ஓகே அக்கா
Show quoted text
செம்புலம் 7
தேனூர்:
"மாமா..."
"சொல்ல வேண்டியது எனது கடமை," என்று சிரித்தவாறு காசி சொல்ல, "சரிங்க மாப்பிள்ளை. வர வெள்ளிக்கிழமை பொண்ணு கேட்டு முறைப்படி நாங்கள் வரோம். கையோடு தட்டையும் மாற்றிக் கொள்ளலாம்," என்று சொல்லியபடி சகுந்தலாவின் சித்தப்பாவும் அங்கிருந்து சென்றார்.
அவர் சொல்லிச் சென்றது போல, சொந்த பந்தங்கள் சூழ பழனிச்சாமியும் மரகதமும் தங்கள் மகனுக்குப் பொண்ணு கேட்டு வந்தனர். சம்பிரதாயப்படி பொண்ணைப் பார்த்துவிட்டு, கையோடு தட்டையும் மாற்றியவர்கள், திருமணத்திற்கான நாளாக வரத் தை மாதத்தில் வரும் முதல் முகூர்த்தத்தைக் குறித்துவிட்டு, கையையும் நனைத்துவிட்டுச் சென்றனர்.
நாட்களும் அதன் போக்கில் ஓடியது. இரண்டு வீட்டிலும் கல்யாண வேலைகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்க, கல்யாண நாளும் வந்தது.
பின்னர் பெரியவர்கள் குறித்த நாளில் மணி - வள்ளியின் திருமணம் அவர்களின் குலதெய்வமான பேச்சி அம்மன் முன்பு நடந்து முடிந்ததும் தங்களால் முடிந்த சீர்வரிசைப் பொருட்களோடு, மகளை அவள் வாழப்போகும் கணவர் வீட்டுக்குக் காசியும் சகுந்தலாவும் சந்தோஷமாக அனுப்பி வைத்தனர்.
தனது அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்த சந்தோஷத்தில் மரகதத்தைக் கையில் பிடிக்க முடியவில்லை. குடும்பப் பொறுப்பு அனைத்தையும் தனது மருமகளிடம் ஒப்படைத்தார்.
"அத்தை, இதெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க. என்னென்ன செய்யணும்னு சொல்லுங்க, அதை நான் செய்கிறேன்," என்று வள்ளி சொல்ல, "இருக்கட்டும்டி. இந்த குலத்தோட வாரிசைத் தாங்கப் போறவள்; அதற்கான பொறுப்பு உனக்கு இருக்கு," என்றவர், மருமகளுக்குத் தெரிந்ததைக் கூட இருந்தும் பார்த்துக் கொண்டு, தெரியாததைச் சொல்லிக் கொடுத்தும் வழி நடத்தினார்.
மணியும் வள்ளியும் மனமொத்த தம்பதிகளாக வாழ, திருமணம் நடந்து ஓரிரு மாதங்கள் கடந்திருந்தன. ஒரு நாள் கணவருக்கு வள்ளி சாப்பாடு எடுத்துக்கொண்டு போகும்போது, வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வர, அங்கிருந்த வாய்க்காலில் மலமலவென்று வாந்தி எடுத்தாள்.
'எதுக்கு இப்படி இருக்கு?' என்று யோசனையோடு நடக்கும்போது, இரண்டு மாதம் நாள் தள்ளிப் போயிருப்பது ஞாபகம் வந்தது. 'ஒருவேளை அப்படி இருக்குமோ?' என்று புடவையின் இடைவெளியில் தெரியும் தனது வயிற்றில் கையை வைத்தவளுக்கு ஏதோ சொல்ல முடியாத உணர்வு ஏற்பட்டது.
'அவசரப்பட்டு நம்மளே எதுவும் முடிவு எடுக்கக் கூடாது. இரண்டு மாசத்துக்கு முன்னாடியும் இப்படித்தானே இருந்தது, பிறகு குளித்து விட்டோமே!' என்று உள்ளுக்குள் சுருக்கென்ற ஒரு வலி வர, அதே யோசனையோடு வந்தவள், வேப்பமரத்து நிழலில் கூடையை இறக்கி வைத்துவிட்டு, "மாமா..." என்று கூப்பிட, தூரத்தில் கரும்புக்குப் பார் கொத்திக் கொண்டிருந்த மணி, மனைவியின் சத்தத்தில் நிமிர்ந்தவன், "இதோ வர்றேன் புள்ள," என்றான்.
