செம்புலம் 3
மேதினூர்:
"தாத்தா, நான் போயிட்டு குழந்தைக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வர்றேன்," என்று பாரி சொல்ல, அவரோ அங்கிருந்த மணி-வள்ளி தம்பதியைப் பார்க்கவும், அவர்களோ இதற்கும் தங்களுக்குச் சம்பந்தமே இல்லாதது போல் அமர்ந்திருந்தனர்.
தனது தொண்டையைக் கனைத்தவன், "சார்..." என்று கூப்பிட, மணியோ "சொல்லுங்க தம்பி," என்றார்.
"வாங்க, உங்க பேத்திக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வரலாம்," என்கவும், "நீங்க போங்கப்பா... எங்களுடைய பேத்திக்குத் தேவையானதை எனக்கு வாங்கத் தெரியும்," என்றவர், பின்னர் மனைவியிடம் "நான் போயிட்டு வர்றேன்," என்று சொல்லிவிட்டு, அவனுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து வெளியே போனார்.
'செய்த தவறுக்கு அனுபவித்துத்தானே ஆக வேண்டும்' என்று அவனது மனசாட்சி சொல்ல, "சரி தாத்தா, நான் போயிட்டு வர்றேன்," என்று அங்கிருந்து சென்றான்.
நேரமும் கடந்து செல்ல, பாரியும் தனது குழந்தைக்குத் தேவையானவற்றை எல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தான்.
பின்னர் ரூம் கதவை திறந்து உள்ளே போனவனோ அங்கே குழந்தையைக் கையில் வைத்திருப்பவளைப் பார்த்தவனுக்கு அவ்வளவு கொலைவெறி வந்தது. இருந்தாலும் இது மருத்துவமனை என்பதால் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக உள்ளே வந்தான்.
"ஷாலினி, எப்ப வந்த?" "ஹாய் பாரி! நீ எப்போ இந்தியாவுக்கு வந்த?" என்றாள் ஷாலினி.
"இன்னைக்கு மார்னிங் தான் வந்தேன்," என்றவன், "உனக்கு எப்படித் தெரியும்?" என்றான். "இது என்ன பெரிய தங்கமலை ரகசியமா? நம்ம ஊர் விஏஓ.க்கு டெலிவரி ஆகியிருக்கு... அது ஊர்ல இருக்கவங்களுக்குத் தெரியாதா? எஸ்டேட்டுக்கு வர்றவங்க மூலமாத்தான் கேள்விப்பட்டேன். சரி, இந்தப்பக்கம் போற வேலை இருந்தது, அப்படியே மேடத்தையும் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்."
"ஆமாம், நீ எதுக்கு இவ்வளவு வாங்கிட்டு வந்திருக்க? மேடம் மேல உனக்கு அவ்வளவு அக்கறையா?" என்று குத்தலாக ஷாலினி கேட்க, "ஆமாம், ரொம்ப அக்கறைதான்," என்று அங்கே படுத்திருப்பவளைப் பார்த்துக் கொண்டே பாரியும் சொன்னான் .
"ஓகே ஓகே... சரி பாரி, நான் கிளம்புறேன்," என்று அங்கிருந்து வெளியே வந்தவளின் மனமோ எரிமலையாய்த் தகித்தது. 'வெறும் சொற்ப மாசச் சம்பளம் வாங்கும் இவள் எனக்குச் சரிசமமாகப் போட்டிக்கு வருவதா? நெவர். இந்த ஷாலினியோட இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
ஏற்கெனவே ஒருமுறை விட்டதே போதும்' என்று சொல்லிக் கொண்டவள், 'ஒருவேளை இவனுக்கு உண்மை தெரிந்திருக்குமோ?' என்று யோசித்தவள், 'நோ நோ... உண்மை மூவருக்குத்தான் தெரியும். சம்பந்தப்பட்டவள் சொல்லியதுதான் பொய் என்று ஆகிவிட்டதே! நாங்கள் சொல்ல வாய்ப்பே இல்லை,' என்று சொல்லிக்கொண்டே தனது காரில் ஏறிச் சென்றாள்.
பெட்டில் படுத்திருந்தவளுக்கு ஒருவழியாக மயக்கம் தெளிய ஆரம்பித்தது. கண்களை திறந்தவளுக்கு முதலில் மங்கலாகத் தெரிய, பின்னர் மீண்டும் தனது கண்களை மூடித் திறக்கும் போது , எதிரே இருக்கும் உருவம் தெரிய "அப்பாஆஆ!" என்று ஆங்காரமாகக் கத்தினாள்.
