குழலில் காற்றாகினாள் - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 29

Member
May 5, 2026
30
83
6
Tamilnadu
குழல் - 27

இருட்டு அறைக்குள் கவிழ்ந்து படுத்துக் கிடந்தாள் திலோத்தமா. விடிவதும் தெரிவதில்லை… இருட்டுவதும் தெரிவதில்லை… நாள், கிழமை, பொழுது, இரவு, பகல் என்று எதுவுமே புரியாத நிலையில் அவள் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவளை கைப்பிள்ளையை போல் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் ரஞ்சனி.

டொக்கென்ற சத்தத்தோடு அறையின் விளக்கு ஒளிர்ந்திருக்க மெல்ல தலையை திருப்பி பார்த்தவளின் அருகில் கவலை முகமாக வந்து அமர்ந்தாள் ரஞ்சனி.

‘இப்படியே எத்தனை நாளைக்கு இருக்கலாம்னு இருக்க..?”

பேசியபடியே உணவு தட்டினை எடுத்து மடியில் வைத்தாள்.

“எனக்கு எதுவும் வேணாம்டி… பசியே இல்ல…”

சோர்ந்த குரலில் சொன்னபடி எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள் திலோ.

“உன்ன அடிச்சேன் கொன்னுடுவேன்… எதுவும் பேசாம நான் கொடுக்கிறதை சாப்பிடணும்…”

மிரட்டலோடு உணவினை அவள் வாயில் திணிக்கத் தொடங்கினாள்.

கடந்த ஒரு மாத காலமாக இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. வேலைக்குச் செல்வதில்லை… நீண்ட விடுமுறை எடுத்துக் கொண்டாள்… வேலையை விட்டு தூக்கினாலும் இனி கவலை இல்லை… வாழ்க்கையே வேண்டுமா என்று யோசிப்பவளுக்கு வேலை ஒன்றுதானா கேடு..?

“அண்ணா போன் பண்ணி இருந்தாராடி..?”

உணவினை மென்றபடியே மெல்லிய குரலில் கேட்டவளை நிமிர்ந்து முறைத்தவள் பதில் பேசாமல் உணவினை கவளம் கவளமாக எடுத்து ஊட்டிக் கொண்டிருந்தாள்.

“பதில் சொல்லுடி…”

“தெரிஞ்சு என்ன பண்ணப் போற..?” என்றாள் வெடுக்கென்று.

“எப்படியும் பத்து நாள்ல இங்கே வந்துடுவாங்கள்ல…”

வெடுக்கென கண்களை நிமிர்த்தியவள் “வந்து மட்டும்..?” என்றாள் விழிகள் முழுக்க கோபத்தை நிறைத்து.

“அமர் உன்னகூட பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டாரா..?” வலியோடு கேட்டாள்.

“நான்தான் அவரை பார்க்க விரும்பலேன்னு சொன்னேன்… அவரைப் பார்த்து எனக்கு என்ன ஆகப்போகுது..?”

“ரஞ்சு… நான் தப்பு பண்ணினேன்… அவர் எனக்கு தண்டனை கொடுத்திருக்கார்… நானே அதை ஏத்துக்கிட்டுதானே இருக்கேன்… உனக்கு என்னடி..?”

“ஓஹோ தண்டனையை ஏத்துக்கிட்டியா..? ஒரு மாசமா பைத்தியக்காரி மாதிரி இந்த ஒரு அறையே கதின்னு படுத்தே கிடக்கிற… மூனு வேளையும் உன்னை பார்த்து பார்த்து குழந்தை மாதிரி கவனிச்சுக்கிறேன்… அந்த மனுஷன் உன் கூட பொறக்கல… ஆனா காலைல 8 மணியில் இருந்து ராத்திரி எட்டு மணிக்குள்ள 15 தடவை எனக்கு போன் பண்றார். என் கூட காதல் கதை பேசுறதுக்காக இல்ல. நீ எப்படி இருக்க..? நீ சாப்டியா..? தூங்கினியா..? இதையேதான் கேட்டுட்டு இருக்கார். அவருக்காக… அவருக்காக மட்டும்தான் அந்த ஆளைப் பொறுத்துப் போயிட்டு இருக்கேன். நன்றி இல்லாதவன்டி அவன்… அவனுக்கு போய் இவ்வளவு பெரிய வேலை பண்ணி வச்சிருக்க…”

பல்லை கடித்து உறுமினாள் ரஞ்சனி.

