குழல் யாசிக்கும் புயலே - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,727
1,147
113
புயல் 6


மறுநாள் தொடக்கத்தில் அவ்வில்லம் காலைப் பரபரப்பைக் கொண்டிருந்தது. அலங்காரத் தோரணைகளையெல்லாம் அகற்றிக் கொண்டிருந்தனர்.


ஆர்யங்கா அப்போதுதான் கண் விழித்தாள். கண்ணாடி முன்னே நின்று அலுவலகம் செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தான் பிருத்வி.

கழுத்தைத் திருப்பி மணியைப் பார்த்தாள். ஒன்பது எனக் காட்டியது. எழுந்து அமர்ந்தாள்.



"குட் மார்னிங்."


"குட் மார்னிங்" என்றாள்.



"ஃப்ரெஷ் ஆகிட்டு வா! காபி கொண்டு வரச் சொல்றேன். வேற எதுவும் வேணுமா காபியோட சாப்பிட?"


"இல்ல, காபி மட்டும் போதும்" என்றவள் குளியலறைக்குள் புகுந்தாள்.


காலைக் கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்த நேரம், அவளுக்காக ஆவி பறக்கக் காபி இருந்தது. அதை மெல்லச் சுவைத்து ரசித்துப் பருகினாள்.


ஆர்யங்காவிற்கு அந்தக் காபியின் சுவை பிடித்துவிட்டதென அவளது முகபாவனையில் அறிந்துகொண்டவன், புன்னகையுடன்,

"சாந்தி அக்கா மேக்... செம்மையா இருக்கும்..."

அவளும் இதழ் விரிக்காமல் சிரித்தாள்.


அவளருகே வந்து நின்றான். அவளும் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

"நேரமாச்சு, நான் ஃபேக்டரிக்குப் போயே ஆகணும். சாந்தி அக்கா நம்பரை நோட்ஸ்ல எழுதி வச்சிருக்கேன். உனக்கு என்ன வேணுமோ, என்ன சாப்பிடணுமோ தயக்கப்படாம சாந்தி அக்காக்கு கால் பண்ணிச் சொல்லு. அவங்க செஞ்சு கொண்டு வருவாங்க. கீழ இறங்க வேணாம். யாரு என்ன கூப்பிட்டாலும் கீழ மட்டும் இறங்க வேணாம்.

ரூம்லயே இரு! இங்க எல்லாமே இருக்கு. உனக்கு என்ன பண்ணணும்னு தோணுதோ பண்ணு. கீழ மட்டும் இறங்காதே! உனக்கு புரியும்னு நினைக்கிறேன்" என்க,


அவளும் புரிந்தது போலத் தலையசைத்தவள், சட்டென வாயைப் பொத்திக்கொண்டு குளியலறைக்குள் ஓடினாள்.



இவனும் பதறிக்கொண்டு குளியலறை வாசலில் நின்றான். குடித்த காபியை வாந்தி எடுத்திருந்தாள். வாயைக் கழுவிவிட்டுச் சோர்வாக வெளியே வந்தாள்.


"என்னாச்சு? ஹாஸ்பிடல் போலாமா?" என அவன் அக்கறையாகத்தான் வினவினான்.


ஆனால், அதில் உண்மையான அக்கறை இல்லை என்று அவளுக்கு விளங்க, கசந்த புன்னகையுடன், "மார்னிங் சிக்னஸ்தான். இந்த டைம்ல அப்படித்தான் இருக்கும். எனக்கு ஒண்ணுமில்லை" என்று சமாளித்தாள்.


"ஓகே! டாக்டரை கன்சல்ட் பண்ணிட்டு டேப்லெட் வாங்கிட்டு வரலாம் வா!"



