• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிலவின் அக ஒலி - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 3


அன்று காலை ஓட்டத்தை முடித்துவிட்டு வீட்டை நெருங்கியவனுக்கு ஃபோனில் அழைப்பு வர, எடுத்துப் பார்த்தான், தங்கமாடத்தி தான் அழைத்துக்கொண்டிருந்தார்.
எதிர்வீட்டின் வெளியே தீக்ஷிதா கோலம் போட்டுக்கொண்டிருக்க, கேட்டின் உள்ளே லஷ்மி நிலாயினி அவள் ஸ்கூட்டியை துடைத்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், "உங்க அக்காக்கு இந்த கோலம்லாம் போட வராதோ? சின்ன பிள்ள நீ ஏன்மா போடுற?" எனக் கேட்டு அவளின் முன் கோலத்தைப் பார்த்தவாறு நிற்க,

"குட்மோர்னிங் சார்" என்றாள் சிரித்த முகமா தீக்ஷிதா.

"ம்ம் இப்படி காலைல ஃப்ரெஷா சிரிச்சா எவ்ளோ ப்ளெசன்டா இருக்கு. சிலர் இருக்காங்க தீவிரவாத கூட்ட தலைவி மாதிரியே மூஞ்ச வச்சுட்டு"

"யாரு சார்?"

"அது ஒருத்தங்கடா உனக்குத் தெரிய வேணாம். வெரி ஹேப்பி மார்னிங்" என்றுவிட்டு, "சொல்லும்மா" என அவன் வீட்டுக்குள் நுழைந்து படியேற, வலது பக்கம் திரும்பாமலே தெரிந்தது, இடுப்பில் கைவைத்து முறைத்து நிற்பவளின் கோப முகம்.

"யார்ட்ட பேசிட்ருந்த?" என்றார் அங்கு மாடத்தி, மகன் குரலோடு ஒரு பெண் குரலும் கேட்டதால், அவரால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இதுவே அவருக்கு புதிய அனுபவம் தான். அவனோடும் எந்த பெண்ணையும் அவர் பார்த்ததில்லை, அவனும் எந்த பெண்ணைப் பற்றியும் அவரிடம் பேசியதில்லை.

புனிதாவையும், தங்கமாடத்தியையும் தவிர்த்து அவன் வாழ்க்கையில் பெண்கள் அத்தியாயமே கிடையாது என்பது தான் அவரின் எண்ணம்.

"எதிர்வீட்டுப் பொண்ணுமா. நீ சொல்லு. காலைலயே கூப்பிட்ருக்க?"

"எதிர்வீட்ல பொண்ணா?" என்றார் அவர்.

"ஆமா இத கேட்கத்தான் ஃபோன் பண்ணியா நீ?" என அவன் கடுப்பாகவும்,

"அம்மா உனக்கு திருநெல்வேலிலயே ஒரு பொண்ணுப் பாத்துருக்கேன். நமக்கு கொஞ்சம் சொந்தம் தான்" என்றார் உடனே,

"திருநெல்வேலி பொண்ணாம்மா?" என்றவன், மேலே வந்து நிலாயினி வீட்டைப் பார்த்தவாறு நின்றுவிட, அவளும் அவனைத்தான் முறைத்து நின்றாள்.

"என்ன?" என்றான் எப்போதும் போல இருபுருவம் உயர்த்தி.

"ஆமா, பொண்ணு கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சராம். நா ஃபோட்டோ பார்த்தேன் நல்லா அழகா இருக்குடா பொண்ணு" என்றார் அங்கு மாடத்தி.

"திருநெல்வேலி பொண்ணுங்கனாளே அழகு தான்மா. பட் இருந்தாலும் டீச்சர் பொண்ணு வேணாம்மா, ஓவர் ரூல்ஸ் பேசும்" என்றான், அங்கு மாடத்திக்கு அதிர்ச்சி தான், மகன், திருநெல்வேலி பெண்ணா என்றதும், அவர்கள் அழகு என்றதும் கூறியதை எல்லாம் கேட்டவருக்கு நெஞ்சே வலிக்கும்போல் தான் இருந்தது. பேச்சு பேச்சாக இருந்தாலும், நிலாயினியை வம்பிழுப்பதை நிறுத்தவில்லை அவன்.
அவன் பேச்செதுவும் அவளுக்கு கேட்கவில்லை எனினும், அவன் பார்வையும் புருவம் உயர்தலும், அவளை அடைந்து கொண்டிருந்தது. அதற்கும் அவள் முறைக்க, ஒற்றைக் கண்ணை லேசாக சிமிட்டிவிட்டான் பட்டென்று, அவளின் முறைப்பு மாறி, கண் அகல விரிந்தது. பார்த்தது உண்மைதானா என்ற சந்தேகத்தில் அப்படியே தான் நின்றாள்.

அவள் பார்வையில் அவனுக்கு சிரிப்பு பீறிட்டு வர, மீசைக்கடியில் அதை மறைத்தவன், தலையை ஆட்டி, "வா!" என்றான் வாயை மட்டும் சத்தமின்றி அசைத்து, கையால் அழைத்து.
அதில் மிரண்டவள், "ஏய் கோலம் போட்டதும் போதும் உள்ள வாடி" என தீக்ஷி முதுகில் ஒரு அடி போட்டு அழைத்துவிட்டு, உள்ளே ஓடியே விட்டாள்.

