• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தூரத்து வெண்ணிலா தாகம் தீர்க்குதே 09

STN - 62

New member
அத்தியாயம் 09

மூன்று பேர் அமரும் அந்த நீண்ட சோஃபாவில் விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் வாகீஷன். முகத்தில் மகிழ்ச்சியின் சாயல், இதழ் பிரித்து சிரித்துக் கொண்டிருந்தான். அவன் உயரத்திற்கு கால்கள் வெளியே தொங்க, அதை ஆட்டியபடி படுத்திருந்தான்.

இப்படி ஒரு விடியல் அவன் வாழ்வில் வருமா என்று அவன் எதிர்பார்த்து காத்திருந்தான் தான். என்ன ஒன்று விழி திறக்கும் போது தன் உயிரானவள் பூமுகத்தில் விழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

இருந்தும் பரவாயில்லை, அவன் பூங்கோதை அவன் வீட்டில் இருக்கின்றாள், அந்த நினைப்பே நெஞ்சம் தித்திக்க, சந்தோஷத்தில் திளைத்து இருந்தான்.

கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் நிராளினி. எழுந்து முகம் கழுவி இருப்பாள் போலும், மொட்டு விரிந்த தாமரையாய் மலர்ந்து இருந்தது அவள் அழகு வதனம்.

ஆனால் உர்ரென்று கோபமாக இருந்தாள். வாகீஷனை முறைத்துக்கொண்டே வந்து ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

'ஐயையோ டீச்சர் கோபமா இருக்காங்க போலயே...' என்று மனதில் அலறியவன் 'உன் பாடு திண்டாட்டம் தான்டா வாகீ...' என்று நினைத்தவாறு எழுந்து சென்று அவளுக்காக டீயை போட்டு எடுத்துக் கொண்டு அவளை நெருங்கினான்.

வலது கை முதுகின் பின்புறம் இருக்க, இடது கையில் இருந்த கப்பை நிராளினியிடம் கொடுக்க, அதை வெடுக்கென வாங்கியவள் போட்டு உடைக்க, டீ சிதறவில்லை, கப் மட்டும் பரிதாபமா உடைந்து உயிரை விட்டது.

அந்த கப்பில் டீ இருந்தால் தானே சிந்தி சிதற, அவனுக்குத்தான் அவனவளை பற்றி நன்கு தெரியுமே, வெறும் கப்பை போட்டு உடைத்து விட்டு அவனை நிமிர்ந்து பார்த்து அவள் முறைக்க,

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு முதுகின் பின்னிருந்த கையை அவள் முன் நீட்ட, அதில் ஆவி பறக்க டீ இருந்தது. அதிலிருந்து வந்த அவளுக்கு பிடித்த நெஸ்கஃபேயின் வாசனை சுண்டி இழுக்க, அவனைப் பார்க்காமல் வாங்கிக் கொண்டாள்.

இப்போது பற்கள் தெரிய சத்தமில்லாமல் சிரித்த வாகீஷன் தலையை ஆட்டி விட்டு சமையலறை சென்றான். அவன் சென்ற பின்னரே டீயை குடித்தாள்.

வாகீஷனோ நேற்று கோமதியிடம் வாங்கி வைத்த மாவில் புட்டு, மாசி சம்பல், பருப்பு கறி என்று காலை சாப்பாட்டை செய்தான்.

வாகீஷன் சமைக்கும் நேரம் நிராளினி குளித்து முடித்து இருந்தாள். முழுகி இருப்பாள் போலும் தலையை துவட்டாமல் வந்து சோஃபாவில் அமர்ந்து கொள்ள,

சமைத்து முடித்த வாகீஷனும் குளிக்க சென்றான். போகும்போதே நிராளினியை பார்த்துக்கொண்டே தான் போனான்.

அவள் தலை ஈரமாக இருக்க "நிரா தலைய துடைடா..." என்று சொல்ல அவள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

தான் நின்றால் வீம்புக்காக அப்படியே இருப்பாள் என்று குளிக்க சென்று விட்டான். குளித்துவிட்டு வந்து பார்க்கும் போதும் அப்படியே தான் அமர்ந்து இருந்தாள்.

