• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசமுகை உதிரும் இளவேனில் - 2

ரோசி கஜன்

Administrator
Staff member

"ஹேய்ய்ய் ஸ்பைடர் மேன் வந்துட்டான் சூப்பர்"

"ப்பா ப்பா நிஜமாவே ஸ்பைடர் நம்மள கடிச்சா நாமளும் ஸ்பைடர்மேன் ஆகிடலாமா?"

"ஸ்பைடர்மேன் பறக்கும் போது மூச்சு விடுவாங்களாப்பா"

"ஸ்பைடர் வலை ஸ்ட்ராங்க்கா இருக்குமா அப்பா"

ஞாயிறு காலையில் தேவாலயம் சென்று வந்தபின் அன்றைய தினம் தகப்பனுக்கும் தனயனுக்கும் டீவியில் ஹாலிவுட் படங்களை பார்த்தால் தான் திருப்தி. அன்றைக்கு ஸ்பைடர்மேன் படத்தை பார்த்த போது தான் இத்தனை கேள்விகளை கேட்டிருந்தான் ஆறு வயதிலிருந்த ஜோனீஸ்.

"அடேய் படத்தை பாக்க விடுடா. கேள்வியா கேக்குற?" இளவேனில்.

"ஏய் விடுடி அவனுக்கு அதைப்பற்றி தெரிஞ்சிக்க ஆசை இருக்கு கேக்கிறான். என்கிட்ட தானே கேக்கிறான் நீ போடி" இளநேயன்.

"ம்ஹூம் எனக்கு படம் பாக்க டிஸ்டர்பன்ஸா இருக்குப்பா"

"அப்ப வெளியே போடி. நாங்க ரெண்டு பேரும் படம் பாத்துகிறோம்"

"ஆமா ஆமா வெளியே போங்க" தகப்பனுக்கு ஜால்ராவாக மாறிய ஜோனீஸ்.

"அடேய் ஜோனீ அம்மாவையே வெளியே போக சொல்றியா?"

"ஹேய் அதான் என் புள்ளயே சொல்லிட்டான்ல வெளியே போடி"

"ஓ அப்படிங்களா புருஷ். சர்ர்ரிங்க புருஷ். சோறு இனிதான் வடிக்கனும். முடிச்சிட்டு வந்து வச்சிகிறேன்"

"அல்ரெடி நான் உன்னை வச்சிட்டு தான்டி இருக்கேன்"

"பையனை வச்சிட்டு என்ன பேச்சு பேசுரீங்க"

"முதல்ல இந்த 'ங்க'வ தூக்கி ஓரம் கட்டிட்டு ஒழுங்கா பேசுடி. உன்னை நான் தானே வச்சிட்டு இருக்கேன் இதுல என் புள்ளை தப்பா நினைக்க என்ன இருக்கு?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டிருந்தான் இளநேயன்.

அவன் புஜத்தில் அடித்தவள்

"நீ இருக்கியே பையன் முன்னாடி நீ வானு பேசுனா அவனும் அப்படியே பேசுவான்டா அவன் அப்பான்ற மரியாதை தர வேணாமா உனக்கு"

"எவடி இவ? அதலாம் ஒன்னும் வேணாம். நானும் என் பையனும் ப்ரெண்ட்ஸ் மாதிரி ஜாலியா இருப்போம் அப்படி தானே மச்சி" என்று வேணியிடம் ஆரம்பித்து ஜோனீஸிடம் முடித்தான்.

"ஆமாப்பா" ஜோனீஸ்.

"யோவ் மாம்ஸ் இதலாம் நல்லால சொல்லிட்டேன் ரொம்ப தப்பு பண்ற நீ" இளவேனில் ஆட்காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.

"ஆமாண்டி உனக்கு இந்த ட்ரெஸ் நல்லால தான். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள தப்பு பண்றேனு சொல்ற பாரு" என்று ஹஸ்கி வாய்ஸில் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டிருந்தவனை இன்னும் ரெண்டு அடி அடித்தவள் தள்ளி அமர்ந்தாள்.