"ஷ்! அக்கா, எதுக்கு அடிச்ச நீ?" என்றபடி தீக்ஷி உள்ளே செல்வதையும் பார்த்தே நின்றான்.

"ஏன் இதுக்கு முன்ன பார்த்த டீச்சர் பொண்ணுங்களாம் ரூல்ஸ் பேசாத பொண்ணுங்களா?" என்றார் தங்கமாடத்தி, இங்கு மகன் செய்யும் கீர்த்தி தெரியாதே அவருக்கு.

"அந்த பொண்ணுங்கள எல்லாம் நீயே ரிஜெக்ட் பண்ணிட்ட அதான் நா எதுவும் சொல்லல"

"பரவாயில்ல இப்ப டீச்சர் பொண்ணைப் பாப்போம்"

"நீ வேலையே பாக்காத பொண்ணு தான தேடின? இப்ப என்ன?"

"அப்படிப் பாத்து தான் பொண்ணே கிடைக்கல. இனி வேலைக்குப் போறப் பொண்ணா இருந்தாலும் பரவால்லன்னு கன்டிஷன்ல சேர்த்துப்போம்"

"அப்ப பேங்க்ல வேலை செய்ற பொண்ணா பாரும்மா" என்றவன், உள்ளே சென்று, அன்றைக்குப் போட்டுப் போக வேண்டிய உடையை அயர்ன் செய்யத் துவங்கினான்.

"பேங்க் வேலை செய்ற பொண்ணா? அதுக்கு நா எங்கடா போவேன்?" என்றவர் சுத்தமாக குழம்பிவிட்டார், தன் மகனிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறோமா என்றே!

"அட்ரஸ் தரேன் நோட் பண்ணிக்கிறியா?" என்றான்,
அவன் உண்மையாகவே தான் கேட்டான், அவர் தான் அவனை நம்ப முயற்சிக்க கூட இல்லையே, "விளையாடாத விஷ்வா. அந்த டீச்சர் பொண்ணு, பேரு மல்லிகா" என அவர் விவரம் சொல்ல வர,

"நா என்ன சொல்றேன்னு கேக்கிறியா இல்லையா நீ? எனக்கு பேங்க்ல வேலை செய்றப் பொண்ணு தான் வேணும். அதும் ஐஓபி பேங்க்ல" என திட்டவட்டமாக சொல்ல,

"உன்ட்ட மனுஷி பேசுவாளா, வை ஃபோன" என கடுப்பில் வைத்தேவிட்டார். வாய்விட்டே சிரித்தவன், குளித்துக் கிளம்பி வந்தவன், "முனுமுனுக்கிற முத்தம்மா
மனசில் என்ன சத்தம்மா
வெளிய அதை சொல்லம்மா" என பாடியபடி வண்டியை எடுக்க, நிலா, அப்போது தான் தானும் கிளம்பி வெளியே வந்தவள், இவனைக் கண்டதும் வந்த வேகத்தில் மீண்டும் வீட்டினுள் சென்றுவிட்டாள். அதையும் கண்டு சிரித்தபடியே சென்றுவிட்டான் ஆரன். அவன் சென்றுவிட்டானா என உறுதி செய்த பின்னரே, வெளியே வந்து தன் வண்டியை எடுத்து வங்கிக் கிளம்பினாள்.

அவள் மனதெங்கும், ஆரன் விஷ்வேஷ்வரனே! அவன் விளையாட்டாக வம்பிழுப்பது, உரிமையில் பேசுவது, இதோ இன்று இவளைக் கண்டுக் கண்ணைச் சிமிட்டியது வரை, எல்லாம் அவளைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. என்ன எண்ணத்தில் இவற்றை எல்லாம் செய்கிறான் என புரியாமல் விழித்தாள்.

ஆனால் அவளுக்கு அவை எதுவும், தவறாகவே தெரியவில்லை, கோவம் வந்தாலும், எரிச்சல் ஒவ்வாமை எதுவும் வரவில்லை, அவன் அங்கு வருவதற்கு முன்பே, அவனைப் பத்தின விஷயங்கள் அவ்வீதியை மட்டுமின்றி மொத்த திருநெல்வேலியையும் நிறைத்திருந்தது.

'தப்பு பொறுக்காதவன், முரடன் ஆனால் நேர்மையானவன், இலகுவாக எல்லோருடனும் பழகக் கூடியவன்' என அவனைப் பற்றிய நல்லவிஷயங்கள் தீயாகப் பரவியிருந்தது. ஊடகங்களிலும், அவனது மாற்றல்கள், அவன் வேலையை எடுத்தால் எப்படி செய்து முடிப்பான். தப்பு செய்து அவனிடம் மாட்டியவர்கள் அவ்வளவு சுலபத்தில் தப்பித்ததில்லை என அவன் படங்களுடன் போட்டுவிட்டு விலாசியிருக்க, அன்றே கொஞ்சம் கொஞ்சமாக நிலவின் அகத்தினுள் நுழைந்து தன் எண்ண அலைகளை ஒலிக்கத் துவங்கியிருந்தான் ஆரன். அதை அவள் அறியவில்லை, அவன்மீது நன்மதிப்பு என்பதே அவளின் எண்ணம்.

