• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தூரத்து வெண்ணிலா தாகம் தீர்க்குதே 14

STN - 62

New member
அத்தியாயம் 14

ஜீனியஸ் தனியார் மருத்துவமனை. எமர்ஜென்சி அறையில் வாகீஷன் இருக்க, வெளியே சுதாகரன் காத்திருந்தான்.

என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனால் கையில் ரத்தக்கரை படிந்த தாலியும், தலையில் காயத்துடன் வாகீஷனை பார்த்த நொடியில் இருந்து நிராளினி மீது கோபம் கோபமாக வந்தது.

மருத்துவமனை அழைத்து வரும்போது வாகீஷன் வலியில் முகம் சுணங்க "என்னடா ஆச்சு?.. பேய் புடிச்சிருச்சா அவளுக்கு..." என்று நிராளினிக்கு திட்டுவதற்கு ஆரம்பிக்க

"சுதா!..." என்ற வாகீஷனின் ஓங்கிய அழைப்பே கூறியது என்னவளை திட்டாதே என்று. அதிக கோபத்தில் தான் சுதா என்று நண்பனை அழைப்பான். எனவே வாயை மூடிக்கொண்டான்.

உள்ளே வாகீஷனுக்கு தலையில் நான்கு தையல் போட்டு, மருந்து வச்சு கட்டு போட்டு விட்டனர். வாகீஷன் வெளியே வர,

எதிராக இருந்த அறையில் இருந்து நிரஞ்சன் ஜெயந்தியை கை தாங்கலாக அழைத்து வந்து, "அம்மா கொஞ்சம் இங்க இருங்க.. மருந்து வாங்கிட்டு வாரேன்..." என்றவன் பார்மசி பக்கம் போக

வாகீஷனுக்கு நிரஞ்சனையும் தேவராசாவையும் தெரியும் ஜெயந்தியை பெரிதாக தெரியாது. நிரஞ்சன் அம்மா என்று அழைக்கவும் தான் நிராளினி அம்மா என்பது புரிந்தது.

பார்க்கவே சோர்வாக தெரிந்தார். கண்கள் முகம் வேறு வீங்கி இருந்தது. மகளை காணாமல் உடல்நிலை மோசமாகிவிட்டதோ என்று எண்ணி சற்று குற்றவுணர்வாக இருந்தது.

இரண்டு நாட்களாக பெற்ற பிள்ளை அதுவும் பெண் பிள்ளையை காணவில்லை என்றால் ஒரு தாயாக எப்படி பதறி துடித்து இருப்பார் என்பது புரியாமல் இல்லை. அதற்காக நிராளினியை விட்டு விடவும் மனது இடம் கொடுக்கவில்லை.

அவள் மட்டும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டால் இப்போதே ஜெயந்தியின் தவிப்பை போக்கிவிட முடியும். ஆனால் அவள் தான் முடியவே முடியாது என்று நிலையாக நிற்கின்றாளே.

நிரஞ்சன் மருந்துகள் வாங்கிக் கொண்டு ஜெயந்தியை அழைத்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட, செல்லும் அவர்களை பார்த்துக் கொண்டே சுதாகரனுடன் வேனில் தன் வீட்டிற்கு புறப்பட்டான் வாகீஷன்.

******
ஜெயந்தியை வீட்டிற்கு அழைத்து வந்த நிரஞ்சன் அவரின் அறையின் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு "அம்மா சும்மா கண்ட மாதிரியும் யோசிச்சு மனசையும், உடம்பையும் கெடுத்துக்காதீங்க.. நிராளிய கெதியா கண்டுபிடிச்சிடுவேன்..." என்று அவனுக்கு வராத ஆறுதலை தாயின் உடல் நிலையை கருத்தில் கொண்டு கூறினான்.

