குழல் யாசிக்கும் புயலே - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,727
1,147
113
புயல் 5



வான்வெளியில் படர்ந்த நட்சத்திரங்களுக்கு இணையாக, அரண்மனைப் போல் பரந்து கிடந்த அந்தப் பெரும் இல்லத்தில், சின்னஞ்சிறு விளக்குகள் மின்னிக்கொண்டு மொட்டை மாடியைச் சூழ்ந்திருந்த இருளை அகற்றிக் கொண்டிருந்தன.



இரு வீடுகளை இணைக்கும் மையப்பகுதியில் நின்று, இரு கைகளையும் கால்சட்டைப் பைக்குள் நுழைத்தபடி வானை வெறித்துக் கொண்டிருந்தான் வித்யூ.


கீழே மக்களின் சத்தங்களிலிருந்து விடைபெற்றிருந்தது அந்த இடம். அந்த அமைதியிலும் அவனது மனம் மட்டும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அதிலும் பிருத்வியின் செயலை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. குடும்பத்தையே ஏமாற்றிவிட்டான்; ஆனால், பிருத்வியிடம் முடியவில்லை.


இதோ, மறைக்கப்பட்டதை வெளியே கொண்டு வந்துவிட்டான். அதுவும் 'தாலி கட்டி மனைவி' என்ற உறவின் மூலம்!


"ஏன் இவ்வாறு செய்கிறான்?" என்று தெரிந்துகொள்ளத்தான் அவனை அழைத்திருந்தான் வித்யூ.

பிருத்வியின் வருகையை அவனது காலடிச் சத்தத்திலேயே அறிந்து கொண்டவன், மெல்லத் திரும்பினான். பிருத்வியும் அவனருகே வந்து நின்றான்.



இருவரும் சிறுவயதிலிருந்து ஒன்றாக விளையாடிய இடமது. பதின்ம வயது வரை அங்கு அமர்ந்துதான் தங்கள் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இருவரும் பல இரவுகளை அங்கே கழித்ததுண்டு. அவர்கள் அதிகம் இணைந்திருக்கும் ஆஸ்தான இடமும் அதுதான். இப்போதுகூட அந்த இடம் அவர்களை அன்பாகவே வரவேற்றுப் பாசமாக அணைத்தது. ஆனால், அவ்விருவருக்குள்ளும் 'நட்பு' என்ற பசை இல்லாமல் போனது. இருவரும் பிரிவை யாசித்துவிட்டனர் போலும்; எதிரிகளைப் போலவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.



"வெல்! காங்கிராஜுலேஷன் மிஸ்டர் பிருத்வி! கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க போல! எங்க எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கலாமே! நாங்க வந்து சிறப்பா பண்ணி வச்சிருப்போமே! இப்படித் தனியா பண்ணிக்கிற அளவு அப்படி என்ன அவசியம்?"



"என் மேரேஜைச் சிறப்பா பண்ணி வைக்கிற அளவுக்கு இங்க எல்லாருக்கும் மனசு இருக்கா என்ன?" என நக்கலாக வினவ, அவனோ பதில் சொல்லாமல் எங்கோ வெறித்தான்.


முறுவலுடன், "உங்களுக்கும் காங்கிராஜுலேஷன் வித்யூ! என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க! உங்க திருமணத்தை அண்ணனாக முன்னின்று சிறப்பா பண்ணிடுறேன்..." என்றான்.


அவனது முறுவலில் கேலி இருப்பதை உணர்ந்த வித்யூவின் முகம் இறுக்கமானது.



"சிறப்பான முறையிலா? என்னைப்பத்தின உண்மையைச் சொல்லியா? அதுக்குத்தானே ஆர்யங்காவைக் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க! ஆனாப் பாரு, உன்னால என்னை ஒன்னும் செய்ய முடியாது! நீ சொல்ற எதையும் யாரும் இங்க நம்ப மாட்டாங்க! முக்கியமா உன் தங்கச்சி! நீ பக்கத்துல வந்தாலே முகம் சுளிப்பா! இதுல என்னைப் பத்தின உண்மையைச் சொல்லப் போறியா?" என எக்காளமிட்டுச் சிரித்தான்.



அதற்கு அசராமல் இருந்தது பிருத்வியின் மெல்லிய புன்னகை. தன் பேச்சைக் கேட்டு வருந்துவான் என்று எண்ணியவனுக்கு மாறாக, அவனது சிரிப்பே வித்யூவிற்குப் பெரும் குழப்பத்தைத் தந்தது. புருவங்களைச் சுருக்கிப் பிருத்வியைக் கேள்வியாகப் பார்த்தான்.


