என் தேசமிங்கே பூந்தோட்டமாக - எபிலாக்

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN 22

Member
May 5, 2026
51
35
18
Tamilnadu
வசுமதியின் பெற்றோரான விஜயனும், கண்மணியும் தங்களுக்குச் சம்யுக்தனும், பிரார்த்தனாவும், அவர்களது குடும்பங்களும் அளித்த உறுதுணையாலும், நம்பிக்கையாலும் தங்களை மீட்டெடுத்துக் கொண்டு தங்கள் வாழ்வை நிம்மதியாக கழித்துக் கொண்டு இருந்தார்கள்.

அதேபோல் பிரார்த்தனாவின் ஈடுபாட்டால் சம்யுக்தனும், அவனது குடும்பமும் தங்களது குற்ற உணர்வைக் கைவிட்டு விட்டு அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

அதைக் கண்டுத் தாங்களும் எந்த வித முணுமுணுப்புப் பேச்சும் இல்லாமல் தங்கள் மகளின் இல்லற வாழ்க்கையில் இனிமேல் எந்தப் பிரச்சினையும் வராது என்று திருப்தி அடைந்தார்கள்.

தனக்குப் பிடித்த ஆண்மகனுடன் வாழ்வதற்குத் தனக்கு இரண்டாவது வாய்ப்புத் தான் கிடைத்துள்ளது என்பதில் மிகவும் மனம் வருந்திய பிரார்த்தனாவிற்கோ, அவனை முழுமையாக ஆளப் போகும் ஒரே பெண் தான் மட்டும் தான் என்பதை அவன் வாயிலாகவே கேட்டறிந்து கொண்டதில் உலகத்தையே வென்று விட்டதைப் போன்ற உவகை அடைந்திருந்தாள்.

தனது மனைவியைத் தன் தோளில் தாங்கிக் கொண்டு,”நீ ஏன் என்னை இவ்வளவு காதலிக்கிற?”என்று அவளிடம் வினவினான் சம்யுக்தன்.

அதில் அவனை நிமிர்ந்து பார்த்து,”ஏன் திடீர்னு உங்களுக்கு இந்தச் சந்தேகம்?”என்றிருந்தாள் பிரார்த்தனா.

“சந்தேகம் இல்லை. தெரிஞ்சிக்கக் கேட்டேன்”

“ஓஹோ! நான் ஆசிரமத்தில் வளர்ந்ததால் எனக்கு எல்லாமே ரெண்டாவது வாய்ப்பாகத் தான் கிடைக்கும்! அதே மாதிரி தான் பேரன்ட்ஸூம். எனக்குப் பிடிச்ச விஷயங்கள் எல்லாமே எனக்கு ரெண்டாவது வாய்ப்பில் கிடைக்கிறதைப் பார்த்து ரொம்ப கஷ்டமாக இருக்கும்! ஏன் எல்லாருக்கும் ஈஸியாக, நியாயமாக கிடைக்கிற விஷயங்கள் எனக்கு மட்டும் ரொம்ப கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சால் தான் கிடைக்குதுன்னு நிறைய யோசிச்சுப் பார்த்து அழுது இருக்கேன்! அதே மாதிரி நான் உங்களை ஃபர்ஸ்ட் லவ் பண்ணி இருந்தாலும் இரண்டாவது தடவையாகத் தான் உங்களைக் கல்யாணம் செய்துக்க வாய்ப்புக் கிடைச்சது! நான் நினைச்சு இருந்தால் நீங்க வசுமதியைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு அப்பறம் உங்களை விட்டு இருக்கலாம். ஆனால் என்னால் அது முடியலை! அதே மாதிரி என் காதல் அவ்வளவு உறுதியானதான்னும் எனக்கே ஆச்சரியமாக இருந்துச்சு! வசு இறந்ததுக்கு அப்பறம் உங்களுக்கு மேரேஜ் செய்யப் பொண்ணுப் பார்க்கிறாங்கன்னுக் கேள்விப்பட்டதும் உங்களை இந்த தடவையும் இழந்துடக் கூடாதுன்னு என் மனசு ரொம்பவே உறுதியாக சொல்லுச்சு! அதனால் தான் நான் உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டேன்! நான் உங்களுக்கு ரெண்டாவது மனைவியாக இருந்தாலும் உங்களை முதல் முதலில் ஆளப் போறது நான் தான்னுத் தெரிஞ்சதும் எனக்கு ஏற்பட்ட அந்தச் சந்தோஷத்தை வார்த்தையால் சொல்ல முடியலை! நான் இப்பவும் அந்தளவுக்கு நெகிழ்ந்து போய் இருக்கேன்!”என்றுரைத்தவளின் பிறை நெற்றியில் தனது இதழ்களைப் பதித்து விட்டு,