"இல்ல, டேப்லெட் அடிக்கடி போட வேண்டாம். ஒரு லெமன் ஜூஸ் குடிச்சா சரியாகிடும். இந்த மாசம் மட்டும் அப்படித்தான் இருக்கும், அடுத்த மாசம் சரியாகிடும்... நீங்க ஃபேக்டரிக்குப் போகணும் போங்க...! நான் என்னைப் பார்த்துக்கிறேன்" என்று சோர்வாகச் சோபாவில் சாய்ந்தாள்.


அவனுக்கும் அவளது கஷ்டம் புரிந்தது. பிரணவியை வயிற்றில் சுமந்த நேரம் தாயின் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவனல்லவா! எதைக் கொடுத்தாலும் வாந்தி எடுத்துச் சோர்வாகப் படுத்துக்கொள்வார் ராஜேஸ்வரி. அவர் கையைப் பிடித்துக்கொண்டு அருகே நின்ற காலமெல்லாம் நினைவிற்கு வந்து அவனைத் தாக்கியது.


"ஓகே! ஹெல்த்தைப் பார்த்துக்கோ! டைமுக்குச் சாப்பிடு! ஸ்கிப் பண்ணாத! எதையும் யோசிச்சுட்டு இருக்காத! இங்க நிறைய புக்ஸ் இருக்கு படி! நான் வர்றேன்" என்று செல்ல இருந்தவனை,


"நீங்க சாப்பிடல?"


புன்னகையுடன், "கீழ எனக்காகச் சாந்தி அக்கா பிரிப்பேர் பண்ணிருப்பாங்க, சாப்பிட்டுதான் போவேன். டேக் கேர்" என்று வெளியே சென்றுவிட்டான்.



அவன் இறங்கி வரும் நேரம் கூடத்தில் யாருமில்லை. உணவு மேசையில் தனியாளாக அமர்ந்தான். அவனுக்காக காலை உணவு எடுத்து வைத்தார் சாந்தி.



பிருத்விக்காகப் பிரத்யேகமாகச் சமைக்க வேலைக்கு அமர்த்தப்பட்டவர் தான் சாந்தி. தாய் அருகே நின்று பரிமாறுவது போல, அவனுக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் பரிமாறுவார் சாந்தி அக்கா! அவனுக்கும் அவரது சமையல் என்றால் உயிர். ரசித்து ருசித்துச் சாப்பிடுவான்.


"அக்கா! உங்க போன் நம்பரை ஆர்யா கிட்ட கொடுத்திருக்கேன். அவ என்ன கேட்டாலும் செஞ்சு கொடுக்கணும். பிளஸ் உங்களுக்கு ஒரு ஃபுட் சார்ட் அனுப்பியிருக்கேன், அதுபடி அவளுக்குச் சமைச்சுக் கொடுங்க... சாப்பிடாம ஸ்கிப் பண்ணா எனக்கு கால் பண்ணுங்க! அவளைக் கீழ இறங்காம பார்த்துக்கங்க. மார்னிங் குடிச்ச காபியை வாமிட் பண்ணிட்டா! இப்ப ஒரு லெமன் ஜூஸ் கொடுங்க! எமர்ஜென்சின்னா எனக்கு கால் பண்ணுங்க" என்றான்.


அவரும், "சரிப்பா, நான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன்" என்றவர் அதிகம் பேசாமல் லெமன் ஜூஸ் தயாரிக்க உள்ளே சென்றார். இவனும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.


இவரும் ஜூஸை எடுத்துக்கொண்டு மாடியேறினார். அங்குச் சோர்வாகப் படுத்திருந்தாள் ஆர்யங்கா!


"என்னம்மா, உடம்புக்கு எதுவும் முடியலையா? தம்பிகிட்ட சொன்னீங்களா இல்லையா? நான் வேணா போன் பண்ணிச் சொல்லட்டுமாம்மா?"


"வேணாம் அக்கா! அவருக்குத் தெரியும்... அவர் ஹாஸ்பிடலுக்குக் கூப்பிட்டார், நான் தான் மறுத்துட்டேன். கொஞ்சம் நேரத்துல சரியாகிடுவேன்" என்றவள் அவர் கொடுத்த எலுமிச்சைச் சாற்றைப் பருகினாள்.