அவனை நேரில் பார்த்த அன்றும் கூட, இலகுவாக அவனிடம் வாயாட வைத்தது அந்த எண்ணம் தான். அவனால் எந்த தீங்கும் வராது என்ற நம்பிக்கை, தைரியமாக உரையாடலாம், நன்கு பரிட்சையமானவன் போன்ற எண்ணங்கள் ஆயிரமடங்கு உள்ளுக்குள் இருக்க, பயப்பட தோன்றவில்லை. அதுவே அவன் சீண்டினாலும், முறைக்க வைத்தது. முறைத்தாலும் அவள் விருப்பமின்மையை முகத்தில் காட்டியதில்லை. அதனாலயே முன்னேறிக்கொண்டிருந்தான் ஆரன் விஷ்வேஷ்வரன்.

இரண்டு நாட்கள் சென்றிருக்க, ரத்னாவின் கேஸ் விஷயமாக, அவர்கள் ஏரியா பக்கம் செல்ல, ரத்னா வீட்டின் தெருவிற்கு செல்லும் வழியில் ஈபி காரர்கள் குழியைத் தோண்டிவிட்டு வேலையில் இருக்க, இவன், முந்தைய தெருவழி செல்லலாம் என வண்டியைத் திருப்பிவிட்டான்.

அங்கு நுழைந்ததுமே, சற்று தொலைவில் தெரிந்த ஐஓபி பேங்க் போர்டும், அதன் முன் நின்ற வாகனங்கள் வரிசையில் பளீச்சென்று நின்ற பிங்க் நிற ஸ்கூட்டியும் அவனை விசிலடிக்க வைத்தது. தன் வண்டியையும் நேராக அதன் அருகே சென்று நிறுத்தினான்.

"என்னாச்சு சார்?" என மதுரன் விழிக்க,

"ஓவர் வெயிலா இருக்கே மிதுரா" என்றான் வானத்தை நிமிர்ந்துப் பார்த்து,

மதுரனும் நிமிர்ந்துப் பார்த்துவிட்டு, "ஆமா சார், ஏப்ரல் மாசம் வெயில் இல்லாம எப்படி சார்?" என்க,

"அதான் கொஞ்சம் ஏசில உட்கார்ந்துட்டு போவோமா? இறங்கு" என்றதும், அவன் இறங்கிவிட்டான். இன்னமும் அவனுக்கு புரிவரவில்லை, எதற்கு இங்கு நிறுத்துயிருக்கிறான் என்று.

"உனக்கு எதுவும் வேலை இருந்தாலும் முடிச்சுட்டு வா. எனக்கு ஒரு ஹாஃப் அண்ட் அவர் ஆகும்" என வேக நடையில் உள்ளே சென்றுவிட்டான்.

"கேஸ விசாரிக்கன்னு கூட்டிட்டு வந்து பாதி வழியில இறக்கிவிட்டு, என் வேலையப் பாக்கப் போவ சொல்றாரு" என குழம்பிய மிதுரன், அவன் பின்னரே செல்ல,

சீருடை இன்றி வந்தாலும், ஆரனின் மிடுக்கும் தோரணையும் அவனை போலீஸ்காரன் என காட்டிதர, மொத்த வங்கியும் அவனை, 'பே' என பார்த்தது. கூலிங் கிளாஸை கலற்றியவன், "மேலாளர்" என போட்டிருக்கும் அறையை சுற்றித் தேடி, கண்டுபிடித்து, அதை நோக்கிச் செல்ல,

"மேனேஜர பாக்கணுமா சார்?" என்றாள், அறைக்கு வெளியே சீட்டில் அமர்ந்திருந்த பெண்,

ஆரனும் திரும்பிக் கண்ணாடி அறையினுள் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன், "ஆமா ஆமா பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்" என சொல்ல,

அவன் சொன்ன தினுசில், அந்தப் பெண்ணும் நிலாவைத் திரும்பிப் பார்த்துவிட்டு, "போய் பாருங்க சார்" என்றாள். ஒருமுறை நிலாவிற்கு அழைத்து கேட்டுவிட்டு அனுப்ப வேண்டும் என்பது தான் முறை, போலீஸ்காரன், திட்டிவிடுவானோ என்ற பயத்தில், நிலாவிடம் கூட திட்டு வாங்கிக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்து அனுப்பிவிட்டாள் அந்தப் பெண். பின்னயே வந்த மதுரனுக்கு, நிலாவை அங்குப் பார்த்த பின்னர் தான் பல்பே எரிந்தது.

"ஆத்தி!" என அப்படியே, வெளியேறித் தலைமறைவாகிவிட்டான்.
ஆரன், லேசாக அந்த கண்ணாடி கதவை இருமுறைத் தட்டிவிட்டுக் கதவைத் திறந்து உள்ளே செல்ல, ஏசியின் ஜில்லிப்பு முகத்தில் மோதி, அப்படியொரு சுகந்தத்தை தந்தது அவனுக்கு.

