கதிரவன் பஞ்சு மேகங்களுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.
சனிக்கிழமை காலை பதினோர் மணியளவில் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தனர் உத்ராவும் அவள் குடும்பத்தாரும்.
உத்ராவிற்குத் திருமணம் நிச்சயம் ஆகப் போகும் காரணத்தால் குடும்பத்தார் மனதில் மெல்லிய சந்தோஷம்.
உத்ரா வயது இருபத்தைந்து பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறாள். நவநாகரீக மங்கை. தான் செய்வது அத்தனையும் சரி என நினைக்கும் மனப்பான்மை கொண்டவள்.
உத்ராவின் தந்தை சங்கர நாராயணன் சென்னை எல்.ஐ.சீயில் உத்தியோகம். இன்னும் நான்கு வருடங்களில் ஓய்வு பெறும் வயது. தாய் அன்னலட்சுமி என்னும் அன்னம் வீட்டு நிர்வாகி. மூத்த சகோதரன் கேசவன் டெல்லியில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை. தங்கையான உத்ராவின் திருமணம் முடிந்தபின் தான் தனக்குத் திருமணம் என உறுதியுடன் குடும்பத்துக்குத் துணையாக இருப்பவன். தாயின் வழி நடப்பவன். இறுதியாக கடைக்குட்டி தீபிகா பி.காம் இரண்டாம் வருடம் படித்தபடி சீ.ஏ.வும் படிக்கிறாள்.
உயர் நடுத்தர வர்க்கம். அழகான பாசமான குடும்பம். குடும்ப உறுப்பினர் வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் இருப்பதால் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பயணிப்பது அரிதாகிவிட்டது.
இரண்டு நாட்களுக்கு முன் நெருங்கிய குடும்ப நண்பர் வீட்டுத் திருமணம் திருச்சியில் நடந்தேறியது. நண்பர் பிரசன்னா சிறு வயதிலிருந்தே உத்ரா தந்தை சங்கரநாராயணனுக்கு மிகவும் பழக்கம்.
பிரசன்னா வாரிசுகளும் சங்கரன் வாரிசுகளும் தோழமையைத் தொடர்வதால் அவர் மகள் திருமணத்திற்கு மறுப்பே கூற முடியாமல் மொத்த குடும்பமும் ஆஜர் ஆகிவிட்டனர்.
நண்பர் வீட்டுத் திருமணம் அதனையொட்டி பல கோயில்களுக்கு சில சுற்றுலா தலங்களுக்கும்ச் சென்று வந்தனர். குடும்பமாக வெகு நாட்களுக்குப் பிறகு இனிமையாக ஊர்சுற்றி நாட்களைக் கழிந்தனர்.
மூத்த மகன் கேசவன் திருச்சியில் சர்வீஸ் அபார்ட்மெண்ட ஒன்றை முன் பதிவு செய்தான். ஹோட்டல் அறை என்றால் அனைவரும் ஒன்றாக இருக்க இயலாது. ஆனால் இங்கு வீடு போன்ற அமைப்பு உள்ளது. பெரிய ஹால், சமையலறை, தனி அறைகள் என வசதியாக இருந்தது. வீட்டில் இருப்பதைப் போன்ற திருப்தி கிடைக்கும் என்பதால் இதைத் தேர்வு செய்தான்.
வெள்ளிக்கிழமை மாலை குடும்பமாகச் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு அன்னலட்சுமி தூரத்து சகோதர உறவுமுறையான நந்தன் கோமதி தம்பதியரைத் தற்செயலாகச் சந்தித்தனர்.
“அன்னம் எப்படி இருக்கமா?” என நெகிழ்ந்து போனார் நந்தன். நீண்ட இடைவெளிக்கு பிறகான சந்திப்பு என்பதால் மட்டற்ற மகிழ்ச்சி.
“நல்ல இருக்கேன் அண்ணே .. நீங்க எப்படி இருக்கீங்க?” என அன்னமும் முகம்மலர நலம் விசாரித்தார்.
நந்தன் கோமதி இருவரும் கேசவன் உத்ரா தீபிகா மூவரிடத்திலும் அவர்களின் வேலை படிப்பு பற்றி கேட்டனர்.
பிறகு நந்தன் “மாப்பிள்ள வேலை எப்படி போகுது?” எனத் தொடங்கி அவர்கள் இருவரும் தங்கள் வட்டத்துக்குள் புகுந்தனர்.
