• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை தீ - 3

ரோசி கஜன்

Administrator
Staff member

அன்னம் மிகவும் நொடிந்து போனார். வீடே இருள் சூழ்ந்து காணப்பட்டது. தான் பெற்ற மகள் இப்படி பாதை மாறி செல்வாள் என நினைக்கவே வேதனையாக இருந்தது. காதல் என்றிருந்தால் கூட திருமணம் செய்து வைத்திருப்பார். ஆனால் லிவிங் டுகெதர் என்பதைத் தான் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“என்ன எழவு டா இது? கல்யாணம் செய்யாம கணவன் மனைவி போலச் சேர்ந்து வாழ்வார்களாம். சண்டை மனஸ்தாபம் வந்தால் பிரிந்திடுவாங்களாம். அப்பக் குழந்தை பிறந்தா என்ன செய்வாங்க? அது அனாதையா? அதோட வாழ்க்கை” பித்துப் பிடித்தவர் போலப் பிதற்றினார்.

“எந்த குடும்பத்தில் தான் சண்டை சச்சரவு வராம இருக்கு? ஆயுள் முழுக சண்டையே வராம இருக்காங்களா என்ன? இல்ல இருக்கத்தான் முடியுமா? இது என்ன சினிமாவா? சண்டை சச்சரவு தான் மனுசனுக்கு விட்டுக் கொடுக்கும் பக்குவத்தைச் சொல்லித்தரும் ” எனத் தன் குடும்பத்தாரிடம் புலம்பி அழுதார் அன்னம்.

“இந்த பையனோட சண்டை வந்தா வேற பையன்கிட்ட போவாளா?” இதை நினைக்கையில் இதயம் வெடித்துவிடும் போல ஆனது.

என்னதான் கோபத்தில் வீட்டைவிட்டு போ சொத்தில் பங்கு இல்லை என எழுதி வாங்கினாலும் அந்த எண்ணம் அன்னம் மனதில் துளி கூட இல்லை. இந்த நொடி உத்ரா திரும்ப வந்தாலும் அவளை குடும்பம் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தார்கள். அதுதான் பெற்ற மனம்.

அன்னத்திற்கு உறவினர் நண்பர்களுக்குத் தெரிய வந்தால் அனைவர் முன் தலைகுனிவு ஏற்படும் என்பதை எண்ணி மிகவும் வருந்தினார்.

கேசவன் அன்னை தந்தையைத் தேற்றினான் “இனிமே அவ நம்ம குடும்பத்துக்கு வேண்டாம். அவ செத்துட்டா” வார்த்தையில் அத்தனை வெறுப்பு மண்டிகிடந்தது.

தீபிகா “விடுமா போனா போறா. அவளையே நினைச்சிட்டு நீங்க சாப்பிடாம தூங்காம இருக்கிங்க. அவ அங்க சந்தோஷமா இருக்கா”

தீபிகா தன் அக்காவைப் படிப்பாளி அழகி என பெரும் மதிப்பு மரியாதை வைத்திருந்தாள். ஆனால் உத்ராவின் செயலால் அவள் மேலிருந்த அன்பு பாசம் மொத்தமாய் வடிந்து போயிற்று.

கேசவனும் உத்ராவின் மேல் கடுங்கோபத்தில் இருந்தான்.

அன்னம் வாய்விட்டுப் புலம்பி அழுதுவிட்டார். ஆனால் சங்கரன் மனதுக்குள் வருந்தி வேதனைப்பட்டர். அதன் விளைவாக உத்ரா போன இரண்டே நாட்களில் அவருக்கு மாரடைப்பு வந்துவிட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்க் கொண்டார்.

அவர் சிகிச்சை பெற்று நலமோடு வீடு வருவதற்குள் குடும்பமே கலங்கிவிட்டது.

உத்ரா சிறுவயதிலிருந்தே கலகலப்பான பெண். தீபிகாவும் கேசவனும் அமைதியானவர்.

