• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடலின் மடியில் கதைப்போம் வா! - 6

ரோசி கஜன்

Administrator
Staff member

கதை 06

"முதல் நாள் வேலைக்குப் போனேன். வேலை பாக்குற எல்லாரும் நல்லாத்தான் பேசினாங்க. நின்னுட்டு வேலை பாக்கும் போது கால் வலிச்சுது. போகப் போகப் பழகிடும். நீங்க கவலப்படாதீங்கப்பா. நம்ம ஃபேமிலிய நான் நல்லா பாத்துப்பேன்"

- ஆதிராவின் டயரி


விஷ்ணு சொன்னது போலவே டயரி எழுத ஆரம்பித்திருந்தாள் ஆதிரா. தனது உள்ளத்தின் வலிகளையும் தந்தைக்கான ஏக்கங்களையும் வார்த்தைகளால் வடித்தாள். கூடவே கண்ணீரும் வழிந்து டயரியின் வறட்சிக்கு ஈரம் சேர்க்கும்.

இன்று முதல் நாளாக வேலைக்குச் சென்றாள். லெக்சர்ஸ் முடிந்ததும் பேருந்தில் வந்து கடையில் இறங்கியவள், வேலை முடிந்த பிறகு தான் வீடு வந்து சேர்ந்தாள். அனைத்தும் புது அனுபவமாக இருந்தன.

இரவு உணவை உண்டு விட்டு இன்று வாங்கி வந்த டயரியுடன் சில புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு கற்றல் கூடத்திற்குச் சென்றாள்.

வேலைக்குச் செல்வதைப் பற்றி நேற்றே தாயிடம் சொல்லி இருந்தாள். மறுமுனையில் அவர் விசும்பும் சத்தம் அவளுக்குக் கேட்டது.

"என்ன நெனச்சுக் கவலைப்படாதீங்கம்மா. நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்" என்று அவருக்கே தாயாக மாறி ஆறுதல் சொன்னாள் ஆதிரா.

முதிர்ச்சி என்பது வயதில் இருப்பதில்லை. மாறாக அது வாழ்க்கையில் நாம் பெற்றுக் கொள்ளும் அனுபவங்களைப் பொறுத்து அமைகின்றது. ஆதிராவுக்கு அவ்வளவு ஒன்றும் வயதில்லை. ஆனால் இழப்புகளும் பொறுப்புகளும் அவளை முதிர்ச்சியானவளாக மாற்றியிருந்தன.

தந்தையிடம் டயரி மூலம் தன் மனதில் உள்ளவற்றைக் கொட்டினாள். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இன்னும் அவளுக்கு ஒழுங்காக விரிவுரைகள் ஆரம்பிக்கவில்லை. இரண்டாம் வருடத்தில் தான் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும். அவளுக்கு எக்கானாமிக்ஸ் ஸ்பெஷல் செய்ய வேண்டும் என்பது ஆசை. இன்னும் அதன் தேர்வுப் பட்டியல்கள் வரவில்லை என்பதால் படிப்பதற்கும் அவ்வளவாக ஒன்றும் இல்லை.

ஸ்டடி ஹாலில் மற்றவர்கள் மிகத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். தனியார் பல்கலைக்கழகங்களில் படிப்போர் தான் அந்த விடுதியில் அதிகம். அவர்கள் பொதுவாக தொழிநுட்பத் துறையில் கற்பதால் மடிக்கணினியோடு தான் இணைந்திருப்பார்கள். இவளுக்கோ புத்தகங்களில் மூழ்கி முத்தெடுப்பதில் தான் பிரியம்.

ஒரு பக்கம் அசதியில் தூக்கமும் வந்து விட்டது‌. பேனாவை எடுத்துப் புத்தகமொன்றின் பின் பக்கத்தில் தன் கையெழுத்தைப் போட்டுக் கொண்டே அமர்ந்திருக்க, அந்நேரம் அலறியது அவளின் தொலைபேசி.

அவளது மாமியின் மகள் தான் அழைத்திருந்தார். அவ்விடத்தில் அமைதிப் பேண வேண்டும் என்பதால் எழுந்து ஓர் ஓரமாகச் சென்று அழைப்பை ஏற்றாள். அவரது மகனுக்கு நாளை பாடசாலை செல்லும் போது ஒரு தலைப்பில் பேச்சு எழுதிக் கொண்டு செல்ல வேண்டுமாம். அதை எழுதித் தர முடியுமா என்று கேட்டார். நேரமோ ஒன்பது மணியாக இருந்தது.

