கதை 09
"நான் எந்த நாட்டுக்கும் இளவரசி இல்ல. எனக்கு அரண்மனையும் இல்ல. ஆனா தங்கத் தேர்ல இளவரசியப் போல நான் வலம் வந்திருக்கேன். உங்க கூட சைக்கிள்ல போகும் போது எனக்கு அப்படித் தான் இருக்கும். எனக்கு நீங்க எப்பவுமே ராஜா தான்ப்பா"
-ஆதிராவின் டயரி
புகையிரதத்திலிருந்து வந்திறங்கிய ஆதிராவின் பார்வை காலி என்றிருந்த பெயர்ப் பதாகையை அன்போடு வருடியது. எங்கு சென்றாலும் சொந்த ஊர் போல வருமா?
வீடு சென்று சேர்ந்தவளை அன்புடன் வரவேற்றார் அவளது அன்னை ராதிகா. "அக்கா" என அருணும், அனன்யாவும் அவளை நோக்கி வந்தார்கள். அவர்களுக்கு வயது பதினைந்து. இருவரும் இரட்டையர்கள்.
"நீங்க வரும் வரை பாத்துட்டு இருந்தோம் அக்கா" என்று அனன்யா கூற, "அப்படியா?" அவளது கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி விட்டாள் தமக்கை.
"நம்பாதீங்கக்கா. இவ பொய் சொல்லுறா" என அருண் சொல்ல, "நான் என்னடா பொய் சொன்னேன்" சண்டைக்கு வந்தாள் அனன்யா.
"நீங்க என்ன வாங்கிட்டு வருவீங்க எண்டு இவ்வளவு நேரம் ரூம் போட்டு யோசிச்சிட்டு இருந்தா. என் கிட்டயும் கேட்டா. இப்போ உங்களக் கண்ட உடனே பாசம் உள்ள மாதிரி நடிக்கிறா" என்று கோர்த்து விட, "இல்லக்கா இவன் பச்சையா பொய் பேசுறான்" மறுத்துரைத்தாள் சின்னவள்.
"அப்படியே கேட்டிருந்தாலும் என்ன? அனு குட்டி கேக்காட்டியும் நான் அவளுக்கு வாங்கிக் கொண்டு வருவேன். உன்னால அவளை வம்புக்கு இழுக்காம இருக்க முடியாதா?" என்று தம்பியின் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்தாள் ஆதிரா.
பையைத் திறந்து தான் கொண்டு வந்த இனிப்புகளை அவர்களுக்குப் பகிர்ந்து வழங்கினாள். அவள் எப்பொழுது கொழும்பில் இருந்து வந்தாலும் அவர்களுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு ஆதிரா அன்னையின் பாதி மட்டுமல்ல தந்தையினதும் ஒரு பாதி தான்.
"டீ ஊத்தித் தரவா ஆதி?" என்று அன்னை கேட்க, "இல்லம்மா. குளிச்சிட்டு வாறேன்" எனத் தனது அறைக்குள் நுழைந்து கொண்டவள் ஓர் ஆழமான மூச்சை இழுத்து விட்டாள்.
தந்தை இல்லாத கவலை அவளை வந்த நொடியே வாட்டி எடுத்தது. இருந்தாலும் காட்டிக் கொள்ள மனம் இல்லை. நடிக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றினாலும், எல்லாம் நன்மைக்காகத் தான் என்று மனதை சமப்படுத்தி கொண்டாள்.
களைப்புத் தீரக் குளித்து முடித்து முடியை விரித்து விட்டவாறு வந்து தரையில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு வீட்டில் கதிரையில் அமர்வதை விட நிலத்தில் உட்கார்ந்திருப்பது தான் பிடிக்கும்.
"அக்கா டீ" ஆவி பறக்கும் குவளையைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவள் முன்னே அமர்ந்து கொண்டாள் ஆதிரா.
