குழல் யாசிக்கும் புயலே - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,727
1,147
113


சீராக மூச்சை விட்டபடி, கால்களைச் சுருக்கி, நெஞ்சின் மீது குறுக்காகக் கைகளை வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஆர்யங்கா.



உறங்கும் அவளைக் கண்டவன், அவள் எழுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தான். ஆனால், அவளை எழுப்பத்தான் மனமில்லை.


அவளுடனான முதல் சந்திப்பு அவன் நினைவிற்கு வந்தது.

தற்கொலை செய்ய முயற்சித்தவளைக் காப்பாற்றி, தாலிகட்டி மனைவியாக்கி அவனுடன் அழைத்து வந்துவிட்டான்.


குடும்பமே அவனுக்கு எதிராக இருக்கும்போது, "எந்தத் தைரியத்தில் இவ்வாறு செய்தான்?" என்று அவனுக்கே தெரியவில்லை.


தன்னைப்பற்றி அக்கறை இல்லாத குடும்பத்திற்குத் தனது செயலுக்கான விளக்கமும் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டுதான் இத்தகைய முடிவை எடுத்துவிட்டான் போலும்.



'என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்' என மனம் பக்குவத்திற்கு வந்துவிட்டது. அந்தப் பக்குவத்தினால் எடுத்த முடிவுதான் இந்தத் திருமணம். அதை நினைத்துப் பார்த்தவன், கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான்.



இருபத்தி ஏழு வயது நிரம்பிய இளைஞன்... அளவான உடற்கட்டு, ஆண்மகனுக்குரிய அனைத்து அம்சங்களும் பொருந்தியிருந்தன. அவனைப் பார்த்ததுமே ஈர்த்துவிடும் தோற்றம் அவனுக்கு.


அறைக்குள்ளேயே நடைப்பயின்றுகொண்டிருந்தான். வெளியே செல்லவோ, குடும்பத்துடன் இணைந்து பேசவோ அவனுக்கு விருப்பமில்லை; யாரும் அதை அனுமதிப்பதுமில்லை.

தேவைக்குக்கூடப் பேச மாட்டான். அவனுக்காக அங்கே ஏங்கித் தவிக்கும் இரு ஜீவன்கள் மௌலியும் அமிர்தாவும்... அமிர்தாவிடமும் பேச மாட்டான். அவர் பேச நினைத்தாலும் விலகிப் போய்விடுவான். அவனுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அவனது தந்தைக்காக, அவரது வேண்டுகோளுக்கு இணங்கப் பொறுத்துக்கொண்டிருக்கிறான். தந்தையின் வார்த்தைக்காக இருக்கிறான்; இல்லையென்றால் அவனுக்கென்று அவன் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் அவனை 'வா' என்று அழைத்துக்கொண்டுதான் இருக்கிறது.




தனது நடையால் அறையை அளக்க, அவனது அலைபேசி அலறியது. அழைப்பை ஏற்றுப் பேசி முடித்தவன் திரும்பிப் பார்த்தான். அலைபேசியின் ஓசையில் கண் விழித்திருந்தாள் ஆர்யங்கா. அவளுக்கு எதிரே நிற்பவனைக் கண்டு படக்கென எழுந்து அமர்ந்தாள். இருக்கும் இடத்தை அவள் உணர்ந்துகொள்ள ஒரு நிமிடமானது.



அவள் முன்னே வந்து நின்றவன், "ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா, வெளியே போகலாம்" என்றான்.


"எங்கே?" எனக் கேள்வி எழுப்பும் முன்னே அவ்விடம் விட்டு அகன்று பால்கனிக்குள் நுழைந்துகொண்டான். அவளது கேள்வி காற்றோடு கரைந்து போனது.


அவன் போன திசையை வெறித்தவள், பின் தோள்களை அசட்டையாகக் குலுக்கிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.



பத்து நிமிடத்தில் தயாராகி வந்தவளைக் கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தான். தனது கார் கதவை அவளுக்காகத் திறந்துவிட்டான். அவள் உள்ளே சென்று அமர்ந்தாள்.


