• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலை கடந்த காதல் - 24

STN - 24

New member
பரத் பிரியாவைத் திரும்பிப் பார்த்தான்."என்ன பிரியா? இங்கேயே உட்கார்ந்துட்டு இருக்கீங்க? எழுந்து போங்க... நீங்களும் வெளியே வாங்க." என்றான்.

"சரி..." என்று தலையசைத்தவள், அதன் பிறகு மெதுவாக வெளியே வந்தாள்.

எட்டிப் பார்த்தபோது, சமையலறையில் தருண் சமையல் மேடையில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் நின்றுகொண்டு அவனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள் வினிதா.
அதே நேரம், சமையலில் பிஸியாக இருந்தார் பானுமதி.

சமையலறைக்குள் எட்டிப் பார்த்த பிரியாவைக் கண்டதும், "அட அண்ணி, வாங்க!" என்று வினிதா உற்சாகமாகக் கூப்பிட்டாள்.

"என்ன அண்ணி, எட்டிப் பார்த்துட்டு இருக்கீங்க?"என்று கேலி செய்தவள்,"அம்மா நல்லா ஃபில்டர் காபி போடுவாங்க. இஞ்சி தட்டி டீயும் சூப்பரா போடுவாங்க.
உங்களுக்கு காபியா? டீயா?" என்று கேட்டாள்.

பிரியாவிற்கு என்ன பிடிக்கும் என்று தெரியாததால், அவள் லேசாகச் சிரித்துக்கொண்டு நின்றாள்.

அப்போது பானுமதி,"நேத்தே அண்ணி சொல்லிட்டாங்க. பிரியாவுக்கு டீதான் பிடிக்குமாம்," என்றார்.

"அப்படியா?" என்று வேகமாகக் கூறிய வினிதா, ஒரு கப் டீயை அவளது கையில் திணித்தாள்.

பிறகு,"தருண் குட்டிக்கு பாலும் ஆத்தியாச்சு. குடிங்க சார்..." என்று கூறி பாலை வினிதாவின் கையில் கொடுத்துவிட்டு, மீண்டும் சமையலில் கவனம் செலுத்தினார் பானுமதி.

அவர்களைப் பார்த்த பிரியாவின் உதடுகளில் அறியாமலே ஒரு புன்னகை மலர்ந்தது.


அதன்பிறகு மூவருடனும் பேசிக்கொண்டே பானுமதி சமையலில் ஈடுபட்டிருந்தார்.

பரத்தோ தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கியிருந்தான்.

ஆனால் சில நொடிகள் அங்கேயே நின்று அந்த மூவரையும் அமைதியாகப் பார்த்தான்.

பிரியா கொஞ்சமாவது இந்த வீட்டோடு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவனுடைய எண்ணம்.

அதனால்தான் அன்று தாயிடம் கோபப்பட்டபோதும், அவர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் அவனுக்குப் புரிந்திருந்தது.

அதற்காகத்தான் பானுமதி மெனக்கெட்டு பிரியாவின் வீட்டிற்கே சென்று அவளிடம் பேசிவிட்டு வந்தார்.

அதற்காகத்தான் இப்போதும் இயல்பாக அவளை குடும்பத்திற்குள் இழுத்துக் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்தார்.


இந்த வீட்டில் அவள் அவளாகவே வாழ வேண்டும்.ஒரு இடத்தில்கூட,
"தருணுக்காகத்தான் இந்த வாழ்க்கை..." என்று நினைத்துவிடக் கூடாது.

அப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டால், அது இன்றல்ல என்றாலும் ஒருநாள் அவளது முழு வாழ்க்கையையும் புதைத்துவிடும்.
அதனால்தான் தாயும் மகனும் ஒரே விஷயத்தை நினைத்தனர்.

பிரியா இந்த வீட்டில் மருமகளாக மட்டும் அல்ல...தனக்கென ஒரு வாழ்க்கையுடன், தனக்கென ஒரு இடத்துடன், தனது விருப்பங்களோடும் வாழ வேண்டும் என்று.

