மேதினூர்:
வி.என். மருத்துவமனை:
மலைச் சரிவின் பாதத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது அந்த மருத்துவமனை. அதிகாலைச் சூரியனின் இளங்கதிர்கள் பட்டு, கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் வைரக் கற்களாய் மின்னிக்கொண்டிருந்தது.
மலையிலிருந்து மெல்ல இறங்கி வரும் பனிமூட்டம், ஒரு மெல்லிய வெண்பட்டுத் துணி போல மருத்துவமனையின் தரைத்தளம் வரை மெல்லியதாக படர்ந்து கிடந்தது.
சுற்றியிருந்த அடர்ந்த மரங்களிலிருந்து விழித்துக் கொண்ட பறவைகளின் சத்தம், அந்தப் பள்ளத்தாக்கின் அமைதியைக் கலைத்துக் கொண்டும், மலையிலிருந்து வீசிய ஜில்லிட்ட காற்றானது, அங்கிருந்த மூலிகைச் செடிகளின் மணத்தைச் சுமந்து வந்து, மருத்துவமனையின் வளாகம் முழுவதும் ஒரு புதுவிதமான புத்துணர்ச்சியைப் பரப்ப மறக்கவில்லை.
அவ்வப்போது எழும் செவிலியர்களின் காலடிச் சத்தமும், மருத்துவமனை வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் தண்ணீரின் சத்தமும் அந்த விடியலை மேலும் சுறுசுறுப்பாக்கியது.
பச்சைப்பசேல் என்ற மலைப் பின்னணியில், இருக்கின்ற அந்த வெண்ணிறக் கட்டிடம் சுற்றியிருக்கும் அத்தனை மக்களின் நம்பிக்கையின் அடையாளமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்க, நான் போய் மேடமை கூப்பிட்டு வருகிறேனென்று மருத்துவமனையின் சீருடையை போட்டிருந்த நர்ஸ் ஒருத்தி இன்னொரு நர்ஸிடம் சொல்லிக்கொண்டு வேகமாக போனாள்.
மகப்பேறு மருத்துவர் நந்தினி வேலன் அறை:
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த நர்ஸ், "மேடம், அந்த ஆறாம் நம்பர் பேஷண்டிற்குப் பெயின் வந்துவிட்டது," என்று சொல்லவும், கையிலிருந்த புத்தகத்தை மூடி டேபிளில் வைத்தபடியே எழுந்தவர், "ஹ்ம்," என்றவாறு வெளியே போனார்.
கடந்த ஐம்பது வருடத்தில் எத்தனையோ சிக்கலான பிரசவ கேஸ்களைப் பார்த்துவிட்டாலும், வழமை போல இந்தக் குழந்தையும் தாயும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தனது இஷ்ட தெய்வமான செந்தூர் முருகனை வேண்டியபடி ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றவர், அங்கே வலியில் கத்திக்கொண்டிருப்பவளைப் பார்த்ததும், எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்தில் டெலிவரி ஆகிவிடும் என்பது மருத்துவராக அவருக்கு புரிந்தது.
நேரம் கடந்து கொண்டிருக்க...
மருத்துவமனை வார்டின் ஜன்னல் வழியாக மலைக்காற்று ஜில்லென்று வீசிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த இரண்டாவது மாடியிலிருக்கும் வராண்டாவில் குட்டி போட்ட பூனைப் போலக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே, நொடிக்கொரு தரம் ஆப்ரேஷன் தியேட்டர் என்ற போர்டை தாங்கிக் கொண்டு பூட்டியிருக்கும் கதவைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு உடல் முழுக்க வியர்த்து கொட்டியது.
தற்போது அவனின் மனநிலையை விவரிக்க வார்த்தையில்லை.
