• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 23

skp

Member
அத்தியாயம் 23

கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது தாரணியின் கல்யாண வைபோகங்கள்.

நிச்சயதார்த்த புடவை கொடுக்கப்பட்டு மாற்றிக்கொண்டு மேடைக்கு வந்த தாரணியின் கை சக்தியின் கையை இறுகப் பற்றி இருந்தது.

சக்தி வந்ததிலிருந்து ஒரு நொடி கூட அவளை தனியாக விடவில்லை தாரணி. நிறைந்திருந்த உறவுகளையும் அவர்களது குண நலன்களையும் அறிந்திருந்த தாரணி சக்தியை தன்னுடனே வைத்துக் கொண்டிருந்தாள்.

“விடு தாரணி. நான் பார்த்துப்பேன். ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க? உன்னோட கல்யாணம் டி. என்ஜாய் பண்ணு… என்ஜாய் பண்றது விட்டுட்டு என்னை பாதுகாத்துட்டு இருக்க லூசா நீ?” சக்தி கூட கேட்டு பார்த்து விட்டாள்.

அவளுக்கு பதிலைச் சொல்லாமல், “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” தாரணி சம்பந்தமே இல்லாமல் கேட்க,

“என்ன?” என்றாள் சக்தி.

“நிறைய நேரம் நீ ரொம்ப குடுத்து வெச்சவன்னு நான் நெனச்சிருக்கேன்…” தாரணி சொல்ல,

“எங்கேயாவது கீழே விழுந்து அடிகிடி பட்டுருச்சா? இது எத்தனை சொல்லு?* என்று கைவிரலில் இரண்டை நீட்டியபடி சன்னமான சிரிப்போடு சக்தி கேட்க,

“கடுப்ப கிளப்புற மாதிரி காமெடி பண்ணாதன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன் உங்க கிட்ட… ஒரு விஷயம் சொன்னா கேளு.” என்று மருதாணி தீட்டிய கைகளால் அவள் தலையில் தட்டிய தாரணி,

உனக்கெல்லாம் எந்த டார்ச்சரும் கிடையாது சக்தி‌. ஏன்னா உனக்கு எந்த சொந்தக்காரனுங்களும் கிடையாது.

நெஜமா சொல்லனும்னா சொந்தம்ங்கறத புரிஞ்சிக்கவே முடியாத புதிர். நம்ம நல்லா இருக்கோம்னு அவங்களுக்கு தெரிஞ்சுருச்சுன்னா அவங்களுக்கு முதல்ல நெஞ்சு வலி வரும். அடுத்து அவங்க வயிறு எரியுறதுல நம்ம குடும்பத்துல நெஞ்சு வலி வரும்… அம்புட்டு நல்லவங்க நிறைஞ்சது தான் இந்த சொந்தம்கிற கூட்டம்.

முன்ன போனா கடிப்பாங்க. பின்ன வந்தா உதைப்பாங்க. சைடுல வந்தா இடிப்பாங்க. மோஸ்ட் ஆஃப் தி ரிலேட்டிவ்ஸ் அப்படித்தான் இருப்பாங்க. எங்கயாவது ஒன்னு ரெண்டு நல்லதும் இருக்கத்தான் செய்யும். அதை நம்ம குறை சொல்லக்கூடாது. ஆனா 95% அப்படித்தான் இருப்பாங்க…

இதுல என்ன பியூட்டி தெரியுமா? எல்லாருமே இதே டயலாக் சொல்லுவானுங்க. நான் என்னோட சொந்தக்காரங்களை சொன்னேன்னா… அவனுங்க என்னைய சொல்லுவானுங்க. மொத்தத்துல எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன்ன மட்ட தான். எவன்தான் நல்லவன்னு சொல்லவே முடியாது. கண்டுபிடிக்கவே முடியாது.

அதுலயும் என்னோட சொந்தத்துல நாலு அஞ்சு இருக்கு. அதுங்க கையில எல்லாம் நீ சிக்கிட்ட உன்னை வச்சு செஞ்சிடுங்க. பிச்சு தின்னுடுவானுங்க. அதனாலதான் உன்னை கைப்புள்ளைய தூக்குற மாதிரி கைல புடிச்சுக்கிட்டே சுத்துறேன். நீ வேற கடுப்பு அடிக்காம பேசாம இரு.” என்று அவள் சொல்லியதற்கு ஏற்பவே, உறவில் சில பெண்களும் ஆண்களும் சக்தியிடம் பேச்சு கொடுத்து மனதை வருத்தி இருந்தனர்.