அதை வாங்கி அருகில் வைத்திட, "இன்னும் சூடு போன பிறகு தான் குடிக்கிறீங்களா?" அனன்யா சிரிக்க, "உன்ன மாதிரி அவசரப்பட்டுக் குடிச்சு நாக்கை சுட்டுக்க முடியாதுல்ல?" அதற்கும் கமண்ட் அடித்தது அருண் தான்.
"சூடு லைட்டாக் கொறஞ்ச பொறகு குடிச்சுப் பழகிட்டேன் டா. அதுவும் இல்லாம ஆறினாத் தான் டீயோட டேஸ்ட் விளங்கும்" என்று விளக்கமளித்தவள் தங்கையின் கையில் இருந்து பிஸ்கட் ஒன்றை எடுத்துக் கொறித்தாள்.
"லெமன் பஃப்! அப்பாவுக்குப் பிடிக்கும்" அனன்யா ஏதோ நினைவில் சொல்ல, ஆதிராவின் விழிகள் கலங்கத் துடித்தன.
"உனக்கு என்ன சொன்னேன் அனு? அக்கா வந்த பிறகு இப்படிப் பேசாதேண்டு சொன்னேன்ல?" அருண் அவள் தோளில் அடிக்க, "வேணும்னே சொல்லல. ஞாபகம் வந்ததும் சட்டுனு சொல்லிட்டேன். அப்பாவ நெனக்கிறதும் தப்பா?" முதலில் சீறியெழுந்தவள் பிறகு அழுது விட, "அருண்" எனத் தம்பியைக் கடிந்து கொண்ட ஆதிரா அனன்யாவை அணைத்துக் கொண்டாள்.
"உங்களுக்காகத் தானேக்கா சொன்னேன். நீங்க அழுதா எனக்கும் அழுகை வரும்" கலங்கிய கண்களுடன் அவன் கூற, "இங்க வா" மறு கையால் அவனையும் தோளோடு சேர்த்துக் கொண்டாள் பெரியவள்.
"இவன் எப்பவும் என்னைத் திட்டுறான். அடிக்கிறான். சண்டை போட்டுட்டே இருக்கான்கா" அனன்யா குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாள்.
"அவ சின்னப் பொண்ணு அருணு"
"நானும் சின்னப் பையன்" அக்காவின் முன்னிலையில் அவனும் சிறியவனாகி விட்டான்.
"ஆமாடா. ஆனா நீ பொறுப்பான பையன்ல? வீட்ல நீ தான் ஆம்பளை. கொஞ்சம் பொறுப்பா இருக்கனுமே" அவனுக்கும் ஒன்றும் பெரிய வயதில்லை என்று அவளுக்குத் தெரியும். இருந்தும் அப்படிச் சொல்ல வேண்டிய கட்டாயம்.
"நான் ஒரு தடவை சொன்னாக் கேக்க மாட்டேங்கிறா. அப்ப எனக்குக் கோவம் வராதா?"
"அதுக்குக் கை நீட்டுறான். அம்மாவும் இவனுக்குத் தான் சப்போர்ட். என்னைத் திட்டுறாங்க" அனன்யா சொன்னதும், அவளது பார்வை தங்கையின் புறம் திரும்பியது.
"அவன் ஒழுங்கா இருக்கனுமெண்டா நீயும் அப்படி நடக்கோனும் அனு. ஏதாவது சொன்னா கேட்டுக்கோ. உன் நல்லதுக்குத் தான் சொல்லுவான். அம்மா பக்கத்துல நீங்க தான் இருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருந்தாத் தான் அம்மாவுக்கு நிம்மதியா இருக்கும்" தங்கைக்கும் அறிவுரை சொன்னாள் அவள்.
"நீயும் பொறுமையா இருக்கனும் டா. கை நீட்டக் கூடாது. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் குடுத்து நடந்துக்கங்க" என்று சொல்லியபடி டீயை அருந்தியவள், "சின்ன வயசுல நான் மட்டும் தான். கூட விளையாட யாரும் இல்லயே, எல்லாத்தையும் ஷேர் பண்ண நம்ம வயசுல யாரும் இல்லையேண்டு கவலப்படுவேன். உங்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்க முடியுமா இருந்தும் சண்டை போட்டுக்குறீங்க. இந்த உலகமே இப்படித் தான் போல" என்றாள் ஆதிரா.
