காதல் எங்கள் சொந்தம் - 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
இருபதாம் அத்தியாயம்.

காதல் எங்கள் சொந்தம்.. 20

குறை ஒன்றுமில்லை என்று மனசு நினைத்தால், நிறைவான வாழ்க்கை அமைந்துவிடும். எனக்கு இது மட்டும் இருந்தால் தான் நான் சந்தோஷமாக இருப்பேன். அது மட்டும் கிடைத்தால் தான் சந்தோஷமாக இருப்பேன் என்று மனசை அலைபாய விட்டால், நிம்மதி ஏது.? இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைய வேண்டாமா.? அம்மா சொன்ன தத்துவம் கேட்டு முகம் சுளித்தாள் காவ்யா.

“அம்மா.... நீங்க சொன்ன தத்துவம் நல்லா தான் இருக்கு. அதுக்காக சட்டுன்னு மனசை மாத்திக்க முடியுமா.?” என்று தன் அம்மாவுடன் வாதிடுகிறாள் காவ்யா.

நிரஞ்சன் காணாமல் போய்விட்டான்.... சென்றவன் தகவல் தராத பட்சத்தில் இருக்கும் நல்ல வாய்ப்பை பயன்படுத்த சொல்கிறாள் அம்மா. தாய்மையின் புனிதத்தையும், ஆழமான நேசத்தையும், தியாக உள்ளத்தையும் புரிந்தவள் தான் காவ்யா. ஆனாலும் இந்த அதிரடி மாற்றத்தை ஏற்க சொல்வது என்ன நியாயம்.?

“காவ்யா.... வயசு ஆண்டுக்கு ஆண்டு ஏறும். நீ திருமண வயதை எட்டி சில ஆண்டுகள் ஆயிடுச்சு. நா கண்மூடும் முன் உன் திருமணம் நடக்கணும். நிரஞ்சனுக்கு என்ன சிக்கல் தெரியலை. எவ்வளவு நாள் அவன் வருவான்னு காத்திட்டு இருப்பே.? அதனாலே....” அம்மா சொன்னதும் திடுக்கிட்ட காவ்யா..

“அதனாலே.... “

“அதனாலே.. நீ நான் பார்த்திருக்கும் நல்ல பையனை கட்டிக்க.”

சினம் தலைக்கு ஏற காவ்யா தீர்மானமாக சொன்னாள்..

“யாரையேனும் கட்டிக்க நா தயாரா இல்லே. நிரஞ்சன் மட்டும் தான் என் வாழ்க்கை துணை.. இதில் எந்த மாற்றமும் இல்லே. நான் காத்திருப்பேன்..” அம்மாவின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தது. காதல்.. உண்மைக் காதல், போற்றத்தக்கது தான். ஆனால் கைகூடாத நிலையில்.. மனதை மாற்றிக் கொள்ளத் தானே வேண்டும்.? அது இந்த பைத்தியக்காரிக்கு தெரியவில்லையே..

“காவ்யா... யாரையோ நீ கல்யாணம் பண்ணிக்க வேணாம். சந்திரன் நல்ல பையன். பொறுப்பானவன். உன்னை நேசிப்பவன். உன் வாழ்க்கை அவனோடு நன்றாக இருக்கும். இந்த விடுதியை.. டீ எஸ்டேட்டை பார்த்துக்க அவன் உண்மையுடன் உதவியாக இருப்பான். அன்பை வழங்க ஆசைப்படுகிறவன். நிரஞ்சன் போல் காணாமல் போக மாட்டான்.”

“அம்மா.. உங்க பார்வையில் இது நல்ல மேட்ச்.... எனக்கு சரிபடாது. சந்திரனுக்கு என் காதல் பற்றித் தெரியும். அவருக்கு என்ன பயித்தியமா.? யாரையோ காதலிக்கும் பெண்ணை மணந்து நரக வேதனை அனுபவிக்க.?”

நீண்ட பெருமூச்சு விட்டார் வேதவல்லி. இந்தப் பெண் இப்படி பிடிவாதம் பிடிக்கிறதே என்ற கவலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. நிரஞ்சன் திரும்ப வருவான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லாமல் போனது. இது ஒரு பொல்லாத உலகம்.. தனியாக ஒரு இளம் பெண் வஞ்சம் நிறைந்த உலகில் எப்படி சமாளிப்பாள்.? ஹேமாவை அழைத்துப் பேசிய பின் தான் இந்த முடிவுக்கு வந்தார்.