உத்ரா நன்றாகப் படித்தாள். பி.ஈ. முடிக்கும் முன்னரே கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி நல்ல வேலை கிடைத்துவிட்டது. பெங்களூரில் வேலை என முடிவானது.

தொடக்கத்தில் அன்னமும் சங்கரனும் பெங்களூரில் உத்ரா எப்படி சமாளிக்கப் போகிறாள் என அஞ்சினர். கன்னட மொழி தெரியாது. ஆங்கிலம் தமிழ் மட்டுமே தெரியும்.

ஆனால் அவள் வாழ்க்கை நலனுக்காக இந்த பிரிவை ஏற்றனர். உத்ராவும் முதல் தடவை பெங்களூர் செல்கையில் கண்கலங்கிவிட்டாள்.

கேவசன் “நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சின்ன வைசுல அழுவ .. இப்பவும் அதே மாதிரியா?” எனக் கிண்டலாகக் கேட்க

உத்ரா கண்களைத் துடைத்தபடி “பாருங்கம்மா” எனச் செல்லச் சண்டை போட்டாள் அண்ணனுடன். அனைவரின் மனப் போக்கையும் மாற்றவே அவன் சொன்னான் எனத் தெரியும்.

அவனுக்கும் தங்கை மீது அலாதி பிரியம் உண்டு.

அன்னம் பெங்களூரில் அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றார். பார்த்துப் பார்த்து மகளுக்கு தேவையானதைச் செய்து கொடுதார். உத்ராவுடன் வேறு ஒரு பெண்ணும் இருந்தாள்.

முதல் ஒரு வருடம் உத்ராவிடம் எந்த மாறுதலும் இல்லை. தினமும் குடும்பத்தாருடன் போனில் பேசுவாள். நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறுவாள். தன் நண்பர்களைப் பற்றி வளவளப்பாள்.

சட்டென விடுப்பு எடுத்து சென்னை வருவாள். “அம்மா உங்களை பாக்காம இருக்க முடியலை” என மழலை போல கொஞ்சி மகிழ்வாள். அன்னத்தின் ஆனந்தம் வான்வரை எட்டியது. குடும்பமே உத்ராவை குழந்தையைப் போல தாங்கியது.

“ஆனாலும் ஓவாராதான் செல்லம் கொடுக்கறீங்க” என தீபிகா வெறுப்பேற்றுவாள்.

“போடி என் அம்மா என் அப்பா” என உத்ரா பெற்றோரை அணைத்துக் கொள்வாள்.

“எனக்கும் தான்” என தீபிகாவும் வந்து ஒட்டிக் கொள்வாள்.

கேசவன் போனை கிளிக்கி அக்காட்சி அழகாகப் பதிவானது. யார் கண்பட்டதோ? இன்று இந்த நிலை?

“சென்னையில வேலை தேடவா?. இங்க இல்லாததா?” எனச் சொல்லி வந்தாள் உத்ரா.

“உன் விருப்பம் உத்ரா” என்றார் அன்னம்.

பின் மெல்ல உத்ராவிடம் மாற்றம் ஆரம்பமானது . “நேத்து வேலை அதிகம் அதான் போன் செய்யலை” “இல்லமா இப்ப என்னாலச் சென்னைக்கு வர முடியாது” என்று சொல்லத் தொடங்கினாள்.

உத்ராவின் ஒவ்வொரு சொல்லையும் குடும்பம் அப்படியே நம்பினர். அவள் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.

வாரத்திற்கு ஒருமுறை போன் செய்வது என அடுத்தடுத்து நிலை மாறியது.

உத்ராவிற்கு எப்போதும் தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம்.

சிறுவயதில் தோழிகள் “நீ ரொம்ப அழகா இருக்க” எனச் சொன்னால் போதும் உருகிவிடுவாள்.

அந்த பழக்கம் தொடர்ந்தது. வேலை இடத்திலும் தன்னை இடத்திற்கு ஏற்ப அலங்கரித்தாள். “வாவ் யூ லுக் கார்ஜியஸ்” என அதே பாராட்டு வார்த்தைகள் கிடைத்தன.

