அத்தியாயம் 2
மதுரன் இருவரையும், ‘ஙே’ என அதிர்ந்து பார்க்க, அங்கு லஷ்மி நிலாயினி, பத்து நிமிடம் பொறுமை காத்தவள் அதற்குமேல் முடியாமல் வெடுக்கென்று உள்ளே எழுந்துச் சென்றுவிட்டாள். ஆரன், அவள் உள்ளே செல்லும் வரை கையை கட்டியபடி அவளை பார்த்தே நின்றிருந்தவன், அதன் பிறகே மதுரனிடம் திரும்பினான்.
“லஷ்மி உங்கள முறைச்சால்ல சார்?” என்றான் மதுரன் சந்தேகமாக,
“ஆமா ரெண்டு ஆம்பள பசங்க, இப்படி நின்னு விடாம பாத்தா, பொம்பள பிள்ள அது, முறைக்காம என்ன செய்யும்?” என இப்போது அந்த ஏரியாவிலிருக்கும் வீடுகளை சுற்றிவர பார்த்தான். எல்லாமே நடுத்தர மக்கள் வசிக்கும் வீடுகள் தான்.
‘இவர எந்தபக்கம் சேக்றதுனே தெரியலையே ஆண்டவா!’ என நினைத்த மதுரன், “நா பாக்கவே இல்ல சார். லஷ்மியும் உங்கள தான் முறைச்சா என்னைய இல்ல. இப்படி யாரையும் அவ முறைக்குறதுக்கு கூட பாத்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்ல சார்” என்க,
“இங்க எல்லாரும் மேக்ஸிமம் சொந்த வீடு தான்ல மதுரன்?” என்றான் சம்மந்தமில்லாமல் ஆரன்.
“சார் லஷ்மி கூட எதுவும் சண்டையா? லஷ்மி தான் உங்க கிட்ட எங்க லவ் பத்தி எதுவும் சொன்னதா?” என்றான் பயந்து கொண்டு, “சந்திராட்ட லஷ்மி எதாவது கேட்டான்னா, சந்திரா என்னைய கொன்றுவா” என்றான் பாவமாக,
முறைத்த ஆரன், “உன் லவ் ஸ்டோரிய கலெக்ட் பண்ணதான் ட்ரான்ஸ்பெர் குடுத்து என்னைய இங்க வரவச்சாங்களா?” என கேட்க,
“இல்ல லஷ்மி முறைச்சுட்டு போனாளே?” என மெதுவாக இழுக்க,
“அது ஒரு குட்டி ஸ்டோரி மேன்” என சலித்தான் ஆரன் விஷ்வேஷ்வரன்.
“ஸ்டோரியா? எனக்கு தெரியாம எப்படி?” என மதுரன் அதிர,
“ஆமா! உனக்கு ஏன் தெரியணும்?”
“சார் ப்ளீஸ்”
“மதுரன். நா இங்க வந்த ஒரு வாரத்துல, நைட்டு ஒரு ஒன்பது மணி இருக்கும் நா இங்க வீட்டுக்கு வர்றதுக்கு நம்ம ரோட்டுக்குள்ள திரும்பினேன், அந்த நிலா பொண்ணும் திரும்பினா, அதும் லெஃப்ட்டுல இன்டிகேட்டர போட்டுட்டு ரைட்ல ஃபுல் ஸ்பீடுல திரும்பி என்னைய ஓவர்டேக் பண்ண பார்த்து, நா கொஞ்சம் வண்டிய வளைச்சதும், பொத்தட்டின்னு வண்டியோட விழுந்தாச்சு, கைய கால ஒடச்சுட்டு தான் கிடப்பான்னு இறங்கி போய் பார்த்தேன், ‘எதுக்கு சார் வண்டிய ரைட்ல வளைச்சீங்க அதான் நா விழுந்துட்டேன்’னு அங்கன இருந்து எந்திக்க முடியல ஆனா என்கிட்ட எகிறிட்டு வர்றா, ‘நீ தப்பா இன்டிக்கேடர போட்டு திருப்பிட்டு என்னைய ப்ளேம் பண்ணுவியா? லைசென்ஸ் இருக்கா உனக்கு? வண்டி ஓட்ட தெரியுமா தெரியாதா? நீ எப்படி வருவன்னு பாத்துட்டே வர்றது தான் ரோட்ல போறவனுங்களுக்குலாம் வேலையா? ட்ரைவிங் ரூல்ஸ் சொல்லி தரலையா உனக்கு? இப்படித்தான் சைட் கட் பண்ணும்போது ஓவர்டேக் பண்ணுவாங்களான்னு’ போட்டு நல்லா திட்டிவிட்டுட்டேன். அதுல இருந்து அந்த நிலாபொண்ணு இப்படித்தான் முறைச்சுட்டு திரியிது. எங்கிட்டயே போலீஸ்காரன்ற பயம்லா இல்ல. அதவச்சு தான் சொல்றேன், நீயா சிக்கட்டும்னு தான் வெயிட் பண்ணுது அந்த பொண்ணுன்னு” என்றான் தெளிவாக, அன்று அவ்வளவு திட்டியபிறகும் அவன்தான் அவளுக்கு கைக்கொடுத்து தூக்கிவிட்டு, வண்டியை எடுக்க உதவியதும்.