“ஹேமா.. உன் கிட்டே ஒண்ணு கேக்கலாமா.?” அன்றாட பூஜையை முடித்துவிட்டுப் பேசினார்.

“அம்மா.... தாராளமா நீங்க எது வேணா கேக்கலாம்.”

அம்மையார் முகத்தில் சின்ன தயக்கம். பின் நிதானமாக சொன்னார்.

“உனக்கு காவ்யாவை பிடிக்குமா.?”

“என்ன கேள்வி அம்மா.? ரொம்ப பிடிக்கும். என் உயிர் சினேகிதி ஆகிவிட்டாள். அவளைப் பார்க்க பார்க்க எனக்கு பிரமிப்பா இருக்கு.”

“சந்தோஷம். அவள் நிரஞ்சனுக்காக காத்துக்கிட்டு இருக்கா. அவன் வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனக்கு அவள் வாழ்க்கை முக்கியம். உன் அண்ணன் சந்திரனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவனை மாப்பிள்ளையா ஏத்துக்க நினைக்கிறேன். நீ என்ன சொல்றே.? காவ்யாவின் காதல் பற்றி தெரிந்திருக்கும் அவனுக்கு. இந்த நிலையில் அவன் அவளை ஏற்றுக் கொள்வானா.?”

ஹேமாவினுள் சந்தோஷம் பொங்கியது. சந்திரன் தான் காத்திட்டு இருக்கானே.! “அம்மா.. அண்ணாவுக்கு எல்லாம் தெரியும். காவ்யா மனசு மாறினால் அவளை ஏற்றுக் கொள்ள அண்ணா முழு மனசோடு சம்மதிப்பான். அவளை நல்லா வச்சுப்பான். ஏன்னா அவன் காவ்யாவை மனசார காதலிக்கிறான்..”

“கடவுளே நன்றி. நா காவ்யாவிடம் பேசிப் பார்க்கிறேன்...” அம்மையார் கண்களில் சந்தோஷக் கண்ணீர்.

அதன் பிறகு தான் தன் விருப்பத்தை மகளிடம் சொல்கிறார் அவர்.

“அப்ப காலமெல்லாம் கன்னியா இருக்கப் போறியா.?”

“அம்மா.. நா அப்படி சொல்லலையே. நிரஞ்சன் கண்டிப்பா வருவார். என் உள் மனசு சொல்லுது. என்னால் அவரை நினச்சுக்கிட்டு, இன்னொருவருக்கு கழுத்தை நீட்ட முடியாது. அந்த இன்னொரு மனசை நோக்கடிக்க முடியாது. நிரஞ்சன் மேல் உள்ள காதல் மனசில் இருந்துகிட்டே தான் இருக்கும். அப்புறம் எப்படி நான் சந்திரனோடு வாழ முடியும்.? எனக்கு ரெண்டு மனசு இல்லையே.?”

“சரி.... நா சொன்னதை நினச்சுப் பாரு..”

காவ்யா வருத்தமுடன் காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பத் தயாரானாள். ஹேமா ஓடி வந்தாள்.

“காவ்யா.... நானும் சசியும் உன் கூட வரோம். சசியை பள்ளியில் விட்டுவிட்டு நாம் ஒரு லாங் டிரைவ் போலாம். உன் கூட பேசணும்.” என்றாள். என்ன பேசப் போகிறாள்.? என் அண்ணனை கட்டிக் கொள் என்று உபதேசம் பண்ணப் போகிறாளா.? நோ என்று சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் சசி குட்டி ஓடி வந்தது.

“அம்மா.... நானும் வரேன். டிராப் மீ.. இன்று பள்ளி பஸ் வரலை.”

சசி காவ்யாவையும் ஹேமாவையும் அம்மா என்றே அழைக்க ஆரம்பித்திருந்தாள். ஹேமா ஒரு நாள் அவளையும் அழைத்துக் கொண்டு வள்ளியை சந்திக்கச் சென்றாள்.

“சசி.. உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வள்ளியிடம் கேள். அப்ப தான் உன் மனசு ஆறும். இல்ல அந்த வலி உன்னை விட்டுப் போகாது..” என்று சொல்லியே கூட்டி வந்தாள்.