அவளின் சத்தத்தால் அக்கம் பக்கத்திலிருந்தவர்களோடு செவிலியர்களும் என்னாச்சோயேன்று பதறியடித்து ஓடி வந்தனர்.
வெளியே உட்கார்ந்திருந்த மணியோ மகளின் கத்தலில் வேகமாக உள்ளே வர, "அவன் கையிலிருந்து என் குழந்தையை வாங்குங்கப்பா! யாரைக் கேட்டு என் குழந்தையை இவன் தொட்டான்?" என்று கத்தினாள்.
"ஏம்மா, உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? காலையில்தான் டெலிவரி ஆகியிருக்கிறது, இப்படிச் சத்தம் போட்டால் உடம்பு என்ன ஆவது?" என்று மூத்த செவிலியரும் அவளை சத்தம் போட்டு விட்டு, "சார், நீங்கள் கொஞ்சம் குழந்தையை வாங்கிக்கொண்டு வெளியே இருங்கள். நோயாளி உடல்நிலைதான் எங்களுக்கு முக்கியம்," என்க, பாரியோ கையிலிருக்கும் குழந்தையை அங்கிருந்த தனது பாட்டியிடம் கொடுக்கப்போனான்.
"கண்டவர்கள் தூக்குவதற்கு நீங்கள் எதுக்குப்பா இருக்கீங்க?" என்றாள். அவளின் வார்த்தைகள் அம்பு போல பாரியின் இதயத்தைப் பிளந்தன. 'ஆனால் என்ன செய்ய முடியும்? விதியின் விளையாட்டில் கைப்பாவையாகி விட்டோமே!' என்ற உணர்வுடன் ராஜவேல் தம்பதியினர் வெளியே செல்ல, மணியும் குழந்தையை வாங்கிக்கொண்டார்.
கண்களை மூடித்திறந்தவன் அவளைப் பார்க்க, கட்டிலில் படுத்திருந்தவளின் கண்கள் மூடியிருந்தன. குழந்தையை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பியவன், காரில் ஏறித் தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.
அரைமணி நேரப் பயணத்தில் 'வேல் எஸ்டேட்' எல்லைக்குள் வந்தவன், பெரிய இரும்புக்கதவின் அருகே வரும் போது ஹாரன் அடிக்க,காவலாளியும் கதவைத் திறந்துவிட, காரும் ஓடிப்போய் அதனிடத்தில் நின்றது.
பின்னர் கதவை திறந்து கீழே இறங்கியவன் வேகமான எட்டுகளோடு மாடியிலிருக்கும் தனது அறைக்குள் சென்றவன், கதவுகளை ஓங்கி சாத்தி விட்டு போட்டிருக்கும் உடைகளைக்கூட மாற்றாமல் ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவனே ஷவரைத் திறந்து அதன் கீழே நின்றான்.
மலை கிராம் என்பதால் எப்போதும் தண்ணீர் குளுமையாகவே இருக்கும். மேலிருந்து கொண்டிய தண்ணீரோ அவனது மனதிற்குள் இருக்கும் கொதிப்பை நிறுத்தாமல் கடந்த காலத்தை எண்ணத் தொடங்கியது.
தேனூர்:
மீனாட்சி எப்படி வீட்டிற்கு வந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் போகும் போது நண்பர்கள் எப்படி பேசிக் கொண்டிருந்தனரோ அது இன்னும் தொடருந்து கொண்டிருக்க, இயல்பாக இருப்பது போல் தனது அறைக்குள் போனவளுக்கு கதிர் பேசிய வார்த்தைகளோ இன்னும் காதுக்குள் கேட்டுக்கொண்டிருக்க தனது படுக்கையில் விழுந்து சத்தமின்றி கதறி அழுதாள்.
'என்ன வார்த்தை சொல்லிட்டீங்க மாமா? என்னை பார்த்தால் அப்படியா தெரியுது? விளையாட்டுக்குக் கூட என் கண்ணிலிருந்து தண்ணீர் வந்தால் உங்களுக்குப் பிடிக்காதே, இன்று இப்படி ஒரு வார்த்தையில் கொன்னுட்டீங்களே! அன்று நான் பேசியது தப்புதான்... நான்கு அறை அறைந்திருந்தாலும் எனக்கு வலித்திருக்காது, ஆனால் வார்த்தையால் கொல்வதைத்தான் தாங்க முடியவில்லை,' என்று கடந்த காலத்தை நினைத்தாள்.