அதை வார்த்தைகளிலும் வெளிப்படுத்திவிட்டார் பானுமதி.
செயல்களிலும் தினமும் காட்டிக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த பரத்தின் மனம் மெதுவாக நிம்மதியடைந்தது.

ஏனென்றால், பிரியா இந்த வீட்டில் அந்நியமாக நிற்காமல், குடும்பத்தோடு கலந்துவிடும் முதல் அடிகள் ஏற்கனவே தொடங்கியிருந்தன.


அன்றைய நாள் முழுவதும் மூவரிடமும் பேசி, சிரித்து, பழகிக்கொண்டே நேரம் சென்றது.
இப்போது தான் அவள் கொஞ்சம் கலந்துவிட்டது போல இருந்தது.

இரவு வரும் வரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது.
ஆனால் இரவு அறைக்குள் நுழையும் போதுதான் மீண்டும் ஒரு சிறிய பதற்றம் வந்தது.
இருந்தாலும் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டாள்.

பரத்தும் அவளை மிகவும் இயல்பாகத்தான் நடத்தினான்.
இதற்கு முன்பு எப்படி பேசினானோ, அதேபோலத்தான் இப்போதும் பேசினான். இவன் காதலித்தான் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.
சிறிதளவு காதல் பார்வை கூட இல்லை.இதற்கு முன்பு வரை எப்படி பழகினானோ, அப்படியே பழகினான்.

தருணுடன் பேசி ஜாலியாக இருந்தான். தருணும் அவனிடம் நன்றாக ஒட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான். அப்படியே அந்த இரவும் கடந்தது.


மறுநாள் காலையில் வினிதா கல்லூரிக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

"வினி காலேஜ் போறியா?" என்று பிரியா கேட்டாள்.

"ஆமா. அண்ணி. நேத்தே அண்ணே திட்டுச்சு. ரெண்டு நாளா லீவ் போட்டு வீட்ல இருக்கேனு" என்று சிரித்தாள்.

அப்போது பானுமதி, "நீ எப்போ இருந்து வேலைக்கு போற பிரியா?" என்று கேட்டார்.

சட்டென்று அவரைத் திரும்பிப் பார்த்தாள் பிரியா.

அவரோ அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
"என்ன ஆச்சு பிரியா?" என்று கேட்டார்.

"அது..." என்று தயங்கினாள்.

"என்னம்மா? தருணையும் ஸ்கூலுக்கு அனுப்பணும் இல்ல?
இங்க நம்ம வீட்டுக்கிட்டயே வேன் வரும்.இல்லனா,நான் ஆட்டோல கூட போய் விட்டுட்டு வந்துருவேன்.எப்படி வேணாலும் பார்த்துக்கலாம்.நீயும் வேலைக்கு போகணும் இல்ல? வீட்டிலேயே இருக்க முடியுமா?" என்றார்.

"இல்ல... வேலைக்கு போகணுமான்னு கொஞ்சம் யோசனையா இருக்கு..." என்றாள்.

உடனே புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவர்,"ஏன் பிரியா?" என்று அவளது கையைப் பிடித்துக் கொண்டார்.

"இல்ல... அது..." என்று மீண்டும் தடுமாறினாள்.

"பிரியா, உன்னை நானோ, பரத்தோ, இந்த வீட்டில இருக்கிற யாருமே வேலைக்கு போகக் கூடாதுன்னு சொல்ல மாட்டோம்.
உன்னோட அப்பா அம்மாவையும் சேர்த்துத்தான் சொல்றேன்.
உன்னோட மாமா எப்பவும் ஒரு விஷயம் சொல்லுவாரு.

பொம்பள பிள்ளைக்கு என்னைக்குமே படிப்பு கை கொடுக்கும்ன்னு.பெத்தவங்க, கூடப் பிறந்தவங்க, கட்டினவன் யாரா இருந்தாலும், ஒரு பெண்ணுக்குத் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்குறது அவளோட படிப்பும் வேலைதான் என்று சொல்லுவாரு.