அவனே டவலை எடுத்து வந்து அவளிடம் நீட்டியவன் "நிரா தலைய துடை.. இப்டியே இருந்தா தடுமலாக்கும்..." என்று சொல்ல, நீ சொல்லி நான் ஏன் கேட்க வேண்டும் என்பது போல் அவள் அப்படியே இருக்க

"ம்ச்!" என்று சற்று கடுப்பானவன் அவனே துடைக்க போக, அவள் நிமிர்ந்து அவன் கண்ணைப் பார்க்க, அவன் கை அப்படியே நின்றது.

அவன் தான் அவள் தொடாமல் தொட மாட்டேன் என்று சொல்லிவிட்டானே. அந்தரத்தில் நின்ற அவன் கையை பார்த்துவிட்டு "என்ன தொடுறதுக்கு இது ஒரு சாக்கு இல்ல.. ஈர தலையோட இருந்தா செத்தா போயிடுவேன்..." என்று கேட்க

அவள் இறுதியாக சொன்ன வார்த்தையில் தீ சுட்டதைப்போல் உயிர் துடிக்க "நிரா!..." என்ற வாகீஷனின் குரலில் நிராளினியின் உடல் அதிர்ந்தது.

கோபமாக டவலை விசிறி அடித்தவன், விறுவிறுவென வீட்டின் பின்பக்கம் போக, (போடா டேய்) என்பது போல் பார்த்திருந்தாள் நிராளினி .

வீட்டின் பின்புறம் வந்தவன் கோமதியை அழைத்தான். அவரும் வர, அவரிடம் இவன் உதவி கேட்க, "ஏன்டா உன்ட பெட்ட என்ன சின்ன பிள்ளையா, நான் தல தொடர்ச்சி விட..." என்று சிரிப்போடு கேட்க

"அக்கா.. ப்ளீஸ்க்கா.. வீம்புக்கு அப்டியே இருக்காள்.. உடம்புக்கு ஏதாவது வரப்போகுது..." என்று சொல்ல

எப்பவும் போல் இப்போதும் அவன் காதலை நினைத்து பிரமிப்பாக தான் இருந்தது கோமதிக்கு. அவரும் "சரி வா!..." என்று முன் செல்ல

அவனும் 'அப்பாடா' என்று அவர் பின் சென்றான். கோபமாக சென்றவன் யாரோ ஒரு பெண்ணை அழைத்து வர, எதுவும் புரியாமல் தானாக எழுந்து நின்றாள் நிராளினி.

கோமதியோ "என்னடா இது தலைய சரியா துடைக்கிறது இல்லையா?..." என்று அவளை நெருங்கி கேட்க

'போன கோவத்துக்கு அடிக்க ஆள் கூட்டி வந்தா பரவால்ல.. துடைக்க ஆள் கூட்டி வந்து இருக்கான்...' என்று அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

இதற்கிடையில் வேறு டவல் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து வாகீஷன் கோமதியின் கையில் கொடுக்க, அதை வாங்கியவர் நின்று இருந்த நிராளினி தோளை பிடித்து சோஃபாவில் அமர வைத்து, அவள் பின்வந்து தலையை துவட்டி விட,

உடனே அவர் கையைப் பிடித்தவள் "இல்ல வேணாம்.. நானே துடைச்சிக்கிறேன்..." என்று சொல்ல

"அத என் தம்பி சொல்லும் போதே செஞ்சு இருக்கணும்..." என்று கோமதி சொல்ல

(தம்பியா) என்று கேள்வியாக அவள் வாகீஷனைப் பார்க்க, அவள் விழி பாஷை அவனுக்கு புரியாதா என்ன "சுதாவோட அக்கா..." என்று சொல்ல, அவள் லேசாக தலையை ஆட்ட,

"ஏன் என்ன பாத்தது இல்லையா?..." என்று கேட்ட கோமதி அவளின் தலையை துடைக்க,

அவர் கையைப் பிடித்து அந்த டவலை வாங்கியவள் "ம்ம்.. எங்கேயோ பார்த்த ஞாபகம்.. ஆனா சட்டுனு நினைவு வரல..." என்று சொல்லிக் கொண்டே தானே தலையை துடைக்க,

