• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 22

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 22

சடங்குகள் நிறைவடைந்ததும் உறவுகள் அவர்களை ஆசிர்வதித்து, பரிசுகள் வழங்க இருவரும் புன் சிரிப்புடன் இருந்தனர்.

மதிய உணவை முடித்துக் கொண்டு உறவினர்கள் புறப்பட்டிருக்க, நெருங்கிய உறவுகள் மட்டும் மண்டபத்தில் இருந்தனர். சற்று நேரத்தில் மணமக்களும் சாப்பிட்டதன் பின்னர், புகைப்படக்காரர் அவர்கள் இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து பல விதமான கோணங்களில் படமெடுத்தார். விருப்பமில்லா விட்டாலும் புகைப்படக்காரர் கூறியதை கேட்டு, அவர் சொன்னபடி செய்த அகிலனிடம் , ‘ஒரு கையை இடுப்பில் வைத்து, அணைத்தவாறு நிற்கும் படி’ கூறவும், எரிச்சலடைந்த அவன் ‘அதெல்லாம் முடியாது, காணும்’ என மறுத்து விட்டான். அதுவரை நேரமும் சௌமி, மிகுந்த மகிழ்வுடனும் பலவித உணர்வுகளின் மயக்கத்தில் அகிலனுடன் நெருக்கமாக நின்றவள், அவனின் அந்த வார்த்தையில் மனம் வெகுவாக வாட நின்றாள். புகைப்படக்காரர் கூறுவதை விடவும் அவனுடன் நெருங்கி நின்றவளின் நிலையை உணர்ந்தவன் அவளின் அந்த வாட்டத்தையும் கவனிக்கத் தவறவில்லை.

மண்டபத்தில் இருந்து கிளம்பி முதலில் சௌமியின் வீட்டுக்குச் சென்று, அங்குள்ள சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு, திருமணத்தையும் பதிவு செய்துவிட்டு, அகிலனின் வீட்டுக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இரவு தங்க வேண்டும். அது தான் அவர்களின் திட்டமாக இருந்தது.

சௌமியின் வீட்டுக்குச் சென்ற மணமக்களுக்கு, சௌமியின் பெற்றோர் மாலை அணிவித்து, உறவினர்கள் ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்துச் சென்றனர். அவர்கள் சுப நேரத்தில் விளக்கேற்றி, பால் பழம் சாப்பிட்டனர். அதனைத் தொடர்ந்து திருமணப் பதிவாளர் வந்து விடவே திருமணத்தை பதிவு செய்தனர். அது முடிந்ததும் இருவரையும் ஓர் சோபாவில் உட்கார வைத்தனர். முகூர்த்தத்திற்கு வர முடியாமல் போன ஓர் சில உறவுகள் இப்போது வந்திருந்தனர். அவர்கள் அகிலனுடன் பேச அவனும் புன்னகையுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினான். சௌமி அவனுக்கும் சேர்த்து தானே கலகலவென பேசினாள்.

அடுத்து நல்ல நேரம் முடிவடைவதற்குள் அகிலனின் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே பத்மா, சௌமியை அணைத்து, முத்தமிட்டு, மிகுந்த குதுகலத்துடன் அவளை வரவேற்றார். அங்குள்ள சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு, தேநீர் மற்றும் பலகாரங்களை உண்ட பின்னர் சௌமியின் பெற்றோரும் உறவினர்களும் கிளம்பினர்.
மாலையானதும் பத்மாவின் அண்ணன் குடும்பத்தை தவிர்த்து, ஏனைய உறவினர்கள் கிளம்பிவிட்டனர்.

ஹாலில் இருந்த சோபாவில் அகிலனுக்கருகில் அமர்ந்திருந்த சௌமிக்கு, அதிகாலையில் அணிந்த ஆடை அணிகலன்கள் உடன் அவ்வளவுநேரமாக இருப்பதும் , நீண்ட நேரமாக நின்றும் இருந்தும் என்றும் இருந்ததும் சோர்வாக இருந்தது. எப்போது உடை மாற்றுவது, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாததால் உடலைத் தளர்த்தி சோபாவின் கையில் தனது வலது முழங்கையை வைத்து கையில் தனது தலையை சாய்த்து இருந்தாள். அகிலனும் உடலைத் தளர்த்தி அமர்ந்து கைப்பேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.