வீடுவரை வந்தவள், அவனும் பின்னரே வந்து வண்டியை நிறுத்தும்போதும், ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் உள்ளே சென்றிருந்தாள். அதன்பின் அடிக்கடி பார்க்க முடிந்தது, பலநாள் இப்படி காலையில் வந்து நின்று அவளை வெறுப்பேற்றி உள்ளேயும் விரட்டிவிட்டுவிடுவான்.
“இப்ப என்ன சார் பண்ண பயமா இருக்கே. அவள மீறி சந்திரா எதுவும் செய்ய மாட்டா சார். லஷ்மிக்கு கல்யாணம் ஆகாம என்னாலயும் வீட்ல பேச முடியாதே?”
“அது உன் பிரச்சனை மேன். அந்த சூசைட் கேஸ் ஃபைல் ஹிஸ்டரி எடுத்துட்டு வந்தியா?” என அடுத்ததிற்கு தாவினான் ஆரன்.
“இருக்கு சார்” என்ற மதுரன் சட்டைக்குள் சொருகியிருந்த ஃபைலை எடுத்து நீட்ட, அங்கேயே சுவற்றில் சாய்ந்து நின்று, அதை படிக்க ஆரம்பித்தான் ஆரன். அதில், எஃப்.ஐ.ஆர் காப்பி, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ஸ், சம்பந்தப்பட சாட்சியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்தபடி வந்தான்.
‘ரத்னா என்ற திருமணமான இருபத்தி ஐந்து வயது பெண், திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் தாய்மை பாக்கியம் கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்’ என தான் கேஸ் முடிக்கப்பட்டிருந்தது.
“கேஸ் ஹிஸ்டரி ரீட் பண்ணியா மதுரன்?”
“ஆமா சார். கழுத்தெழும்பு முறிவு, நாக்கு வெட்ட பட்டிருக்கு, கண்டிப்பா தற்கொலை தான்னு போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் சொல்லுது”
“அந்த பொண்ணோட அண்ணா இப்ப என்னன்னு கேஸ் குடுத்துருக்காங்க?”
“அந்த பொண்ண கொலை பண்ணிட்டாங்க, அந்த பொண்ணோட புருஷனும், மாமியாரும் தான் காரணம்னு சொல்றாங்க”
“ஆறு வருஷமா ஏன் இந்த சந்தேகம் வரலையாம்?”
“இனி தான் சார் விசாரிக்கணும்” என்றதும், ஃபைலை மூடி அவனிடம் நீட்டியவன், “அந்த பொண்ணோட அண்ணா இப்ப எங்க இருக்காருன்னு கேளுங்க மீட் பண்ணலாம்” என உள்ளே சென்றுவிட்டான்.
அடுத்த ஒருமணி நேரத்தில் உணவு வரவழைத்து உண்டுவிட்டு இருவரும் ரத்னாவின் அண்ணனை பார்க்க கிளம்பி கீழே வர, லஷ்மி நிலாயினி அவள் ஸ்கூட்டியை கேட்டை திறந்து வெளியே எடுத்துக்கொண்டிருந்தாள்.
“மதுரன், மேல என் ஃபோன சார்ஜுல போட்டேன், அப்படியே வச்சுட்டு வந்துட்டேன் போய் எடுத்துட்டு வந்துடுயா ப்ளீஸ்” என்கவும், மதுரன் மீண்டும் மாடி ஏற, இவன் வந்து வண்டியில் ஏறி அமர்ந்தான், சரியாக நிலா வந்து வண்டியை எடுக்கையில்,
“கொக்கு சைவக் கொக்கு, ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம், மீனு மேலக் கண்ணு, அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்” என பாடியபடி, கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு அவன் ஸ்பெலெண்டரை மிதித்து ஸ்டார்ட் செய்ய, வண்டியில் சாவியை மாட்டியபடி நின்றவள், நன்றாக திரும்பி அவனை முறைத்தாள். இருவருக்கும் இடையில் இரண்டு ஆள் நடக்கும் தூரம் தான் இருந்தது.
“பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது, ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது, ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது, உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு” என பாட,
அவள் இன்னும் முறைக்க, அவன் தான் அவள் பக்கமே திரும்பவில்லையே, ஸ்டார்ட் செய்த வண்டியை உறுமியபடி, வாயில் பாட்டை அவளுக்கு மட்டுமே கேட்கும்படி முனங்கிகொண்டு, கண்ணாடியில் முடியை சரிசெய்து கொண்டிருந்தான்.