அதற்குள் தகப்பனும் தனயனும் கிசு கிசு குரலில் ஏதோ பேசியவர்கள் இவளை நெருங்கி அமர, வேணி என்னவென்று உணரும் முன்பே நேயன் அவளிரு கைகளையும் பின்புறமாக வளைத்து பிடித்தவன் ஜோனீஸிடம் கண் சிமிட்டினான். அவனோ கிச்சு கிச்சு மூட்டி அவளை சிரிக்க வைத்திருந்தான்.

"டா..ய் ஹா..ஹா.. ஹ்ஹா.. ஹாஹா.. ஜோனீ விடுடா" அவள் சொல்வதை ஜோனீஸ் கேட்டால் தானே.

மீண்டும் மீண்டும் கிச்சு கிச்சு மூட்டிவிட்டுக் கொண்டே இருக்க நேயனோ அவளின் காதருகே குனிந்து தோள்வளைவில் தன் தாடையை அழுத்தி

"எனக்கு ஒரு பொண்ணு குழந்தை வேணும் உன்னை மாதிரியே" என்றிருந்தான்.

அவனின் ஸ்பரிசமும், உஷ்ணமாக வந்த மூச்சுக்காற்றின் தீண்டலிலும் சிலிர்த்து போயிருந்தாள்.

"ஆங் ஆஆஆ.. ஸ்ஸ் ஆஆ ம்மா வலிக்குதே"

தையல் இயந்திரத்தில் அமர்ந்து தைத்துக் கொண்டிருந்தவள் பழைய நினைவுகளில் மூழ்கியதின் விளைவாக கவனம் சிதற ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தின் ஊசி அவளின் விரலில் இறங்கியிருந்தது.

வலி தாளாமல் அவள் கத்தியிருக்க படுத்திருந்த ஜோனீஸ்

"என்னம்மா ஆச்சு?" என்று பதறியிருந்தான்.

நான்கு வருடங்களுக்கு முன் நடந்தவை அனைத்தும் நேற்று நடந்தது போல தித்திப்பை தந்தது. மீண்டும் அந்நாட்கள் வராதா என்ற ஏக்கத்தை தந்தது. கையிலோ ஊசி குத்திய ரணத்தின் வலி, மனதிலோ ஊசியாய் இறங்கிய மனதின் வலி.

மீண்டும் மீண்டும் ஜோனீஸ் கேட்க கனவிலிருந்து விடுபட்டவள் போல
" ஆங் ஒன்னுமில்லடா தங்கம் கையில் லேசா ஊசி குத்திருச்சி ஒன்னுமில்ல சரியாயிடும்" என்று சமாளித்தவள் தன் கண் கண்ணாடியை கழற்றி வைத்தாள்.

"அப்ப ஏன் அழுரீங்க? எனக்கு தெரியும் உங்களுக்கு ரொம்ப வலிக்குனு. ஹாஸ்பிடல் போகலாம் அம்மா"

"மான்குட்டி அம்மா சொன்ன கேப்பீங்க தானே. உனக்கு பிடிச்ச ஸ்பைடர் மேன் சீரீஸ் டீவில ஓடுது பாரு. காய்ச்சல் மறுபடியும் வரதுக்குள்ள கொஞ்சம் சாப்பிட்டு மாத்திரைய போடு"

"ம்ம் வேணா மாத்திரை வேணா" சிணுங்க ஆரம்பித்திருந்தான்.

"உதை வாங்க போற பாரேன்" என்றவள் முதலுதவி டப்பாவில் இருந்து காஸ்பீஸ் அடங்கிய ரோலை எடுத்து வலி எடுத்த விரலை சுற்றிக் கட்டியிருந்தாள்.

அதற்குள் அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன்

"ம்மா நான் ஒன்னு சொல்வேன் கோவப்பட மாட்டீங்களா?"

"கோவபடாத மாதிரி கேளுடா தங்கம்"

"ம்ம்மா"

"சரி சொல்லுடா"

"நாம தாத்தா வீட்டுக்கே போய்டலாமா?"

அவளால் என்ன பதில் இதற்கு சொல்லிவிட முடியும்? அவளது தந்தை என்ன சத்திரமா வைத்து நடத்துகிறார்? வேண்டிய நேரம் போய் இருந்து கொள்வதும் வேண்டாம் என்றதும் வெளியே வருவதற்கும்.

