என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN 22

Member
May 5, 2026
51
35
18
Tamilnadu
அதற்குப் பிறகுத் தங்களது பேச்சு வார்த்தைகளை முடித்துக் கொண்டுத் தங்களது மகள் மற்றும் மருமகனை மறு வீட்டு விருந்திற்கு முறையாகத் துணிமணிகள் கொடுத்து அழைத்து விட்டுத் தங்கள் சம்பந்தி வீட்டாரையும் அழைத்து விட்டு அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு அவர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டார்கள் பிரார்த்தனாவின் பெற்றோரான சக்திவேல் மற்றும் கோமளா.

அவர்கள் சென்றதும் வீட்டினரும் தத்தமது அறைகளுக்கு உறங்கப் போய் விடவும்,

இங்கே தங்களது அறைக்குள் நுழைந்த மனைவியைப் பின் தொடர்ந்து வந்து, கதவைச் சாற்றி விட்டு அவளின் முன்னால் போய் நின்றிருந்தான் சம்யுக்தன்.

தனது வழியை மறைத்திருக்கும் கணவனின் முகத்தைக் குறும்புடன் ஏறிட்டுப் பார்த்தாள் பிரார்த்தனா.

“என்ன உனக்கு ரொம்ப திமிர் ஏறிப் போச்சுப் போலவே?”என அவளை முறைக்க,

“திமிர் ஏறி எல்லாம் போகலைங்க. ஏற்கனவே மலையளவு இருக்குத் தான்!”என்று தன் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டுப் பதிலளிக்க,

“ப்ச்! நீ பாட்டுக்கு எல்லார் முன்னாடியும் அப்படி நடந்துக்கிட்டியே? அதைப் பார்த்து நான் தான் திகைச்சுப் போயிட்டேன்! இனிமேல் இப்படி செய்யாதே!”என்று அவளுக்கு அறிவுறுத்தினான் சம்யுக்தன்.

“ஏன்? அதான் யாரும் பார்க்கலையே? அப்பறம் என்னங்க?”என்று அவனிடம் வினவினாள் பிரார்த்தனா.

“யாரும் பார்க்கலைன்னா எனக்கு ஒரு மாதிரி இருக்காதா என்ன? அதனால் தான் சொல்றேன். இது தான் கடைசி தடவையாக இருக்கனும்”என்று கடுமையாக மொழிய,

“அப்படியா? நாம ரெண்டு பேரும் புருஷன், பொண்டாட்டி தானே? இனிமேல் இதையெல்லாம் நீங்கப் பழகிக்கோங்க”என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டு உறக்கத்தை மேற்கொண்டாள் பிரார்த்தனா.

அவளைப் பெருமூச்சுடன் பார்த்து விட்டுத் தானும் உறங்கிப் போனான் சம்யுக்தன்.

அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் வேலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த மனைவியிடம்,

“நீ என்னை உனக்கு ஏத்த மாதிரி மாத்தனும்னு டிரை பண்றியா?”என்று அழுத்தமாக கேட்டிருக்க,

உடனே,”இல்லையே! உங்களுக்கும் என்னைப் பிடிச்சு இருக்கு! ஆனால் வசுமதிக்குச் செஞ்ச அநியாயத்தை நினைச்சுக் குற்ற உணர்வாக ஃபீல் பண்றீங்க! அதனால் தான் நீங்க என் கூடச் சாதாரணமாக நடந்துக்கத் தயங்குறீங்க! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியலை! ஒரே மாதிரியான குணாதிசயங்கள் கொண்ட தம்பதிகளும் நல்ல புரிதலோட வாழ்ந்துட்டுத் தான் இருக்காங்க! ஆனால் அது எல்லாருக்கும் செட் ஆகிறது இல்லை! ஒருவேளை, உங்களோட அமைதியான, அழுத்தமான குணத்துக்கு என்னை மாதிரியான எதிர்மறையான குணாதிசயம் இருக்கிற பொண்ணு தான் செட் ஆவாள்ன்னுக் கூட விதி உங்க தலையில் எழுதி வச்சிருக்கலாம்! அதனால் கூட வசுமதி இறந்ததுக்கு அப்பறம் நான் உங்களுக்கு மனைவியாகி இருக்கேன்னுத் தோணுது! நான் நேத்து நடந்துக்கிட்டதில் உங்களுக்கு அருவருப்பான உணர்வுத் தோன்றி இருந்தால் மட்டும் எங்கிட்ட சொல்லுங்க! நான் இனிமேல் அப்படி நடந்துக்கவே மாட்டேன்!”என்றுரைத்து விட்டு வரவேற்பறைக்குச் சென்று விட்டாள் பிரார்த்தனா.