வள்ளி ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு அமலா கண்ணு எப்படி இருக்கே.? நா உன்னை மறக்கலை. அந்த சசியை துரத்திட்டேன்.... இப்ப என் கூட பழம் தானே.? என்று பேசிக் கொண்டிருந்தாள். சசியை கண்டதும் அவள் கண்கள் பெரிதானது. சிவந்தது. ஆவேசம் வந்தது போல் “எதுக்குடி வந்தே.? போயிடு.. நீ இருந்தா என் பொண்ணு என் கூட பேச மாட்டா..போயிடு.”

மீனா அங்கு ஓடி வந்தாள். மாவு அரைத்துக் கொண்டிருந்தாள் போல.. வலது கையில் மாவு அப்பியிருந்தது.

“வாங்க ஹேமா மா. வா சசி..” என்றாள். வள்ளி தன் ஆத்திரத்தை மீனா மேல் காட்டினாள்.
“நா போகச் சொல்றேன். நீ என்ன வான்னு சொல்லிட்டு இருக்கே.?” பொம்மையை மார்போடு அணைத்துபடி, கத்திக் கொண்டே மீனாவை அடிக்க கையை ஓங்கினாள். கையை அப்படியே பிடித்துக் கொண்ட ஹேமா.... “சசி தான் என் குழந்தைன்னு கூட்டிக் கொண்டது நீங்க தான். பின்னால் அவளை துரத்தி அடிச்சதும் நீங்க தான். நீங்க மனநிலை சரியில்லாம இதை செய்தீங்கன்னு வச்சுக்கிட்டாலும்.. வள்ளி, அது மிகப் பெரிய பாவம். உங்க குறுகிய புத்தி தான் எல்லாத்துக்கும் காரணம். பிஞ்சு மனசில் பயத்தை ஏற்படுத்த உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு.? அவளா என்னை ஏத்துக்கோங்கன்னு வந்து நின்னா.? அவ கிட்டே மன்னிப்பு கேளுங்க.” என்றாள். வள்ளி திருதிருவென்று பயத்துடன் விழித்தாள்.

“அண்ணிக்கு மனசு சரியில்லை ஹேமா மா. அவங்க செய்யறது அவங்களுக்கே புரியலை....” என்றாள் மீனா.

“அம்மா.... வாங்கம்மா போலாம். பாவம் வள்ளி ஆன்ட்டி..” என்றாள் சசி. ஹேமா சசியை அணைத்துக் கொண்டு..

“உனக்கு பெரிய மனசு சசி. ஐ லவ் யூ.” என்றாள்.

“இப்ப என் மனசும் லேசாச்சு மா. வள்ளி ஆன்ட்டி வேணும்னே செய்யலை. புரிஞ்சுக்கிட்டேன். அவங்க குணமாகட்டும்..” என்றாள். இந்தக் குழந்தை மேல் எவ்வளவு வெறுப்பை உமிழ்ந்திருக்கிறாள் இந்த வள்ளி.! ஒரு நொடியில் மன்னித்து விட்டாளே.! அவர்கள் திரும்பி விட்டார்கள். ஹேமா நினைத்தாள்.

உறவுகள் அழகானவை தான். ஒரு அசிங்கத்தை எதிர்க்க கோபம் என்ற ஆயுதத்தை எடுக்காமல், மன்னிப்பு என்ற விசிறியை மெல்ல வீசினாலே போதும் அங்கே வெறுப்பு அகலும். சசியிடமிருந்து அந்தப் பாடத்தைக் கற்றாள் ஹேமா. அது அவளுக்கு நிர்மலை மன்னிக்க தூண்டியது.

அன்று மங்களம் மாமியின் குழந்தையை பார்க்கப் போன இடத்தில் நிர்மலை சந்தித்தாள். எப்படி அவனிடம் அவனுக்கு ஆபத்து என்பதை சொல்வது என்று தயங்கிய போது.... அவன் அவளை பிரெட் வாங்கணும் என் கூட வாங்கன்னு கூப்பிட.. காவ்யா குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும் நேரம், நைசாக நழுவினாள். காரிடாரைக் கடந்து மரத்தடிக்கு வந்ததும் நிர்மல் சொன்னான்..