மனம் வருந்தியதை சக்தி அவளுக்கு தெரியாமல் கடக்க முயற்சித்தாலும் அவள் முகத்தில் அதன் நிழல் இருக்கவே கண்டு கொண்டிருந்த தாரணி, அதன் பின் நொடி கூட அவளை விட்டு விலகவில்லை.

அப்படியும் கேட்க வந்த உறவினர்களிடம் முகத்தில் அடித்தது போல பேசி அவள் அனுப்ப சக்தி தான் சற்று பயந்து போனாள்.

“பக்கி இப்படி முகத்தில அடிச்ச மாதிரி பேசாத” சக்தி சொல்ல,

“கேள்வி கேட்கும் போது மட்டும் தெரியலையா அது உன்ன கஷ்டப்படுத்தனு? தெரிஞ்சு தானே கேட்டாங்க. அப்ப அனுபவிக்கட்டும்.” சட்டென்று பதில் சொன்னவள் முகத்தை வெட்டிக்கொண்டு தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

இப்பொழுதும் அவள் கையைப் பிடித்த படி மேடை ஏற அவள் விரும்ப சக்தி தான், “யார் பேசினாலும் காதுல கேட்க மாட்டேன். யார் கூடயும் நானும் பேச மாட்டேன். மரியாதையா மேடைல ஏறு. இதுக்கெல்லாம் துணை பொண்ணா வர முடியாது.” என்று சொல்லி தாரணியை மேடையில் ஏற்றி விட்டு பின் தங்கினாள் சக்தி.

தாரணி சபையை வணங்கி விட்டு அமர வைக்கப்பட நிச்சயதார்த்த ஓலை வாசிக்கப்பட்டது. அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருக்க சொந்தங்கள் கூடி செய்து கொண்டிருந்தனர் அவற்றை.

சந்தோஷமாய் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளை அதிர்ந்து அழைத்தது அவளது அலைபேசி. குனிந்து பார்த்தவளின் கண்கள் ஜொலிக்க ஆரம்பித்தது.

அழைத்துக் கொண்டிருந்தது ஜெகதீஸ்வரன் அல்லவா!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு கொண்டிருந்தாலும் பேச முடியவில்லை அவனோடு.

தாரணி உடன் இருந்ததாலும் உறவுகளும் சொந்தங்களும் அவர்களை சூழ்ந்து இருந்ததாலும் அவனோடு பேச முடியவில்லை. இரவில் கூட தாரணியோடு அவளது தாய் தாய் மாமன் மனைவி எல்லோரும் சேர்ந்து படுத்துக்கொள்ள எழுந்து சென்று பேசுவதற்கு தயக்கமாக இருந்தது சக்திக்கு.

விஷயத்தை குறுஞ்செய்தி வாயிலாக சொல்ல ஜெகதீஸ்வரன் புரிந்து கொண்டாலும் இவளுக்குத்தான் மனம் அடித்துக் கொண்டது.

இப்பொழுது ஜெகதீஸ்வரன் அழைத்திருக்க கண்கள் மின்ன அழைப்பை ஏற்றாள் சக்தி.

மங்கள வாத்தியங்களின் சத்தம் ஒலிக்க, எதிர்ப்புறம் கேட்ட “ஹலோ சக்தி…” என்ற ஜெகதீஸ்வரனின் வார்த்தைகள் தெளிவாக அவள் காதுகளை சென்று அடையவில்லை.

தாரணியை பார்த்த சக்தி, அவள் கவனம் தன் மீது இல்லை என்பதை உணர்ந்து கொண்டவளாக அந்த இடத்தை விட்டு அகன்றாள் சக்தி, “ஒரு நிமிஷம் ஜெகன்…” என்று ஜெகதீஸ்வரனுக்கு சொல்லியபடி.

சத்தங்கள் சற்று குறைந்த இடத்திற்கு வந்தவள், “ஜெகன்…” என்று காதலாய் அழைக்க உருகியது எதிர்ப்புறம் இருந்தவனின் உள்ளம்.