“என் மகனுக்கு வரன் பார்த்திட்டு இருக்கேன் அன்னம். எதுவும் சரியா அமையல” என ஆதங்கப்பட்டார் கோமதி.
அவர் கண்கள் உத்ராவை எடைபோட்டது. அவள் அழகு பதுமையாக நின்றிருந்தாள் .
லேவெண்டர் நிறத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவை அதில் சின்ன வெள்ளி சரிகை. அதே நிறத்தில் பிளவுஸ். மிகவும் நேர்த்தியாக உடுத்தியிருந்தாள். அதற்கேற்ற கண்ணை உறுத்தாத அணிகலன்கள்.
அது ப்ரீ பிளீடட் செய்து எடுத்த புடவை எனப் பாவம் அவருக்குத் தெரியாது. உத்ராவுக்கு புடவை கட்டத் தெரியாது என்பதும் அவர் அறியாத ரகசியம். இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என விட்டுவிடலாம்.
கோமதி “என் பையனுக்கு உத்ராவை பார்க்கலாமா?” எனச் சட்டெனக் கேட்டுவிட்டார்.
அன்னம் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.
பின்பு கோமதி தன் மகனின் படிப்பு வேலைப் பற்றி கூறினார். அனைத்து விபரங்களும் அன்னத்திற்கு நிறைவாக இருந்தது.
சற்று தள்ளி நின்று இரு பெண்மணிகளின் கணவன்மார்களும் அரசியலை அலசிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் கேசவனும் இணைந்திருந்தான்.
“என் கணவரைக் கேட்டு சொல்றேன் அண்ணி” என அன்னம் கணவர் பக்கம் போக அண்ணியும் தன் கணவர் காதில் விஷயத்தைப் போட்டார்.
இரு தம்பதியரும் கலந்து ஆலோசித்து அடுத்த இரண்டு தினங்களில் பெண் பார்க்கும் படலத்தை வைத்துக் கொள்ளலாம் எனப் பேசி முடிவெடுத்தனர். இரு குடும்பமும் சென்னை வாசிகள் என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் உத்ராவிற்கு இந்த திருமணத்தில் நாட்டமில்லை.
அன்னம் தன் குடும்பத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். குடும்பத்தின் பெயர் மதிப்பு கௌரவம் குடும்ப பழக்கவழக்கம் இவற்றிற்கு அதிகம் முயக்கியதுவம் கொடுப்பவர். அதற்காக அவர் ஹிட்லர் இல்லை.
சனிக்கிழமை மதியம் உத்ரா குடும்பத்தார் தம் வீட்டை அடைந்தனர்.
வீட்டிற்கு வந்து அனைவரும் ஓய்வெடுத்தனர்.
பின்னர் நிதானமாக நேரம் பார்த்து உத்ரா “அம்மா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் மா” எனத் தயக்கத்துடன் கூறினாள்.
திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் பிள்ளைகள் சொல்லும் வார்த்தை இது என எண்ணியபடி “பொண்ணு பார்க்கத்தானே மா இன்னும் நிச்சயம் ஆகலை. எதுக்கு டென்ஷன் ஆகுற உத்ரா?” என அம்மா அன்னம் பேச்சை அத்தோடு நிறுத்தினார்.
உத்ரா மனம் சமாதானம் ஆகவில்லை. அவளுக்கு ஒருவாரம் விடுப்பு இருந்தது. ஆனால் ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி மறுநாளே கிளம்பிவிடத் திட்டமிட்டாள்.
ஆனால் அதற்குள் நந்தன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மறுநாளான ஞாயிறு காலை பெண் பார்க்க வருவதாகக் கூறிவிட்டார். உத்ராவால் உடனே தப்பிக்கவும் முடியவில்லை.
“உத்ரா இந்த புடவையைக் கட்டு” என அன்னம் தன்னிடமுள்ள பட்டுப் புடவையைக் கொடுத்தார்.
சங்கரன் “என்ன அன்னம் சுடிதார் போதுமே” என்றார்.
“இல்ல புடவைதான் கட்டணும்” என அன்னம் சொல்லிவிட்டார்.