"பேசாமல் சாப்பிட்டு தூங்குடா"

"நோ ம்மா நான் தூங்க மாட்டேன் எனக்கு கெட்ட கெட்ட கனவா வரும்"

"அம்மா உன் கூடவே இருக்கேன்டா ஒன்னும் ஆகாது"

"கோவமா இருக்கீங்களா?"

"இல்லைடா தங்கம்"

"சரி அப்ப உம்மா கொடுங்க"

"உன்னோட போடா"

"ம்மா தாங்கம்மா" என்று இழுத்து கன்னத்தில் முத்தமிட்ட பின்பே விட்டிருந்தான் ஜோனீஸ்.

முன்தினம் இரவில் உறங்கவே வெகு நேரமாகியிருக்க உறங்கிய வேகத்தில் எழும்பியிருந்தாள் இளவேனில், ஜோனீஸின் அலரல் சத்தம் கேட்டு. எதையோ பார்த்து பயந்திருந்தவன் கேவி கேவி அழ ஆரம்பித்திருந்தான்.

"என்னடா ஜோனீ... அம்மா இங்கு தான் இருக்கேன்... ஜோனீ.. ஜோனீ.. ஒன்னுமில்லை ஒன்னுமில்லை.. செரி செரி " என்று சமாதானம் சொல்லி முதுகில் ஆதரவாக தட்டிக் கொடுத்து அணைத்துக் கொண்டாள்.

அலமாரியில் இருந்து ஜெப எண்ணெய் எடுத்து வந்து சிலுவை அடையாளம் இட்டு பிரார்த்தனை செய்து படுக்க வைத்தாள்.

"ம்மா லைட்டு போட்டே வைங்க எனக்கு பயமா இருக்கு"

"என்ன தங்கம் எதுவும் கெட்ட கனவா?"

ஆமென்று தலையசைத்தானேயன்றி என்னவென்று சொல்லவில்லை.

"என்கூடவே இருங்கம்மா அப்பா கிட்டே போகாதீங்க ப்ளீஸ்மா"

"சரிடா தங்கம்" என்று அணைத்தபடியே தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள்.

அன்று நடந்தது தனக்கு மட்டும் அல்ல குழந்தைகளின் மனதையும் பயமுறுத்தியிருக்கிறது என்று அனுபவமாகவே உணர்ந்துக் கொண்டாள்.

ஆனால் உணர வேண்டியவனோ இங்கு நடந்த எதையும் உணராமல் நிம்மதியான நித்திரையில் அல்லவா ஆழ்ந்திருந்தான்.

மறுநாள் காய்ச்சல் வந்ததால் பள்ளிக்கு லீவு சொல்லிவிட்டு வீட்டிலே இருந்தவன் கொஞ்சம் காய்ச்சல் சரியானதும் ஸ்பைடர் மேன் படம் பார்க்க அடம் பிடிக்க, அதன் நினைவுகளாய் மனம் மலர்களாய் பூப்பூக்க, விளைவுகளை அனுபவிக்கிறாள்.

ஏன் பள்ளிக்கு கிளம்பவில்லை? உடம்பு சரியில்லையா? என்று எந்த கேள்வியும் இல்லாமல் தனக்கும் இந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல இளநேயன் அலுவலகம் கிளம்பி சென்றிருந்தான்.

மணி 12.45 கடந்து ஓட்டமெடுக்க ஜோவீஸை அங்கன்வாடியிலிருந்து அழைத்து வர வெளியே வந்தாள்.

அவளின் பக்கத்து வீட்டின் மேல்மாடியில் உள்ள பெண்மணி நைட்டியை அல்டர் பண்ணுவதற்காக கொடுத்திருந்தார். இவளின் வருகையை எதிர்பாத்திருந்தவராய்

"என்னம்மா வேணி நைட்டியை தைச்சிட்டியா?"