ஜெயந்திக்கு நின்று இருந்த அழுகை மீண்டும் சுரந்தது. "பொம்புள புள்ளடா.. காணாம போய் ரெண்டு நாளாச்சு.. இதுக்கு பிறகு கிடைச்சாலும் அவ வாழ்க்க..." என்று சொல்லி கலங்கி தவிக்க

"முதல்ல அவள் நல்லபடியாக கிடைக்கட்டும்.. அப்பாவும் நானும் இருக்கோம் அவ வாழ்க்கைய அப்படியே ஏனோதானோனு விடமாட்டோம்..." என்று சொன்னவனுக்கு அழுது கரையும் தாயை நினைத்து வருத்தம் இருந்தாலும், எரிச்சலாகவும் இருந்தது .

நிராளினி காணாமல் போன அன்று இரவே அவனுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் அனைத்தையும் கூறி, விசாரிக்க சொல்லிவிட்டான். அவரும் வெளியே தெரியாத வகையில் ரகசியமாக நிராளினியை தேடும்படி ஒரு சிலரிடம் பணித்து இருந்தார்.

என்ன ஒன்று கடத்தப்பட்டு இருந்தாலோ இல்லை காதலித்து ஓடிப்போயிருந்தாலோ வெளியூருக்கு தான் சென்றிருக்க வேண்டும் என்பதால் அவர்கள் தேடுதல் அந்த வகையில் தான் இருந்தது.

அந்த அதிகாரியும் இரண்டாம் நாள் காலை ஆன இன்று "நிரஞ்சன் உங்கட சிஸ்டர கடத்தி இருந்தா இந்நேரம் கடத்தினவன் ஏதாவது தகவல் தந்திருப்பான்.. உங்கள மிரட்டி காசு கேட்டிருப்பான்.. இல்ல பழிவாங்கனா கொலை பண்ணியிருந்தா வெளியே வந்திருக்கும்.. ஆனா இதுவர எந்த தகவலும் வரல..

...ஊர்ல உள்ள எல்லா இடமும் தேடியாச்சு எங்கேயுமே உங்க சிஸ்டரோட ஸ்கூட்டி இல்ல.. கடத்துற அவசரத்துல இருக்கிறவன் ஸ்கூட்டிய மறைச்சு வச்சிக்கொண்டு இருக்கமாட்டான்.. எனக்கு என்னமோ இது காதல் விவகாரமா இருக்குமோன்னு தோணுது.. நீங்க ஏன் அவங்க க்ளோஸ் பிரண்ட்ஸ்ட்ட விசாரிக்க கூடாது..." என்று சொல்லி இருக்க

நிரஞ்னுக்கும் அப்படி ஏதும் இருக்குமோ என்று சற்று சந்தேகம் வரத்தான் செய்தது. கீர்த்தனாவை விட நெருக்கமான தோழியான அபிநயாவிடம் நிராளினி காணாமல் போனதை சொல்லாமல்,

அவள் மனசு சரியில்லை என்று கொழும்பில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு சென்று விட்டதாகவும், அவள் மனநிலை சரியில்லாததற்கு காரணம் தெரியவில்லை என்றும், வீட்டில் பேசி இருக்கும் திருமணம் பிடிக்கவில்லை என்று ஏதாவது சொன்னாளா, இல்லை காதல் ஏதாவது இருந்ததா என்று கேட்க

அபிநயாவோ "இல்லண்ணா நிராளி இந்த கல்யாணத்துல விருப்பமாத்தான் இருந்தாள்.. காதல் எல்லாம் எதுவும் இல்லையே.. அவளே காதலிக்கிறேனு பின்னுக்கு வந்தவங்கள கூட கதைச்சே கழட்டி விட்டவளாச்சே..." என்று சொல்ல

தங்கை பின் காதல் என்று ஆண்கள் சுற்றியது புதிய செய்தி நிரஞ்சனுக்கு. தன்னிடம் ஏன் இதைப் பற்றி சொல்லவில்லை என்று நெருடலாக இருந்தது.