அவரே மகளுக்குச் சேலை உடுத்திவிட்டார். உத்ரா அந்த புடவையில் கொஞ்சம் சுமாராகத் தான் இருந்தாள். அது அவளுக்கு நிறைவைத் தந்தது. தன்னை பிடிக்கவில்லை என்று சொல்ல ஒரு காரணமாக இருந்தால் சந்தோஷம். அதனால் தான் சம்மதித்தாள்.
பெண் பார்க்கும் படலத்திற்கு உத்ரா பிரத்தியேகமாகத் தயாராகவில்லை. கோயிலுக்குச் சென்றபோது தன்னை சிங்காரித்துக் கொண்டதைவிட சற்று குறைவாகச் சிங்காரித்துக் கொண்டாள்.
நந்தன் கோமதி தங்கள் மகன் வைத்தீஸ்வரனுடன் பெண் பார்க்க வந்தனர்.
வைத்தீஸ்வரன் தன் அப்பாவின் சிறுவயது வெர்ஷன் போல இருந்தான். சிரிக்கையில் கன்னத்தில் குழி விழுந்தது.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசினர். உத்ரா கேட்ட கேள்விக்கு மட்டுமேப் பதிலுரைத்தாள். மற்றபடி வைத்தீஸ்வரனை ஏறெடுத்து பார்க்கவில்லை.
நந்தன் “ நாங்க ஜாதகம் பார்க்கிறதில்ல பொண்ணு பையன் சரினா எங்களுக்குச் சம்மதம். ஆனா உங்களுக்கு எப்படினு தெரியல .. இந்தாங்க இது வைத்தீ ஜாதகம்” எனச் சங்கரனிடம் கொடுத்தார்.
சங்கரன் வாங்கி தம் மனையாளிடம் கொடுத்தார்.
”வைத்தீ உத்ரா நீங்க ரெண்டு பேரும் வெளியில பார்க் மாதிரி இருக்கு அங்க வேணாபோய் பேசிட்டிருங்க” என நந்தன் சொல்ல
இருவரும் தயக்கமாக எழுந்து நடந்தனர். வைத்தீஸ்வரன் முன் நடக்க உத்ரா பின் வந்தாள். தன் முதுகை அவள் விழி துளைப்பதை வைத்தீஸ்வரன் உணர்ந்தான்.
ஓரிடத்தில் அவன் நின்று பின்னே பார்த்தான். தங்கள் பெற்றோர் இருக்கும் இடத்திற்கும் இங்கும் சிறிது தொலைவு இருந்ததைக் கண்களால் அளவிட்டான். அவன் கண்கள் உத்ராவை நோக்கவில்லை.
உத்ரா அருகில் வந்தாள். சில வினாடிகள் மௌனத்தில் கரைந்தன.
வைத்தீஸ்வரன் “நீ பிரபாகர் கூட லிவிங் டுகெதர்ல இருக்கிற தானே?” கேட்டுவிட்டான்.
இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை உத்ரா. ரகசியம் உடைந்த அதிர்வு முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
மலையிலிருந்து அதளபாதளத்தில் விழுந்தது போல சர்வமும் நடுங்கியது அவளுக்கு. இதயத்தைக் கூறு போட்டது அவன் கேள்வி.
“பிரபா என் காலேஜ் மேட் .. இப்பவும் நாங்க டச்சில் இருக்கோம்” தனக்கு எல்லாம் தெரியும் என்னும் ரீதியில் அவன் சொற்களும் பார்வையும்.
தன் கைப்பேசியை எடுத்து பிரபாகரும் உத்ராவும் சற்றே அணைத்து சிரித்தபடி இருந்த புகைப்படத்தைக் காட்டினான். அது பப்பில் எடுத்த புகைப்படம். அதற்கு ஏற்ற உடையில் அவள் இருந்தாள்.
உத்ராவிற்கு ஒரு பக்கம் அதிர்வெனில் மறுபக்கம்ப் புகைப்படத்தை ஏன் பிரபாகர் அனுப்பினான் எனக் கேள்வியும் கோபமும் மனதை ஆக்கிரமித்தது.
அடுத்து வைத்தீஸ்வரன் “நீ ஏன் டபுள் கேம் ஆடுற. அங்க பிரபா இங்க கல்யாண டிராமாவா? ” எனவும்
அவன் வார்த்தை சுருக்கெனத் தைக்கக் கோபம் கொப்பளித்தது அவளுக்கு.
“இந்த மேரேஜ் ஏற்பாடு என் இஷ்டம் இல்லாம நடக்குது. என் வாழ்க்கை எப்படி இருக்கணும்னு நீ சொல்லாத” என்றாள் ஆத்திரத்துடன்.
