செம்புலம் இறுதி பாகம்35
பெருமூச்சு விட்டு எழுந்த கயல்விழி, பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தவள் தாரணி கொடுத்துவிட்டு போன புடவையைக் கட்டிக்கொண்டு எப்போதும் போல தன்னை மிதமாக அலங்கரித்து முடிக்கவும், கதவு தட்டும் சத்தமும் கேட்டது.
நிதானமாக போய் கதவை திறக்க, குட்டி அழுறாள் என்று தாரணி நீட்டவும், குழந்தையை வாங்கி கட்டிலில் உட்கார்ந்து பசியாற்றியதும் சிறுதி நிமிடத்தில் சின்னவளும் தூங்கி விட்டாள்.
அரைமணி நேரம் கடந்திருந்தது.முழு வீடும் உறவினர்களின் பேச்சுகளால் நிறைந்திருந்தாலும், கயல்விழியின் அறைக்குள் மட்டும் ஒரு நிசப்தம் நிலவியது. பட்டுப்புடவையின் பாரத்தை விட, மனதின் பாரம் அவளுக்கு அதிகமாகத் தெரிந்தது. தன் தந்தைக்கும் தாய்க்கும் இடையில் அமர்ந்திருந்தவள், குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.
அவளது கண்கள் கலங்குவதைக் கண்ட மணி, அவளது கைகளைப் பற்றிக் கொண்டார்.
"கண்ணு..." என்று மென்மையாக அழைத்தார் கயல்விழியின் அப்பா.
"இத்தனை வருஷம் எங்க வீட்டை அழகாக்கின மகாலட்சுமி நீ. ஆனா, இனிமே இந்த வீடுதான் உன்னுடையது. ஒரு பொண்ணுக்குப் பிறந்த வீடுங்கிறது வேர் மாதிரி, ஆனா புகுந்த வீடுதான் அவ பூத்து நிக்க வேண்டிய கிளை. இந்த வீட்டின் கௌரவம் இனி உன்னுடையது. அதை நீ உன் அன்பாலயும் பொறுப்பாலயும் இன்னும் உயரத்துக்குக் கொண்டு போவேன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு," என்று உறுதியான குரலில் சொன்னார்.
அருகில் இருந்த தாய் வள்ளியோ அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டவர், "நாங்க எப்பவும் உனக்கு துணையா இருப்போம். ஆனா உன்னோட உண்மையான உலகம் இனி இதுதான். எதைப்பத்தியும் கவலைப்படாம, இந்த வீட்டு மனுஷங்களை உன் சொந்தங்களா நினைச்சு சந்தோஷமா இரு," என்று ஆறுதல் சொன்னார்.
கலாவோ எதுவும் சொல்லாமல் தனது மருமகளின் தலையை தடவி விட்டவர் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு தக்கபடி வாழ்கிறது தான் நம்மளுடைய புத்திசாலித்தனம். என் மருமகள் புத்திசாலி என்பது எனக்கு தெரியும் என்றார்.
"சரி கயல், நேரம் ஆகுது, நாங்க கிளம்புறோம்," என்று சொல்லிவிட்டு அவர்கள் எழுந்தனர்.
மகளின் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கம் அமைந்துவிட்டது என்ற திருப்தியும், நிம்மதியும் அவர்கள் முகத்தில் தெரிந்தது. "நாங்க கிளம்புறோங்க," என்று பாரியின் வீட்டினரைப் பார்த்து கைகூப்பி மணி சொல்ல, நல்லபடியாக போயிட்டு வாங்க சம்பந்தி என்றார்கள்.
மகளை பிரிந்த கனத்த இதயத்தோடும் அதே சமயம் ஒரு பெரிய கடமையைச் செவ்வனே முடித்த மகிழ்ச்சியோடும் அவர்கள் தங்கள் ஊரை நோக்கிப் புறப்பட்டனர்.
கயல்விழியோ ஜன்னல் வழியாக அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணில் கண்ணீர் இருந்தாலும், பெற்றோர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து இப்போது பயம் இல்லை. மாறாக, ஒரு புதிய குடும்பத்தை வழிநடத்தப் போகும் பொறுப்புணர்வும், தன் பெற்றோர் கொடுத்த நம்பிக்கையும் ஒரு சேர நிறைந்திருந்தது.