எனவே "நிராளி பின்னாடி ஆரெல்லாம் சுத்துனாங்கன்னு சொல்லேலுமா?..." என்று கேட்க

அபிநயாவும் தனக்கு தெரிந்த நான்கு பேரின் பெயரைச் சொல்ல, அதில் உள்ளவர்களை விசாரிக்க வேண்டும் என்று நிரஞ்சன் வேலையில் இறங்கும் போது தான், ஜெயந்தி ஃபோன் பண்ணி தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறியதும், அவரை நிரஞ்சன் மருத்துவமனை அழைத்து சென்றதும்.

நிரஞ்சனுக்கு இருந்த டென்ஷனுக்கு தாயை கையாள முடியாமல் "நேரத்துக்கு சாப்பிட்டு குலுசைய போடுங்க.. நான் வாரேன்..." என்றவன் அறையை விட்டு வெளியேற,

அவன் வீட்டினுள் நுழைந்தாள் லாவண்யா. நிராளியை விட ஒரு வயது இளையவள், இப்போதுதான் படித்து முடித்து பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பணியை தொடங்கியுள்ளாள்.

அவள் பல்கலைக்கழக படிப்பு முடியும் முன்னரே இரு வீட்டாரின் ஏற்பாட்டில் திருமணம் பேசி, நிச்சயமும் நடந்து முடிந்தாயிற்று. நிராளினியின் திருமணம் முடிந்த பின் தான் தன் திருமணம் என நிரஞ்சன் சொல்லிவிட்டதால் திருமணநாள் இன்னும் குறிக்கவில்லை.

இதோ அவன் எதிர்பார்த்த அந்த இனிய நிகழ்விற்கு சொந்தகாரியை தொலைத்துவிட்டு நிற்கின்றான்.

இத்தனை நேரம் சிடுசிடுவென விரைப்பாக குடும்ப கௌரவம், தங்கை வாழ்க்கை என இரும்பாக இருந்தவனுக்கு தன்னவளை பார்த்த மறுநொடி, தங்கை மீது இருந்த அடி மனதின் பாசமும் அதனால் உண்டான பயம், பதட்டம் என அனைத்தும் வெளியே வர,

ஹாலின் நடுவுக்கு வந்து யாரையும் காணாமல் "மாமி!..." என்று ஜெயந்தியை அழைத்தவளை நோக்கி வேகமாக சென்று, இறுக்கி அணைத்துக் கொண்டான்.

லாவண்யாவிடம் அன்று இரவே ஃபோனில் விடயத்தை கூறியிருந்தான். இன்றும் தாயின் உடல்நிலை சரியில்லை என்பதையும் கூறியிருக்க, தான் வாழப்போகும் வீட்டிற்கு துணையாக இருக்க வேண்டும் என, வேலையில் இருந்தவள் இரண்டு நாட்கள் விடுப்பு கூறிவிட்டு அப்படியே நிரஞ்சனின் வீட்டிற்கு வந்திருந்தாள்.

அவளே எதிர்பாக்காதது இப்படி சூறாவளியாக நிரஞ்சன் தன்னை சுருட்டி அணைத்துக் கொள்வான் என்பதை தான்.

எதிர்பாராத அணைப்பில் திகைத்து, பின் மலைப்பாம்பு போல் வளைத்து அணைத்து இருந்த விதத்தில் மூச்சடைக்க, மூச்சுக்கு திணறி, அதை விட யாரேனும் பார்த்து விட்டால் என்ன ஆகுமோ என்று பயந்து,

"அ..அத்தான்..." என ஆடவன் தோள் தட்ட "ம்ம்..." என்றானே ஒழிய விலகவே இல்லை .

"அத்தான் ஹால்ல இருக்கோம்..." என்று லாவண்யா சுற்றத்தை உணர்த்த, எனக்கு என்ன என்பது போல் அவள் கழுத்து வளைவில் இருந்து முகத்தை எடுத்து மிரட்டலாக ஒரு பார்வை பார்க்க,

லாவண்யா விழிகளை தாழ்த்த, மீண்டும் அவள் பூங்கழுத்தில் தலையை சாய்த்துக் கொண்டான். அவன் பிடிவாதம் அளுக்கு தெரியுமே, அதிலும் இது மாதிரி அணைப்பது ஒன்றும் அவனுக்கோ அவளுக்கோ புதிது இல்லை.