அங்கே சேரில் உட்கார்ந்திருந்த ராஜவேல், தனது மனைவி பானுமதியின் கையின் மேல் தட்டிக்கொடுத்தவாறு நடந்து கொண்டிருக்கும் பேரனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மணி-வள்ளி தம்பதியினரோ, தங்களது மகளுக்கு நல்ல முறையில் பிரசவம் ஆக வேண்டுமென்று குலதெய்வமான பேச்சியிடம் மானசீகமாக வேண்டியபடி சற்று தள்ளி உட்கார்ந்திருந்தனர்
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வானமோ திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து இடியோடு மழையைப் பொழிய, "விருமாண்டி!" என்ற அலறல் சத்தத்தோடு, வீலென்ற குழந்தையின் சத்தமும் இடியை மீறி அங்கிருந்தவர்களுக்குக் கேட்டது.
"கடவுளே!" என்றவாறு தனது கைகளை மேலே தூக்கிய பானுமதி, "எல்லாம் உன் சித்தம்!" என்றார்.
இவ்வளவு நேரம் ஏதோ ஓர் அலைப்புறுதலோடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவனோ, சற்று முன்னர் கேட்ட சத்தங்களில் ஆணியடித்தது போல அப்படியே நின்றுவிட்டான்.
"ஏய் வள்ளி , பேச்சி புண்ணியத்தில் நம்ம பிள்ளைக்குப் பிரசவம் ஆகிடுச்சுடி!" என்னும்போது மணியின் கண்களிலிருந்து சந்தோஷமோ துக்கமோ அவர் மனம் மட்டுமே அறிந்தபடி கண்ணீர் வழிந்தோடியது.
சுவரில் சாய்ந்து கண்ணை மூடி உட்கார்ந்திருந்த வள்ளியோ, கணவர் சொன்னதைக் கேட்டு வேகமாக எழுந்து தனது முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
பின்னர் பக்கத்தில் இருந்த பையிலிருந்து ஒரு கவரை எடுத்துத் திறக்க, அதில் பளபளவென்று மயில் நிறத்தில் புத்தம் புதிய பட்டுச் சால்வை இருந்தது. மனைவியின் செயல்களைப் பார்த்த மணி, பின்னர் அங்கிருந்த ராஜவேல்-பானுமதி தம்பதியரைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு அமைதியாக நின்றார்.
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க, அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பரபரப்போடு பார்க்க, கையில் குழந்தையோடு வெளியே வந்த டாக்டர் நந்தினியோ எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "வாங்கள்," என்று அங்கே நிற்கும் மணியிடம் தலையசைத்தார்.
அவரோ மற்றவர்களைப் பார்க்க, "என்னோட குழந்தையை எங்க அப்பாவுடைய கையில் கொடுக்கணும்னு உங்களோட பொண்ணுதான் சொன்னாள்," என்றார்.
அதைக் கேட்ட மணிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. பின்னர் திரும்பித் தனது மனைவியின் கையில் இருந்த பட்டுத் துணியை வாங்கி விரித்தவர், இரண்டு கைகளையும் நீட்டியபடி டாக்டரிடம் செல்ல, அவரும் தனது கையிலிருந்த குழந்தையை அவரிடம் கொடுத்தார்.
தனது பேரப்பிள்ளையைப் பார்த்த மணியோ, "ஆத்தாவா?" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே நெஞ்சில் சாய்த்துக்கொள்ளும்போது, இப்போது சந்தோஷத்தில் அழுகை கரைபுரண்டு ஓடியது.
"அண்ணா, பேத்தி பிறந்திருக்கிறாள்!" என்று அங்கு நிற்கும் ராஜவேலிடம் சொல்ல, "அப்படியா!" என்று அவர்களும் சந்தோஷப்பட்டனர்.
"ஐயா, பிள்ளைய என் கிட்ட கொடுங்க!" என்று வேகமாக வந்த வள்ளியோ தனது கணவரின் முன்பு கையை நீட்ட, பேத்தியை மனைவியின் கையில் கொடுத்த மணி, "என்னுடைய பொண்ணு எப்படி இருக்காங்க டாக்டர்?" என்கவும், "நல்லா இருக்கா, இப்போ மயக்கத்துலதான் இருக்கா. இன்னும் கொஞ்ச நேரத்துல வார்டுக்கு மாத்திடுவோம், நீங்க அங்க வந்து பார்க்கலாம்," என்று சொல்லிவிட்டு டாக்டரும் உள்ளே போய்விட்டார்
ராஜவேலுக்கும் பானுமதிக்கும் தங்களது குடும்ப வாரிசைத் தூக்கி முத்தமிட வேண்டுமென்று கைகளும் நெஞ்சமும் பரபரத்தன. ஆனால், வள்ளியும் மணியும் என்ன சொல்லுவார்களோ என்று தங்களது நிலையை எண்ணி நொந்து போய் வேதனையோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தனது பேத்திக்கு ஆசை தீர முத்தமிட்ட வள்ளியோ, குழந்தையோடு பானுமதியிடம் சென்றவர், "என்னோட பேத்திங்கம்மா," என்க...
