• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நறுந்தண் சாரலே! - 2

ரோசி கஜன்

Administrator
Staff member


பனை, தென்னை இந்த இரண்டுமே தமிழ் நாட்டின் முக்கிய மரங்களில் ஒன்று. தமிழகத்தின் மாநில மரமான பனைமரம் பலராமனின் கொடியிலும் இருந்தது. பீமனின் கொடியிலும் இருந்தது. பனம்பூ மூவேந்தர்களில் சேர மன்னர்கள் சூடியிருந்தனர். இந்தியாவில் ஐம்பது சதவீத பனை மரங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. வெப்ப நிலப்பரப்பில் வளரக்கூடிய இதன் பயன்கள் பெரிது, தமிழகத்தின் ஆதி மரமான இதற்குப் பல பெயர்கள் உண்டு. பெண்ணை, தாலம், தாளி, போந்து, போந்தை, நீலம், கருந்தாள், கரும்புறம், ஓடகம், கருவிராகன் எனப் பல பெயர்கள் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் நுங்கும், கருப்பட்டியும் நல்ல உணவுப் பொருட்கள்.
-நறுமுகிலன்.

நறுமுகிலன் நொடிப் பொழுதில் நடந்துவிட்டிருந்த நிகழ்வின் அதிர்ச்சியில் இருந்தான். காலை நேரம் தோட்டத்தில் நடப்பது அவன் வழக்கம். அன்று அவனுடன் முயலைப் பிடித்துக் கொண்டு தன் அக்கா பெண் ஓடி வந்திருக்க, செடி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த நறுமுகிலன் நாயின் சத்தம் கேட்டதும் உடனே அவர்கள் அருகில் வரவும், அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேச, அவள் கீழே வழுக்கி விழ என அனைத்தும் கண நேரத்தில் நடந்து விட்டிருக்க, அந்தப் பெண்ணைத் தூக்கிவிட அவன் கம்பி வேலியைத் தாண்டிக் குதித்திருந்தான். அவளுடைய நாய் அவள் விழுந்ததில் அனத்தியபடி அவளைச் சுற்றி வந்தது.

“மதிக்கண்ணு என்னாச்சு?” என்றபடி நெகமம் சேலையை இடுப்பில் சொருகியபடி கையில் கூடையுடன் வந்து கொண்டிருந்தவர் மகள் விழுந்து கிடப்பதைப் பார்த்ததும் உடனே ஓடி வந்தார்.

அதற்குள் மதி மெல்ல எழ முயற்சிக்க அவள் மீண்டும் சேற்றில் வழுக்கி விழுந்தாள். இப்படி முன் பின் தெரியாதவன் முன் விழுந்து கிடப்பது அவளுக்கும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.

“ஹே! பார்த்துமா.” என அவளுக்குக் கை நீட்ட, அவளோ அவனுக்குக் கைக்கொடுக்கவில்லை. கை முழுக்க சேறாக இருந்தது.

அதற்குள் மகளின் அருகே ஓடி வந்திருந்தார் அந்தப் பெண்மணி.

“என்ன கண்ணு இப்படி விழுந்து கிடக்கிற? எந்திரிம்மா.” எனத் தன் மகளைக் கைப்பிடித்துத் தூக்கிவிட்டார் தெய்வானை.

மகள் வலியில் முகத்தைச் சுளிப்பதைக் கண்டவுடன், “ரொம்ப வலிக்குதா கண்ணு? காலையிலேயே போக வேண்டாம்னு சொன்னேன்ல அம்மா. இப்ப பாரு கண்ணு. படிக்குற பொண்ணு இப்படி விழுந்து கிடக்கலாமா?” என மகளை வாஞ்சையுடன் நோக்கினாள்.

மகள் எழுந்து நிற்க எதிரில் நின்றவனை நோக்கினார்.

“நீங்க ஏன் தம்பி இந்தப் பக்கம்?”

அவன் நடந்ததை விவரிக்க, தெய்வானை நாயை மிரட்டினார்.

“சும்மாவே இருக்க மாட்டியா ரூபா. இப்ப பாரு.” என அவளை விரட்ட அவள் மனிதர்களைப் போல் சிணுங்கிக் குரைத்தது.

