• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடலின் மடியில் கதைப்போம் வா! - 1

ரோசி கஜன்

Administrator
Staff member

கதை 01

குளிர்ந்த காற்றில் உப்புச் சுவை கலந்தது போன்ற உணர்வு. ஜன்னலினூடே பார்வையை வீசினாள் வஞ்சி. என்றும் போல் அலை வீசி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது கடல்.

புகையிரதம் புகையை வெளியிட்டுக் கொண்டு நாணமுற்ற பெண்ணவள் போல் ஆடி அசைந்து சென்று கொண்டிருந்தது. காரசாரமாகக் கதைத்துக் கொண்டிருந்தோரை விட தூக்கத்தில் ஆழ்ந்திருந்தோர் தான் ஏராளம். அங்குமிங்கும் பார்வையைச் சுழற்றிய மங்கையின் மீன் விழிகளில் ஒரு வித ஏக்கம்.

புகையிரதம் நிற்கவும் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள். வெள்ளைச் சுவரில் கறுப்புத் துளிகள் போன்று கல்வெட்டாய்ப் பொறிக்கப்பட்டிருந்தது 'தெஹிவலை' எனும் பெயர்.

அப்படியெனில் இதற்கு அடுத்த தரிப்பிடத்தில் அவள் இறங்க வேண்டும். இதுவரையில்லாத பரபரப்பு பெண்ணவளைத் தொற்றிக் கொண்டது.

மடியில் வைத்திருந்த பையைத் தூக்கி இருக்கையில் வைத்து விட்டு எழுந்தாள். பொதிகள் வைக்கும் மேல் இறாக்கையில் வைத்த மற்றொரு பையையும் எட்டியவாறு எடுத்துக் கொண்டாள்.

ஒரு பையைப் பின்னால் மாட்டியவள், மற்றையதை முன்னால் மாட்டிக் கொண்டாள். அவளிருக்கும் கோலத்தைப் பார்த்து ஏதோ ஞாபகம் வந்தவளாய் இதழோரம் சிரித்துக் கொண்டாள்.

அவள் பாடசாலை செல்லும் காலமது. இதே போல் ஒருவர் இரண்டு பைகளை மாட்டிக் கொண்டு செல்வதைக் கண்டு "அதோ பாருடி. முன்னால பேக் போட்டிருக்கிறத பாத்தா அந்தாள் ப்ரெக்னன்ட் எண்டு எல்லாரும் நெனச்சிடப் போறாங்க. ஹா ஹா" நண்பியோடு கேலி பேசிச் சிரித்ததை நினைவு கூர்ந்தாள்.

இன்று என்னைப் பார்த்து எத்தனை பேர் இப்படி நினைக்கிறார்களோ? யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் என்று சும்மாவா சொன்னார்கள்? அவள்‌ மனம் பழமொழியொன்றையும் இணைத்துப் பார்த்துப் பரிகாசம் செய்து கொண்டது.

மிதிபலகை நோக்கிச் செல்ல, திடீரென புகையிரதம் வேகமெடுத்ததில் விழப் போனவளாய் தட்டுத்தடுமாறி கைப்பிடியைப் பிடித்துக் கொண்டாள்.

வேகமாய் வீசிய காற்று அவள் முகத்தில் மோதிச் செல்ல, தந்தையின் ஞாபகம் மனதில் உதித்தது. புகையிரதத்தில் அவரது கைப்பிடித்துப் பாதுகாப்பாக நடந்த ஞாபகம் அவளுக்கு. என்ன தான் தனியே பழகிக் கொண்டாலும் தனிமை சில போது அவளை அச்சுறுத்தி விடும்.

புகையிரதம் மெல்லமாய்த் தன் இயக்கத்தை இடைநிறுத்தியது. புகையிரத மேடையில் கால் பதித்தாள் காரிகை.

"வெள்ளவத்தை" எனும் பெயரை அவளது உதடுகள் உச்சரித்தன. ஒரு வருடமாக அவளின் உதடுகள் வாசிக்கத் தவறாத வாசகம், அவளின் பாதங்கள் பதியத் தவறாத இடம்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவளுக்குக் கிடைத்தது, இலங்கையின் முதற்தர பல்கலைக்கழகமான கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு. பல்கலைக்கழக விடுதி அவளுக்குக் கிடைக்காமல் போகவே, வெள்ளவத்தையில் தனியார் விடுதி ஒன்றைத் தங்குமிடமாக்கிக் கொண்டாள்.

