• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நான் அறிய நீ - 04

நிதனிபிரபு

Administrator
Staff member
திருகோணேச்சரர் ஆட்சி செலுத்தும் திருகோணமலை மண்ணில் ஆதவன் அவன் பணியை தொடங்கி இருந்தான்.

கடிகாரத்தின் சின்ன முள் எட்டை நெருங்குகிறது.

முந்தானை அடுக்கி ஊசி குத்திய பிரார்த்தனா, நிலைக் கண்ணாடியில் நிலானி வந்து பின்னால் நிற்பதைக் கண்டாள்.

"என்ன?" கொசுவத்தை அடுக்கியபடி வினவினாள்.

"ரெண்டாயிரம் ரூபா காசு வேணும்.."

இரவு பேசிய தொனிக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

'அவர் யார் எண்டு தெரியுமா? டீசன்ட் அவர். அவர பற்றி நீ கதைக்காத' என்று அவள் கூறியதில் ராத்திரி உறக்கம் துலைந்து,

'உன்ர வாழ்க்கையை பார்த்துட்டு நீ போ' என்றதில் தலைவலியே வந்திருந்தது.

வாட்டசாட்டமாக ஒரு பையனைப் பிடித்து விட்டாள். தன் தேவைகளை அவனை வைத்து பூர்த்தி செய்து கொள்வாள் என்ற அச்சம் நீங்க, தங்கை தன் செலவுக்கு பணம் கேட்பது பிரார்த்தனாவுக்கு முரண்பாடான வகையில் ஆசுவாசம் அளித்தது.

சம்பள திகதி 24 வரை கையிருப்பை இழுத்து பிடிக்க வேண்டிய அவசியத்தை எண்ணி "என்னத்துக்கு?" என்று கேட்டாள்.

முகம் சிவந்தது நிலானிக்கு.

"சும்மா தண்டத்துக்கு வீட்ட இருக்கிறவங்களுக்கே காசு தேவை வருது. கணக்கு பார்க்காம நீயும் குடுக்கிறாய். கொலிஜ் போறன் நான். ஐசிடி கோர்ஸ் செய்றன். ஒவ்வொரு நாளும் க்ளாஸ் போய் வாரன். எனக்கு தேவை படாதா? அவசரத்துக்கு ஒரு ஓட்டோ பிடிக்க கூட கையில காசு இல்ல. யார் அது பைக்ல கொண்டு வந்து விட்ட எண்டு கேள்வி மட்டும் கேட்க தெரியுது உங்களுக்கு?" நாசித் துவாரம் விடைக்கக் கேட்டாள் நிலானி.

காலையில் அவள் வேலைக்கு கிளம்பும் போது நூறோ இருநூறோ கறக்காமல் விட மாட்டான் தம்பி விமலன். பள்ளிப் படிப்பை முடித்து கிரிக்கெட் சினிமா என உதவாத நண்பர்களுடன் ஊர் சுற்றும் இந்தக் காலகட்டத்து இளைஞன் அவன்.

இளமையில் வறுமை கொடியது என்பது ஔவை வாக்கு. நிலானிக்கு தன் வீட்டு நிலைமை கொடியதும் கௌரவ குறைச்சலும் கூட. குடிகார அப்பா, பொறுப்பில்லாத தம்பி, நோய் கொண்டு முப்பொழுதும் வெறுப்பை கொட்டும் தாய் எல்லோரையும் அவள் வெறுக்கிறாள்.

பத்து ரூபாய்க்கும் கணக்கு கூற வேண்டிய தன் நிலையை அடியோடு வெறுக்கிறாள்.