வாகீஷன் மெல்லிய புன்னகையுடன் சமையலறை சென்றான். கோமதி அவள் அருகில் அமர்ந்தவர் "நானும் உன்ன நிறைய தடவ பாத்திருக்கேன்.. ஆனா அந்த அதிர்ஷ்ட தேவத நீதானு தெரியாம போச்சு பாரு..." என்று சொல்ல

"அதிர்ஷ்ட தேவதையா?..." என்று நிராளினி கேட்க

"ம்ம்.. வாகீயோட காதல் கிடைச்சிருக்குனா நீ அதிர்ஷ்டசாலி தானே..." என்று சொல்ல

அவருக்கு டீ தயாரித்து எடுத்து வந்த வாகீஷன் "ஆனா நான் துரதிஷ்டசாலிக்கா.. என்ட தேவதையோட காதலும் எனக்கு கிடைக்கல.. என்ட காதலும் அவளுக்கு தெரியல..." என்று சொன்னவாறு அவரிடம் கப்பை கொடுக்க

அதை வாங்கிக் கொண்ட கோமதி "நீயா ஏன்டா ஒரு முடிவுக்கு வர.. கேட்டு தெரிஞ்சிக்கிட்ட எனக்கே உன்ட காதல் புரியுது.. கூடவே இருக்கிறவளுக்கு புரியாமலா போகும்..." என்று வாகீஷனுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

நிராளினி பார்வை இப்போது வாகீஷனின் முகத்தில் படிந்து மீண்டது. அவன் முகத்தில் தான் எத்தனை காதல்... எத்தனை ஏக்கம்... அது அவள் கண்களுக்கு தெரிந்ததா என்பதுதான் கேள்விக்குறி.

நிராளினியின் அமைதியினால் தொடர்ந்து கோமதியினால் பேச முடியவில்லை.

டீயை குடித்து முடித்தவர் "நீ சமைப்பனு தெரியும்.. டீயும் சூப்பரா ஊத்தி இருக்க..." என்று வாகீஷனை பாராட்டிய கோமதி "கொஞ்சம் வேல இருக்கு வாகீ.. பின்னேரம் வாரேன்..." என்று விட்டு தன் வீட்டிற்கு சென்று விட

வாகீஷன் நிராளினிக்கு காலை உணவை கொடுக்க, அமைதியாக சாப்பிட்டாள். அவன் சாப்பிடவில்லை, ஒருவித ஆர்ப்பரிப்புடன் அவன் மனது இருந்ததால் சாப்பிட தோன்றவில்லை.

9 மணிக்கு மேல் சுதாகரனும் கீர்த்தனாவும் வர, கீர்த்தனாவை நிராளினுக்கு துணையாக விட்டுவிட்டு, நண்பர்கள் இருவரும் நகை கடைக்கு சென்றனர்.

எப்போது ஊருக்கு வர வேண்டும் என்று முடிவு எடுத்தானோ, அப்போதே தனக்கு தெரிந்த நகைக்கடை உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் தாலியை செய்யச் சொல்லி விட்டான்.

அவரும் நாள் பார்த்து செய்து வைத்திருந்தார். அந்த தாலியை வாங்கத்தான் சுதாகரனை அழைத்து வந்திருந்தான்.

அவன் காதல் நிலாவின் கழுத்தை அலங்கரிக்க போகும் 18 பவுனில் செய்த தாலியை வாங்கிப் பார்க்கும்போது அத்தனை பூரிப்பு அவனுக்குள் .

நண்பனின் கையில் இருந்த தாலியைப் பார்த்து "டேய் எப்படா செய்ய சொன்ன?..." என்று சுதாகரன் கேட்க

"ரொம்ப நாள் முன்னாடியே சொல்லிட்டேன் மச்சான்..." என்றவன் சந்தோஷமாக அதை எடுத்துக் கொண்டு வீடு வந்தான்.