நாளை அவளுக்கு இரண்டாம் வருடம் ஆரம்பிக்கின்றது. வழமைக்கு மாறாக, புத்தகக் கட்டுகளுக்கு மேலதிகமாக அவள் இம்முறை இன்னொன்றையும் சுமந்து கொண்டு வந்திருக்கிறாள்.

புகையிரத நிலையத்தின் பின்னால் உள்ள கடற்கரை நோக்கி நடைபோட்டவள் எங்கோ இலக்கின்றி வெறித்துப் பார்த்தாள்.

"ஆதி" எனும் அழைப்பு செவி தீண்ட, சட்டெனத் திரும்பிப் பார்த்தாள் ஆதிரா, நம் நாயகி.

அவளின் எதிரில் நெடுநெடுவென்று வளர்ந்த ஆடவனொருவன் நின்றிருந்தான். அவளின் காத்திருப்புக் காரணமானவன் அவன் தான்.

"என்ன நடந்தது? எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணின? எதுவும் பிரச்சினையா?" படபடவெனப் பிறந்தன, வினாக்கள்.

அவளின் விழிகள் எதிரில் கொந்தளித்திடும் கடலை வெறித்தன. வார்த்தையில் தீவிரம் குடியேற, "இமீடியட்டா எனக்கொரு ஜாப் வேணும். உன்னால செட்டப் பண்ணி தர முடியுமா?" எனக் கேட்டாள்.

"ஜாப் எதுக்கு? நீ படிக்கிற ஆதி. எப்படி வேலை செய்ய முடியும்?" அவனிடத்தில் மறுப்பு.

"ஜாப் செய்யவா வேணாமா எண்டு உன் கிட்ட சஜஷன் கேக்க நான் வரல. வேலைக்குப் போக வேணுமெண்டு முடிவு எடுத்துட்டேன். முடியாதெண்டா விடு. நானே பாத்துக் கொள்றேன்" தோளில் இருந்து நழுவிய பையைச் சரி செய்து கொண்டவள் விறுவிறுவென முன்னே நடக்க,

"ஓய் ஆதி, ஒரு நிமிஷம் நில் டா. என்ன கோவம் உனக்கு?" அவளின் கையைப் பிடித்துத் தடுக்க, "என் கையை விடு விஷ். என் ஃப்ரெண்டு தானே, நான் கேட்டா ஹெல்ப் பண்ணுவண்டு தவறா நெனச்சிட்டேன் போல" அவனது பேச்சுக்குச் செவி தாழ்த்தாமல் புறப்பட ஆரம்பித்தாள்.

"செமஸ்டர் ப்ரேக் எண்டு சொல்லிட்டு வீட்டுக்குப் போன. கொஞ்ச நாள் மேசேஜ் போட்ட. திடீரெண்டு காணாமப் போயிட்ட. ஏதாவது பிரச்சினையோண்டு பயந்துட்டேன்" பட்டாசு போல் வெடித்தவன் வேறு எதையோ சொல்ல வந்து விட்டு வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

சட்டென நடையை நிறுத்தி விட்டு அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஆதிரா. அவன் முகத்தில் பதற்றமும் தவிப்பும் போட்டியிட்டன.

அவன் விஷ்ணு!
கொழும்பிற்கு வந்த பிறகு அவளுக்குக் கிடைத்த அன்பான நட்பு அவன். அவள் மீது அத்தனை அக்கறையைப் பொழிபவன். அவனுடனான உறவென்பது அவளைப் பொறுத்தவரை மிகவும் வித்தியாசமானது.

இருவர் மனம் ஒத்தால் தான் உறவோ நட்போ எதுவாயினும் ஏற்படும். அப்படியிருந்தாலும், உறவைப் பலப்படுத்தும் வகையில் ஒருவரின் இணக்கம் அதிகமாக இருக்கும். இவர்களின் நட்பில் அதிகம் ஈடுபாடு கொண்டது விஷ்ணு தான். ஆதிரா ஓரளவுக்கு மேல் நட்பு பந்தத்தில் பிணைவதில்லை. ஆனால் விஷ்ணு மீது ஆழமான நம்பிக்கையொன்று அவளிடத்தில் உண்டு.

"படிச்சி முடிச்சிட்டு வேலைக்குப் போ. அப்போ யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஃபர்ஸ்ட் இயர் முடிச்ச கையோட வேலைக்குப் போக என்ன அவசியம் இருக்கு சொல்லு?"

