வாழ்க்கையில் சில நேரங்களில் சில முடிவுகள் தவிர்க்க முடியாதது. அரசியல் கட்சிகளின் கூட்டணி போலச் சூழ்நிலையை பொறுத்தது முடிவுகள். முடிவின் சாதக பாதங்கள் அப்போதைக்குத் தெரியாது. உத்ரா வாழ்க்கையிலும் சட்டென சில முடிவுகள் எடுக்க வேண்டியதாயிற்று.
உத்ரா, பிரபாவை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தாள். அவனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள். அவன் மேலிருந்த கோபம், வெறுப்பு அனைத்தும் கற்பூரமாய் கரைந்துவிட்டது.
இன்று இருவரையும் காதல் தன் மலர்க் கரங்களைக் கொண்டு அணைத்து ஆலாபனை செய்தது. பிரபாவிற்கு எலும்பு முறிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு மாதத்தில் பூரண குணமடைந்தான்.
பிரபாவைக் குழந்தையைப் போலக் கவனித்துக் கொண்டாள் உத்ரா. அவள் மனதில் பிரபாவின் குடும்பம் தன்னை மருமகளாக ஏற்பார்களா? என்ற ஓற்றைக் கேள்வி துளைத்துக் கொண்டிருந்தது. எனினும் பிரபா தன்னை கைவிட மாட்டான் என நம்பினாள்.
பிரபா சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஆயத்தங்களையும் செய்யத் தொடங்கினான்.
வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டியது மேல் அலுவலக மேலதிகாரிகளின் உத்தரவு. அதை தடுக்க உத்ராவினால் முடியாது. இருப்பினும் அவனின் உடல் நலன்ப் பற்றி கவலை கொண்டாள்.
“உன்னால சமாளிக்க முடியுமா பிரபா? மெடிகல் லீவ் எக்ஸ்டென்ட் பண்ண முடியாதா?” கவலைப்பட்டாள்.
“இல்ல டா அதான் கை சரியாயிடுச்சி இல்ல .. நீயே பாரு” என்றபடி கையை வேகமாகச் சுழற்றிக் காட்டினான்.
“போதும் போதும் டெமோ காட்டினது” எனச் செல்லமாகக் கோபித்தவள். அவன் கையை மிருதுவாகப் பற்றி முத்தமிட்டாள். அவன் மோகனப் புன்னகையில் தன்னை மறந்தாள்.
அவளை வேகமாக தன்னோடு இழுத்து முத்தமிட்டான். உத்ராவை பூங்கொத்தென அள்ளி படுக்கையில் படுக்க வைத்தான்.
அவன் எண்ணம் அறிந்து “பிரபா வேண்டா” என அவள் திருவாய் மறுத்தாலும் கண்கள் மறுக்கவில்லை. அவள் உடல்மொழியும் நாணமும் அவனை உன்மத்தம் அடைய செய்தது.
இருவருக்கும் இடையே முத்த யுத்தம் தொடங்கி பலவேறு பரிணாமங்களை எட்டியது.
உத்ரா பூரித்துப் போனாள். பல நாட்களாக மனதில் இருந்த ஏக்கங்கள் அனைத்தும் நீராவியாக நீங்கியது.
அடுத்த சில நாட்களில் உத்ராவின் தாய் அன்னம் போன் செய்தார். “உத்ரா நம்ம பிரசன்னா சார் இருக்காரே அவர் பொண்ணு கல்யாணம் திருச்சியில நடக்குது. நாம ஓண்ணா சேர்ந்து போகலாம். அப்படியே அக்கம் பக்கம் கோயிலுக்கும் போயிட்டு வரலாம். கேசவனும் வரான். நீயும் வாமா. நாம குடும்பமா டூர் போன மாதிரி இருக்கும். எத்தனை நாள் ஆகுது நாம சேர்ந்து போயி” என்று சொல்லவும்
பிரபா இல்லாமல் வீட்டில் தனியாக இருக்க வேண்டும். அவன் பிரிவு நிச்சயம் வருத்தமாக இருக்கும். எப்படி நாட்களைக் கடப்பது என எண்ணி இருந்தாள்.