படிச்சிட்டு வீட்டுல மட்டும் இருக்காம, அந்தப் படிப்பை வீணாக்காம வேலைக்கு போறது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா?உன்னைப் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு.நீ என்ன இப்போ வேலைக்கு போக மாட்டேன்னு சொல்ற?என்ன காரணம்?" என்று கேட்டார்.


"அது... நான் கல்யாணம் ஆயிடுச்சுன்னு யார்கிட்டயும் சொல்லல. ஆபீஸ்லயும் கல்யாணத்தைப் பற்றி சொல்லல..." என்றாள் தயக்கமாக.

லேசாகச் சிரித்தார் பானுமதி.
"நீ ஏன் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லணும்?தருண் இருக்கிறதெல்லாம் ஆபீஸ்ல தெரியும் தானே?"

"ஆமா..."

"ஆபீஸ்க்கு அவனை கூட்டிட்டு போயிருக்க. உடம்பு சரியில்லாதப்போ லீவ் எடுத்திருக்க. அப்போ தருண் உன்னோட பையன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது புதுசா என்ன சொல்லப் போற?

உனக்கு ஒரு மூத்த பையன் தருண் இருக்கான்.உன் புருஷன் பரத் இருக்கான்.அவ்வளவுதான்.
புதுசா எதுவும் மாறலை.
தாலியை மறைக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.ஆனா புது தாலி இருக்கிறதைப் பார்த்து யாராவது கேட்டா உண்மையைச் சொல்லு.அதும் உனக்கு சொல்லணும்னு தோணலன்னா விட்டுடு.

நான் மட்டும் இல்ல, எல்லாரும் வாழ்க்கையில் சில பேரைக் கடந்து போயிடுவோம்.அவ்வளவுதான்.
வாழ்க்கையில எல்லாருக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா முன்னாடி போக முடியாது." என்றார்.

"பிரியா...ஒவ்வொன்னையும் யோசிச்சிட்டு அதே இடத்துல தேங்கி நிக்காத.அடுத்து என்னன்னு யோசி.உனக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கோ. தேவையில்லாததை மனசுல போட்டு ரொம்பக் குழப்பிக்காத.சரியா?"என்றார்.

அவ்வளவுதான். அடுத்த நொடியே வேகமாக அவரைக் கட்டிப்பிடித்திருந்தாள் பிரியா.

சிறிது அதிர்ந்த பானுமதி,
"என்ன ஆச்சு பிரியா?" என்று கேட்டபடியே அவளது முதுகை மெதுவாக வருடினார்.

தண்ணீர் எடுத்து கொடுத்தவர்,
"சரி... நீயும் போய் ஆபீஸ்க்கு கிளம்பு."என்றார்.

"நாளைக்குப் போறேன்..." என்று மெதுவாகச் சொன்னாள்.

"இந்த நாளைக்கு தள்ளிப்போடுற வேலையெல்லாம் வேணாம்.
இன்னைக்கே போ."என்று பானுமதி கூறியவுடன்,

"தருண்"என்றாள்.



"இன்னைக்கு ஒரு நாள் என் கூட வீட்டில இருக்கட்டும். தருண் நாளையிலிருந்து ஸ்கூலுக்குப் போகட்டும்.நான் கூட்டிட்டு போறேன்.இல்லனா வேன் வருது.
எப்படி வேணாலும் பார்த்துக்கலாம்"என்றார்.

அவளும் அதன்பிறகு வேகமாகக் கிளம்பி வந்தாள்.

அவள் கிளம்பி வந்த பிறகு,
"அண்ணி வாங்க, நானே உங்களை ரயில்வே ஸ்டேஷன்ல இறக்கிவிடுறேன்," என்றாள் வினிதா.

"இல்ல வினி, நான் பஸ் பிடிச்சுப் போயிடுறேன்," என்றாள் பிரியா.

"அட வாங்க அண்ணி! நீங்க இறங்குற இடத்தைத் தாண்டித்தான் நான் காலேஜ் போகணும். எதுக்காக நீங்க தனியா கஷ்டப்பட்டுப் போகணும்?" என்று வினிதா வற்புறுத்தினாள்.