"மூத்த பிள்ளையா பிறந்துட்டாலே எல்லா அவசியமும் வந்துடும். என் குடும்பத்தைப் பாத்துக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு" அவள் குரல் கரகரத்தது.

"என்ன கதைக்கிற நீ? பெரிய மனுஷி போலக் கதைக்காத. நீ வேலைக்குப் போறத அப்பாம்மா விரும்புவாங்களா?" அவளை அந்த முடிவில் இருந்து மாற்றுவதற்கு முனைந்தான் விஷ்ணு.

"அப்பாம்மா விரும்ப மாட்டாங்க. ஆனா என் நெலம இப்படி மாறிப் போச்சே. என் அப்பா.." அவள் பேச்சுத் தடைப்பட்டு நின்றது, உஷ்ணப் பெருமூச்சொன்றின் வரவால்.

"அப்பாவுக்கு என்னாச்சு?" விஷ்ணு பதற, "அப்..அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டாரு" நெஞ்சம் விம்மியது அவளுக்கு.

மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தான் ஆடவன். நன்றாக இருந்தவருக்கு திடீரென என்னவானது? அதுவும் அவரின் இறப்புச் செய்தியை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"சாரி ஆதி. உன் நெலம தெரியாம பேசிட்டேன்" என்றவனுக்கு அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை.

அவளின் தந்தையைப் பற்றிக் கேட்க வேண்டும் போல் இருந்தது. அதைக் கேட்டால் இன்னும் உடைந்து விடுவாளோ என்ற பயமும் அச்சுறுத்தியது. தந்தை என்றால் அவளுக்கு உயிரல்லவா? எப்போது சந்தித்தாலும் எங்கப்பா எங்கப்பா என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லுவாளே. இதை அவள் எப்படித் தாங்கினாள்? ஆயிரம் சிந்தனைகள் ஒற்றை நிமிடத்தில் அவனுள்ளே ஊடுறுவிச் சென்றன.

சில நிமிட மௌனத்தின் பின்னர், "எங்கப்பா நல்லாத்தான் இருந்தார். சைக்கிள்ல டவுனுக்குப் போய் வரும் போது பைக் ஒன்னு வந்து மோதி அவர் வீசிப்பட்டு விழுந்ததுல தலை பட்டுருச்சு. மூளைக்கு ப்ளட் போய் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருந்தாரு. அப்பறம் எங்கப்பா இறந்துட்டாரு" இறுதியில் அவளின் குரல் அழுகையில் உடைந்தது.

"எனக்குச் சொல்லி இருக்கலாம்ல?" எனக் கேட்டு விட்டாலும் அக்கேள்வி அபத்தமாகத் தான் தோன்றியது அவனுக்கு.

அந்நாட்களில் அவள் எப்படி இருந்திருப்பாள்? அந்நேரத்தில் தன் ஞாபகம் வருமா? முற்றிலும் ஸ்தம்பித்த நிலையில் தானே இருந்திருப்பாள்?

"அந்த டைம் உனக்கு ஒன்னும் நெனச்சிருக்காது தானே? உங்கப்பாவத் தவிர வேற எண்ணமே இருந்திருக்காது. அதனால நான் இப்படிக் கேக்க கூடாது தான். இருந்தாலும் கடைசியா அவரைப் பார்க்குற சான்ஸ் கெடச்சிருக்கும் எண்டுற ஆதங்கத்துல கேட்டேன்" அவள் நிலையெண்ணி அவனிலும்‌ கவலை படர்ந்தது.

"ம்ம். எங்கப்பாவத் தவிர வேற எதுவுமே எனக்குத் தெரியல. தம்பி, தங்கச்சிய விட அவரோட இழப்பை ஜீரணிக்க எனக்கு ரொம்ப நாள் தேவைப்பட்டது" இன்னுமே அவளால் அதை ஜீரணிக்க இயலவில்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தது.

"எனக்கு வேலை தேடித் தருவ தானே?" அவன் முகத்தை அண்ணாந்து நோக்க, "ட்ரை பண்ணுறேன்" என உறுதியளித்தான்.

அவள் செல்ல ஆயத்தமாக, அவனும்‌ இணைந்து நடந்தான்.

"அப்படியே கடைக்குப் போகனும். உன் கூட வந்துட்டு அப்படியே போறேன்" என்றபடி அவன் நடக்க, தலையசைப்புடன் இணைந்து நடந்தாள்.

"ஏன் இவ்ளோ ஸ்லோவா நடக்குற?" அவளின் மென்னடையைப் பார்த்ததும் அவனிடமிருந்து வினா அம்பொன்று புறப்பட்டது.

