• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உலா வரும் வெண்ணிலா - 6

Vishakini

Moderator
Staff member

உலா வரும் வெண்ணிலா

அத்தியாயம் 6

தாமஸ் இருப்பிடம் சென்று சேரும் வரை அத்தனை மௌனம் அதிரனிடம். அது தான் அவ்வளவு உறுத்திக் கொண்டிருந்தது தாமஸிற்கு.

வீடு வரவுமே அதிரன் அமைதியாய் காரை நிறுத்தி இருக்க, தாமஸ் அவன் முகம் பார்த்தே அமர்ந்திருந்தான்.

தன் யோசனையில் இருந்த அதிரனும் எதுவும் பேசாமல் தானே தாமஸ் வீட்டின் முன் வண்டியை நிறுத்தி இருக்க, சில நொடிகளுக்கு பின் அதுவும் தாமஸ் இறங்கவில்லை என்பதில் தான் சுயம் வந்து திரும்பி அவனைக் கண்டான்.

"என்ன டா இறங்கலையா?" அதிரன் கேட்க,

"சாரி சார்! நான் வேணும்னு சொல்லல. உங்க அப்பா தானேனு தான்...." என்றவனுக்குள் அத்தனை கவலை.

மாலில் வைத்து ஹரிச்சந்திரன் அழைத்ததில் இருந்து அவர் போனை வைத்தது வரை அதிரனிடம் தாமஸ் சொல்லி இருக்க,

"வாட்?" என்று அதிர்ந்த அதிரன்,

"எல்லாமே சொல்லிட்டியா?" என்ற போது அவன் கண்களில் அத்தனை கோபத்தை கண்டிருந்தான் தாமஸ்.

"எங்க இருக்கீங்கனு கேட்டாங்க சார். மால் பேரை சொன்னேன். வேற எதுவும் சொல்லல!" என்றதற்கே அதிரன் தலையில் கை வைத்திருக்க,

"என் நம்பர் கேட்டாங்க. சொன்னேன் சார்!" என்றும் தயங்கி தயங்கி தாமஸ் சொல்லி இருக்க,

"ப்ச்! யார் உன் நம்பர் கேட்டாலும் சொல்லிடுவியா நீ?" என்ற போதும் அதிரன் கோபமாய் கேட்டதாய் தான் தோன்றியது தாமஸ்ஸிற்கு.

அடுத்து எதுவும் பேசவில்லை. ஷாப்பிங் கூட பாதியிலேயே நிறுத்தி விட்டானோ என்பதை போல உடனே அங்கிருந்து கிளம்பி இருந்தான் அதிரன்.

தன்னால் தானோ? தன் மேல் தான் கோபமோ என மனமெல்லாம் பாரமேறிய உணர்வில் அவன் முகம் பார்த்து தயங்கி என்று தான் வீடு வந்திருக்க, அதிரன் அவனாய் பேசும் வரை வாயே திறக்கவில்லை தாமஸ்.

தான் பேசினால் எதுவும் கோபமாய் சொல்லிவிடுவானோ என அதற்கும் பயம் என்பதை விட அதை தாங்க முடியாதோ என்று தான் நினைத்தான் தாமஸ்.

இப்போதும் கூட, "என்ன டா இறங்கலையா?" என அதிரன் அவனே கேட்டபின் தான்,

"சாரி சார்! ரெண்டு டைம் கன்டின்யூஸ்ஸா கால் வந்துச்சு. உங்க அப்பா பேர் பார்த்ததனால தான் எடுத்தேன். இல்லைனா எடுத்திருக்கவே மாட்டேன். உங்களை தேடுறாங்களோனு தான் எடுத்தேன்!" என முழு விளக்கம் கொடுக்க தாமஸ் தயாராய் இருக்க,

"ஹ்ம்! நல்லா தேடினாங்க போ! சரி அதான் சொல்லிட்டியே! அப்புறம் என்ன?" என அதிரன் இப்பொழுது சாதாரணம் போல கேட்க,

"இன்னும் என் மேல கோவமா தான் இருக்கீங்களா சார்?" என்றான் தாமஸ்.