“அனாவசியமா பேசாத ரஞ்சு… அவரோட இடத்துல இருந்து யோசிச்சு பார்க்கணும்… எப்படி யோசிச்சாலும் அவர்கிட்ட சொல்லாம நான் பண்ணின விஷயம் மிகப்பெரிய தப்புதானே..?”

என்னடி தப்பு..? என்னடி பெரிய தப்பு..? யாருக்காக பண்ணின..? நீ அதை பண்ணலேன்னா அவருக்கு இப்போ பார்வை வந்திருக்குமா..? இப்போ அந்த ஆளுக்கு பார்வை வந்துடுச்சு… உலகம்பூரா அழகா விரிஞ்சு தெரியுது… யாரால..? எதால..? வேணான்டி… என்னை பேச வைக்காதே… எனக்கு நெஞ்செல்லாம் கொதிக்குது… உன் காதல் வேணா தெய்வீகக் காதலா இருக்கலாம். அது உன் கண்ணை மறைச்சு அந்த அமர் என்ன பண்ணினாலும் அதுல ஆயிரம் நியாயங்கள் தெரியலாம். ஆனா என்னால சத்தியமா மன்னிக்கவே முடியாது… அப்படியே அவர் இங்கே வந்தாலும் அவர் முகத்திலகூட நான் முழிக்கமாட்டேன்…”

பேசி முடித்தவள் அவளுக்கும் ஊட்டி முடித்து பருக தண்ணீர் கொடுத்து அங்கிருந்து எழுந்து சென்றிருந்தாள்.

கூடத்தில் ரஞ்சனியின் பேச்சுக்குரல் கேட்டது… யாரோடு பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதும் தெரிந்தது.

“சாப்பிட்டா… சாப்பிட வச்சுட்டேன்… அதெல்லாம் நல்லா பாத்துக்குவேன்… நீங்க உங்க பிரண்டை தூக்கி தலையில வச்சு கட்டி அழுங்க… நான் ஒரு தியாகியை பாத்துக்குறேன்… ஆனா நீங்க ஒரு துரோகியை பாக்குறிங்க… உங்க ஃபிரண்டு உங்களுக்கு பெருசுதான்… அதுல நான் குறை எல்லாம் சொல்லமாட்டேன்… அதைவிட என் ஃபிரண்ட் எனக்கும் பெருசு… அவளை நான் நல்லா பாத்துப்பேன்…”

உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

அமைதியாக கண்மூடி கட்டிலில் சாய்ந்து கொண்டாள் திலோ.

அன்று அவனுக்கு பார்வை‌ திரும்பிவிட்டது என்ற செய்தியை கேட்டு வானுக்கும் பூமிக்கும் குதித்து அவள் கொண்ட மகிழ்ச்சியை இனி ஒருநாளும் அவளால் மீண்டும் அனுபவிக்கவே முடியாது. அத்தனை மகிழ்ச்சியையும் அந்த குறுகிய நேரத்தில் அனுபவித்து களித்தாள்.

தன்னவன் தன்னைக் காண தன்னை அழைப்பான் என்று ஆர்வமும் ஆசையும் மேலிட காத்திருந்தாள்.

நெடுநேரம் கழித்துதான் அறையில் இருந்து வெளியே வந்திருந்தான் இளங்கோ.

முகம் சோர்ந்து வாடி வேதனையில் நிறைந்திருந்தது.

“அண்ணா…” ஓடிச்சென்று அவனது கரத்தை பற்றியவள் அவனது வாடிய முகத்தை கண்டு பெரிதும் துணுக்குற்றாள்.

“அ..அண்ணா… அ..அமர்…” வார்த்தைகள் தடுமாற அவனைப் பார்த்தாள்.

மென்மையாய் புன்னகைத்தவன் உன் தவத்துக்கு பலன் கிடைச்சிருச்சு… இந்த உலகம் அவனுக்கு தெரியுது… நல்லா பார்க்கிறான்… அவனுக்கு பார்வை வந்திருச்சுடா…” கண்கள் கலங்க கூறியவனை மகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்டாள் திலோத்தமா.