“சக்தி…” என்று ஜெகன் அழைக்க,

“ம்ம்…” என்றாள் சக்தி.

“பங்க்ஷன் எப்படி போகுது? என்ஜாய் பண்ணிட்டு இருக்கியா?” ஜெகன் கேட்க,

“நல்லா போயிட்டு இருக்கு. நீங்க என்ன பண்றீங்க? வொர்க் முடிஞ்சதா? கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டாள் சக்தி.

“கிளம்பணும். வொர்க் முடிஞ்சது. நான் இப்போ உன் கூட பேசிட்டு இருக்கேன்.” அவள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவன் பதில் சொல்ல, அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை அவளுக்கு.

“ம்ம்…” என்று அவள் சொல்ல,

“வீடியோ கால் வர முடியுமா?” ஜெகன் கேட்க,

“பைவ் மினிட்ஸ்…” என்று சொல்லியவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள் மண்டபத்தின் உள்ளே.

மீண்டும் சத்தங்கள் அதிகமாய் கேட்க, அவள் மண்டபத்தின் உள்ளே செல்வது விளங்கியது ஜெகதீஸ்வரனுக்கு.

“என்ன பண்ணிட்டு இருக்க?” ஜெகதீஸ்வரன் கேட்க

“மாடிக்கு இல்ல எங்களோட ரூமுக்கு போகணும். ரூமுக்கு போனா தாரணி ரிலேட்டிவ்ஸ் யாராவது வருவாங்க. சோ மாடிக்கு போறது பெட்டர்…” என்று பதில் சொல்லியவள் வேக வேகமாக மாடிப்படி ஏற ஆரம்பித்தாள்.

மூன்று மாடிகள் கொண்ட அந்த திருமண மண்டபத்தில் மொட்டை மாடிக்கு வந்தவள் மூச்சு வாங்கியபடி நிற்க, மீண்டும் சத்தங்கள் எல்லாம் ஓய்ந்து நிசப்தமாக, அவள் வந்து சேர்ந்து விட்டாள் என்பதை உணர்ந்து காணொளி அழைப்பாக அழைத்தான் ஜெகதீஸ்வரன்.

அழைப்பை ஏற்றவளை கண்களுக்குள்ளும் மனதிற்குள் நிறைத்து கொண்டவன், புகைப்படமாகவும் சேமித்துக் கொண்டான்.

கண்களை உருத்தாத செம்பவள நிற பட்டுப் புடவையில் பாந்தமாக இருந்தவள் அவனை காந்தமாக ஈர்த்தாள்.

நெற்றியில் சந்தனம் குங்குமம் கீற்றாய் அரக்கு நிற நீள் வட்ட பொட்டின் மீது தீட்டி இருக்க, நெற்றியோரம் வழிந்த ஒற்றை துணி வியர்வையில் ஒரு சில கூந்தலிழைகள் ஒட்டிக்கொண்டிருந்தது.

சற்று பெரிய ஜிமிக்கி அவள் கன்னத்தில் உரசிக் கொண்டு இருக்க, உள்ளங்கழுத்தை ஒட்டி எப்பொழுதும் அவள் அணிந்திருக்கும் சிறு சங்கிலியோடு இன்று கூடுதலாய் மார்பு வரை இருந்த நீண்ட ஆரத்தையும் அணிந்திருந்தவளின் வலது புற தோளில் வழிந்து கொண்டிருந்தது அவள் சூடி இருந்த மல்லிகை சரம்.

அவளில் அலைபாய்ந்த அவனது விழிகளை கட்டுப்படுத்தி அவள் முகத்தை மீண்டும் பார்க்க அஞ்சனம் பூசிய விழிகள் அவனை மொத்தமாய் அடித்து சாய்த்தது.

மார்பில் கையை வைத்து லேசாக தட்டிக் கொடுத்தவன், “யூ ஆர் கில்லிங் மீ…” என்றான் முணுமுணுப்பாக.

லேசாக மூச்சு வாங்கிய படி “ஜெகன்…” என்று அழைத்தவள் கண்களை வஞ்சனை இன்றி நிறைத்தான் ஜெகதீஸ்வரன்.

