வாழ்க்கை மனிதனுக்கு நன்மை, தீமை என இருவகைப் பாடம் கற்பிக்கும். அப்பாடம் ஆயுள் முழுவதும் நினைவில் இருக்கும். ஏதோ தேர்வு எழுதி முடித்தவுடன் மறக்கும் வகையைச் சார்ந்தது அல்ல. உத்ரா மற்றும் பிரபாகர் இவ்வகை பாடத்தை விரைவில் கற்க உள்ளனர்.
உத்ரா பிரபா காதல் விவகாரம் அவர்களின் நட்புகளுக்கு இடையே காட்டுத் தீயாய்ப் பரவியது. தன் தோழிகள் முன்னே உத்ரா சில சமயங்களில் வெட்கத்தினால் இன்ப இம்சையாய் உணர்ந்தாள். ஆனால் அதையும் ஒரு தினுசாய் ரசிக்கவும் செய்தாள்.
வீட்டில் தெரிந்தால் என்ன ஆவது? என்னும் அச்சம் அவளுள் இல்லாமல் இல்லை. பிரபாவிடம் பேசி முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாமா? என்ற எண்ணம் உள்ளத்தில் ஊஞ்சலாடியது. சரியான முடிவை நோக்கி உத்ராவால் நகர முடியவில்லை.
உத்ரா மனம் விட்டுப் பேச பிரபாவை எப்பொழுதும் சந்திக்கும் மாலுக்கு வரச் சொன்னாள். அலுவலகத்தில் இருவரும் வேலை நிமித்தமாக பேசினாள் கூட சுற்றி உள்ளவர்கள் கேலியும் கிண்டலுமாய் பார்த்து வைப்பார்கள்.
முன்பு உத்ராவும் மற்ற காதல் ஜோடிகளை நையாண்டி செய்துள்ளாள். காதலர்களைப் பரிகாசிப்பது எழுதப்படாத விதி. ஆதலால் அங்கு எதுவும்ப் பேச முடியாது. அதனால் மாலில் சந்திப்பு என முடிவானது.
இரவு எட்டு மணி மாலில் அதிகம் ஆட்கள் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் மூடிவிடுவார்கள்.
பிரபா கைகளை தன் மென்மையான கரங்களில் சிறைவைத்து மெதுவாக இருவரும் நடந்தனர். சற்று நேரம் மோன நிலையில் இருந்தனர்.
“பிரபா நாம கல்யாணம் செய்யலாமா?” என்றவளை அவன் கண்கள் ஆராய மூடுபனி நிலை அப்பட்டமாய் அவள் முகத்தில்
“நிச்சயமா கல்யாணம் பண்ணலாம். அதுல எந்த சந்தேகமும் இல்ல டா” ஆறுதலாய் அவன் பதில்
உத்ரா “இப்பவே நான் வீட்ல பேசவா” கேட்கவும்
“எதுக்கு இத்தனை அவசரம்?”
“இல்ல லிவிங் டுகெதர்னு போகாம கல்யா..ண…ம்” எனத் தடுமாற.
“உனக்கு என்ன ஆச்சு உத்ரா? யு லுக் சோ கன்ப்யுசுட்” அவன் குரலில் திகைப்பு.
“எனக்கு கல்யாணம் செய்ய ஆசைதான் . ஆனா என் சில பிரெண்ட்ஸ் அதான் உனக்குத் தெரியுமே அவங்க முன்னாடி ஓபனா பேச முடியாது. அதனால அப்படிச் சொன்னேன்.”
“சில சமயம் அவங்க பேசறதும் சரியா இருக்கிற மாதிரி தோணுது. எனக்கு என்ன செய்ய தெரியல குழப்பமா இருக்கு. ஒரு முடிவுக்கு வர முடியலை. லிவிங் டுகெதரும் பிடிச்சிருக்கு கல்யாணமும் வேணும்.” என்றவள் வார்த்தைகளில் கலக்கம் குடிகொண்டிருந்தது.