தெளிவான புத்திசாலித் தங்கை மீது பொங்கும் கோபத்தை அடக்கிக் கொண்டு "அப்பாக்கும் விமலுக்கும் பொறுப்பில்ல நிலானி. உனக்குமா இல்ல? கரண்ட் பில், தண்ணி பில், கடைக்கு மாச சாமான் வாங்கின காசு, அம்மாக்கு மருந்து, பேங்ல இருக்கிற ஈட்டுக்கு வட்டி எல்லாம் என்ர ஒருத்திட சம்பளத்தில தான் சமாளிக்கணும். நீயும் படிச்சி முடிச்சி ஒரு சின்ன வேலைக்காவது போனா தான் கஷ்டம் கொஞ்சம் குறையும்.."

"ஓம்! ஓம்! நீ தேயுறது காணாம நானும் இனித் தேயோணுமா? நான் படிச்சிட்டு வேலைக்கு போக தான் போறன். ஆனா ஒரு ரூபா தர மாட்டன் இந்த வீட்டு ஆம்பிளைகளுக்கு தண்டச் சோறு போட"

நிதானமாக அவளைப் பார்த்த பிரார்த்தனா கை மடக்கி மணிக்கூடைக் கட்டி "எவ்வளவு வேணும்.." என்றாள்.

"ரெண்டாயிரம்.."

பர்சில் இருந்து இரண்டு ஐநூறை உருவிக் கொடுத்து "இத வச்சிரு.. முடிஞ்சதும் கேளு. நேற்று மாதிரி பைக்ல வந்து தான் உன்ர சிக்கனத்த காட்டோணும் எண்டு இல்ல. டைமுக்கு பஸ் இருக்கு. அதுலயே வா.." என்றாள்.

இந்த ஆயிரத்திற்கு எவ்வளவு கதை கேட்க வேண்டி இருக்கிறது என்ற எரிச்சலுடன் நிலானி அகன்றாள்.

உணவுப் பொதி தண்ணீர் போத்தல் எடுத்து வைத்துக் கிளம்பிய பிரார்த்தனா கூடத்தில் படுத்திருந்த அப்பாவைக் கடந்தாள்.

வருணனுக்காக இரவு வைத்த உணவு தீண்டப்படமலே காலையில் தெரு நாய்க்கு கொட்டினாள். விடிந்ததும் ஊற்றி வைத்த தேநீர் ஆறி இருக்கிறது அவர் தலைமாட்டில்.

"சாப்பிட்டு குளுச போடுங்க" ராஜேஷ்வரியிடம் கூறினாள்.

"இந்த வீட்டுல இருந்த ரேடியோ பெட்டியக் காணல்ல. கேட்டியா நீ? அப்பனோ மகனோ எடுத்த போய் வித்து வாயில போட்டுட்டாங்க. என்ன ஏது எண்டு கேக்குறியா நீ? ஒரு ரேடியோ வேண்டி வைக்க ஏலுமா இந்த வீட்டு ஆம்பிளைகளுக்கு" ராஜேஸ்வரி தனது ஸ்பீக்கரைத் திறந்தார்.

25,000 ரூபாய் கேட்டுக் கிடைக்காத வருணன் இன்னும் என்ன என்ன செய்யக் காத்திருக்கிறாரோ என்ற பயம் பீடித்தது. ரேடியோவை கேட்டு ராஜேஸ்வரி கணவருடன் தர்க்கம் புரிந்து சண்டையை இழுத்து வைக்கக் கூடாது என்று வயிற்றில் பயப் பந்து சுழன்றது.

இன்றும் பஸ்ஸில் சன நெரிசலில் நின்று தான் வந்தாள் அலுவலகத்திற்கு. விரல் அடையாளம் வைத்து வரவுப்பதிவேட்டில் ஒப்பமிடும் போது தனக்கு முன்புள்ள கையொப்பத்தை கவனித்தாள்.

'வரோதயன்' என தமிழில் கூட்டாக கிறுக்கி இருத்தது.

தலை தூக்கிப் பார்த்தாள். இறுதி வரிசையில் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் வரோதயன்.

பஸ்ல வந்தாரா..

கவனிக்கல்லயே நான்!

அம்மா, அப்பாவோடு என்ன வாக்கு வாதம் செய்கிறாளோ..