“அம்மா, அவளைத் திட்டாதீங்க.” எனத் தண்மதி நாயிற்கு பரிந்து கொண்டு வர, உடனே ரூபி அவள் அருகே சென்று தலையை முட்டுக் கொடுத்து நின்றது. மூன்று பெண்ணினத்தையும் நறுமுகிலன் பார்த்தபடி நின்றான்.

“மதர் மாமா. வாட்டர். ஆன்ட்டி டர்ட்டி.” இருபத்தி மூன்று வயதுப் பெண்ணை நொடிப் பொழுதில் ஆன்ட்டியாக ஐந்து வயதுப் பெண் மாற்றி இருந்தாள்.

அவனிடம் திரும்பியவள், “ஸாரி சார். ரூபி முயலைப் பார்த்ததும் ரொம்ப எக்ஸைட் ஆகிருச்சு. இது ஒரு வேட்டை நாய் வகை. வேட்டையாடறது இல்லைன்னாலும் இப்படி சில நேரம் நடந்துக்கும்.” என விளக்கம் கொடுத்தாள்.

“இட்ஸ் ஓகே.” என அருகில் இருக்கும் நீளப் பைப் ஒன்றை எடுத்து அவள் கையில் கொடுக்க, முகத்தில் நீரை அடித்துக் கழுவ, சேற்றின் கறையிலிருந்து டெய்ரி மில்க் சாக்லேட் நிறத்தில் அவள் முகம் வெளிப்பட்டது.

“சரிம்மா. நான் வீட்டுக்குப் போறேன். பார்த்துக்கோமா.” என வேலியைத் தாண்டிச் சட்டென்று குதித்தவனிடம் அந்தக் குட்டிப் பெண் தாவியது.

“மதர் மாமா. சூப்பரா ஜம்ப் பண்ண!” எனக் குழந்தை கழுத்தில் புதைந்து கொண்டே பேச, அவனும் குழந்தையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். அவன் கண் பார்வையை விட்டு மறைந்ததும் உடையில் ஒட்டியிருந்த சேற்றைக் கழுவ ஆரம்பித்தாள்.

“ஏங்கண்ணு அடிபட்டிருச்சா?”

“அதெல்லாம் இல்லைம்மா. காலில் லைட்டா சுளுக்குன்னு நினைக்கிறேன். அது சரியாகிடும்.”

“எண்ணையைப் போட்டு நீவி விடறேன். சரியாகப் போயிடும். நீ கவலைப்படாத கண்ணு.”

சேற்றைக் கழுவ உதவியவர், “காபித் தண்ணி கொண்டாந்துருக்கேன். குடிச்சுட்டு அப்படியே மரத்தடியில் உட்காரு தங்கம். நான் மீதி வேலையை முடிச்சறேன்.”
மகள் நடக்கக் கையைப் பிடித்து உதவியவர், அவளை மரத்தடியில் அமர வைத்தார்.

“அவரு யாருமா? பக்கத்து தோட்டக்காரரா? புதுசா இருக்காரு.”

“ஆமா பாப்பா. முன்ன இருந்தவரு தோட்டத்தைக் கை மாத்தி விட்டுட்டாரு. இந்தத் தம்பி ஏதோ ‘உ டூப்’ வீடியோ போடுமாம். அப்புறம் வேற தொழிலும் பண்ணுதாம். நல்லாப் பேசுவாப்படி. நம்ம ஊரு பள்ளிக்கூடத்துக்கு நிறைய பணம் குடுத்துருக்காரு. நீ டாக்டருன்னு சொன்னதும் அவருக்குச் சந்தோஷம்.”

“யூ டியூப்மா அது.”

“ஏங்கண்ணு வீடியோ போடறது எல்லாம் ஒரு வேலையா? இந்தத் தம்பி அதில லட்சக் கணக்கில் சம்பாதிக்குமாம். ஊரில் பேசிக்கிட்டாங்க.”

“ஆமா அம்மா. இப்ப எல்லாரும் இந்த யூ டியூபர், இன்ஸ்டாகிராம்ல இருக்குறவங்க சொல்றதைத்தான் வாங்கறாங்க. அவங்க சொல்ற இடத்துக்குத்தான் போறாங்க. டாக்டர் சொல்றதைக் கேட்கிறாங்களோ இல்லையோ நான் நெட்டில் பார்த்தேன்னு நின்றுருவாங்க.”