நிராளினியோ கீர்த்தனாவிடம் "கீத்து நாளைக்கு என்ன வீட்ட போக விட்டுடுவாங்களா?..." என்று கேட்க

"நிராளி அண்ணாவ விட்டுட்டு போக போறியா?..." என்று அவள் கேட்க

"என்னடி கதைக்கிற.. அவர் எனக்கு ஆரு.. நான் இங்கேயே இருக்க.. தேவைக்கு இல்லாம கடத்தி என்னையும் என்ட வீட்டு ஆட்களையும் கலவரப்படுத்தினதுதான் மிச்சம்.. என்ட அண்ணாவ பத்தி உனக்கு தெரியும்ல.. நீங்க எல்லாம் நினைக்குற மாதிரி இது சாதாரணமா முடியாது..." என்று சொல்ல

"நீ திரும்பி போனா வாரப்போற பிரச்சினையை விட.. போகாம அண்ணா கூடவே இருந்தா வார பிரச்சினை குறையனுதான் தோணுது..." என்று கீர்த்தனா சொல்ல

"புரியாம கதைக்காத.. நான் போகணும்.. அதான் சொன்னாங்களே ரெண்டு நாள்ல அவர்ட காதல் புரியலைன்னா போக விட்டுடுவேன்னு..."

இல்லை என்று தலையாட்டிய கீர்த்தனா "உன்ன தன்னோட வச்சுக்க வேற ஏதாவது அண்ணா செய்வாரே ஒழிய.. உன்ன விட மாட்டாங்கனு தான் தோணுது..." சொல்ல

"என்ன செஞ்சாலும் நான் இருக்க மாட்டேன்..." என்று தன் முடிவில் உறுதியாக இருந்தாள் நிராளினி.

"சரி என்ட வீட்டு நிலவரம் என்னனு தெரியுமா...?"

"இதுவரைக்கும் நீ காணாம போனது வெளியே வரல.. ரகசியமா தேடிட்டு இருக்காங்கனுதான் நினைக்கேன்..." என்று கீர்த்தனா சொல்ல

அதுவரை சந்தோஷம். சத்தமே இல்லாமல் தன் குடும்பத்திடம் சென்று விட்டால் போதும் என்று மனதில் நினைத்தவள், தன் தாய் தந்தை பற்றிய கவலைகளை கீர்த்தனாவிடம் சொல்ல, அவளும் தோழிக்கு ஆறுதல் சொல்ல என்று நேரம் செல்ல, ஆண்கள் இருவரும் உள்ளே வந்தனர்.

வாகீஷனோ தன்னவளிடம் தனிமையில் தான் தாலியை காட்ட வேண்டும் என்று நினைத்தவன், பெண்களுக்கு தெரியாமல் தாலியை பூஜை அறையில் கொண்டு போய் வைத்து விட்டு வந்து சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான்.

அவன் மறைத்து மறைத்து எதையோ கொண்டு போனதையும், அவன் முகத்தில் இருக்கும் அதீத பிரகாசத்தையும் சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தாள் நிராளினி.

நண்பனின் எண்ணம் புரிந்தவன் போல, சுதாகரன் கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு செல்ல,

வாகீஷனோ மகிழ்ச்சியை ஸ்வீட் எடு கொண்டாடு என்பது போல் நிராளினிக்கு முதலில் இனிப்பாக ஏதாவது குடிக்க கொடுக்கலாம் என்று,

வெயிலுக்கு இதமாக ஃப்ரிட்ஜில் இருந்த ஐஸ்கட்டிகளை எடுத்தவன் இன்ஸ்டன்ட் ஜூஸ் மிக்சர் கொண்டு யூஸ் தயாரிக்க சமையலறைக்கு எழுந்து சென்றதும்.

வேகமாக எழுந்த நிராளினி சுவாமி அறை சென்று பார்க்க, அங்கு வித்தியாசமாக இருந்தது நகைக்கடை பைதான்.

'இத எதுக்கு மறைச்சி எடுத்துட்டு வந்தாரு...' என்று நினைத்தவள் அதை எடுத்து திறந்து பார்க்க, விழிகள் விரிந்து இதயம் வேகமாக துடித்தது பளபளனு ஜொலித்துக் கொண்டிருந்த தங்கத் தாலியை பார்த்து.

தாலி வாங்கி வந்து விட்டான் என்றால் கீர்த்தனா சொன்னது போன்று தன்னை அவனுடன் தக்க வைக்க தாலியை கட்டி விடுவானோ என்று பயமாக இருந்தது.

