• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடலின் மடியில் கதைப்போம் வா! - 2

ரோசி கஜன்

Administrator
Staff member
கதை 02

காலையில் சீக்கிரமாக எழுந்து கொண்டாள் ஆதிரா. காலைப்பொழுதுகளில் அவளின் கால்கள் சக்கரம் கட்டிக் கொள்ளும். நேரத்துடன் எழுந்து கழுவிக் கொண்டு வந்து உடையை அயர்ன் பண்ணி வைத்து விடுவாள்.

சிறிது தாமதித்தாலும் கூட்டம் அதிகரித்து விடும். அதன் பிறகு அயர்ன் பண்ண லைனில் நிற்க வேண்டும், காய்ந்து போன பாண் துண்டுகளை உள்ளே தள்ளுவதற்கு வேறு நேரம் செல்லும். வழமையான நேரம் பிந்தி விட்டால் பேருந்தில் நிற்கக்கூட இடமின்றிச் செல்ல வேண்டி ஏற்படும்.

அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு பஸ் கட்டணத்திற்கான நாற்பது ரூபாயைக் கையில் பொத்தி வைத்துக் கொண்டு பஸ் தரிப்பிடம் சென்றாள். எறும்புக் கூட்டம் வருவது போல் வரிசையாக பேருந்துகள் வந்து கொண்டே நிற்க, 154 ஆம் இலக்க பஸ் வந்ததைக் கண்டதும் அவளுள் ஆசுவாசம்.

ஆனால் உள்ளே இருந்த கூட்டத்தைக் கண்டதும் சலிப்பாக இருந்தது. 154 ஆம் இலக்கம் என்பது காலையிலும் மாலையிலும் கூட்டத்திற்குப் பஞ்சமிருக்காத பேருந்து. தொழிலுக்குச் செல்லும் பெரும்பாலானோரின் போக்குவரத்து சாதனம் அது தான்.

பஸ்ஸில் ஏறிக் கொண்டவளுக்கு மிதிபலகையைத் தாண்டி உள்ளே செல்ல இடமேயில்லை.

அவளுக்குப் பின்னால் ஏறிக் கொண்டு "இஸ்ஸரஹட்ட யன்ன.. தவ யன்ன.." (முன்னால் செல்லுங்கள். இன்னும் இன்னும்" என முன்னால் செல்லப் பணித்த நடத்துனரின் மேல் சொல்லொணா கோபம் கிளர்ந்தது.

இருந்தும் செய்யும் வழியின்றி பல்லைக் கடித்துக் கொண்டு பயணச்சீட்டை எடுத்தவள் தன் மீது ஆண்கள் படும் போதெல்லாம் உடலைக் குறுக்கிக் கொண்டாள். இந்த நேரங்களில் பஸ்ஸை விட்டு இறங்குவதே பெரிய ஆசுவாசம் தான்.

இறங்குமிடம் வந்ததும் துள்ளியிறங்கி விட்டு பல்கலைக்கழகம் நோக்கி நடக்கலானாள். கைகள் இரண்டையும்‌ மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தவாறு நடக்கத் துவங்கினாள்.

அவளை எதிர்கொண்டு செல்லும் பேருந்துகளின் பெயரை வாசித்துக் கொண்டே செல்லலானாள். ஒரு பெயரை வாசித்ததும் குபீரென சிரிப்பு முகிழ்த்தது.

ஹொரண - குழம்பு என்றிருந்தது. கொழும்பைக் குழம்பாக்கி வைத்த அந்தத் தமிழ் மேதை யாரோ என நினைத்தபடி உள்ளே நுழைந்தாள்.

அவளின் விழிகளோ அங்குமிங்கும் சுற்றிச் சுழன்றன. யெல்லோவ்ஸ் நோக்கிச் சென்ற ஆதிராவின் கண்கள் தன் தேடலுக்குக் காரணமானவளைக் கண்டு கொண்டதற்கு அறிகுறியாய்ப் பளிச்சிட்டன.

கலைப்பிரிவின் நடுவில் மஞ்சள் நிற மேசைகளும் கதிரைகளும் போடப்பட்டிருக்கும் இடம் அனைவராலும் யெல்லோவ்ஸ் என்று அழைக்கப்படும். விரிவுரைகள் இல்லாத சமயத்தில் அனைவரும் அங்கு தான் அமர்ந்திருப்பார்கள். கற்றலும், நண்பர்களின் அரட்டைகளும் என்று ஒரு பக்கம் அமர்க்களமாக இருக்கும். இன்னும் சிலரின் கைகளில் உள்ள மொபைல்களில் யுனிவர்சிட்டி வைஃபை தவழ்ந்து விளையாடும்.