அதன்பிறகு தினமும் வினிதாவுடன் சேர்ந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள் பிரியா.


நாளடைவில் குடும்பத்தினருடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள்.

ரேகாவுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவாள்.
சசியும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வான்.

கைக்குழந்தை இருந்ததால் ரேகாவால் வர முடியாது.
ஆனால் தொலைபேசியில் அனைவருடனும் நன்றாகப் பேசிக்கொள்வாள்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வினிதா, பிரியா, தருண் மூவரும் சேர்ந்து சசி வீட்டிற்குச் செல்வார்கள்.அங்கு ரேகாவையும், குழந்தையையும் பார்த்துவிட்டு வருவார்கள்.இப்படியே நாட்கள் இறக்கைக் கட்டிப் பறந்தன.


இந்த நாட்களில் பரத்துடன் அவளுடைய உறவும் இயல்பாகவே வளர்ந்தது.அவனிடம் சாதாரணப் பேச்சுவார்த்தைகள் மட்டும்தான் இருந்தன.அவனும் இயல்பாகத்தான் பேசுவான்.
மற்றபடி காதல் வார்த்தைகளோ, காதல் பார்வைகளோ எதுவும் இருக்காது.

ஒரு நல்ல தோழனைப் போல எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வான். அலுவலகத்தில் என்ன நடந்தது, வீட்டில் என்ன பேசினார்கள், அம்மா, தங்கை, சசி என அனைவரைப் பற்றியும் கூறுவான்.

தருணுடன் நீண்ட நேரம் விளையாடி பேசுவான். ஆனால் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மட்டும் எதுவும் பேசாமல் விலகிச் செல்வான்.

அது பிரியாவிற்கு ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது.
அவளும் மெதுவாக மூச்சுவிட ஆரம்பித்தாள்.

இப்படியே நாட்கள் நகர்ந்து மாதங்களையும் கடந்திருந்தது.

இப்போது பிரியா அந்த வீட்டில் நன்றாக ஒட்டிக்கொண்டிருந்தாள்.
இந்த வீட்டின் மருமகளாக...
வினிதாவிற்கு அண்ணியாக...

ரேகாவை "அண்ணி" என்று அன்புடன் அழைக்க ஆரம்பித்திருந்தாள்.

சுந்தரத்தையும் தெய்வாவையும் அப்பா, அம்மா என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். சசியை அண்ணன் என்று கூப்பிட்டு பழகினாள்.

ரேகாவின் குழந்தையை தன் அண்ணன் மகளாகவே பாவித்தாள்.

ஆனால் பரத்திடம் மட்டும்...
ஒரு தோழமை உணர்வோடு மட்டுமே பழகிக் கொண்டிருந்தாள்.

கணவன் , மனைவி என்ற உறவிற்கான அடித்தளம் அங்கு இன்னும் உருவாகவில்லை என்பதுதான் உண்மை.

இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தனர்.
நம்பிக்கை வைத்தனர். அன்பாகப் பேசினர்.ஆனால் அதற்கும் அப்பால் செல்லவில்லை.

இப்படியே இருக்கும் போது, ஒருநாள் பிரியா அலுவலகத்தில் இருந்தபோது மதிய நேரத்தில் பானுமதியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

"சொல்லுங்க அத்தை..."என்றாள்.

அவரது குரலில் இருந்த பதற்றமே முதலில் அவளை பயமுறுத்தியது.

"பிரியா... தருணுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு படுக்க வச்சிருந்தேன்.காலையிலேயே லேசா ஜுரம் இருந்துச்சு. அதனால்தான் ஸ்கூலுக்கு அனுப்பல.மருந்து கொடுத்து பார்த்துக்கலாம் என்று நினைச்சேன்.

ஆனா காலையில இருந்து இரண்டு மூணு தடவை மருந்து கொடுத்தும் ஜுரம் குறையவே இல்ல.எனக்குப் பயமாயிடுச்சு.
அதனால ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கேன் பிரியா.