அவளுக்கான டிபனை ரூமிற்கே கொண்டு வந்து தாரணி கொடுக்கவும், கடமைக்கு சாப்பிட்டு எழுந்தவள், பின்னர் குழந்தையோடு பூஜையறைக்குப் போனவள் அங்கிருந்த சாமியைப் பார்த்து உங்கள் சித்தம் எதுவோ, அது அப்படியே ஆகட்டும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு வெளியே வர, அவளுக்கு முன்பு பால் சொம்பை நீட்டிய தாரணி, குட்டியை என்கிட்ட கொடுத்துட்டு போங்க அண்ணி என்கவும், இருக்கட்டும் அண்ணி என்று மௌனமாக சிரித்தவள் மாடியில் இருக்கும் ரூமை நோக்கி வர, கயலின் நடை பிண்ணியது.
இதுதான் நிதர்சனம் என்பது புரிந்து கதவை திறந்து உள்ளே போனவள், தோளிலிருந்த மகளை பெட்டின் நடுவில் படுக்க வைத்தாள்.
அறை முழுவதும் மல்லிகைப் பூக்களின் வாசம் ஆக்கிரமித்திருந்தது. ஆனால், கயலின் மனதோ அந்த வாசத்தை விடவும் பாரமான ஒரு மௌனத்தில் உறைந்து கிடந்தது.
கட்டிலின் நுனியில் அமர்ந்து, தன் கை விரல்களைப் பிசைந்து கொண்டிருந்தாள். திருமணப் பந்தம் இன்று முறைப்படி இணைந்திருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்குள் நிலவிய அந்தப் பெருவெளி அவளை ரொம்ப வாட்டியது.
பாரி மெதுவாக அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தியவன், அவளது இறுக்கமான முகத்தைக் கண்டான். கோபத்தில் சிவந்திருந்த அவளது மூக்கு நுனியும், கலங்கியிருந்த கண்களும் அவனுக்கு ஒரு நிமிடம் குற்றவுணர்வைத் தந்தன. ஆனால், அந்தப் பிடிவாதமான அழகை ரசிக்கவும் செய்தான்.
கட்டிலில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த தன் மகளை மெல்லக் கைகளில் ஏந்த, பிஞ்சு மேனி தன் மார்பில் பட, அவன் இதயம் கனத்தது.
பின்னர் மெதுவாக நடந்து சென்று, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தொட்டிலில் குழந்தையைக் கிடத்தியவனோ சிறிது நொடிகள் அதை ஆட்டிவிட்டு வந்தவன், "இப்போ நாம ரெண்டு பேர் மட்டும் தான் கயல்..." அவன் குரல் அந்த அமைதியான அறையில் மென்மையாக ஒலித்தது.
அவள் பதில் சொல்லவில்லை. கட்டிலின் விளிம்பில் கல்லைப் போல அமர்ந்திருந்தாள்.
"இன்னும் என் மேல அதே கோபமா? இன்னைக்கு நம்ம கல்யாண நாள் கயல்... கொஞ்சம் என்னைப் பாரேன்," என்றான் பாரி.
கயல் மெல்லத் தலை நிமிர்ந்தாள். அவளது கண்களில் கோபத்தை விடவும் 'ஏன் என்னை இப்படி தவிக்கவிட்டாய்?' என்கிற ஆதங்கம் அதிகமாக இருந்தது.
கோபமா? இல்லையே... நான் யாரு உங்க மேல கோபப்பட? மூணு மாசமா ஒரு நிழலைத் தேடுற மாதிரி உங்களைத் தேடி அலைஞ்சேனே, அப்போ உங்களுக்கு என் நினைவு வரலையா?
"இன்றுவரை ஒரு போன் இல்லை, நான் எப்படி இருக்கேன்னு கூட நீங்க கவலைப்படல. என்னை விட்டு தொலைங்க, நான் யாரோ பெத்த பிள்ளை. இதோ நீங்க பெத்த பிள்ளையப் பார்க்க கூட உங்களுக்கு மனசு வரலையே. இத்தனை நாளும் அமைதியாக தானே இருந்தீங்க.அதேப்போல பேசாமலேயே இருக்க வேண்டியதுதானே? இப்போ எதுக்கு இந்தச் சமாதானம்?" இப்போ மட்டும் எதுக்கு இந்தச் சடங்குகள்?" என்று அவள் குரல் உடைந்து கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது.
அவள் கோபத்தில் இருந்த நியாயம் பாரிக்குத் புரிந்தது. அவன் மெல்ல அவளது கைகளைப் பிடித்தான். அவள் உதற முயன்றாள், ஆனால் அவன் விடவில்லை.
ஏய் கொஞ்சம் என்னை பாரு டி என்றான். ஆனால் கயல் அதை கேட்கவில்லை. ப்ச்...உன்னை தான் சொல்கிறேன் பாருடி என்றவாறு தன்னவளின் முகத்தை நிமிர்த்த, அவள் கண்கள் அவன் கண்களை நேராகச் சந்தித்தன.