கொஞ்சம் தெம்பாக இருப்பது போல இருந்தது. "காலையில உங்களுக்கு என்ன கொண்டு வரட்டும்மா?"


"எல்லாருக்கும் என்ன செய்வீங்களோ அதையே எனக்கும் கொண்டு வாங்க அக்கா!"


"இல்லம்மா! நான் அவங்களுக்குச் சமைக்க மாட்டேன். அவங்களுக்கு வேற ஆள் இருக்கு. உங்களுக்கும் தம்பிக்கும் சமைக்க மட்டும்தான் நான்..." என்று சொல்ல, அவளோ அதிர்ந்து பார்த்தாள்.


"தனித்தனி சமையல் ஆட்களா அக்கா? யார் போட்ட கட்டளை இது?"


"மௌலி ஐயாதான்! யாருமே சின்ன ஐயாவை 'சாப்பிட்டியா'ன்னு கேட்க மாட்டாங்க பாப்பா! அவருக்குப் பிடிச்ச சமையலை யாரும் இங்க செய்ய மாட்டாங்க... பெரிய பாப்பா சொல்றதைத்தான் சமைக்கணும்னு கட்டளை வேற! அவரே வந்து இது வேணும்னு கேட்டால், பெரியம்மாவைக் கேட்டுத்தான் செய்யணும்னு சொல்லுவாங்க... இதனாலயே சின்ன ஐயா இங்க சாப்பிடுறதை நிறுத்திட்டார். அதைத் தெரிஞ்சுக்கிட்ட பெரிய ஐயா, என்னைச் சின்ன ஐயாவுக்குச் சமைக்க வேலைக்குச் சேர்த்திருக்கார். நானும் அவருக்கு மட்டும் மூணு வேளையும் சமைச்சுக் கொடுப்பேன்ம்மா. .எனக்குப் போன் பண்ணிச் சொல்லிடுவார்... சாப்பாடு வேணும், வேணாம், என்ன சமைக்கணும்னு எல்லாத்தையும் மறக்காம சொல்லிடுவார்ம்மா! இப்போ உங்களுக்குச் சேர்த்துப் பார்த்துக்கச் சொல்லி இருக்கார்ம்மா! உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க செய்றேன்" என்றார்.

அவர் சொல்லியதைக் கேட்டு மலைப்பாக இருந்தது.


"இரண்டு இட்லி போதும் அக்கா" என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் முடித்துக்கொண்டாள். அவரும் கீழே சென்று விட்டார்.


சாந்தி அக்கா இட்லியை எடுத்து வருவதற்குள் குளித்துவிட்டு வரலாம் என்று எண்ணியவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.


சாந்தியும் ஆர்யங்காவிற்கு இட்லி ஊற்றி அடுப்பில் வைத்துச் சட்னி தயாரித்து, பின் பிருத்விக்குச் செய்து வைத்திருந்த சப்பாத்தி குருமாவைக் கொஞ்சம் எடுத்துத் தட்டில் வைத்தார்.



ஆர்யங்காவும் குளித்து முடித்து வந்து தலையை உலர்த்தியவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. சாந்தி அக்காவிற்காகக் காத்திருந்தாள்.


வேகவைத்த மூன்று இட்லிகளைத் தட்டில் வைத்துக்கொண்டு, குருமா, சட்னியைச் சிறு கிண்ணங்களில் வைத்து மூடியபடி எடுத்துக்கொண்டு மாடியேறப் போனவரைத் தடுத்தார் ராஜேஸ்வரி.


"யாருக்கு டிபன் கொண்டு போற சாந்தி?"


"அது வந்தும்மா... ஆர்யா பாப்பாக்குதான்" என அவர் தயங்கிச் சொல்லவும், அனைவரும் அங்கு கூடவும் சரியாக இருந்தது.