"அச்சோ உங்களுக்கு அவசரமா வேணுமா அக்கா? கையில கொஞ்சம் அடிப்பட்டிருக்கு பாத்துகோங்க, இன்னைக்கு வாய்ப்பு இல்லை அக்கா"

"சரி சரி பொறுமையா தைச்சி கொடு அவசரம் இல்லை"

அவள் சொன்னது என்னவோ ஊசி குத்தியதை தான். ஆனால் அவளின் மாமியார் நினைத்ததோ வேறு.

வீட்டில் நடந்ததை எல்லாம் வெளியே போய் சொல்லி அசிங்கப்படுத்துகிறாளே என்று கோவத்தோடு முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

இது எதுவும் அறியாமல் ஜோவீஸை அழைத்து வந்தவள் பிள்ளைகள் இருவருக்கும் ஊட்டி உறங்க வைத்து தானும் மெத்தையில் சாய்ந்து அமர்ந்தாள்.

அலைபேசியை கையில் எடுத்தவள் தங்களது பழைய 'சாட்'களில் சந்தோஷமாக பேசிய தருணங்களை எல்லாம் மீண்டும் வாசித்து பார்க்க அவளின் கண்களில் நிற்காமல் கண்ணீர் பெருகியது.

'இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இடிந்து போய் அழுதுக் கொண்டு நாட்களை போக்குவதாம்?'

'இதற்கு விடியல் என்ற ஒன்று இல்லையா?'

'ஒருவருக்கு கூடவா இது தவறு என்று எடுத்துச் சொல்ல மனம் வரவில்லை?'

'தான் அவ்வளவு இளக்காரமாக போய்விட்டோமோ?'

'குழந்தைகளை இயல்பாக பார்க்க முடியுமா இனி?'
அலைபாயும் மனதை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவள் ஊசி குத்திய விரலை அழுத்தினாள்.

'சுர்ர்'ரென்ற வலி இரத்தநாளங்களை வந்தடைய மூளைக்கு வலியை சமிக்ஞை செய்தது அவை. விளைவு மனதின் வலி கொஞ்சமாக மறைக்கப்பட்டு காயத்தின் வலியை பிரதானமாக காட்டியது மூளை. சிறிய இடைவேளை மனதின் கேள்விகளிலிருந்து.

✍️
ஆகாயம் இடிந்து
ஒரே நொடியில்
அனைத்து மழைத்துளிகளையும்
கொட்டித் தீர்த்து விடுவதில்லை...
எனினும்
அப்படியான உணர்வு மழைத்துளிகள்
மனதின் உள்ளுக்குள்
அடித்து ஊற்றுகிறது...
என்னவனின் திடீர் ஒதுக்கத்தால்...!
✍️

அன்புடன் நேயனின் காதலி
❤️


தனது இன்ஸ்டாவில் கவிதை எழுதி போஸ்ட் செய்தவள் லேசாக கண்ணயர்ந்தாள்.
மாலை பிள்ளைகள் எழுந்ததும் காஃபியும் சிற்றுண்டியும் சாப்பிட வைத்து, வாசலில் விளையாட விட்டவள் அறைக்குள் முடங்கினாள். ஒருவித பதற்றம் பீடித்தது அவளை.

அறையின் நீள அகலத்தை நடந்து நடந்து அளந்துக் கொண்டிருந்தவளின் உடம்பில் உஷ்ணம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் இதமான சில்லென்ற தன்மையும் மிதமாக இருந்தது.

உஷ்ணத்திலிருந்த பிரிந்த செந்நிற உருவமொன்று எகத்தாளமாக சிரித்தபடியே சுவற்றில் சாய்ந்து

"இன்னுமா அவனை நினைச்சு நினைச்சு அழுதுகிட்டு இருக்க?"

குரல் வந்த திசையை பார்த்த இளவேனில் திகைத்துப் போனாள். ஏனெனில் அங்கு நின்றது மியா.

அவள் திகைத்ததைப் பொறுக்காமல் குளிர்ச்சியிலிருந்து பிரிந்த வெண்ணிற உருவமொன்று (லயா) சிறிது இடைவெளி விட்டு வேணியின் அருகில் அமர்ந்து

"அழுவதை நிறுத்து முதலில். நீ அவனிடம் மனம் விட்டு பேசு" என்றது.