“நான் போய் பாக்கட்டுமாண்ணா… என்னை வரச் சொன்னார்தானே…” கேட்டவள் கண்கள் மின்ன அவனைப் பார்த்தாள்.

‘“திலோ… அ..அதுல ஒரு சின்ன சிக்கல்…”

“என்னண்ணா..?”

அவள் விழிகளில் அதிர்வு.

“அவன் அழவோ எமோஷனல் ஆகவோ கூடாதுன்னூ டாக்டர் நம்மகிட்ட ஏற்கனவே எல்லாமே சொல்லி இருக்காங்கதானே. என்னை பார்த்து அவன் எவ்வளவுதான் கட்டுப்படுத்தியும் அழுதுட்டான்… திரும்ப கண்ணுக்கு மருந்து போட்டு படுக்க வச்சிருந்தாங்க… அதுக்கு அப்புறம் திரும்ப பார்க்க சொன்னப்போ பார்வையில எந்த பிரச்சனையும் இல்ல. நல்லாதான் இருக்கு… ஆனா இப்போதான் பார்வை வந்திருக்கிறதால இந்த எமோஷன் அழுகை டென்ஷன் இது எதுவுமே அவனை தாக்கக் கூடாதுன்னு சொல்றாங்க. அதனால ரேஷ்மா டாக்டர் என்ன சொல்றாங்கன்னா…” என்று நிறுத்தியவன் அவளை சங்கடமாய் பார்த்தான்.

“சொ..சொல்லுங்கண்ணா…”

அவள் குரல் உள்ளிரங்கி இருக்க அவளால் ஓரளவு யூகிக்க முடிந்தது.

“இன்னும் ஒரு மாசத்துக்கு கண்டினியஸா மருந்து விடணும்… அந்த சமயங்கள்ல அவன் விழித்திரையை ரொம்ப பாதுகாப்பா வச்சிருக்கணுமாம்… இப்போதைக்கு உன்னை அவன் பார்க்காம இருக்கிறதுதான் நல்லதுன்னு சொல்றாங்க. கண்டிப்பா நீ எமோஷனல் ஆவ..‌ அவன் அதைவிட ஆவான்… உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாக்கப் போறான். கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் உங்களால கண்ட்ரோல் பண்ண முடியாது. இதுக்காக நீ எவ்வளவு மெனக்கெட்டு இருக்கேன்னு அவனுக்கு தெரியும். அவனும் மனுஷன்தானே… உங்கிட்ட நிச்சயமா அவன் கண்ட்ரோலா இருக்க மாட்டான். அதனாலதான் டாக்டர் உன்னை இப்போதைக்கு அவன்கிட்ட நெருங்கவே வேண்டான்னு சொல்றாங்க…”

சில நொடிகள் அமைதியாக தரையை வெறித்தபடி நின்றாள் திலோத்தமா.

“நான் சொல்றது புரியுதாடா..?”

மென்மையாக அவர் தோளில் கை வைத்தான் இளங்கோ.

“ம்ம்… கரெக்ட்தான் அண்ணா… இவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம்… திரும்ப ஏதாவது பிரச்சனைனா அதை என்னால தாங்கிக்க முடியாது… இப்போ என்ன..? என் அமருக்கு பார்வை வந்துடுச்சு… அதுவே எனக்கு போதுமே… அடுத்து நான் எப்போதான் அவரை பார்க்க முடியுமாம்..‌?”

“நாப்பது நாள் இங்கேயே இருந்தாதான் நல்லதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… ஊர்ல வச்சு எல்லாம் போய் பார்க்க வேண்டாம்… ஆப்ரேஷன் மத்த விஷயங்களுக்கு உண்டான பணத்தை மட்டுமே அவங்க வாங்கிட்டாங்க… இனி வரப்போற 40 நாளும் ரேஷ்மா மேடமோட கண்காணிப்புல நானும் அவனும் மட்டுமே ஒரு அறையில் இருக்கப் போறோம். அதுக்கு பெருசா ஃபீஸ் அவங்க வாங்கப் போறதில்ல. அப்படியே கேட்டாலும் நாம கொடுக்கத்தான் போறோம். அவனுக்காக எவ்வளவு வேணாலும் செலவு பண்ண தயார்தான். ஆனா அதெல்லாம் அவங்களும் வேண்டான்னு சொல்லிட்டாங்க. ஃபுல் ட்ரீட்மெண்ட்டும் முடிச்சுட்டு இங்கே இருந்து போனா போதும்னு சொல்லிட்டாங்க… அதுதானே அவங்களுக்கும் முழுமையான சக்சஸ்…”

“அப்போ நான் அவரை எப்போதான் பார்க்க முடியும்..?”