அடர் ஊதா நிற சட்டை அணிந்து இருந்தவன் எப்பொழுதும் போல முழுக்கையை முழங்கைக்கு கீழ் மடித்துவிட்டிருந்தான். அலுவலகம் முடிந்து கிளம்புவதற்காக ஆயத்தமாகி இருந்ததில் சட்டையின் மேல் இரு பட்டன்களை திறந்து விட்டிருக்க கழுத்தைச் சுற்றி இருக்கும் தங்கச் சங்கிலி முழுதாய் தெரிய, மார்பின் ரோமங்கள் லேசாக தெரிந்தது.

சில நிமிடங்கள் இருவருக்கும் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை. பார்வையால் ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சக்தியால் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.

காதல் சொல்லி இரண்டாம் நாளில் பிரிந்து வந்திருக்க மூன்றாம் நாளில் மூச்சை அடைத்ததோ அந்தப் பிரிவு இருவருக்கும்?

அவள் பார்வைத் தாழ்ந்த நொடி தொண்டையை செறுமிய ஜெகனின் சத்தத்தில் மீண்டும் அவனைப் பார்த்தாள் சக்தி.

“சக்தி…” அவன் அழைக்க, அவன் விழிகளை அவள் பார்க்க,

“கொல்லாதடி…” லேசாய் முணுமுணுத்தான் அவன்.

“என்ன சொன்னீங்க ஜெகன்? எனக்கு கேட்கல.” பரிதாபமாக அவள் கேட்க, தாபமாய் அவளைப் பார்த்து வைத்தான் ஜெகதீஸ்வரன்.

“நத்திங்…” என்றவன் ஆழ்ந்த மூச்சை எடுத்து,

“என்ன பண்ற? பங்க்ஷன் முடிஞ்சதா?” சாதாரணமாக பேச அவன் முயன்றாலும் கண்கள் அசாதாரணமான வேலைகளை செய்து வைத்தது.

“நிச்சயதார்த்தம் முடிஞ்சது. அதுக்கு அடுத்து ஏதோ சடங்குகள் எல்லாம் நடந்துகிட்டு இருக்கு.” என்றவள் காற்று கலைத்துவிட்ட கூந்தலை காதின் பின்புறமாக எடுத்து விட, அசைந்தாடிய ஜிமிக்கியில் ஊசல் ஆடியது இவன் மனம்.

“நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்புற?” சம்பந்தமில்லாமல் அவன் கேட்க, புரியாமல் விழித்தவள் பதிலை மட்டும் சொல்ல தவறவில்லை.

“நாளைக்கு ஈவினிங் 8:30.” என்று சக்தி சொல்ல,

“கல்யாணம் காலையிலன்னு தானே சொன்ன? 8:30 வரைக்கும் என்ன பண்ண போற?” ஜெகதீஸ்வரன் அடுத்த கேள்வியை கேட்க,

“அப்போதான் டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருக்கா தாரணி. மார்னிங் கல்யாணம் முடிஞ்சு ஆப்டர்நூன் லன்ச் சாப்பிட்டுட்டு மண்டபத்துல இருந்து கிளம்புறதுக்கே ஈவினிங் 3 டு 4 ஆகிடும் சொன்னாங்க. அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்து சில சடங்குகள் இருக்காம் அதெல்லாம் முடிச்சுட்டு கிளம்ப 8:30 சரியா இருக்கும்னு அவ தான் டிக்கெட் போட்டுருக்கா.” சக்தி விளக்கமாக சொல்ல,

“ம்ம்…” என்று சில நிமிடங்கள் யோசித்தவன்,

“அதுதான் கல்யாணம் முடிஞ்சிடும். உன் ஃப்ரெண்ட் பொண்ணு - மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும் அது இதுன்னு நிறைய சடங்கு இருக்கும். அது எல்லாம் ஃபேமிலி ஃபங்ஷன். பிரண்ட்ஸ்க்கு மேக்ஸிமம் வேலை இருக்காது. சோ மதியம் லஞ்ச் சாப்பிட்டு கிளம்பலாம் தான சக்தி?” ஜெகதீஸ்வரன் கேட்க,

“நான் சொல்லிட்டேன் ஜெகன். அவ கேக்கல. கூட இருந்தே ஆகணும்னு சொல்றா.” என்று பதில் சொன்னாள் சக்தி.

சில நொடி அமைதியாக இருந்த ஜெகன், “கிளம்பி வாடி…” என்றான் இதுவரை சக்தி கேட்டறியாத குரலில்.