"ஓ இவ்வளவு தூரம் மோசமாக நடந்தவன்கிட்ட போய் எந்த முகத்தை வச்சு பேசுவளாம்?" மியா.

"காதலுக்கு முன் இந்த வரட்டு கௌரவம் தேவையில்லை வேணி" லயா.

"உன் சுய மரியாதைய உதறிவிட்டு நீ போய் பேசுனனா உன்னை விட அடிமுட்டாள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டாங்க" ஆவேசமாக மியா.

"அன்பே பிரதானம்" நிதானமாக லயா.

"சல்லிபைசாக்கு உதவாத அன்பு உன் சுயமரியாதையை திருப்பி தருமா?" மியா.

இருவரையும் மாறிமாறி பார்த்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு

"ஐயோ ஆஆஆ ஆஆஆ" என்று கத்த அவள் விழிகளில் இருவரும் நுழைந்து ஊனோடு உறைந்தனர்.

சில மணித்துளிகளில் பிள்ளைகளை அழைத்து வந்தவள் இரவு உணவை கொடுத்து வழக்கம் போலவே சுவரோடு ஒன்றி படுத்துக்கொண்டாள்.

மறுநாள் காலையில் வழக்கம் போல எழுந்து தனக்கும் தன் குழந்தைகளுக்கும் சமையல் செய்து கொண்டிருந்தவள் அலைபேசி அடிக்கவே எடுத்து யாரேன்றுப் பார்த்தாள். அவளது தந்தை தான் அழைத்திருந்தார்.

'எதற்கு இத்தனை காலையில் அழைத்திருக்கிறார்?' வயிற்றில் லேசாக பயப்பந்து உருண்டது. மனதை திடப்படுத்திக் கொண்டு அழைப்பை ஏற்றாள்.

"அப்பா சொல்லுங்கப்பா. அம்மா நல்லாருக்குல காலையிலேயே போன் பண்ணியிருக்கீங்க என்னப்பா" குரலில் கொஞ்சம் நடுக்கம்.

"ஆங் அதலாம் நல்ல தான் இருக்கா. மருமவன் நேத்து போன் பண்ணாப்ள"

"என்னவாம்" கண்களில் கண்ணீர் பெருகியது.

"வேறெதுக்கு கல்யாணம் கட்டி கொடுத்தாச்சு இன்னும் என் உசுரல்ல எடுக்க நீயி. கேட்டா கேக்கத கொடுக்க வேண்டிய தானே. எனக்கு இனி போன் வரகூடாது சொல்லிட்டேன். சும்மா இது ஒரு பொழப்பு. கேக்கத செஞ்சிட்டு வாய மூடிட்டு இரு. வாய் பேசாத. சண்டை போடாமல் புத்தியை போல பொழைச்சிக்க. வையி போனை"

அழைப்பு துண்டிக்கப்பட்டது. கண்களை மறைத்த கண்ணீர் துளிகள் சூடாக கன்னத்தை தழுவி ஓடியது. எவ்வளவு நேரம் அப்படியே நிற்க முடியும்? தன் மகனை கிளப்பி பள்ளிக்கு அனுப்பி விட்டு வாசலில் கவலையோடு அமர்ந்திருந்தாள். பக்கத்து வீட்டு பெண்மனி என்னவென்று வினவ

"உங்களுக்கு தெரியாததா அக்கா. அவர் இவ்வளவும் பண்ணிட்டு இப்ப இந்த தாலியையும் விட்டு வைக்க கூடாதுனு முடிவு பண்ணிடாரு போல. எங்கப்பா போன் பண்ணி ஒரே திட்டு. எதுக்கு அவங்களுக்கு போன் பண்ணணும்? இதுவரை பண்ணது பத்தலையா?" என்று தான்பாட்டுக்கு தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தவளை அந்த குரல் நிறுத்தியது.

"போடி போ தெருவெல்லாம் போய் சொல்லு. தண்டோரா போட்டு சொல்லுடி. ஊரெல்லாம் கை வலி அவன் அப்படி பண்ணிட்டான் இப்படி பண்ணிட்டான்னு பேசிட்டே இருக்கா" என்று அவளது மாமியார் கத்த, ஏற்கனவே மன விரக்தியில் இருந்தவள் அவதாரம் எடுத்தவள் போல ஆங்காரமாக கத்தத் தொடங்கினாள்.