அவளைத் தன் முன்னால் கொண்டு வந்து,”இதுக்கு முன்னாடி வரைக்கும் வறண்டு, வாடிப் போயிருந்த என்னோட தேசம் இப்போ உன்னோட உண்மையான காதலால் பூந்தோட்டமாக மாறிடுச்சும்மா! அதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”என்று நெகிழ்வாக கூறியிருந்தான் சம்யுக்தன்.

அதில் பெரு உவகை அடைந்தவளோ,”அந்தப் பூந்தோட்டத்தில் ஒரு குட்டி மொட்டு வந்திடுச்சுங்க!”என்றவனிடம்,

தன்னிடமிருந்த கர்ப்பத்தைப் பரிசோதனையைச் செய்யும் உபகரணத்தைக் கொடுத்து இருந்தாள் பிரார்த்தனா.

அதில் அவர்களது தேசத்தின் முதல் மொட்டின் வருகையை அறிவிக்கும் வகையில் இரண்டு சிவப்பு நிறக் கோடுகள் காணக் கிடைத்தது.

அதைப் பார்த்ததும்,”உன்னாலேயும், நம்மக் குழந்தையாலேயும் என் தேசம் எப்பவும் பூந்தோட்டமாகத் தான் இருக்கும்!”என்றவனோ, தன் மனைவியை மெல்ல அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தான் சம்யுக்தன்.

அதற்குப் பிறகு மருத்துவமனைக்குச் சென்றுத் தனது கர்ப்பத்தை உறுதி செய்து விட்டுத் தங்கள் இரு வீட்டாருக்கும் தெரிவித்து விட்டாள் பிரார்த்தனா.

அதைக் கேட்டதும்,”அப்படியா? இந்த நாளுக்காகத் தான் நாங்க ரொம்ப காத்திருந்தோம்!”என அவர்களிடம் தங்களது மகிழ்வைத் தெரிவித்தார்கள் ஜெயராம், கலாவதி.

அதேபோல்,”வாழ்த்துகள் அண்ணா”,

“வாழ்த்துகள் அண்ணி”என்று அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக் கூறினான் பிரதீபன்.

தனது கர்ப்பத்தைப் பற்றி வசுமதியின் பெற்றோரிடமும் உரைத்து விட்டிருந்தாள் பிரார்த்தனா.

அவர்களோ எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல்,”ரொம்ப சந்தோஷம்மா! உனக்கு என்ன வேணும்னாலும் எங்ககிட்ட கேளு! நாங்களும் உனக்கு அப்பா, அம்மா மாதிரி தான்!”என்று அவளுக்கு அறிவுறுத்தினர் விஜயன் மற்றும் கண்மணி.

ஆசிரமத்தில் வளர்ந்த தனக்கு அனைத்துச் சொந்தங்களும் கிடைத்து விட்ட மகிழ்ச்சியிலும், இன்னும் சில மாதங்களில் தனக்குக் கிடைக்கப் போகும் புது சொந்தத்தின் வரவை எதிர்பார்த்து அதற்கு இடைப்பட்ட காலத்தை இனிமையுடன் கழிக்கத் தொடங்கி விட்டாள் பிரார்த்தனா.

இனிமேல் சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனாவின் தேசம் முழுவதும் பூந்தோட்டமாகவே பூத்துக் குலுங்கட்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோமாக!

சுபம்
 
Last edited by a moderator:

Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - எபிலாக்
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.