"மச்சி!!! நீ சொன்னது அப்பட்டமான உண்மைதான். நான் சொன்னால் இங்க யாரும் நம்ப மாட்டாங்க. ஏன், என் தங்கச்சி கூட நான் கிட்ட போனாலே முகம் சுளிப்பவள்! நான் சொன்னதை நம்புவாளா? நிச்சயம் மாட்டாள்! ஏன்னா... ஷி லவ்ஸ் யூ! உன்னை கண்மூடித்தனமா காதலிக்கிறாள்!" என்று அழுத்தமாகச் சொல்ல, வித்யூவின் மனதில் ஊசியால் குத்தியது போல் இருந்தது.



"என் தங்கச்சிகிட்ட உண்மையைச் சொல்லி உன்கிட்ட இருந்து அவளைக் காப்பாத்தணும்ன்ற அவசியம் எனக்கு இல்லை. என்னை மனுஷனாவே மதிக்காத குடும்பத்துக்காக நான் ஏன் நல்லது செய்யணும்? அப்படியே செஞ்சாலும், என்னை நினைத்து அந்த நல்லதை வெறுக்கிற ஆளுங்களுக்காக நான் ஏன் யோசிக்கணும்?"


"அப்புறம் ஏன் ஆர்... ஆர்யங்காவைக் கல்யாணம் பண்ணின? என் குழந்தைக்கு நீ ஏன் இனிஷியல் கொடுக்கப் போற?"


"என்ன பண்ண? சின்ன வயசில இருந்தே நீ பண்ணின தப்பையெல்லாம் நான் தானே சரி பண்ணியிருக்கேன்..." என்றதுமே வித்யூவின் தாடை இறுகியது.



"நான் யாரோட கல்யாணத்தையும் நிறுத்தப்போறது இல்லை. உன் லைஃபை நீ பாரு! என் லைஃபை நான் பார்த்துக்கிறேன்... தட்ஸ் ஆல்!" என்று தோளை அசட்டையாகக் குலுக்கினான்.


"உன்னைப்பத்தின உண்மை அவளுக்குத் தெரியுமா? உன்னை எப்படி கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சா? குழந்தைக்கு இனிஷியல் தர்றேன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டாளா? உன்னால இனிஷியல் மட்டும்தான் கொடுக்க முடியும்னு அவளுக்குத் தெரியுமா? என் முன்னாள் காதலிக்கு உன்னால எந்தச் சந்தோஷத்தையும் கொடுக்க முடியாதுன்ற உண்மையைச் சொல்லிட்டீயா? இல்லை மறைச்சு அவளை ஏமாத்திட்டியா?"



"உன்னைப் போல் ஏமாத்துற புத்தி எனக்குக் கிடையாது மிஸ்டர். எல்லாத்தையும் சொல்லித்தான் அவளை மேரேஜ் பண்ணியிருக்கேன். காதலிச்சு ஏமாத்தினவனை விட நான் எவ்வளவோ பெட்டர்னு என்னோட வந்துட்டா! அவ உன்னுடைய முன்னாள் காதலி என்ற நினைப்பை அகற்றி, என்னோட ஒய்ஃபா பாரு! இனி அதுதான் உனக்கு நல்லது மிஸ்டர்!


ஆஃப்டர் மேரேஜ்... இன்னைக்குத்தான் சேர்ந்து சாப்பிடப் போறோம். அப்புறம் எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் வேற! எனக்காக என் ஒய்ஃப் காத்துட்டு இருப்பா... பாய்! குட் நைட்!" என்று நக்கலாகப் பேசிவிட்டுச் சென்றான்.



மனதை நோகடிக்கக் கூர்மையாகத் தீட்டிய வார்த்தைகளை அவன் வீச, அத்தனையும் புன்னகை என்னும் கவசத்தால் தன்னைத் தாக்காமல் காத்துக்கொண்டான் பிருத்வி.


எய்த வார்த்தைகள் எதுவும் அவனைப் பாதிக்காத கோபத்தில் வித்யூவின் முகம் சிவந்து போயிருந்தது.



ஆனால் ஒவ்வொரு படியாக இறங்கிய பிருத்விக்கும் காயங்கள் உண்டாகவே செய்தன. புன்னகை என்னும் கவசத்தை அணிந்திருந்தாலும், சில வார்த்தைகள் அவனை ரணப்படுத்தின. தளர்ந்த நடையுடன் தனது அறைக்கு வர, அங்கே அவனுக்காகக் காத்திருந்தாள் ஆர்யங்கா.



நீள் இருக்கையில் அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். பெரிய பிரதிபலிப்பு ஏதுமில்லை.