அவ்விடத்தை விட்டு கார் சீறிப்பாய்ந்தது.

பிருத்வி சென்றுவிட்டதைக் கண்டு மொத்த குடும்பமும் ஆசுவாசப்பட்டது.


பிறந்தநாள் விழாவிற்கு அவன் வீட்டில் இல்லாததே அவர்களுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தது. மேலும் உற்சாகத்துடன் தயாராகிக் கொண்டிருந்தனர்.



கார் அந்தச் சாலையில் சீராகச் செல்ல, வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள் ஆர்யங்கா. பிருத்வியும் அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு சாலையில் கவனத்தை வைத்தான்.



இருவருக்குள்ளும் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால், கேட்க வேண்டிய அவசியம் இல்லாததால் அமைதியைக் கடைப்பிடித்து வந்தனர்.


பிருத்வியின் கார், ஒரு புகழ்பெற்ற 'பொட்டிக்' முன் நின்றது. அவளும் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.


"இறங்கு" என்ற கட்டளையோடு அவனும் இறங்கினான். அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போக, ஒன்றும் புரியாமல் அவன் பின்னே சென்றாள்.



அவர்களை வரவேற்ற பணிப்பெண்ணிடம் ஆர்யங்காவைச் சுட்டிக்காட்டி, விலை அதிகமுள்ள ஆடையைக் காட்டச் சொன்னான். அந்தப் பெண்ணும் உள்ளே செல்ல,

ஆர்யங்கா, "எனக்கு எதுக்கு இப்போ இவ்வளவு காஸ்ட்லியான டிரஸ்?" என வாயைத் திறந்தாள்.


"எங்க வீட்ல..." என்றவன், உடனே மாற்றி "நம்ம வீட்ல ஃபங்க்ஷன் நடக்கப்போகுது, தெரியும் தானே? நீ அந்த வீட்டு மருமகள், அதனால் கொஞ்சம் கிராண்டாக டிரஸ் பண்ணிருக்கணும். அதுக்குத்தான்" என்றான்.


'மருமகள்' என்ற வார்த்தையைக் கேட்டதும், காலையில் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தவள், இதழ்களைக் கேலியாக வளைத்தாள். அதை அவனும் கவனிக்கத்தான் செய்தான்.


அந்தப் பெண் ஒவ்வொரு ஆடையாகக் கொண்டு வந்து அவர்களுக்குக் காட்டினாள்.


விருப்பமில்லாமல் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்யங்கா. அவள் எண்ணத்தில் ஓடுவதைப் புரிந்துகொண்டவனாக அவனே அவளுக்கு ஆடைகளைத் தேர்வு செய்தான்.


அழகான மெரூன் நிற வெல்வெட்டில் கற்கள் பதித்த, கால் விரல்கள் வரை நீண்டிருந்த அந்த கவுனைக் காட்டி, "இது பிடித்திருக்கிறதா?" என்பது போலக் கேட்டான். அவளும் ஆமென்று தலையசைக்க, அதை வாங்கிக்கொண்டவன் அடுத்து சென்றது என்னவோ அழகு நிலையத்திற்குத்தான்.



"எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை" என தவிப்பாகச் சொன்னாள் ஆர்யா.



"பழகிக்கோ" என்றவன் விறுவிறுவென முன்னே செல்ல, ஓட்டமும் நடையுமாக அவனுடன் சென்றாள். அங்கே அவளை அழகுபடுத்தச் சொல்லிவிட்டு, இவன் ஆண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்துவிட்டான்.



ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஆர்யங்கா கதவைத் திறந்துகொண்டு கூச்சத்துடன் வெளியே வந்தாள். அவளுக்காகக் காத்திருந்தவன், கூச்சத்துடன் வரும் அவளைச் சிறு முறுவலுடன் பார்த்தான்.



பிருத்வி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகளைப் பார்த்து நின்றவளை, "பெர்ஃபெக்ட்" என்ற வார்த்தையால் நிமிர வைத்தான். அவனும் அங்கே தயாராகித் தான் நின்றிருந்தான்.