மூத்த மகள் இருப்பதால் அன்று ராதிகாவுக்கு ஓரளவு மனநிம்மதியாக இருந்தது. வழமையை விட அதிகமாகவும் அருமையாகவும் சமைத்து வைத்திருந்தார்.
"இவங்க சண்டை போட்டா என் கிட்டச் சொல்லுங்கம்மா" ஆதிரா அன்னையிடம் கூற, "அப்பிடியெண்டா உனக்குப் பாதி நேரம் கால் பண்ணிட்டே இருக்க வேண்டி வரும்" இளையவர்களைப் பார்த்துச் சொன்னார் ராதிகா.
"இனிமே ஒழுங்கா இருப்பாங்க. என்ன இருப்பீங்கள்ல?" என்று அவர்களிடமே கேட்க, அவசரமாகத் தலையை ஆட்டினர் இருவரும்.
"வேலை எல்லாம் பரவாயில்லையா ஆதி? யுனிவர்சிட்டி முடிஞ்சு வரும் போதே டயர்டா இருக்குமெண்டு அப்ப சொல்லுவ. இப்ப அது முடிஞ்சு வேலைக்கும் போற" ராதிகாவின் குரலில் கவலையின் சாயல்.
"இப்ப பழகிடுச்சு. ஒன்னும் கஷ்டமா இல்லம்மா" என மறுத்தாள் மகள்.
"நான் ஏதாவது வீட்டு வேலைக்குப் போகட்டுமா?"
"வேண்டாம்மா. நீங்க யார் வீட்லயும் வேலை பாக்குறது எனக்குப் புடிக்கல. அப்பா இருக்கும் போது எப்படியோ அப்படித்தான் இப்பவும் நீங்க இருக்கனுமெண்டு ஆசப்படுறேன். என்னால முடியும்மா. நான் பாத்துக்குறேன். இனிமே இந்த மாதிரி கேக்காதீங்க" என்றவளின் கண்கள் தந்தை ரவிகுமாரின் புகைப்படத்தை ஏக்கத்தோடு நோக்கின.
"அப்பா பர்ஸ எடுத்துக்குறேன்மா" என்றவாறு தந்தையின் பர்ஸை எடுத்துக் கொண்டாள்.
அறையினுள் வந்து அதை விரல்களால் வருடிக் கொடுத்தாள். திறக்கும் போதே முன்னிலையில் இருந்தது ஆதிராவின் சிறு வயதுப் புகைப்படம். அவளது பாலர் பாடசாலைக் காலம் முதல் இன்று வரை எத்தனை பர்ஸ் மாற்றினாலும் அவளது புகைப்படத்தை மறக்காமல் வைத்து விடுவார்.
அன்றைய நாள் முழுவதும் வீட்டில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்தாள் ஆதிரா. தம்பி, தங்கையுடன் பொழுதைக் கழித்தாள்.
சற்று நேரம் இருந்து விட்டுத் தூங்குங்கள் என்றவாறு ராதிகா உறங்கி விட்டார். இவர்கள் மூவரும் வாசலில் வட்டமாக இருந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
"கௌசி எங்க கிட்டத் தான் பேச்சுப் பழக வாறான் அக்கா. வலய மட்டத்துல ஃபர்ஸ்ட் எடுத்து மாகாண மட்டப் போட்டிக்கு சிலெக்டாகிட்டான்" என்று அருண் சொல்ல,
"எங்களுக்கு நீங்க தான் பேச்சுப் பழக்குவீங்க அக்கா. எத்தனை முறை பிழையானாலும் சொல்லித் தருவீங்களே. கௌசி ரெண்டு தடவை பிழை விட்டாலே எனக்கு செம்ம கோவம் வரும். அந்தப் பொறுமைய உங்க கிட்டிருந்து தான் கத்துக்கனும்" தமக்கையை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அனன்யா.
"பொறுமை ரொம்ப முக்கியம்ல டா? பொறுத்தார் பூமியாள்வாரெண்டு சொல்வாங்க" என்ற ஆதிராவுக்கு மூத்த மகளாகப் பிறந்ததால் தான் இந்தப் பொறுமையோ என்று நினைக்கத் தோன்றியது.
"இவ எந்த பூமியை ஆளப் போறா?" அருண் நக்கலாகச் சிரிக்க, "பொறுமை பொறுமை" கோபம் வரக் கூடாது என்று தன்னைத் தானே சமாதானம் செய்பவளை சிரிப்புடன் பார்த்தனர் இருவரும்.
"உங்க கிட்டச் சொல்லி எழுதி எடுத்ததா கௌசி சொன்னான். பேச்சை வாசிச்சுப் பார்த்தேன். நல்லா இருந்தது. ஆரம்பம், முடிவு, வார்த்தைகள் எல்லாம் அட்டகாசம்" அருண் ரசித்துச் சொன்னான்.
"தமிழ் ஸ்பெஷல் செஞ்ச ஒருத்தர் எழுதின பேச்சு அப்படி இல்லன்னாத் தான் ஆச்சரியம்"
"நீங்க எழுதலையா? யார் எழுதினது?" அனன்யா யோசனையோடு கேட்டாள்.
"எனக்கு ஹெல்ப் பண்ணக் கூடிய ஆள் வேற யாரா இருப்பாங்க?" என்று அவள் கேட்க, "கண்டுபுடிச்சிட்டேன். விஷ்ணு அண்ணா" அருண் வெற்றிக் களிப்போடு கையை உயர்த்தினான்.
"அந்த அண்ணனே தான்" விஷ்ணுவை எண்ணுகையில் அவளது முகத்தில் மலர்ந்தது.
"சூப்பரா இருந்ததெண்டு சொல்லுங்கக்கா" அனன்யா சொல்ல, "கண்டிப்பா" என்றாள் அவள்.
நீண்ட நேரம் பேசிய பிறகு மூவரும் பாய் விரித்துக் கூடத்திலேயே உறங்கிப் போனார்கள். காலையில் எழுந்த ராதிகாவோ பிள்ளைகள் மூவரையும் கண்ணாரக் கண்டு நெகிழ்ந்தார்.
கண் விழித்த ஆதிரா பரபரப்பானாள். வீட்டிலிருந்து செல்லும் நாட்களில் இப்படித் தான் அவளைக் கண்ணுக்குத் தெரியாத பதற்றமொன்று தொற்றிக் கொள்ளும்.
அனன்யாவும் அருணும் சண்டையிடும் தினசரி வேலையைக் கூட மறந்து அவளின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
விடைபெற்றுக் கொண்டு செல்லும் போது என்றும் போல் வேதனை. தென்னை மரத்தில் சாற்றி வைக்கப்பட்டிருந்த தந்தையின் சைக்கிளைக் கண்டதும் வேதனை இரட்டிப்பானது.
கலங்கிய கண்களைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகை முகமூடி அணிந்து கொண்டாள். புகையிரத்தில் ஏறி அமர்ந்தாள்.
இங்கோ ஆதிராவின் வருகைக்காக வழமையைக் காட்டிலும் ஆர்வமாகக் காத்திருந்தான் விஷ்ணு. கரையில் ஏதேதோ கிறுக்கினான். அதை அழித்தான். மீண்டும் எழுதினான். பார்த்து ரசித்தான். காதல் ஒருவரைக் கிறுக்காக மாற்றுமோ என்று நினைத்துச் சிரித்தான் அவன்.
வீட்டிலும் சொல்லி விட்டுத் தான் வந்திருந்தான். நல்ல முடிவாகத் தான் இருக்கும் என்று வைஷாலி சொல்லியிருந்தாள். மதனும் தோளணைத்து வாழ்த்தியிருந்தான்.
அவனது எதிர்ப்பார்ப்பைப் பொய்யாக்காமல் வெள்ளவத்தை கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள் ஆதிரா. வாக்கு மாறாமல் தனது பதிலைச் சொல்லவும் செய்தாள்.
தொடரும்...