கத்தரிப்பூ நிறமும் வெள்ளையும் கலந்த நிறத்திலான சுடிதாரில், கணினியில் இடது கையும் வலது கையில் பென்சிலால் ஒரு பெரிய நோட்டில் எதையோ குறித்தபடியும் இருந்திருப்பாள் போலும், அதை அப்படியே வைத்திருந்தபடியே இவனைக் கண்டதும், 'ஙே!' என விழித்தபடி, அவன் வந்து அவள் எதிரில் அமரும் வரைப் பார்த்திருந்தாள்.

"போலீஸ் எக்ஸாம் எழுதினதுக்கு பதிலா, பேங்க் எக்ஸாம் எழுதிருக்கணுமோ? சும்மா ஜில்லுன்னு இருக்கு நிலா. நிலாவே குளிர்ச்சி அதுக்கு இவ்வளவு குளிர் தேவையா?" என கால் மேல் காலிட்டு அமர்ந்து, அவன் கேட்ட பாவனையில் தான் சுதாரிப்பிற்கே வந்தாள்.

"என்ன?" என்றாள் பதற்றமாக, அறைக்கு வெளியேவும் பார்க்க, மொத்த வங்கியும் இவள் அறையை தான் பார்த்திருந்தது. வேலையாக வந்த மக்கள் கூட திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தான் நின்றனர்.

"என்னது என்ன?" என்றான் நிதானமாக,

"எதுக்கு சார் இங்க வந்துருக்கீங்க?"

"ஏசி காத்து வாங்க" என்றவன் இன்னும் வசதியாக சாய்ந்தமர,

"சார் என்ன நீங்க? எல்லாரும் இங்கதான் பாக்றாங்க. என்ன விஷயம் சொல்லுங்க" என்றாள் படபடவென்று,

"நிஜம் தான் நிலா. வெளில வெயில் ஓவரா இருக்கு. இப்படி வந்தேன் அட நம்ம ஐஓபி பேங்க், கொஞ்சம் ஏசி காத்து வாங்கலாமேன்னு தான் உள்ள வந்தேன். ஃபர்ஸ்ட் டைம் உன் ப்ளேஸ் வந்துருக்கேன், சரியான கவனிப்பில்லையே"
உள்ளே படபடவென்று தான் இருந்தது அவளுக்கு, எதையாவது சொல்லிவிடுவானோ என பயம், பயம், பயம் என இதயம் அதிவேகத்தில் துடித்துக்கொண்டிருந்தது. அவள் கண்களின் அலைபுறுதலைக் கண்டவனுக்கும் அவளின் நிலை புரிந்தது தான், ஆனாலும் சீண்டலை விடவில்லை அவன்.

இன்டர்காம் எடுத்தவள், வெளியே இருந்த பெண்ணிடம், "ஒரு லெமன் ஜுஸ் வித் ஐஸ்" என சொல்ல,
"உனக்கும் சேர்த்து சொல்லு நிலா" என்றான் ஆரன்.

ஃபோனை வைத்தவள், "எனக்கு வேணாம் சார்" என்றாள்.

"அப்புறம் நிலா. மறுபடியும் ட்ரான்ஸபெர் எதுவும் வருமா?" என்றான் அடுத்ததாக,
"தெரியல, வந்தாலும் வரும்"

"ஆமா உனக்கு வீட்ல அலைன்ஸ் பாப்பாங்க தானே? மேரேஜ் ஆகிருச்சுனா வொர்க் எப்படி மேனேஜ் பண்ணுவ?" என அவன் கேட்கையில், ஜுஸுடன் அந்த பெண் உள்ளே வந்தாள்.

"உசுர வாங்குறதுக்குன்னே கிளம்பி வந்துருக்குறத பாரு" என முனங்கியவள், அவனுக்கு ஜுஸை எடுத்து நீட்டிவிட்டுத் தண்ணீரை எடுத்துப் பருகினாள். வந்தவளுக்கும் கண்ணைக் காட்ட அவள் சென்றுவிட்டாள்.

"ஜுஸ் குடிக்கிறியா நிலா?" என ஒரு சிப் குடித்துவிட்டு அவளிடம் நீட்ட, அப்பட்டமாக முறைத்தாள் இப்போது.

"மேரேஜ்கு அப்றம் வேலைய எப்படி மேனேஜ் பண்ற ப்ளான் நிலா?" என்றான் மறுபடியும்.

"அது அமையிற மாப்பிளையோட வேலைப் பொறுத்து தான் யோசிப்பேன் சார்" என்றாள் பல்லைக் கடித்து,

"என்ன மாதிரி போலீஸ்காரன்னு வச்சுகோவேன்?" என்றதும் திக்கென்று தான் இருந்தது.

கண்ணை உருட்டி விழித்தவள், "என்னைய ரொம்ப டீஸ் பண்றீங்க சார் நீங்க?" என சொல்லவும்,

"தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டா ரொம்ப தான் பண்ற நீ"

"உங்களுக்கு வேண்டாத வேலை தான் சார் இது"

"எனக்கு வேணுமா வேணாமான்னு நாந்தான் சொல்லணும் நிலா. நீ உனக்கு வேணுமான்னு மட்டும் யோசி" என்றான்.