பாம்பை பார்த்து பயந்தவள் போல் அதை பதற்றத்துடன் அப்படியே வைத்தவள் மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

இண்டு நாட்களில் தன்னை விட்டுவிடுவான் என்று நம்பி இருந்தாள். இப்போது அது நடக்க வாய்ப்பில்லை என்று தோன்ற அழுகையாக வந்தது.

காதல் இல்லாமல் கட்டாய திருமணம் செய்து வாழ்வதற்கு அவளுக்கு துளியும் விருப்பமில்லை. அதற்காக பிரதீபன் மீது காதல் இருந்ததா என்றால் நிச்சயமாக கிடையாது. இந்த இரண்டு நாட்களில் வீட்டை பற்றி யோசித்தாளே தவிர அவளுக்கு நிச்சயம் செய்தவனைப் பற்றி எந்த கவலையும் வரவில்லை.

கையில் இரண்டு ஜூஸ் கிளாசுடன் சிரித்த முகமாகவே வாகீஷன் வரவும், 'ஓஹோ! தாலி போடப்போற சந்தோஷத்துல இருக்கானோ.. என்ன மீறி என்ட கழுத்துல எப்பிடி போடுறானெண்டு நானும் பாக்குறேன்...' என்று மனதில் பொருமிக் கொண்டாள் பெண்ணவள்.

என்ன இருந்தாலும் பதற்றமாக தான் இருந்தது. அதில் அதிகமாக வியர்க்க "நிரா என்னடா இப்டி வேர்க்குது..." கரிசனையாக கேட்டவன் "இந்தா இத குடி..." என்று அவள் கையில் ஒரு ஜூஸை குடுத்து விட்டு,

மற்றைய கிளாஸை டீபாயில் வைத்து விட்டு அறையினுள் சென்று குளிர்விப்பானை எடுத்து வந்து அவளுக்கு வாகாக வைத்தான்.

நிராளினி இருந்த பதற்றத்திற்கு வேகமாக கையில் இருந்த குளிர்பானத்தை குடித்து முடித்தாள்.

குடித்த பின்னர் தான் திடுக்கிட்டாள் 'ஐயோ இதுக்குள்ள குளுசைய கலந்து தந்து மயங்கின பிறகு தாலிய போட்டுவிட நினைச்சு இருப்பானோ.. இத யோசிக்காம குடிச்சிட்டேனே...' என்று தன்னை தானே திட்டிக்கொண்டாள்.

அவள் இருந்த பதற்றத்திற்கு உள்ளங்கை குளிர்ந்து, உடல் வெடவெடத்து வந்தது. வாகீஷன் அவள் மாற்றங்களை கவனிக்கவில்லை.

அவன் இருந்த சந்தோஷ மனநிலையோடு சிறு துள்ளலுடன் சுவாமி அறை சென்று, அவன் மனம் நிறைந்தவளை மனைவியாக தனக்கே தனக்கானவளாக மாற்றப் போகும் தாலியை கையில் எடுத்து பூரிப்புடன் பார்த்தான்.

அவளும் அவனும் வெவ்வேறு ஜாதி என்பதால் தாலி பதக்கத்தில் மாற்றம் இருக்குமோ என்றுதான் அவளிடம் காட்டி ஏதும் மாற்ற வேண்டுமா என்று கேட்கவும்,

நீ சம்மதித்தாலும் இல்லை என்றாலும் இந்த தாலியுடன் காதலாக காத்திருப்பேன் என்று தன் மனதை ஆழமாக வெளிப்படுத்தவுமே நினைத்தான்.

மற்றும்படி அவள் நினைப்பது போல் அல்லாமல்,, அந்த தாலியை அவள் முழு சம்மதத்துடன், கண்ணோடு கண் பார்த்து காதலோடு சங்கு கழுத்தில் பூட்ட வேண்டும் என்பதே அவன் விருப்பம்.

பயத்திலும், பதற்றத்திலும் அமர்ந்து இருந்த நிராளினி, வலது கையை பின்புறமாக மறைத்துக் கொண்டு புன்னகை முகமாக, அவளை காதலாக பாரத்தபடி நெருங்கும் வாகீஷனைப் பார்த்தவள் மனது படபடவென அடித்துக் கொள்ள, மிரட்சியாக அவனை பார்த்தபடி எழுந்து நின்றாள்.