தன் குடும்பத்தாரைக் கண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவளுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. நீண்ட காலமாக அலுவலகத்தில் விடுப்பு எடுக்கவில்லை.
அதனால் உடனே “சரி மா நான் வரேன்” எனச் சம்மதம் தெரிவித்தாள்.
பிரபாவிடம் சொன்னாள். “பத்திரமா போயிட்டு வா” என அணைத்து முத்தமிட்டான். பின் ஆன்-லைனில் அவளுக்கு பிலைட் டிக்கெட் புக் செய்து கொடுத்தான்.
பத்து நாட்கள் விடுமுறை எடுத்தாள். அங்குத் திருமணம் கோயில் போன்ற இடங்களுக்குத் தேவையான ஆடை அணிகலன்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்தாள். அன்னம் நிச்சயம் புடவை உடுத்த சொல்வார். அதனால் இரண்டு புடவைகளை ப்ரீ பிளீட்டிங் செய்து எடுத்துக் கொண்டாள்.
பிரபா காலையில் கிளம்பினான். உத்ரா அன்று மதியமே கிளம்பிவிட்டாள். மனம் முழுவதும் சந்தோஷத்தை நிரப்பி சென்னைக்குப் புறப்பட்டாள்.
அனைத்தும் நன்றாகச் சென்று கொண்டிருக்கையில் பெண் பார்க்கும் படலம் என்ற நிகழ்வு நிலைமையை தலைகீழ் ஆக்கிவிட்டது.
பெண் பார்க்க வந்த வைத்தீஸ்வரனால் உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று. ஆகாயத்திலிருந்து கீழே தள்ளிவிட்டது போல உணர்ந்தாள்.
அத்தனை மகிழ்ச்சியும் வடிந்து போனது. தன் பெற்றோரிடம் பிரபாவைத் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கலாம் தான்.
ஆனால் கேசவன் குற்றவாளியை நடத்துவது போலக் கேள்வி கேட்டது. அனைவர் முன் அவளைக் கைநீட்டி அடித்தது. பாசமான தங்கை உத்ராவை அவமானச் சின்னமாகப் பார்த்தது என ஓவ்வொன்றாய் உணர்வு குவியலாய் சேர்ந்து கொண்டது.
உத்ராவினுள் பெரும்ப் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு அவளின் அகந்தை தலை தூக்கியது. பித்துப் பிடித்தவள் போல நடந்து கொண்டாள்.
என் வாழ்க்கை நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். அதைக் கேட்க நீங்கள் யார்? என்று சொல்லிச் சண்டையிட்டாள். தன் குடும்பத்தாரைச் சொல்லாலும் செயலாலும் காயப்படுத்தினாள்.
இனி தன் குடும்பம் தனக்கு என்றுமே தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். தன் பெற்றோர் தனக்காகவே கவலைப்படுகிறார்கள் என்ற உணர்வே இல்லை. தன் குடும்பத்தை எதிரியாக பாவித்தாள்.
சுவரில் அடித்த பந்தைப் போல மீண்டும் பெங்களூரை அடைந்தாள். புழுக்கம் மனதை அடைத்தது. தன் வேலை மற்றும் காதலன் பிரபா இவ்விரண்டு மட்டுமே இனி தனக்கு போதுமென எண்ணினாள்.
பிரபாவிடம் போனில் பேசினாள். அவன் வரவிற்காகக் காத்திருந்தாள். வந்தவன் குறுகிய காலத்தில் தன் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விலகிவிடுவான் எனக் கனவிலும் அவள் நினைக்கவில்லை. இமைக்கும் நேரத்திற்குள் பல அனர்த்தங்கள் நடந்தேறிவிட்டன.
தன்னை பிடிக்காது என்று சொன்ன பிரபா இனி தனக்கு என்றுமே தேவையில்லை என்ற முடிவு எடுக்கப் பெரும்பாடு பட்டாள். அது அத்தனை சுலபமாக இல்லை. ஆனால் எடுத்தாக வேண்டிய நிலை அமைந்துவிட்டது.