அவளை பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காதல் சீண்டல்கள் இருக்கும். ஆனால் இன்று காதலை விட ஆறுதல் தேடும் குழந்தையாக தான் தெரிந்தான் ஆறடி ஆண்மகன்.

எனவே பெண்ணவளும் மென்மையாக அவன் முதுகை வருடி கொடுக்க, நிரஞ்சன் விழிகள் இதமாக மூடிக்கொள்ள, அவன் முரட்டு அதரங்கள் மென்மையாக விரிந்து கொண்டன.

அவனது மென்புன்னகையை அரிதாகவே பார்க்க முடியும். அதையும் இப்போது யாரும் பார்க்கவில்லை, சில நிமிடங்களின் பின் அவனாகவே விலக

அவனைப் பற்றி எதுவும் கேட்காமல் "மாமிக்கு இப்ப எப்டி இருக்கு?..." என்று லாவண்யா கேட்க

"ம்ம்.. இப்போ ஓகே தான்.. சரியா சாப்பிடல, யோசிச்சு பிபி கூட்டிட்டு.. நல்லவேள தல சுத்தி கீழ விழாம உடனே சுதாரிச்சு எனக்கு கால் பண்ணாங்க..." என்று சொல்ல

"ம்ம்.. நான் மாமிய பாத்துக்கிறேன் நீங்க வேல இருந்தா பாருங்க..." என்று லாவண்யா சொல்ல

"ம்ம் பாத்துக்க.. வீட்ட சொல்லிட்டா வந்த?..." என்று கேட்க

"ஓம் அம்மாட்ட சொல்லிட்டேன்.. இரவைக்கு போகணும்..." என்க

"சரி நான் வந்து கூட்டிட்டு போறேன்.. இங்கேயே இரு.. ஏதும்னா கால் பண்ணு.. அம்மா ரூம்ல இருக்காங்க..." என்று சொல்ல வேண்டியவற்றை சொன்னவன் வாசல் பக்கம் திரும்ப

லாவண்யா அவன் வலது கையை தன் வலது கையால் பிடித்தவள் "கவலைப்படாதீங்க அத்தான்.. மச்சாளுக்கு எதுவும் ஆகி இருக்காது.. நல்லபடியா கிடைச்சிடுவாங்க..." என்று ஆறுதல் கூறி அவன் கையில் அழுத்தத்தை கொடுக்க

அவள் முகத்தையும் அதில் நர்த்தனமாடும் மீன் விழிகளையும் ஆழ்ந்து பார்த்தவன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு திரும்பி நடக்க,

லாவண்யாவும் ஜெயந்தியின் அறையை நோக்கி நடக்க, வீட்டு வாசலை தாண்டும் நேரம் நின்று திரும்பிய நிரஞ்சன் "லவி!..." என்று அழைக்க

அவளும் ஜெயந்தியின் அறைவாசலில் நின்று திரும்பி பார்க்க "லவ் யூ!..." என்று கம்பீரமும் ஆண்மையும் கலந்து ஆளை சாய்க்கும் குரலில் சொல்ல

லாவண்யா எப்போதும் போல் விழி விரித்து உறைந்து நிற்க, அவனும் எப்போதும் போல் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டான். அவன் சென்ற பின்னரே தலையை உலுக்கி கொண்டவள் ஜெயந்தியின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

*****
இங்கோ வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த சுதாகரனிடம் "மச்சான் ஹோட்டல் ஒன்டுல நிறுத்துடா நிராக்கு மதிய சாப்பாடு வாங்கிட்டு போகணும்..." என்று சொல்ல