“அப்ப அவங்களால உன்னோட வேலைக்கு ஆபத்தா கண்ணு?”

“அப்படி எல்லாம் இல்லைம்மா. உண்மையான தகவல்களைத் தெரிஞ்சுக்கிறது தப்பு இல்லை. இன்ஃபுளுயன்சர் சொல்றாங்கன்னு முட்டாள்தனமா எல்லாத்தையும் நம்புறதுதான் தப்பு.”

“சரி கண்ணு. இந்தா கருப்பட்டி காபி. நீ பிஸ்கட் தொட்டு பிரி.”

“எத்தனை மூட்டைப் பறிக்கணும் கண்ணு?”

“இன்னும் இரண்டு மூட்டை இருக்கும்மா.” அவள் பிஸ்கட் சுற்றியுள்ள நெகிழிக் காகிதத்தைப் பிய்க்கவும் ரூபி உடனே அவள் அருகில் வந்து நின்று நாக்கைத் தொங்கப் போட்டுத் தனக்கு பிஸ்கட் போடும்படி சிணுங்கியது.

“இவ ஒருத்தி பிஸ்கட் பாக்கெட்டைப் பார்த்தால் போதும். அவளுக்கு இரண்டு போடு மதிக்கண்ணு. இல்லைன்னா உன்னைச் சாப்பிட விடமாட்டாள்.”

வெப்பக்குடுவையில் இருந்த கொட்டை வடிநீரை ஊற்றியவள் மெல்ல அதன் வாசத்தை நுகர்ந்தாள். வெளியில் கிடைத்தாலும் அன்னை சுக்குக் கருப்பட்டியில் தரும் இந்தக் கருப்பட்டிக் காஃபிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது அவளின் எண்ணம். ரூபி பிஸ்கட் கேட்டுக் குழந்தையைப் போல் சிணுங்க, அவளுக்கு ஒரு பிஸ்கட்டை எடுத்துப் போட அது உடனே கவ்வி தன் கோரப் பற்களால் நொறுக்கித் தின்ன ஆரம்பித்தது.

அன்னை வேகமாகப் பூக்களைப் பறிப்பதைப் பார்த்தவளுக்கு ஈரத்துணி குளிரை ஏற்படுத்தியது. திடீரென்று தன் முன்னால் குதித்தவனை நினைத்துக் கொண்டாள்.

‘சார் பெண்கள் நம் நாட்டின் கண்கள் அப்படிங்கிற ரூல்ஸை ஃபாலோ பண்ணுவாரு போல. உடனே இந்தப் பக்கம் குதிச்சுட்டாரு. இதையும் வீடியோ எடுக்கலாம்னு குதிச்சு இருந்தால்?’ என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

அதன் பிறகு தன் கைப்பேசியில் பாடத்தைப் படிக்க ஆரம்பித்தவளுக்கு கால் வலி குறையவில்லை. அதை நீவி விட்டுக் கொண்டவளின் காலருகே படுத்துக் கொண்டது ரூபி. அதன் கால்கள் முழுக்க சேறு ஒட்டி இருந்தது.

***

மலை அடிவாரம் என்பதால் குளிர் அதிகமாக இருக்கும் அதனைத் தாங்கும் வகையில் இரட்டை அடுக்குச் சுவற்றுடன் பழைய கட்டுமான முறையில் கட்டப்பட்டிருந்தது அந்த வீடு.

தோட்டத்தின் நடுவில் நீச்சல் குளம் இருக்க, முன்புறம் நீளமாகத் திண்ணை போன்று இருக்க அதில் மர நாற்காலிகள் போட்டப்பட்டிருந்தன. திண்ணைக்கு நடுவில் படிக்கட்டுகள் வீட்டின் முன் கதவிற்கு இட்டுச் செல்ல அது வேலைப்பாடுகளுடன் இருந்தது. உள்ளே செட்டி நாடு வகையில் மழையும், வெளிச்சமும் உள்ளே வரும் வகையில் நடுவில் சதுர வடிவ முற்றம், அதைச் சுற்றிச் செடிகள், ஒரு பக்கம் ஊஞ்சல், ஒரு பக்கம் சமையலறை, நாற்காலிகள், மூன்று அறைகளும் இருந்தது. சமையலறை அருகே குட்டி பூசை அறையும், உணவு உண்ணும் மேசையும் இருந்தது. அங்கேயே படிக்கட்டு ஆரம்பிக்க, மேலே மாடியில் இன்னும் சில அறைகள் இருந்தது.