“ஃபோன அங்க காணும் சார்?” என மதுரன் வர,
“இருங்க பாக்றேன்” என பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு பார்த்துவிட்டு,
"இங்கதான்யா இருக்கு, வரவர கவனம் எங்க போகுதுனே தெரியல போ, சரி வண்டில ஏறு” என்றதும்,
“போலாம் சார்” என மதுரன் வந்து அவன் பின் ஏற,
“டேய் மதுரா!” என்றாள் நிலாயினி,
“சொல்லு லஷ்மி” என்றவன் வேகமாக இறங்கியே நின்றுவிட்டான்.
“உன் ஆபிசர்ட்ட சொல்லி வை, பேச்சு எதுவும் நல்லா இல்ல. உங்க போலீஸ் ஆட்டியூட் எல்லாம் எங்கிட்ட வேணாம்” என ஆரனை பார்த்தபடியே சொல்ல, பட்டென்று திரும்பி ஆரன் அவளை பார்க்கவும், ஜர்க்கானலும் காண்பித்து கொள்ளாமல் வண்டியை எடுத்து கிளப்பிவிட்டாள் அவளின் வங்கி வேலையை நோக்கி.
“என்னாச்சு சார்?” என்றான் மதுரன் புரியாமல்,
“என்னைய கேட்டா? உன்ட்ட பேசிட்டு போனவள்ட்டயே போய் கேளு” என்றவனும் வண்டியை கிளப்பிவிட்டான்.
அடுத்ததாக இருவரும் ரத்னாவின் அண்ணாவை வந்து சந்தித்தனர், “சார் அவ எங்ககிட்ட நேரா எதுவுமே சொல்லல. ஆனா ஃபேஸ்புக்ல ஏதோ முகம் தெரியாத பொண்ணுட்ட அவ கஷ்டத்தலாம் சொல்லிருக்கா. அவ ஃபோன் ஹிஸ்டரிய எடுத்து பாத்தீங்கனா தெரிஞ்சுக்கலாம் எல்லாத்தையும்” என்றார் ரத்னாவின் அண்ணா.
“ஃபரண்டுட்ட சொல்லிருக்கான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றதும்,
“இதோ இந்த நோட் பேட்ல எழுதி வச்சுருக்கா சார். ‘யாரிடமும் பகிர முடியாத ஒன்றை முகமறியாதவளிடம் பகிர்கிறேன் முகபுத்தக வடிவில்’ இத பாத்துட்டு தான் சார் அவ ஃபோனெடுத்து எல்லாத்தையும் தேடி பாத்தோம். ஆனா கடைல ரெக்கவர் பண்ணதலாம் நாங்க நம்ப முடியாதுன்னு போலீஸ்ல சொல்லிட்டாங்க, நீங்க இத பாருங்க நம்பிக்கை இல்லனா நீங்களே இந்த ஃபோன்ல ரெக்கவரி டேட்டா போட்டு செர்ச் பண்ணி பாருங்க” என ரத்னா கையொப்பமாகவே இருந்த நோட்பேடையும் அவள் மொபைலயும் கொடுத்தார் அவள் அண்ணன்.
“இந்த நோட்பேட்ட நீங்க அப்பவே பாக்கலையா?” என மதுரன் கேட்க,
“இல்ல சார். நோட் பேடுல என்னன்னு பெருசா கண்டுக்கல சார். அவளோட திங்க்ஸ் எல்லாத்தையும் அப்பவே அவ வீட்டுக்காரன் கொண்டுவந்து குடுத்துட்டான் சார். அப்பலாம் அவன்மேல எனக்கு சந்தேகமே இல்ல. இந்த ஃபோன பாத்தப்றம் தான் அவன் என் தங்கச்சிய என்ன பாடு படுத்திருக்கான்னு தெரிஞ்சது. என் பையன் இப்ப ஆறு வயசு சார் ரொம்ப சேட்டை, அவந்தான் மேல கிடந்த எல்லாத்தையும் இழுத்து கீழ பரத்தி போட்டுட்டான். அதுல தான் இதே எங்க கண்ணுல பட்டது. அதுல சின்னசின்னதா அவ நிறைய எழுதி வச்சுருக்கா சார்”
ஃபோனில் ஆரன் ஆராய்ந்தபடி இருக்க, மதுரன் அவ்வீட்டை சுற்றி வந்தான், ரத்னா பொருட்களை எல்லாம் ஆராய்ந்தான்.
“சரி அங்கையும் போய் விசாரிக்கிறோம்” என இருவரும் கிளம்பிவிட்டனர்.
ரத்னாவின் கணவன் வீட்டிற்கும் சென்று விசாரிக்க, அங்கு ரத்னாவின் மாமியாரும், ரத்னா கணவனின் இன்றைய மனைவியும் இரண்டு வயது பிள்ளையும் தான் இருந்தனர். கேட்ட கேள்விக்கெல்லாம் அழ மட்டுமே செய்தார் ரத்னாவின் மாமியார்.
