க்க,"நீ "என்று ஆரம்பித்தவன். அவள் பார்த்தபடி இருக்கவும், " சித்தி கூட இரு " என்று விட்டு சென்றான்.

காரை எடுத்தவன் உள் மனதில் அத்தனை ஆர்ப்பரிப்பு. இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கோபம் இரண்டு மடங்காக உரு பெற்றது.

வீட்டிற்குள் வந்தவள். அனைவரும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருப்பதையும் ஆண்கள் இல்லாமல் இருப்பதை கண்டு, வாணி அருகில் வந்து நிற்க, நிமிடங்கள் தான் கடந்ததே தவிர அவர்கள் நிலை மாறாமல் இருக்க,

" எனக்கு பசிக்குது" என்றவளைக் கண்டு வாணியோ தடுமாறி போய் கனகுவை பார்க்க,நெற்றியை தேய்த்துக்கொண்டு எழுந்தவர்.

சமையல் அறை செல்ல, மீனாட்சியும் அவர் பின்னோடு சென்றாள்.

இரவு உணவு ஏற்கனவே தயாராகி இருக்க அனைத்தையும் சூடு படுத்தியவர்.

முதலில் மீனாட்சிக்கு உணவை தட்டிலிட்டு தந்தார்.

"நீங்க எல்லாம் எப்போ சாப்பிடுவீங்க" என்று சாவகாசமாக கேட்டபடி உண்டவளை வீட்டு பெண்கள் புரியாமல் பார்த்தனர்.
 
Top Bottom