"நீ கூட வர்றதால இருக்கலாம். இதுவே நான் தனியா போகும் போது அவ்ளோ ஸ்பீடா நடப்பேன். இந்த ரோடால தனியா வரும் போது மனசு ஒரு மாதிரி படபடன்னு அடிச்சுக்கும். எப்படா போர்டிங் வரும் எண்டு நெனச்சிட்டே சீக்கிரமா போயிடுவேன். கூட ஒருத்தர் இருக்கும் போது ஒரு மாதிரி பாதுகாப்பா ஃபீல் பண்ணுவேன். அதனால மெதுவா நடக்குறேன்" என்று பதிலளித்தவள், விடுதி வந்ததும் அவனிடமிருந்து விடைபெற்றாள்.

மின் தூக்கி வழியே இரண்டாவது தளத்திற்குச் சென்றவள் அந்தப் பெரிய அறைக்குள் நுழைந்து வாயிலுடன் இருந்த தனது கட்டிலில் தொப்பென அமர்ந்தாள்.

அலைபேசியில் சேமித்து வைத்திருந்த அப்பா எனும் எண்ணிற்கு அழைப்பு விடுத்தவளுக்குத் திடுமென உடம்பு தூக்கி வாரிப் போட்டது. அவர் இந்த உலகைப் பிரிந்து சென்று விட்டாரே எனும் உண்மை அவளுக்குப் புலப்பட்ட போது அலைபேசி அழைப்பு ஏற்கப்பட்டது.

"சொல்லுங்கக்கா" மறு முனையில் பேசியது அவளின் தம்பி அருண்.

"போர்டிங் வந்துட்டேன் அருணு. அம்மா கிட்டச் சொல்லிரு" பெருமூச்சுடன் அவள் கூற, அவளின் உணர்வு புரிந்தவனாக, "அப்பா ஞாபகம் வந்ததெண்டு சொல்லி அப்பிடியே இருந்துடாதீங்க. சாப்பிட்டு தூங்குங்கக்கா" அக்கறையுடன் மொழிந்தான் அவன்.

"சரிடா. அம்மா, தங்கச்சிய பாத்துக்கோ. நாளைக்கு ஸ்கூல் இருக்குல்ல. நீயும் நேரத்தோட படுத்துரு" அவளும் பதிலுக்குக் கூற, "சரிக்கா" என அழைப்பைத் துண்டித்தான்.

கழுவி விட்டு உடை மாற்றி வரும் போது நேரம் எட்டு மணியை நெருங்கியது. அது இரவுணவு நேரம். தட்டை எடுத்துக் கொண்டு கீழ் தளத்திற்குச் சென்றாள்.

இடியப்பமும், தேங்காய்ச் சம்பலும் மேசையில் வைக்கப்பட்டிருக்க, ஓரமாக ஒதுங்கி அமர்ந்து கொண்டாள். விடுதியில் அப்படித் தான் சாப்பாடு வைப்பார்கள். அவர்கள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். முதலில் அனைவரும் அவசரப்பட்டு எடுக்கச் செல்வர். ஆனால் ஆதிராவோ கூட்டம் குறைந்த பிறகு கடைசியாக ஆற அமர எடுத்துக் கொள்வாள்.

"இப்பிடி இருந்தா சாப்பாடு முடிஞ்சிரும்" விடுதியில் நீண்ட காலமாகத் தங்கும் ஒரு பெண் கூற, மில்லி மீட்டரளவு புன்னகையொன்றைப் பதிலாகக் கொடுத்தாலும் அவளுக்குத் தனது வழமையான இயல்பை மீற விருப்பம் இல்லை.

கடைசியாக ஐந்து இடியப்பங்களைச் சம்பலுடன் எடுத்துக் கொண்டு சென்று சாப்பிட்டாள். அங்கு ஒவ்வொருவரும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கலகலத்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

வேகமாகச் சாப்பிட்டு முடித்து விட்டு அறையினுள் வந்து கட்டிலில் சரிந்து கொண்டாள். தொலைபேசித் தொடுதிரையிலும் தந்தையின் முகம் தான்.

"உங்கள இவ்வளவு கெதியா இழப்பேனெண்டு நெனக்கவே இல்ல. மிஸ் யூப்பா" அவர் முகத்தைப் பார்த்துச் சொன்னவளின் மனதில் வாழ்வின் அடுத்த கட்டம் கேள்விக்குறியாகத் தெரிந்தது.

தொடரும்...
 
Top Bottom