"நிவி" என்று அழைத்தவாறு ஆதிரா செல்ல, மொபைலில் முகம் புதைத்திருந்த நிவிதா தலை தூக்கி நண்பியைப் பார்த்தாள்.

நிவிதா ஆதிராவின் பல்கலைக்கழகத் தோழி. வந்த முதல் நாளே இருவருக்கும் இடையே அறிமுகம் நடந்தது. நிறையப் பேர் ஒரே ஊரில் இருந்து வந்ததால் அவர்கள் தங்களுக்குள் கூட்டம் கூட்டமாகச் சுற்ற, காலியில் இருந்து தான் மட்டுமே தனியாக வந்திருந்த ஆதிராவுடன் நிவிதா நண்பியாகக் கரம் கோர்த்தாள்.

நிவிதாவின் ஊர் களுத்துறை என்பதால் அவள் தினமும் வீட்டில் இருந்தே பல்கலைக்கழகத்திற்கு வருவாள்.‌ சில வேலைகளில் பேருந்து பழுதாகிவிட்டால் மாற்று வழிகளைத் தேட வேண்டும் என்பதால் நேரத்துடன் வந்து விடுவாள். அவள் வரும் நேரத்திற்கு மெசேஜ் போட்டால் விடுதியில் இருக்கும் ஆதிராவும் அதே நேரத்திற்கு வருவாள். விரிவுரை நேரம் வரும் வரை இருவரும் கதைத்துக் கொண்டிருப்பார்கள். சிலவேளை பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று தேவையான தேடல்களில் ஈடுபடுவார்கள்.

தனக்கு ஏற்கனவே அறிமுகமானோர் யாருமின்றி பல்கலைக்கழகம் வந்தவளுக்கு நிவிதாவே உற்ற தோழியாய். சில வேளைகளில் வீட்டிலிருந்து நிவிதா அம்மா சமைப்பதைப் பொதியாக எடுத்துக் கொண்டு வந்தால், இருவரும் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று உண்பார்கள்.

"இப்பதான் வந்தியா?" என்று ஆதிரா கேட்க, "கொஞ்ச நேரம் ஆச்சு. சாப்டியா?" என்று வினவினாள் நிவி.

"இல்ல. போர்டிங்ல பாண் வெச்சிருந்தாங்க. அந்த டைம்ல சாப்பிட முடியல" எனக் கூற, "நான் புட்டு கொண்டு வந்திருக்கேன். போய் சாப்பிடலாம்" என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

காலை வேளைதனில் கலைப் பிரிவு சிற்றுண்டிச்சாலை வெகு அமர்க்களமாக இருந்தது. காலை என்பதால் தான் இப்படி. பகல் நேரத்திலோ கால் கிலோ மீட்டர் அளவு வரிசை இருக்கும். ஒரு கையில் தட்டும், மற்றைய கையில் உணவுக்கான காசுமாக பகல் உணவை வாங்குவதற்கு அங்கே தான் அனைவரும் தேனீக்கள் போல் மொய்த்திருப்பார்கள்.

"அப்பா தவறினத கேள்விப்பட்டேன். ரொம்பக் கஷ்டமா இருந்தது ஆதி. அம்மா எப்படி இருக்காங்க?" என்று கவலை படர்ந்த குரலில் வினவினாள் நிவிதா.

"இருக்காங்க நிவி. இந்த ரெண்டு மூனு வாரத்துல எல்லாமே மொத்தமா மாறிப் போகுமெண்டு கனவுல கூட நினைக்கல்ல. சோகத்துலயே அமிழ்ந்து இருக்க முடியாதுல்ல. அடுத்து என்ன செய்றது எண்டு யோசிக்கிற எடத்துல நான் இருக்கேன். வேலை தேடித் தர முடியுமாண்டு விஷ்ணு கிட்ட கேட்டேன். பாத்து சொல்லுவான். இல்லண்டா நானே ஏதாவது ட்ரை பண்ண வேணும்" உறுதியான குரலில் மொழிந்தாள் அவள்.

"விஷ்ணு பெயர் கேட்டதும் ஞாபகம் வருது. அன்னிக்கு மேசேஜ்ல சொல்லி இருந்தியே.." என்று நிவி ஆரம்பிக்க, "வயிறு ஃபுல் நிவி. கை கழுவிட்டு வாறேன்" வயிற்றைத் தொட்டுக் காட்டி விட்டுச் சென்றாள் ஆதிரா.