அவள் அணிந்திருந்த ஆடை போலவே மெரூன் வெல்வெட் கோட், உள்ளே கருப்பு நிறச் சட்டை அணிந்து, அடங்காத கேசத்தைச் ஜெல் போட்டு அடக்கிப் படு ஸ்டைலாக நின்றிருந்தான்.



ஒரு நொடி அசந்து பார்த்துத் தடுமாறிவிட்டாள்.


"போலாமா?"


"ம்ம்"



அடுத்த நிமிடமே அங்கிருந்து புறப்பட்ட கார் நேராக அவர்கள் இல்லத்தின் முன் நின்றது. காலையில் பார்த்ததைவிட இரவில் அந்த வீடு ஜொலித்துக்கொண்டிருந்தது. காலையில் இருந்த மனநிலையில் கவனிக்காதவள், இப்போதுதான் கவனித்தாள்.


கார்களின் வரிசையைக் கண்டு பிரமித்துப் போனாள். காலையில் இருந்த உடையில் அங்கிருந்தால் நிச்சயம் அவளை வேலைக்காரி என்று கூட ஏற்றுச் கொள்ள மாட்டார்கள். அதற்குத்தான் இவ்வளவு விலையுயர்ந்த ஆடையை வாங்கித் தந்திருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.


அவ்விடம் நடக்கும் அனைத்தையும் மலைப்பாகப் பார்த்தாள் ஆர்யங்கா.

பிருத்வியின் காரைக் கண்டதும் காவலாளி வழிவிட, கார் உள்ளே சென்று நின்றது.


தங்கைக்குப் பரிசளிக்கப் பரிசுப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் இறங்க, அவனோடு அவளும் இறங்கினாள். தனது கையைச் சற்று நகர்த்தி அவளைப் பார்க்க, அவளும் தயக்கத்துடன் அவனது கையைக் கோர்த்துக்கொண்டாள். இருவரும் உள்ளே சென்றனர்.



அவர்கள் உள்ளே செல்லும் முன்னே, கேக் வெட்டித் தாய் தந்தைக்குப் பிரிந்திருந்தாள் பிரணவி.


தனது வருங்காலக் கணவனான வித்யூவிற்கும் ஊட்டிவிட்டாள். பின் வீட்டிலுள்ள அனைவருக்கும் ஊட்டி விட்டாள். அனைவரும் அவளுக்குப் பரிசளித்தனர்.



ஒலிபெருக்கியைக் கையில் வைத்துக்கொண்டு ராஜேஸ்வரி வந்து நின்றார். "இன்னைக்கு உங்களை நான் பிறந்தநாள் விழாவிற்கு மட்டும் அழைக்கல! இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பகிரத்தான் உங்க எல்லாரையும் இங்கே இன்வைட் பண்ணிருக்கேன்..." என முகம் கொள்ளாப் புன்னகையுடன் சொன்னார்.



"என்னோட பொண்ணுக்கும், நான் வளர்த்த என் அண்ணன் பையனுக்கும் கூடிய சீக்கிரமே திருமணம் செய்து வைக்கப் போறோம்" என்றதுமே அங்கே கரகோஷம் எழும்பியது.


"இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்துல என் பொண்ணோட எங்கேஜ்மென்ட் வைக்கலாம்னு முடிவு செய்திருக்கோம். வித்யூவும் என் பொண்ணும் இப்போ மோதிரம் மாத்திக்கப் போறாங்க... வித்யூ வா!" என்று அழைக்க, அவனும் ஈர்க்கும் புன்னகையுடன் அவர் அருகே வந்தான்.


அவனை வெட்கத்துடன் பார்த்திருந்தாள் பிரணவி.

மகளுக்கும் மருமகனுக்கும் நடுவில் நின்றவர், "ராணி" என்று அழைக்க, செல்வராணியும் மோதிரத்தைக் கொண்டு வந்து நீட்டினார். அதை வாங்கியவர், இருவர் கையிலும் கொடுத்தார். முதலில் பிரணவி அவன் விரலில் அணிவித்தாள். அங்கே பலத்த கரகோஷம் எழுந்தது.