"கயல், அந்த மூணு மாசம் நான் உன்கிட்ட பேசாம இருந்தது ஏதோ பிடிவாதத்துல இல்லை. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருந்த அந்தச் சின்னக் கசப்பு சுத்தமாக மறையணும்னு நினைச்சேன்".
உன்கிட்ட பேசாத ஒவ்வொரு நாளும், உன்னைத் தேடியே என் மனசு ரொம்ப அலைஞ்சது. நீ போடுற சத்தம், நீ முறைக்கிற முறைப்பு, சின்னச் சின்ன விஷயத்துக்கும் நீ அங்கு காட்டிய அக்கறை... இது எதுவுமே இல்லாமல் இருந்த இந்த இடைப்பட்ட நாட்களில் என் உலகம் வெறும் இருட்டா தெரிஞ்சது. அந்த நாட்கள்ல தான், நான் உன்னை எவ்வளவு ஆழமா நேசிக்கிறேன்னு எனக்கே தெரிஞ்சது.
"கயல்... அந்த மூணு மாசத்தை என்னால திருப்பித் தர முடியாது. ஆனா, இனி வரப்போற ஒவ்வொரு நிமிஷமும் உனக்காகவும், நம்ம குழந்தைகளுக்காகவும் மட்டும்தான் நான் இருப்பேன். நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன் கயல். உன்னைத் தவிக்க விட்டதுக்கு என்னை மன்னிச்சிடுவியா?"
“முன்னாடி உன்னை எனக்குப் பிடிச்சிருந்தது, ஆனா இப்போ... நீ இல்லாம என்னால மூச்சு கூட விட முடியாதுங்கிற அளவுக்கு உன் மேல காதலால பைத்தியம் பிடிச்சிருக்குடி. அந்தப் பிரிவு தான் உன்னை என் உயிரோட கலக்க வச்சிருக்கு டி."
"ஒவ்வொரு ராத்திரியும் உன் நினைப்பு வரும்போது, தலையணையை பிடித்து அழுதிருக்கேன். போன் எடுக்கப் போவேன்... அப்புறம் 'இன்னும் கொஞ்ச நாள் போனா நம்ம காதலோட ஆழம் புரியும்'னு என்னையே கட்டுப்படுத்திக்கிட்டேன். ஆனா அந்த இடைப்பட்ட நாட்கள்ல தான் கயல், உன்னை வெறும் 'மனைவி'ங்கிற இடத்துல இருந்து, 'என் உயிர்'ங்கிற இடத்துக்கு மாத்தினேன்."
பாரி சொன்னதைக் கேட்ட கயலின் பிடிவாதம் மெல்லக் கரையவும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
"உங்களுக்கு மட்டும்தான் அந்தப் பிரிவு காதலைச் சொல்லிக் கொடுத்துச்சா? எனக்கும் தான்..." என்று விம்மினாள் கயல்.
"நீங்க பேசாம இருந்த அந்த ஒவ்வொரு நாளும், எனக்குள்ள ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு. ஒருவேளை நீங்க என்னை நிரந்தரமா மறந்துட்டீங்களோன்னு நினைச்சு துடிச்சிருக்கேன். அந்தத் தவிப்புல தான் எனக்கும் ஒன்னு புரிஞ்சது. உங்களை நான் வெறும் கடமைக்காகக் கல்யாணம் பண்ணிக்கல. என் ஒட்டுமொத்த உலகமே நீங்கதான்னு அந்தப் பிரிவு தான் எனக்கு புரிய வச்சது. உங்க கோபத்தைக் கூட நான் ரசிப்பேன், ஆனா இந்த மௌனத்தை என்னால தாங்க முடியலை..." என்று அவன் மார்பில் முகம் புதைத்தவள் "நானும் உங்களை ரொம்ப நேசிக்கிறேன். இனிமே ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரிஞ்சு போயிடாதீங்க " என்று இத்தனை நாள் தேக்கி வைத்திருந்த பாரத்தை அழுகையாக வெளியேற்றினாள்.
மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட பாரி அவளை இறுக அணைத்துக் கொண்டவன், "இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னைப் பிரிய மாட்டேன் கயல். இது சத்தியம்," என்று அவன் அவள் நெற்றியில் முத்தமிட, கயல் அவன் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டாள்.
லவ் யூ டி என்றவாறு துடிக்கும் அவளது இதழ்களை சிறைப் பிடித்தவன், காற்று கூட புகமுடியாமல் இறுக அணைத்துக் கொண்டு மெத்தையில் சரிந்தவனின் ஒரு கரம், எட்டி விளக்கை அணைத்தது.
வெளியே நிலவு மேகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்த அறையில் இருந்த மௌனம் இப்போது ஒரு காவியமாக மாறத் தொடங்கியது.
சுபம்.