"என்ன? என்ன யோசிக்கணும்?"
"சொன்னனேமா? போலீஸ்கார மாப்ள வேணுமா வேணாமான்னு யோசி. அப்படி வந்துட்டா எப்படி சமாளிக்கலாம்னு யோசி" என்றவன், ஜுஸைக் குடித்து முடித்திருக்க, டம்பளரை மேஜை மீது வைத்தவிட்டு எழுந்து கொண்டான்.

"பை நிலா!" எனக் கிளம்ப, பேயறைந்தது போல தான் அமர்ந்திருந்தாள், திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே தான் வெளியே வரை வந்தான்.

அங்கு வண்டி அருகிலேயே நின்றிருந்த மதுரன், "லஷ்மி பாக்க வந்தீங்களா சார்?" என்க,

"ஆமா மந்திரிச்சு விட்டுட்டு வந்துருக்கேன். பாப்போம் என்ன வருதுன்னு" என சிரிப்புடன், வண்டியை எடுக்க,

"என்ன வில்லங்கத்த இழுத்து விட்டுட்டு வந்துருக்காருன்னே தெரியலயே" என்ற முனங்கலோடு பின்னால் ஏறிக்கொண்டான் மதுரன்.
மேலும் ஒருவாரம் கடந்திருந்தது,
பழைய தூசிதட்ட வேண்டிய கேஸ்களை ஆரனிடம் கொடுப்பது தான் வழக்கம் அது தான் க்ரைம் ப்ரான்ச்சில் இருக்கும் அவனின் வேலையும் கூட, ரத்னாவின் தற்கொலை வழக்கை ஆராய்கையில், ஒரு நான்கு பேரை குற்றவாளியாக லிஸ்ட் எடுத்தான். அவர்கள் சம்பந்தபட்ட மற்ற வழக்குகளையும் அவன் தேடி துருவி எடுத்ததில், வேறு சில குறிப்புகள் கிடைத்தன, அதாவது அவன் சலித்தெடுத்த நால்வரும் முகப்புத்தகங்களில் திருமணமான பெண்களிடம் ஆபாசமான முறையில் வலுக்கட்டையமாக பேச கூடியவர்கள், தினமும் ஆபாச வீடியோக்கள் அனுப்பவதும், படங்களை அனுப்புவதும், தொடர்ந்து மெசேஜாக அனுப்பி அவர்களை தொந்தரவு செய்வதும் என இருக்கக் கூடியவர்கள்.

ரத்னா கைபேசியை ஆராய்ந்ததில், அவளிடம் பேசியவர்கள் இரண்டு மூன்று பேரிடம், 'பயமா இருக்கு. இந்த கல்யாண வாழ்க்கையே பிடிக்கல, கல்யாணமே பண்ணாம இருந்துருக்கலாம் போல. குழந்தை பெத்தே ஆகணும்னு தினம் தினம் டார்ச்சரா இருக்கு' என பல வகையில் புலம்பல்கள் இடம்பெற்றிருந்தது. ரத்னா பேசிய அனைவருமே பெண் பெயரில் தான் இருந்தனர். ஆனால் அதில் இருவர் ஆரன் இப்போது சலித்தெடுத்து வைப்பவர்களில் இருக்கும் இரு ஆண்கள் தான்.
'இது மாதிரி வீடியோ பாரு. உனக்கு குழந்தைப் பெத்துக்க உதவியா இருக்கும்' போன்ற ஆறுதல் வார்த்தைகள் மூலம் ரத்னாவை அவர்கள் தொடர்பிலேயே வைத்திருந்திருக்க, கடைசி மெசேஜ் வரைக்குமே ரத்னா அதை கண்டுபிடித்திருக்கவில்லை. அவர்களும் சுய இன்பம் கொண்டுள்ளனரே தவிர, ரத்னாவை தற்கொலைக்கு தூண்டியிருக்கவில்லை, அதனால் அந்த நான்கு ஆண்களால் வேறுயாரும் பாதிக்கப் பட்டிருக்கின்றனரா என தேடுதலில் இறங்க, ரத்னா போன்றே திருமணம், குழந்தை இன்மை, மாமியார் கொடுமை, கணவர் கொடுமை, நாத்தனார் கொடுமை என தற்கொலை செய்து கொண்ட வழக்குகள் மூன்று அவன் பார்வைக்குக் கிடைத்தது. மூன்றும் கடந்த ஆறு வருடத்திற்குள் நடந்திருந்தது, முக்கியமாக ஒரே ஏரியாவில் நடந்திருந்தது.

"மதுரன், ரத்னா கேஸ் சாதாரண சூசைடா தெரியலயே?" என ஆரன் யோசனையில் கூற,

"கொலையா சார்?" என்றான் மதுரன்,

"தற்கொலை தான் ஆனா அதுக்கு பின்ன வேறென்னமோ இருக்கு" என்றவன் கண்ணை மூடி, நாற்காலியில் சாய்ந்தமர்ந்து புருவத்தை ஒற்றை விரலால் நீவிவிட்டான்.