ஏக்கத்தோடு கேட்டவளை வேதனையாக பார்த்தான் இளங்கோ.

“அவன்கூட நான் இருக்கேன்… நான் பார்த்துக்கிறேன்… நீ ஊருக்கு கிளம்பு… எல்லாம் முடிச்சுட்டு நாங்களே ஊருக்கு வந்துடறோம்… அங்க வச்ச அவனை பார்த்துக்கலாமே… இந்த பீரியட்ல அவனும் மனசளவுல தயாராயிடுவான். கண்ணுக்கும் எந்த பிரச்சனையும் வராது…”

“40 நாள் அவரைப் பாக்காம இருக்கணுமா அண்ணா..?”

கேட்கும்போதே அவள் தொண்டை அடைத்து கண்கள் கலங்கிக் கொண்டன.

“அவனுக்காக எத்தனையோ பண்ணிட்ட எத்தனையோ தாங்கிட்ட… 40 நாள் தானடா… இதுல உங்க ரெண்டு பேரோட எதிர்காலமும் சம்பந்தப்பட்டிருக்குல்ல. நல்லதுக்குதானே டாக்டர் சொல்றாங்க. எல்லாம் சரி பண்ணிட்டு அழகான கண்களோட உன்னை முழுசா ரசிக்கிற முழு மனுஷனா உன் முன்னாடி வந்து அவன் நிப்பான்…”

வேதனையை மறைத்து புன்னகைத்தான் இளங்கோ.

தானும் வலியோடு புன்னகைத்துக் கொண்டவள் அதற்கும் சரி என்று தலையசைத்திருந்தாள்.

“போன்ல அவர்கூட பேசலாமாண்ணா..?” ஆதங்கத்தோடு கேட்டாள்.

“அதுவும் ஆபத்துதானடா போன்ல… உன் குரலை கேட்டாலே அவன் உடைஞ்சு போய் அழ ஆரம்பிச்சுட்டான்னா..?”

“ம்ம்.. அதுவும் சரிதான்… உங்களை தவிர வேற யாரு அவரை நல்லா பாத்துக்க முடியும்..? நீங்க சொன்னபடியே பண்றேன்…”

கண்களில் கண்ணீர் வழிய புன்னகையோடு கூறியவளை அப்போதே கிளப்பி அனுப்பியிருந்தான் இளங்கோ.

இதனையே ரஞ்சனிக்கும் அழைத்து கூறி இருந்தான். அவள் ஊருக்குச் சென்ற இரண்டாம் நாள் அவளது கைப்பேசிக்கு அழைத்திருந்தார் ரேஷ்மா. அவள் குளியலறையில் இருக்க பெயரை பார்த்த ரஞ்சனி அழைப்பை ஏற்று காதில் வைத்திருந்தாள்.

“ஹலோ…”

“என்னம்மா திலோ… திடீர்னு அவ்வளவு அவசரமா ஊருக்கு கிளம்பி போயிட்ட..? இன்னிக்கு காலையில இளங்கோ சொல்லித்தான் தெரியும்… இவ்வளவு பண்ணிட்டு எத்தனையோ வேலைகள் செஞ்சுட்டு உன் புருஷனுக்கு பார்வை வந்ததை பார்க்காமலே கிளம்பி போயிட்டியே. அவசரமா ஆபீஸ்ல வர சொல்லிட்டாங்கன்னு சொன்னியாம். அது எப்படிம்மா..? இந்த பார்வை வர்றதுக்காக அத்தனை பெரிய தியாகம் பண்ணிட்டு இப்படி சட்டுனு கிளம்பிப் போக முடிஞ்சது. அதுவும் அவரை பார்க்காம கூட. உருவான கருவையே அவர் கண்ணுக்காக கொடுக்க முடிஞ்ச நீயா அவரை விட வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிளம்பிப் போன… ரொம்ப ஆச்சரியமா இருக்கும்மா. இன்னும் 40 நாள் இங்கேயே தங்கி இருக்கிறதா உன் கணவரும் பிடிவாதமா சொல்றார். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. தெளிவா எல்லாம் பார்த்து அனுப்பிடுவேன். ஆனா நீ திடீர்னு கிளம்பிப் போனதுதான் எனக்கு ஆச்சரியம். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லகூட இல்ல. வேற ஏதாவது பிரச்சனையா..?”