இங்க டாக்டர் ஏதேதோ சொல்றாங்க.நீ சட்டுனு வரியா?
பரத்துக்கும் போன் பண்ணிட்டேன்.
அவனும் வந்துடுவான்."என்று பதட்டமாகச் சொன்னார்.

பிறகு மருத்துவமனையின் பெயரையும் கூறினார்.

அழைப்பை வைத்த உடனே பிரியாவின் கைகள் நடுங்கின.

எதையும் யோசிக்காமல் அலுவலகத்திலிருந்து கிளம்பினாள்.

அதே நேரத்தில் பரத்தும் தனது அலுவலகத்திலிருந்து புறப்பட்டிருந்தான்.

இருவரும் தனித்தனியாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

பதற்றமாக மருத்துவரைச் சந்தித்து விசாரித்தனர்.

அப்போது மருத்துவர், "குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியிருக்கு."என்று கூறினார்.

அந்த ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது.

பிரியாவின் காலடியில் இருந்த நிலமே நழுவிப் போனது போல உணர்ந்தாள்.அவளது கண்கள் உடனே தருணைத் தேடின.
படுக்கையில் சோர்வாக படுத்திருந்த தன் மகனைப் பார்த்தவளின் கண்கள் கண்ணீரால் நிரம்பின.

அப்போது அவளது தோளில் மெதுவாக ஒரு கை வந்து பதிந்தது.திரும்பிப் பார்த்தாள்.
பரத்.

"ஒன்னும் ஆகாது பிரியா...நம்ம பையனுக்கு எதுவும் ஆகாது..."
என்று மெதுவாகக் கூறினான்.

அந்த நொடியில், கடந்த மாதங்களாக அவள் உணராமல் தேடிக்கொண்டிருந்த பாதுகாப்பு உணர்வு, மீண்டும் அவள் மனதைச் சுற்றிக் கொண்டது.


"மிஸ்டர் பரத், மிஸஸ் பிரியா... முதல்ல பயப்பட வேண்டாம். குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

இப்போ நாங்க எடுத்த ரத்தப் பரிசோதனையில், குழந்தையின் Platelet Count (தட்டணு எண்ணிக்கை) கொஞ்சம் குறைவாக இருக்கிறது.

சாதாரணமாக ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு தட்டணுக்கள் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை இருக்கும்.

ஆனா தருணுக்கு இப்போ அது அதைவிடக் குறைவாக இருக்கிறது.டெங்கு காய்ச்சலில் இது பொதுவாக நடக்கும் விஷயம்தான்.

அதனால உடனே பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் கவனமாக கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
அதனால்தான் குழந்தையை அட்மிட் பண்ணச் சொல்றோம்."


"டாக்டர்... வேறு எதும் பயப்படும் படியா?" என்று பதற்றமாகக் கேட்டாள் பிரியா.

"இப்போதைக்கு அவ்வளவு பெரிய ஆபத்து இல்லை. ஆனா அடுத்த சில நாட்கள் முக்கியம்.

டெங்கு காய்ச்சலில் பொதுவாக மூன்றாவது நாள் முதல் ஏழாவது நாள் வரை தான் நாம அதிக கவனமாக இருக்கணும். இந்த நாட்களில் தட்டணு எண்ணிக்கை இன்னும் குறைய வாய்ப்பு இருக்கும்.அதனால தினமும் ரத்தப் பரிசோதனை எடுத்து கண்காணிப்போம்."


"தட்டணு குறைந்தா என்ன ஆகும் டாக்டர்?" என்று பரத் கேட்டான்.


"தட்டணுக்கள் நம்ம உடம்பில் ரத்தம் உறைவதற்கு உதவுகிறது.
அது மிகவும் குறைந்துவிட்டால்,
மூக்கில் ரத்தம் வரலாம். ஈறுகளில் ரத்தக்கசிவு இருக்கலாம்.
உடம்பில் சிவப்பு புள்ளிகள் தோன்றலாம். வாந்தியிலோ மலத்திலோ ரத்தம் வரலாம்.
அப்படி ஏதாவது அறிகுறிகள் வந்தால் உடனடியாக சிகிச்சை கொடுக்க வேண்டும். ஆனா இப்போதைக்கு தருணிடம் அந்த மாதிரி எந்த அறிகுறியும் இல்லை.
அது நல்ல விஷயம்."