திருமணச் சடங்குகளினாலும், உறவினர்கள் அவர்களையே எந்த நேரமும் சூழ்ந்து கொண்டே இருந்ததினாலும் இருவருக்குமிடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் எழவில்லை. இப்போதாவது அவன் ஏதாவது கதைப்பானா என அவனது முகத்தை அவள் அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன், அவளை திரும்பியும் பார்க்கவில்லை. அவளுக்குமே அவனின் இவ்வளவு நாள் செயற்பாடுகளிலும் மிகுந்த மனத்தாங்கல் இருந்தாலுமே இன்றைய நாளில் அவனுடன் கதைக்க வேண்டும் என்ற அவா இருந்தது. அவளுக்கு எப்படி ஆரம்பிப்பது…, என்ன கதைப்பது…, எவ்வாறு கதைப்பது…, அதற்கு அவன் எவ்வாறு எதிர்வினையாற்றுவான் என்ற தயக்கம் இருந்தது. எனவே தொண்டையை செருமிப் பார்த்தாள்., அங்கும் இங்கும் அசைந்து பார்த்தாள்… அவன் அசையவே இல்லை! அவள் பெருமூச்சு விட்டவாறு, “அகில்…” என்றாள் மெதுவாக. அவன் அவளைப் பார்த்து நன்றாக முறைத்து வைத்தான். அவனின் அச்செய்கையில் அவளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவளுக்கு அவன் மீது அளவு கடந்த காதல் இருக்கிறது தான், அவன் தான் அவளின் உலகம். அதேவேளை அவளுக்கு அவளின் சுயமரியாதை, தன்மானம் என்பனவும் மிகமிக முக்கியம். முகத்தை திருப்பிக் கொண்டாள்.

உள்ளே அறையில் இருந்து வந்த பத்மா, அவளைப் பார்த்துவிட்டு, “சௌமி உள்ள வந்து, சேலையை மாத்தும்மா…” என்றார். அவளுக்கு உதவி செய்வதற்காக தனது அண்ணன் மகளையும் அனுப்பி வைத்தார்.
அகிலனையும் அவனின் உடையை மாற்றுமாறு அனுப்பி வைத்தார்.

சௌமி, ஒப்பனைகளை அகற்றி, குளித்து, உடைமாற்றி வெளியே வந்தாள்.

பத்மா, அகிலனையும் அழைத்து இருவருக்கும் உணவை பரிமாறினார். அகிலன், தாயையும் மற்றும் உறவினர்களையும் சாப்பிடும் படி கூறினான்.

இருவரும் உண்டபின்னர் ஹாலில் இருந்து, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் பத்மா அவர்கள் இருவரையும் போய் தூங்கும் படி கூறினார். எல்லோருக்கும் ‘குட்நைட்’ என்றவன் தாயிடமும் உறங்கும் படி கூறிவிட்டு, சௌமியிடம் “வா…” என்றான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவன், அவளைப் பார்த்து, கதைத்திருக்கிறான்! அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். பத்மா அவளிடம் “சௌமி போய் தூங்கு…” என்றார்.

அவள் ஒரு வித கலக்கத்துடன் சோபாவில் இருந்து எழவும், அவளின் மன உணர்வுகளை புரிந்த பத்மா, அவளை அணைத்து, முதுகில் தடவிக் கொடுத்து அனுப்பினார்.

அவளும் மனம் படபடக்க, பலவித சிந்தனைகளுடன், ஒருவித உணர்வு கொந்தளிப்புடனும் மெல்ல அவனைப் பின் தொடர்ந்தாள். அவள் தயங்கியவாறு அறையினுள் வந்ததும் அவன், அவளைப் பார்த்தவாறு கதவை சாத்தினான். அவள் நெஞ்சு சில்லிட அவனைப் பார்த்தாள்.