"ஆனா அந்த பொண்ணோட மாமியாரையும் புருஷனையும் விசாரிச்சதுல டவுட்டே வரலையே சார்?" என மதுரனும் யோசனையாக கேட்க,

"ம்ம்கூம் உள்ள புகுந்து வேற எவனோ விளையாண்டுட்டுப் போயிருக்கான். கண்டுபிடிக்கணும் மதுரன்" என கையிலிருந்த ஃபைலில் அவன் விரல் கொண்டு தட்டியபடி யோசனையில் இருக்க,

வெளியே, கமிஷனரிடம் நேரடியாக கம்ப்ளைண்ட் கொடுக்கவென ஒரு நடுத்தர வயதுகாரர் வந்து வெகுநேரமாக அமர்ந்திருந்தார். கமிஷனர் இல்லாததால், இவனிடம் அவரை அழைத்துவர அனுமதி கேட்க வேண்டி, அவன் அறை வாசலுக்கு வந்து நின்றார் கான்ஸ்டபிள்.

"உள்ள வாங்க சிவா" என்றான் ஆரன்.

"சார், கமிஷனர்ட்ட தான் கம்ப்ளைண்ட் குடுப்பேன்னு காலைல இருந்து வெயிட் பண்றாரு" என உள்ளே வந்த கான்ஸ்டெபிள் ஜன்னல் வழி அங்கு அமர்ந்திருப்பவரைக் காட்ட,

"சரி, வர சொல்லுங்க" என்றுவிட்டான்.

உள்ளே வந்தவரை, அமர சொல்லிக் கைகாட்ட, அங்கு நின்ற மதுரனையும் பார்த்தவாறு கொஞ்சம் பயத்துடனே தான் அமர்ந்தார் சபாபதி.

"என்ன கம்ப்ளைண்ட்? யார் நீங்க?" என ஆரன் கேட்டதும்,

"என் பேரு சபாபதி, என் பொண்ணு அவகூட படிச்ச பையன லவ் பண்ணா சார். விசாரிச்சு பார்த்தேன் நல்ல பெரிய இடம் தான், என் தகுதிக்கு மீறினது தான், ஆனாலும் நல்லாயிருப்பான்னு நம்பி தான் கல்யாணம் பண்ணிக் குடுத்தேன். குழந்தை இல்லன்றதுக்காக அவள கொலை பண்ணிட்டாங்க சார்" என்றார் பாவமாக,

"கொலையா?" என்ற ஆரன், மதுரனைப் பார்க்க,

"லோக்கல் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்தீங்களா?" என்றான் அவன்.

"அவங்க அத சூசைட்னு முடிக்கப் பாக்றாங்க சார்"

"உங்களுக்கு டவுட்டா இருக்கா?"

"ஆமா சார். ரெண்டு நாள் முன்ன கூட வீட்டுக்கு வந்து சந்தோசமா பேசி இருந்துட்டுப் போன புள்ள சார். நேத்து காலைல கைய அறுத்துட்டான்னு சொல்லி ஃபோன் வருது. அவங்க பணக்காரங்க சார் அதான் போலீஸ்காரங்க அவங்க மேல கேஸ் எடுக்க மாட்டேங்குறாங்க. நீங்களாவது எடுங்க சார் ப்ளீஸ்" என்றவர் கலங்கி போய் தான் இருந்தார், வெகுவாக அழுது சோர்ந்துவிட்டார் போலும், முகமெல்லாம் அப்படித்தான் இருந்தது.

"இதுல ரிட்டனா உங்க கம்ப்ளைண்ட்ட குடுத்துட்டுப் போங்க, ஆக்ஷன் எடுக்கலாம்" என ஆரன் ஒரு பேப்பரை தர, வாங்கியவர் வேகமாக எழுதி நீட்டிவிட்டார்.

வாங்கி பார்த்தவனுக்கு முதலில் கண்ணில் பட்டது, அந்த ஏரியா தான். 'லெனின் ரோஸ் கல்லூரி நகர்' அதை ஸ்கெட்ச் கொண்டு வட்டமிட்டவன், "நீங்க போங்க விசாரிச்சுடலாம்" என சொல்ல,

"கண்டிப்பா விசாரிப்பீங்களா சார்?" என்றார் சபாபதி.

"நானே நேர்ல வருவேன்" என்றுவிட்டான் ஆரன் விஷ்வேஷ்வரன்.

அன்றைய நாள் அப்படியே கழிய, மாலை போல் வந்த கமிஷ்னரிடம், தானே அந்த வழக்கை எடுப்பதாக கூறிவிட்டான்.

“ஓகே, ஆனா அவர் கம்ப்ளைன்ட் குடுத்துருக்க ஃபேமிலி கொஞ்சம் பெரிய இடம் தான். இங்க பத்மினி விலாஸ், பத்மினி மண்டபம்னு கேள்விபட்ருக்கீங்களா? தியேட்டர், கல்யாணம் மண்டபம்னு அவங்க திருநெல்வேலில கொஞ்சம் ஃபேமஸ் தான். மேலிடத்துல இருந்து நமக்கு ஃபோன் வராதத பார்த்தா, இவங்க சைட் தப்பிருக்காதுன்னு தான் தோணுது” என்றார் கமிஷ்னர் அனுபவஸ்தராக.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“நா அத விசாரிச்சு கன்போர்ம் பண்றேன் சார்” என்றான் ஆரன்.