“உன் அம்மாதான் கேட்டாங்க” என அவள் சொல்லுகையில்
இடைமறித்தவன் “நீதானு தெரிஞ்சா நான் இங்க வந்திருக்க மாட்டேன். டோட்டல் வேஸ்ட் ஆப் டைம்.” பல்லைக் கடித்தான். முகத்தைச் சுளித்து கசப்பான பார்வை பார்த்தான்.
“அப்ப போ இப்பவே .. கெட் லாஸ்ட்” அவளையும் மீறி குரல் உயர்ந்தது.
அவளைப் புழுவைப் போல பார்த்து முறைத்தவன் தன் பெற்றோர் இருக்கும் இடத்தை நோக்கி நகர்கையில் திரும்பி அவளிடம் “ஆனா உன் பேமிலி பாவம் .. இப்படி ஏமாத்துற. அவங்களுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?” என்றுவிட்டு நகர்ந்தான்.
விறுவிறுவென வந்தவன் அங்கு அனைவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் தன்னை நிதானித்து அமர்ந்தான். உத்ரா அமராமல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
உத்ரா இதயம் படபடத்தது அவன் அனைவரும் முன் எதாவது சொல்லிவிடுவானோ என அஞ்சினாள். அவர்கள் பேச்சைக் கூர்ந்து கவனித்தாள்.
அனைவரையும் பொதுவாகப் பார்த்த வைத்தீஸ்வரன் “சாரி எங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகால. அவங்க டேஸ்ட் வேற. என் டேஸ்ட் வேற. ப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க.” என்றான்.
பின் தன் பெற்றோரிடம் மெல்லிய குரலில் கிளம்பலாம் என்றான்.
அனைவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. தடுமாற்றம் தத்தெடுத்தது போல அனைவரும் மொத்தமாக அமைதியாயினர். யாரும் இப்படியான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை.
நந்தன் இதற்கு மேல் தன் தங்கை குடும்பத்திற்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என எண்ணியவர் “ நாங்க கிளம்பறோம்” என்றார்.
உற்சாகம் மொத்தமும் வடிந்தவராய் அன்னம் “ சரிங்க அண்ணே” என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த உத்ரா கலவரமானாள். “பேசிட்டு சொல்றோம்” என்று நிறுத்தி இருக்கலாம். வேண்டுமென்றே வைத்தீஸ்வரன் பழிவாங்கிவிட்டான் எனத் தோன்றியது.
இதற்குப் பிறகு அன்னம் அவளிடம் ஆயிரம் கேள்வி கேட்பார். அவற்றை எதிர் கொள்ள வேண்டும். என்ன சொல்வது எப்படித் தப்பிப்பது எனச் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
தான் இங்கு வந்திருக்கவே கூடாது எனத் தன்னையே கடிந்தாள். ஆனால் ஒருபோதும் தான் செய்வது தவறு என அவளுக்கு உரைக்கவே இல்லை. உலகில் யார் தான் இப்படி செய்யவில்லை என்று மனதில் வாதாடினாள்.
நந்தன் குடும்பம் விடை பெற்றுக் கிளம்பினர். அவர்களை வழியனுப்பினர் அன்னம் குடும்பத்தினர்.
“பரவாயில்ல தம்பி நீங்க இப்பவே வெளிப்படையா சொல்லிட்டீங்க” என்றார் சங்கரன். பின் ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்தார். இனி அது பயனில்லை. அவர்கள் சென்றுவிட்டனர்.
அன்னம் குடும்பம் சிறிது சிறிதாக அதிர்ச்சியிலிருந்து மீண்டனர்.
“இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என நினைத்தபடி சங்கரன் ஆறுதல் அடைந்தார். தன் செல்ல மகளுக்கு நல்ல வரனாகப் பார்த்துக் கொள்ளலாம் எனச் சமாதானம் அடைந்தார்.
அன்னத்திற்குச் சொல்ல முடியாத வேதனை மனதைப் பிசைந்தது. தான் பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என உள்மனம் கட்டியம் காட்டியது.
தீபிகா கவலையுடன் அக்காவைக் காணச் சென்றாள்.
உத்ரா எதையோ மறைக்கிறாள் என கேசவன் சந்தேகித்தான்.
தொடரும் …