பின் வித்யூ அணிவிக்கும் நேரம், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, அனைவரின் கவனமும் அங்கே வந்து நின்ற பிருத்வி - ஆர்யங்கா தம்பதியரின் மேல் திரும்பியது. இருவரும் ஜோடியாகக் கரம் கோர்த்து வருவதைக் கண்ட வித்யூ அதிர்ந்தான்; அவன் கையிலிருந்த மோதிரம் கீழே நழுவியது.

பிருத்வி ஒரு விஷமச் சிரிப்புடன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவர்களை நோக்கி வர, வித்யூவின் முகம் வியர்வையில் குளித்திருந்தது. மற்றவர்களின் முகங்களோ வெறுப்பைக் கக்கிக் கொண்டிருந்தன.



தவறவிட்ட மோதிரம் என்னவோ பிருத்வியின் காலடியில் சரணாகதி அடைந்தது. அதை குனிந்து எடுத்தவன், இதழ்களைக் கேலியாக வளைத்தபடி அவனை நோக்கிச் சென்றான். ஆர்யங்காவின் கைகளை அவன் விடவில்லை.



மோதிரத்தைச் சுழற்றியவன், "என்ன மச்சி! இப்படியா எங்கேஜ்மென்ட் ரிங்கத் தவறவிடுறது? தவற விடுறதே உன் வேலையா போச்சு! இது பொக்கிஷம்னு தெரியலையா உனக்கு?" எனச் சலிப்பாகத் தலையை ஆட்டிவிட்டு மோதிரத்தை அவனிடம் நீட்டினான்.


அவன் பேச்சில் பொதிந்த அர்த்தத்தை உணர்ந்தவன், பற்களை நரநரவெனக் கடித்தபடி வெளியே சிரித்த முகத்துடன் அவன் தந்த மோதிரத்தை வாங்கினான்.


பார்வதியோ "வித்யூ!!! நேரமாகுது வந்து போட்டு விடுப்பா" என அவசரப்படுத்தினார்.


வித்யூவும் எதிரே நிற்கும் பிருத்வியையும், ஆர்யங்காவையும் அழுத்தமாகப் பார்த்துவிட்டுத் தன் இடத்திற்கு வந்தவன், பிரணவியின் விரல் பிடித்து மோதிரத்தை அணிவித்தான். அதை பார்க்கத் திராணியில்லாமல் தலைகுனிந்து நின்றிருந்தாள் ஆர்யங்கா.


பிருத்வி - ஆர்யங்கா ஜோடியைக் கண்டதும் அனைவரின் முகமும் இறுக்கமடைந்தன.


மௌலி பக்கத்தில் நின்றிருந்த அவரது நண்பர் அவரிடம், "உன் மகனுக்குக் கல்யாணமானதையே நீ சொல்லலையே மௌலி! எப்போ ஆச்சு?" எனக் கேட்கவும், பதில் சொல்லத் தடுமாறினார்.



"இனி அடுத்தடுத்து இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடும்" என்று எண்ணியவர், அனைவரின் முன்னிலையில் ராஜேஸ்வரியின் அருகே வந்து அவர் கையில் இருந்த மைக்கை வாங்கினார்.


"குட் ஈவினிங் ஆல்... உங்க அனைவரையும் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இது என் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டும் இல்லை, அவளுடைய எங்கேஜ்மென்ட் டேயும் கூட. இந்தச் சர்ப்ரைஸோட சேர்ந்து உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸும் சொல்லப் போறேன்."



"என்னுடைய மகன் மிஸ்டர் பிருத்வி மௌலிக்கும் என்னுடைய மருமகளான ஆர்யங்காவுக்கும் திருமணம் முடிஞ்சிருச்சு! நீங்க கேட்கலாம், பொண்ணுக்கு கிராண்டா எல்லாம் பண்றீங்க, பையனுக்கு ஏன் பண்ணலைனு? ஹி இஸ் தி மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி. அவனுக்கு இது போல கிராண்டா செய்யறது எதுவும் பிடிக்காது. அவனுடைய திருமணம் மிக எளிமையா தான் முடிஞ்சது."