பார்வையை தழைத்து தனது மேசைக்கு வந்தாள்.

"குட் மோர்னிங் பிரார்த்தனா.." பக்கத்தில் வசுமதி வணக்கம் வைத்து சலசலத்தாள்.

சிஸ்டத்தை ஒன் செய்து மானிட்டர் பார்த்தவள் முதுகில் ஒரு குறுகுறுப்பும், பின் கழுத்தில் ஒரு கூச்சமும்.

ஒன்பதுக்கு இரண்டு நிமிடம் இருக்கும் போது ஓடி வந்த ரமணி கைப்பையை வைத்ததும் பிரார்த்தனாவை அழைத்தார்.

மஞ்சள் பூசிய முகத்தின் இலட்சணம் இன்றும் பிரார்த்தனாவை கவர்ந்தது. "குட் மோர்னிங் அக்கா"

"குட் மோர்னிங், பாலு சாப்பாட விட்டுட்டு பொயிட்டார் தனா.. காலம சாப்பிடாட்டி கேஸ்ட்ரிக் வந்து படாத பாடு படும் மனிசன்"

"வந்து வாங்கிட்டு போக சொல்லுங்க.."

"சொல்லிட்டன். நான் மீட்டிங்ல இருப்பன். அவர் வந்தா குடுத்து விடுங்க" உணவு பொதியை அவளிடம் ஒப்படைத்த ரமணி A.O உடன் PD அறை சென்றார், புதிய அலுவலர்களுக்கான பணி பகுப்பு பற்றி ஆலோசிக்க.

ரமணியின் கணவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் கிழக்கு மாகாண தலைமை செயலகத்தில் கிளார்காக பணிபுரிகிறார். அவர் பணி இடமும் இதே திருகோணமலை டவுனில் தான் அமைந்துள்ளது, சில கிலோமீட்டர்கள் தொலைவில்.

அனைவருடனும் இனிமையாக பழக்கக் கூடிய ரமணியின் நெருக்கமான நட்பு வட்டத்தில் பிரார்த்தனாவும் ஒருத்தி. தனா என்றால் தனிப்பரிவும் பாசமும் ரமணிக்கு. பள்ளிக் கால நட்புக்கு பிறகு அவளை தனா என சுருக்கி அழைக்கும் ஒரே ஆள் ரமணி.

பாலுவை பொறுத்த வரை மனைவிக்கு பிடித்தமானவர்களை அவருக்கும் பிடிக்கும். வயது பாகுபாடு இன்றி நட்புப் பாராட்டுவார்.

'என்ன நம்பி வீட்ட விட்டு வந்தவர் தனா.. என்னையும் புள்ளையையும் தவிர அவருக்கு யாரு இருக்கா. அம்மாக்கு அவர கொஞ்சமும் பிடிக்காது. அவருக்கும் அவைய கண்ணுல காட்டாது. ஆயிரம் கருத்து வேறுபாடு ஆயிரம் சண்டை வந்தாலும் ஒருத்தர ஒருத்தர் விட்டு இருக்க ஏலாது. இறுக்கி கட்டி வச்சிட்டான் கடவுள்' இப்படி ரமணி அடிக்கடி சலித்துக் கொள்வதிலும் காதல் தெரியும்.

அந்த காதலுக்குரியவர் மீது மிகுந்த மரியாதை பிரார்த்தனாவுக்கு. பாலு என்ற ரமணியின் பிரத்தியேக அழைப்பை பிரதி எடுக்காது 'பாலா அண்ணா' என்று கூப்பிடுவாள் அவரை.

"ஹாய் தனா.." நிர்வாக பிரிவின் கவனத்தை ஈர்த்து நுழைந்தார் பாலா.

குறுஞ்சிரிப்புடன் எழுந்தவள் உணவை எடுக்க, அவளைத் தாண்டி அவர் பார்வை பின்னால் பாய்ந்து பிரகாசித்து "வரா!!?" என்று கை காட்டிக் கூவினார்.