நறுமுகிலனும் குழந்தையும் வருவதைப் பார்த்ததும் செய்தித்தாளில் மூழ்கியிருந்த அவன் தந்தை அதை நிமிர்த்திப் பார்க்க முகிலனின் கையிலிருந்து இறங்கிய குழந்தை ஓடிச் சென்று தாத்தனின் மடியில் அமர்ந்து கதையை ஆரம்பித்தது. நறுமுகிலனின் தந்தை கணேசன் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இன்னும் வேலைக்குப் போவேன் என்று அடம் பிடித்தவரை இந்தக் காட்டு வீட்டில் அமரச் செய்து தோட்டத்தைப் பார்த்துக் கொள்ள வைக்கிறான் மகன்.

“தாத்து, பிக் டாக் பார்த்தேன். அது அட்டாக்...” என அவள் பேசிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்த முகிலன் நேராகச் சென்றது சமையலறையில் உதவியாளருடன் நின்று கொண்டிருந்த அன்னையிடம்தான்.

“ரம்மு...”

கையில் கரண்டியுடன் தன் மகனை நோக்கித் திரும்பினார் அவர். சிவப்பு நிற மால்குடி சேலையில் அங்கங்கே நரையோடி இருக்க, மங்களகரமான முகத்துடன் இருந்தார். அமைதியே உருவானவர் என்பதால் அந்த அமைதி அவர் முகத்திலும் தெரிந்தது.

“ரமணின்ற அழகான பேரை ரம்மு கம்மு கூட்பிடறியே தம்பி. இது நியாயமா?” என்றார்.

“செல்லப் பேரு தாயி. கண்டுக்காதீங்க. காஃபி கிடைக்குமா? அப்பதான் நானும் சமைப்பேன்.”

“நீ சமைச்சதை சாப்பிடறதுக்கு சமைக்காமலேயே இருக்கலாம் தம்பி. அதைச் சாப்பிட்டு வயித்துவலி வரதுக்கா?” எனத் தன் மகனைத் தோசைக்கல்லில் இருக்கும் தோசையாய் ரோஸ்ட் செய்தவர், அவன் கேட்டதைக் கொடுத்தார்.

அதைக் குடித்தபடி அருகில் இருக்கும் நாற்காலியில் ஓடி அமர்ந்திருக்க, தாத்தாவும், பேத்தியும் உள்ளே நுழைந்தனர்.

“பாட்டி, வெஜ்ஜிஸ் கொடுங்க. நானும் தாத்தாவும் கட் பண்றோம். ஆனியன் மட்டும் மாமாவுக்குக் குடுங்க.” என வேலைகளைப் பிரித்துக் கொடுத்தாள்.

“அக்கா மகளே இந்து! ஆனியன் மாமனுக்கா? இது அநியாயம்.” என்றான்.

வாண்டுவின் பெயர் இந்துலேகா என்பதால் முகிலன் அடிக்கடி தன் அக்கா மகளை வம்பிழுப்பான்.

ரமணி அம்மா அவள் கூறியபடி காய்கறிகளை மூவருக்கும் பிரித்துக் கொடுத்தார். குட்டி இந்துவும் மெல்லக் கத்தியால் காய்கறியை நறுக்க ஆரம்பித்தாள். அதன் பின் நறுமுகிலனும் அன்னைக்கு உதவ, தாத்தா பேத்தியைக் குளிக்க வைக்க அழைத்துச் சென்றார்.

“என்ன தம்பி ஆச்சு? பாப்பா காய்கறி நறுக்கும்போது டாகி டாகின்னு சொல்லிட்டு இருந்தாள்.”

மகன் நடந்த கதையைக் கூறினான்.