அவளின் அந்தச் செயலே அப்பேச்சை மேற்கொண்டு பேச விரும்பவில்லை என்பதைப் பறைசாற்ற, நண்பியின் வாழ்க்கையின் சோகங்கள் விரைவில் தீர வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ள மட்டுமே அந்தத் தோழியால் முடிந்தது.

மறுபுறம் இவர்களது பேச்சில் அடிபட்ட விஷ்ணுவோ ஆழ்ந்த யோசனையுடன் தன் அக்காவின் வீட்டில் அமர்ந்திருந்தான். அவன் சிந்தனையின் மையக்கருவாய் இருந்தவள் ஆதிராவே தான்.

அவனின் அருகில் அமர்ந்து தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள் வைஷாலி. சற்று முன் தம்பி சொன்ன தகவலை அவளாலும் சடுதியில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

என்று அவளுடன் நட்புக் கொண்டானோ அன்று முதல் வீட்டு வாசல் மிதித்ததில் இருந்து வெளியே செல்லும் வரை ஆதிரா ஆதிரா என்றே உச்சரித்துக் கொண்டிருப்பான்.

அதில் பாதிப் பேச்சு அவளுக்கும் அவளது தந்தைக்குமான உறவைப் பற்றியது. அப்பா மீது உயிரை வைத்திருக்கும் மகளுக்கு அவரது திடீர்ப் பிரிவு எப்படி இருந்திருக்கும் என்பதை ஒரு பெண்ணாக அவளுக்கு நினைத்துப் பார்த்தும் போதே மனம் வலித்தது.

"ஆதி பாவம்ல டா? அப்பா இல்லங்கிறதை ஏத்துக்கிட்டு எப்பிடி வாழப் போறாளோ?" கவலையுடன் கூறினாள் வைஷாலி.

"ஆமாக்கா. நாங்க சின்ன வயசுலயே அப்பாவ இழந்தோம். அதனால அவரோட இழப்பு எங்களை அவ்வளவா பாதிக்கல. ஆனா ஆதிக்கு அப்பிடி இல்ல. இவ்வளவு காலமும் அவர் கைப்புடிச்சிட்டே வாழ்ந்துட்டா. இனி அந்தக் கையோட பாதுகாப்பு இல்லாம வாழப் போறா. ஒரு உறவு ஆரம்பத்துலயே இல்லாம இருக்கிறத விட இருந்துட்டு இல்லாமப் போறது கொடுமையா இருக்குமே" விஷ்ணு சில ஞாபகங்களின் சிதறலுடன் சொல்ல,

"ம்ம்ம். நமக்கு அம்மா இருந்துட்டு இல்லாமப் போனது போல" எனும் போதே வைஷாலியின் விழிகளில் கண்ணீரின் சாயல்.

அவர்களது தாய் லட்சுமி மூன்று வருடங்களுக்கு முன்பு‌ இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். தாயின் மீது அன்பு கொண்ட அவ்விரு பிள்ளைகளும் அவரின் திடீர் இழப்பில் துடித்துப் போயினர். இன்னும் கூட அன்னையின் இழப்பை அவர்களால் நிதர்சனம் என ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

"அக்காவும் தம்பியும் சென்டிமண்டா பேசிட்டு இருக்கீங்க போல" ஷூவைக் கழற்றி இறாக்கையில் வைத்து விட்டு வந்தான் வைஷாலியின் கணவன் மதன்.

"ஆமாப்பா. ஆதியோட அப்பா இறந்துட்டாராம். அதைத் தம்பி சொல்லும் போது அம்மா ஞாபகம் வந்துருச்சு. அதான் அப்செட் ஆகிட்டோம்"

"அச்சோ பாவமே. அந்தப் பொண்ணு ஃபர்ஸ்ட் புள்ள வேற. இனி குடும்பச்சுமை அவ மேல தான் விழும்" குடும்பத்தின் முதல் பிள்ளையான மதனுக்கு ஆதிராவின் நிலை புரிவதாய்.

"உண்ம தாங்க. நீங்க இருக்கும் போது, தம்பி இருக்கும் போது, அம்மா இருக்கும் போதே முதல் பிள்ளையா இருந்த எனக்கு ஏதோ பாரம் ஏறுன மாதிரியே இருந்ததது. இப்பவும் அப்படித் தான். அந்தப் புள்ளக்கி அம்மாவத் தவிர யாரும் சப்போர்ட்டுக்கு இல்ல. படிப்பயும் குடும்பத்தயும் பேலன்ஸ் பண்ணுறது கஷ்டமா இருக்கும்" வைஷாலிக்கு ஆதிராவை எண்ணிப் பரிதாபம் பிறந்தது.