வரோதயன் ஆச்சரியம் மிக எழுந்து முன்னால் வந்தான்.

"நீ என்னடா செய்றாய் இங்க?"

"டிவலப்மண்ட் ஒஃபிஸர் அப்பொய்மெண்ட் கிடைச்சிருக்க ண்ணா.."

"பாரன், நம்மட பெடியனுக்கு கிடைச்சிருக்கு, அதுவும் ரமணிட ஒஃபிஸ்ல" சிலாகித்த பாலா வரோதயன் கை பற்றி குலுக்கினார்.

"ரமணி சொன்னா நேற்று புதுசா ஆறு பேர் வந்திருக்காங்க எண்டு. நீயும் அதுல ஒருத்தனா.. சந்தோஷம்டா. ஊர்ல இருந்து தான் வாரியா.. சித்தப்பா மரக்கறி காரன் எப்டி இருக்கார்?"

"நல்லா இருக்கார்.."

"இது யாரு தெரியுமா தனா, எங்கட அப்பாட அண்ணா, எனக்கு பெரியப்பா, அவர் கல்யாணம் செய்த பெரியம்மான்ர தங்கச்சிட மகன் தான் இவன்.." அவர் அவனை பிரார்த்தனாவுக்கு அறிமுகம் செய்ய, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

"ஊருல எல்லாரும் சுகம் தானே வரா.. எங்கடா, ஊர் பக்கம் வந்தே கன காலமே நான்.. வேலை குடும்பம் எண்டே காலம் போகுது. மகள் ஏ.எல் படிக்கிறா. வார வருஷம் எக்சாம் செய்றா. க்ளாஸ் ஏத்துற இறக்கிற எண்டு ஓய்வில்லாத ஓட்டம்.. உனக்கு தெரியாது என, CC ரமணி என்ர மிஸிஸ் எண்டு.. ரமணி எங்க தனா?"

"அக்கா மீட்டிங்ல.."

"இப்ப பார்க்க ஏலாதோ.."

"டைம் எடுக்கும் அண்ணா மீட்டிங் முடிய. நீங்க சாப்பிட நேரம் போகுதே.. கேஸ்ட்ரிக் ஆகிரும் எண்டு அக்கா பயந்தவ.."

"விட்டா இவன் கதைச்சிக்கொண்டு நிப்பான் எண்டு துரத்திறியோ?" சிரித்த பாலா, வரோதயனை பார்த்து புன்னகைத்தார்.

அவன் கை இன்னும் அவர் கைக்குள் இருக்க, தன் மண்ணின் மைந்தனுக்கு தன் ஊர்கார பையனுக்கு அரசாங்க நியமனம் கிடைத்துள்ள சந்தோஷம் அவர் ஆதூரமான கை பிடியில் தெரிந்தது.

மொத்த பிராஞ்சும் தங்களை வேடிக்கை பார்க்கிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் அவன் எப்படி வந்து போகிறான் சாப்பாட்டு தேவை எல்லாம் எங்கனம் பூர்த்தி செய்து கொள்கிறான் போன்ற விபரங்கள் அனைத்தும் கேட்டறிந்தே விட்டவர் "தனா, பார்த்துக் கொள்ளுங்க எங்கட பெடியன. எங்கட ஊர் பிள்ளைகள் எல்லாரும் அப்பாவிகள்.. இப்ப இப்ப தான் படிச்சி வெளிக்கிட்டு வெளியில வாராங்கள். வரா, நம்மட பிள்ள தான் தனா. தங்கமான பிள்ள. வேலையில என்ன சந்தேகம் எண்டாலும் கேளு. ரமணி இருக்கிறா.. நான் அவட்ட சொல்லுவன்... சந்திப்பமடா.."

தொடங்கினால் அருவி போல் கொட்டும் பாலசுப்பிரமணியம் அங்கிருந்து கிளம்பும் போது ஒருவரை ஒருவர் பார்த்தும் கொண்டனர் வரோதயனும் பிரார்த்தனாவும்.

மீட்டிங் நடுவில் எழுந்து வந்த ரமணி "வலயகல்வி பணிப்பாளர்களுக்கு Zoom மீட்டிங் தனா.. நான் ஷோட் ஈட்ஸ் எடுத்துட்டன் பசி இல்ல. லஞ்ச் சாப்பிடுங்க நீங்க. பாலு கோல் எடுத்தார் தனா, வரோதயன் பாலுட சொந்த கார பெடியனாம். அவங்கட அம்மா யாழ்ப்பாணம். அப்பா மூதுர். மூதூர்ல இன்னும் உறவு இருக்கு எண்டு இண்டைக்கு தான் தெரியும் எனக்கு.." என்றவர் தனது மதிய உணவு பொதியை அவள் கையில் தந்துவிட்டுப் போனார்.

கல்வித் திணைக்களத்தில் நிர்வாக கூட்டங்கள் சகஜம். நினைத்த பொழுது ஒன்லைன் ஆலோசனையை கூட்டி விடுவார் பி.டி. கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் உண்டான கோளாறு இது. இன்றும் தொடருகிறது.

மதிய உணவு இடைவேளையில் சகலரும் கலைய, ரமணி இல்லாத வெறுமையுடன் டைனிங் ரூம் செல்ல விரும்பாத பிரார்த்தனா கிடப்பில் உள்ள ஃபைல்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆள் இல்லா கிளையில் அவள் கைபேசி இசை அபஸ்வரமாக ஒலித்தது.

எடுத்துப்பார்க்க 'அம்மா'

வயிற்றில் பய அமிலம் சுரக்க, ஏற்றவள் கை நடுங்கியது. தலை விறைத்தது போல உட்கார்ந்தவள் கைப்பையை எடுத்துக் கொண்டு படி இறங்கினாள்.

வெயில் சரீர் என சுட, பிரதான வாயிலில் வந்து எதிர் பக்கம் மாறி வாகனம் தேடி, தம்பிக்கு அழைத்தாள்.

விமலன் பதில் இல்லை. உச்சி வெயிலில் வியர்த்த பெண் முகம் துடைத்து, ஃபோன் பார்த்துக் கொண்டே நடந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதப் பார்த்தது.

மோட்டார் சைக்கிள் காரனிடம் பச்சையாக ஏச்சு வாங்கியும் அது உறைக்காமல் ஒரு மன்னிப்பு கூட கோராமல் விலகி நடந்தவள், பின்தொடர்ந்து போன பைக்கை உணரவில்லை.

ஆட்டோ தேடி பரபரத்தவளை தயக்கம் உதறி அணுகியது நீல ப்ளசர் பைக்.

"பிரார்த்தனா மிஸ்.."

நின்று திரும்பியவள் கண்களில் பயம், பதட்டம், நீயா எனும் தயக்கம், சரி நீதானே என்ற ஆசுவாசம் எல்லாம் குளைத்துக் கொட்டிக் கிடந்தது.

"எங்க போகோணும்.. ஏதாவது எமர்ஜன்சியா?"

தலை அசைத்தவளின் விழி, தேக்கி வைத்ததை மளுக் என உதிர்க்க அவன் அதை காணும் முன்பே, முதுகு காட்டி மறைத்துத் துடைத்துத் திரும்பினாள்.

"ஆட்டோவ காணேல்ல. ஸ்டான்ட் எங்க இருக்கு எண்டு தெரியாது. நான் கொண்டு போய் விடவா?"

பிரார்த்தனா அடுத்த நொடி வரோதயன் வண்டியில் ஏறி வழி சொன்னாள்.

கணவனிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டி நெற்றி வெடித்து இரத்தவாறில் சரிந்திருந்த ராஜேஷ்வரி மயக்க நிலைக்கு போய்க் கொண்டிருந்தார்.
 
Top Bottom