“அட! தெய்வானை பொண்ணு வந்துருக்கா? அவங்ககிட்ட இருந்துதான் ஆர்கானிக் சாம்பிராணி வாங்குவேன். நல்ல மணமாக இருக்கும். காயவைச்ச பூவில் மட்டும் செய்வாங்க. கெமிக்கல் இல்லாமல் இருக்கும். பொண்ணு டாக்டராம். ஊருக்கு வந்துருக்குப் போல. இந்த வருஷம் கடைசி வருஷமாக இருக்கும். தெய்வானைக்கு பொண்ணை நினைச்சு பெருமை. அந்தப் பொண்ணு தோட்டத்தில் வேலை செஞ்சுட்டேதான் படிக்குமாம். எப்ப ஊருக்கு வந்தாலும் தோட்டத்தில் வேலை செய்யுமாம். அவங்க அண்ணன் கொஞ்சம் சரியில்லைன்னு சொல்லிட்டு இருப்பாங்க. தங்கச்சியைப் பிடிக்காதாம்.” எனத் தெய்வானை குடும்பத்தின் கதையைப் பேசினார்.

“வீட்டுக்கு வீடு வாசப்படிம்மா.” என்றவன் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றான்.

***

ஏழு மணிவாக்கில் வீட்டை அடைந்தனர் தாயும் மகளும். பூ மூட்டைகளை நகரத்திற்குச் செல்லும் வேனில் ஏற்றிவிட்டு வந்தவர்களைக் கடுகடுமுகத்துடன் வரவேற்றான் தர்சன். தண்மதியின் அண்ணன்.

தன் அண்ணனைப் பார்த்ததும் தண்மதி அமைதியாகப் போக முற்பட்டாள்.

“ஏய் நில்லு! எதுக்கு இப்படி காலை ஊனி நடக்குற?”

“கீழே விழுந்துட்டாப்பா.” எனத் தெய்வானை பதில் கொடுத்தார்.

“கீழே விழுந்து காலை உடைச்சு வச்சால் அதுக்கு யாரு வைத்தியம் பாக்கறது? ஏற்கனவே டாக்டருக்குப் படிக்கறேன்னு செலவு. இதில இன்னும் வேற தண்டச் செலவு.”

”தர்சா, அப்படி பேசாத. அப்பா ஆசைப்படி அவ கவர்மென்ட் காலேஜில் படிக்குறாள். அப்பா இருந்திருந்தால் இன்னும் நல்லாப் படிக்க வச்சுருப்பார்.”

தர்சனுக்கு தந்தை என்றால் கொள்ளைப் பிரியம். தண்மதியை சிறுவயதில் இருந்தே அவனுக்குப் பிடிப்பதில்லை. அவளைக் கிள்ளி வைப்பது, கொட்டுவது இப்படி பல வேலைகள் செய்து வைப்பான். தந்தைக்கு தண்மதியின் மீது அளவு கடந்த பாசம். என்னவோ அதனாலேயே தர்சன் அவளை வெறுக்க ஆரம்பித்தான். தந்தை இறந்த பிறகு தண்மதி அவனைப் பொறுத்தவரை தண்டச் சோறு.

“இந்தக் கலருக்கே வரதட்சணைக் கொட்டிக் குடுக்கணும். இதில் காலையும் உடைச்சி வச்சால்…” என அவன் மீண்டும் பேச ஆரம்பிக்க, உடனே கரண்டியுடன் சமையல் அறையிலிருந்து வெளியே வந்தாள் தண்மதியின் அண்ணி ரோகிணி.

“இப்ப எதுக்கு காலங்காத்தால புள்ளையை திட்டிட்டு இருக்கீங்க? காலையில் வீட்டில் ஆவாத பேச்சு பேசிட்டு இருந்தால் நல்லா இல்லை பாருங்க. போய் ரெடியாகுங்க. வேலைக்குப் போகணும்.” எனக் கணவனை முடுக்கினாள்.

தர்சன் என்ன பேசினாலும் மனைவியிடம் அவ்வளவு சீக்கிரம் எடுபடாது. ரோகிணி அவனைப் போல் இல்லாமல் தண்மதியை நன்றாக நடத்துவாள். அதற்கு மிக முக்கியமான காரணம் தண்மதியின் தந்தை அவர்கள் குடும்பம் கஷ்டப்பட்டபோது உதவியவர், அவளை மருமகளாக அழைத்து வந்தாலும் மகளைப் போலவே நடத்துவார்.