“உத்ரா என் தங்கை கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு. அவ கல்யாணம் ஆன உடனே நம்ம கல்யாணம் தான். ஜஸ்ட் த்ரி மன்த்ஸ்.” என்றான் அவள் பிரச்சனை உணர்ந்தவனாய்
“நமக்கு வீடுப் பார்த்து அட்வான்ஸ் கொடுத்திட்டேன் இல்லைனா கூட இந்த பிளான் டிராப் பண்ணிடலாம்” என்ற பிரபா சற்று நிறுத்தி சிந்தித்தவனாக “சரி நீ உன் வீட்லயே இரு. நான் வீட்டை வேண்டாம்னு” .
அவசரமாக “இல்ல இல்ல நாம முடிவு செய்த மாதிரி சேர்ந்தே இருக்கலாம்” திருமணம் பற்றிப் பேசினாலும் உத்ராவின் மனதில் ஓர் ஆசை.
சிலருக்கு புகைபிடித்தால் எப்படி இருக்கும்? மது அருந்தினால் போதை ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு கலந்த ஆர்வம் இருக்கும். ஒரே ஒரு முறை புகைபிடித்தால் அல்லது மது அருந்தினால் எதுவும் ஆகிவிடாது என்று தோன்றும். அதுவே சிலருக்குப் பழக்கமாகி பின் அடிமையாகிவிடுவர்.
உத்ராவிற்கும் தன் சில தோழிகள் போல லிவிங் டுகெதரை அனுபவிக்க ஆசை இருக்கத்தான் செய்தது. வீடு பார்த்தாகிவிட்டது. தன் தோழிகளிடமும் கூறிவிட்டாள். இனி பின்வாங்கினால் நன்றாக இருக்காது என்பதால் பிரபாவிடம் சம்மதம்த் தெரிவித்தாள்.
உத்ராவிற்கும் ஒரு பக்கம் தன் குடும்பம் என்ன நினைக்கும் என்ற அச்சம் இருந்தது. ஆனாலும் திருமணம் ஆகாமல் இல்லறத்தின் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தைப் பெற்றே ஆக வேண்டும் என்னும் ஆசையும் இல்லாமல் இல்லை. அவள் நினைத்திருந்தால் லிவிங் டுகெதரை தவிர்த்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.
இரண்டு படுக்கை அறை கொண்ட பிளாட்டில் இருவரும் சேர்ந்து வசிக்க தொடங்கினர். நண்பர்கள் குழாம் அதைப் பெரிய விருது வாங்கியதற்கு இணையாக கொண்டாடினர்.
இருவரும் தனித்தனி அறையில் இருந்தனர். தொடக்கத்தில் மெல்லிய அணைப்பு, சிறு தொடுகை என்றோடு நின்றது.
தோழிகள் முன் தானும் நவநாகரீக மங்கை என்னும் பெயர் மற்றும் காதல் இரண்டிலும் வெற்றி பெற்றவளாக எண்ணி உத்ரா மகிழ்ந்தாள். வார இறுதி நாட்களில் இருவரும் ஊர் சுற்றினர். அவன் பைக்கில் அவனைக் கட்டிப்பிடித்துச் செல்வதில் அலாதி சுகம் அவளுக்கு.
அவனுக்குப் பிடித்த உணவைச் செய்து கொடுத்தாள். வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் பிரபா உதவினான்.
அவளின் மாதாந்திர இயற்கை விடுமுறை நாட்களில் அவளின் பாதம் கீழே படாமல் கவனித்துக் கொண்டான்.
இந்த உலகத்தில் தன்னைவிட அதிர்ஷ்டசாலி யாருமில்லை எனப் பூரித்துப் போனாள். சிறகுகள் இல்லாமல் பறந்தாள்.
தொடுகை, முத்தம் என்னும் அடுத்த கட்டத்தை எட்டியது.
இருவருக்கும் அவ்வப்பொழுது வாலிபம் தாபத்தை ஏற்படுத்தி கரையைத் தாண்ட தூண்டிது. ஆனால் இருவரும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.
நாட்கள் கடந்த வாரங்களாகி முதல் மாதம் முடிந்தது.