வாகீஷனை திரும்பி ஒரு பார்வை பார்த்த சுதாகரன் ஒரு ஹோட்டலின் முன்பு வேனை நிறுத்திவிட்டு "என்ன வாங்க?..." என்று கேட்க

"பிரியாணி வாங்கு.. ஒரு பார்சலுக்கு முட்டை ரெண்டு வைக்க சொல்லு.. அவளுக்கு பிடிக்கும்..." என்று சொல்ல

"ஏன்டா உன்ன அடிச்சு மண்டைய பொளந்து இருக்கா அவ மேல உனக்கு கோபமே வரலையா? உன்னையும் உன்ட காதலையும் துளியும் புரிஞ்சுக்கலயேன்னு வெறுப்பு வரலையா?..." என்று கேட்க

"கீர்த்தனா உன்ன இதே மாதிரி அடிச்சு இருந்தா என்ன பண்ணுவ.. இதே கோபத்த கடைசி வரைக்கும் இழுத்து பிடிப்பியா? இல்ல அவளே வேணாம்னு வெறுத்திடுவியா?..." என்று கேட்க

சுதாகரனின் தலை இல்லை என்று இடவலமாக ஆடியது.

"அவ என்ன காயப்படுத்தின கோபம் கூட அந்த நிமிஷம் வரலடா.. ஆனா அவ என்ன பாத்து பயந்து விலகினது தான் வலிக்குது.. என்ட நிராடா அவ என்ன புரிஞ்சுக்கலனாலும் என்ட காதல ஏத்துக்கலனாலும் அவள எப்டிடா என்னால வெறுக்க ஏலும்.. கண் பாத்த நொடி இதயம் சொல்லுச்சு டா அவ உன்ட சொந்தம்னு.. அது எப்பவும் மாறாது.. சாப்பாடு வாங்கிட்டு வா போகலாம்.. நிரா பயந்து போய் இருப்பாள்..." என்று சொல்ல

"உன்ன பாத்துதான்டா கீத்துவ இன்னும் இன்னும் காதலிக்க தோணுது..." என்று சொன்ன சுதாகரன் இறங்கி சென்று சாப்பாடு வாங்கி வந்து, வேனை எடுத்தவன் வாகீஷனின் வீட்டின் முன்பு தான் கொண்டு வந்து நிறுத்தினான்.

நிராளினி போதும் என்று சொன்ன பிறகு அவள் மனநிலையையும் கருத்தில் கொண்டு அதற்கு மேல் பெண்கள் இருவரும் எதுவும் பேசவில்லை.

அமைதியாக ஆளுக்கு ஒரு எண்ணத்தில் அமர்ந்து இருந்தனர். வாகனத்தின் சத்தம் கேட்க ஹாலில் இருந்த கோமதியும் கீர்த்தனாவும் எழுந்து வாசல் வந்தனர்.

"என்னவாம்.. டொக்டர் என்ன சொன்னாங்க?..." என்று உள்ளே வந்த சுதாகரனிடம் வாகீஷனை பார்த்துவிட்டு கீர்த்தனா கேட்க

"ஒன்னும் இல்ல.. நாலு தையல், மருந்து கட்டி இருக்காங்க.. ரெண்டு நாள் கழிச்சு திரும்பவும் மருந்து கட்ட போகணும்.. நோவு குறைய குலுச தந்திருக்காங்க..." என்று விவரம் சொன்னபடி நண்பனுடன் உள்ளே வர

வாகீஷனை பார்த்த நிராளினி எழுந்து நின்று தவிப்பாக, அவன் முகம் பார்க்க முடியாமல் தலையை குனிந்தபடி கையை பிசைந்து கொண்டு நிற்க,

கோமதியோ "நாலு தையல்னா காயம் பெருசு இல்ல தான்.. ஆனா எவ்ளவு ரத்தம்..." என்று சொல்ல

"அது மத்தியானம் என்றதால ரத்தம் கூட வந்திருக்கும்.. காயம் பெருசு இல்ல.. எனக்கு நோகவும் இல்ல..." என்று நிராளினியை பார்த்துக் கொண்டே வாகீஷன் சொல்ல