"முருகா!" என்றவாறு குழந்தையை வாங்கிப் பார்த்தவருக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்தன. மனைவியின் நிலைதான் ராஜவேலுக்கும் இருந்தது. ஆனால், அங்கே ஒருவன் மரம் போல் நின்று கொண்டிருப்பதை அவர்கள் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
பின்னர், "பானு!" என்று ராஜவேல் கூப்பிட, தனது கணவரைப் பாவமாகப் பார்த்துப் பானுமதியோ "ம்," என்று தலையசைத்தார்.
"அடேய் பாரி! என்னடா இப்படி ஆணியடித்த போல நின்னுட்டு இருக்க? குழந்தையைப் பாருடா!" என்கவும், அதில் சுயநினைவுக்கு வந்தவன் வேகமாகத் தனது பாட்டியின் கையிலிருந்த குழந்தையை வாங்கிப் பார்க்கவும் அவனுக்குக் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.
அவனுக்கு இருப்பதைப் போலவே வலது பக்கக் கன்னத்தில் இருக்கும் மச்சமும், குண்டு கன்னங்களும், இளம் ரோஜா நிறத்தில் பஞ்சுப் பொதி போல, அவனின் சிறு வயது தோற்றத்தோடு இருக்கும் குழந்தையைப் பார்த்தவனுக்குப் பேச்சே வரவில்லை.
"எவன் கூடயோ கெட்டுப் போயிட்டு, அதற்கு நானாடி இனிஷியல் அப்பன்?" என்ற வார்த்தை அவன் காதுக்குள் அந்த நேரம் ஒலிக்காமல் இல்லை. கையில் இருக்கும் குழந்தையின் அடையாளமே அதனுடைய அப்பா தான் என்பதை ஆணித்தரமாக அவனுக்கு உணர்த்தவும் தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, தலையில் அடித்துக் கொண்டவன், 'தப்பு பண்ணிட்டேனே!' என்று உள்ளுக்குள் கதறினான்.
அப்பொழுது திடீரென்று குழந்தை அழ ஆரம்பிக்கவும், அதைப் பார்த்தவனுக்கு "நீதானே என் அப்பா? என்னை ஏன் சந்தேகப்பட்டாய்?" என்று கேட்பது போல அவனுக்குத் தோன்றியதோடு தனது மகளின் அழுகையில் பயந்து போனவன் "பாட்டி... பாட்டி..." எனப் பதறினான்.
கோடிக்கணக்கான சொத்துகளை நிர்வகிக்கும் தனது கம்பீரமான பேரன், இன்று சிறு குழந்தையின் அழுகை சத்தத்தில் பதறுவதைப் பார்த்தவருக்கு, 'தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்பது இதுதானோ என்று தோன்றியது.
"இப்போ உன் மகள் பசியோடு இருப்பா, வேறொன்றும் இல்லை பாரி," என்றவாறு குழந்தையை வாங்கியவர், தனது கையில் வைத்துத் தாலாட்டுவது போல் ஆட்டிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த நர்ஸ், "குழந்தைக்குப் பால் கொடுக்கணும்," என்று வாங்கிக் கொண்டு போனாள்.
அப்பொழுது மணியின் ஃபோனுக்கு அழைப்பு வரவும், தனது பாக்கெட்டிலிருந்து ஃபோனை எடுத்துப் பார்த்தவர், "கதிர்தான் ஃபோன் பண்றான்," என்று வள்ளியிடம் சொல்லிக் கொண்டே அட்டெண்ட் பண்ணினார்.
"சொல்லுப்பா," என்கவும், அந்தப் பக்கம் இருந்தவன் "தங்கச்சிக்குப் பிரசவம் ஆகிடுச்சா?" என்க, "ஆமாம்பா, உனக்கு மருமகள் பிறந்திருக்கிறாள்," என்றார். "அப்படியா!" என்று தனது மகன் சந்தோஷத்தில் அதிர்வதைக் கேட்டவர், "ஆமாம்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான்," என்றார்.
வேறு ஏதோ கதிர் கேட்க, "ம்ம்," என்றவாறு அங்கிருந்து சிறிது அடிகள் தள்ளி வந்த மணி, "ஆமாம்பா, அவங்க குடும்பம் இங்கதான் இருக்காங்க. அந்தத் தம்பியும் காலையிலதான் இந்தியாவுக்கு வந்துருக்காங்க போல இருக்குயா.
ஓஓஓ..சரிப்பா, நான் வேலையை முடிச்சுட்டு நைட்டு கிளம்பி வர்றேன் பா என்கவும், வேண்டாம் தம்பி இங்க ஒரே மழையா இருக்கு, நீ அங்க வேலையைப் பாரு," என்று மணி சொன்னார்.
"அது எப்படிப்பா? என் தங்கச்சிக்குக் குழந்தை பிறந்திருக்கு, ஒரே தாய்மாமன் நான் எப்படி வராம இருக்க முடியும்? ," என்று சொல்லிவிட்டு கதிர் ஃபோனை வைத்துவிட்டான். 'பேச்சி, என் பொண்ணு வாழ்க்கையில இப்படி ஒரு சோதனையைக் கொடுத்துட்டியே!' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவாறு மனைவியின் அருகில் வந்து நின்று கொண்டார் மணி.
அப்பொழுது வெளியே வந்த நர்ஸ், "பேஷண்டை வார்டுக்கு மாத்திட்டாங்க. ரூம் நம்பர் 105," என்றவாறு அங்கிருந்து சென்றாள். "வா வள்ளி," என்று அங்கிருந்து கட்டப்பையை எடுத்துக்கொண்டு மணி முன்னே போக, வள்ளியும் கணவரின் பின்னாடியே போனார். அவர்களுக்குப் பின்னாடியே இவர்கள் மூவரும் வந்தனர்.
மகள் இருக்கும் ரூம் கதவைத் திறந்து உள்ளே போய் பார்க்க, அங்கே வாடிய கொடி போலப் சற்று முன்பு பிரசவித்தவளோ மயக்கத்தில் இருக்க, குழந்தையோ அவளுக்குப் பக்கத்திலிருந்த இடத்தில் படுத்திருந்தது.
இருவருக்குத் துணைக்காக ஒரு நர்ஸ் அங்கே இருந்தார். இவர்களைப் பார்த்தவர், "குழந்தைக்கு 24 மணி நேரத்தில் இன்ஜெக்ஷன் போடணும், மறக்காமல் சாயந்திரம் ரிசப்ஷன் கிட்ட கூட்டிட்டு வாங்கள்," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
"ஆத்தா பேச்சி!" என்ற வள்ளி, தனது முந்தானையில் முடிந்திருந்த குங்குமத்தை எடுத்துத் தனது மகளுக்கும் பேத்திக்கும் பூசிவிட்டார்.
பின்னர்,"ஏன் மாமா, பிள்ளைக்குப் போட துணி எல்லாம் ஒன்றும் வாங்கலையே, கையோடு போய் சீக்கிரம் நல்லதாக பார்த்து வாங்கிட்டு வாங்க," என்கவும், "சரிடி," என்று அவர் வெளியே போக முயல, "இருக்கட்டும், குழந்தைக்கு தேவையானது எல்லாம் பாரி வாங்கிட்டு வருவான். நீங்கள் இருங்கள்," என்று ராஜவேல் சொல்ல, மணியோ தனது மனைவியைத் திரும்பிப் பார்த்தார்.
செம்புலம் தொடரும்...