• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 25

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 25



அறைக்குச் சென்ற சௌமியின் விழிகளில் குபுகுபுவென நீர் வடிந்து கொண்டே இருந்தது, கடகடவென உடை மாற்றியவள் குளித்துவிட்டு வந்து கட்டிலில் படுத்தாள்.
............
அவளுடன் கூட வேலை செய்யும் நண்பியுடன் சேர்ந்து வணிக வளாகத்துக்கு செல்ல திட்டமிட்டவள், அகிலனுக்கு தகவல் சொல்ல, கைபேசியை எடுத்து பார்க்கும் போது, அது சார்ஜ் இல்லாமல் அணைக்கப்பட்டிருந்தது. முதல் நாளிரவு தாயுடன் கதைத்துவிட்டு படுக்கும் போது, சார்ஜ் பண்ண மறந்துவிட்டாள். காலையில் அவசரஅவசரமாக கிளம்புகையில் கைப்பேசியை சார்ஜ் பண்ண வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றவில்லை. கிளம்பி பேருந்தில் செல்லும் போது தான் கைப்பேசியைப் பார்த்தவள், அதில் இருபது வீதத்துக்கும் குறைவாகத்தான் சார்ஜ் இருந்தது. வங்கிக்கு சென்று அங்கே சார்ஜ் பண்ண வேண்டும் என நினைத்தவள் அங்கே இருந்த வேலைப்பளுவில் அதை மறந்துவிட்டாள். மதிய இடைவேளையின் போதும் நண்பியுடன் சேர்ந்து கதைத்தவாறு சாப்பிட்டதில் கைப்பேசியைப் பற்றிய நினைவு வரவில்லை.

வெளியே எங்கும் சென்றால் அவள், அவனுக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம் தான். அகிலன் தான் அவள் எங்கே போகின்றாள், எத்தனை மணிக்கு வருவாள், போன்ற தகவல்களை தனக்கு தெரியப்படுத்தும் படி ஆரம்பத்திலேயே கூறி இருந்தான். அவள் ஒரு நாள் அவனுக்கு தெரிவிக்காமல், குடியிருப்பின் கீழே உள்ள பூங்காவில் நண்பியுடன் கதைத்துவிட்டு வந்த போது மிகுந்த கண்டிப்புடன் தனக்கு சொல்லாமல் எங்கும் செல்லக்கூடாது எனக் கூறியிருந்தான். அதன் பின்னர், அவள் எங்கு சென்றாலும் அவனின் கைப்பேசிக்கு தகவல் அனுப்பிவிடுவாள். அவனும் அதே போல் பல்கலையை தவிர வெளியே எங்கு சென்றாலும் அவளுக்குத் தெரிவித்து விடுவான்.

இன்று அகிலன் சற்று தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவான் என தெரிந்ததால், அவன் வரமுதல் தான் வீட்டுக்குச் சென்று விடுவாள் என்ற எண்ணத்தில், நண்பியுடன் கதைத்தவாறு, வணிக வளாகத்தில் நின்றவள் நேரத்தையும் கவனிக்கவில்லை. கடையை விட்டு வெளியே வந்த போது தான் இருட்டிவிட்டதை உணர்ந்து, ஓர் ஆட்டோவைப் பிடித்து வீட்டுக்கு வந்தவளுக்கு அவன் நிச்சயமாக்கோபிப்பான் என தெரிந்தாலும் கையை நீட்டுவான் என எதிர்பார்க்கவில்லை.

என்ர அம்மா அப்பா கூட எனக்கு ஒரு நாளும் அடித்ததில்லை. இவன் என்னை மனைவியாக ஏற்று ஒரு நாள் கூட வாழவில்லை, என்ன உரிமையில் அவன் என்னை அடிக்கலாம்…? என எண்ணி கோபம் கொண்டாள்.

நான் அவனில அதீத நேசம் வைத்திருந்தும், என்னில அவனுக்கு கொஞ்சம் கூட அன்பு, காதல் இல்லை என எண்ணியவளுக்கு உண்டான கழிவிரக்கத்தினால், கண்களில் நீர் வடிந்தது. வெட்கம்,மானம் சூடு, சொரணை எதுவும் இல்லாமல், அவன் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று திருமணம் செய்ததால் அவனுக்கு என்னில மதிப்பு, மரியாதை இல்லாமல் போய்விட்டது என வேதனைப்பட்டாள்.