அலுவலகத்தில் காதல் ஜோடிகளின் பிரிவு அப்போதைய முக்கிய செய்தி ஆனது.
அவளிடம் பல கேள்விகள் வெவ்வேறு ரூபத்தில் எழுந்தது. மௌனம் மட்டுமே அவள் பதிலாக இருந்தது.
சில ஆண்கள் அவளை தன் ஆசைக்கு இணங்க கேட்டனர். அவள் முறைக்க “நீ என்ன பத்தினியா?” எனக் கேள்வி எழுந்தது.
உத்ராவிற்குப் பாடம் எடுத்த சில தோழிகள்
“விடு உத்ரா .. அவன் இல்லனா வேற ஆளே இல்லையா என்ன?”
“ஒரு தடவை லவ் பைலியிர் ஆனா அதோட வாழ்க்கை முடிஞ்சிடுமா என்ன? இதுல இருந்து வெளில வா. மூவ் ஆன் ” எனப் பலமாகப் போதனை செய்தனர்.
பிரபா உத்ராவை விட்டுச் சென்ற நாள் முதல் அவன் அலுவலகத்திற்கு வரவில்லை.
உத்ரா அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இனி அவன் எங்கு இருந்தால் என்ன?
தான் கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து பிரெக்னென்சி கிட் கொண்டு வந்து வீட்டில் சோதித்துப் பார்த்தாள். அதில் அவள் கர்ப்பம் இல்லை எனக் காட்டியது. அதைக் கண்ட பிறகுதான் சுவாசம் சீரானது. கர்ப்பம் தரிக்காமல் இருக்க மாத்திரை உட்கொள்வதால் தப்பித்தோம் என எண்ணினாள்.
அதே வீட்டில் தனியாக இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்பதால் உத்ரா மீண்டும் தன் தோழிகளின் வீட்டிற்கே வந்துவிட்டாள்.
இப்போது அங்கு உத்ராவையும் சேர்த்து மூவர் வசிக்கின்றனர். உத்ராவின் தோழிகளில் ஒருத்திக்குப் பிறந்தநாள்.
அதற்கு வீட்டிலேயே சிறிய பார்ட்டி கொண்டாட முடிவுச் செய்தனர். அதற்கு அவர்களின் மற்றொரு நண்பியான ராதிகா அழைப்பின் பேரில் வந்திருந்தாள்.
அவளைக் கண்டு சந்தேகமாகப் புருவம் உயர்த்திய உத்ராவிடம் “என்ன?” என்றாள் ராதிகா.
“உன்னை காதலிப்பதாகச் சொல்லித்தான் பிரபா பிரிந்தான்” என உத்ரா சொல்லவும்
பலமாகச் சிரித்தவள் “பிரபாகருக்கு காதலிக்கத் தெரியாது. ஆனா நிறைய பெண்களோடு இருந்திருக்கான்” என கண்ணடித்தவள். அதன் உட்பொருள் அனைவரும் அறிந்ததே, கோக்கை அருந்தியபடி “அதுல நானும் ஒருத்தி” என முடித்தாள்.
“இப்ப யாரோட?” என நக்கலாகச் சிரித்தபடி மற்றொரு தோழி வினவ
“அவனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சி” என்றாள்.
ஆனால் யாரும் அதை நம்பியதாகத் தெரியவில்லை.
ராதிகா தன் செல்போனில் சில புகைபடங்களைக் காட்டினாள். உத்ராவும் பார்த்தாள். மணப்பெண் பிரபாகர் மருத்துவமனையில் இருந்த போது அழுதவள். அவளைத் தங்கை எனத் தான் நினைத்ததை எண்ணி சிரிப்புதான் வந்தது.
தன்னை சம்பளம் இல்லா வேலையாளாக பிரபா பயன்படுத்தி உள்ளான் எனப் புரிந்தது.
பிரபாவை பிரிந்தது முதலில் கடினமாக இருந்தது. ஆனால் பெரியளவில் மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை என்பது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
திருமண புகைபடங்களை காண்கையில் தனக்குத் தொடர்பில்லாத நபரின் கல்யாண புகைப்படங்களைப் பார்ப்பது போலத் தான் தோன்றியது.