“ஓகே ஆரன். கோ அஹெட். நா குடுத்த அந்த பழைய கேஸ், சூசைட் கேஸ் அதும் முடிச்சுடுங்க. அவங்க அண்ணா கோர்ட்ல நேரடியா கேஸ் எடுக்க ஃபைல் பண்ணப் போறேன்னு சொல்லிட்ருக்காரு” என்றார் கமிஷனர். தலையை அசைத்துக் கிளம்பிவிட்டான் ஆரன்.

வெளியே வந்தவனிடம், “ஏன் சார், ரத்னாவும் குழந்தை இல்லைன்னு தான் சூசைட் பண்ணிட்டாங்க, இந்த பொண்ணும் குழந்தை இல்லைன்னு தான் சூசைட் பண்ணிட்டாங்க. ஒரே ஏரியா வேற. ப்ரெண்ட்ஸா இருப்பாங்களோ?” என்றான் படு தீவிரமாக மதுரன்.

“இருக்கலாம் மதுரன், அப்படியே லாஸ்ட் டென் இயர்ஸ்ல இதே எரியால நடந்த மொத்த கொலை, தற்கொலை கேஸையும் லிஸ்ட் எடுங்க, அதுல சேம்மா வர்ற பாயிண்ட் எல்லாத்தையும் கனெக்ட் பண்ணி காலைல ஒரு ட்ராயிங்கோட வாங்க, நாம நேர்ல போய் படம் ஒத்து போகுதான்னு பாத்துடலாம்” என்றவன், வண்டியைக் கிளப்பிவிட, மதுரனும் அவன் வீடு கிளம்பிவிட்டான்.

ஆரன் வீடு வந்து வண்டியை நிறுத்துகையில், எதிர்வீட்டின் வெளியே நிலாயினியின் இருசக்கர வாகனம் நிற்பதைப் பார்த்துவிட்டு, செல்லைப் பார்ப்பவனாக அப்படியே அமர்ந்துகொண்டான்.

அவன் எதிர்பார்த்தது போலவே, பத்து நிமிடம் சென்றிருக்க, கேட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள், மறுபடியும் வண்டியை எடுக்க, அவளையே தான் பார்த்தான் ஆரன்.
அவன் பார்வையில், “என்ன சார்?” என்றாள் அவளே,

“எங்க கிளம்பிட்ட?”

“சும்மாதான் வெளில கொஞ்சம் வேலை இருக்கு”

மணியை செல்லில் பார்த்துவிட்டு அவளுக்கும் திருப்பிக் காண்பித்தவன், “இந்நேரமா?” என்க,

“ஆமா!”

“என்ன நோமா? இந்நேரம் எந்த ஃப்ரெண்ட பாக்கப் போற நீ?” என்றான் அதட்டலாக,

“சார்! என் ஃப்ரெண்ட், அது யாரா இருந்தா உங்களுக்கு என்ன சார்?”

“அப்படிலாம் விட முடியாது. வீட்டுக்குள்ள போ. வேணும்னா காலைல போ” என்க,

“எனக்கு ஆடிட்டிங் நடக்குது, காலைல சீக்கிரம் போகணும், நைட்டும் வர லேட்டாகுது, இன்னைக்கு தான் கொஞ்சம் சீக்கிரமா வந்துருக்கேன், நா போகணும்” என்றாள் பொறுமையாக, அவனிடமிருந்து தப்பித்து தான் ஓடிக்கொண்டிருந்தாள், இப்போதைய மனநிலை அவனிடம் நின்று பேச வைத்தது.

“ஓ! இயர் எண்டுல? அதான் ஒரு வாரமா உன்ன பாக்க முடியலயோ?” என அவன் கேட்க,

“என்ன எதுக்கு சார் தேடுனீங்க?”

“போலீஸ் ஓகேவான்னு கேட்கத்தான்”

“சார்!” என அவள் முறைக்க,

“இந்நேரம் எங்கையும் போக வேணாம். உள்ள போ நீ”

“நீங்க என்ன சார் பெர்மிசன் தர்றது? எங்கம்மாவே ஓகே சொல்லிட்டாங்க” என அவள் எகிற,

“வெளுக்கப் போறேன் உன்ன. சொன்னா கேட்க பழகணும். காலைல போன்னு சொல்றேன்ல? வாய்ஸ் ரைஸ் பண்ற அதும் ரோட்ல நின்னுட்டு?”

“கேட்க மாட்டேன். நீங்க சொல்லி நா ஏன் கேட்கணும்?” என இன்னும் முறைக்க,

அவளை முறைத்தவன், “ஆண்ட்டி!” என வீட்டினுள் சத்தம் கொடுத்து கத்த,

“ஹே! ஹே! எதுக்கு கத்றீங்க?” என இவள் அக்கம்பக்கம் வீடுகளைப் பார்த்துவிட்டு அவனிடம் மெதுவாக இறங்கிவந்து கெஞ்ச,
மறுபடியும், “ஆண்ட்டி!” என்றிருந்தான் அவன்.