வெந்நீர் கூட வைக்கத் தெரியாத நான், அவனுக்காக சமைக்கப் பழகி, அவனுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என அறிந்து, சமைத்து பரிமாறி என அவனது தேவைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நிறைவேற்றியிருக்கிறேன்… ஆனால் அவன் ஒரு நாள் கூட என்னோட அன்பாக கதைத்ததில்லை…, வெளியே எங்கும் கூட்டிச் சென்றதில்லை…, எனக்கென்று எதுவும் வாங்கித் தந்தது இல்லை எனத் தோன்றியதும் ஏற்பட்ட சுயவிரக்கத்தால் மீண்டும் அவள் கன்னங்களில் நீர்.

இப்ப அடிக்கிற அளவுக்கு வந்திட்டானே…! அந்தளவுக்கு என்னில வெறுப்பா…? அவள் மனம் பலவித குழப்பங்களால் நிறைந்து காணப்பட்டது.

வீட்டில் அம்மா அப்பாவுக்கு அவன் அடித்தது தெரிந்தால் அவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என யோசித்தவளுக்கு, நெஞ்சு முழுக்க வருத்தம் பரவியது, அவள் ஒரு பக்கம் அவன் ஒரு பக்கமும் வாழ்வது அவர்களுக்கு தெரியாது. அவள், அவனுடன் சந்தோஷமாக வாழ்வது போல் தான் அவர்களிடம் அவள் காட்டிக்கொள்வது.

அவளுக்கு பெற்றோரை காண வேண்டும் என்பது போலவும் தாயின் மடி சாய வேண்டும் போலவும் பெரும் ஆவல் உண்டாகியது. அவள் மனம் அவர்களுக்காக ஏங்கித் தவித்தது. தலையணையில் தலையை புதைத்தவளுக்கு வீட்டுக்கு போக வேண்டும் போல் தோன்றியது!

இவ்வளவு நாளைய இந்த போலியான வாழ்க்கையில் அவளுக்கு மூச்சு முட்டி, மன அழுத்தம் ஏற்பட்டிருந்தது. கொஞ்ச நாட்களுக்கு இந்த சூழ்நிலையில் இருந்து விலகி இருக்க விரும்பினாள்.

அம்மா அப்பாவுக்கு இந்த திருமணத்தில் அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை, எனது விருப்பத்தை மதித்து தான் அவர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள் அப்படி இருக்கையில், இந்த பிரச்சனையுடன் அங்கே போனால் அவர்கள் தாக்குவார்களா..? என்னால் அவர்களுக்கு நிம்மதி இல்லாமல் போய்விடுமோ…? என எண்ணி கவலைப்பட்டாள்.

அவன் அடித்ததில் இன்னும் வேதனை இருந்தது. அதுவும் அவளுக்கு மிகுந்த மனச் சோர்வை ஏற்படுத்தியது. மனமெல்லாம் ஒரு வித இறுக்கமும் விரக்தியும் நிறைந்து இருந்தது.

........................

சமையலறைக்குச் சென்ற அகிலன் ஏதாவது உணவு இருக்கிறதா என பார்த்தான். குளிர்சாதனப் பெட்டியில் பாண் இருந்தது. அதை சாப்பிடுவம் என எண்ணியவன், அதை எடுத்து வெளியில் வைத்துவிட்டு, சௌமியிடம் சென்றான்.

அவள் அந்த அறையை பாவிக்கத் தொடங்கிய பின்னர், அன்று தான் அங்கே செல்கிறான். “சௌமி…” என்றவாறு சாத்தியிருந்த கதவைத் தட்டிவிட்டு, அதைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். அங்கே அவள், முழங்கால் அளவில் கையில்லாத இரவு உடையுடன் கட்டிலில் படுத்திருந்தாள். படுத்திருந்ததால் உடை முழங்காலுக்கு மேலே சற்று ஏறி இருந்தது, கழுத்துப் பகுதியும் சற்று கீழே இறங்கி இருந்தது. அப்படியான ஆடைகளை அவள் தூங்கும் போது தான் அணிவது வழக்கம்.

அறைக்குள்ளே வராதவன், திடீரென அறையைத் திறந்தபோது, திடுக்கிட்ட சௌமி தன்னியல்பாக தனது ஆடையை சரி செய்தவள் அவனைப் பார்த்தாள்.