வாகீஷனோ ஆசையாக அவளை நெருங்கி "நிரா கொஞ்சம் கண்ண மூடேன்..." என்று சொல்ல

"ஏன்?.. எதுக்கு?.. அதெல்லாம் ஏலாது..." என்றாள் அவசரமாக

சரி தன்னை இன்னும் புரிந்து கொள்ளாதவள், தாலியை தீடீரென பார்த்து சந்தோஷபடவா போகிறாள் என்று நினைத்தவன் சாதாரணமாக முதுக்கு பின் மறைத்து வைத்திருந்த தாலியை அவள் முன்பு காட்ட,

அவன் கையில் இருந்த தாலியை பார்த்தவள் எங்கே அதை கழுத்தில் போட்டு விடுவானோ என்ற பயத்தில் "ஏய் கிட்ட வராத.. த..தள்ளிப்போ..." என்று சொன்னவாறு விலகிச் செல்ல

அவள் கண்களின் மிரட்சியை பார்த்தவன் "நிரா என்னடா.. என்னாச்சு...?" என்று அன்பாக கேட்டு அவளை நெருங்க

"ஏய் அங்கேயே நில்லு.. கிட்ட வந்த கொன்னுடுவேன்..." என்று அவள் மிரள,

வாகீஷனோ எதையாவது பார்த்து பயந்துவிட்டாளா என்று சுற்றி முற்றி பார்த்தானே அன்றி, அவன் கையில் இருக்கும் தாலியினால் அவனைப் பார்த்து தான் மிரளுகின்றாள் என்பதை யோசிக்கவில்லை.

இந்த இரண்டு நாட்களில் அவனைப் பார்த்து அவள் பயந்து நடுங்கவில்லையே, அதனால் என்னவாயிற்று அவளுக்கென்று யோசனையோடு "நிரா!..." என்று வாகீஷன் கையை நீட்ட

அவன் தன்னைப் பிடித்து தாலியை போட்டு விடுவான் என்ற பயத்தில் பின் சென்றவள் கால் துடைக்க போட்டிருந்த மேட்டில் கால் இடறி விழப்போக,

அவளை இடையோடு கைபோட்டு அவன் பிடித்துக் கொள்ள "ஆ..ஆ..விடு.. விடு..." என்று அவள் திமிறினாள்.

அவன் ஒன்றும் வேண்டுமென்று பிடிக்கவில்லையே, இப்போது கூட நிலையாக நிற்காமல் தான் அவனை விடச் சொல்லி கைகளால் அவன் நெஞ்சில் அடித்துக் கொண்டிருக்கின்றாள்.

அவள் விலக, அவன் நிலையாக நிற்க வைக்க முயற்சிக்க என்று தள்ளுமுள்ளாடிக் கொண்டிருந்தனர் இருவரும்.

நிராளினி எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை. எங்கே தாலியை போட்டு விடுவானோ என்ற பயத்தில் கையை விட்டு காற்றில் துலாவ,

அவள் கைக்கு கிடைத்தது என்னவோ பிளாஸ்டிக் பூக்கள் வைத்து இருந்த மார்பிள் பூச்சாடி தான். கையில் அகப்பட்டது என்னவென்று கூட பார்க்காமல் ஓங்கி வாகீஷனின் தலையில் அடித்து இருந்தாள்.

"ஆஆ!..." என்றவன் தாலி இருந்த வலது கையை தலையில் வைத்து பிடிக்க, அவன் கையை தாண்டி அந்த தாலியை நனைத்தது செங்குருதி.

அந்த நிலையிலும் அவள் விழுந்து விடாமல் இருக்க, நிராளினியின் கொலுசு அந்த சீலை கால்துடைப்பானில் சிக்கி இருக்க, அவளை பிடித்து இருந்தவன் அந்த மேட்டை தன் காலால் பிடித்துக் கொண்டு, அவளை ஒற்றை கையால் லேசாக தூக்கி மற்றைய பக்கம் நிற்க வைத்தான்.

நிராளினி நிலையாக நிற்கவும், சுதாகரன் ஓடிவந்து வாகீஷனை பிடிக்கவும் சரியாக இருந்தது.
 
Top Bottom