அதைக் கேட்டுச் சில கணங்கள் அப்படியே சிலையாகச் சமைந்து நின்று விட்டிருந்தான் சம்யுக்தன்.

ஏனெனில் அவள் கூறிச் சென்றது அனைத்தும் உண்மை தான் என்பது அவளைப் பார்க்கும் போது எல்லாம் அவனுக்குள் தோன்றும் இரசாயன மாற்றங்களே அதற்குச் சாட்சியாக இருந்தது.

பிரார்த்தனவுடன் ஒரே அறையில் தங்கிக் கொண்டு, ஒரே கட்டிலில் உறங்கிக் கொண்டும் இருந்தாலும் கூட அவளைப் பார்க்கும் நேரத்தில் எல்லாம் தயக்கமும், அருவருப்பும், ஏன் அவளிடம் இருந்து தள்ளி இருக்கக் கூடத் தோன்றவில்லை என்பதைப் புரிந்து கொண்டான் சம்யுக்தன்.

அதேபோல் அவளது நேற்றைய கண் சிமிட்டலைக் கூட ரசனையாகவும், திகைப்பாகவும் தான் எதிர்கொண்டானே தவிர்த்து அதில் அருவருப்போ, பிடித்தமின்மையோ ஏற்பட்டு அவளிடமிருந்து பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை என்பதையும் அறிந்து கொண்டவனுக்குதஅ தன் முதல் மனைவி வசுமதியுடன் ஒரே அறையில் வாசம் செய்யும் நாட்களில் அவளிடம் நடந்து கொண்டதையும் அசை போட்டான்!

அவளுடன் தனிமையாக அறையில் தங்கி இருக்கும் நேரங்களில் எல்லாம் அவளுடன் தாமரை இலைத் தண்ணீர் போல் தான் நடந்து கொள்வான்!

அதேபோல் வசுமதியும், தானும் ஒரே குணம் கொண்டவர்கள் என்பதால் அவளும் தன்னைப் போல் கூச்ச சுபாவம் கொண்டவள் மற்றும் அழுத்தக்காரப் பெண் என்றெல்லாம் அவளை உருவகப்படுத்தி வைத்திருந்தான் சம்யுக்தன்.

அதனாலேயே அவளிடம் விலகலைக் கடைபிடித்தான் எனலாம்.

ஆனால் இப்போது பிரார்த்தனாவுடன் இருக்கும் நேரங்களில் எல்லாம் அவள் ஏதாவது குறும்பாகப் பேசினாளோ, தன்னிடம் உரிமை எடுத்துக் கொள்வதைப் போன்று நடந்து கொண்டாலும் கூட அவள் மீது எந்தக் கோபமும் தோன்றவில்லை.

ஓரிரு முறைகள் அவளைக் கடிந்து கொண்டு, அவளிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலும் கூட அவளை முழுமையாக வெறுத்து, தள்ளி வைக்க முடியவில்லை சம்யுக்தனால்!

இதையெல்லாம் மனதில் எண்ணிப் பார்த்துக் கொண்டவனோ, தன்னுடைய வேலைக்கு நேரமாகி விட்டிருந்ததால் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு மனைவியுடன் கல்லூரிக்குச் சென்று சேர்ந்திருந்தான்.

வண்டியில் இருந்து இறங்கியதும், அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததைக் கவனித்து விட்டு,”இப்படியே எதையாவது யோசிச்சுக் குழம்பாமல் போய் ஸ்டூடண்ட்ஸ்ஸூக்குப் பாடத்தை நடத்துற வேலையைப் பாருங்க!”என்று கணவனுக்கு அறிவுறுத்தி விட்டுப் போனாள் பிரார்த்தனா.