"நீயா நினைச்சிட்டியா? ஏன் டா? எனக்கு இருக்குற பிரச்சனை போதாதா? முதல்ல நீ என்னை அதினு கூப்பிடு. அப்போ தான் நீ சரிப்பட்டு வருவ. நான் வேற ஏதோ யோசனைல இருந்தேன். அதுக்கு இவ்வளவு விளக்கம் சொல்ற நீ?" என்று முறைத்தான் அதிரன்.

"அப்போ நிஜமா கோபம் இல்லையா?" தாமஸ் மீண்டும் கேட்க,

"உன் மேல கோபம் இல்ல!" என்று தெளிவாய் கூறினான் அதிரன்.

"நடக்குறது நடந்து தானே தீரும்? விடு ஃபேஸ் பண்ணிக்கலாம்" என்ற அதிரன்,

"இப்ப இறங்குறியா இல்ல என்கூடவே என் வீட்டுக்கு வர்றியா?" என்று கேட்டதும் வேகமாய் இறங்கிய தாமஸ்,

"இன்னொரு விஷயம் சார்!" என்றவன் எதற்கும் எச்சரிக்கையாய்,

"சொன்னா திட்டமாட்டிங்களே?" என்றும் கேட்க,

"என்னனு சொல்லு டா! பக்குனு இருக்கு!" என்றான் அதிரன்.

"உங்க அப்பா என்னை யார்னு கேட்டாங்க. உங்க கம்பெனில ஒர்க் பண்றேன்னு சொன்னேன்!" என்றதற்கே அதிரன் முறைக்க,

"கம்பெனியானு ஷாக் ஆன மாதிரி கேட்டாரு சார்!" என்றான்தாமஸ் மீண்டும் பயத்தோடு.

"அவருக்கு தெரியாத விஷயத்தை சொன்னா ஷாக் ஆகாம என்ன பண்ணுவார்?" என்றவன்,

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ ஏன் டென்ஷன் ஆகுற?" என்று முறைத்துவிட்டே கிளம்ப இருந்தான் அதிரன்.

தாமஸ் முகமே சரி இல்லை. அதுவும் ஹரிச்சந்திரனிடம் பேசிய பின் தான். முக்கியமாய் அதை அதிரனிடம் சொல்லிய பின் தான். அதை அதிரனும் இப்பொழுது கண்டு கொண்டவன்,

"நான் கிளம்பவா தாமஸ்?" என்று கேட்க,

"ஹான்! ஓகே சார்!" என்ற தாமஸ் முகம் தெளிவில்லை என்றதும் இறங்கிவிட்டான் காரில் இருந்து அதிரன்.

அதில் இன்னும் பதறினான் தாமஸ். "என்ன தான் டா உன் பிரச்சனை? சிரிச்சிட்டே வழி அனுப்பேன். அதினு கூப்பிடேன். இவ்வளவு கெஞ்சுறேன்ல?" என்று அதிரன் கேட்க, தாமஸ் அல்லாடிப் பார்த்தான் அவனை.

"ஹெலோ சார்!" என்ற குரலில் அதிரன் தாமஸ் இருவரும் திரும்ப, அங்கே கையில் ஒரு குட்டி சில்வர் பக்கெட்டுடன் நின்றாள் அஞ்சனா.

"குட் ஈவ்னிங் அஞ்சனா!" என்று அதிரன் புன்னகைக்க,

"குட் ஈவ்னிங் சார்!" என்றவள் தாமஸ்ஸைக் கண்டாள்.

"ஓகே தாமஸ். நீ பாரு. நான் அப்புறமா பேசுறேன்!" என்ற அதிரன் காரில் ஏறப் போக,

"சாப்பிடுறிங்களா சார்? தாமஸ் அண்ணாக்கு தான் கொண்டு வந்தேன்!" என்றாள் அஞ்சனா.

சில நொடிகள் முழுதாய் அந்த நேரம் அஞ்சனாவிடம் தான் இருந்தது அதிரனின் பார்வை எல்லாம்.

அஞ்சனா புருவங்கள் சுருங்க கேள்வியாய் அவனைப் பார்க்க, அதிரனும் சுதாரித்தவன்,

"அவனுக்கே குடு. அவன் தான் பேயடிச்சா மாதிரி நிக்குறான்!" என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

"என்னாச்சு? எதாவது பிரச்சனையா? ஏன் இப்படி நிக்கிறீங்க?" என அதிரன் சென்றதும் அஞ்சனா தாமஸிடம் கேட்க, தலையை பலமாய் உலுக்கினான் அவன்.

"எதுவுமே புரியல அஞ்சனா!" என்ற தாமஸ் முழுதாய் அவளிடம் நடந்ததை சொல்ல,

"அப்படினா ஒருவேளை வீட்டுல கோச்சுக்கிட்டு தனியா வந்திருப்பாரா இருக்குமோ?" என்றாள் அதைக் கேட்டவள்.

"ப்ச்ப்ச்! வேறென்னவோ இருக்கு. ரொம்ப கோவமாகிட்டார் அந்த நேரம். இப்ப தான் கொஞ்சம் சமாதானமான மாதிரி பேசினார். என் மேல கூட கோவம் இருக்க தான் செய்யும். ஆனா எதுவும் சொல்லல. எனக்கு தான் கஷ்டமா இருக்கு அவரை இப்படி பார்க்க!" என தாமஸ் புலம்ப,

"ஆரம்பிச்சுட்டீங்களா? எனக்கென்னவோ அதிரன் சார் லவ்வர் நீங்கனு தோணுது. எவ்வளவு உருகுறிங்க!" என அஞ்சனா கிண்டல் பேச,

"என்னவோ பெரிய பிரச்சனைனு தோணுச்சு. அதான் சொன்னேன். வேற எதுவுமில்ல!" என்ற தாமஸ் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் அவள் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

அதிரனும் இதை எதிர்பார்க்கவே இல்லை. தெரியவே கூடாது என்று நினைக்கவில்லை தான் என்றாலும் எல்லாம் நல்லபடியாய் முடியும் வரை அமைதியாய் செல்ல தான் அவன் நினைத்தான்.

இப்பொழுது இப்படி தந்தைக்கு தான் இருக்கும் இடம் தெரிந்ததில் முதலில் அதிருப்தி தான் என்றாலும் வர இருப்பதை எதிர்கொள்ள தான் வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.

தான் இருக்குமிடம் தாமஸ் சொல்லவில்லை என்றாலும் இனி அந்த மால் பெயரை வைத்தே தன் இடத்தை அவர் கண்டு கொள்வார் என அவனுக்கே தெரியும். அது தான் நடந்ததும் கூட.

நண்பனுக்கு தானே அழைத்த அதிரன் இதை எல்லாம் அவனிடம் சொல்ல,

"ஓஹ்!" என்ற நண்பனுக்கும் என்ன என்று சில நிமிடம் எதுவும் விளங்கவில்லை.

"என்ன பண்ணலாம்னு இருக்க அதி?" என அவன் கேட்க,

"இனி என்ன இருக்கு? என் லைஃப்ல எல்லாமே கடந்து வந்துட்டு தானே இருக்கேன். இதையும் கடந்து தான் ஆகணும் நான்!" என்றான் அதிரன்.

"ஆனா அவ?" என்ற நண்பன் குரலில் கொஞ்சம் கலக்கம்.

"நான் என்ன தான் டா பண்ண? செத்துட்டு இருக்கேன் டா. மனசு அவ்ளோ பாரமா இருக்கு. அவ மடில சாஞ்சுக்க தோணுது. ஆனா முடியலையே! என் நிலைமை எல்லாம் யாருக்குமே வர கூடாது!" என்ற அதிரன் குரலில் தான் நண்பனுமே தெளிந்தான்.

"ஓகே அதி! விடு! எல்லாம் சரியாகட்டும். ஆனா கொஞ்சம் கவனமா இரு டா. அவளும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. உனக்கு சொல்லி தெரியணும்னு இல்லை. இந்த வாழ்க்கையும் சரி அவ அப்ப வாழ்ந்த வாழ்க்கையும் சரி. ரெண்டுமே அவளுக்கு கொடுமை தான்!" என்று நண்பன் சொல்ல,

"நான் இருக்கேன். எப்பவும் இருப்பேன். என்னை நம்புறியா நீ?" என்றான் அதிரன்.

"உன்னை நம்பாம உன் கூட இவ்வளவு தூரம் வந்து இருப்பேனா நான்?" என்றான் அவன்.

"ஹ்ம்! பார்ப்போம். எனக்குன்னு என்ன விதிச்சிருக்குன்னு!" என்று சொல்லி அதிரன் வைக்க, அடுத்த மூன்று நாட்களில் எல்லாம் ஹரிச்சந்திரன் அதிரனின் கம்பெனியை கண்டுபிடித்து அங்கேயே வந்துவிட்டார் நேருக்கு நேராய்.

அன்று சனிக்கிழமை. அத்தனை வேகமாய் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. மணி ஐந்தை தாண்டி இருந்தது.

ஆறு மணிக்குள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று தாமஸ் கூறி இருக்க, அதற்கான வேலைகளில் அவன் கவனமாய் இருந்தான் தாமஸ்

அன்று மாலில் இருந்து வந்த அடுத்த நாள் தாமஸ் அதிரனை அவ்வளவு கவனிக்க,

"என்ன லுக்கு டா இது? என்னவோ கண்காணிக்குற மாதிரி?" என்று அதிரனே சிரித்திருந்தான் அவனிடன். அதற்கு தாமஸ்ஸும் அசடு வழிய சிரிக்க, அஞ்சனா வேறு அதை சொல்லிக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்.

எந்த மாற்றமும் இல்லை அதிரனிடம். எப்பொழுதும் போல தான் இருந்தான். அதிரனின் தந்தை வருவாரோ என தாமஸ் நினைக்க, அதுவும் இல்லை என்றதில் அதிரனைப் பற்றி இன்னுமே தெரிந்து கொள்ள தூண்டியது அவன் உள்ளம்.

இப்படி அடுத்த இரண்டு நாட்களும் செல்ல, மூன்றாம் நாள் மதிய வேளையில் ஹரிச்சந்திரன் அதிரனின் இடத்தினைக் கண்டுபிடித்து அங்கு வந்து சேர்ந்தார்.

புகைப்படத்தைக் காட்டி, "அதிரன்! எங்க இருக்கான்?" என்று அங்கே வேலை செய்யும் நபரிடம் கேட்க, அதிரனின் அறையைக் காட்டி,

"இப்ப சார் சாப்பிடுற நேரம். அதோ அந்த ரூம்ல இருப்பாங்க!" என்றார் அவர்.

அவர் சொல்லிய இடத்துக்கு மகனைக் காண என அத்தனை வேகமாய் வந்தார் ஹரிச்சந்திரன். அவர் அலைபேசியிலும் விடாத அழைப்பு மனைவியிடம் இருந்து.

"கொஞ்சம் அமைதியா இரேன் எழில். நானே இன்னும் அவனைப் பார்க்கல. பார்த்துட்டு உன்கிட்ட தானே கூட்டிட்டு வரப் போறேன்? இல்ல போன் பண்ணி தர்றேன் பேசு. இப்படி போன் பண்ணிட்டே இருந்தா நான் அவனை பார்க்க வேண்டாமா?" என மனைவியிடம் பேசியபடி மகனை நெருங்கிய ஹரிச்சந்திரன் அதிரனைக் கண்டுவிட்ட சந்தோஷத்தில் முகம் மலர இருந்தவர் முகம் மொத்தமும் இருண்டு போனது அதிரனின் அருகில் இருந்தவளைக் கண்டு.





 
Top Bottom