"முருகன்!" என்று அழைக்க, அவரும் குடுகுடுவென ஓடி வந்தார்.


"டிபன் ஆச்சா?"


"ஆச்சும்மா."


"அதெல்லாத்தையும் வேலைக்காரங்ககிட்ட எடுத்துட்டுப் போய் கொடு!" என்று கட்டளையிட, குழம்பிப் போனான் முருகன்.


அவனோடு சேர்த்து அனைவரும் குழப்பத்தில்தான் இருந்தனர்.


"அம்மா அப்போ காலையில...?" எனத் தலையைச் சொறிந்தபடி கேட்டார்.


"சாந்தி, அதை வச்சிட்டுப் போய் அவளைக் கூட்டிட்டு வா" என்றார்.



"அம்மா! அது வந்து..." எனச் சாந்தி தயங்க,


"உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னேன்" எனக் கர்ஜித்தார்.


கையில் இருந்த உணவுத் தட்டை மேசையில் வைத்துவிட்டு வேகமாக மாடியேறினார் சாந்தி.


அலைபேசியைப் பார்த்தபடி இருந்தவள், கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் வேகமாக நிமிர்ந்து பார்த்தாள். சாந்தி அக்காதான் கைகளைப் பிசைந்துகொண்டு வந்து நின்றார்.



"என்னக்கா?" என்றவளின் பார்வை அவரது வெறும் கையில்தான் இருந்தது.


"பசிக்குது அக்கா, டிபன் எங்க?"


"பாப்பா..." என்றவர் தயங்கி, "பாப்பா! உன்னைப் பெரியம்மா கீழ கூப்பிடுறாங்க!" என்றதும் இவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.



"என்னையா? எதுக்கு?" என்றவளுக்கு ஏசி அறையிலும் வியர்த்தது.


"தெரியலைம்மா "


"ஆனா பிருத்வி என்னை கீழ போகக் கூடாதுனு சொல்லியிருக்காரே! நான் எப்படி கீழ இறங்குறது?"



"என்கிட்டயும் சொல்லியிருக்கார்ம்மா! இருங்க தம்பிக்கு போன் பண்றேன்" என்று அவனுக்கு அழைத்தார்.

அவனோ மீட்டிங்கில் இருந்ததால் எடுக்கவில்லை.


"எடுக்கலைம்மா" என்று உதட்டைப் பிதுக்க, இவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.


கீழிருந்து "சாந்தி" என்று செல்வராணி அழைக்க,


"கூப்பிடுறாங்கம்மா."



"சரி வாங்க போலாம்" என்று மனதைத் தேற்றிக்கொண்டு அவருடன் கீழே இறங்கினாள்.


கூடத்தின் நடுவே கம்பீரமாக ராஜேஸ்வரி அமர்ந்திருக்க, பக்கவாட்டில் செல்வராணியும் அமிர்தாவும் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னே வந்து நின்ற ஆர்யாவை மூவரும் அளவெடுத்தனர்.



"மகாராணி கீழ இறங்கி வரமாட்டீங்களா? உங்களுக்கு டிபன், லஞ்ச் எல்லாம் மேலேதான் கொண்டு வந்து கொடுக்கணுமா?" எனச் செல்வராணி கேட்கவும்,



"இல்லைங்கம்மா, தம்பிதான்..." எனச் சாந்தி இழுக்கவும், "நீ பேசாத! உன்கிட்ட நாங்க எதுவும் கேட்கல" என்று அவரது வாயை அடைத்தார் ராஜேஸ்வரி.



"ம்ம்... சொல்லு உன்னைப் பத்தி? நீ யாரு? எங்கிருந்து வர்ற? உனக்கும் பிருத்விக்கும் எப்படிப் பழக்கம் உண்டாச்சு? உங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க?"



"எனக்கு யாரும் இல்லை, நான் ஒரு அனாதை! எனக்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுத்தது பிருத்விதான். அவரைத் தவிர எனக்குனு வேற யாருமில்லை" என்றாள் பயத்துடன்.



அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். கண்ணைப் பறிக்கும் சல்வார் இல்லை; மிடில் கிளாஸ் பெண்கள் அணியும் சாதாரண சல்வார்தான். காதில் சிறிதாய் ஜிமிக்கி! கைகள் வெறுமையாக இருந்தன. மஞ்சள் நிறத்தில் தாலி மின்னியது.


"மௌலி வீட்டு மருமகள்" என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் வீட்டிலேயே வேலை செய்யும் பணிப்பெண் என்றால் கூட ஓரளவுக்கு நம்புவார்கள். இப்போது அங்கே அவர்களுக்கு மத்தியில் பேச்சற்று நின்றாள்.


"போ... எங்க எல்லாருக்கும் டிபன் ரெடி பண்ணு!" என அசட்டையாகக் கட்டளையிட, ஆடிப் போனாள் ஆர்யா!

"நா... நானா?" எனத் திக்கித் திணறித் கேட்டாள்.


"நீதான்! உனக்குச் சமைக்கத் தெரியும்தானே?" என்று வினவ, நாலு பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள்.


"போ, போய் சமை! முருகன், மார்னிங் டிபன் என்ன செய்யச் சொன்னோமோ அதைச் சொல்லிடு!"


"சரிங்கம்மா" என்றவர் அவளை அழைத்துக் கொண்டு சமையலறைக்குள் போனான்.


சாந்தியும் உதவ உள்ளே செல்ல இருந்தவரைத் தடுத்த ராஜேஸ்வரி, "நீ அந்த இட்லியைச் சாப்பிடு" என்றார்.


"அம்மா! அது..."


"எங்களுக்கு முன்னாடி சாப்பிடுறதால ஒண்ணுமில்லை" என்றார் இதழ் விரிக்காத புன்னகையோடு.


அவரும் தவிப்புடன் அந்த இட்லியைச் சாப்பிட்டார்.


"முத்து...!" என்றழைக்க, அடுத்த நிமிடமே அவனும் "அம்மா" என்று ஓடி வந்தான்.


"பார்வதி அண்ணிகிட்ட சொல்லி டிபனுக்கு எல்லாரையும் இங்க வரச் சொல்லிடு" என்று கட்டளையிட, செல்வராணியோ வஞ்சகமாகச் சமையலறைப் பக்கம் பார்த்துச் சிரித்தார்.


"பாப்பா! நான் வேணா உதவி செய்யட்டுமா?" என முருகன் கேட்க, புன்னகைத்தபடி "நான் பார்த்துக்கிறேன் அண்ணா" என்றவள் சமைக்க ஆரம்பித்தாள்.


வெறும் வயிற்றோடு சமைத்தாள்.

தாளிப்பு வாசனை அவளுக்குச் சேரவில்லை, குமட்டியது. மூக்கை மூடிக்கொண்டு செய்தாள். முருகன் அவளை வித்தியாசமாகப் பார்த்தார்.



ஒரு மணி நேரத்தில் அவர்கள் கேட்டதைச் செய்தவளுக்கு அயர்ச்சியாக இருந்தது.

சாப்பிடாததால் மயக்கம் வேறு வந்தது. தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அனைத்தையும் முருகன் உதவியுடன் எடுத்து வைத்தாள்.



அதே நேரம் பார்வதியும் வித்யூவும் அங்கு வந்தனர். மேகனும் மௌலியும் ஃபேக்டரி சென்றுவிட்டார்கள். இவர்கள் மட்டுமே இருந்தனர்.



நீண்ட உணவு மேசையில் ராஜேஸ்வரி நடுநாயகமாக அமர்ந்திருக்க, அவளருகில் ஒரு பக்கம் அமிர்தா, அவர் பக்கத்தில் அனுபல்லவியும், மறுபக்கம் செல்வராணி, அவர் பக்கத்தில் பிரணவியும் அமர்ந்திருந்தனர். ருத்விக் அங்கே இல்லை; அவன் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கிறான்.


பார்வதியும் அவர் பெற்ற செல்வங்களும் அவருடன் வந்தனர்! அதுவரை சிரிப்புடன் வந்த வித்யூ, அங்கே நின்றிருந்த ஆர்யாவைக் கண்டதும் சிரிப்பு மறைந்தது. முகம் இறுகப் பிரணவி அருகே அமர்ந்தான்.



"குட் மார்னிங் அத்தான்" என முகம் கொள்ளாப் புன்னகையுடன் சொன்னாள் பிரணவி.


"குட் மார்னிங் நவி! என்ன ரொம்ப அழகா இருக்க! இப்பெல்லாம் குளிக்க ஆரம்பிச்சிட்டியா என்ன?" என அவளைக் கலாய்க்க,


"அ...த்...தா...ன்!" என்று பல்லைக் கடிக்க, "ஜஸ்ட் கிட்டிங் டி நவி!" என்று இடிக்க, "மக்கூம்..." என முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இதையெல்லாம் கண்டும் காணாமல் நின்றாள் ஆர்யங்கா.


"என்ன பார்த்துட்டு நிக்கிற? பரிமாறு" என்றார் ராஜேஸ்வரி. அவளும் கண்களை மூடித் தன்னைச் சமன் செய்துகொண்டு முருகன் உதவியுடன் பரிமாறினாள்.


தயங்கியபடியே வித்யூ அருகே வர, அவனோ எழுந்து செல்லலாம் என்று நினைக்கையில், "இங்க கொடு! நான் என் அத்தானுக்குப் பரிமாறுறேன்" என்று கைகளை நீட்டினாள் பிரணவி. அவளும் ஆசுவாசத்துடன் கொடுத்தாள்.


"சமையல் யாரு ராஜி? டேஸ்ட் நல்லா இருக்கே!" எனப் பார்வதி கேட்க,

ராஜேஸ்வரியோ நக்கலாக, "புதுசா வந்த வேலைக்காரி சமைச்சதுதான்" என்றார்.


உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியிருந்தாள் ஆர்யா. அனைவரும் அவளைக் கேலியாகப் பார்த்தனர். அமிர்தா, அனுபல்லவியைத் தவிர, வித்யூ 'உனக்கு இது தேவைதான்' என்பது போலப் பார்த்தான்.



"அக்கா..." என அமிர்தா ஏதோ சொல்ல வர, "சாப்பிடு அமிர்தா!" என்று முடித்துக்கொண்டார் ராஜேஸ்வரி.


"ஏய்! என்ன பார்த்துட்டு நிக்கிற? இதை எடுத்து வை!" என்று செல்வராணி அழைக்க, இரண்டடி எடுத்து வைத்தவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.


பதறிப்போன சாந்தி வேகமாக அவளை மடியில் தாங்கி கன்னத்தைத் தட்டினார். முருகன் தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளிக்க, யாரும் அசையவில்லை. அமர்ந்த இடத்திலிருந்தே என்னவென்று பார்த்தனர். அதுதான் அவர்களது கருணை!


மருத்துவரான அமிர்தாவால் பார்க்க முடியவில்லை. வேகமாக வந்து அவளது கையைப் பிடித்துப் பரிசோதிக்க, அதிர்ந்து போனார்.

வித்யூ கண்களை மூடித்திறந்தான்.


"அக்கா! இந்தப் பொண்ணு பிரெக்னன்ட்டா இருக்கா!" என்றதுமே மொத்த குடும்பமும் அதிர்ந்து எழுந்து நின்றது.
 

Author: ரோசி கஜன்
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அட கொலகாரா குடும்பமா இருக்கு....
ஏன் அவனே தான் ஆகலையே அப்பறம் அவன் மனைவி எப்படி இருந்தா என்ன????
டேய் பிருத்வி இப்ப பாரு.....