“லைட்டை ஓவ் பண்ணிட்டு படு” என்றவாறு அந்த அகலமான புதுக் கட்டிலின் ஓரத்தில் சரிந்தான் அவன்.
அவள் அந்த அறையைப் பார்த்தாள். ஓரளவு பெரிய அறை தான். பழைய வீட்டை புதுப்பித்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியும். அறையின் நடுவே கட்டில் இருந்தது. ஒரு ஓரத்தில் ஓர் சிறிய மேசையும் கதிரையும் இருந்தது. மற்றப் பக்கத்தில் ஆடைகள் வைப்பதற்காக ஓர் அலுமாரி இருந்தது. அதனருகில் சிறிய கண்ணாடி மேசை ஒன்றும் இருந்தது. ’தானும் இந்தக் கட்டிலில் தானே உறங்க வேண்டும் என நினைத்தவாறு விளக்கை அனைப்பதற்காக சுவிட்சை தேடினாள். அதை கண்டு பிடித்து அணைத்து விட்டு கட்டிலின் மற்ற ஓரத்தில் ஏறிப் படுத்தாள். மூச்சை நன்றாக இழுத்து விட்டு தன்னை நன்றாக ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். கடந்த ஓரிரு நாட்களாக தூக்கம் போதுமானதாக இருக்கவில்லை. முதல் நாள் இரவு படுக்க செல்லும் போது நேரம் பன்னிரண்டு தாண்டிவிட்டது. அன்று அதிகாலை நான்கு மணிக்கு அழகு கலை நிபுணர் வருவார் என்பதால் அதற்கு முன்னரே அவள் எழுந்து தன்னை தயார் படுத்திக் கொண்டாள். எனவே படுத்து சிறிது நேரத்தில் அவள் தூங்கிவிட்டாள். அவள் தூங்கி விட்டதை அறிந்தவனும் காலை நீட்டி வசதியாக படுத்து உறங்கினான்.

அடுத்த நாள் காலையில் எழுந்தது முதல் சௌமி, பத்மாவுடன் நேரத்தை செலவளித்தாள். பத்மா அவளுடன் அன்பாகவும் அனுசரணையாகவும் இருந்தார். அகிலன், அவளைத் திரும்பியும் பாராமல் இருந்ததை அவள் ஓர் விடயமாகவே நினைக்கத் தோன்றாத அளவுக்கு, அவர் அவளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். அவரின் அண்ணன் குடும்பத்துடன் சகஜமாக்கதைத்துப் பழகினாள். அவர்களை உறவு முறை சொல்லி அழைத்தாள். அகிலனும் அவளை அவதானித்துக் கொண்டே இருந்தான்.

மாலையில் சௌமியின் வீட்டிலிருந்து அவளின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் வந்திருந்தனர். அந்த நேரத்தில் பத்மாவின் வேண்டுகோளிற்கிணங்க அகிலனும் சௌமியும் ஓர் சோபாவில் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.

சௌமியின் பெற்றோர் மகளை ஆர்வமாகப் பார்த்தனர், கட்டியணைத்தனர், கதைகள் கேட்டனர். சௌமி அவர்களுடன் மகிழ்வுடன் கலகலவென பேசி சிரித்தாள். அகிலன் அவர்களை வரவேற்றதோடு சரி, அதன் பின்னர் அங்குள்ளவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளிப்பதும் தலையசைப்பதுமாக இருந்தவனது முகம் சாதாரணமாக இருந்தது. சௌமியின் பெற்றோர்கள் சற்று நேரம் அங்கே தங்கி இருந்து, உறவுகளுடன் கதைத்தது பேசி, தேநீர், பலகாரம் சாப்பிட்டதன் பின்னர், அகிலனையும் சௌமியையும் அடுத்த நாள் அவர்களின் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்து விட்டுச் சென்றனர்.

அடுத்த நாள், மதியம் அளவில் அகிலன், சௌமி, பத்மாவுடன் அவர்களின் சில உறவுகளும் சௌமியின் வீட்டுக்கு சென்றனர். அங்கே சௌமியின் பெற்றோரும் உறவினர்களும் வீட்டு வாசலுக்கு வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களை வீட்டுக்குள் அழைத்து வந்து, அகிலனும் சௌமியும் விளக்கேற்றி, சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு, ஹாலில் உள்ள ஓர் சோபாவில் அவர்களை அமர வைத்தனர். பலவிதமான அசைவ கறிகளுடன் தடல்புடலாக விருந்து ஏற்பாடாகி கொண்டிருந்தது. வீட்டில் உறவினர்கள் நிறைந்து இருந்தனர். சிறு பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

விசேட விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. மாலைவரை உறவினர்கள் வருவதும் செல்வதுமாக இருந்தனர். தூர இடங்களில் இருந்து வந்த உறவினர்கள் சிலர் அவர்களின் வீட்டில் தங்கி இருந்தார்கள்.

அன்றிரவு அகிலன் அங்கு தங்குவதாக ஏற்பாடு இருந்தது. எனவே பத்மா தனது அண்ணன் குடும்பத்துடன் சேர்ந்து கிளம்பினார். தாயை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்து அதே இடத்திலேயே அமர்ந்து தனது கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான். திருமணத்துக்கு வராத பல நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து, அழைப்பு ஏற்படுத்திக் கொண்டும் தகவல் அனுப்பிக் கொண்டும் இருந்தனர். அவன் அவர்களுடன் கதைத்துக் கொண்டும் பதில் அனுப்பிக் கொண்டும் இருந்தான்.