"டாக்டர், தட்டணு ஏற்றணுமா?" என்று பானுமதி கேட்டார்.

"இல்லம்மா. எல்லாருக்கும் Platelet ஏற்ற வேண்டிய அவசியம் கிடையாது. எண்ணிக்கை மிகவும் ஆபத்தான அளவுக்கு குறைந்தாலோ அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மட்டும்தான் அதைப் பற்றி யோசிப்போம்.இப்போ அதற்கான தேவையே இல்லை. நாங்க தொடர்ந்து கண்காணிப்போம்."


"அப்போ இப்போ என்ன செய்யணும் டாக்டர்?" என்று பரத் கேட்டான்.

"முதல்ல குழந்தைக்கு நல்ல ஓய்வு வேண்டும்.நிறைய திரவ உணவுகள் கொடுக்கணும்.
தண்ணீர், இளநீர், ஜூஸ், சூப் போன்றவை கொடுக்கலாம். உடம்பில் நீர்ச்சத்து குறையக்கூடாது. காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருந்துகள் கொடுக்கிறோம். அதே மாதிரி தினசரி ரத்தப் பரிசோதனை எடுத்து Platelet Count, Hematocrit எல்லாம் கண்காணிப்போம்.
இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே இருப்பது நல்லது."


"டாக்டர்... என் பையனுக்கு எதுவும் ஆகாது இல்ல?" என்று கண்கலங்கிக் கேட்டாள் பிரியா.


மருத்துவர் மெதுவாகப் புன்னகைத்தார். "பயப்படாதீங்கம்மா. இப்போ டெங்கு வந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தா முழுமையாக குணமாயிடுறாங்க.
நீங்க கொஞ்சம் தைரியமா இருங்க. நாங்க குழந்தையை தொடர்ந்து கண்காணிச்சுக்கிட்டே இருப்போம். ஏதாவது மாற்றம் இருந்தாலும் உடனே உங்களுக்கு சொல்லிடுவோம்." என்று கூறிய மருத்துவர், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, தருணை கவனிப்பதற்காக மீண்டும் வார்டுக்குள் சென்றார்.

அதன்பிறகு தருணை இரண்டு முதல் மூன்று நாட்கள் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர் உறுதியாகக் கூறினார்.

அதனால் அவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இரவு நேரத்தில் நோயாளியுடன் இருவர் மட்டுமே தங்க அனுமதி இருந்தது.

வயதானவர்கள் மருத்துவமனையில் தங்கி சிரமப்பட வேண்டாம் என்று நினைத்த பரத், அனைவரையும் வீட்டிற்குச் செல்லச் சொல்லிவிட்டான்.

திருமணம் ஆனதிலிருந்து வாரத்திற்கு ஒரு நாள் பிரியாவையும் தருணையும் அழைத்துக் கொண்டு விநாயகம், செல்வி இருவரையும் பார்க்கச் சென்று விடுவான்.

தன்னால் முடிந்த அளவிற்கு அவர்களுடன் நேரம் செலவழிப்பான். சில நேரங்களில் வேலை காரணமாக உடன் இருக்க முடியாவிட்டாலும், அவர்களை அங்கே விட்டுவிட்டு தனது வேலையை முடித்துவிட்டு மீண்டும் சென்று அழைத்து வருவான். தனிமை அவர்களை வாட்டிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான்.


தினமும் தொலைபேசியில் பேசுவான்.வினிதாவும் பேசுவாள்.
ரேகாவும் பேசுவாள். சசியோ ஒரு மகனாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்து, எந்தக் குறையும் இல்லாமல் அவர்களிடம் அன்பு காட்டுவான்.