வேலை செய்யும் சில ஆண் நண்பர்களும் அவளை விழுங்குவது போலப் பார்த்துவைப்பார்கள். அது அவளுக்கு இன்பத்தை தந்தது.

ஒரு கட்டத்தில் வேறு இடத்திலிருந்து உத்ரா வேலை செய்யும் பிராஜெகட்டில் பிரபாகர் வந்து சேர்ந்தான்.

அவனது உற்ற நண்பர்களாகச் சித்து மற்றும் தமன் இருந்தார்கள். மூவரும் பெவிக்கால் இல்லாமலே எப்பொழுதும் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள்.

அவ்விரு நண்பர்களுக்கு வேலை இல்லை. பெற்றோர் பணத்தில் நண்பர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

இதில் சித்து சற்று அப்பிராணி. அவன் எப்படி இந்த குழுவில் இணைந்தான் என்பது விளங்காதவொன்று.

உத்ராவின் உற்ற தோழியான ஷீத்தல் தமனைக் காதலித்தாள். அப்படித்தான் சக பணியாளர் வட்டத்திலிருந்து நட்பு வட்டத்தில் நுழைந்தான் பிரபாகர்.

காதலர்கள் கடலை போட நண்பர்களாக இருந்த உத்ரா பிரபா சித்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

உத்ராவிற்கு பிரபா மேல் ஈர்ப்பு இருந்தது. அவன் பேச்சு சிரிப்பு வேலை செய்யும் முறை என அனைத்திலும் சற்று வேறுபட்டு நின்றான். ஆனால் அவள் வெளிக்காட்டவில்லை.

அப்போது வேறொரு காதல் ஜோடி லிவிங் டுகெதரில் இருப்பதைக் கேள்விப்பட்டாள் உத்ரா.

“இது என்ன அபத்தமா இருக்கு?” என்று வாய்விட்டே கேட்டுவிட்டாள்.

“இதுல என்ன அபத்தம்?” மற்றொரு தோழியான கவிதா கேட்டாள்.

“இல்ல கல்யாணம் பண்ணாம ஒரே வீட்ல … இது தப்பில்லையா?” தயங்கித் தயங்கி வார்த்தைகளை கோர்த்தாள் உத்ரா.

“ஒரு காலத்துல காதல்ங்ற வார்த்தை தப்பா இருந்தது. ஆனா இன்னிக்கு காதல் கல்யாணம் செய்யாத ஒரு குடும்பத்தை சொல்லு. அட்லீஸ்ட் வீட்ல யாராவது ஒருத்தர் காதல் கல்யாணம் செய்திருப்பாங்க. சரியா?”

“ஆமா” என வேகமாகத் தலையை ஆட்டினாள் உத்ரா.

“மாற்றத்தை நாம்தான் கொண்டு வரனும் உத்ரா” புரட்சியாளரை போலப் பேசினாள் தோழி.

உத்ரா மனம் தோழியின் வார்த்தையை நம்பத் தொடங்கியது.

“வாழ்க்கை முழுக்க ஒரே மனுஷன் முகத்தை பார்த்திட்டு இருக்க முடியுமா சொல்லு? சோ போரிங்” என்றாள் மேனிக்யூர் செய்யப்பட்ட கைகளை அசைத்து .

உத்ரா “ஆனா நம்ம அம்மா பாட்டி அவங்க எல்லாரும் ஒருத்தரோடு இருக்காங்கள?”

“அந்த காலத்துல பெண்களுக்குக் கல்வி இல்ல அதனால சம்பாதிக்கவும் முடியாது. புருஷனைச் சார்ந்துதான் இருந்தாகணும். அம்மா வீட்டுல கூட அதிகம் இருக்க முடியாது. அதனால வேற வழி இல்லாம புருஷன் கூட இருக்காங்க”

“ஆனா இப்ப நம்மகிட்ட படிப்பு வேலை இருக்கு. பணம் சம்பாதிக்கிறோம். தனியா இருக்க முடியும். இவன் இல்லனா இன்னொருத்தன். இந்த குழந்தைய பெத்து வளர்த்து ஆளாக்கணும். கல்யாணம் செய்தா சட்டப்படி விவாகரத்து செய்யணும்.”

“இது கல்யாணத்தில் இருக்கும் பெரிய சிக்கல். ஆனா லிவிங் டுகெதர்ல இந்த பிரச்சனையே இல்ல. பிடிச்சா கூட இருக்கலாம். பிடிகலையா போய்டே இருக்கலாம். யாரும் கேட்க முடியாது. சுதந்திரமா இருக்கலாம்.”

“இப்ப காதல் எப்படி சாதாரண விஷயம் ஆகிடுச்சி. அதே மாதிரி இன்னும் பத்து வருஷத்துல லிவிங் டுகெதர் நார்மல் ஆகிடும்” என உத்ராவின் உள்ளத்தில் உள்ள நல் எண்ணத்தைத் துடைத்து எடுத்து தன் தீய எண்ணத்தை விதைத்தாள்.

இப்படி இன்னும் பலபல எண்ணங்கள் அவள் மனதில் நிரம்பி வழிந்தன. அவர்கள் சொல்வது மட்டும்தான் சரி என்பன போன்ற பேச்சுகள் அவளை வீழ்த்தியது.

கர்ணன் அறத்தின் பால் நடக்க ஆசைப்பட்டான். ஆனால் துரியோதனனின் நட்பு அவனை அப்படி நடக்கவிடவில்லை.

இங்கும் உத்ரா சிலரின் பிடியில் பொம்மை போல ஆகினாள். சுயசிந்தனையற்று போனாள்.

மாதங்கள் உருண்டோடின.

மௌன ஊர்வலமாய் வாகனங்களும் மனிதர்களும் சென்று கொண்டிருந்தனர். அவள் அலுவலகத்திலிருந்த கண்ணாடிச் சுவர் வழியே சத்தமில்லாத சாலையை பார்த்தபடி காபியைச் சுவைத்தாள் உத்ரா. அவள் மனதில் எண்ணச் சுழற்சிகள்.

“அதிகமா ஒரு விஷயத்தை மனசில பூட்டக் கூடாது” என்றபடி அருகில் வந்து நின்றான் பிரபாகர்.

அவன் வார்த்தை புரியாமல் புருவத்தைச் சுருக்கினாள்.

“நீ என்னை லவ் பண்ற” எனச் சொல்ல

உத்ரா கையிலிருந்த காபி கோப்பை அவள் அறியாமல் நழுவியது. அதைச் சட்டெனப் பிடித்தான். அவனுக்குத் தெரியும் அவள் இதயமும் நழுவி அவன் கையில் விழுந்துவிட்டதென்று. அவனின் மோகன புன்னகையில் சில நொடிகள் தன்னை மறந்தாள்.

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உத்ரா. நாம சேர்ந்து இருக்கலாம். நமக்குள்ள எல்லாம் சரியா இருந்தா கல்யாணம் செய்யலாம்” என்றான்.

அவன் சொல்லின் உள்ளர்த்தம் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

‘இருவருக்கும் பிடித்தம் உள்ளவரைச் சேர்ந்து வாழலாம்.” என்பன போல தன் தோழிகள் சொன்ன நிபந்தனைகளை விதித்தாள். தன்னை அவர்கள் குறைவாக எண்ணிவிடக் கூடாது . தானும் அவர்களுள் ஒருத்தி என நிரூபிக்க இப்படிச் சொல்லி வைத்தாள்.

தன் தலையெழுத்தைத் தானே மோசமாக எழுதினாள்.

பிரச்சனை வருகையில் தன்னை காப்பாற்ற இங்குள்ள எந்த தோழியும் வரமாட்டார் என அன்று அவளுக்குத் தெரியவில்லை.

அவ்வளவு ஏன் தனக்கும் பிரபாவுக்கும் இருப்பது ஆழமான காதலா? என்று இனங்காணவும்த் தெரியவில்லை.

தொடரும்..
 
Top Bottom