அதைக் கேட்டுக் கொண்டுத் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டுக் கல்லூரிக்குள் நுழைந்து தன் வேலையில் கவனத்தைப் பதிக்கத் தொடங்கி விட்டான் சம்யுக்தன்.

அதேசமயம் இங்கு வீட்டிலோ,”ஏங்க! நம்ம சொந்தக்காரங்களை எல்லாம் நேரில் போய் அழைச்சிட்டு வருவோமா? இல்லை, ஃபோனில் கூப்பிட்டுத் தகவல் அழைச்சா போதுமா?”எனக் கணவரிடம் வினவினார் கலாவதி.

“ரொம்ப நெருங்கிய சொந்தங்களை மட்டும் நேரில் போய் அழைக்கலாம்மா. தூரத்து உறவுக்காரங்களுக்கு எல்லாம் ஃபோனில் சொன்னால் போதும்ன்னு நினைக்கிறேன். ஏன்னா, நாம அவங்களைக் கல்யாணத்துக்கு அவ்வளவாக கூப்பிடலை தானே? இதுக்கு மட்டும் கூப்பிட்டால் சங்கடப்படுவாங்க! அதான் சொல்றேன்”என்று அவரிடம் தெரிவித்தார் ஜெயராம்.

“சரிங்க. அப்போ நாளைக்கே நம்மப் பிரதீபனைக் கூட்டிட்டுப் போய் எல்லாரையும் விருந்துக்கு அழைச்சிட்டு வரலாம்”என்றுரைத்து விட்டு மாலையில் வீடு திரும்பிய தங்கள் மகன் மற்றும் மருமகளிடம் இதைப் பகிர்ந்து கொண்டார்கள் இருவரும்.

“ம்ஹ்ம். நாங்களும் எங்க ஃப்ரண்ட்ஸை விருந்துக்கு வரச் சொல்லிக் கூப்பிடலாம் தானே? என்னோட ஃப்ரண்ட் உத்ராவைக் கூப்பிடலாம்னு இருக்கேன்”என்றிருந்தாள் பிரார்த்தனா.

உடனே,”அதுக்கு என்னம்மா? தாராளமாக கூப்பிடு. நீ உன்னோட மத்த ஃப்ரண்ட்ஸையும் கூப்பிட்றதாக இருந்தாலும் ஓகே தான்”என்று அவளுக்கு அனுமதி வழங்கினார் ஜெயராம்.

“சரிங்க மாமா”என்றவளிடம்,

“நீ உன் ஃப்ரண்ட்ஸை மட்டும் கூப்பிடு. நான் என் கூட வேலை பார்க்கிற யாரையும் கூப்பிட்றா மாதிரி இல்லை. அதனால் உத்ரா மேம் கிட்டே இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொல்லிரு”என்று அறிவுறுத்தினான் சம்யுக்தன்.

“ஓஹோ ஓகே!”என்று அதற்குச் சம்மதித்தாள் பிரார்த்தனா.

“நீ நாளைக்கு லீவ் போட்டுட்டு எங்க கூட வாடா. நம்ம நெருங்கிய சொந்தக்காரங்க வீட்டுக்குப் போகனும்”என்று இளைய மகனிடம் தெரிவித்தார் கலாவதி.

“சரிம்மா. நான் என் ஃப்ரண்ட்டோட சிஸ்டர் மேரேஜூக்கும் லீவ் போடனும். ஞாபகம் வச்சுக்கோங்க”எனத் தன் குடும்பத்தாருக்கு ஞாபகப்படுத்தினான் பிரதீபன்.

“நீ ஏன்டா இதை தின செய்தி மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கிற? அதெல்லாம் எங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கு”என்று அவனிடம் சலித்துக் கொண்டார் ஜெயராம்.

“ஓகேப்பா. கூல்!”என்று அவருக்குச் சமாதானம் உரைத்து விட்டுத் தன் அறைக்குப் போய் விட்டான் இளையவன்.

அன்றைய இரவில் தங்களது அறைக்குள் வந்து மெத்தையில் உட்கார்ந்த சம்யுக்தனுக்குத் தன் அருகில் நிர்மலமான முகத்துடன் படுத்து இருக்கும் மனைவியைக் கண்டுக் கனிவுத் தோன்றியது!