“நாளைக்கு இந்நேரம் வருவோம் உங்க பையன வீட்ல இருக்க சொல்லுங்க விசாரிக்கணும்” என இருவரும் கிளம்பி வெளியே வந்தனர், “ஆறு வருஷம் கழிச்சும் பாசம் அப்படியே இருக்குமா மதுரா?” என்றான் ஆரன் அந்த தெருவை சுற்றி ஆராய்ச்சியாக பார்த்தபடி,
“டவுட்டா தான் சார் இருக்கு. அதுக்குள்ள அடுத்து ரெண்டாவது மருமக பேத்தின்னு வந்தாச்சு, அப்ப நடிக்குறாங்க தான சார்?” என்றான் மதுரன் யோசனையுடன்.
“ஏன்? பின்ன இறந்து போன பொண்ணையே நினைச்சுட்டு அவங்க அப்படியே இருக்கணுமோ அப்பத்தான் நல்லவன்னு சொல்லுவீங்களோ?” என்றான் ஆரன்.
“இல்ல தான் சார். அப்ப உண்மையான பாசமா தான் இருக்குமா சார்? அப்றம் ஏன் ஃபோன்ல அந்த பொண்ணு யார்ட்டையோ இவங்களயெல்லாம் தப்பா சொல்லிருக்காங்க?”
“அந்த நேரத்துல கோவமா இருக்கலாம். இப்ப நீ என் மேல டென்ஷன்ல இருக்க நேரத்துல உங்கிட்ட என்னைய பத்தி கேட்டா, ‘அவன் ஒரு மாங்காமடையன், உசுர வாங்குவான், தானும் தூங்க மாட்டான் நம்மளையும் தூங்க விடமாட்டான்’ இப்படிலாம் சொல்ல மாட்டீயா? எல்லாம் ஃப்ளோவ்ல வரும்ல?” என கேட்க, தலையை எல்லா பக்கமும் உருட்டினான் மதுரன்.
“அப்ப இப்டிலாம் நினைச்சிருக்க?” என ஆரன் முறைக்க,
“சார் இல்ல சார் நோ சார்” என்றான் அவசரமாக,
“ம்ம் உன்ன ஒருநா தனியா கவனிக்கிறேன் மேன் நான்” என அவன் தோளில் தட்டி வண்டியை எடுத்துவிட்டான்.
இருவரும் அடுத்ததாக கமிஷ்னர் அலுவலகம் சென்றுவிட்டு, மதுரனுக்கு வேறு வேலையை கொடுத்து அனுப்பிவிட்டுவிட்டு இவனும் கேஸ் சம்பந்தமாக சிலவற்றை சேகரித்து விட்டு வீடு வந்திறங்கினான்.
அவன் வந்து இறங்குகையிலேயே, தெருவே அங்கங்கு நின்று பேசியபடியும் அங்கு ஒருவர் நன்கு நேர்த்தியான உடையில் பாவமாக நின்றவரை, திட்டியபடியும் இருந்தனர்.
அந்த நபர் நிலாவின் வீட்டு வாயிலில் தான் நின்று, “தெரியாம பண்ணிட்டேன், சத்தியமா விவரமில்லாம தான் பண்ணிட்டேன், என்னைய இந்த ஒருதடவ மன்னிச்சு சேத்துக்கோங்கமா ப்ளீஸ், மன்னிக்க கூட வேணாம் வீட்டுக்குள்ள நடமாட விடுங்க பிள்ளைகளா அது போதும்” என கெஞ்சிக் கொண்டிருந்தார்.
சுருங்கிய புருவத்துடன் வண்டியை நிறுத்தி இறங்கியவன், “என்ன மாநாடு அங்கங்க? இங்க என்ன பிரச்சனை?” என்றவன் சத்தத்தில், அப்படியப்படியே கூட்டம் கலைந்தது. அவனை அங்கு எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
ஒரு பெரிய ஆபிசர் அவர்கள் தெருவில் வந்து தங்குகிறான் என்பதில் தனி தைரியம் கூட வந்திருக்க, அவனிடம் தானாகவே சென்று பேசினர். இப்போது அவன் அதட்டல் போல கேட்கவும், தானாக சென்று இன்னொரு குடும்ப பிரச்சனையை விளக்கவா என்ற யோசனையில் அவரவர் வீடு சென்று மறைந்தனர்.
“குடும்ப பிரச்சனைனா வீட்டுக்குள்ள வச்சு பேசி சரி பண்ணுங்க” என நிலா வீட்டு வாசலிலும் வந்து நின்று அந்த ஆணிடம் சொல்ல,
அதுவரை வெளியவே வராத லஷ்மி நிலாயினி, இவன் சத்தத்தில் வெளியே விறுவிறுவென வந்து, “இவரு எங்க குடும்பமே இல்ல சார். முடிஞ்சா இங்கிருந்து இவர போ சொல்லுங்க. எங்களுக்கு தான் அவமானமா இருக்கு. மறக்க நினைச்சாலும் வாரம் ஒருதடவ இப்படி வந்து நின்னு ஞாபகப்படுத்திட்டே இருக்காரு. ச்ச!” என ஆரனிடம் அவரை பார்த்தே முகத்தை சுளித்து கூறினாள்.