பின்னர் வாய்க்கால் நீரிலே முகம், கை, கால்களைக் கழுவிவிட்டு வந்தவன், மனைவியின் முகத்தில் இருக்கும் சோர்வைப் பார்த்துவிட்டு, "என்னாச்சு? உடம்பு சரியில்லையா?" என்க, "தெரியல மாமா, வரும்போது இதுபோல ஆயிடுச்சு," என்றாள். "அப்படியா? என்ன சாப்பிட்டாய்?" என்கவும், "கம்மங்களி தான் மாமா சாப்பிட்டேன்," என்றாள்.
அதைக் கேட்டவன், "ஏண்டி, உனக்குத் தான் அது பிடிக்காதே! அப்புறம் எதுக்குடி சாப்பிட்ட?" என்று மனைவியை முறைத்துக்கொண்டு வரப்பின் மீது உட்கார, "அதற்கென்று ஆக்கினதைத் தூக்கிப் போடவா முடியும்?" என்று முணகிக்கொண்டே கணவனுக்கு எடுத்து வந்த உணவைப் பரிமாறினாள்.
மனைவியோடு பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவன், "சரிடி, செத்த நேரம் படுத்திருந்துட்டு அப்புறம் போறியா?" என்று கேட்க, "இல்லை மாமா, அரிசி ஊற வச்சிருக்கிறேன். நான் வீட்டுக்குக் கிளம்பறேன்," என்று கணவரிடம் சொல்லிக்கொண்டு வயல் வழியாக வீட்டிற்கு வந்த வள்ளிக்குத் திரும்பவும் வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வருவது போல இருந்தது. படலைத் திறக்கும்போதே வாந்தி எடுத்துவிட்டாள்.
தோட்டத்தில் இருக்கும் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த மரகதம், "என்னாச்சு ஆத்தா?" என்க, வள்ளியோ ஏதும் சொல்லாமல் வாயைத் துடைத்துக்கொண்டு களைப்போடு உள்ளே வந்து அங்கிருந்த தோட்டத்துத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தவள், "தெரியலைங்க அத்தை, தலை சுற்றுகிறது," என்றவாறு கையை மடக்கித் தலையின் கீழ் வைத்துப் படுத்துவிட்டாள்.
மருமகளின் முகத்தைப் பார்த்த மரகதம், அங்கிருந்து போய் நாலு வீடு தள்ளி இருக்கும் மருத்துவச்சி பாட்டியைக் கூப்பிட்டு வந்தார்.
"ஆத்தா வள்ளி..." என்றவாறு அவளது தலையின் அருகில் பாட்டி உட்கார, அவர் சத்தத்தில் கண் விழித்தவள், "சொல்லுங்க பாட்டி," என்றாள்.
"செத்த கையக் குடு ஆத்தா..." என்கவும், வள்ளியும் தனது கையை நீட்டினாள். அதில் நாடித் துடிப்பைச் சோதித்துப் பார்த்துவிட்டு, "மரகதம், நல்ல சங்கதிதான். வம்சம் விருத்தியாகிடுச்சு! போய் உன் கையால ஒரு வாய் மோர் கொண்டு வா ஆத்தா," என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு வள்ளிக்கும் மரகதத்திற்கும் சந்தோஷம் தாங்கவில்லை. "மோரு என்னம்மா... கோழிக்கறி ஆக்கித் தரேன்!" என்று வேகமாக உள்ளே போனவர், முதலில் பாட்டிக்கு ஒரு சொம்பு மோரைக் கலக்கி எடுத்துட்டு வந்து கொடுத்துவிட்டு, பின்னர் அடுப்பில் இருந்த பாலை வடிகட்டி அதில் நாட்டுச் சர்க்கரை கலந்தவர், "வள்ளி, இதைக் குடி," என்று மருமகளிடம் கொடுக்க, அதை வாங்கித் குடித்தவளுக்குக் கொஞ்சம் தெம்பாக இருப்பது போல் இருந்தது.
வழக்கம்போல மதிய சாப்பாடு எடுப்பதற்காக வீட்டிற்கு வந்த மணி, அடுப்படியில் தனது அம்மா மட்டும் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், 'இவ எங்கே போனாள்?' என்று வெளியே வந்து எட்டிப் பார்த்தான். வள்ளி அங்கே மனோரஞ்சித மரத்தின் மேல் சாய்ந்து உட்கார்ந்திருப்பது தெரிந்ததும், வேகமாக வந்தவன் "என்னாச்சுடி?" என்றான்.
கணவனின் குரலைக் கேட்டு வேகமாக எழுந்தவள், வெட்கத்தில் கீழே குனிந்து கொண்டாள். மனைவியின் முகத்தில் இருக்கும் பூரிப்பு ஏதோ விஷயம் என்பதை மணிக்கு உணர்த்த, "நம்ம ரூமுக்குத் போறேன், நீ வா," என்றவாறு முன்னாடி போனான்.