ராதிகா “பிரபாகர் பெரிய அரசியல்வாதிக்கு நெருங்கிய சொந்தம். அதனால அவன் என்ன தப்பு செஞ்சாலும் தப்பிச்சிடுவான். நம்ம ஆபீஸ் அந்த அரசியல்வாதியுடைய பினாமி சொத்து. அதனால தான் பிரபா சேர்ந்தான். பொண்ணுங்கள இம்பிரெஸ் பண்றதுல அவன் கில்லாடி. அவன் குடும்பத்தைப் பத்தி அவன் யார்கிட்டயும் சொல்ல மாட்டான். சித்து அவன் தூரத்து சொந்தம். அவனுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்து இதெல்லாம் தெரிஞ்சிகிட்டேன்.”
“பிரச்சனை வரும் போது பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கறதுல பிரபா தயங்க மாட்டான். ஆனா அவளைப் பழிவாங்கும் விரோதம் மனசுல கண்டிப்பா இருக்கும்”
இதைக் கேட்க உத்ராவிற்கு மனதில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. பிரபா குடும்பத்தைப் பற்றி தனக்கு எதுவும்த் தெரியாது. சண்டைக்குப் பின் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டான். அவனின் சொந்த ஊர் கல்வி என எதுவும்த் தெரியாது.
அவனைப் பற்றி கடுகளவும் தெரியாது. ஆனால் அவனைக் காதலித்து அவனுடன் ஒரே வீட்டில் இருந்திருக்கிறோம். அதற்கு விலையாக தன் குடும்பத்தையும் இழந்தாயிற்று. மனதில் பலவாறு எண்ணங்கள் ஓடின.
உத்ராவிற்குப் போகப் போக அந்த அலுவலகத்தில் வேலை செய்யவே பிடிக்கவில்லை. வேறு வேலைத் தேடினாள். தமிழ்நாட்டிற்கே திரும்பும் எண்ணத்தில் இருந்தாள்.
அவள் வேலைக்கு ஏற்ப சென்னையில் தான் நிறுவனங்கள் இருந்தன. ஆனால் சென்னை என்றால் பெற்றோர் கண்ணில்படாமல் இருப்பது கடினம்.
அதனால் சிறிய நிறுவனம் சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை எனத் தேடினாள். அப்போது தான் சேலத்தில் அவளுக்கு உகந்ததாக வேலை இருந்தது. வேலைக்கு அப்ளை செய்ததும் சூம்மீட்டில் நேர்காணல் நடந்தது.
வேலையும் கிடைத்துவிட்டது. இங்கு ராஜிநாமா செய்துவிட்டு சேலத்திற்கு வந்துவிட்டாள்.
சேலத்திலிருந்த நிறுவனம் தொடங்கி ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. அவள் வசிக்க நிறுவனமே வீடு ஏற்பாடு செய்தது. அலுவலகமும் வீடும் அருகில் இருந்தது.
அங்குக் கடுமையாக உழைத்தால் உயர் பதவி எளிதில் அடையலாம் என்னும் நிலை இருந்தது. போட்டியும் அதிகம் இல்லை. உத்ராவிற்கு முன் அனுபவம் இருந்ததால் அவளுக்கு தகுந்த மரியாதையும் கிட்டியது.
மனநிறைவுடன் வேலைச் செய்தாள். ஆனால் மனம் அவ்வபோது சோர்வடைந்தது. புதிதாக கார் வாங்கினாள்.
தன் வாழ்க்கையில் நடந்த எந்த துயர சம்பவத்தை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளவில்லை உத்ரா. அனைத்திலும் தன் பங்கும் உள்ளது. சிலவகை தானேத் தெரிந்து செய்த தவறுகள். அதனால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் மனதைத் திடமாக வைத்துக் கொண்டாள்.
லிவிங் டுகெதரில் எப்படியும் பிரிய வாய்ப்புள்ளது என்ற கோட்பாட்டுடன் தான் இணைந்தனர்.
விரைவில் உத்ரா தன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொரு மங்கையை சந்திக்கப் போகிறாள்.
தொடரும் …