"யாரும் இல்லண்டு விட்ற முடியாதுக்கா. ஆதிக்காக நான் இருப்பேன்" என்ற விஷ்ணுவின் குரலில் ஓர் உறுதி.

"அது சரிடா மச்சா. ஆதி உனக்கு எதுவும் பதில் சொல்லுச்சா?" மதனின் குரலில் சிறு ஆர்வம்.

கட்டை விரலால் நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டவன், "இல்ல மாமா. அப்பா அப்பா எண்டு அவ அழுறப்ப மனசாட்சி இல்லாம அதப் பத்தி கேக்க முடியுமா? இங்க தானே இருக்கப் போறா. ஆற அமர கேக்கலாம்" என்று பதில் சொல்ல, "ஓகே டா. எதுவும் யோசிக்காத. மெதுவா பேசிக்கலாம்" அவன் தோளில் ஆதுரமாகத் தட்டிக் கொடுத்து விட்டு சோஃபாவில் சரிந்து கொண்டான்.

கணபதி - லட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் வைஷாலி. அவளுக்குப் பிறகு மூன்று வருடங்களில் பிறந்தவன் தான் நம் நாயகனான விஷ்ணு.

விஷ்ணுவுக்கு ஒரு வயது பூர்த்தியாக முன்னரே கேன்சரால் பீடிக்கப்பட்டு கணபதி இறையடி எய்தினார். வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட லட்சுமி பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து பிள்ளைகளைப் படிக்க வைத்தார்.

சாதாரண தரப் பரீட்சை முடித்தவுடன் டென்டல் ஒன்றில் உதவி வேலைக்குச் சென்றாள் வைஷாலி. அங்கு டென்டிஸ்டாக இருந்த மதனுக்கு அவளைப் பிடித்து விட, லட்சுமியிடம் வந்து பெண் கேட்டுத் திருமணம் செய்து கொண்டான். வைஷாலியை மேற்கொண்டு படிக்குமாறு கூறியும் அவள் மறுத்து விட்டாள்.

மூன்று மாடிகள் கொண்ட கட்டிடத்தில் கீழ் தளத்தை டென்டலாக மாற்றி, இரண்டாம் தளத்தில் மதனும் வைஷாலியும் குடியிருந்தனர். லட்சுமி மறுத்தும் கேளாமல் வற்புறுத்தி அவரையும் விஷ்ணுவையும் அவர்களுடனே தங்க வைத்தனர்.

கலைப்பிரிவில் உயர்தரம் கற்ற விஷ்ணு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானான். தமிழ் மொழியில் சிறப்புப் பட்டம் பெற்று ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்டன. அரசாங்க வேலைக்காகக் காத்திருந்தாலும் அது வரை சும்மா இருக்கப் பிடிக்காமல் வெள்ளவத்தை கடற்கரைக்கு எதிரில் இருக்கும் தேவி புக் ஹவுஸில் வேலை செய்கிறான்.

அம்மாவின் இழப்பின் பிறகு அவனுக்கு வைஷாலியே அனைத்துமாகிப் போனாள். சகோதரியை இரண்டாம் அன்னை என்பார்கள். அவள் மட்டும் அப்படியல்ல‌. மதனும் விஷ்ணுவுக்குத் தந்தை போல் வாய் திறந்து கேட்கும் முன் அனைத்தையும் அவன் முன் கொண்டு வந்து நிறுத்திடுவான்.

திருமணம் முடிந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாகியும் குழந்தைப் பாக்கியம் கிட்டாத வைஷாலியும் மதனும் விஷ்ணுவைத் தான் தம் குழந்தை போல் தாங்குவார்கள். அவர்களே தன் உலகம் என்று அவனும் வாழும் போது தான் அவன் வாழ்வில் ஆதிரா வந்தாள்.

புது உறவொன்று கிடைத்த பூரிப்பில் மகிழ்ந்தான் விஷ்ணு. அவள் அவனது வீட்டிற்கு வராவிட்டாலும் அந்த வீட்டில் அவளும் ஒருத்தி என்று நினைப்பது போல் விஷ்ணு அவளின் நாமம் கூறாத நாளே இல்லை எனலாம். ஆதிரா என்றால் விஷ்ணுவுக்கு அவ்வளவு பிரியம்.

தொடரும்...
 
Last edited:
Top Bottom