சௌமி தனது அறைக்கு சென்று, ஆடை மாற்றி, குளித்து, வெளியே வந்த போது, அகிலன் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான்.

இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்த தாயிடம் வந்த சௌமி, தேநீர் கேட்டாள். கமலா இருவருக்கும் சேர்த்து தேநீர் தயாரித்துக் கொடுத்தார். அவற்றை எடுத்துக் கொண்டு சென்று, ஒன்றை அகிலனிடம் நீட்ட, அவளை நிமிர்ந்து பார்த்தவாறே அதை வாங்கிப் பருகியவனுக்கும் தாகம் இருந்தது. அவளும் அவனுக்கு அருகில் உள்ள ஓர் சோபாவில் இருந்து, அதைப் பருகினாள்.

தேநீரைப் பருகிய அகிலன் அவனுக்கருகில் உள்ள மேசையில் கோப்பையை வைத்தான். அவனுக்கு அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. அவ்வாறு சோபாவில் அமர்ந்திருப்பது சினமாக இருந்தது. அவனின் நிலையை புரிந்து கொண்ட சௌமி “உடுப்பு மாத்த போறீங்களா..?” எனக் கேட்டாள்.

அவளைப் பார்த்தவன் “ஓம்” என்றான்.

“வாங்கோ…” என அவள் தனது அறைக்கு அழைத்து வந்து, அவனது உடைகள் கொண்டு வந்த பையை எடுத்து “உங்கட பாக் இஞ்ச இருக்கு…, சேஞ்ச் பண்ணிட்டு ரெஸ்ட் எடுங்க…” என்றாள் . அவன் அந்தப் பையிலிருந்து ஓர் சாரத்தையும் ரீசேட்டையும் துவாலையையும் எடுத்து கட்டிலில் வைத்தான். “உங்களுக்கு ஏதும் தேவை எண்டால் போன் பண்ணுங்க” என்று விட்டு கதவை சாத்திவிட்டு, வெளியே வந்தாள்.

சௌமி வீட்டினர் நாளைக்கு மதியம் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் விசேஷ பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு தேவையான ஆயத்தங்களில் கமலாவும் சகுந்தலாவும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சௌமியும் அவர்களுடன் சேர்ந்து உதவிகளைச் செய்தாள். அவர்கள், அவளிடம் அகிலன் வீட்டில் அவள் எவ்வாறு இருந்து கொண்டாள் என விசாரித்துக் கொண்டனர். அவள் முகத்தில் தெரிந்த பூரிப்பில் அவர்கள் நிம்மதியடைந்தனர்.

அகிலன் உடைகளை மாற்றி விட்டு கட்டிலில் படுத்தவன் உறங்கிவிட்டான்.

சிறிது நேரத்தில் இரவு உணவு உண்பதற்காக அவனை அழைக்க வந்த சௌமி, அவன் ஆழ்ந்து தூங்குவதைக் கண்டவளுக்கு எழுப்புவதா…? எழுப்பினால் பேசுவானா…? என்ற சிந்தனை. தொண்டையை செருமிப் பார்த்தாள், அவன் அசையக்கூட இல்லை.

“சாப்பிட வாங்கோ…” என அழைத்தாள் . அவன் எழவில்லை.
“அகிலன்…”
“....”
அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவள், அவனின் கையை மெதுவாக தட்டினாள். தூக்கத்துடன் கண்களைத் திறந்தவன் அவள் அருகில் நிற்பதைக் கண்டு, தான் எங்கே இருக்கிறம் என யோசித்து, அவளின் படுக்கை அறையில் தான் படுத்திருப்பதை உணர்ந்து, “என்ன..?” என வினாவினான்.

“சாப்பிட வாங்கோ….” என்றாள்.

“எனக்குப் பசிக்கேல்ல…” என திரும்பி படுத்தவனுக்கு, மதியம் எல்லோரும் விசேடமாக கவனித்துப் பரிமாறியதில், வழமையை விட அதிகமாகவே சாப்பிட்டு விட்டான். அத்துடன் எந்தவித வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருந்ததும் படுத்திருந்ததும் சாப்பாடு சமிபாடடைய வில்லை. எனவே அவனுக்கு உண்ணவும் தோன்றவில்லை, தூக்கத்தை குழப்பவும் விரும்பவில்லை. அதனால் சாப்பாடு வேண்டாம் என்றான்.

அவனுக்காக ஏனையவர்கள் வெளியே காத்திருந்தனர் எனவே “கொஞ்சம் சாப்பிடுங்க…, வாங்க…” என்றாள்.

“வேண்டாம்…”

அவளுக்கு மற்றவர்களிடம் என்ன சொல்வது என்று விளங்கவில்லை… அவனுக்கு இரவில் பசித்தால் கேட்கவும் மாட்டானே என்ற யோசனையுடன் “எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கினம்…” என்றாள் தயங்கியவாறு.

“அவையளை சாப்பிடச் சொல்…, என்னை விடு…” என சிடுசிடுத்தான்.

“வெளியில வந்து பாலையாவது குடிச்சிட்டு படுங்க…”

“உனக்கு சொன்னா, விளங்காதா…?” எனச்சினந்தான்.

இதற்கு மேலும் அவனுடன் வாதாட முடியாது என்பதால் வெளியே வந்து, அவனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களிடம் “அவருக்கு பசிக்கவில்லையாம்…, படுத்திட்டார்…”

“என்ன அதுக்குள்ள படுத்திட்டானா..?” எனக் கேட்டார் சகுந்தலா.

“இரவில பசிக்குமே…” என்றார் கமலா.

“அவனுக்கு பாலைக் கொண்டு போய் குடு சௌமி” ரவீந்திரன்

“பாலைக் குடுத்திட்டு நீ சாப்பிடு சௌமி…” சிவநாதன்.

கமலா பாலுக்கு, ஏலக்காய் தட்டிப்போட்டு, கற்கண்டும் சேர்த்து, நன்றாக சுண்டக் காய்ச்சி ஓர் கோப்பையில் ஊற்றி சௌமியிடம் கொடுத்தார்.

அதை எடுத்துக் கொண்டு சென்றவள் “அகில்…” என்றாள்.

ஏற்கனவே அவள் தூக்கத்தை கலைத்ததில் ஏற்பட்ட கடுப்புடன் படுத்திருந்தவன் “இப்ப என்ன வேணும் உனக்கு…? நிம்மதியா படுக்கவும் விடமாட்டியா…?” எனச் சினந்தான்.

வெளியே இருப்பவர்களுக்கு கேட்கப் போகுதே எனப் பயந்தவள் ”ஸ்… மெல்ல கதையுங்க… உங்கட கோபத்தை எல்லாருக்கும் காட்ட வேணுமா…?” எனக் கேட்டவள் “இந்தப் பாலை குடிச்சுட்டு படுங்க…” என பால் கோப்பையை அவனிடம் நீட்டினாள். “இப்ப நான் இதை கேட்டனானா….?” என கேட்டவாறு கட்டிலிருந்து எழும்பி அதை வாங்கினான்.
பால் கோப்பையை அவனிடம் கொடுத்த சௌமி, வெளியே வந்து மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டாலும் அவளால் அவர்களுடன் இயல்பாக கதைக்க முடியவில்லை.
அவனுக்கு பசி இல்லாவிட்டாலும் வீட்டினருடன் சேர்ந்து கொஞ்சமாவது சாப்பிட்டிருக்கலாம்… அவர்களுடன் கதைத்திருக்கலாம்… என எண்ணினாள். அவனை அறைக்கு அழைத்துச் சென்றது தவறாகிவிட்டது என நினைத்தவளுக்கு சாப்பிடவும் முடியவில்லை. மற்றவர்களுக்கும் அவளின் சோர்ந்திருந்த முகத்தைப் பார்த்துவிட்டு அவர்களாலும் சரியாக உண்ண முடியவில்லை. சாப்பிட்ட பின்னர், அவர்களுக்கு உதவியாக சமையலறையில் நிற்க, “சௌமி போய் படு… நாங்கள் இதைப் பார்க்கிறம்…” என்றார் சகுந்தலா.

அவள் அறைக்குள் வந்த போது அகிலன் பாலைக் குடித்துவிட்டு படுத்துவிட்டான்.

அவளும் வந்து கட்டிலின் ஓர் ஓரமாக படுத்தவளுக்கு, ஒரு நாள் இங்க தங்கப் போறான். அன்று கூட அவனால் மற்றவர்களை அனுசரித்துப் போக முடியவில்லை என்பதை யோசிக்கையில் அவன் மீது சினம் ஏற்பட்டது. ஏன் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை.
 
Top Bottom