கதவைத் திறந்தவன், இரவு விளக்கின் வெளிச்சத்தில், அந்த கோலத்தில் அவளைப் பார்த்ததும், ஓர் கணம் ஸ்தம்பித்து நின்றான். அவளை அக்கோலத்தில் கண்டவனுக்கு உடலில் பல ரசாயன மாற்றங்கள்! தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, கட்டிலின் அருகே வந்தவன், “சௌமி சாப்பிடுவமா…?” என கேட்டான்.

அவன் அங்கே நிற்பதை விரும்பாதவள், ‘சாப்பிடுங்கோ’ என்று சொல்லி அவனை அனுப்புவதற்கு வாயைத் திறக்க முடியவில்லை அவளால். உதடுகள் இரண்டும் ஒட்டி, குரல் எழும்பவில்லை. அவள் கண்களை இறுக மூடினாள். அவளின் நிலை அறிந்தவன் “ஐயாம் ரியலி சொரி சௌமி..” என்றான் மென்மையாக.

“......”

“சௌமி….” என அழைத்தான்.

“.........”

“சௌமி சாப்பிட வா…, பசிக்குது…”

“............”

அவன் தன்னை விளங்கப்படுத்தும் முகமாக “உன்னை காணேல்ல என்ற பதட்டத்துல இருந்த எனக்கு, நீ என்னைப் பொருட்படுத்தாமல் அலட்சியத்தோட ஆன்ஸர் பண்ணினதுல எனக்கு ஆத்திரம் வந்திட்டுது..., சொறி…” என்றவாறு கட்டிலில் அமர்ந்தான்.

அவன் கட்டிலில் உட்கார்ந்ததில் சங்கடமடைந்தவள், தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “எனக்கு பசிக்கேல்ல...நீங்கள் போய் சாப்பிடுங்கோ…” என்றவளுக்கு அவனை கட்டிலில் இருந்து எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் தான்.

அவன் தனது அறைக்குள் வர மாட்டான் என்ற நினைப்பில் அந்த உடையை அணிந்திருந்தவளுக்கு, அவன் அங்கு வந்து அருகில் அமரவும் பெரும் தவிப்பாக இருந்தது. மனதில் மெல்லிய படபடப்பு ஏற்பட, அருகில் இருந்த போர்வையை எடுத்து தன் மீது போட்டாள்.

“நீயும் வா…” என்றான் அவளை பார்த்தவாறு.

“எனக்குப் பசிக்கேல்ல..”

“எனக்குப் பசிக்குது…, கொஞ்சமா சாப்பிடலாம் வா…” என கெஞ்சினான்.

“........”

“ப்ளீஸ் வா….” என்றான், தான் அடித்ததால் மெதுவாக அதைத்திருந்த கன்னத்தைப் பார்த்தவாறு.

“பசிக்கேல்ல எண்டு சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா…?” எனக் கேட்டாள் கோபத்துடன்.

“சாப்பிடாமல் படுக்கக்கூடாது சௌமி.. வா..” என்றான் பொறுமையுடன்.

“அது எனக்குத் தெரியும்… நீங்கள் போங்கோ…”

“சௌமி…” என்றவாறு அவளின் தோளைத் தொட்டான்.
அவசரமாக அவனின் கைகளைத் தட்டி விட்டவள் “நான் வர மாட்டேன், வெளியில போங்க…” என்றாள் குரலை உயர்த்தி. .

“சௌமி…” என்றான் அதட்டலாக.

அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல், சற்று நேரம் அவளைப் பார்த்துவிட்டு, “பால் கொண்டு வாறன், அதையாவது குடிக்க வேணும்” என்றுவிட்டு, எழுந்து சென்றவன், இருவருக்கும் பால் சூடு பண்ணி எடுத்துக் கொண்டு வந்தான்.

மீண்டும் அவன் அறைக்குள் வந்ததில் எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள். கட்டிலுக்கு அருகே உள்ள சிறு மேசையில் இரண்டு பால் கோப்பைகளையும் வைத்தவன், கட்டிலில் வசதியாக அமர்ந்து “பால் குடி சௌமி…” என்றான்.

அவள் கண்களை இறுக மூடிக் கொண்டு அசையாமல் இருந்தாள்.

“சௌமி…” என மென்மையாக அழைத்தவாறு அவளின் கையில் தனது இடது கரத்தை வைத்தான்.