சிறிது நிமிடங்கள் சென்று தயங்கியவாறு ரூமிற்குள் வந்த மனைவியைப் பார்த்தவன், "என்னடி சங்கதி?" என்று விசாரிக்க, "கொஞ்சம் காதைக் கொடுங்க," என்றாள்.
"என் காதைக் கழட்டிக் உன்கிட்ட கொடுத்துட்டு நான் என்னடி பண்றது?" என்று மணி சிரிக்க, "ஐயோ மாமா, கொஞ்சம் கீழே குனியுங்கள்," என்றாள்.
"ம்ம்..." என்று அவன் குனிந்து நிற்க, பின்னர் கணவரின் காதில் விஷயத்தைச் சொல்ல, "அப்படியா டி!" என்று சந்தோஷத்தில் மனைவியை அணைக்க, "அட கூறுகெட்ட மனுஷா... கதவு திறந்து இருக்கு!" என்று கணவனைத் தள்ளிவிட்டு வெளியே வந்தாள்.
மேதினூர்:
"சரி பானு, நல்ல நேரத்தில் பொண்ணு வீட்டிற்குப் போகணும்," என்கவும், "எதுக்கு?" எனச் சேயோன் அதிர, "ஆமாம்பா. எங்கள் பேச்சுக்கு நீ மறுப்பு சொல்லமாட்டேன்னு ஏற்கனவே நானும் உங்க அம்மாவும் உனக்காக பொண்ணைப் பார்த்துப் பேசி முடிச்சாச்சு. நீயும் கையோடு ஒரு எட்டுப் பார்த்துவிட்டால், அடுத்தது ஆக வேண்டியதைப் பார்க்கலாம்," என்று ராஜவேல் சொல்ல, 'அடக் கடவுளே! என்ன திடீர்னு இப்படி முடிவு எடுத்துட்டாங்க? சரி, நமக்குத் பிடித்திருந்தால் தானே சம்மதம் சொல்ல முடியும். அங்க போயிட்டு வேண்டாம்னு சொல்லிடலாம்,' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட சேயோன், "சரிங்கப்பா, போகலாம்," என்றான்.
பின்னர் மூவரும் காரில் ஏறி அரை மணி நேரப் பயணத்தில் அவர்கள் எஸ்டேட் மேனேஜர் இருக்கும் தெருவிற்கு வந்து சேர்ந்தனர். 'இங்க எதுக்கு வந்துருக்காங்க? ஒருவேளை அங்கிளுக்குத் தெரிந்த இடம் போல,' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
டிரைவரும் மேனேஜர் வீட்டின் ஓரமாக வந்து வண்டியை நிறுத்த, "வாப்பா," என இருவரும் இறங்கினர். 'எதுக்கு இவங்க வீட்டிற்கு?' என நினைத்தாலும், தனது மனங்கவர்ந்தவளைப் பார்க்கலாமே என்ற ஆசையோடு அவர்களுடன் போனான்.
கார் சத்தம் கேட்டு மேனேஜர் வளவனும் அவர் மனைவி சாந்தியும் வாசல் வரை வந்து மூவரையும் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துப்போனார்கள். சேயோனிடம் நலம் விசாரிக்க, அவனும் அவர்களிடம் நலம் விசாரித்துக் கொண்டே யாரும் அறியாமல் காஞ்சனாவைத் தேடினான்.
அவளைத் தவிர, அங்கே அவளது அண்ணனும் இன்னும் சிலர் மட்டுமே இருப்பது தெரிந்தது.
"சாந்தி!" என வளவன் சொல்ல, "இதோங்க," என்றவாறு உள்ளே போன சிறிது நிமிடத்தில் மெல்லிய கொலுசொலி கேட்டு நிமிர்ந்த சேயோன், அங்கு வருபவளை ரசனையோடு பார்த்தான்.
அவளோ டீ டிரேவை ராஜவேலுவின் முன்பு நீட்ட, "அம்மாடி காஞ்சனா, இதுதான் மாப்பிள்ளை. என்னோட ஒரே பையன்; அவனைக்கண் கலங்காமல் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்," என்று ராஜவேல் சொல்ல, அதைக் கேட்ட சேயோன் அதிர்ச்சியில் தனது அப்பாவைப் பார்க்க, மற்றவர்களோ சிரித்துவிட்டனர்.
அந்தச் சிரிப்புச் சத்தத்தில் சுதாரித்தவன், 'இவள் தான் பொண்ணா? ஆஹா... நான் சொல்லாமலே எனக்குப் பிடித்தவளையே பேசி முடிச்சிட்டாங்களே! முருகா, உனக்கு நூறு குடம் பாலாபிஷேகமே பண்ணுறேன்,' என்று தனது இஷ்ட தெய்வத்திடம் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
செம்புலம் தொடரும்...
Show quoted text
Last edited: