மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
ஆ ஹ ஹாஹா...
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே....
கிச்சனில் அலைபேசியில் இசைத்த பாடலைக் கேட்டவண்ணம் சமையல் செய்து கொண்டிருந்தவளின் உதடுகள் பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. வதனமெங்கும் சோக இழைகள் அப்பிக் கிடந்தன.
"ம்மா ப்ரஷ் பண்ணிட்டேன். காபி தரீங்களா?" என்றபடி ஜோனீஸ் வந்து அவளை அணைத்துக் கொண்டான். டக்கென்று உதறியவள் காபி தம்ளரை அவனருகில் வைத்து விட்டு மீண்டும் வேலையில் மும்முரமானாள்.
சில நாட்களாக வீட்டில் எதுவும் சரியில்லை என்று அவனும் புரிந்து தான் இருந்தான் என்றாலும் அவனது அன்னை இப்படி உதாசீனம் படுத்தினால் காரணமிருக்கும் என்றறிந்தவன் இளவேனிலை தன் பக்கம் திருப்பி அவளது வதனத்தைப் பார்த்தான். இரு விழிகளும் குளம் கட்டியிருந்தன.
"அழாதீங்கமா உங்களுக்கு நான் இருக்கேன். நீங்க அழுதா நானும் அழுவேன்" என்று அழ தயாரானான். உடனே கண்களை துடைத்தவள் அவனை அணைத்துக் கொண்டாள்.
எத்தனை வயது ஆனால் என்ன? மகனோ மகளோ தங்களது பெற்றோர் தொடுகையில் அனைத்து கவலைகளையும் மறந்து ஆயிரம் மடங்கு ஆறுதல் அடைவார்கள். அந்த சிறு தொடுகையில், சிறு அணைப்பில் கிடைக்கும் ஆதுரம் வேறெதிலும் கிடைக்காது அல்லவா?
"ஜோனீ டைம் ஆகுதுடா, கிளம்பு சீக்கிரம். நான் வேலையை முடிச்சிட்டு வரேன்" என்றவள் காபி தம்ளரை எடுத்து நீட்டினாள்.
மணி 8 ஆனதற்கு அறிகுறியாக இளநேயன் அலாரத்தை அணைத்து வைத்தவன் அறையை விட்டு வெளியே வந்திருந்தான். அவனது அழுக்கு துணிகள் 'எங்களை எப்போது துவைத்து சுத்தம் செய்வாய்?' என்று வரவேற்றன. அதை பார்த்தவுடனே எரிச்சல் மண்ட
"இன்னும் எத்தனை நாள்தான்டி இப்படி துவைக்காம இருக்கதா உத்தேசம்?" சமையலறை வாசலில் நின்று கத்தியிருந்தான்.
வேணியின் மனதில் சிறிது சலனம். நெஞ்சத்தில் பட்டாம்பூச்சி பறப்பதை போன்ற உணர்வு. பின்னே இருக்காதா? எட்டு நாட்கள் கழித்து முகம் கொடுத்து பேசியிருக்கிறானே. மன்னிக்கவும். கத்தியிருக்கிறானே. வதனத்தில் எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் நிதானமாக திரும்பியவள்
"நீங்க செய்த செயலுக்கு மன்னிப்பு கேளுங்க எல்லாமே பழையபடி மாறும்" அழுத்தமாக வார்த்தைகள் உதிர்ந்தன.
"கேக்க முடியாதுடி மன்னிப்பு கேக்க முடியாது கேக்க மாட்டேன்" தொண்டை கிழிய கத்தியிருந்தான் நேயன். செவ்வரியோடிய விழிகளிரண்டும் அவளை மேலும் பயமுறுத்துவதாய்.
அதிர்ச்சியுடன் அவன் பேசிய வார்த்தைகளை உள்வாங்கி உணர்வதற்குள் அவனுக்கு ஆதரவாக உறங்கிக் கொண்டிருந்த க்ளாரின் எழுந்து அமர்ந்தவர் கூந்தல் கற்றைகளை கொண்டையாக முடிந்துக் கொண்டே,
"மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டான் எம்புள்ள. எதுக்கு கேட்கனும்? நான் கேட்கவே கூடாதுனு சொல்லி இருக்கேனே. பண்ண தப்பு எல்லாம் நீ பண்ணிட்டு எம்புள்ளய குத்தம் சொல்றியா?" என்று வசைபாடினார்.
சுவர்களுக்கு கூட கேட்காத குரல்கள் அவளின் இதயச் சுவர்களில் ஒலித்து அவளை நடப்புக்கு அழைத்து வந்தன.
"பொறுமையா இரு வேணி. நாய் குரைச்சா குரைக்கட்டும். நீ வெளியே போ" வெண்ணிற லயா.
"குனிய குனிய குட்டிட்டே இருப்பாங்க. வாய் திறந்து நாலு கிழி கிழிச்சினா வாய மூடிட்டு போய்டுவாங்க" செந்நிற மியா.
அவளுள் இருந்த பொறுமை கற்பூரமாக கரைய "ஆங்.. மன்னிப்பு கேக்க முடியாதா? அப்ப நானும் எதுவும் செய்ய மாட்டேன்" இளவேனில்.
"அப்ப வெளியே போடி. என் வீட்டை விட்டு வெளியே போ" இளநேயன்.
"முடியாது. நான் ஏன்டா போவனும்? நீதானே வா வா வந்திடு நீ இல்லாமல் வாழ முடியாதுனு சொன்னீல்ல. எழுதி கொடு என்னால பொண்டாட்டி புள்ளைய பாக்க வக்கு இல்லைனு எழுதி கொடு. நான் போறேன்"
"ஏய் சரிதான் போடி, தெரியாம கூப்பிட்டுட்டேன் இப்ப தானே தெரியுது ச்சீய் *** "
அவன் முகத்தை சுழித்து அவதூறு வார்த்தைகளை உதிர்த்ததில் அவள் மனம் அடிவாங்க அமைதியானாள். ஆனால்
"இவ்வளவு கேவலமான வார்த்தைகளில் உன்னை பேசுரான் வாய மூடிட்டு இருக்க நீ? சூடு சொரணை இருக்கா இல்லையா?" என்று செந்நிற மியா உசுப்பேற்றிவிட்டதில்
வெகுண்டெழுந்த வேணி "என்ன ச்சீயா? ஏன் சொல்ல மாட்ட? இப்படி எல்லாம் பேச சொல்லி கோள் மூட்டி விட ஆள் இருக்கே, பின்ன நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ சரிதான் போடா" வார்த்தைகளில் அலட்சியம் காட்டினாள்.
"பாரு பாரு மரியாதை இல்லாமல் பேசுறத பாரு" க்ளாரின்
"ஆமா ஆமா இவிங்க அப்படியே மரியாதை கொடுத்து கிழிச்சிட்டாங்க. பெத்த புள்ளயவே 'விலைமகள் மகன்'னு பேசுறது, நக்கிட்டு தான் போவான், அந்த பய இந்த பயனு பேசுறதுலாம் மரியாதைல சேர்த்தி தான். நல்லா கேட்டுக்கடா போடா டேய் போடா"
"ஏய் என்னடி " என்றவன் அவளை அடிக்க பாய மனமெங்கும் பரவிய பதட்டத்தை மறைத்து திடமாக தன்னைக் காட்டிக் கொண்டாள் வேணி.
ஆனால் அறையில் இருந்து ஓடி வந்த ஜோனீஸோ அழுதுக்கொண்டே "அப்பா அடிக்காதீங்க" என்றதும் தான் தாமதம் அவனின் முதுகில் ஒன்று போட்டவன் "உள்ள போடா " என்று கொக்கரித்தான்.
அதுவரை நிதானமாக இருந்தவள் காளியாக உருமாறியிருந்தாள்.
"என் பையனை எதுக்குடா அடிக்கிற? போ போய் உன் ஆத்தாள அடியேன்டா"
"ஒழுங்கா பேசு வேணி " எச்சரிக்கும் தொனியில் நேயன்.
"ஹே அப்படி தான்டா பேசுவேன் என்ன பண்ணுவ? என்ன பண்ணுவன்னு கேக்றேன்" வம்பிலுக்கும் நோக்கத்தில் வேணி.
ஹாலில் இருந்த டேபிளில் ஒரு தட்டு தட்டியவன் "என்னை மிருகமாக்காத வேணி. ஒழுங்கா போயிடு" என்று உறுமினான். அவனின் செயலில், குரலில் பெரும் மாற்றம். ஆனால் நிதானத்தை முற்றிலுமாக இழந்த வேணியோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவனைக் காயப்படுத்தும் எண்ணத்தில்,
"இவரே வானு கூப்பிடுவராம். அப்புறம் இருக்கத எல்லாம் புடுங்குவராம். பொண்டாட்டி புள்ளைங்க கூட பேச மாட்டாராம். புள்ளைங்கள பாக்கவும் மாட்டாராம். அப்புறம் என்ன கூந்தலுக்குடா கூட்டிட்டு வந்த?"
"......."
"செவ்வனேனு நான் வேலைக்கு போய்ட்டு, பசங்களையும் பாத்துட்டு இருந்தேன். எதுக்கு என்னை கூப்பிட்டு வந்த? ஆஆஆஆ அப்பவே நான் சொன்னேன் தானே? ரெஸ்பான்ஸிபிலிட்டி அதிகம் உன்னால சமாளிக்க முடியுமா?னு கேட்டதுக்கு மண்டையை ஆட்டிட்டி இப்ப வந்து ஆட்டம் காட்டுறீயா?"
"நீ ஓவரா பேசுர வேணி. நான் சொன்னேன் தான் இல்லைனு சொல்லல. என் சிட்வேஷனையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன் தான் சொல்றேன். அது ஏன் உன் மண்டைலயே ஏற மாட்டேங்குது?"
"எனக்கு என்னடா மண்டைல ஏறனும்? என்ன தான் ஆபிஸ்ல டென்ஷன் இருக்கட்டுமே அதை வாசலுக்கு வெளியே போட்டுட்டு உள்ள வா. பசங்களோடு பேசு.. பழகு... அவங்களோட இன்ட்ராக்ட் பண்ணாம எந்நேரமும் போனும் கையுமா உக்காந்தா எங்கேர்ந்து உன்கூட பழகுவாங்க? என்னை ஏக்கத்தில் வச்சிருக்க மாதிரி பசங்களும் உன் அன்புக்காக ஏங்கனுமா?"
"ஏய் ஆம்பள வெளியே போன ஆயிரம் டென்ஷன் இருக்கும். அவன் போன் தான் பாப்பான்டி. பசங்கள பாக்க மாட்டேன்" என்று ஆங்காரமாக க்ளாரின் கத்தினார்.
"எல்லாத்துக்கும் இந்த கிழவி தான் காரணம் இதுக்கு ஒரு எண்ட்கார்டு நீ போடல இன்னும் உன் லைப்ல இது பத்த வச்சிட்டே இருக்கும்" மனதோடு மியாவின் குரல் எச்சரித்தது.
"அதானே.. இப்படி புள்ளய வளத்து விட்டா பின்ன எப்படி இருப்பான்? பொண்டாட்டி புள்ள மேல எங்கருந்து அக்கறை வரும்? ஒரு தாய் தான் தன் புள்ளைங்களுக்கு இப்படி இப்படி இருப்பானு நல்லத சொல்லி கொடுக்கனும். அதுக்கு தான் இங்கு வழியே இல்லையே"
"என்னடி பேசுற நீ? உங்க வீட்டில் உன்னை நல்லா வளத்துட்டாங்களா?" தாயை பேசியதும் வக்காலத்துக்கு நின்றான் நேயன்.
"ஆமா அதனால் தான் இன்னும் இங்கு உக்காந்துட்டு இருக்கேன் இல்லைனா சந்தி சிரிக்கிற மாதிரி ஆகிடும்"
"ஏய்" என்று வேகமாக வந்த நேயன் அவளை அடிக்க கை ஓங்கினான். திமிராகவே அவனை ஏறிட்டவள்
"என்ன நின்னுட்ட? அடிடா"
"ஒரு புருஷனுக்கு மரியாதை கிடையாது, சோறு போடறது கிடையாது, என்ன வளர்ப்பு இது? நாங்கலாம் குடிகாரன் கூட அடியும் மிதியும் வாங்கி வாழலயா? எல்லாம் செஞ்சு கொடுக்கலயா?அவள் அப்பனுக்கு போன் போடு நான் இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியாம விடறதா இல்லை" க்ளாரினின் வார்த்தைகள் வேணியின் சினத்தை அதிகரிக்கச் செய்திருக்க, தன் முன் நின்ற நேயனை பிடித்து நகர்த்தி விட்டு க்ளாரின் முன் வந்து நின்றவள் தொண்டை கிழிய கத்தியிருந்தாள்.
"நீங்க குடிகாரன் கூட அடி மிதி வாங்குனா நானும் வாங்குனுமா? உங்க பொண்ண வாங்க சொல்வீங்களா?"
"அவள் நல்லா இருக்கது பிடிக்கலயா உனக்கு? அவளை ஏன் இழுக்குற?"
"எதே பொண்ணு மட்டும் புருஷன் புள்ள குடும்பம்னு சந்தோஷமா வாழனும். பையன் மட்டும் தனியா போன் கூட குடும்பம் நடத்தி உங்க கைக்குள்ளயே வச்சிப்பீங்களோ? பையன் நல்ல வாழட்டும்ன்ற எண்ணம் இல்லையே"
"ஆமாடி நல்லா வாழ கூடாது அதான் என் எண்ணம்"
"ஆமா உங்களுக்கு புருஷன் இல்லைனா யாரும் அவங்க புருஷன் கூட சந்தோஷமா வாழ்ந்திட கூடாது என்ன?"
"என்ன பேச்சு பேசுறா பாருடா?"
"உள்ளத தான் சொல்றேன். ரெண்டு பசங்களும் ஓடி ஓடி வந்து பாட்டி பாட்டினு கூப்பிடாறாங்களே அதுங்களோட விளையாட முடியுதா உங்களுக்கு? எந்நேரமும் அந்த போன்ல ஒரே சீரியல். நல்லா மல்லாக்க படுத்துகிட்டு, கால் மேலே காலையும் போட்டு ஆட்டிகிட்டு மல்லி மல்லி மல்லிஈஈஈ சிங்கப்பெண்ணே கயல்னு சீரியல்ல பாத்து தான் ஒரே சிரிப்பு"
நிசப்தமாக இருந்தது அவ்விடம். அறையின் வாயிலில் இரு குழந்தைகளும் பயத்தோடு அழுதுக்கொண்டிருந்தனர். மீண்டும் தொடர்ந்தாள் வேணி.
"வீட்டில் அவ்வளவு வேலையும் நான் தான் பாக்கிறேன். குடத்தில் தண்ணீ மொத கொண்டு நான் தான் வெளியே போய் பிடிக்கிறேன். காய்கறி வாங்கனுமா? மளிகை வாங்கனுமா? வேறெதும் வாங்கனும்னா கூட நான் தான் போய் வாங்கியாந்து, அதையும் அந்தந்த இடத்தில் நான் தான் எடுத்து வைக்கிறேன். அதலாம் கூட இருக்கட்டும் வேலை எல்லாம் நானே பாத்துகிறேனே. வேலை செய்ற நேரம் கூட இவனுகள பாத்துக்க முடியாதா? அப்படியென்ன வெறுப்பு? தனியொருத்தியா நின்னு அத்தனையும் பொறுப்பா செய்றேன் தானே? "
"நீ என்னடி வேலை பாக்கிற? எல்லாம் நான் தான் செய்ரேன். குடத்தை எல்லாம் கழுவி வைக்கிறேன். மாவாட்டி வைக்கிறேன். ரேஷன் கடைக்கு போறேன். எப்படி பேசுரா பாருடா?"
"இப்படி தானே ஊரெல்லாம் சொல்லி வச்சிட்டு திரியிரீங்க. எல்லாருக்கும் தெரியும் யார் வேலை செய்றா வேலை செய்யலைனு"
விவாதம் வளந்துக் கொண்டே போகிறதே என்று முடித்து வைக்க முயற்சித்தான் நேயன்.
"ஏய் நீ வாயை மூடிறியா இல்லையா?"
"என்னை ஏன் வந்து பேசுற? உன் அம்மாவை வாய மூட சொல்லு"
"ம்மா நீயாது கொஞ்சம் சும்மா இருமா"
"நீ சும்மா இருடா. அப்படி என்ன இவளுக்கு திண்ணக்கம்? புருஷன் கேட்டா கொடுக்க வேண்டிய தானே?"
"உங்க பொண்ணோட மாப்பிள்ளை இப்படி எல்லா நகையும் வாங்கி தாலியையும் கேட்டா கொடுக்க சொல்வீங்களா? ஏய் இல்லடிடிடி... கொடுக்காதடிடிடி... அப்படி இப்படி பேசி கொடுக்க விடாமல் தானே பண்வீங்க. நான் மட்டும் எல்லாம் கொடுத்துட்டு ஒன்னும் இல்லாமல் ரோட்டில் நிக்கனுமா?" ராகமாக இழுத்து இழுத்து பேசியவளை முறைத்தார்.
"ம்மா நீ சும்மா இருமா இதோட விடு நீ வெளியே போ கொஞ்சம் நேரம்"
"புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்தா சமாதானம் பண்ணி விடனும் இங்க கோள்மூட்டி கோள்மூட்டி சண்டை தான் பெருசாகுது" குத்தலுடன் வேணி.
"நான் கோள்மூட்ரேனா? அன்னிக்கு ரோட்டில் வச்சு அசிங்கப்படுத்துராடா தெரியுமா? அத்தனை பேரும் என்ன பிரச்சனை என்ன பிரச்சனைனு கேக்ராங்க. உன்கிட்ட அத நான் சொல்லி இருப்பேனா? நல்லதுக்கே காலம் இல்லை போ" அங்கலாய்த்துக் கொண்டார் க்ளாரின்.
"அதலாம் நானே அன்னிக்கே சொல்லிட்டேன் இங்கு மறைக்க எதுவுமே இல்லை" வெடுக்கென்று பதில் மொழிந்தாள்.
ரோட்டில் வைத்து கத்திய அன்றே வாட்சப்பில் நடந்ததை தட்டச்சு செய்து அனுப்பியிருந்நாள். அவன் பார்த்ததுக்கு அடையாளமாக 'புளூ மார்க் டிக்' வியூ ஆகியிருந்தது. ஆனால் பதிலுரைக்கவில்லை.
"ஆமாடி நீ..."
"ம்மா வாய மூடிட்டு வெளியே போ. உன் பொண்ணும் புருஷனும் சண்டை போட்டா நடுவுல போவியா நீ?"
"ஆமாடா போவேன் போ அங்கிட்டு "
"ஆமா ஆமா நல்லா போவாங்களே இந்..."
"ஏய் போடி போடி" க்ளாரின்.
"நீ போடி" வேணி.
"ஏய் வாய மூடி தொலைடி ***** " நேயன்.
"உங்கம்மாவை போய் ***** " வேணி
"என்ன பேச்சு பேசுறா பாருடா" க்ளாரின்
"நீ ஒழுங்கா பேசு நானும் ஒழுங்கா பேசுறேன்" நேயனிடம் மொழிந்தாள் வேணி.
" ம்மா பசிக்குதும்மா" அழுகுரலில் ஜோனீஸ்.
"இதோடா பூரி சுட்டுட்டேன் வா ஊட்டி விடுரேன்" என்றபடி அடுப்பை அணைத்தவள் விவாதத்தின் ஊடே ஹார்லிக்ஸ் கலந்த பாலையும் எடுத்துக் கொண்டு வந்து டேபிளில் வைத்தவள் ஜோவீஸையும் அழைத்தாள்.
"ம்மா போதும்மா வயறு வலிக்குது"
அவனின் முகம் அழுதழுது வீங்கியிருந்ததோடு சோர்வுடன் இருந்தது.
"கொஞ்சம் கூட அறிவுல்ல குழந்தைகளை வைத்துக்கொண்டு இஷ்டம் போல கத்தி சண்டை போடுற. அந்த குழந்தை மனசு என்ன பாடுபடும்னு உனக்கு தெரியாதா வேணி?" மனதோடு வெண்ணிற லயாவின் குரல்.
செந்நிற மியாவோ குத்தாட்டம் போட்டு ஆடியது இவள் பேசிய வார்த்தைகளின் வீரியம் கண்டு.
மகனின் நிலை கண்டு அன்னையாக அவளின் மனம் பரிதவித்தது. தன் தலையில் தானே அடித்துக் கொண்டவள்,
"கடவுளே என் பாவக்கணக்கை எனக்கே எழுதுங்க. என் புள்ளைங்க நல்லா இருக்கனும்"
"அம்மா நான் ஸ்கூல் போகல உங்ககூடவே இருக்கேன்மா" ஜோனீஸ்.
"டேய்... ஒன்னும் இல்லடா பயப்படாமல் போ. அம்மா நல்லா இருக்கேன். யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க. நீ போயிட்டு வா நாம ஈவ்னிங் வெளியே போலாம் ஓகேவா? சிரி பாப்போம்"
அவனிடம் பலவாறு பேசியவள் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். வழக்கமான வேலைகள் அனைத்தும் வழக்கம் போல நடக்க மாலையில் பள்ளி விட்டு வந்ததும் ஓடி வந்து கட்டி கொண்டான் ஜோனீஸ்.
அவனை சமாதானம் படுத்தியவள் அருகிலுள்ள கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு குளிர்பானங்கள் வாங்கி கொடுத்து மகிழ்வித்தாள்.
அன்றைக்கு யூடியூப்பில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த பாடலின் இசை அவளின் மனதுக்கு இதத்தை தர, எழுந்து ஆடியிருந்தாள். அன்றிலிருந்து கணக்கில்லாமல் அந்த பாடலைக் கேட்க ஆரம்பித்தாள்.
இரவும் வந்தது. வழக்கம் போல சுவரை இடித்துக்கொண்டு வேணி படுத்திருக்க, மீண்டும் அதே கனவு வர பதறியடித்து எழும்பியவள் ஒரு முடிவெடுத்தவளாய் தன் தோழிக்கு வாட்சப்பில் சில செய்திகளை அனுப்பியிருந்தாள். அவள் காலையில் பார்த்ததுமே பதறியடித்துக்கொண்டு அழைப்பு விடுக்க அழைப்பை ஏற்க அவள் இருக்க வேண்டுமே?
முகை உதிரும்...
Author: ரோசி கஜன்
Article Title: நேசமுகை உதிரும் இளவேனில் - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நேசமுகை உதிரும் இளவேனில் - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.