“யார் சார் நீங்க? லேடீஸ் மட்டும் இருக்க வீட்ல பிரச்சனை பண்றீங்க? அதும் இப்படி ராத்திரி நேரத்துல வந்து நின்னு?” என அவருக்கு மரியாதை தந்தாலும் குரல் அதட்டலாக தான் வந்துவிழுந்தது ஆரனிடம். அவரின் தோற்றம், நிச்சயம் நல்ல பதவியில் இருக்ககூடியவர் என காண்பித்தது.
“லஷ்மிமா அப்பாடா, ஒருதடவ மன்னிக்க மாட்டியா. ப்ளீஸ்டா” என அவர் கெஞ்ச, ஆரனுக்கு பாவமாகத்தான் இருந்தது, திரும்பி அவளை பார்த்தான், முறைத்தாள் அவள்.
“நா கம்ப்ளைண்ட் தந்தா தான் இவர இங்கிருந்து அனுப்ப ஹெல்ப் பண்ணுவீங்களா சார்? நீங்க ஒரு போலீஸ், நாங்க லேடீஸா இருக்கனால ரொம்ப பயந்து தான் இருப்போம். நீங்க எங்க எதிர்வீட்ல இருக்க இந்த ரெண்டு மாசமா தான் நாங்க நிம்மதியாவே தூங்குறோம். உங்களுக்கு தெரியுமா, நீங்க ஊர்ல இல்லாத நாள் கூட நீங்க அங்க எப்ப வேணா வருவீங்கன்ற தைரியமே எங்களுக்கு தைரியத்த தரும். ஆனா நா இப்ப இவ்ளோ சொல்லியும் அவர விரட்டாம நிக்றீங்க சார் நீங்க? ஆன் ட்யூட்டி ஆஃப் ட்யூட்டின்னு எப்பனாலும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும் தானே சார் நீங்க?”
அவள் பேசியவை எல்லாவற்றையும் சுருங்கிய புருவத்துடன் பொறுமையாக கேட்டவன், அவரிடம் திரும்பி, “கிளம்புங்க சார். விட்டா அந்த நிலாபொண்ணு நா போலீஸ் வேலைய ஒழுங்கா பாக்கலன்னு என் மேலேயே கம்ப்ளைண்ட் பண்ணும் போல” என்றான், மேலும் அவரை கிளம்ப சொல்ல, அப்போதும் அவர் பாவமாக நிற்க,
“கிளம்புங்க சார். மரியாதையா சொல்லும்போதே கேளுங்க” என அவரை தெருவை நோக்கி தோள் தொட்டி திருப்பிவிட்டான். அவரும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே தான் அங்கிருந்து கிளம்பினார்.
‘பொண்ணுங்களா இருக்கனால பாதுகாப்பு இல்லாதமாதிரி தான் இருப்போம்’ என மகள் கூறிய வாக்கியத்திலேயே கூனிகுறுகிவிட்டார் செல்வகுமார்.
அவள் அவரையே முறைத்து நின்றுவிட்டு, அவர் காரில் ஏறிய பின்னரே, தன்னை பார்த்து நின்றவனிடம் திரும்பினாள்.
“தேங்க்ஸ் சார்” என அதையும் உர்ரென்றே சொல்ல,
“நீ எப்பதான் சிரிப்ப?” என்றான் அதிதீவிரமாக அவன்.
“சிரிப்பு வரும்போது சார்” என்றாள் அவளும் உடனேயே, அதையும் உர்ரென்றே,
“ஓ! ஆமால்ல நாங்களாம் தீபாவளி வரும்போதும் பொங்கல் வரும்போதும் தான் சிரிக்கிறோம், நீ மட்டுந்தான் சிரிப்பு வரும்போது சிரிக்கிற” என அவன் சொன்னபோதும், அமைதியாக தான் நின்றாள்.
“திண்ணக்கத்த பாரு? கொஞ்சமும் பயம் இல்ல?” என அவன் உறுமவும்,
“கொஞ்சம் பயமாதான் சார் இருக்கு” என்றாள் சீரியஸாகவே,
“சார்!” என அப்போதுதான் உள்ளிருந்து, நிலாவின் அம்மா மற்றும் இரண்டு தங்கைகளும் வெளியே வந்தனர்.
“பிரச்சனைலாம் எதுவும் இல்ல சார். எப்பவும் நடக்குறது தான் சார். இவ சொன்னான்னு கேஸ்லாம் எதுவும் போட்றாதீங்க சார்” என்றார் வினோதினி, நிலாவின் தாயார். செல்வகுமார் செல்லும்வரை வெளியே வரக்கூடாது என சொல்லிவிட்டு அவள் வந்திருக்க, அதற்காகவே அவர் சென்றபிறகு வெளிவந்தனர் மற்ற மூவரும்.