“உன்னை அன்று பயமுறுதிட்டேன்.... ப்ளீஸ் பர்கிவ் மீ.” என்றான்.

“இத பாருங்க. உங்க கூட பேசக் கூடாதுன்னு அண்ணா சொல்லியிருக்கார். உங்க கிட்டே முக்கியமா ஒண்ணு சொல்லத் தான் நான் வந்தேன்..” ரெஸ்டோரென்டில் அவள் கேட்ட சம்பாஷனையை சொன்னாள்.

“நிர்மல்.... சம்திங் பிஷ்ஷி இஸ் கோயிங் ஆன். எச்சரிக்காவே வந்தேன். இரவு பன்னிரெண்டு மணிக்கு வரப்போவதா பேசிட்டு இருந்தாங்க.... ஜாக்கிரதை.” சொல்லிவிட்டு அவள் போகத் திரும்பினாள். அவன் சடாரென்று அவள் கையை பிடித்தான். உள்ளங்கையில் முத்தமிட்டான்.

“இந்த தகவல் எனக்கு மிக முக்கியம்.. தேங்யூ ஸோ மச்.” என்றான். ஹேமா திடுக்கிட்டுப் பார்த்தாள். எப்படி உரிமை எடுத்துக் கொள்கிறான் இவன்.!

“தகவல் சொல்ல வந்தது தப்புன்னு இப்ப புரியுது. எதுக்கு என் கையை பிடிச்சு.. சே.... உங்க மூஞ்சியிலேயே விழிக்க மாட்டேன்.” சொல்லிவிட்டு அவள் படபட உள்ளத்துடன் வேகமாக ஓடிவிட்டாள்.

நூறு தரம் ஸாரி சொல்லி மெஜெஜ் பண்ணினான் அவன். சசி வள்ளியை மன்னித்தது அவள் நினைவுக்கு வந்தது. ஒரு சின்ன குழந்தைக்கு இருக்கும் பெரிய, மனசு இவ்வளவு பெரிசாக வளர்ந்த எனக்கு இல்லைன்னா எப்படி.? யாருக்கும் தெரியாமல் அவன் வீட்டுக்குச் சென்றாள். “என்னாச்சு நிர்மல்.?” என்று கேட்டாள்.

“ஹேமா.. அவங்க வந்தது என் வீட்டுப் பத்திரத்தை திருடத்தான். பத்திரத்தை அக்கா கிட்டே பத்திரமா சேர்த்திட்டேன். திருடங்க ஏமாற்றத்தோட போயிட்டாங்க. ஒண்ணும் தெரியாத மாதிரி என் அறைக் கதவை பூட்டிக் கிட்டு தூங்குவது போல படுத்திருந்தேன். என்னை ஜன்னல் வழியா பார்த்திட்டு.... பய தூங்கறான்னு மும்முரமா தேட போயிட்டாங்க..”

“போலீசுக்கு ஃபோன் பண்ண வேண்டியது தானே.?”

“அவங்க யார் சொல்லி வந்தாங்கன்னு தெரிஞ்சுக்கத் தான் பேசாம இருந்தேன். அதையும் நான் தெரிஞ்சுக்கிட்டேன்.. வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா, அவர்கள் யார் என்று அடையாளம் காட்டிக் கொடுத்துவிட்டது.”

“நிஜமாவா.? யார் சொல்லி வந்தாங்க.? யார் அவங்க.?”

“அது பெரிய கதை.. சொல்றேன். இதனால் ஒரு பெரிய பிரச்சனை சால்வ் ஆயிடுச்சு. என் அண்ணா என் அக்காவை ஏத்துக்க சம்மதிச்சிட்டார்.... எல்லாம் உன்னால் தான். தேங்க்ஸ் ஹேமா....”

“எனக்கு ஒண்ணும் புரியலை. திருடங்க வந்ததுக்கும்.. உங்கண்ணா உங்க அக்காவை ஏத்துக்கிட்டதுக்கும் என்ன சம்பந்தம்.?”

மற்ற விவரங்கள் அவன் சொல்ல சொல்ல அவள் வியப்படைந்தாள். காவ்யாவிடம் இதை எல்லாம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவளுடன் லாங் டிரைவ் செல்ல ஆசைப்பட்டாள்.

சொந்தம் தொடரும்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் எங்கள் சொந்தம் - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.