நாளை தேவைக்கு இன்று இரவு தான் கேட்பார்களா என்று தோன்றியது அவளுக்கு. இருந்தும் மறுக்க முடியவில்லை. பொதுவாகக் கட்டுரை, பேச்சு, கவிதை என எது எழுதுவதாக இருந்தாலும் அவளிடம் தான் கேட்பார்கள். அவளும் எந்த வேலை இருந்தாலும் மறுக்காமல் எழுதிக் கொடுத்து விடுவாள்.

தன்னை நம்பிக் கேட்பவரிடம் முடியாது என்று சொல்ல முடியவில்லை. "சரி. காலை ஆறு மணிக்கு முன்ன எழுதி அனுப்பிடுறேன்" என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

மீண்டும் வந்து மேஜையில் இருந்தவளுக்குப் பேச்சின் தலைப்புப் பற்றிய சிந்தனைகள் வந்து மனதில் குவியத் தொடங்கின. ஆரம்பத்தில் ஒரு பந்தியை எழுதி விட்டாள். அதன் பிறகு அவளுக்கு யோசிக்க வரவில்லை. மிகுந்த களைப்பாக இருந்தது. இடையில் தந்தையின் நினைவும் வந்து சேர்ந்தது.

இதற்கு முன்னர் அவள் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு எழுதிக் கேட்டு வருவார்கள். நேரம் நெருங்கிக் கொண்டு வர வேண்டாம் என்றும் சில நாட்கள் காலக்கெடு இருக்கும் போது கொண்டு வந்து தந்தால் எழுதிக் கொடுக்குமாறும், இல்லையென்றால் மறுத்து விடுமாறும் சொல்வார் அவளின் தந்தை.

குறுகிய நேரத்தில் மகள் அதையும் இதையும் தேடிப் புரட்டிக் கஷ்டப்படுவதில் அவருக்கு விருப்பமில்லை. ஆனால் அவள் எப்படியாவது எழுதிக் கொடுக்க நினைப்பாள். தனது கற்பனைகள் மூலம், தன் எழுத்துக்கள் மூலம் பிறருக்கு உதவ முடிவதில் அவளுக்கு மகிழ்ச்சி.

தந்தையின் நினைவும் சோர்வுடன் சேர்ந்து எட்டிப் பார்த்ததில் அவளால் தொடர்ந்து எழுத முடியவில்லை. பேனாவை வைத்து விட்டு மேசை மீது தலை வைத்துப் படுத்து விட்டாள்.

சட்டென அசந்து போனவள் தூக்கம் கலைந்து எழும்பும் போது கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் கழிந்திருந்தன. எழுதுவதற்கு என்ன செய்வது என யோசித்தவள் அலைபேசியைக் கையில் எடுக்க, குறுஞ்செய்தியொன்று அவளை நாடி வந்தது. அனுப்பியது விஷ்ணு தான். அதைத் தட்டிப் படித்துப் பார்த்தாள்.

"ஃபர்ஸ்ட் டே வேலைக்குப் போய் இருக்க. வழமைக்கு மாறா வேலை பார்த்ததால கொஞ்சம் டயர்டா இருக்கும். இன்னிக்கு எதுவும் படிக்க வேண்டாம்‌. தூங்கி ரெஸ்ட் எடு. குட் நைட் ஆதி!" என்று அனுப்பி இருந்தான் அவன்.

அதை வாசித்துப் பார்த்தவளுக்கு மனதெங்கும் மென்சாரல் வீசியது. அவன் அப்படித் தான். அவளை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. என்றுமே சிறு சங்கடத்திற்கும் ஆளாக்கியதில்லை. தேவைப்படும் போது அவளுக்காக வந்திடுவான்.

நட்புக் கரம் நீட்டி விட்டாள் என்று நொடிக்கொரு தரம் மெசேஜ் செய்வதோ, அடிக்கடி அழைப்பதோ இல்லை. தேவை என்றால் ஒன்றிரண்டு குறுந்தகவல்கள். மற்றபடி நேரில் கதைப்பான்.

"எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. பேச்சு எழுதணும்" என்று பதில் சொன்னாள்.

"இந்த டைம்ல என்ன பேச்சு? நாளைக்கு பொறுமையா இருந்து எழுதிக்கலாமே" என்று கேட்டவனிடம் விஷயத்தைத் தட்டச்சு செய்து அனுப்பினாள்.

"நான் எழுதித் தரட்டுமா?" என்று கேட்டிருந்தான்‌ அவன்.

"இல்ல வேணாம். நானே எழுதுறேன்" அவனைக் கஷ்டப்படுத்துகிறோமோ என்ற எண்ணத்தில் அவள் மறுத்து விட, "நான் நல்லா எழுத மாட்டேன் எண்டு நினைக்கிறியா?" என்று வினவினான்.

"என்னை விட நீ சூப்பரா எழுதுவ. தமிழ் ஸ்பெஷல் செஞ்சிருக்கிற ஒருத்தர் நல்லா எழுத மாட்டார்னு நான் யோசிப்பேனா?"

"அப்படின்னாக் குடு எழுதுறேன். உனக்காக எல்லாம் இல்ல. எனக்கும் போரடிக்குது. என்ன செய்யலாமெண்டு யோசிச்சிட்டு தான் உட்கார்ந்திருந்தேன்‌. தூக்கமும் வரல. அதனால பயமே இல்லாம நீ தரலாம். பேச்சு எழுதுறது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்காவும் இருக்கும்" என்று அவன் நீண்டதொரு விளக்கமளித்தான்.

"அப்படியெண்டாச் சரி. எழுதி அனுப்பிடு. காலையில அக்காவுக்கு அனுப்பனும்" என்று தலைப்பையும் அனுப்பி விட்டவளுக்கு மனம் லேசானது அவனின் செயலில்.

விஷ்ணுவோ அணைத்திருந்த மின்குமிழை ஒளிர வைத்து விட்டுப் புத்தகமும் பேனையும் எடுத்துக் கொண்டு வந்து சோஃபாவில் உட்கார்ந்தான்.

யோசித்தவாறு எழுத ஆரம்பித்தவனுக்குப் பல்கலைக்கழக ஞாபகங்கள் உதித்தன. அடித்துப் பிடித்து விடுதியில் இருந்து பல்கலைக்கழகம் சென்று நண்பர்களுடன் கூத்தும் கும்மாளமுமாகக் கற்ற நாட்கள் மனதில் நிழலாடின.

கொஞ்சம் ஸ்டேட்டஸ் பார்ப்பதும் கொஞ்சம் எழுதுவதுமாக மாறி மாறிச் செய்து கொண்டிருந்தான் விஷ்ணு. ஹாஸ்பிடலில் இருந்து அப்போது தான் வந்த மதன் "என்னடா பண்ணுற?" என்று கேட்டவாறு வந்து அமர்ந்தான்.

"என்னங்க" என்றவாறு அறையில் இருந்து வந்தாள் வைஷாலி.

"பாத்தீங்களா மாமா. அக்காவுக்கு உங்க மேல அம்புட்டு லவ்வு. நான் ஒருத்தன் இருக்கிறதக் கண்டுக்கவே இல்ல. நீங்க வந்த உடனே ஓடோடி வர்றாங்க" கிண்டலாகச் சொன்னான் விஷ்ணு.

"அவர் மேல பாசம் இருக்குறது சரி. அதுக்காக உன்னைக் கண்டுக்கலண்டு கதப்பியா? போடா" கோபம் கொண்டாள் வைஷாலி.

"ச்சும்மா சொன்னேன்கா" அவளைப் பார்த்துக் கண் சிமிட்ட, "உன் மேலுள்ள பாசத்த என்னிக்குமே நீ குறை சொல்லக் கூடாது" என்றாள்‌ கூம்பிய வதனத்தோடு.

அவளது கையைப் பிடித்துத் தன்னருகே அமர வைத்தவன் "உன் பாசத்த நான் எப்படிக் குறை சொல்வேன்? குறையே சொல்ல முடியாதளவு ரெண்டு பேரும் என்னை நல்லாப் பாத்துக்கிறீங்க. உங்களப் போல யாருமே இருக்க முடியாதுக்கா" அவளைக் கனிவுடன் நோக்கினான்.

"சரிடா சரி" மெல்லச் சமாதானமானாள் தமக்கை.

விஷ்ணு எழுத ஆரம்பிக்க, "என்ன எழுதுற?" என்று கேட்டாள்.

"ஆதிக்குக் கடிதம் எழுதுறான்" என்று சிரிப்போடு சொன்னான் மதன்.

"கடிதம் எழுதுறது சரி. எப்படித் தூது அனுப்பப் போற? இந்தப் பக்கம் புறாவும் இல்ல" தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள் வைஷாலி.

"இங்க காக்காக் கூட்டத்துக்குப் பஞ்சமே இல்லையே. அதுல தூது அனுப்பிடலாம். கலர் கேஸ் எண்டா வெள்ளைப் பெயிண்டு கூட நானே அடிச்சுத் தாறேன்" சிரிக்காமல் அவனது காலை வாரினான் மதன்.

"ஓட்டாதீங்க மாமா. நான் யாருக்கும் தெரியாம தூது அனுப்புற ஆள் இல்லை‌. சொல்ல நெனக்கிறத தைரியமா முகத்துக்கு நேரா சொல்லிடுவேன்"

"அப்பறமும் ஏன்டா சும்மா இருக்க? ஆதி கிட்ட கேட்டியா?" வைஷாலி ஆர்வமாக வினவ, "அது எப்படிக்கா கேப்பேன்? அவ இன்னுமே நார்மல் ஆகல. எப்படிக் கேக்குறதெண்டு தெரியல" அவனிடத்தில் தவிப்பின் ததும்பல்.

"இப்படியே சொல்லிட்டு இருந்தா விஷயம் கை மீறிப் போயிடும். எத்தனை நாள் தான் விட்டுப் பிடிக்கிறது? நாளைக்கே ரெண்டு ஒண்டு கேளு"

"வைஷு! இது அவன் சம்பந்தப்பட்ட விஷயம். அவனுக்கு எதை எப்போ செய்யனும் எண்டு தெரியும். நாம அவசரப்படுத்தி எதுவும் செய்ய முடியாதும்மா" என்றான் மதன்.

"அவனுக்காகத் தானேங்க பேசுறேன். தள்ளிப் போட்டுட்டே இருந்தா வேற ஏதாவது நடந்துடும். என் தம்பி சந்தோஷமா இருக்கனுமெண்டு தான் இப்படி அவசரப்படுத்துறேன்" ஆதங்கத்துடன் மொழிந்தாள் அவள்.

"சரிம்மா எனக்குப் புரியுது. அதுக்காக நாம அவசரப்படுத்தக் கூடாதே. எப்ப நேரம் சரியா இருக்கோ அப்ப அவன் பாக்கட்டும்" மனைவிக்கு ஆறுதல் கூறிய மதன் விஷ்ணுவுக்குக் கண்களைக் காட்டி விட்டு அவளை அழைத்துச் சென்றான்.

கண்களை மூடி சோஃபாவில் சாய்ந்தான் விஷ்ணு. ஆதிராவின் முகம் அவனுள்ளே தோன்றியது.

"உன்ன ஒரு சொட்டு சங்கடப்படுத்துற காரியத்தையும் நான் பண்ண மாட்டேன் ஆதி. உனக்கு ப்ராமிஸ் பண்ணுன மாதிரி உன் நம்பிக்கைய எப்பவும் காப்பாத்துவேன். அந்த நம்பிக்கைய நான் அந்த நாள் காப்பாத்தினேனா எண்டு கேட்டப்ப நீ ஆமாண்டு சொன்ன. இப்ப மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. ஆனா அதப் பத்தித் திரும்பக் கேட்டு உன்ன சங்கடப்படுத்த முடியாது. சாரி டா ஆதி" அவளிடம் மனதினுள் பேசிக் கொண்டான்.

அந்நினைவைத் தற்காலிகமாக இடை நிறுத்தி விட்டு ஒரே மூச்சாகப் பேச்சை எழுதி முடித்தவனுக்கோ அந்நாளின் நினைவுகள் நெஞ்சினுள் ஊர்வலம் வரலாயின.

தொடரும்...
 
Top Bottom