“ஜெகன்…” கண்களை அகலமாக விரித்து வைத்து சக்தி அழைக்க,

“இதுக்கு மேல முடியாது. நாளைக்கு ஆப்டர்நூன் கிளம்பி இருக்க.” என்றவன் வார்த்தைகளில் இன்னும் அதிகமாக அவள் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே,

“லஞ்ச் சாப்பிட்டாலும் சரி சாப்பிடலனாலும் சரி. மதியம் ஒரு மணிக்கு ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். செண்ட் மி த அட்ரஸ்.” என்று சொல்லியவன், மீண்டும் மொத்தமாய் அவளை பார்வையால் கொள்ளையிட்டவன் அழைப்பைத் துண்டித்திருத்தான்.

அதற்கு மேல் ஒரு நொடி தாமதித்தாலும் தாங்காது என்பதை உணர்ந்தவனாக அழைப்பைத் துண்டித்து இருந்தான் ஜெகதீஸ்வரன். கைபேசியில் சேமித்து வைத்திருந்த அவளது புகைப்படத்தை பார்த்தவனின் கண்களுக்குள் கனவுகள் ஏராளம் தாராளமாய்.

இங்கே அவன் வார்த்தையில் சிலையாகி போய் நின்றவளை உலுக்கியது மீண்டும் அதிர்ந்த கைபேசி.

கைபேசியின் திரையை பார்த்தவளுக்கு ஜெகதீஸ்வரனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி கண்ணில் பட்டது.

“அட்ரஸ்?” ஒற்றை வார்த்தை வந்திருக்க, கைபேசியில் வைத்திருந்த திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்தாள் சக்தி.

“ஐ ஆம் கம்மிங்…” என்று அடுத்த குறுஞ்செய்தி வந்து விழ, அதற்கு மேலும் விரிய வழியில்லாத அளவுக்கு விரிந்தது அவளது பழுப்பு நிறம் விழிகள்.

பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே கைபேசி அதிர ஆரம்பிக்க, அதில் அழைத்துக் கொண்டு இருந்தாள் தாரணி.

“போச்சு…” என்று தலையில் தட்டியபடி அழைப்பை ஏற்றவள், காதிலிருந்து கைபேசியை தள்ளி வைத்தாள். இரண்டு நிமிடங்கள் திட்டி தீர்த்து விட்டாள் தாரணி.

“எங்க இருந்தாலும் இன்னும் ரெண்டே நிமிஷத்துல என் கண்ணு முன்னாடி வந்து நிக்கிற. இல்ல நான் மனுஷியா இருக்க மாட்டேன்.” என்று கடைசியாக அவள் கத்தியது தொலைவில் வைத்தும் சக்தியின் காதை துளைத்து எடுக்க காதில் ஒரு விரல் வைத்து தேய்த்துக் கொண்டவன், “வந்துகிட்டே இருக்கேன்.” என்று பவ்யமாக பதில் சொல்லி வேகமாக கீழே இறங்கி ஓடினாள்.

மூச்சு வாங்க தன் முன்னே வந்து நின்ற தோழியை பாசமாக பார்த்து வைத்த தாரணி அடுத்து பேசிய வார்த்தைகள் எல்லாம் காது கொடுத்து கேட்க முடியாதவை.

அனைத்தையும் நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டு வாங்கி கட்டிக் கொண்டவள், அடுத்து ஜெகதீஸ்வரன் சொல்லியதை மெல்லிய குரலில் சொல்ல அவளை ஏற இறங்கப் பார்த்த தாரணி அன்பு மழையை பொழிந்து விட்டாள்.

அடுத்து நிறுத்தாமல் அவள் பேச தொடங்க, உள்ளே வந்தது உறவு கூட்டம் ஒன்று. தற்காலிகமாக தாரணியிடமிருந்து அவளை காப்பாற்றிய அவர்களுக்கு மனதிற்குள் நன்றி சொன்னவள், நல்ல பிள்ளையாக தாரணியின் அருகே அமர்ந்து கொண்டாள்.

பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கிய தாரணியின் திருமணம் சக்திக்குள் பிரளயத்தை உருவாக்கி இருந்ததை அவள் தவிர யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
Top Bottom