ஆரன் பொதுவாக, “ரோட்ல வச்சு டிஸ்கஸ் பண்றளவுக்கு கொண்டு வராம, பிரச்சனைய உங்களுக்குள்ள முடிக்க பாருங்கம்மா” என்றவன், மீண்டும் ஒருமுறை தெருவை சுற்றி பார்க்க, இன்னும் வீட்டு வாசலில் அமர்ந்து இங்குதான் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர் சிலர்.
எதுவும் பேசாமல், பார்த்தபடியே அவன் வீட்டு படியேறிவிட்டான். பின்னால் நிலாவின் அம்மா, அவளை அதட்டியபடி உள்ளே அழைத்து செல்வதும் கேட்டபடியே சென்றுவிட்டான்.
“எதுக்கு லஷ்மி இப்படி பண்ற? மூணு மாசமா வந்து கெஞ்சுற மனுஷன சும்மானாலும் உள்ள கூப்பிட்டு வச்சுப்போமே?” என்றார் வினோதினி.
“நீ ஏன்மா இப்படி இருக்க? நீ தான் இந்த இடத்துல ஸ்டபர்னா நிக்கணும். ஆனா ஈசியா எப்படி அவர உன்னால மன்னிக்க முடியுது? அவரு உனக்கு பண்ணது துரோகம்மா” என்றாள் கடுப்புடன்.
“இல்லன்னு சொல்லலடி. இன்னும் உங்க மூணு பேருக்கும் நா கல்யாணம் பண்ணணும் லஷ்மி. அழகு பிள்ளைகள பெத்து வச்சுட்டும் எப்படி உட்கார்ந்துருக்கேன்னு பாத்தல்ல? நல்லா சம்பாதிக்குற உனக்கு கூட முடிச்சு தர முடியலடி என்னால. அப்பான்னு அவரு சும்மானாலும் இருந்தாலும், இந்த பிள்ளைங்க பொறுப்பு உன் தலைல இல்லன்னு புரிஞ்சுப்பாங்க லஷ்மி. உன் வாழ்க்கைய நீ பாரு. படிக்க வச்சுட்டல்ல இனி அவ அவள அவ அவ தான் பாத்துக்கணும்” என்றவர் மற்ற இரு பிள்ளைகளையும் திரும்பி பார்க்கவும் தவறவில்லை.
“அக்கா, இந்த டைம் கண்டிப்பா நா பாஸ் பண்ணிடுவேன். நல்லா எழுதிருக்கேன். அடுத்து எந்த மாப்ள வந்தாலும் நீ எங்கள பத்தி பேசாத சரின்னு மட்டும் சொல்லு” என்றாள் சந்திரா.
“ரெண்டு வருஷமா இதே தான் சொல்லிட்ருக்க சந்திரா. நீ பாஸ் பண்ணாதான் அவ நிம்மதியா கல்யாணம் பண்ணிட்டு போவா” என்றார் வினோதினி.
“ம்மா. எல்லாருக்கும் ஒரே மாதிரி அமையாது. இப்ப சிலபஸ் ரொம்ப டஃப் பண்ணிட்டாங்க. எக்ஸாம்ஸும் டேர்ம்ஸ் மாத்திட்டாங்க. கஷ்டமா தான் இருக்கும் பாஸ் பண்ண. அவள நிம்மதியா படிக்கவிட்டாளே பாஸ் பண்ணிடுவா. அக்கா உன்னால தான் இங்கயே இருக்கான்னு போட்டு அவள இம்சை பண்ணாதீங்க” என்றாள் லஷ்மி நிலாயினி.
“நீங்க ரெண்டு பேருமாது கவர்ன்மெண்ட் வேலைன்னு போய் உங்க பொழப்ப பாத்துப்பீங்கடி. இந்த கடைக்குட்டி சமையல போய் படிப்பா எடுத்து படிச்சு காச கரியாக்குது. என்ட்ட இருந்தா நானே அத சொல்லி தருவேன்ல, இதுக்கு ஒரு காலேஜ்னு பேக்க தூக்கிட்டு போறா தெனமு” என்றார் தீக்ஷிதா சுபியை காண்பித்து சலிப்பாக, இது அவர் அடிக்கடி புலம்புவது தான். அதற்கு பலமுறை சண்டை கூட போட்டுவிட்டாள் சிறியவள், ஆனாலும் வினோதினி புலம்பல் மட்டும் தீரவில்லை.
“நீ வைக்குற ரசத்தையும் புளிக்கொழம்பையுமா அங்க போய் நா படிச்சுட்டு வந்துட்ருக்கேன்?” என்றாள் இப்போதும் கடுப்புடன்.
“பின்ன அது சமையல் இல்லையா?”
“ம்மா நீ பண்றதுலாம் சமையல்னு வேற சொல்லுவியா?”
“போய் நைட்டுக்கு சமைச்சு தாடி அப்போ தெரியும். இருக்கத வச்சு சமைச்சு தரணும் அதுதான் சமையல். நீ சமைக்கிறேன்னு ஆயிரம் ரெண்டாயிரம்னு காலி பண்ணுறதுக்கு பேரு சமையலா?”
“இவள என்னடி பண்ணுறது? இந்த படிப்புக்கும் கவர்ன்மெண்ட் எக்ஸாம் எழுதலாமா?” என்றார் பெரிய மகள்களிடம்.
தீக்ஷிதா முறைக்க, “படிக்க வரலன்னு தான் அவளே இத எடுத்து படிக்குறா. அப்புறமு படி படின்றீங்க” என்றாள் சந்திரா.
“ரெண்டு வருஷமா கொட்டமடிக்குற நீ அத சொல்லாத இனிய சந்திரா” என அவள் பெயரை கடித்தாள் தீக்ஷிதா.
“ரெண்டு பேரும் போய் நைட்டு சமையல பாருங்க. எனக்கு இயர் எண்ட் ஆடிட்டிங் ஸ்டார்டாகுது, காலைல சீக்கிரம் கிளம்பணும்” என நிலா சொல்லவும், இளையவர்கள் இருவரும் சமைக்க சென்றனர்.
செல்வகுமார், வினோதினி தம்பதியருக்கு மூன்று பெண் பிள்ளைகள், மூத்தவள் இருபத்தேழு வயது லஷ்மி நிலாயினி, இரண்டாமவள் இருபத்திநாளு வயது இனிய சந்திரா, மூன்றாவது இருபது வயது தீஷிதா சபி, மூன்றாமாண்டு கேட்டரிங் கல்லூரி செல்கிறாள்.
அவர்களின் அழகான குடும்பம் எட்டு வருடங்களுக்கு முன், ஒருநாள் திடீரென்று தான் சிதைந்து போனது. அப்பா பிள்ளையான நிலாயினி உடைந்து அமர்ந்த நாட்கள் அவை.
செல்வகுமார், மின்சார துறையில் வருவாய் அதிகாரி பணியில் இருக்க உடன் வேலைபார்க்கும் இன்னொரு பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளதொடர்பாகிபோனது. அப்போது நிலா இரண்டாம் வருடம் பிகாம் மாணவி. அவள் அம்மா அழுத அழுகையை அந்த வயதில் தினமும் பார்த்தவள், ஒரு நிலையில் விஷயம் புரிபட, அவள் தான் அவள் அப்பாவை, “வெளில போங்க” என்றிருந்தாள்.
“என்னைய அனுப்பிட்டு, நாளு பேரும் என்ன பண்றதா உத்தேசம்?” என்றவருக்கு,
“செத்துகூட போறோம். ஆனா நீங்க இருக்க இடத்துல சாகுறது கூட அசிங்கம். வெளில போலாம் நீங்க. இந்த வீடு அம்மா பேர்லயும் சேர்ந்து தான் இருக்கு. அதனால நீங்க தான் வெளில போகணும். இல்லைனா போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்து கேஸ் போட்டு உங்கள வெளில அனுப்புவேன்” என்றுவிட்டாள்.
“பொம்பள பிள்ளைகளா போயிட்டீங்கன்னு நா பொறுமையா இருக்கேன். நீ படிச்சே முடிக்கல இவ்ளோ பேசுற? நா இல்லாம அடுத்த வேலை சாப்பாடு சாப்பிட முடியுமா உங்களால?” என்றிருந்தார் செல்வகுமாரும் அன்று. அது இன்னொரு பெண்ணின் மீதிருந்த மயக்கம், அன்று அவ்வாறு பேச வைத்திருந்தது.
“பட்னி கூட கிடக்குறோம். சும்மா அக்கறை இருக்க மாதிரி நடிக்காம போயா வெளில” என நிலா கத்திவிட, கோபமாக வெளியேறியிருந்தார்.
அன்று காணாமல் போனவர் அதன்பின் இதோ இப்போது மூன்று மாதமாகத்தான் நடையோ நடை என்று வாரம் தவறாமல் நடந்துகொண்டிருக்கிறார். ஆரன் கண்ணில் பட்டது இதுவே முதல் முறை.
அன்று அவரை வெளியே அனுப்பிய பிறகு, வினோதினியை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு கேட்டு சேர்த்துவிட்டாள். அவளும் கல்லூரி நேரம் முடித்து வந்து, பத்து, பனிரெண்டாம் வகுப்பு பிள்ளைகளுக்கு கணிதம் ட்யூஷன் எடுத்தாள். அதும் முடித்து இரவு வங்கி பரிட்சைக்கான பயிற்சியில் இறங்கினாள். அதற்கான புத்தகங்கள், குறிப்பேடு தேடி கேட்டு வாங்கினாள். அவளின் கல்லூரியின் கடைசி வருடம் முழுவதும், கல்லூரி படிப்பு, பின் ட்யூஷன், இரவு வங்கி பரீட்சைக்கு தயாராவது என்று தான் கழிந்தது.
மற்ற மூவரும் கூட அவள் தீவிரத்தை கண்டு பயந்து, தயங்கி, ஒதுங்கி நின்றுவிட்டனர். அவளுக்கு நிமிர்ந்து அவர்கள் முகம் பார்க்க கூட நேரமிருந்ததில்லை. அவள் தங்கைகள் இருவரும் கூட அந்த ட்யூஷன் பொழுதுகளில் படிப்பு சம்பந்தமாக மட்டுமே அவளிடம் பேசுவதும். வினோதினியும் வேலை, பிள்ளைகள் பொறுப்பு என்றிருக்க, இளையவர்கள் இருவரும் தான் அதில் ஒருவருக்கு ஒருவர் என நெருங்கிவிட்டனர். குடும்ப சூழ்நிலை அறிந்து, எதையும் ஆசைப்பட்டு கேட்காத பிள்ளைகளாக வளர்ந்தனர். பனிரெண்டு வயதிலிருந்த தீக்ஷிதாவை அப்போது முழுமையாக பார்த்துக்கொண்டது இனிய சந்திரா தான்.
வினோதினியின் மாச சம்பளமும், நிலாயினியின் மாச சம்பளமும், வீட்டு சாப்பாட்டிற்கு போக மீதி மூவரின் படிப்பிற்கே சரியாக இருந்தது. அந்த வருட ஃபீஸை மூவருக்கும் செல்வகுமார் கட்டிவிட்டு தான் சென்றிருந்தார் என்பதால், மறுவருடம் வரை கொஞ்சம் இழுத்துபிடிக்க முடிந்தது அவர்களால், சாப்பாட்டிற்கு போக மீதியை படிப்பிற்கான கட்டணமாக சிறுக சிறுக சேர்த்து வைத்தனர். அதை வைத்து தான் அவள் பிகாம் படிப்பை முடித்து, கோச்சிங் சேர்ந்ததும். அதன்பின் வெறித்தனமாக தான் இரவும் பகலும் படித்தாள். அவள் பயிற்சியில் சேர்ந்த ஐந்து மாதமும் சரியான தூக்கம் கூட கிடையாது அவளுக்கு. வங்கி பரிட்சை மட்டுமே அவள் இலக்கு என எப்பவோ முடிவு செய்திருந்தாள்.
கடந்த பத்து வருட மாதிரி வினாத்தாள்களை இருபது முறைக்கும் மேல் எழுதி பார்த்துவிட்டிருந்தாள். ஐந்தாம் மாதம் வந்த வங்கி தேர்வு, கிளர்க், ப்ரொபஷனரி ஆபிசர் என இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பித்தாள்.
முதல் தேர்வு, முக்கிய தேர்வு இரண்டிலும், இரண்டு நியமனத்திலும் தேர்ச்சி பெற்றாள். ஆச்சரியம் தான் அனைவருக்கும். மற்றவர்கள் பார்வைக்கு அவள் ஐந்தே மாதத்தில் அடைந்த வெற்றி அது, ஆனால் அவள் ஒன்றரை வருடமாக இதற்கு தூங்காமல் போராடியிருக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.
அப்படியொரு வெறி அவளுக்கு, அவள் அப்பா அவர்களை ஏமாற்றிய கோபம் வெறியாக மாறியிருந்தது. கள்ளதொடர்பில் போன அப்பாவின் பிள்ளைகள் என அவர்களை யாரும் பாவமாக பார்க்க கூடாதென்ற முடிவில் வந்த வெறி அது.
அதை, அந்த பேரை மாற்றியிருந்தாள். லட்சியத்தை அடைந்த பிறகே, ஆசுவாச மூச்சுவிட்டாள். நிமிர்ந்து தன்னுடன் வீட்டிலிருக்கும் மற்ற மூவரையும் பார்த்து சிரித்தாள். உளமார சிரித்தாள் அன்று. அன்றைய நாள் அக்குடும்பத்திற்கு பண்டிகையாக தான் தெரிந்தது.
அதன்பின் இரண்டு வருடம் பயிற்சி வருடமாக எங்கெங்கோ போய் இருந்துவிட்டு தான் இங்கு வந்தாள். அதன்பிறகும் ப்ரொபஷனரி ஆபிஸசராக இரண்டு வருடங்கள் இதே தென்தமிழக மாவடத்தில் வேறுவேறு இடமாக நான்கு இடத்தில் வேலையில் இருந்துவிட்டாள். இப்போது ஒரு வருடமாகத்தான் அதாவது மேனேஜர் ஆகிய பிறகு தான் ஒரே இடத்தில் இருக்கிறாள்.
எங்கிருந்தாலும், அவளுக்கு அவள் குடும்பம் மட்டுமே பிரதானம். விடுமுறை என கிடைத்ததும் ஓடி வந்துவிடுவாள். அவள் இங்கேயே இருக்க வந்தபிறகு தான் வினோதினி அவர் வேலையை விட்டதும்.