அப்போது விநாயகத்திற்கும் செல்விக்கும்,எங்களுக்கு ஒரு மகன் இல்லை என்ற குறையே இல்லை...என்று தோன்றும் அளவிற்கு அனைவரும் அவர்களைப் பார்த்துக் கொண்டனர்.


பானுமதியும் விடாமல் பேசுவார்.
தினமும் வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, தருணை பள்ளிக்கு அனுப்பிய பிறகு செல்விக்கு அழைப்பார்.நலம் விசாரிப்பார். வீட்டில் நடந்துவற்றை கூறி, அங்கு நடப்பவற்றையும் கேட்டு தெரிந்து கொள்வார்..

இன்று தருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் பிரியாவிற்கு அழைத்து விட்டு, அதன்பிறகு விநாயகத்திற்கும் செல்விக்கும் தனியாக அழைத்து விவரத்தைச் சொல்லியிருந்தார்.


செய்தியைக் கேட்டதும் அனைவரும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

தருணைப் பார்த்து, மருத்துவரிடம் பேசி, தேவையான விவரங்களை அறிந்துகொண்டனர்.

ஆனால் மருத்துவர், "குழந்தைக்கு ஓய்வு தேவை. அதிக கூட்டம் வேண்டாம்."என்று கூறியவுடன், அனைவரும் மனதை அடக்கிக்கொண்டு கிளம்பத் தயாரானார்கள்.

"நாங்க இருக்கோம்டா..." என்று விநாயகம் கூற,

"மாமா, நீங்களும் அத்தையும் வீட்டுக்குப் போங்க. இங்க நானும் பிரியாவும் இருக்கோம். ஏதாவது இருந்தா உடனே சொல்லிடுறேன்."
என்று பரத் கூறினான்.

அதேபோல் பானுமதி, சுந்தரம், தெய்வா, வினிதா என அனைவரையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தான்.

இறுதியில் மருத்துவமனை அறையில் தருண் படுத்திருந்தான்.அவன் அருகில் பிரியா அமர்ந்திருந்தாள்.
மற்றொரு புறம் பரத் இருந்தான்.

அன்று இரவு அவர்களிருவரும் மட்டும் தருணுடன் தங்கினர்.


காய்ச்சலின் காரணமாக சோர்வாக இருந்த தருண் மருந்தின் தாக்கத்தில் விரைவாக உறங்கிவிட்டான்.

அறை முழுவதும் அமைதி நிலவியது.

மருத்துவமனையின் குளிர்ந்த காற்றும், அவ்வப்போது ஒலித்துக் கொண்டிருந்த கருவிகளின் சத்தமும் மட்டுமே கேட்டன.

பிரியாவின் பார்வை முழுவதும் தருணின் முகத்திலேயே இருந்தது. அவன் நிம்மதியாக மூச்சுவிடுகிறானா, காய்ச்சல் குறைகிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவளது முகத்தில் இருந்த கவலையும் பயமும் இன்னும் குறையவில்லை.

அதை கவனித்துக் கொண்டிருந்த பரத், சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்தான். அவளிடம் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை.
அதனால் அமைதியாக எழுந்து, அவளருகில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்தான்.

"கொஞ்சம் தண்ணீர் குடி, பிரியா."
என்றான் மெதுவாக.

அப்போதுதான் அவள் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இந்த ஒரு நாளில் பலமுறை அழுதிருந்ததால் அவளது கண்கள் சிவந்திருந்தன.


"எதுவும் ஆகாது. நம்ம தருண் சீக்கிரம் சரியாகிடுவான்."
என்று மெதுவாகச் சொன்னான்.

அவன் கூறிய வார்த்தைகள் பெரிய ஆறுதலாக இல்லாவிட்டாலும், அந்த நேரத்தில் அவன் அருகில் இருப்பதே அவளுக்குப் பெரிய தைரியமாக இருந்தது.

இருவரும் தங்களது கவலைகளை மனதிற்குள் புதைத்தபடி, தருணின் அருகில் அமர்ந்திருந்தனர்.

அப்படியே அந்த இரவும் மெதுவாக நகரத் தொடங்கியது.
 
Top Bottom