"ஆங்.. இதோ சொல்லுதேன் அவ்வளவு தானே.. எல்லாரும் கேளுங்க இங்க பாருங்க என் வீட்டுகாரன் என்னை கொடுமைபடுத்துரான். என் கையை உடைச்சிட்டான். என் காலை உடைச்சிட்டான்.என்னை வாழ விட மாட்ராங்க" என்று தெருவில் இறங்கி நின்று கத்தியிருந்தாள்.

அவளின் உடல் உஷ்ணத்தின் வழியே வெளியேறியிருந்த மியா எவர் கண்களுக்கும் புலப்படாமல் இளவேனில் அருகில் நின்று

"அடி போலி அப்படி தான் இன்னும் நாலு வார்த்தை நறுக்கென்று கேளு" என்று ஊக்கினாள்.


"வாழ விடலனா போயேன்டி உங்கப்பன் வீட்டில் போய் இருந்துக்கோ" மாமியார் க்ளாரின்.

"ஆங் போறேன் என்னையும் பசங்களையும் அனுப்பி விட்டு தாயும் மவனுமா ஓட்டல்ல நல்லா வாங்கி துன்னுங்க. அதுக்கு தானே விரட்ரீங்க"

"ஏய் ஆமான்டி என்ன இப்ப? நாங்க அப்படி தான் செய்வோம்"

"அதான் ஊருக்கே தெரியுமே. இவங்க பொண்ணு மட்டும் நல்லா புருஷன் புள்ளைனு வாழனும். ஆனால் பையன் மட்டும் தான் கைக்குள்ள இருக்கனும். அவனுக்கு வாழ்க்கை இருக்கே, வாழ விடனுமேன்ற எண்ணம் இருக்கா பாரு ச்சீய்.., கேவலமான குடும்பம்" ஆங்காரமாக கத்தியிருந்தாள் இளவேனில்.

தெருவே நின்று வேடிக்கை பார்க்க இவளை நன்கு தெரிந்த ஒரு பெண்மணி அவர் வீட்டுக்கு அழைத்து சென்று தண்ணீர் கொடுத்து ஆசுவாசமுற செய்தார்.

"ஏபுள்ள ஏன் அந்த பொம்பளை அளவுக்கு தரம் இறங்கி பேசுற. எல்லாரும் உன்னை தான் தப்பா நினைப்பாவ"

"நினைக்கட்டுமேக்கா என் வாழ்க்கையை அவங்களா வந்து வாழ போறாங்க. இவ்வளவும் பண்ணிபோட்டு இப்ப இந்த தாலிகொடி வேணுமாம். மனசே ஆற மாட்டேங்குதே" என்று கன்னங்களை தழுவிய கண்ணீரைத் துடைத்தாள்.

"விசனப்படாதபுள்ள எல்லாம் சரியாவும். என்ன ஆனாலும் தாலியை மட்டும் கழட்டி கொடுத்துராத. நீ நல்ல ஜெபம் பண்ணு"

"சரிங்க அக்கா பொடிசு டீவி பாத்துட்டு இருந்தான் நான் அவனை கிளப்பி பால்வாடில கொண்டாந்து விட்டுட்டு வேலையை பாக்கேன். வாரேன்" என்றவள் வீட்டுக்கு வந்தாள்.

அவளது மாமியார் உர்ரென்று முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருந்தார். இவளை பார்த்ததும் கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு திருப்பி கொண்டார். இவளுக்கு சிரிப்பு வந்தது.

அங்கன்வாடியில் ஜோவீஸை விட்டு வந்தவள் மீதமிருக்கும் வேலைகளை முடித்தபடி தையல் இயந்திரத்தில் அமர்ந்து வலியோடு துணிகளைத் தைத்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் இளநேயன் வாக்குவாதம் செய்ய அதற்கு பதில் கேள்வியை கேட்ட இளவேனில், இளநேயனின் பதிலில் அதிர்ச்சியடைந்தாள்.

முகை உதிரும்...




 
Top Bottom