“ஏன் என்னை தொந்தரவு செய்யுறீங்க…? உங்களுக்கு சொன்னால் விளங்காதா…?” எனச் சினந்தவள் அவனின் கையை அகற்ற முயற்சி செய்தாள். முடியவில்லை, அவன் இறுகப் பற்றியிருந்தான்.

“நீ பாலை குடிச்சால் நான் ஏன் உன்னை தொந்தரவு செய்யப்போறன்…?” என வினவினான்.

தன்னைப் போர்த்தியவாறு வேகமாக எழுந்தவள் அருகில் உள்ள மேசையில் இருந்த பால் கோப்பையை எடுத்து மடமடவென குடித்தாள். அவளை பார்த்தவாறு அவனும் தனது பால் கோப்பையை எடுத்து குடித்தான்.

அவள் பாலை அருந்திய பின்னர் கோப்பையை அருகில் உள்ள மேசையில் வைத்துவிட்டு, நன்றாக போர்த்தியவாறு, அவனுக்கு முதுகை காட்டியபடி திரும்பி படுத்தாள். அவன், அவளின் இடக்கரத்தை பற்றி, அதில் தனது இதழ்களைப் பதித்து, “சொறி சௌமி..” என்றவனின் குரலில் உணர்வுகள் நிரம்பு வழிந்தது. அவனின் அச்செய்கையில் அதிர்ச்சியடைந்து வேகமாக கையை இழுத்தவள், இனிய உணர்வுகளின் பிடியில்.

அவளைப் பார்த்தபடி “குட் நைட் சௌமி..” என கரகரத்த குரலில் கூறியவன் கோப்பைகளை எடுத்துக் கொண்டு சென்றான்.

கோப்பைகளை கழுவி வைத்துவிட்டு, படுக்கச் சென்றவனின் உணர்வுகள் ஆர்ப்பரிக்க தொடங்கின.

அவன் வெளியே சென்றதும், புதுவித உணர்வுகளின் தாக்கங்களில் சிக்கித் தவித்த அவளுக்கு விழிகளில் நீர் பெருகியது.

...............

காலையில் கண்விழித்த சௌமிக்கு இரவும் சாப்பிடாததால் பசித்தது. அவனும் சாப்பிடவில்லை அவனுக்கும் பசிக்குமே…, சமைக்க வேண்டும் என நினைத்தவள் கட்டிலில் இருந்து எழும்பினாள். குளித்து, உடைமாற்றி, பொட்டு வைக்கும் போது, தனது முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். அழுததால் முகம் அதைத்திருந்தது, அகிலன் அடித்த கன்னம் சிவந்திருந்தது. அதை பார்த்ததும் மீண்டும் கண்கள் கலங்கியது. தன்னை சமாளித்துக் கொண்டு, சாமி கும்பிட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.

காலை உணவுக்கு புட்டும் அவித்து, சம்பலும் முட்டைப் பொரியலும் செய்வம் என்ற எண்ணத்தில் நீரை கொதிக்க வைத்தாள். நீர் கொதித்ததும், புட்டுக்கு மா குழைத்து வைத்து விட்டு, தேநீரை தயாரித்தவள் அகிலனின் தேநீரை ஆறாமல் இருப்பதற்காக வெந்நீர் போத்தலில் ஊற்றிவைத்தாள். தனது தேநீரை எடுத்துக் கொண்டு, பால்கனிக்கு சென்று, அங்கே இருந்த கதிரையில் அமர்ந்து கடலைப் பார்த்தாள். கண்கள் ஆர்பரிக்கும் கடலலையை நோக்கியபோதும் அவள் மனம் வெகுவாக குழம்பியிருந்தது. தேநீரை பருகிக் கொண்டிருந்தவளின் மனதில் இன்றிரவு ஊருக்கு கிளம்ப வேண்டும் என்ற சிந்தனை தான்.

சற்று நேரத்தில் அகிலனும் தனது தேநீர் கோப்பையுடன் வந்தவன், அவளைப் பார்த்து “குட் மோர்னிங் சௌமி…” என்றவாறு அவளுக்கருகில் உள்ள கதிரையில் அமர்ந்தான்.
அவனைப் பார்க்காமல் “மார்னிங்..” என்றவளின் குரலில் கோபம் இருந்தது.

அவன் அருகே அமர்ந்ததும் எழ முயன்றவளின் கையை அவனது இடது கரத்தால் பிடித்து தடுத்தான்.