"அவனது திருமணம் சார்பாகவும், என் பொண்ணுடைய நிச்சயதார்த்தத்திற்கும் சேர்த்து இந்த விருந்து. வந்த அனைவரும் சாப்பிட்டுத்தான் போகணும்... இது என்னுடைய அன்பான வேண்டுகோள்" என்று உரையை முடிக்க மீண்டும் கரகோஷம் எழுந்தது.



மௌலி பிருத்வியைப் பார்க்க, அவனும் தந்தையைக் கண்டு அளவாகப் புன்னகைத்தான். பின் அருகே நின்றிருந்த ஆர்யாவைப் பார்க்க, அவளும் அவனைத் தான் பார்த்தாள். "எல்லாம் நன்மைக்கே" என்பது போலக் கண்களை மூடித் திறந்தான் பிருத்வி மௌலி.

மௌலியைத் தவிர மொத்த குடும்பமும் கோபத்தில் கனன்று கொண்டிருந்தது.


வித்யூவின் பார்வை முழுக்க ஆர்யங்கா மீதுதான் இருந்தது. அவன் பார்வை தன் மீது படிந்திருப்பதை உணர்ந்து வெலவெலத்துப் போனாள் ஆர்யா. உடல் நடுங்க நின்றிருந்தவளின் கைகளை இறுக்கப் பற்றியிருந்தான் பிருத்வி.



"ஆர்யா வா! ஒரு செல்ஃபி எடுக்கலாம்" என்று அவன் அழைக்க, அவளும் மறுக்க முடியாமல் சரியென்று தலையசைத்தாள். மொத்த குடும்பத்தின் முன்னிலையில் அவளது இடையில் கை வைத்து, அவளது இடது கையைத் தன் நெஞ்சில் வைத்துத் தனது அலைபேசி வழியே புகைப்படம் எடுத்தான். பின் அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களும் அவர்களை வளைத்துத் தள்ளினர்.

பின் அவளை அழைத்துக்கொண்டு உணவு இருக்கும் இடத்திற்கு வந்தான் பிருத்வி.



"எனக்கு பசிக்கலை... ரூமுக்கு போகட்டா?!"


"பசியில்லைனு உன் வாய் தான் சொல்லுது. இந்த நேரத்துல சாப்பிடாம தூங்குகிறது நல்லது இல்லை. லைட் ஃபுட் மட்டும் சாப்பிடு!" என்றவன், அவளுக்காக உணவை எடுத்து வந்து கொடுத்தான். தனக்கும் தேவையானதை எடுத்துக்கொண்டு அவள் அருகே வந்தான்.



"ஐயா! உங்களை வித்யூ சார் கூப்பிடுறாங்க" என்று வேலைக்காரன் முருகன் வந்து சொல்ல, சாப்பிடாமல் பதற்றத்துடன் பிருத்வியைப் பார்த்தாள் ஆர்யா!



"ஒன்னுமில்ல! நான் பேசிக்கிறேன்! நீ சாப்பிட்டு ரூமுக்கு போ! ஃபுல்லா சாப்பிட்டுதான் ரூமுக்கு போகணும், புரிஞ்சுதா?" என்றவன், "சாந்திக்கா" என்று அழைத்தான். சாந்திக்கா ஓடி வந்தார்.


"ஆர்யாவைப் பார்த்துக்கோங்க! சாப்பிட்டு முடிச்சதும் ரூம்ல விட்டுடுங்க! இவங்க இனி உங்க பொறுப்பு... நல்லா பார்த்துக்கணும்" என்று கட்டளையிட்டவன், அவளை அழுத்தமாகப் பார்த்துவிட்டுச் சென்றான்.

உணவு இறங்காமல், தவிப்போடு செல்லும் அவனையே பார்த்திருந்தாள் ஆர்யங்கா.
 

Author: ரோசி கஜன்
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
வித்யு ஓட ex ஆ ஆர்யா????
பிருத்வி சொல்றதை பார்த்தா அப்படி தான் தோணுது.....
ஏன் ஆர்யாவை விட்டுட்டான்?????
அது தான் அவளோட sucide கான காரணமா????