"எங்கே போனது இந்த அப்பாயி?" என்றவாறு பையுடன் வெளியே வந்த கதிர், மீண்டும் "அப்பாயி!" என்று கூப்பிட, "இதோ வந்துட்டேன் அப்பு," என்ற மரகதம் தோட்டத்து வழியே வந்தார்.
"நான் போயிட்டு வர்றேன்," எனச் சொல்ல, "சரி அப்பு, பார்த்துப் போயா," என்றார். "நாளைக்கு வந்துடுறேன்," என்ற கதிர், பூஜையறையில் இருக்கும் தெய்வத்தைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வேகமாகத் தனது வண்டியில் ஏறிப் பேருந்து நிலையத்திற்குச் சென்றான். அங்கே வண்டியை நிறுத்திவிட்டு, பஸ் நிற்கும் இடத்திற்கு வர, அவன் ஏற வேண்டிய பேருந்தும் தயாராக நிற்பது தெரிந்தது.
பின்னர் நடத்துநரிடம் டிக்கெட்டைக் காட்டிவிட்டு மேல் இருக்கையில் ஏறியவன், தந்தைக்குத் தகவல் தெரிவித்தவன் ஜன்னலைத் திறந்து வைக்க, சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது.
இரவு நேரப் பயணங்களில் 'லாங் டிரைவ்' போவது கதிரின் விருப்பம். ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரைதான் அது. இப்போது வாழ்க்கையோ அதன் போக்கில் அவனைத் துரத்திக் கொண்டிருக்கிறது. அப்போது அவனது போனிற்கு அழைப்பு வர அட்டெண்ட் பண்ணி காதில் வைத்தவன், "ம்ம்... சொல்லு மச்சி," என்றான்.
"எப்படி இருக்க? ஏன் டா வாய்ஸ் டல்லா இருக்கு?" என்றான் அவனது நண்பன் வேலன். "பஸ்ல இருக்கேன்டா." "ஓ... மேதினூருக்கா?" "ஆமாண்டா. பாப்பாவுக்கு டெலிவரி ஆகியிருக்கு." "அப்படியாடா? என்ன குழந்தை?" என வேலன் பரபரப்பாகக் கேட்க, "பேச்சிதான் (பெண் குழந்தை)," என்றான் கதிர்.
"அப்படியா!" என வேலன் சந்தோஷப்பட்டாலும், அவனது மனதிற்குள் இருந்த ஒரு பெருவலியை கதிரும் அறிவான். "சரி, பார்த்துப் போ. சாப்டியா?" "ம்ம்... நீ சாப்டியாடா? வேலை எப்படிப் போகுது?" "இப்போதான்டா, ம்ம் நல்லா போகுது மாப்பிள்ளை. வீட்ல பொண்ணு பார்த்துருக்காங்களாம், ஈவ்னிங் தான் அப்பா சொன்னார்."
"சந்தோஷம்டா. பொண்ணு எந்த ஊரு?" என்கவும், "நம்ம பிரியாதான்டா," என்றான் வேலன். "சூப்பர்டா! இதை நான் எதிர்பார்க்கவில்லை," என கதிர் சிரிக்க, "நானும்தான்டா," என வேலன் விரக்தியாகச் சொன்னான்.
"ம்ம்... என்னமோ போ டா. இந்த வாழ்க்கையில் என்ன நடக்கணும்னு இருக்கோ, அது யாரையும் எதிர்பார்க்காமல் நடக்குது மச்சி," என்ற கதிர், அப்புறம் என்ன டா புது மாப்பிள்ளை என்க, வர ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் டா என்கவும், என்ன டா பெரிய பெரிய குண்டு போடுறனு கதிர் சிரிக்க, எனக்கும் இது பெரிய பாம் தான் டா. வர வெள்ளிக்கிழமை கிளம்புறேன் டா.
அடி சக்கை...சிவம் ஒரு முடிவோடு தான் இருக்காறென்று கதிர் சிரிக்க,ஆமா டா.அவர் பேச்சு அப்படி தான் டா இருக்கு.
சரி சரி...நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்க, பின்னர் நண்பர்கள் இருவரும் சிறிது நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தனர்.
சிறிது நிமிடங்கள் சென்றிருக்க ஜன்னல் திரையை இழுத்துவிட்டு படுத்து கண்களை மூடியவனின் சிந்தனைகளும் கடந்த காலத்தை நோக்கி ஓடத் தொடங்கின.
செம்புலம் தொடரும்...