பிருத்வியும் ஆர்யங்காவின் முகத்தை நோக்கினான். அவன் செல்லும்போது இருந்த தவிப்புகூட இப்போது அவளிடம் இல்லை. தனது ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறை சென்று வந்தான்.


"சாப்பிட்டீங்களா?" என அமர்ந்த வாக்கிலேயே கேட்டாள்.


"ம்ம்... சாப்பிட்டேன்," என அவளைப் பாராமல் சொன்னான்.


"நீங்க கீழே வந்தது போலவும் இல்லை, சாப்பிட்டது போலவும் இல்லை. ஏன் பொய் சொல்றீங்க?" எனக் கேட்கவும் அவன் திரும்பினான்.



"பால்கனி வழியா ஊரே தெரியும்போது, இங்கே நடக்கிறது தெரியாதா? வாங்க வந்து சாப்பிடுங்க," என மூடியிருந்த தட்டைத் திறந்து வைத்தாள். அவனுக்காகக் கொண்டு வரப்பட்டதுதான் அது.


"தேங்க்ஸ்," என்று சாப்பிட அமர்ந்தான். அவன் சாப்பிடும் வரை இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.


நீள் இருக்கையில் சாய்ந்த வண்ணம் அவள் தூக்கமில்லாமல் அமர்ந்திருக்க, மெத்தையின் கீழே ஒரு காலை நீட்டி மற்றொரு காலை மடக்கி, அதில் கை வைத்து அவள் புறம் திரும்பிப் பேசினான்.


"நாங்க என்ன பேசிக்கிட்டோம்னு நீ கேட்க மாட்டியா? வித்யூ என்ன சொன்னான்னு நீ கேட்கலையே, ஏன்?"


"வித்யூ என்ன சொல்லி இருந்தாலும் எனக்கான நியாயமோ, என்னை வேண்டாம் என்று சொன்னதற்கான காரணமோ நிச்சயமாக இருந்திருக்காதுன்னு எனக்குத் தெரியும். அதை ஏன் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்?" என்றாள்.


"ஸ்மார்ட்தான்!"


அவனது பாராட்டைக் கேட்டு விரக்தியாகச் சிரித்தவள், "அவனே உலகம்னு நம்பி என் வாழ்க்கையையும் என்னையும் ஒப்படைச்சேன். அந்த கண்மூடித்தனமான காதலுக்குக் கிடைச்ச பரிசுதான் இந்த ஏமாற்றமும் குழந்தையும்... நான் ஸ்மார்ட் இல்லையே! யாருமில்லாதவளுக்கு 'சாப்பிட்டீயா?'ன்ற கேள்வியே போதுமே! அப்படி கேட்கிறவங்க எல்லாரும் நம்ம மேல அன்பு வச்சிருக்காங்கன்னு நினைக்கிறவ நான். அவர் காட்டின காதலில் விழாமல் இருந்தால்தான் ஆச்சரியமே! அதற்குத் தண்டனை இது!" எனத் தன் வயிற்றைத் தடவினாள்.



கண்ணீரோடு அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது அவனுக்கு. "உனக்கு என்னால நியாயம் வாங்கிக் கொடுக்க முடியுமான்னு தெரியாது! ஆனா நிச்சயம் உனக்கும் உன் குழந்தைக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சுத் தர முடியும்."


அதற்கும் விரக்தியாகச் சிரித்தவள், "உங்க தங்கச்சி வாழ்க்கையைக் காப்பாத்தத்தானே சார் இந்த டீலிங்! உங்க தங்கச்சி வாழ்க்கை உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, என் குழந்தை எதிர்காலம் வரை நீங்க பேரம் பேசுறீங்க," என்றாள். 'தங்கை வாழ்க்கையைக் காப்பாற்றத்தானே என்னை அழைத்து வந்தாய், எனக்கான நியாயம் கேட்க இல்லையே' என்ற ஆதங்கம் அவளுக்குள் இருக்கவே செய்தது.



"ஆஃப்கோர்ஸ்... எனக்கு என் தங்கச்சி வாழ்க்கைதான் முக்கியம்! அதுக்காகத்தான் இந்த டீலிங்! பட், அவனைப் போல உன்னை ஏமாத்த மாட்டேன். நான் சொன்னது சொன்னதுதான்... உங்க ஃபியூச்சருக்கு நான் கேரண்டி," என்றான்.


"ம்ம்..." என்றதோடு படுத்துக்கொண்டாள். அவனும் அமளியில் சாய்ந்தான். விளக்குகள் அணைந்தன. அவளது வாழ்க்கையைப் போலவே அங்கேயும் இருள் சூழ்ந்திருந்தது.


பிரணவியின் அறையில் குடும்பமே சூழ்ந்து அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தது.


"ஏண்டி இப்படி அடம் பிடிக்கிற? கொஞ்சம் சாப்பிடுடி," என அமிர்தா கெஞ்சிக் கொண்டிருந்தார்.


"எனக்குத்தான் வேண்டாம்னு சொல்றேனே சித்தி! ஏன் என்னைத் தொந்தரவு செய்றீங்க?"


"மதியம் சாப்பிட்டதுமா! எதுவுமே சாப்பிடாம தூங்கினா உடம்புக்கு என்ன ஆகும்?"


"எனக்கு என்ன ஆனா என்ன? இங்கே யாருக்கும் என் மேல அக்கறை இல்லையே!"


"உன் மேல அக்கறை இல்லையா எங்களுக்கு? உன்னை இங்கே ராணியாத்தானே பார்த்துக்கிறோம். வீட்டுக்கு முதல் பெண் வாரிசு நீ, அதுவும் ஒரே பெண்! உன்னை எவ்வளவு செல்லமா வளர்த்திருக்கோம், நீ என்னமா இப்படிப் பேசுற?"


"என்னைச் செல்லமா பார்த்து என்ன பிரயோஜனம்! என்னோட ஃபங்க்ஷன்ல கூட என்னால முழுமையா சந்தோஷப்பட முடியல! எவ்வளவு ஆசையும், கற்பனையும், கனவுமா இருந்தேன் தெரியுமா? எல்லாத்தையும் ஒரு நொடியில வந்து அழிச்சுட்டான் அந்த ராஸ்கல்!" என்று பற்களை நறநறவெனக் கடித்தாள்.



"அவன் வந்ததுக்கு நாங்க என்னமா பண்றது?"


"அவனை யாராலயும் தடுக்க முடியலேல! அவன் தான் ஹீரோவாகிட்டுப் போயிட்டானே... அவனை ஏன் யாரும் தடுக்கல? அவனை ஏன் ஃபங்க்ஷன்ல கலந்துக்க விட்டீங்க?" எனச் சிறு குழந்தையைப் போல அடம்பிடித்தாள்.



"உங்க அண்ணன்மா அவன்! அவன் இல்லாம ஃபங்க்ஷன் வச்சா வர்றவங்க கண்டிப்பா கேட்பாங்கமா."


"அவன் எனக்கு அண்ணனே இல்லை... இனி அப்படிச் சொல்லாதீங்க சித்தி!"


"பிரணவி!" என அமிர்தா அதட்டவும்,


"அவள் சொல்றது சரிதான். எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணுதான். அதுவும் பிரணவி மட்டும்தான்," என்று எங்கோ வெறித்தபடி சொன்னார் ராஜேஸ்வரி.



"அக்கா! அது தப்பு! பிருத்வி என்ன பண்ணான்? ஏன் அவனை எல்லாரும் இப்படி ஒதுக்கி வைக்கிறீங்க? அவனை ஊரே கொண்டாடும்போது, இந்த குடும்பம் மட்டும் ஏன் அவனைத் தள்ளி வைக்குது? அவன் மேல அவ்வளவு அன்பைக் காட்டி வளர்த்ததெல்லாம் மறந்துட்டீங்களா?"


"வீட்டுக்கு முதல் வாரிசுன்னு தூக்கி வச்சுக் கொண்டாடுனதெல்லாம் மறந்து போச்சா? அவனை அவ்வளவு பெருமையாச் சொல்வியே அக்கா! பெத்த பிள்ளையே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அவன் என்னதான் பண்ணான்?"


"அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு எங்களை அசிங்கப்படுத்திட்டானே! இந்த வீட்டு மானத்தையே வாங்கிட்டானே! இப்போ இருக்கிறது என் மகன் இல்லை... என் பிருத்வி இப்போ செத்துட்டான்!" என்று ஆவேசமாகக் கூறிவிட்டு விறுவிறுவெனத் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.


தாயின் பேச்சில் நிம்மதி அடைந்தவள், அமிர்தாவின் கையிலிருந்த தட்டை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள்.


அமிர்தாவோ புரியாமல் அக்கா மகளைப் பார்க்க, செல்வராணியோ பிரணவியின் செயலுக்குப் பின்னாலுள்ள அர்த்தத்தைக் கண்டு வஞ்சகமாக உள்ளுக்குள் புன்னகைத்துக்கொண்டார்
 

Author: ரோசி கஜன்
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அட ச்சைக் இது என்ன இப்படி ஒரு அம்மா & தங்கை.....
இவளோ சுயநலமா பிரணவிக்கு?????
இந்த ராணி வேற எதுக்கு இப்படி சிரிக்குது????
வித்யு🤬🤬🤬🤬🤬🤬