"உனக்கு ஏன்டா நோவ போகுது.. உன்ட நிரா அடிச்சது இல்ல.. இதயும் காதல் பரிசா குறிச்சு வச்சுக்க..." என்று கோமதி நக்கலும் ஆதங்கமும் கலந்து சொல்ல

"ஓமம் என்ட நிரா எனக்கு எது செஞ்சாலும் அது காதல் சின்னம் தான்.. சரி வாங்க எல்லாரும் பிரியாணி சாப்பிடலாம்..." என்று வாகீஷன் கூப்பிட

அவன் என்ட நிரா என்றதில் எவ்வளவு முயன்று முடியாமல் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது நிராளினிக்கு.

அவன் கோபப்படுவான், திட்டுவான், குறைந்தது முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு தன்னை புறக்கணிப்பான் என்று நினைத்து இருக்க ,

அவள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தான் வாகீஷன். இல்லை இல்லை வாகீஷனின் காதல்.

"எதுக்கு பிரியாணி பார்ட்டி.. உன்ட நிரா உன்ன அடிச்சதுக்கா?..." என்று கோமதி கிண்டல் தொனியில் கேட்க

"இல்ல என்ட நிராக்காக இன்டைக்கு தாலி வாங்கி வந்தத கொண்டாட.. அத காட்டி நிராக்கு பிடிச்சு இருக்கா ஏதும் மாத்தனுமானு தான் கேட்க வந்தேன்.. அதுக்குள்ள இப்பிடி ஆயிடுச்சு..." என்று சொல்ல

அதற்கு மேல் தாங்காது என்று வேகமாக அறைக்குள் ஓடிச் சென்று கதவை சாத்திக் கொண்டாள் நிராளினி.

கண்களில் முட்டி நின்ற கண்ணீர் கன்னத்தில் சூடாக பாய்ந்தது. என்ன காரியம் செய்து விட்டாள் ஆசையாக தாலியை காட்டத்தான் வந்திருக்கின்றான்.

அதை புரிந்து கொள்ளாமல் கழுத்தில் போட்டு விடுவானோ என்று தானும் பயந்து, அவனையும் பதட்டமாக்கி, அடித்து காயப்படுத்தி, அந்த தாலியை அவன் இரத்தத்திலே குளிக்க வைத்து இருக்கின்றாள்.

அறையில் அவள் விசும்பி அழும் சத்தம் வெளியில் கேட்க, வாகீஷனுக்கு ஒன்றும் புரியவில்லை. கோமதியிடம் "அக்கா எனக்கு அடிச்சிட்டாள்னு நிராவ ஏசுனீங்களா?..." என்று கேட்க

"ஐயோ உன்ட நிராவ நான் ஏச ஏலுமா.. அதெல்லாம் எதுவும் ஏசல.. நீ எப்டியெல்லாம் அவள காதலிச்சேன்னு சொன்னேன்.. ஏற்கனவே உனக்கு அடிச்சிட்டோமேனு கவலையில இருந்தாள்.. நானும் இத சொல்ல குளர்வ வந்துட்டு போல..." என்று கோமதி சொல்ல

"அதுக்கு இல்ண்ணா.. இப்ப சொன்னீங்களே தாலிய நிராளிட்ட காட்ட தான் எடுத்து வந்தேன்னு.. அவ எங்க நீங்க கழுத்துல போட்டுவீங்களோனு பயத்துல அடிச்சிருப்பா.. இப்ப இல்ல என்டதும் கஷ்டமாகி இருக்கும்..." என்று கீர்த்தனா சொல்ல

என்ன காரணமோ சத்தம் போட்டு அழுவது அவன் காதல் தேவதையாச்சே. அவளை புன்னகை முகமாக மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவனால் அது முடியவில்லை என்று தன் மீதே கோபமாக வந்தது .
 
Top Bottom