எதிர்முனையில் இருப்பவள் திலோ என்று நினைத்து கடகடவென பேசிக்கொண்டே இருந்தார் ரேஷ்மா.

“டாக்டர்… நான் ரஞ்சனி… திலோவோட ஃப்ரெண்ட்… அவ குளிச்சிட்டு இருக்கா வந்த உடனே உங்ககூட பேசச் சொல்றேன்…”

“ஓ… ஓகே மா…” என்றவர் இணைப்பை துண்டித்திருக்க நிறைய குழப்பத்துடன் கூடத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. அவர் பேசியதற்கும் இளங்கோ அவளிடம் பேசியதற்கும் நிறைய வேறுபாடுகள்.

ஆக ஏதோ பெரிய சமாளிப்பு அவனிடம்.

மருத்துவர் அழைத்ததை பற்றி திலோவிடம் கூறாமல் மறைத்து உடனடியாக இளங்கோவிற்கு அழைத்திருந்தாள்.

“உண்மைய சொல்லுங்க… அங்கே என்ன நடக்குது..? கருவை கொடுத்த கண்ணை கொடுத்தேன்னு அந்த டாக்டர் என்ன என்னமோ சொல்றாங்க… எனக்கு ஒன்னும் புரியல. ஏதேதோ சொல்லி அவளை கட்டாயப்படுத்திதான் ஊருக்கு அனுப்பி வச்சிருக்கீங்க. என் கணிப்பு சரியா இருந்தா அமர் திலோவை பார்க்க விரும்பல. அவளை அவாய்ட் பண்ணனும்னு நினைக்கிறார்… சரிதானே…”

சூடு பரவிய குரலுடன் கோபமாக கேட்டாள் ரஞ்சனி.

“ரஞ்சு… நான் சொல்றதை கேளு… இப்போ எதுவும் தெளிவா என்னால சொல்ல முடியாது. அங்கே வந்து சேர்றவரைக்கும் அமர் திலோவை பார்க்கவும் மாட்டான் பேசவும் மாட்டான் புரிஞ்சுதா…”

கறாராகப் பேசி அவன் இணைப்பை துண்டித்திருக்க கிளர்ந்த கோபத்தோடு திலோவிடம் சென்று நின்றாள் ரஞ்சனி.

அவள் ஆடிய ஆட்டத்தில் அனைத்தையும் தெளிவாக கூறி முடித்திருந்தாள் திலோத்தமா.

இதயம் நடுங்க இன்னதென்று பிரித்தறியாத உணர்வுடன் தன் தோழியையே சில நொடிகள் பார்த்தவள் அவளை தாவி அணைத்துக் கொண்டாள்.

“யாருக்குடி இப்படி மனசு வரும்..? உன் உயிரைக் கொன்னு உன் புருஷனோட கண்ணுக்கு உயிர் கொடுத்திருக்க. ஆனா அந்த மனுஷன் உன்னை பார்க்ககூட விரும்பாம ஏதேதோ காரணம் சொல்லி உன்னை இங்கே துரத்தி அடிச்சிருக்கார். அவரால எப்படி முடிஞ்சது..?”

“அவருக்கு உண்மை தெரிஞ்சிடுச்சுடி… எனக்கு தண்டனை கொடுத்துட்டார்… இது நடந்திடுமோன்னு பயந்தேன்… அதுவே நடந்துடுச்சு…”

வழிந்த கண்ணீரைத் துடைத்து கசப்பாக புன்னகைத்தாள் திலோ.

(தொடரும்)
 
Last edited by a moderator:

Author: STN - 29
Article Title: குழலில் காற்றாகினாள் - 27
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அமரை நீயும் கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்.....ஆன அவன் கோவமா எல்லாம் உன் மேல இருக்க மாட்டான்