தன்னுடைய முதல் திருமணத்தில் நடந்த அனைத்தையும் அவளிடம் வாக்குமூலமாக அளித்து விட்ட பின்னர் தனக்கு நன்றாக உறக்கம் வருவதை எண்ணி அதற்குக் காரணமாக இருந்தப் பிரார்த்தனாவை நன்றிப் பெருக்குடன் பார்த்தான்.

“உனக்கு உண்மையிலேயே என் மேல் அவ்வளவு லவ் இருக்காம்மா?”என அவனது வாய் அனிச்சையாக கேட்டிருந்தது.

“ஆமாங்க!”என்று தன் கண்களைத் திறவாமலேயே அவனுக்கு உடனடி பதிலைத் தந்திருந்தாள் பிரார்த்தனா.

அதில் திடுக்கிட்டுப் போய்,”நீ இன்னும் தூங்கலையா?”என அவளிடம் கேட்டான் சம்யுக்தன்.

“ம்ஹூம்!”என்றவளோ மெல்லத் தன் தாமரை விழிகளைத் திறந்து கொண்டு எழுந்து அமரவும்,

“ப்ச்! நீ தூங்குப் ப்ளீஸ்!”என அவளிடம் வேண்டிக் கொள்ள,

“ஓஹோ! அப்போ நான் தூங்கினால் தான் உங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் பேசுறதுக்குத் தோதாக இருக்குமா?”என்று ஆதங்கத்துடன் வினவினாள் பிரார்த்தனா.

“ஆமாம்”என்றவனைக் கோபமாக முறைத்து விட்டு உறக்கத்தை தழுவ,

அவளைப் புன்னகையுடன் பார்த்து விட்டுத் தானும் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான் சம்யுக்தன்.

அடுத்த நாள் காலையில் இவர்கள் இருவரையும் வேலைக்கு அனுப்பி வைத்து விட்டுத் தங்களது நெருங்கிய உறவினர்களை மறு வீட்டு விருந்திற்கு அழைக்க வாடகை கார்ச் சகிதம் சென்றிருந்தார்கள் கலாவதி, ஜெயராம் மற்றும் பிரதீபன்.

இங்கே கல்லூரியில்,”உதி! எங்களோட மறு வீட்டு விருந்துக்குத் தேதி குறிச்சாச்சு”என அந்த தேதியையும் தோழியிடம் தெரிவித்தாள் பிரார்த்தனா.

“சூப்பர்! நீ சொன்ன மாதிரியே லீவ் நாளில் வச்சிருக்கீங்க! நான் கண்டிப்பாக வந்துடுவேன்”என்று தன் வருகையை அவளுக்கு உறுதி செய்தாள் உத்ரா.

“சரிடி. நீ கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துடு. அப்பறம், தப்பாக எடுத்துக்காதே! எங்களோட மறு வீட்டு விருந்தைப் பத்தி இங்கே யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு அவர் கேட்டுக்கிட்டார். அதனால் நீயும் இதைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே! நான் உன்னை மட்டும் தான் அழைச்சு இருக்கேன்”என்று சங்கடத்துடன் மொழிய,

அதை தானும் புரிந்து கொண்டு,”சரி பிரனா. நான் இதைப் பத்தி யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்! என்னை மட்டும் ஸ்பெஷலாக கூப்பிட்டதுக்கு உனக்கும், சம்யுக்தன் சாருக்கும் தாங்க்ஸ் சொல்லிக்கிறேன்!”என்றுரைத்து விட்டாள் அவளது தோழி.

அதற்கு,“ஹேய்! பரவாயில்லை உதி”எனப் பெருந்தன்மையுடன் கூறினாள் பிரார்த்தனா.

அன்று மாலையில் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் தாங்கள் இருவரும் மட்டும் தனியாக இருப்பதை எண்ணிக் குறுகுறுத்துப் போனான் சம்யுக்தன்.

ஆனால் அவனைப் போல் எந்தக் குறுகுறுப்பும் இன்றி இயல்பாக வளைய வந்தாள் அவனது மனையாள்.

அதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போய் அதன் காரணத்தை அவளிடமே கேட்டு விட்டிருந்தான்.

- தொடரும்
 
Last edited by a moderator:

Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty