• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடலின் மடியில் கதைப்போம் வா! - 8

ரோசி கஜன்

Administrator
Staff member

கதை 08

"நிவி கூட ரியோ ஐஸ்கிரீம் ஷாப் போனேன். எண்ணூறு ரூபாய்க்கெல்லாம் ஐஸ்கிரீம் இருக்கு. நாங்க நானூறு ரூபாய்க்கு வாங்கினோம். ஸ்கூல் விட்டு வரும் போது நீங்க தந்து விடுற இருபது ரூபாய்க்கு வாங்குற பேக்கட் ஐஸ் பக்கத்துல இது எதுவும் நிக்க முடியாதுப்பா!"

-ஆதிராவின் டயரி


கடற்கரையில் அமர்ந்து அலைகள் தவழ்ந்திடும் எழிலை ரசித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. ஆதிரா வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்களாகி விட்டிருந்தன. அதன் பிறகு அவளுடனான சந்திப்புகள் அருகிப் போயின.

முன்பு போல் இன்றித் தன் அன்புப் பெண்ணைப் பார்க்காமல் இருப்பது அவனுக்கு அவஸ்தையைக் கொடுத்திருந்தது. எப்போது காண்போம் என்ற காத்திருப்பில் மனம் கசிந்தது.

இன்று வருவேன் என்று அவள் கூறியிருக்க, எட்டு மணிக்கு வருபவளுக்காக ஏழு மணியில் இருந்தே காத்திருக்க ஆரம்பித்தான்.

"ஹாய் விஷ்" என்ற அழைப்போடு வந்து அவனருகில் அமர்ந்தாள் ஆதிரா.

"வா ஆதி" அவளை அன்பு கனிய வருடியது அவன் பார்வை.

"உனக்கொன்னு தெரியுமா விஷ்? நான் எக்கானாமிக்ஸ் ஸ்பெஷலுக்கு சிலெக்ட் ஆகிட்டேன்"

"வாவ் கங்க்ராட்ஸ்!" அவளுடன் கையைக் குலுக்கினான்.

"தாங்க் யூ விஷ். ஃபர்ஸ்ட் லிஸ்ட்ல என் நேம் வரல. ரொம்ப பயந்து போயிட்டேன். முதல் தடவை என் ஆசை பறிபோன மாதிரி இதுவும் ஆகிடுமோண்டு பயந்தேன்" அவளது நினைவுகளில் கடந்த காலத்தின் சுவடுகள் தலை நீட்டின.

விஷ்ணுவுக்கும் அது தெரியும். நட்புக் கொண்ட புதிதில் அவனுடன் பேசும் போது ஒரு தடவை "உனக்குப் பிடிச்ச ஏதாவது ஒன்னு உன்ன விட்டுப் பறி போயிருக்கா?" என்று கேட்டிருந்தாள்.

"ம்ம் என் அம்மா! என் கூடவே இருந்தவங்க திடீரெண்டு என்னை விட்டுப் போனத என்னால இன்னுமே ஏத்துக்க முடியல" என்று பதிலளித்தான் வலியோடு.

"எனக்கு என் ட்ரீம் விட்டுப் போன வலி தான் ரொம்பப் பெருசு" என்றவள் அதை அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

உயர்தரம் கற்கும் முன்னே அவளுக்கிருந்த ஆசை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டும் என்பது. அதன் புகைப்படங்களை எப்பொழுதும் பார்த்து ரசிப்பாள். இயற்கையின் மடியில் வீற்றிருக்கும், அழகுக்குப் பெயர் போன இலங்கைப் பல்கலைக்கழகம் அது.

ஒரு காலத்தில் மஞ்சள் நிறப் பூக்கள் அங்குள்ள மரத்தில் பூக்குமாம். அவை உதிர்ந்திடும் போது தரையெங்கும் மஞ்சள் உடுத்தியது போல் பார்க்க அழகாக இருக்கும் என்று அங்கு கற்று வந்த அவளின் ஆசிரியை சொல்லக் கேட்டுள்ளாள். அவ்விடத்தில் அமர்ந்து நாவலொன்றை ரசித்துப் படிக்க வேண்டும் என்பது அவளின் தீராத ஆசையாகிப் போனது‌.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவளுக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் கிடைத்ததும் உச்சி குளிர்ந்து போனாள். அவளின் மனம் அதில் இன்னும் ஈடுபாடு கொண்டது. பல்கலைக்கழக வெற்றிடம் நிரப்புதல் காரணமாக பேராதனையை விட முன்னிலையிலுள்ள, இலங்கையின் முதற்தர பல்கலைக்கழகமான கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கற்கும் வாய்ப்பு அவளை நாடி வந்தது.

முதலாவது தெரிவை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு ஏற்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நேரடியாகச் சென்று அப்பீல் சமர்ப்பிக்கும் அளவுக்கு ஆதிரா பேராதனைப் பல்கலைக்கழகம் மீது ஆசையை வளர்ந்திருந்தாள். இருந்தாலும் அவர்களும் கூட கொழும்புப் பல்கலையை ஏற்குமாறு தான் தீர்வு சொன்னார்கள்.

வேறு வழியே இன்றி அவள் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு வந்தாள். ஆரம்பத்தில் அனைத்தும் கசந்தன. விருப்பம் இல்லாத ஒன்றை ஏற்பது இனிக்குமா என்ன?

"எவ்ளோ அழுதிருக்கேன் தெரியுமா விஷ்? பல வருஷமா தண்ணி ஊத்தி, பசளை போட்டு, ஆசை ஆசையா வளர்த்த மரம் புயலடிச்சு என் கண்ணு முன்னாலயே ஒரு செக்கன்ல சரிஞ்சு விழுற மாதிரி இருந்தது. எதுலயும் ஒரு நலவிருக்கு எண்டு வீட்ல ஆறுதல் சொன்னாங்க.

கொழும்பு கண்டிய விட பக்கம் தான். அடிக்கடி வீட்டுக்குப் போய் வர முடியுமா இருக்கே. அதனால இதுவே நல்லதெண்டு நானும் மனச மாத்திக் கொண்டேன். இந்த டிகிரி தான் வர்த் எண்டும் சொல்றாங்க. பெறுமதிய விட ஆசைக்கு தான் மனசுல இடம் அதிகம் போல‌. இப்பவும் சில நேரம் பேராதனை யுனிவர்சிட்டி போட்டோஸ் கண்டா ஒரு மாதிரி அப்செட்டாகிடும். என்ன இருந்தாலும் என்னோட கனவில்லையா?" கண்கள் கலங்க உரைத்தாள் ஆதிரா.

"உண்மை தான் ஆதி. ஆசைக்குத் தான் மனசுல எப்பவுமே வெல்யூ கூட. கடவுள் நமக்காக சிலெக்ட் பண்ணுறது நம்ம சிலெக்ஷன விட பெட்டரா இருக்குமெண்டு நம்பு. இப்ப இல்லண்டாலும் எப்பவாவது ஒரு நாள் கொழும்பு யுனி உனக்கு ஏன் கெடச்சுதெண்டு புரியும். அப்ப திருப்தியா ஃபீல் பண்ணுவ" என விஷ்ணு சொன்னதை அவள் மனமும் ஏற்றுக் கொண்டது.

"நீ ஏதாவது சொல்ல நெனக்கிறியா? புதிய நியூஸ்?" ஆதிரா அவனிடம் கேட்க, "டீச்சிங் எக்ஸாம் கால் பண்ணிருக்காங்க. கிட்டத்துல நடக்கும். மத்தபடி எதுவும் இல்ல‌. எப்பவும் போல வேலை, வீடு எண்டு தான் போகுது. உன்னத் தான் ஆதி கொஞ்சம் மிஸ் பண்ணுறேன்" அவனது குரலில் ஏதோ மாறுதல்.

"ம்ம். உன்ன மீட் பண்ண வர முடியாம இருக்கு. என் நெலம தெரியும் தானே? காலைல யுனிவர்சிட்டி, அது முடிய அப்படியே வேலைக்குப் போறேன்‌. நாளை வீட்டுக்குப் போனா பாக்கவே முடியாமப் போகுமெண்டு தான் போர்டிங் போகாம இப்ப உன்னப் பாக்க வந்தேன்.‌ ஏதோ இயந்திரம் போல வாழுற மாதிரி தோணுது. உன் கூட பேசினாலாவது நல்லா இருக்குமெண்டு நெனக்கிறேன்" அவளது வதனத்தில் அப்பட்டமான களைப்புத் தெரிந்தது.

"வீட்டுக்குப் போறியா?" வேறு சமயங்களில் வீடு செல்கிறேன் எனும் போது அவளது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்குமிழ் ஒளிரும். முதல்முறையாக அவளிடம் சந்தோஷம் இல்லாததை அவதானிக்கின்றான்.

"வேலைக்குப் போறதால வீக்கெண்ட் வீட்ட போக முடியல. நாளைக்கு போயா டே எண்டதால லீவ். போயிட்டு வரலாமெண்டு பாக்குறேன். அம்மா, தம்பி, தங்கச்சியப் பாக்கோனும். ஆனா அப்பா இல்லாத வீட்டுக்கு முதல் முறையா போறேன்னு நெனக்கிறப்ப மனசு வலிக்குது விஷ்" கலங்கிய குரலில் கூறியவளின் கண்கள் கடலை வெறித்தன.

"ஆதி" அவளது கையின் மீது தன் கையை வைத்தவனுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று புரியாத நிலை. அவளின் கலக்கம் அவனையும் உடைத்தது.

"அப்பா அப்பாவெண்டு அவரைச் சுத்தியே வாழ்ந்துட்டேன். எத்தனை உறவுகள் இருந்தாலும் அப்பா எனக்கு ஸ்பெஷல் தான். நான் போனதும் அம்மா என்னை அன்பா வரவேற்பாங்க. நான் அப்பா வேலை விட்டு வரும் வரை காத்திருப்பேன். இனி அவர் வர மாட்டாருல்ல விஷ்?" கண்ணீர் கரை புரண்டோடத் துவங்கியது.

"அழாத டா. நான் சொல்றதக் கொஞ்சம் கேளு"

"சொல்லு"

"மொதல்ல கண்ணத் தொட" என மெல்லிய அதட்டல் விடுக்க, அதற்குக் கட்டுப்பட்டவளாய்க் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"இனி அப்பா மாதிரி இருந்து வீட்டப் பாத்துக்குவன்னு சொன்னியே. உன் அப்பா அழுவாரா?"

"அப்பா அழ மாட்டார் விஷ். எவ்வளவு போராட்டம் மனசுல இருந்தாலும் அதை வெளிய காட்டிக்காம சிரிச்ச மாதிரி இருப்பாரு. அவரு கவலப்பட்டா நாங்களும் கவலப்படுவோம்ல?"

"அதைத்தான் நானும் சொல்ல வர்றேன். இப்ப உன் குடும்பத்துக்குப் பக்கபலமா நிக்கப் போறது நீ தானே? நீ கலங்கினா மொத்தக் குடும்பமும் கலங்கிப் போயிடும். அப்பாவும் இல்ல, நீயும் பக்கத்துல இல்லாம அம்மாவும் ஒடஞ்சி போய் நிப்பாங்க. போய் அவங்களுக்கு ஆறுதல் சொல்லு. அவங்களை சோகத்துல இருந்து மீட்டுக் கொண்டு வா"

அவனது வார்த்தைகள் அவளுக்கு ஏதோவொரு சக்தியைக் கொடுத்தன. அவனது சொற்கள் யாவும் வாய்மையானவையே. ஒருவராவது உடையாமல் இருந்தால் தானே குடும்பத்தைச் சரி செய்யலாம்? அது நானாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

"நீ சொல்றது உண்மை தான். நான் அழ‌ மாட்டேன். முக்கியமா வீட்டுக்குப் போய் எமோஷனலாகிட்டு இருக்க மாட்டேன்" அவள் உறுதியாகச் சொல்ல, அவனுக்கும் ஆறுதலாக இருந்தது.

"உன் அம்மா இறந்தப்ப அக்கா முன்னால அழாம இங்க வந்து தனியா உக்காந்து ஃபீல் பண்ணுறதா சொல்லுவியே. இப்போ அந்த விஷ்ணு மாதிரி தான் நானும் இருக்கப் போறேன்" என்று விட்டு, "நீ மட்டும் என் லைஃப்ல வராம இருந்திருந்தா என் நெலம எப்படி இருந்திருக்கும் எண்டு தெரியல விஷ். எல்லா விதத்திலேயும் நீ எனக்கு சப்போர்ட்டா இருக்க. உனக்காக நான் எதுவுமே பண்ணலயோன்னு கில்ட்டியா இருக்கு" எனும் போது குற்றவுணர்ச்சி கொண்டாள்.

"என்ன கதைக்திற ஆதி? என் ஃப்ரெண்ட்ஷிப்ப நீ ஏத்துக்கிட்ட. என்னைப் புரிஞ்சிக்கிட்ட. அது தவிர வேறென்ன வேணும்?"

"ஆனா சொன்ன சொல் தவறிட்டேனே. செகண்ட் இயரோட ஃபர்ஸ்ட் டே உனக்குப் பதில் சொல்றதா சொன்னேன். அதை என்னால காப்பாத்த முடியாமப் போச்சு" என்றவளை விலுக்கென நிமிர்ந்து பார்த்தான்.

மறந்து விட்டாள் என்றல்லவா நினைத்தான்? அவளுக்கு ஞாபகம் இருக்கிறது என்பதே பெரும் நிம்மதியாக.

"மறக்கல ஆதி. அந்த நாள் கூட ஞாபகம் வந்தது. பதில் சொல்லுற‌ மனநிலை இருக்கல"

"நீ இருந்த நெலம எனக்குத் தெரியாதா? அந்த நாள் உன் கிட்ட நான் எதையும் எதிர்பாக்கல"

"இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை. வீட்டுக்குப் போய் வாற அந்த நாள் எனக்காக இங்க வெயிட் பண்ணு. ட்ரெயின்ல இருந்து இறங்கி வந்து பதில் சொல்லிட்டுப் போறேன். இது கண்டிப்பா நடக்கும்" என்று சொல்ல, "ஓகே" எனத் தலையை அசைத்தவனுக்கு மனதினுள் ஓராயிரம் ஆனந்த ராகங்கள்.

"நான் போகவா? லேட்டாச்சு" என எழுந்து கொண்டாள்.

"நானும் வர்றேன்" அவளுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தான்.

வீதியைக் கடக்கும் போது அவள் நிதானிக்க, அவன் தான் பத்திரமாக மாற்றி விட்டான்.

"இன்னும் ரோட் மாறப் பழகிக்கலயா?" முதல் சந்திப்பை நினைத்துக் கேட்டான் காளை.

"ஓரளவு பழகிட்டேன். நீ கூட இருக்கும் போது நான் எதுக்கு அங்க இங்க பாத்து கஷ்டப்படனுமெண்டு தான் நீ மாத்தி விடும் வரை வெயிட் பண்ணேன்" என்றவளைப் பார்த்து மென்னகை பூத்தன, அவனிதழ்கள்.

"நான் போயிட்டு வர்றேன்"

"சரி டா. பத்திரமாப் போ. வீட்டுக்குப் போயிட்டு ஒரு மேசேஜ் போடு. ஏதாவது பேசனுமெண்டா கால் பண்ணு" என்க, அவளும் கையசைத்து விடை பெற்றாள்.

"சாப்பிடு ஆதி" அவள் சற்று தூரம் சென்றதும் சத்தமாகக் கூற, "நீயும்" என்று விட்டு நடந்தவள் தன் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்திருந்தான் விஷ்ணு.

தொடரும்...


 
Top Bottom