உத்ரா இரவு வேலைகளை முடித்துப் படுக்கச் செல்ல ஆயத்தமானாள். பிரபாவை தேட அவன் பால்கனியில் நின்று இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா இங்க இருக்க?” என அவன் மேல் சாய்ந்தபடி நின்றாள். அவள் கண்கள் அழகான நிலவை ரசித்தது.
“என் தங்கை மேரேஜ் கேன்சல் ஆகிடுச்சி” துயரம் மேலோங்கக் கூறினான்.
அதிர்ச்சியுடன் “அட கடவுளே ஏன்?” வினவினாள்.
“மாப்பிள்ளை வேற யாரையோ லவ் பண்றானாம்” என முடித்தான்.
அதற்கு மேல் அவன் பேசவில்லை மீண்டும் இருட்டை ஆராயத் தொடங்கியது அவன் விழிகள்.
அவளுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
சில நொடிகளுக்குப் பின் “உத்ரா உன் ரூமை உள்ள லாக் பண்ணிட்டு தூங்கு நான் வெளில போயிட்டு வரேன். நம்மகிட்டதான் ரெண்டு சாவி இருக்கே”
“இந்த நேரத்துல எங்க போற அதுவும் இந்த குளிரில்?”
“மனசு சரியில்ல கொஞ்சம் டிரிங் பண்ணலாம்னு” எனத் தயக்கமாக நல்லப் பிள்ளை போல அவன் பாவமாக அவளைப் பார்த்தான்.
மனசு சரியில்லை என்றால் குடிக்க வேண்டும் என்ற நியதியை யார் கண்டுபிடித்தார்கள்? தெரியவில்லை. அதை மட்டும் சாதி, மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து பின்பற்றுகிறார்கள்.
அவளும் சம்மதமாகத் தலையசைத்தாள். அவன் சென்றுவிட்டான். அவளுக்கு உறக்கம் வரவில்லை. பிரபாவின் துக்கத்தை தன் துக்கமாக எண்ணி வருந்தினாள்.
ஆன்லைன் மேட்ரிமோனியலில் பிரபா தங்கைக்கு மாப்பிள்ளை தேடத் துவங்கினாள். பிரபா தங்கை எதிர்பார்ப்பு என்னவென்று தெரியாது. இருப்பினும் ஒரு சில வரன்களைக் குறித்துக் கொண்டாள்.
அப்போது கதவு திறக்கும் ஓசை கேட்டது. பிரபா வந்துவிட்டான். அவன் அறையைப் பூட்டிக் கொள் எனச் சொன்னதன் பொருள் அவளுக்குப் புரியாமல் இல்லை. அதை நினைக்க அவளுள் இன்ப ரசவாதம்.
அப்போது டமாலென்ற சத்தம் கேட்டது. அவசரமாகக் கதவைத் திறந்து வெளி வந்தாள். பிரபா நாற்காலியில் இடறி கீழே விழுந்திருந்தான்.
“பிரபா” என ஓடியவள் “எழுந்திரு” என அவனை மெதுவாக எழுப்பினாள். அவன் முழு போதையில் இருந்தான். அவனைச் சுவரில் சாய்வாக அமர வைத்தாள். தண்ணீர் கொண்டுவந்து முகத்தில் தெளித்தாள். அவன் சற்றே சுயநினைவு பெற்றான்.
“வா உன் ரூமுக்கு போகலாம்” என அவனை அழைத்துச் சென்றாள். அவனை விழாத வண்ணம் தன்னுடன் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
அவனை கட்டிலில் அமர வைக்க முயல “ஐ லவ் யூ” என்றான் ஹஸ்கி வாய்சில்.
சட்டென இருவர் கண்களும் சில நொடிகள் சந்தித்தன. “நீ இல்லனா நான் இல்லை” என அவன் சொல்லி முடிக்கும் முன் கைகள் அவன் வாயை மூட
இருவரும் கட்டிலில் சரிந்தனர். அவன் இதழ்கள் அவள் இதழை முற்றுகையிட்டது. இருவரும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்தனர்.
சட்டென உத்ரா எழுந்தாள் “கனவா?” என வெட்கச் சிரிப்பை உதிர்த்தாள். இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த கன்னட படத்தில் இக்காட்சி இருந்தது. அதில் தங்களைப் பொருத்தி கனவா? என நினைக்கையில் உடலெங்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது. கனவு மெய்ப்பட அவள் இதயம் துடித்தது.
நேரம் நள்ளிரவு ஒரு மணி பிரபா வந்துவிட்டானா? எனப் பார்க்க ஹாலுக்கு வந்தாள்.
வீட்டின் முன் கதவுச் சரியாக தாளிடப்பட்டு இருந்தது. பெட்டி பூட்டும் பூட்டப்பட்டு சாவி அதற்குரிய இடத்தில் மாட்டியிருந்தது. உத்ரா சத்தமில்லாமல் மெதுவாக அவன் அறையைத் திறந்தாள். மங்கலான இரவு விளக்கு வெளிச்சத்தில் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.
அளவோடு மது அருந்தியுள்ளான். அதனால் தான் முன் கதவு தாழ்ப்பால், சாவி, நைட் லேம்ப் என அனைத்தும் எப்பொழுதும் போல சரியாக உள்ளது என எண்ணினாள்.
அடுத்து வந்த நாட்களில் அவனிடம் கேட்டு பிரபா தங்கைக்கு தானே வரன் தேடத் தொடங்கினாள். திருமணத்திற்கான இணைய தளங்களை ஆராய்வது இருவருக்கும் வழக்கமான வேலை ஆனது.
வரன் தேடும் சாக்கை வைத்து “பிரபா இதை பார்” என அவள் அழைப்பாள். பிரபாவும் அவளுடன் நெருங்கி அமர்ந்து வரன் பற்றிய விபரங்களை ஆராய்வான்.
பிரபாகர் உத்ரா என்ன தான் தாங்கள் உள்ளத்தை நேசிக்கிறேன் உடலை அல்ல எனக் காட்டிக் கொண்டாலும். இருவர் மனமும் உடல் சங்கம நாளுக்காக ஏங்கி கிடந்தது.
லிவிங் டுகெதரில் இது சாதாரண விஷயம். இருவரையும் யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால் தங்கள் இணை தவறாக நினைக்கக் கூடும் என்று எண்ணி இருவரும் தவிர்த்தனர்.
மாணவன் ஒருவன் தான் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தன்னைவிட யாராலும் அப்படி இருக்க முடியாது என எண்ணினான்.
ஆசிரியர் அவனின் மனநிலை உணர்ந்தார். அவனுக்கு ஒரு சோதனை வைத்தார் “இந்த நொடி முதல் நாளை காலை ஒன்பது மணிவரை நீ குரங்கைப் பற்றி நினைக்கக் கூடாது” என்றார்.
அவன் இதை எளிமையாகக் கருதினான்.
ஆனால் மனம் எதை வேண்டாம் என்கிறதோ அதைத்தான் மீண்டும் மீண்டும் நினைக்கும்.
குரங்கைப் பற்றி நினைக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே குரங்கு உள்ளது. அவனால் தவிர்க்க முடியவில்லை.
அவன் உணவு உண்கையில், உறங்கும் வேளை, மற்ற பணிகள் செய்கையில் என ஒவ்வொரு நொடியும் குரங்கு அவனை ஆக்கிரமித்திருந்தது. மனதளவில் குரங்கு அவனை விடாமல் துரத்தியது.
மறுநாள் ஆசிரியரைக் காண தன் மனதை ஆக்கிரமித்த ஆயிரம் குரங்குகளுடன் சென்றான்.
ஆசிரியர் அவன் முகத்தைப் பார்த்தே புரிந்து புன்னகைத்தார்.
ஒரு மாதம் இருவரும் மனதை கட்டுபத்தினர். பிரபாவின் பிறந்தநாள் வந்தது. உத்ரா அன்று தன்னையே பரிசாகக் கொடுத்தாள்.
நாளடைவில் இதுவும் சாதாரணமாகிப் போனது.
எதுவரை எனில் “என் தங்கை என்ன உன்னை மாதிரியா?” என பிரபாகர் கோபத்தில் கர்ஜித்தவரை.
தொடரும் …