“இங்கையா? நம்ம வீட்டு வாசல்லையா சத்தம் கேட்குது?” என கேட்டபடி சமையலறையிலிருந்து வினோதினி வர, சட்னி அரைத்துக்கொண்டிருந்த சந்திராவும், செல்லில் யாருடனோ பேசியபடி இருந்த தீக்ஷியும் பின்னரே வந்தனர்.
வெளியே வந்த பிறகே, மகளும் அங்கே நிற்பது தெரிந்தது, “நீ இன்னும் கிளம்பலையா?” என அவளிடம் முனங்கியவர், “கூப்பிட்டீங்களா சார்?” என்றார் ஆரன் விஷ்வேஷ்வரனிடம்.

“இந்நேரம் நிலா எங்க போறா?”

“நிலாவா?” என்றனர், சந்திரா, தீக்ஷி இருவரும் ஒன்றுபோல. அவர்கள் வெளிப்படையாகவே புருவம் உயர்த்தி அக்காவைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்து சின்ன சிரிப்புடன் திரும்பி சுவாரஸ்யமாக ஆரனைப் பார்த்தனர்.

“அவ ஃப்ரெண்ட் ஒரு பொண்ணு இறந்துட்டா சார். கூட படிச்ச புள்ள சார். நேத்தே போக வேண்டியது ஆனா அவ வேலைனால போ முடியல. இன்னைக்கு இதுக்காகவே சீக்கிரமா முடிச்சுட்டு ஓடி வந்துருக்கா” அவன் போலீஸ் என்பதாலும், எதிர் வீட்டுக்காரன், தெருவில் அவனுக்கு நல்ல மரியாதை என்பதெல்லாம் சேர்ந்து அவன் மீது அவருக்கும் நன்மதிப்புண்டு. அதனாலயே கேட்டதும் மலமலவென அனைத்தையும் ஒப்பித்துவிட்டார்.

“மணி இப்பவே ஒன்பது, இந்நேரத்துக்கு அவ கிளம்பிப் போய் எந்நேரம் திரும்பி வர்றது? அவ தான் சொல்றான்னா நீங்களும் சரின்னுவீங்களா?”

“சார்! பத்ரமா போய்ட்டு வர தெரியும் எனக்கு?” என பல்லைக் கடித்தாள் நிலாயினி.

“நா உன் அம்மாட்ட பேசிட்ருக்கேன் நிலா”

“நீங்க ஒன்னும் பேச வேணாம்னு தான் சொல்றேன்”

“அவ வெளியூர்லளாம் வேலை பார்த்தவ சார். இந்த மாதிரி பாதி ராத்திரிக்கு தான் வருவா போவா. அதனால அவளுக்கு பழக்கம்னு தான் விட்ருவேன். இப்ப இந்த ரெண்டையும் அப்படி விடுவேனான்னு கேட்டா விட மாட்டேன்னு தான் சொல்லுவேன். அவ அளவுக்கு இதுங்களுக்கு விவரம் பத்தாது”

“ம்மா!” என பல்லைக் கடித்தனர் இளையவர்கள்.

“மொத்தத்துல, நா சொல்றத கேட்க மாட்டீங்க?” என அவன் நிலாவை முறைக்கவும்,

“ச்ச போகல போங்க போய் நிம்மதியா தூங்குங்க” என்றவள் விறுவிறுவென உள்ளே சென்றுவிட, மற்ற பெண்கள் மூவரும் வாயைப் பிளந்து நின்றுவிட்டனர்.

“உங்களுக்கும் தான் அன்டைம்ல வெளில போற வேலைலாம் வேணாம். உங்க வீரத்த நீங்க பகல்லயே காட்டலாம்” என இளையவர்களிடமும் சொல்லிவிட்டு, வண்டியை நிறுத்தி, இறங்கி படியேறிவிட்டான்.

“ஒன்னும் சரியாபடலையே?” என்றாள் இனிய சந்திரா,

“ஆமால்ல? சேம் ஃபீலிங்” என்றாள் தீக்ஷி,

“என்னடி சொல்லுதீக? ஆனா அந்த தம்பி நம்ம லஷ்மிட்ட ரொம்ப உரிமை எடுத்தமாதிரி படுதுல்ல?” என்றார் யோசனையாக வினோதினி.

“உன் மகளும் அதுக்கு தலையாட்டிட்டு தான் போறாம்மா”

“ஃப்ரெண்டாகிருப்பாளோ?”

“ரொம்ப தான் நம்பிக்கை உனக்கு” என்றாள் சந்திரா.

“ஆமா எனக்கும் இது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்பா தெரியல” என்றாள் தீக்ஷி.

“அவ நாலுபேர்ட்ட பழகுறவ. எங்கெல்லாம் போய் வேலைப் பாத்துட்டு வந்துருக்கா? அவள சும்மா எதாச்சும் சொல்லாதீங்கடி” என்ற வினோதினிக்கு மனதினுள் திக்திக் என்றிருந்தாலும், நிறைய நம்பிக்கை மூத்த மகள் மீதும் இருந்தது.
 
Top Bottom