“ரோகிணிம்மா, தண்மதி சின்னப் புள்ளை. தர்சனுக்கு அவளைப் பிடிக்க மாட்டேங்குது. நீயாவது அவளை நல்லாப் பார்த்துக்கோ.” என இறந்து போகும் சில நாட்களுக்குள் கேட்டிருந்தார்.

அதற்கு முன்பே தண்மதியைப் பள்ளி படிக்கும் போதே ரோகிணிக்குத் தெரியும். நன்றாகப் படிக்கும் தண்மதி பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து நீட் தேர்விலும் வெற்றிப் பெற்றிருக்க அவளுக்கு மருத்துவ சீட் கல்லூரியில் சுலபமாகக் கிடைத்திருந்தது. மாமனாரின் ஆசை மகளை ஒரு மருத்துவராக்கிப் பார்ப்பது. அதன்படியே மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்ட இரண்டாம் வருடத்தில் அவர் காலமாகி இருக்க, தண்மதி இவர்கள் பொறுப்பில் வந்தாள். வீட்டில் பெண்கள் மூவருக்குமே அப்படியொரு ஒற்றுமை இருந்தது.

“அவர் கிடக்குறாரு. நீ வா மதி.” என நாத்தனாரை அன்போடு அழைத்துச் சென்றாள்.

“அப்பளம் மட்டும் பொரிச்சுரு மதி. நானும் போய் ரெடியாகணும்.” என அவள் கூறிவிட்டுச் செல்ல மதியும் அவள் கூறியதைச் செய்ய ஆரம்பித்தாள். ஆனாலும் மனதில் அண்ணன் கூறும் வார்த்தைகள் சுருக் சுருக்கென்று ஊசி குத்துவது போல் வலிக்கவே செய்தன. அவள் அண்ணி சென்றுவிட இந்த அண்ணன் எப்போதுதான் பேசுவதை நிறுத்துவான் என்றிருந்தது.

“நீ உட்காரு கண்ணு. நான் பொரிச்சு எடுக்கறேன். கால் நீவிவிடறேன்.”

காலையில் தர்சனின் கைப்பேசி அலற அதைக் காதில் வைத்துப் பேசினான்.

“தம்பி, டாக்டருக்குப் படிச்ச பொண்ணு எப்படி அடங்கி வீட்டில் இருக்கும்? அதோட குடும்பத்தை விட்டு ஓடும். எங்களுக்கு வீட்டைப் பார்த்துக்குற மாதிரிதான் பொண்ணு வேணும்னு சொல்றாங்க.” என இடைத்தரகர் பேசத் தர்சன் பற்களைக் கடித்தான்.

“வீட்டை மெயிண்டெயின் பண்ணவா பொண்ணு வேணும் அவனுங்களுக்கு? அதுக்குத்தான் படிக்க வச்சதா? போய் வேலைக்காரியை வச்சுக்க சொல்லுங்க” தர்சன் எப்படியோ மனைவி ரோகிணி என்று வந்தால் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவான். மனைவி சொல்லே மந்திரம்போல் அவள் கேட்பதை செய்துவிடுவான்.

தங்கை வேலைக்குச் சென்றால் அந்த வருமானத்தில் வரும் தொகையில் ஒரு பகுதியை வைத்து இருக்கும் கடனை அடைக்கப் பயன்படுத்தலாமென நினைத்திருக்க, மாப்பிள்ளை வீடு இப்படிப் பேசவும் தர்சனுக்கு அந்தப் பேச்சு உவப்பில்லை.

அவள் படிப்போடு திருமணக் கடைமையும் இருக்க, தர்சனுக்கு கடுப்பாக இருந்தது. ஒரு பக்கம் தங்கையைச் சுமையாகப் பார்க்கும் தர்சன். மறுபக்கம் அக்காவின் மகளைத் தன் மகளென வளர்க்கும் நறுமுகிலன். இருவருக்கும் இடையில் தான் நிற்கப் போவது தெரியாமல் அறையில் அப்பளம் பொரித்துக் கொண்டிருந்தாள் தண்மதி.
 
Top Bottom