“சமைக்கோணும்..” என்றவளின் குரல் எழும்பவில்லை. அவனது அந்த தொடுகையில் அவளுக்கு உடல் முழுவதும் புது ரத்தம் பாய்ந்தது போன்ற ஓர் புதிய உணர்வு ஏற்பட்டது. ஆனால் அதை அவன் மீது வைத்திருக்கும் அதீத நேசத்துடன் அனுபவிக்க முடியாதவாறு, அவன், தான் அடித்ததால் என்னை சமாதானப் படுத்துகிறான் என்ற எண்ணத்தில் சினம் தான் ஏற்பட்டது அவளுக்கு.

“நல்லா தூங்கினியா..?” என அவளைப் பார்த்தான்.

“.......”

“முகமெல்லாம் அதைத்திருக்குது…?, வலிக்குதா…?” எனக் கேட்டான்.

“........”

“சொறி…” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

“..........” அவனின் அந்த மன்னிப்பு கூட அவளுக்கு வேதனையைத் தான் கொடுத்தது.

அவன் தனது இடது கையால் அவளின் கரத்தைப் பற்றி இருந்தவன், வலது கரத்திலிருந்த தேநீர் கோப்பையை அருகே உள்ள சிறு ரீப்போவில் வைத்து விட்டு, அக்கரத்தால் அவளின் கையை வருடினான். அவளின் தேகம் சிலிர்த்தது,கண்களை மூடிக்கொண்டாள்.

“சௌமி…?” குழைந்து வந்தது அவன் குரல்.

சற்று நேரம் அதை அனுபவித்தவள், பின்னர் அவ்வுணர்வுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கையை இழுத்தாள். முடியவில்லை.

“கையை விடுங்கோ…” என்றாள் அவள் மென்குரலில்.

“ஏன்…?” எனக் கேட்டான் தாபத்துடன்.
அவளின் அக்கரத்தில் தனது இதழை அழுந்தப் பதித்தான். அவளின் தேகம் கூசி சிலிர்க்க, என்ன இவன் பால்கனியில் வைத்து இப்படிச் செய்கிறானே என சங்கடமாக உணர்ந்தவள், அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தவள், மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள், அவனின் விழுங்கும் பார்வையை தாங்கமாட்டாமல் தலையை குனிந்தவளுக்கு, அவன் இதுவரைக்கும் கண்டிராத புதியவனாக தெரிந்தான். அவனின் கண்களில் காதல் கொட்டிக்கிடந்தது, பார்வையில் ஆசை, ரசனை மிகுந்து தெரிந்தது.

அவனுக்கு, அவளை அணைக்க வேண்டும், முத்தமிட வேண்டும் மேலும் என்னென்னவோ எல்லாம் செய்ய வேண்டும் போல உடல் பரபரத்து. முதலில் தனது நேசத்தை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும், அதற்குப் பிறகு தான் மற்றதெல்லாம் என்ற எண்ணத்தில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

அந்த நேரத்தில் சௌமி, காலியான கோப்பைகளை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு விரைந்தாள். அவள் சமையல் ஆரம்பிக்கவும் அங்கே வந்த அகிலன் “சௌமி என்ன சமைக்கிறாய்…?” எனக் கேட்டான் இயல்பாக.

புட்டுக் கொத்தி கொண்டிருந்தவள் “புட்டும் சம்பலும்” என்றாள் தலை நிமிராமல். புட்டை அவியப்போட்டுவிட்டு, சம்பலுக்குரிய ஏற்பாடுகளை கவனித்தாள்.

அவன், அவளை பார்த்தவாறு சமையலறையில் உள்ள மேடையில் ஏறி அமர்ந்தான். சம்பலை செய்தபின்னர், நல்லெண்ணெயில் சின்ன வெங்காயம் போட்டு முட்டை பொரித்தாள். அந்த வாசம் அவனுக்கு பசியை கிளப்பியது. அவள் எல்லா உணவுகளையும் மேசையில் எடுத்து வைக்கும் போது அவனும் சிறு சிறு உதவிகள் செய்தான். அவனுக்கும் பரிமாறிவிட்டு தானும் உண்டாள்.

இப்போது ஓரளவுக்கு அவளின் சமையலும் பக்குவமடைந்திருந்தது. பசியில் இருந்த அகிலன் நன்றாக சாப்பிட்டான்.
 
Top Bottom